பரமன் பாடிய பாசுரம்

This entry is part 20 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

                                                          

                               வைணவ சமயம் நம் நாட்டின்பழம் பெரும் சமயங்களுள் ஒன்றாக விளங்குகிறது. திருமாலின் பெருமையை போற்ற 5—9ம் நூற்றாண்டு வரை பல ஆழ்வார்கள் தோன்றி, தமிழையும் பக்ததியையும் வளர்த்து வந்தார்கள். எம் பெருமானுடைய கல்யாண குணங்களைப் போற்றிப் பாடிய பாடல்கள் திவ்யப் பிரபந்தம் என்று வழங்கப்படுகிறது. ஆழ்வார் கள் பன்னிருவர்[1[ பொlய்கையாழ்வார் [2] பூதத் தாழ்வார் [3] பேயாழ்வார்[4]திருமழிசயாழ்வார் [5]பெரியாழ்வார் [6] ஆண்டாள்[7] தொண்டரடிப்பொடியாழ்வார் [8] திருமங்கையாழ்வார் [9] திருப்பாணாழ்வார் [10] குலசேகர ஆழ்வார் [11]நம்மாழ்வார் [12] மதுரகவி ஆழ்வார் ஆவர்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

                                காலப்போக்கில் மறைந்துபோன இப் பிரபந்தங்களை நாதமுனிகள் தொகுத்து ஒவ்வொரு தொகுப்பிலும் சுமார் 1000 பாடல்கள் அடங்கியிருக்குமாறு வகுத்து அவற்றுள் இசைப்பாக்களை மூன்று தொகுதிகளாகவும் இயற்பாக்களை “இயற்பா என்ற தொகுதியாகவும் வகைபடுத்தினார். இசைப்பாவில் முதலாயிரம் 947 பாசுரங்களும் பெரிய திருமொழியில் 1134 பாசு ரங்களும் திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும் இயற்பாவில் 593 பாசுரங்களும் அடங்கும்

நம்மாழ்வார்

                   இன்று ஆழ்வார்திருநகரி என்று வழங்கப்படும் திருக்குருகூரில் காரியார், உடையநங்கையார் என்ற தம்பதி களுக்கு வைகாசி விசாகத்தில் அவதாரம் செய்தார்  நம்மாழ்வார்.

பிறந்தநாள் முதல் பால் அருந்தாமல் இருந்த குழந்தையை 12ம் நாள் மாறன் என்று பெயரிட்டு குருகூரில் கோயில் கொண்டி ருக்கும் ‘பொலிந்துநின்றபிரான் திருமுன்பு விட அக்குழந்தை தவழ்ந்து அக்கோயிலிலிருந்த புளியமரத்தடியில் ஒரு பொந்தில் சென்று அங்கேயே இருந்தது.

மதுரகவி ஆழ்வார்                     

16 ஆண்டுகள் இப்படித்தவ நிலையில் கழிந்தது. இவரைப் பற்றிக் கேள்விபட்ட மதுரகவியாழ்வார் இவரைக் காண வந்தார். புளிய மரப் பொந்தில் இருந்தவரிடம்

             ”செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால்

              எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?

என்று வினா எழுப்பினார். ஒரு உடலை அடைந்த உயிர் எதை

அனுபவித்து எங்கே இருக்கும்? என்ற வினாவிற்கு

 “அத்தைத்தின்று அங்கே கிடக்கும்” அதாவது உயிரானது அந்த அந்தப் பிறப்பில் வினை முடியும் வரை அவ்வுடம்பிலேயே இருக்கும் என பளீரெனப் பதில் வந்தது.

                                            இதைக்கேட்ட மதுரகவி ஆழ்வார் வயதில் மிகவும் மூத்தவராக இருந்த போதிலும் நம்மாழ் வாரையே தம் குருவாக ஏற்றுக் கொண்டார்! மற்ற ஆழ்வார்கள் எல்லோரும் பெருமானைப் போற்றிப் பாடவும் இவரோ நம்மாழ் வாரையே தெய்வமாக எண்ணி அவர்மீது ”கண்ணி நுண் சிறுத் தாம்பு” என்று தொடங்கி 10 பாசுரங்கள் பாடினார். அப்பெயரா லேயே அவை நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் சேர்க்கப் பட்டுள்ளது.

சடகோபம் சடாரி                                   

                                  இறைவனையே தியானித்திருந்த மாறன் என்ற நம்மாழ்வார் பாடிய பாடல்கள், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களாக வழங்குகின்றன. இவை நான்கும் நான்கு வேதங் களின் சாரமாக விளங்குவதாகச் சொல்கிறார்கள். இவர் 35 திருத் தலங்களைப்பற்றிப் பாடியிருக்கிறார். திருமால் திருக்கோயில் களில் பெருமானைச் சேவிக்கச் செல்வோருக்கு திருமுடிமீது சடாரி,[சடகோபம்] சாதிப்பதைப் பார்க்கலாம். நம்மாழ்வார் எப் போதும் பெருமான் திருவடியிலேயே இருப்பதாகச் சொல்வார்கள்.

அதன் அடையாளமாகவே சடாரி சாதிக்கப்படுகிறது

நாயகநாயகிபாவம்

                         நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் பங்களிப்பாக சுமார் 1000 பாடல்களுக்குமேல் பாடியிருப்பதாகத் தெரிகிறது. பொதுவாகத் திருவாய்மொழி ஆயிரம் என்றே சொல் லப்படுகிறது. திருவாய்மொழியில் நம்மாழ்வார் தாமான தன்மை யிலும், அந்த நிலை மாறியபின் நாயகி [தலைவி] நிலையில் நின்று பேசுவதையும் காணலாம். தலைவி நிலையில் இவருக்குப் பராங்குசநாயகி என்று பெயர். தலைவி கூற்றாக 17 பதிகங்களும் தாய் கூற்றாக 7 பதிகங்களும் தோழி கூற்றாக 3 பதிகங்களும் பாடியுள்ளார். திருமங்கையாழ்வாரும் பரகாலநாயகியாகி இது போல் நாயகி பாவத்தில் பாடியுள்ளார்.

                               நம்மாழ்வார் வைகாசி விசாகத்தில் அவதரித்ததால் வைகாசி விசாகம் ஏற்றம் பெற்றது. சடகோபர் என்ற பெயர் அவருடைய பெயருக்கு ஏற்றம்..அவர் பிறந்தஊர் என்பதால் குருகூர் பெருமை அடைந்தது. அவர் அருளிய திருவாய்மொழியும் பெரும் புகழைப் பெற்றது.

         “உண்டோ வைகாசி விசாகத்துக்(கு) ஒப்பு? ஒருநாள்

         உண்டோ சடகோபருக்கு ஒப்பு ஒருவர்?—-உண்டோ

         திருவாய்மொழிக்கு ஒப்புத் தென் குருகைக்கு? உண்டோ

         ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்

என்பதால் அறிகிறோம்.

யார் பாடியது?

                   இவ்வளவு சிறப்புக்கள் அடங்கிய 1000 க்கும் மேற்பட்ட பாடல்களைப்பாடிய நம்மாழ்வார் இது பற்றி என்ன சொல்கிறார்? அவரே சொல்லக் கேட்போம்.பரமன் என்னை ஒரு கருவியாகக் கொண்டு தன்னைப் பற்றி இனிமையான தமிழ்ப் பாசுரங்களைப் பாடுவித்துக் கொண்டான்

                   தான் யான் என்பான் ஆகி

                         தன்னைத்தானே துதித்து, எனக்குத்

             [[பத்தாம் பத்து, ஏழாம் திருவாய்மொழி.  3733]

            பண்ணார் பாடல் இன்கவிகள்

                  யானாய்த்தன்னைத்தான்பாடி,

            தென்னா என்னும் என் அம்மான்

  [10ம் பத்து 7ம் திருவாய்மொழி 3737

                  தானே யான் என்பானாகி

                     தன்னைத் தானே துதித்து

           [10ம் பத்து, 7ம்திருவாய்மொழி 3733

       ”என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை

          இன்தமிழ் பாடிய ஈசன்”

என்றும் போற்றுகிறார்.

பெருங்கருணை                     

                          ஒன்றுக்கும் உதவாத என்னையும் ஒரு பொருளாகக் கொண்டு என் சொல்லால் நான் பாடிய பாசுரம் என்று உலகோர் நம்பும்படி என்னைக் கருவியாகக் கொண்டு தன் சொற்களைவைத்தே திருவாய்மொழி பாடியருளினான்.

      ”என் சொல்லி நிற்பன் யான்? என் இன்னுயிர்

                                               இன்று ஒன்றாய்

       என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்

       தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்

       முன்சொல்லும் மூவுருவாம் முதல்வனே

              [7ம் பத்து, 9ம் திருவாய்மொழி   3426]

இப்பெருங் கருணையை எப்படிப் போற்றுவேன்? என்று நெகிழ்ந்து போகிறார்.

அவன்,தானேபாடிய கவி

                        பெருமான் பெருங்கருணையுடன் என்நாவில் வந்து புகுந்து அமர்ந்து கொண்டான்! பின் நல்ல நல்ல இனிய கவிதைகளை நான் பாடுவதாகக் காட்டித் தானே தன்னிலை பற்றிப் பாடியுள்ளான். என் மூலம் தன்னைக் கவிபாடிக் கொண்டான்

            ’என் நாமுதல் வந்து புகுந்து நல் இன்கவி

            தூமுதல் பக்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்

            வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ?

                [7ம்பத்து, 9ம்திருவாய்மொழி.  3427]

                            என் அப்பனைப்பாட எந்தத் தகுதியும் எனக்கு இல்லை ஞானமில்லாத என்னையும் ஒரு பொருட்டாக ஏற்றுக் கொண்டு தன்னைப்பாட் என்னைத் தேர்ந்து என்னையும் பயன்படுத்திக் கொண்டான் அப்பரமனே இப்பாரெல்லாம் தன் னைத் துதிக்கும் படி இனிமையான கவிதைகளை என் மூலம் பாடுவித்தான்.

            சீர்கண்டு கொண்டு திருந்து நல் இன்கவி

            நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையால்

            ஏர்வு இலா என்னைத்தன் ஆக்கி என்னால் தன்னைப்

            பார்பரவு இன் கவி பாடும் பரமரே

               [7ம்பத்து 9ம் திருவாய்மொழி  3429]

என்று பரமன் பார்புகழும் கவி பாடியதை அழுத்தமாகத் தெரிவிக்கிறார்

                              பரமன் என்னைத் தனக்குரியவனாக்கிக்கொண்டு, பின் என்னால், தன்னை வைகுந்தநாதனாகப் புகழ இனிய கவிகளைச் செய்யும் குந்தன் என்ற பெயரையுடைய எம் பெருமானை, எத்தனை காலம் வந்தனை செய்தாலும் மனம் நிறைவடையுமா? (அடையாது)

       வைகுந்தநாதன் என் வல்வினை மாய்ந்து அறச்

       செய்குந்தன் தன்னை என்னாக்கினான், என்னால் தன்னை

       வைகுந்தனாகப் புகழ வண் தீங்கவி

       செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?

          [7ம்பத்து, 9ம் திருவாய்மொழி. 3431

                                       சக்ரதாரியான எம் பெருமான் கொஞ்சமும் தகுதியில்லாத என்னைத் தனக்கு உரியவனாக ஆக்கிக்கொண்டான். என்னே அவன் அருள்! என்னையும் ஒரு பொருளாக்கி என் மூலமாகச் சிறப்புக்களையெல்லாம் கவிபாட வைத்தான். கொஞ்சமும் தகுதியில்லாத என்னைப் பாசுரம் பாடச் செய்த மேன்மைக்கு நான் தகுதியானவனா? அவனை முழுமை யாக அனுபவிக்கும் நிறைவு எனக்குக்கிட்டுமா? முழுமையாக அனுபவிக்கமுடியாது. (எவ்வளவு அனுபவித்தாலும் முழுமையாக அனுபவித்தோம் என்ற நிறைவு ஒருபோதும் ஏற்படாது!)

                                         இப்படிப் பலவாறு சிந்தித்த நம்மாழ்வார் இறுதியாக் ஒரு முடிவுக்கு வருகிறார். அவன் எனக்குச் செய்த உதவிக்குப் பதிலாகத் தன்னிடம் உள்ள உயிரைக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறார். கொஞ்சம் நிதான மாக யோசித்த பின் ஓர் உண்மை புலனனாகிறது. இந்த உயிரை உன்னுடையதென்று எப்படி சொந்தம் கொண்டாட முடியும். இந்த உயிரும் அவன் போட்ட பிச்சைதானே! என்று உள்ளுணர்வு சொல் கிறது..

                               என்னைக்கொண்டு இன்கவிகளால் தன்னைப் பாடிக் கொண்ட அப்பனுக்கு எதைக் கொடுத்தாலும் ஈடாகாது. எந்த உலகத்திலும் என்னால் செய்யத்தக்கது எதுவும்இல்லை. என்ன செய்யலாம். அவன் தாள் வணங்குவதைத்தவிர

வேறொன்றும் செய்யவேண்டுவது இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்.  அவனுக்குக் கைம்மாறு எதுவும் செய்ய நம்மால் ஆகாது!

                              நம் நாட்டில் தோன்றிய கவிஞர்கள் பலரும் பெருங்காப்பியம் படைத்த புலவர்கள் பலரும் இறைவன் தங்கள் உள்ளிருந்து கவி பாடியதாகவே தெரிவிக்கிறார்கள்.

நாரதர் சொல்ல வால்மீகி ராமாயணம் பாடியதாகச் சொல்கிறார் கள். வியாசர் சொல்லச்சொல்ல விநாயகர் பாரதம் எழுதினார்.

 ‘தில்லைவாழந்தணர்” என்று இறைவன் தொடங்கி வைக்க சுந்தரர்  தொடர்து நாயன்மார்களைப் பாடுகிறார்.“உலகெலாம்” என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் பெரிய புராணம் பாடினார்.

                        ’நானும் அறியேன் அவளும் பொய் சொல் லாள் என்று தன் காப்பியத்தை கலைமகளே உள்ளிருந்து பாடிய ருளினாள் என்று கம்பன் கூறியதாகச் சொல்கிறார்கள். மணி வாசகர் சொல்ல இறைவன் தானே தன் கைப்படத் திருவாசகம் எழுதி. கையொப்பமும் இட்டான் என்பதைப் பார்க்கிறோம். முரு கன் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்க அருணகிரி யார் திருப்புகழ் பாட ஆரம்பிக்கிறார். காளியின் அருளால் காளி தாசன் பெருங்காப்பியன்களைப் பாடுகிறான். ஐந்துவயது வரை பேசமுடியாமல் இருந்த குமரகுருபரருக்குப் பூவைக்காட்டி,“பூமேவு செங்கமல” என்று பாட வைக்கிறான் முருகன்.

                                      இப்படிப்பல இலக்கியங்களும் இறைவனோடு தொடர்புடையனவாக இருப்பதால் தான் தான் இன்றும் புகழோடு காலத்தை வென்று நிற்கின்றன. அப்படிப் பார்த்தால் நம்மாழ்வார் பல இடங்களிலும் வலியுறுத்திச் சொல் வது போல ஆழ்வார் மூலமாகத் தன்னைப் பாடிக் கொண்டான் என்று கொள்வதில் தவறில்லை. அவன் அருளாலே அவன் தாள் வணங்குவது போல் அவனருளாலே அவனைப்பாடியிருக்கலாம்! முடிவு சொல்லும் தகுதி நமக்கில்லை என்பதே உண்மை. திரு வாய் மொழி தந்த அவனை வணங்கிப் போற்றுவோம்

=======================================================================

Series Navigationமுருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரைவெகுண்ட உள்ளங்கள் – 10
author

எஸ். ஜயலக்ஷ்மி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *