சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – ஒன்று

author
1
0 minutes, 8 seconds Read
This entry is part 11 of 11 in the series 5 ஜூலை 2020

அழகர்சாமி சக்திவேல்

அந்த அதிகாலைப்பொழுதில், சிங்கப்பூரின், பெடோக் பேருந்து நிலையத்திற்குள், நான் வேகமாக உள்ளே நுழைந்தேன். சீக்கிரமே கிளம்ப வேண்டும் என்ற அவசரத்தில், வீட்டில், தேநீர் கூட அருந்தாமல் வந்துவிட்டேன். எனது இந்தப் பயணம், மலேசியாவிற்குள் செல்லும் மூன்று மணி நேரப் பயணம் ஆகும். போகும் வழியில், தேநீர் அருந்தினால், போய்ச் சேரும் நேரம் அதிகமாகும். எனவே, இங்கேயே ஒரு தேநீர் குடித்துவிட்டு, அப்புறம் பஸ்ஸிற்குள் ஏறிக்கொள்வோமே” என்று மனது கட்டளையிட, தட்டமுடியாமல், நான் பேருந்துநிலைய வளாகத்திற்குள்ளேயே இருந்த ஒரு தேநீர்க் கூடத்துக்குச் சென்றேன்.

கடையில் ஒரு சீனப்பெண் இருந்தாள். “கிவ் மீ, ஒன் பாக்கெட், தே ஓ சியூத்தாய் லா” என்று நான் சொன்னவுடன், இனிப்புக் குறைந்த தேநீரை, பிளாஸ்டிக் பாக்கெட்டில் நிரப்பி, என்னிடம் நீட்டினாள். நான் அதை, அவசரம் அவசரம் ஆகக் குடித்துக்கொண்டே, பஸ் நிலையத்துக்குள் நடந்தேன். கிளம்புவதற்குத் தயாராய் இருந்த, பஸ் எண் 168, எனது கண்ணில் பட்டவுடன், வேகமாய் ஓடினேன். ஓடுகிறபோதே, பாதி குடித்த நிலையில் இருந்த, தேநீர்ப் பாக்கட்டை, மறக்காமல், அருகில் இருந்த  குப்பைக்கூடையில் போட்டுவிட்டு ஓடி, பஸ்சுக்குள் ஏறினேன். எனது கையில் இருந்த எம்ஆர்டி அட்டையை, காசு வசூலிக்கும் மின்னணுப்பெட்டியில், தட்டிவிட்டு, பஸ்ஸின் மேலடுக்கில் போய், உட்கார்ந்து கொண்டேன். பஸ் புறப்பட்டது.

அதிகாலை என்பதால் பஸ்சுக்குள் கூட்டம் இல்லை, நான், சற்றே என்னை, ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றேன். உடல் ஒத்துழைத்தது. ஆனால், வலியில் இருந்த, என் மனம், அதற்கு ஒத்துழைக்கவில்லை. பஸ்சுக்குள் இருந்த ஏசி, கொஞ்சம் கொஞ்சமாய், என் உடலைக் குளிர்வித்தது. ஆனால், எனது மனம் மட்டும் குளிரவேயில்லை. அது, அந்த மலேசிய அங்கிளையே, நினைத்து நினைத்து, வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது, எனது கண்கள், லேசாய் ஈரமானது. “அங்கிள்.. உங்கள் நெடுநாளைய ஆசையை, என்னால், நிறைவேற்ற முடியவில்லையே அங்கிள்”. என் உதடுகள், ஒரு வித வலியோடு முணுமுணுத்தது. அழுகின்ற எனது மனதின், எண்ண ஓட்டத்தைத் திசை திருப்ப, நான் கண்ணாடி சன்னல் வழியாக, வெளியே பார்த்தேன்.

பஸ் இப்போது, பெடோக் ஏரியைக் கடந்து ஓடிக்கொண்டு இருந்தது. “என்ன ஒரு அழகான, பரந்த ஏரி!”, நான் எனது சிந்தனையை, அந்த அழகிய ஏரிக்காட்சியில் கொஞ்சம் மிதக்கவிட்டேன். ஏரியைச் சுற்றி, ஒரு கூட்டம், அந்தக் காலை வேளையில், ஓடிக்கொண்டும், நடந்துகொண்டும் இருந்தது. நான், இந்த ஏரிக்கு, பல முறை வந்து இருக்கிறேன். ஏன், அந்த மலேசிய அங்கிளோடும் கூட, ஏரிக்கு ஒரு முறை வந்து இருக்கிறேன்.

“மறுபடி, மறுபடி, அந்த மலேசிய அங்கிளின் நினைவே, மனதில் வருகிறதே.. சே” என்று நான், இப்போது, சற்று வாய்விட்டே கத்தி விட்டேன். எனது பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவர், எரிச்சலுடன், சற்றே தள்ளி உட்கார்ந்தார். இப்போது, என் வருத்தம், இன்னும் கூடியது.

“ஏன் ராஜா..என் பேரனை, நான் பார்க்கவே முடியாதா ராஜா?”.. அங்கிள், போன மாதம் சிங்கப்பூர் வந்த போது, பேசிய அந்த வார்த்தைகள், திடீரென்று எனது சிந்தனையைத் தாக்க, என்னால் இப்போது அழுகையை அடக்க முடியவில்லை. “எக்ஸ்க்யூஸ் மீ” என்று. அருகில் உட்கார்ந்து இருந்த, மலாய்க்காரரிடம் கேட்டுகொண்டே, நான் இருக்கையை விட்டு வெளியே வந்தேன். யாரும் இல்லாத, இன்னொரு இருக்கைக்குப் போய் அமர்ந்து, நான் இப்போது அழுதேன்.

“நீங்கள் கேட்டதை, என்னால் நிறைவேற்ற முடியாமல் போனதே அங்கிள். உங்களுக்கு. நான் என்ன ஆறுதல் கூறுவேன். சாயாங் அங்கிள் சாயாங்.. மை பிட்டி அங்கிள்”, நான் வலியோடும், அழுகையோடும் மெல்லிய குரலில், அரற்றிக்கொண்டே பயணித்தேன். எனது நினைவுகளும், என் கூடவே இப்போது பயணித்தது.

சிங்கப்பூர் ஹாங் லிம் பூங்காவில்தான், நான் அந்த மலேசிய அங்கிளை, முதன்முதலில் பார்த்தேன். அன்று, ஹாங் லிம் பூங்கா, திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. காரணம், ‘பிங்க் டாட்’ என்ற, சிங்கப்பூரின், மூன்றாம் பாலினம், வருடாவருடம் ஒன்று கூடும் நிகழ்ச்சி, அன்று அங்கே நடக்கப்போகிறது. சிங்கப்பூரில் வசிக்கும், ஏராளமான திருநங்கைகள், திருநம்பிகள், கே என்ற ஆண்-ஆண் ஓர் பாலின ஈர்ப்பாளர்கள், லெஸ்பியன் என்ற, பெண் பெண் உறவு விரும்பிகள் என மூன்றாம் பாலினக் கூட்டம், விழா நடக்கும் பூங்காவுக்குள் நுழைவதற்காய், பூங்காவிற்கு வெளியே, வரிசையில், ஆவலோடு நின்றுகொண்டு இருந்தது.

இவர்கள் மட்டுமே அல்ல. மூன்றாம் பாலினம் சாராத, ஆண்-பெண் உறவில் மட்டுமே ஈடுபடும், ஆண்களும் பெண்களும் கூட, வரிசையில் நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்களில் சில தாய்மார்கள், ஓரினச்சேர்க்கையை விரும்பும், தங்கள் பிள்ளைகளை ஆதரிக்க வந்து இருந்தார்கள். சில பெற்றோர்கள், ஆணில் இருந்து பெண்ணாய் மாறிப்போன தத்தம் பிள்ளைகளுக்காகவும், பெண்ணில் இருந்து, திருநம்பி என்ற ஆணாய் மாறிப்போன, தத்தம் மகள்களுக்கு ஆதரவாகவும் வந்து இருந்தார்கள்.

சில கல்லூரி நண்பர்களும், நண்பிகளும், தத்தம் ஓரினச்சேர்க்கை நண்பர்களை ஆதரிப்பதற்காய், வந்து இருந்தார்கள். நானும், அது போல, எனது நண்பன் ஒருவனை ஆதரிக்கவே, இந்த மூன்றாம் பாலின விழாவுக்கு, வந்து இருந்தேன். எனது பெயர் ராஜன். நான், இரு சிங்கப்பூரியன். நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளன் அல்ல. உண்மையில், எனக்கு, ஒரு பெண் நண்பியும் உண்டு. அவளோடு, உறவும் உண்டு. ஆனால், நான், இங்கே வந்தது, விஷம் குடித்து இறந்து போன, எனது நண்பன் ரகுவிற்காக. ரகு ஒரு ஓரினச்சேர்க்கையாளன். அவன் ஒரு ஹோமோசெக்ஸ் என்பதால், அவனுக்கு இருந்த நண்பர்கள் மிகமிகக் குறைவு. தனிமையிலேயே வாழ்க்கை நடத்திய ரகுவிற்கு, ஒரே ஆறுதல் நான் மட்டுமே. என்னிடம் மட்டுமே. தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அவனது இந்த ஓரினச்சேர்க்கை விவகாரம், ஒருநாள் அவன் வீட்டிற்குத் தெரியவர, விஷயம் பெரிதாகிப் போனது. அம்மாவும், அப்பாவும் ஏசிய, ஏச்சுக்கள் பொறுக்காது, ஒருநாள், ரகு விஷம் குடித்துத், தற்கொலை செய்துகொள்ள, அந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீள, ரொம்ப நாட்கள் பிடித்தது.

ஒரு ஆண் என்பவன், ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என்று தெரிந்தால், அவனை, இந்த சமூகம், எப்படி எல்லாம், எள்ளி நகையாடுகிறது, என்பதை, நான் ரகுவின் மூலம், கண்கூடாகப் பார்த்தவன். {இந்த மூன்றாம் பாலின சமூகத்திற்குள் உள்ளவர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் நிச்சயம் நம் ஆதரவு தேவை” என்ற எண்ணத்திலேயே, எனது நண்பன் ரகுவின் நினைவாக, நான் ஒவ்வொரு வருடமும், சிங்கப்பூரில் நடக்கும் இந்த பின்க் டாட் நிகழ்ச்சியில், தவறாது கலந்து கொள்கிறேன். இதோ, இந்த வருடமும் கலந்து கொள்வதற்காய், நான் வரிசையில் நின்று கொண்டு இருக்கிறேன்.

இந்த வருடம், சிங்கப்பூர் அரசு, ஒரு புதிய விதியை, அறிவித்து இருந்தது. சிங்கப்பூரர்கள் மட்டுமே, பூங்காவில் நடக்கும் விழாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள், என்று விதி இருந்ததால், நாங்கள் சிங்கப்பூரர்கள் மட்டுமே, உள்ளே நுழைவதற்க்காய், வரிசையில் நின்றோம். மற்ற, நாட்டவர்கள், வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அப்படி இருந்த வெளிநாட்டவர்களில் ஒருவர்தான், ராமசாமி அங்கிள்.

“தம்பி… நான் ஒரு மலேசியன்.. என் பெயர் ராமசாமி”, என்று தன்னைத்தானே, அறிமுகப்படுத்திக் கொண்டார் ராமசாமி அங்கிள், “நான் உள்ளே வர முடியாதா தம்பி? போன வருடம் அனுமதிச்சாங்களே தம்பி” அங்கிளின் குரலில், ஒரு ஏக்கம் இருந்தது. நான் அவரை, இப்போது உற்றுப் பார்த்தேன். அறுபது வயதான, ஆனால், ஆஜானுபாகுவான உருவம், பெரிய மீசை, தலை அத்தனைக்கும், கருப்பு டை அடித்து, கம்பீரமாய் இருந்த அவரது முகத்தில் மட்டும், ஏதோ ஒரு கவலை. “இவர், நண்பன் ரகுவைப் போல, ஒரு ஓரினச்சேர்க்கையாளன் ஆக இருப்பாரோ? பார்க்க அப்படித் தெரியவில்லையே. ஒருவேளை, நம்மையும், ரகுவைப் போல, ஒரு ஹோமோசெக்ஸ் ஆக, நினைத்து இருப்பாரோ?” எனது எண்ணங்கள், எங்கெங்கோ ஓடியது. ஆனால், நான் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.

“இல்லை அங்கிள்… இந்த முறை, சிங்கப்பூரர்களுக்கு மட்டுமே உள்ளே நுழைய அனுமதி” என்று சுருக்கமாய்ப் பேசி, அவர் முகத்தைப் பார்த்தேன்.

“அப்படியா.. சரி தம்பி.” அவர் இப்போது என்னைப் பார்த்து, புன்னகைத்தார். “ரகுவைப் போல என்னை நினைத்துவிட்டாரோ?” என்ற சந்தேகத்துடனேயே, நான் விழா நடக்கும் பூங்காவிற்குள் சென்றேன்.  

விழா வண்ணக்கோலம் பூண்டு இருந்தது. “அன்பும் காதலும் ஒருவரது தனியுரிமை. யார், யாரோடு உறவு கொள்ளவேண்டும் என்பதை, சமூகம் தீர்மானிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாய், சம்பந்தப்பட்ட இருவர் தீர்மானித்ததால் போதும்”.. இப்படிப்பட்ட, வார்த்தைகள் அடங்கிய, வண்ண வண்ணப் பதாகைகள், அங்கங்கே, தொங்கிக்கொண்டு இருந்தது. நான், அங்கும், இங்கும் உற்சாகமாய் ஓடிக்கொண்டு இருந்த, மூன்றாம் பாலின மக்களை நோட்டமிட்டேன்.

இன நீர்ப்பில்தான், எத்தனை வகை?. பெண்ணாய்ச் சிணுங்கும் ஆண்கள். மீசை முளைத்த பெண்கள். மீசையோடு, மீசை உரசும் காதல்கள்.. பெண்ணை அணைக்கும் பெண்கள்… “மனிதரில்தான் எத்தனை ரகங்கள்!! இவர்களும் ஒரு கடவுள் படைப்புத்தான் என, ஏன், சமூகம் நினைப்பதில்லை? ஆண், பெண் இனத்தில் இருந்து, வேறுபட்டு வாழும் இத்தனை மூன்றாம் பாலின மக்கள், சந்தோசமாக வாழ்கையில், ரகு மட்டும், இறந்து போனானே ஏன்” எனது சிந்தனை, பல கோணங்களில் தடுமாறியது.

நான், ஓரமாய்ப் போய், புல்வெளியில் உட்கார்ந்து கொண்டேன். யாரோ ஒருவன், எனது அருகே வந்து,உட்கார்ந்து, என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். அவனது புன்னகையின் அர்த்தம், எனக்குப் புரிந்தது. அவன் மனதை நோகடிக்காமல், கைகொடுத்து, கூடவே, “நான் மூன்றாம் பாலினம் இல்லை” என்று அவனுக்கு உணர்த்தினேன். அவன், சிரித்துக்கொண்டே என்னை விட்டு அகன்றான்.

கிட்டத்தட்ட இரவு எட்டு மணி வரை நடந்த விழா, இனிதே முடிந்தது, ஆனால், மேடையில் கலை நிகழ்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருந்தது. கூச்சலும், ஆரவாரமுமாய் இருந்த, பூங்காவை விட்டு, நான் வெளியே வந்தேன். எனக்கு இப்போது பசித்தது. ஏதாவது இந்திய உணவாய்ப் பார்த்து சாப்பிடத் தோன்றியது. எனவே, நான், லிட்டில் இந்தியா போவதற்காய், பஸ் ஸ்டாப்பிற்கு நடந்தேன். திடீரென்று, “தம்பி..” என்று, யாரோ என்னைக் கூப்பிடுவது போலத் தோன்ற, நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே, ராமசாமி அங்கிள், என்னை நோக்கி, வந்து கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“நீங்கள் இன்னுமா இங்கு இருக்கிறீர்கள் அங்கிள்” என்று சொன்னவுடன் சிரித்தார். “என் இனம் இங்கே இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த நாள், எனக்கு சந்தோசமான நாள் தம்பி… இங்கே உள்ளவர்களைப் பார்த்துக்கொண்டு இருப்பதே ஒரு சந்தோஷம்தான் தம்பி” என்று அவர், உற்சாகமாய்ச் சொன்னபோது, அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்குப் புரிந்து போனது. இருந்தும், நான் அந்தக் கேள்வியை, அவரிடம் கேட்டேன். “அங்கிள்.. நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா அங்கிள்?” என்றேன். அங்கிள், இப்போது மவுனமானார். கொஞ்ச நேரம் கழித்து, அவரே பேசினார். “எனக்குக் கல்யாணம் ஆகி, உங்கள் வயதில், எனக்கு ஒரு மகன் இருக்கிறான் தம்பி” என்று அவர், நிதானமாகச் சொன்னபோது, எனக்குள் ஆச்சரியம் கூடியது. “எனக்குப் பசிக்கிறது அங்கிள் லிட்டில் இந்தியா போகிறேன். நீங்கள் என்னோடு சாப்பிட வருகிறீர்களா அங்கிள்?” என்று நான் சொன்னவுடனே, “சரி தம்பி” என்று, என்னோடு, சந்தோஷமாய்ச் சேர்ந்து கொண்டார், ராமசாமி அங்கிள்

லிட்டில் இந்தியாவில் இருந்த, தேக்கா மார்க்கெட்டுக்குள் நான் நுழைந்தேன். அங்கிள் என்னைப் பின் தொடர்ந்தார். உள்ளே, நான் இரண்டு தோசை வாங்கினேன். “அங்கிள்.. உங்களுக்கு?” என்று வினவினேன். “எனக்கு தோசை வேண்டாம். குவே தியோ கோரெங் வாங்குங்கள்” என்றார். நான், அன்புடன் வாங்கிக் கொடுத்தேன். இருவரும், பேச்சுக்கள் எதுவும் பேசாமல், சாப்பிட்டோம். சாப்பிட்ட மேசையைத் துடைப்பவர்களும், ஆர்டர் செய்த உணவைப் பரிமாறுபவர்களும், அவ்வப்போது, எங்கள் இருவரையும் கடந்து, நடந்து போனார்கள். அப்படிப் போகிற போக்கில், ஓரிருவர், என்னையும், அங்கிளையும் பார்த்து, ஏளனமாகப் பார்த்துச் சிரிப்பதை, தற்செயலாகக் கவனித்த நான் துணுக்குற்றேன். ஆனால், அங்கிள், அதை கவனித்தும், கவனிக்காதவாறே, தலை குனிந்த வண்ணம், சாப்பிட்டு முடித்தார். இருவரும், தேக்கா மார்க்கெட் விட்டு வெளியே வந்தோம். அப்படி வெளியே வருகையில், அங்கிள், ஓரத்தில் இருந்த அந்த டாய்லெட்டைக் கவனித்துக் கொண்டே, வெளியே வந்தார்.

வெளியே வந்ததும், அங்கிள்தான் முதலில் பேசினார். “தம்பி.. நாம் இப்போது சாப்பிட்டோமே தேக்கா மார்க்கெட், அந்த இடம் எனக்கு ஒன்றும் புதிய இடம் இல்லை. ஏனென்றால், சிங்கப்பூர் வருகிறபோதெல்லாம், அந்த டாய்லெட்டைத் தேடி, நான் அடிக்கடி இங்கே வருவேன். அந்த டாய்லேட்டே கதி என்று எப்போதும் கிடப்பேன்” என்றார். “அப்படியா அங்கிள்.. உள்ளே இருந்த சிலர், உங்களைப் பார்த்து, கிண்டலாகச் சிரிப்பது எதனால்?” என்று கேட்டவுடன், அங்கிள் சிரித்தார்.

“இப்பவெல்லாம், இந்த டாய்லெட்டில், என்னை மாதிரி யாரும் நிற்பது இல்லே. என்னை மாதிரி ஆட்களுக்குத்தான், இப்ப முகநூல் வந்திருச்ச்சே.. இப்பவெல்லாம், நமக்குப் பிடிச்சா மாதிரி ஒரு ஆணை, முகநூலிலேயே தேடிக்கொள்ளலாம். ஆனா.. இருபது வருசத்துக்கு முன்னாடி, அப்படி இல்லையே…டாய்லெட்டில்தான், நாம ஆசைப்படற மாதிரி, ஆம்பளை கிடைப்பான்.. நான் மலேசியா, ஜோகூரில் இருந்து, இங்க வந்ததுமே, முதலில் வருவது, இந்த டாய்லெட்டுக்குத்தான். இந்த டாய்லெட்.. அப்புறம், எதிர்த்த ரோட்டில் இருக்கும் டாய்லெட். இங்கேயே.. நான் ரொம்ப நேரம் நிப்பேன்.. ஒண்ணுக்கு போறமாதிரி, ரொம்ப நேரம், பாவ்லா பண்ணுவேன். அப்படி.. நான் நிற்கிறதை, இந்த கடைக்காரப் பசங்க, வந்து வந்து கவனிப்பாங்க.. அதான், என்னையும், உங்களையும், பார்த்ததுமே.. கிண்டலாய்ச் சிரிச்சுட்டுப் போறானுங்க”. அங்கிள் சொன்னபோது, எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “அந்தக் காலங்களில், இந்த அங்கிள் எவ்வளவு அவமானப்பட்டு இருப்பார்?. என் நண்பன் ரகுவும், இப்படித்தானே அவமானப்பட்டு இருப்பான்?” எனது மனம் வலித்தது.

“அந்தமாதிரி நேரங்களில், உங்களுக்கு அவமானம் ஆக இருக்காதா அங்கிள்” நான் குழந்தை மாதிரி கேள்வி கேட்டேன். அங்கிள் தொடர்ந்தார். “பின்னே.. இருக்கத்தான் செய்யும். நான், ஆம்பளை ஆசையில்தான் நிற்கிறேன்னு, பலருக்குத் தெரிஞ்சு போகும். சிலர், காறிக் காறித் துப்புவார்கள். சிலர், கெட்ட வார்த்தையில் திட்டுவார்கள். இந்த டாய்லெட் காண்ட்ராக்ட் எடுத்தவன் வேற, அப்பப்ப உள்ளே வந்து, என்னை, வெளியே விரட்டி விடுவான். ஒரு பக்கம், போலீஸ் பயம் வேற.. எல்லாத்தையும் சமாளிச்சிக்கிட்டே, நான் அங்கேயே நிற்பேன்”

அங்கிள் மீது, எனக்கு இரக்கம் வந்தது. “கேவலம், ஒரு மாறிப்போன உடலுறவு ஆசை.. அதைக்கூட இந்த சமூகம் புரிந்துகொள்ளவில்லை”. நான் கொஞ்சநேரம் பேசவில்லை. “இப்படி அவமானப்பட்டாவது.. இந்த அங்கிள், சந்தோசமாக இருந்திருப்பாரா?”, வேதனை கலந்த என் மனம், எதை எதையோ நினைத்து, மிகவும் வருந்தியது.

“யாராவது ஆண்கள் கிடைத்தார்களா அங்கிள்?” நான் மறுபடியும் குழந்தைக்கேள்வி கேட்டேன். “எப்பவாவது கிடைப்பார்கள்.. ஊரில் இருந்து, வேலைக்கு வந்த பசங்க, இப்படி யாராவது கிடைப்பாங்க. பேசிக்கிட்டே வெளியில் போவோம். சிலர், பேச்சோட முடிச்சுப்பாங்க.. சிலர்.. கூட்டிபோய், தனியிடத்தில் வைச்சு, அடிகொடுத்து அனுப்புவானுங்க”. அங்கிள், அப்படிச் சொன்னபோது, எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. “என்ன அங்கிள் சொல்றீங்க.. அடியெல்லாம் வாங்கி இருக்கீங்களா?”. “ம்ம்ம்” ஏதோ யோசித்தார். அவர், கண்களில் லேசாகக் கண்ணீர் கசிந்தது

“ஒருதடவை, ஒரு மலாய்க்காரர், டாய்லெட்டுக்குள் வந்தார். நான், சைகை காட்டியவுடன், “என் பின்னால் வா” அப்படின்னு, கூப்பிட்டுக் கொண்டே, வெளியே போனார், நானும், ‘ஆசையாக் கூப்பிடுறாரு’ன்னு, நினைச்சு, அவர் பின்னாடியே போனேன். வெளியில், நிறுத்தியிருந்த, காருக்கு கூட்டிட்டு போனார். காரில் வைச்சு, அவர் மடியில் என்னைக் கவிழ்த்தினார். நானும், ‘வேற ஏதோ ஆசை போல’ன்னு, நினைச்சுக்கிட்டேன். ஆனால், அவர், அதுக்கப்புறம்தான், அவர் உண்மையான முகத்தைக் காட்டினார். “நாயே.. உனக்கு இந்த மாதிரி ஆசையா? உனக்கு வாய் எதற்கு நாயே?” அப்படின்னு சொல்லிக்கிட்டே, என் வாயிலேயே, அவர் கையை வைத்துக் குத்தினார். என் வாயெல்லாம் ரத்தம்.. பல்லெல்லாம் உடைஞ்சு போச்சு…”. அங்கிள், அவர் வாயைத்திறந்து காட்டினார். முன் வரிசையில், பல பற்கள் இல்லை.

அங்கிள், மௌனமாய் அழுதார். நானும் மௌனமாய் அழுதேன். 

“அங்கிள் போலீசில் சொல்லவேண்டியதுதானே அங்கிள்?” அழுகையின் ஊடேயே, நான், கேட்டேன்.

“எப்படி தம்பி சொல்ல முடியும்? நான், என்னன்னு சொல்லுவேன்.. இந்தப் பாழாப்போன சமூகம், எனது ஆசையை ஒத்துக்கொள்ளவில்லையே தம்பி.. அப்புறம்.. நான் எப்படிச் சொல்லுவேன்”. ராமசாமி அங்கிள், குமுறினார். அவர், உள்ளக்குமுறலுக்குள், பொதிந்து இருந்த, ஒரு ஆழ்ந்த வேதனையை, என்னால், புரிந்துகொள்ள முடிந்தது.

“இன்னமும்.. இந்த டாய்லெட்டுக்கு எல்லாம் வறீங்களா அங்கிள்?”

அங்கிள் சொன்னார். “இல்லை தம்பி.. இப்ப வர்றதில்லை. என் மகன் இப்ப சிங்கப்பூரில்தான் வேலை பார்க்கிறான். என் மகனுக்கு கல்யாணம் ஆகி, எனக்கு ஒரு பேரனும் இருக்கிறான்” அங்கிள், மறுபடியும் அழுதார். “ஆனா.. நான் என் பேரனை ஒரு நாளும் பார்த்தது இல்லே தம்பி. எனக்கும் என் மகனுக்கும், எந்த ஒட்டுறவும் இல்லாமப் போச்சு தம்பி”

அவர், இப்போது கேவிக்கேவி அழுதார். ஆள் அரவம் குறைந்த அந்த இடத்தில், ஒரு அறுபது வயது மனிதர், அப்படிக் குழந்தை போலக் கேவி கேவி அழுததை, நான், என் வாழ்க்கையில் அனுபவித்தது இல்லை. இறந்து போன என் நண்பன் ரகுவின், துயரத்தோடு, ராமசாமி அங்கிளின் துயரமும், என்னை இப்போது ஒட்டிக்கொண்டது.

“நான் இருக்கிறேன் அங்கிள் கவலைப்படாதீர்கள். நாம் அடிக்கடி சந்திப்போம். உங்கள் பையனை உங்களோடு நான் சேர்த்து வைக்கிறேன். நிச்சயம், நீங்கள் உங்கள் பேரனைப் பார்க்க முடியும் அங்கிள்”.

அங்கிள், எனது கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். முதுமை வாய்ந்த, அந்தக் கைகள், என் கைகளைப் பிடித்து இருந்த விதத்தில், ஒரு தந்தை-மகன் பாசம் இருப்பதை நான் உணர்ந்தேன். அவர் மனசு பாரம், இப்போது, இறங்கி இருந்தது. என் மனது பாரமோ, இப்போது, கூடி இருந்தது.

நான் அந்த இரவில், அங்கிளிடம், விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன்.

திடீரென்று, 168 பஸ்ஸில் இருந்து, ஆட்கள் இறங்கும் சத்தம் கேட்டு, நான் எனது, சிந்தனையைக் கலைத்தேன். பஸ்ஸின், ஜன்னல் கண்ணாடி வழியே, வெளியே பார்த்தேன். உட்லாண்ட்ஸ் பேருந்துநிலையம் வந்து விட்டது. எல்லோரோடு சேர்ந்து நானும் இறங்கினேன். இனி, மலேசியா, ஜோகூர் போக, இங்கிருந்து, இன்னொரு பஸ் பிடிக்கவேண்டும்.

நான், மலேசியா ஜோகூர் செல்லும், பஸ் எண் 950 பிடிக்க ஓடினேன். ஆஹா.. ஒரு பெரிய வரிசையில், பஸ் பிடிப்பதற்காய், நிறைய பேர் நின்றுகொண்டு இருந்தார்கள்.

“எத்தனை பேர், எத்தனை பேர், தினம் தினம், சிங்கப்பூருக்கும், மலேசியா ஜோஹுருக்கும் இடையில் பயணிக்கிறார்கள். எவ்வளவு வேலை வாய்ப்புகளையும், வியாபாரங்களையும், இந்த இரண்டு நாடுகளும், பகிர்ந்து கொள்கின்றன. இதோ, இந்த பஸ் பயணிகளின், இந்த நீண்ட வரிசையே அதற்கு சாட்சி போலும்”. நானும் வரிசையில், நின்று கொண்டேன்.               

என் கடைசி வரிசைக்கு, முன் வரிசையில், நான் ஏறும் அதே பஸ்ஸைப் பிடிக்க நின்றுகொண்டு இருந்த, ஒரு சீன இளைஞன், என்னையே பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பதை, நான் இப்போது கவனித்தேன். “பார்க்கட்டுமே.. அவன் ஆசை வேறு.. என் ஆசை வேறு. அதனால் என்ன? அவன் ஆசைக்கு அவன் பார்க்கிறான். பார்க்கட்டுமே.” நான், அவனை கவனிக்காதது போல, என்னைக் காட்டிக்கொண்டு, எனது கண்களை, வேறு பக்கம் ஓட விட்டேன்.

பஸ் வர, பஸ் வர, வரிசை நகர்ந்தது.

அங்கிள், மறுபடியும் எனது மனதில் வந்தார். “அங்கிள்.. நான் இப்போது வெறும் கையுடன்தான், உங்களைப் பார்க்க வந்துகொண்டு இருக்கிறேன் அங்கிள்.. உங்கள் ஏமாற்றம் நிறைந்த முகத்தை, நான் எப்படிப் பார்ப்பேன் அங்கிள்”.

வரிசை நகர்ந்தது. எனது சிந்தனையும் நகர்ந்தது

தொடரும்

அழகர்சாமி சக்திவேல்

Series Navigationதக்கயாகப் பரணி தொடர்ச்சி
author

Similar Posts

Comments

  1. Avatar
    Sarangapani, K says:

    திண்ணை எடிட்டர் ஐயா,

    உங்கள் இணைய தளத்தில் படிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஒரு வரிக்கும் இன்னொரு வரிக்கும் இடையே இடைவெளி இல்லாமல் இருப்பதால் கண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றன. கண் பிரச்சினை இருப்பவர்கள், கண்ணாடி அணிபவர்கள், முதியவர்களுக்கு என ஒரு சிறிய எளிமையான வசதி செய்து தரக்கூடாதா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *