தாத்தாவின் பெயரைத்தான் பேரனுக்கு வைக்கவேண்டும் என்று எந்த இ.பி.கோ சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று இப்பொழுது சேனாவரையன் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் அவன் நினைத்தான். அப்படி ஏதாவது சட்டம் இருந்தால் அது நிறைவேறக் காரணமாயிருந்தவருக்கு அதே இ.பி.கோ சட்டத்தின் அடிப்படையில் அதிக பட்சத் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்பதில் அவன் அதிக ஆர்வமாக இருந்தான்.
ஏனெனில் அவன் தாத்தாவின் பெயர் செங்கல்வராயன். அவன் அப்பா பிடிவாதமாக அந்தப் பெயரை வைத்து விட்டார். பிறந்து பத்து நாள்களே ஆன அவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தெரியவில்லை. ஒருவேளை எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் அந்த எதிர்ப்பு தெரிவிக்கும் மனு ஏற்கப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் என்பது உண்மையாகும்.
அந்தப் பெயர் மீது அவனுக்கு ஒன்றும் முன்கோபம் இல்லை. அப்பெயர் இருப்பது அவனின் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பிற்கோ அல்லது ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கோ, எழுத்தாளனாய் வருவதற்கோ எந்தவிதத் தடங்கலாகவும் இல்லை. ஆனாலும் சிறுவயதில் அவனின் பெயரைச் சுருக்கி எல்லாரும் ”செங்கல்லு செங்கல்லு” என்று கூப்பிடும் போதும் ”டேய் இவன் செங்கல்லுடா” என்று கிண்டல் செய்யும்போதும் அப்பெயர் மீது ஆத்திரம் வந்தது.
”டேய், இந்தப் பெயரை மாத்திக்கிட்டால் என்னடா” என்று கல்லூரி நண்பனிடம், கேட்டபோது, ”ஏண்டா” என்று அவன் கேட்டான். “பின்ன என்னடா? பேர இப்படிச் சுருக்கிக் கூப்பிடறாங்களே?” “என் பேரையும்தான் சுருக்கிக் கூப்பிடறாங்க; பாக்கற இல்ல; அழகு சுந்தரம்ன்ற பேர அழகுன்னுதான கூப்பிடறாங்க” ”டேய் அந்தப் பேரு அழகாயிருக்கு; செங்கல்லுன்னு சுருக்கறது நல்லாவா இருக்கு?”
”டேய் நீ வேணும்னா ஒண்ணு செய்யலாம்” ”என்னாடா?” ”வேற ஒரு புனைபெயர் வச்சுக்கலாம்” ”அப்படின்னா?” “இப்ப இருக்கற பேரு அப்படியே இருக்கட்டும், வேற ஒரு பேரு வச்சுக்க: வச்சுக்கறப் புதுப் பேர எல்லாருக்கும் தெரிய மாதிரி பிரபலப்படுத்து” ”அதுக்கு என்னா செய்யணும்” ”நெறய எழுதணும்” “ஸ்ரீராமஜெயமா? எத்தன தடவ?” அழகுவிற்குச்சிரிப்பு வந்தது. சிரித்தால் செங்கல்லு தப்பாக நினைத்துக் கொள்வான் என்று அவன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
”இல்லடா, நெறய கதை கவிதை எழுதணும்” “கவிதைன்னாலே எனக்குப் புடிக்காது. அதைப் படிக்கவும் மாட்டேன்” “அப்ப கதை எழுது” ”எப்படிடா” ”ஒன்ன இப்ப ரொம்பவும் பாதிச்சது எது” “கீதாகிட்டக் காதலச் சொல்லி அவ முடியாதுன்னு சொல்லிட்டதுதான்” “அதையே எழுது” ”என்னான்னு?” அவ ஏன் முடியாதுன்னு சொன்னா?” ”மனசுக்குப் புடிச்சிருக்காம்; ஆனா நான் ஒல்லியா இருக்கனாம். அவ குண்டா இருக்காளாம்” ”போதுமே இத வச்சு எழுதலாமே” ”எப்படிடா?”
”ரெண்டு பேருக்கும் மனசு ஒண்ணா இருக்குல்ல?” ”ஆமா” “அதால நீ அவளுக்கேத்த மாதிரி குண்டா மாறதுக்கு ரெண்டு மாசத்துல அவளச் சந்திக்காம இருந்து ஒடம்பத் தேத்திக்கற; பயிற்சியெல்லாம் எடுத்துக்கிட்டு, நல்லா சாப்பிட்டுக் குண்டா மாறிடற;” “நல்லாத்தாண்டா இருக்கு;” ”அப்பறம்?” “குண்டானதக்கப்பறம் அப்பறம் அவளப் பாக்கப் போற” “அங்க போனா அவ ஒனக்காக ஒடம்பக் கொறைச்சு தெனம் ரெண்டு மைலு ஓடி ஒல்லியாயிட்டா”
”நல்லா இருக்குடா; எழுதிடறேன்” “ஆனா பேர மாத்திடு” ”எந்தப் பேர?” ”கதையிலதான். கீதான்னு வச்சுடாத” “சரி;நான் எந்தப் பேர வச்சுக்கிட்டு எழுதறது?”
அழகு யோசித்தான். மேலே பார்த்தான். சுற்றிலும் பார்த்தான். ஒன்றும் புலப்படவில்லை. ”சரி, எதாவது எழுத்து சொல்லு” “ம்….’செ’ ன்ற எழுத்தில ஆரம்பிச்சு, ‘ன்’ என்ற எழுத்தில் முடியணும். அப்பதான் எங்க அப்பாவுக்குக் கொஞ்சம் திருப்தியாயிருக்கும். “அப்படின்னா செந்தமிழ்ச்செல்வன்னு வச்சுக்கலாம்”. “டேய் ரொம்பப் பெரிசாயிருக்கே”
பட்டென்று அழகு சொன்னான். ”அப்ப சேனாவரையன்னு வச்சிக்க” “அந்தப் பேரு பழைய உரையாசிரியர் பேருடா” “ஏண்டா அவரு சண்டைக்கு வந்திடுவாரா?” எனக் கேட்டான். அழகுவின் தமிழறிவு அந்த அளவிற்கு இருந்தது. “டேய், அவரு இப்ப இல்லடா; சங்க காலத்துக்கு முன்னாடி” “அப்பறம் என்னா சேனாவரையா” என்று சிரித்தான் அழகு. “சேக்குப் பதிலா செ இருக்கு; பரவாயில்ல; அப்பா ஒண்ணும் சொல்ல மாட்டாருன்னு நெனக்கறேன்” என்றான் பழைய செங்கல்லு.
இதுதான் சேனாவரையன் எழுத்தாளரான கதை. கீதாவின் கதையை எழுதி அழகுவிடம் காட்ட, அவன், “டேய், கீதாவைக் கொஞ்சம் வருணிச்சு எழுது, அப்பறம் நீயும் அவளோடப் பூங்காவுல தெனம் சந்திக்கறபோது யாரும் பாக்காத நேரத்துல அங்க இங்கத் தொட்டுக்கற மாதிரி, கட்டிப்பிடிக்கறது, முத்தம் கொடுக்கறதுன்னு எழுது” “ஏண்டா? இதெல்லாம் தேவையா?” ”ஆமாண்டா; அப்பதான் அந்தப் பத்திரிகையில போடுவாங்க”
சேனாவரையனும் அதே போல மாற்றி எழுத கதை அந்த இதழில் வெளிவந்து விட்டது. சேனாவரையனுக்குப் பெருமை புடிபடவில்லை. தொடர்ந்து எழுத வேண்டும் என்று பக்கத்துக் கிராமம், நகரத்துக் கடைத்தெரு, கோயில்கள், பொதுக்கூட்டங்கள் என்று இதுவரை போகாத இடங்களுக்கெல்லாம் போனான். எழுதுவதற்கு நிறைய செய்திகள் கிடைத்தன. நடந்த சம்பவங்களையும், பெயர்களையும் மாற்றி எழுத எல்லாக் கதைகளும் வெளிவந்தன. சேனாவரையன் பிரபலமானான்.
பன்னிரண்டு கதைகள் வெளிவந்தவுடன் அவற்றை ஒரு தொகுப்பாக நூலாக்கி வெளியிட வேண்டும் என விரும்பினான். பக்கத்துப் பெரிய நகரத்தில் ஒரு பதிப்பகம் இருப்பதைக் கண்டான். “நூல் வெளியீட்டார்கள்” என்று இருப்பதைப் பார்த்து உள்ளே போனான்.
”வாங்க ஒக்காருங்க” என்று வரவேற்றார் அங்கிருந்தவர். புதிதாக அச்சடித்த புத்தகங்கள் பல அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “ம்..சொல்லுங்க” என்றார். “என் பேரு சேனாவரையனுங்க; எழுத்தாளர்,” ”எதுல எழுதியிருக்கீங்க; குமுதம், விகடன் இதுமாதிரி” “இல்லிங்க, சிறு பத்திரிக்கையிலதான்” “ஓ இலக்கிய இதழ்கள்ளயா” “ஆமாங்க. மொத்தம் பன்னண்டு கதங்க வந்திருக்குதுங்க; எல்லாத்தையும் ஒரு புத்தகமாப் போடணும்; நீங்கதான் ஒதவி செய்யணும்” ”போட்டுடலாம். நீங்க ஆறாயிரம் ரூபா வரையில கொடுக்க வேண்டியிருக்கும்”
“அவ்வளவு ஆகுங்களா” “ஆமாங்க, இப்ப லைப்ரரி ஆர்டர் வர்றதில்ல; அதால நாங்க ரூபா வாங்கிட்டுதான் போடறோம். ஆனா நீங்க கொடுக்கற காசுக்கு ஒங்களுக்குப் புத்தகம் கொடுத்திடுவோம் இருபது பர்சன்ட் கமிஷன்ல. அத்தோட எழுத்தாளர்ன்ற மதிப்புக்காக இருபது புத்தகம் தனியாக் கொடுப்போம்” கொஞ்ச நேரம் சேனாவரையன் யோசித்தான். அதற்குள் அவர் “இப்ப யாருமே புதிசா வர்றவங்க புத்தகத்தைப் போடறதில்ல; நாங்க மட்டும்தான் போடறோம்” என்றவுடன் இவனுக்குப் பயம் வந்து விட்டது.
“சரிங்க” என்று சொல்லி, தான் கொண்டுவந்திருந்த கதைகளைக் கொடுத்தான். அவர் வாங்கிக் கொண்டார். ”அடுத்தவாரம் பொதன் கெழமைக்குள்ள வந்து அட்வான்ஸ் மூவாயிரம் கொடுங்க; அப்பதான் வேலய ஆரம்பிப்போம். கொடுத்த ஒரு மாசத்துக்குள்ள ப்ரூப் வந்திடும். நீங்க பாத்துக் கொடுத்த இருபதாவது நாள்ள புத்தகம் தயாராயிடும். அப்பறம் அடுத்த வாரம் வரும்போது ஒங்க முன்னுரை, யாருக்கிட்டயாவது அணிந்துரை வாங்கினீங்கன்னா அது, அட்டைப்படம் எப்படியிருக்கணும், ஒங்களைப் பத்திக் குறிப்புங்க, எல்லாத்தையும் கொடுத்திடணும்” என்று கறாராகப் பேசினார்
அடுத்த வாரம் அவர் கேட்டவற்றைக் கொடுத்தான். அட்டைப் படம் போட நான்கைந்து படங்களையும் தந்தான். எல்லாமே புது மாதிரியாகவும், பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும்படியாகவும் இருந்தன. ஆனால் புத்தகம் வந்தவுடன் பார்த்தால் அட்டையில் ஒரு பெண் படம் இருந்தது. அவள் கையில் ஒரு விளக்கைப் பிடித்தவாறு இருந்தாள். “என்னாங்க இது? நான் கொடுத்த படமெல்லாம் ரொம்ப நல்லாத்தான இருந்திச்சு” என்றான். அவரோ “தம்பி, “மொத புத்தகம் மங்களகரமா இருக்கணும். அதாலதான் இந்தப் படம் போட்டேன்” என்று சிரித்தார்.
வெளியீட்டு விழாவில் பேசியவர்கள் அந்தப் படத்தைத்தான் நார் நாராகக் கிழித்தனர். ”படத்துக்கும் உள்ளே எந்தக் கதைக்கும் சம்பந்தமில்லை. ஒரே பத்தாம் பசலித்தனமாக இருக்கிறது. கல்யாணப் பத்திரிக்கை போல உள்ளது” என்றெல்லாம் பேசப் பேச இவனுக்கு அழுகையே வந்துவிட்டது. அடக்கிக் கொண்டான்.
அதற்குள் நண்பர் வட்டம் பெரிதாகி விட்டது. இன்னும் எழுத நிறையப் படிக்க வேண்டும்; நிறையப் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான். எல்லாரும் மாதம் ஒரு முறை ஒரு சிறுகதையை விவாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். மூன்று மாதங்களுக்குள் பதினைந்து கதைகள் சேர்ந்து விட்டதால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது. இம்முறை விளம்பரம் பார்த்து தஞ்சாவூரில் உள்ள ஒரு பதிப்பகத்துக்குக் கதைகள் அனுப்பினான். உடனே ”வெளியிட நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்” என்று பதில் வந்தது. அதற்குப் பிறகு ஆறு மாதங்களுக்கு எவ்விதத் தகவலும் இல்லை.
எழுதிக் கேட்ட பிறகு, ”அரசாங்கத்தின் நூலக ஆணை அறிவிப்பு வந்தவுடன் நாங்கள் முப்பதே நாள்களில் தயார் செய்து விடுவோம் எனப் பதில் வந்தது. ”எப்ப வர்றது? எப்பப் புத்தகம் கெடைக்கறது?” எனத் தன்னையே நொந்து கொண்டான். ”இது சரிப்பட்டு வராது, இனிமேல் பணம் கொடுத்தாவது போட்டுத்தான் ஆக வேண்டும்” என்று முடிவெடுத்தான். இப்பொழுது நண்பர்கள் வற்புறுத்த நாவல் ஒன்று இருநூறு பக்கங்களில் எழுதினான்.
அதை நூலாக்க சென்னையில் உள்ள பதிப்பகத்தை நாட வேண்டும் என நண்பர்கள் முடிவு செய்தனர். அப்பொழுதுதான் சேனாவரையன் என்னும் பெயர் பிரபலாமாகும் என்றனர். சென்னையில் ஒரு பதிப்பகம் ஒத்துக் கொண்டு உடனேயே நாவலையும், பத்தாயிரம் ரூபாயும் கேட்டனர். “நாவலை வெளியிடறதுன்னா சும்மாவா” என்று நண்பர்கள் தூண்ட அனுப்பி வைத்தான்.
மூன்று மாதம் கழித்து ”ப்ரூப் வரவில்லையே” எனக் கேட்டான், அடுத்த வாரம் அனுப்புவதாகச் சொன்னார்கள். அவர்கள் சொல்லி ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. சென்னைக்கே சென்று கேட்டான். நன்கு தேனொழுகப் பேசியவர், இன்னும் பத்து நாள்களில் அனுப்புவதாகச் சொன்னார். மூன்று மாதங்களுக்குப் பிறகு எழுதினான். உடன் பதில் வந்தது. அதில் “உங்கள் நாவலில் நிறைய கொச்சைத் தமிழில் பேச்சுநடை இருக்கிறது. அவற்றைத் திருத்த வேண்டும்” என்றிருந்தது.
“பேசறவங்க இலக்கண சுத்தமாவா பேசுவாங்க” என்று கோபமாக எழுதிவிட்டான். ”ஐயா சினம் கொள்ள வேண்டாம்; நீங்கள் எழுதித் தந்தது போலவே போடுகிறோம்” என ஒப்புக்கொண்டார்கள். ஆறு மாதம் கழிந்தது. இப்பொழுது கடிதம் எழுதினாலும் பதில் வரவில்லை. நேரே சென்று பேசினால் இன்னும் அடுத்த வாரம் என்றே சொல்வார்கள். இப்படியே இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. இந்த அலைச்சலில் சிறுகதை எழுதுவதையே மறந்து விட்டவன் இந்த அனுபவத்தையே கதையாக எழுதினான். ”பதிப்பகத்தார் படுத்தும் பாடு” என்று தலைப்பு வைத்தால் எந்த இதழும் வெளியிடாது என்று “ப.ப.பா” என்று தலைப்பு வைத்தான்..
- கிரிக்கெட் வீரன் மரணமும் , மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த எழுத்தாளர்களும்
- அதிசயங்கள்
- மறதி
- ப.ப.பா
- பண்டைத்தமிழரின் விருந்தோம்பல்
- வெகுண்ட உள்ளங்கள் – 5
- பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்
- தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)
- என்றென்றைக்கும் புரிந்துகொள்ளப்படமுடியாத ஒருத்தி
- விஷ்ணு சித்தரின் விண்ணப்பம் (அப்போதைக்கு இப்போதே)
- ஓடைத் தண்ணீரில் மிதந்து போகும் சருகு (அசோகமித்திரனின் இந்தியா 1944-48 நாவலை முன்வைத்து)
- கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்