அழகர்சாமி சக்திவேல்
அந்தக் குடிசையை விட்டு, ‘எப்போது வீட்டுக்குப் போவோம்’ என. நான் தவியாய்த் தவித்தேன். தங்கம்மா, “என் உடம்பு, உங்களுக்கும் வேணுமா சின்ன ராசா?” என்று கேட்ட கேள்வியில், நான் நிலைகுலைந்து போனேன்.
“இல்லை தங்கம்மா” என்று பலமாகத் தலைஆட்டினேன். தங்கம்மா, என்னை ரொம்பநேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள். ஒரு, தர்மசங்கடமான நிலையில், நான், தலைகுனிந்து கொண்டேன்.
“சின்னராசா.. மத்தவங்க மாதிரி, என்னை ஒழுக்கம் கெட்டவளா, நீங்களும் நினைச்சுட்டீங்களா சின்னராசா? கண்ணால காண்பதும் பொய், காதால கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய், அப்படின்னு நீங்க இன்னும் படிக்கலியா சின்னராசா?. ஒருநாள் நா யாருன்னு நீங்களே தெரிஞ்சுப்பீங்க”
தங்கம்மா பேசிய விஷயம், எனக்குச் சரியாகப் புரியவில்லை. ஆனால், ஏதோ, மனசுக்குள் இருக்கும், உண்மையைச் சொல்லமுடியாமல், தவிக்கிறாள் என்பது மட்டும், எனக்குப் புரிந்தது. நான் ஒன்றும் சொல்லாமல், அவள் முகத்தைப் பார்த்தேன்.
“சின்னராசா, இந்தத் தெருவில் உள்ள அத்தனை ஆண்களுமே, உங்கப்பா மாதிரி, ஒழுக்கம் கெட்டவங்கன்னு, நினைச்சுக்காதீங்க சின்னராசா இதே தெருவில, என்னை ஒரு கூடப்பிறந்த பொறப்பாப் பார்க்கும், நல்ல ஆண்களும் இருக்கிறாங்க சின்னராசா” அவள், இப்போது, என்னைப் பார்த்த விதத்தில், கோபம் தெரிந்தது. நான், மறுபடியும் பேசவில்லை. தங்கம்மா முகத்தையே பார்த்தேன்.
தங்கம்மா கண்கள், இப்போது கலங்கி இருந்தது. அவள் உதடுகள், ஏதோ சொல்லத் துடித்தது. ஆனால், வார்த்தைகளை வெளியே விடாமல் அடக்கினாள் தங்கம்மா. கடைசியில், நிதானமாய்ச் சொன்னாள்.
“சின்னராசா.. உங்க அப்பா இந்தத் தெருவுக்கே பஞ்சாயத்துப் பண்ணட்டும். ஆனால், என் ஒழுக்கத்தைப் பற்றிப் பேச அவருக்குக் கொஞ்சம்கூடத் தகுதி இல்லே.” தங்கம்மா, இப்போது கொஞ்சம் ஆவேசமானாள்.
“ஊர் ஆயிரம் சொல்லட்டும் சின்னராசா. ஆனா, நான், சத்தியமா ஒழுக்கம் ஆனவள்தான். அதை, நான் கும்பிடும், இந்த சாமி சத்தியமா, என்னால உறுதியாச் சொல்ல முடியும்.”
“நான் ஒழுக்கம் ஆனவளா இல்லையான்னு, இந்த ஊர் சொல்ல வேணாம் சின்னராசா, நீங்களே, ஒரு நாள், என் ஒழுக்கத்தைப் பத்திப் பேசும் காலம் வரும். அன்னைக்கு, இந்த ஊர்ல, நான் இருக்கணுமா, இல்லே போகணுமா அப்படிங்கிறதை, நானே முடிவு பண்ணிக்குவேன்”. தங்கம்மா, இப்போது, விசும்பி விசும்பி அழுதாள்.
எனக்கு, அவள் என்ன சொல்ல வருகிறாள் என்றே புரியவில்லை. “நான் போய்ட்டு வர்றேன் தங்கம்மா” என்று மட்டுமே’, அந்த நேரத்தில், என்னால் சொல்ல முடிந்தது.
தங்கம்மா என் கூடவே நடந்தாள்.. “சின்னராசா, கேவலம், உங்களுக்கு வந்தது, ஒரு உடம்பு ஆசை. பொம்பளை உடம்பு, எப்ப வேணாலும், உங்களுக்குக் கிடைக்கும். இப்பதைக்குப் படிப்பை மட்டும் பாருங்க. உங்க அம்மா, உங்க மேலே எவ்வளவோ கனவையும் ஆசையையும் வைச்சு இருக்காங்க”
வழி நெடுக, தங்கம்மா பேசிக்கொண்டே வந்தாள். அவள் பேசப் பேச, எனக்கு ஒன்று புரிந்தது. பாழாய்ப்போன இந்த சமூகமே, அவள் ஜாதியைக் காரணம் காட்டி, அவளை, மலம் அள்ள வைத்து இருக்கிறது. சாதியில் உயர்ந்த, அப்பாவின் அறிவுக்கு முன்னால், தங்கம்மாவின் பரந்த அறிவும் ஞானமும், அப்படி ஒன்றும் தாழ்ந்ததாய் எனக்குத் தெரியவில்லை.
ஒரு ஆசிரியர், வழிதவறும் ஒரு மாணவனுக்கு, எப்படி அறிவுரை சொல்வாரோ, அதே போன்ற, ஒரு தெளிவான, அறிவுரைப் பேச்சை, தங்கம்மா என்னிடம், பேசிக்கொண்டு வந்தாள். நான், இதை எதிர்பார்க்கவே இல்லை.
நடந்த விசயங்களை நானும் யாரிடமும் பேசவில்லை, தங்கம்மாவும் பேசவில்லை.
எல்லாம், அத்தோடு முடிந்தது என்றுதான் நினைத்தேன். ஆனால், அது, அத்தோடு முடியவில்லை.
அந்த பயங்கரமான நாள், நான் இன்றும் அலறி, அலறி எழுந்து உட்கார்ந்து கொண்டு இருக்கும் நாள், எனது வாழ்க்கையில், அடுத்த ஒரே மாதத்தில் வந்து சேர்ந்தது.
இதோ, எங்கள் ஊர்க் காளியம்மன் கோவில் திருவிழா, தொடங்கிவிட்டது. அப்பாவும், கவுன்சிலரும், காளியம்மன் கோவில் திருவிழா நல்லபடியாக நடக்க, அங்கும், இங்கும், அலைந்துகொண்டு இருந்தார்கள்.
இதோ, இரண்டாம் நாள், தெருக்கூத்தும் ஆரம்பித்துவிட்டது. தெரு சனம் எல்லாமே தெருக்கூத்தில், மூழ்கியிருந்தது. தெருவின் எல்லையில், தற்காலிகமாக போடப்பட்டிருந்த, அந்தக் கொட்டாய் மேடையில், பபூன்காரன், டான்ஸ்காரியுடன், பாடி ஆடிக்கொண்டு இருந்தான்.
“அட கம்மாக்கரை ஓரத்துல கண்ணாத்தா
நீயி கண்டுக்காம போறதென்ன சின்னாத்தா
நம்ம சும்மா கொஞ்சம் பேசுனாக்க என்னாத்தா
ஓஞ் சொத்துபத்து கொறைஞ்சிடுமா சொல்லாத்தா
அட கம்மாக்கரை.. ஆஹா கம்மாக்கரை. க்கூம் கம்மாக்கரை ”
தெருவின் இளைஞர் கூட்டம், அந்த பபூனும், டான்ஸ்காரியும் பேசும், பச்சை வசனங்களுக்கு, கைகொட்டி சிரித்துக்கொண்டு இருந்தது. கூட்டத்தில், நின்றுகொண்டு இருந்த எனக்கு மட்டும் போரடித்தது.
வீட்டுக்குப் போய், தூங்கலாம் என்று நான் நினைத்து, கோவிலைக் கடந்தேன். அப்பா, கோவிலின் முன் உட்கார்ந்து இருந்தார். பாவம், கோயில் திருவிழா, நல்லபடியாக நடக்கனும்னு, பத்துநாளா, சரியாகத் தூங்காம அலைகிறார் அப்பா.
“வாங்கப்பா வீட்டுக்குப் போகலாம்.” நான் அப்பாவைக் கூப்பிட்டேன். அப்பா, தயங்கினார். பக்கத்தில் இருந்த, கவுன்சிலர், சிரித்துக்கொண்டே சொன்னார்.
“இல்லேப்பா.. கரகாட்டக்காரிக, கூத்து கட்டும் பொம்பளைக, இவளுக அத்தனை கூட்டத்தையும், பத்திரமா அனுப்பிச்சிட்டுத்தான், அப்பா வீட்டுக்கு வருவாரு, நீ போ”. இப்படிச் சொல்லிவிட்டு, கவுன்சிலர் சிரித்தபோது, அப்பா எரிந்து விழுந்தார். “யோவ் கவுன்சிலரு.. அவன் என் பையன்யா.. அவன்கிட்டே என்ன பேசணும்னு தெரியாம பேசிக்கிட்டு. பேச்சை நிறுத்துய்யா”
நான், அப்பாவின் பலவீனம் புரிந்துகொண்டு, பேசாமல் நடந்தேன். அப்பா, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, “நானும் வரேன் மவனே..” என்று என் பின்னாடியே நடந்து வந்தார். இருவரும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், வீடு வந்து சேர்ந்தோம்.
எல்லோரும், தெருக்கூத்தில் இருந்ததால், தெருவே, ரொம்ப அமைதியாக இருந்தது. ஆனால், எங்கள் வீட்டுக் காம்பௌன்ட் கதவு மட்டும், திறந்து இருந்தது கண்டு. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்பா, உஷார் ஆனார்.
மெல்ல, இருவரும், உள்ளே போனோம். வீட்டின் கதவும் திறந்தேதான் இருந்தது.
யாரோ திருடன் உள்ளே நுழைந்து விட்டான், என்று என் மனம் திக் திக் என்று அடித்துக்கொண்டது. அப்பாவும், நானும், கதவை, மெல்லத் திறந்துகொண்டு உள்ளே போனோம். உள்ளே, நாங்கள் கண்ட காட்சி..
அம்மாவும், தங்கம்மாவும் நிர்வாணமாய், ஒருவரையொருவர் அணைத்த கோலமாய்… தங்கம்மா, ஒரு ஆண் பிள்ளை போல, அம்மாவை, என்னெனவோ செய்துகொண்டு இருந்தாள்.
“கண்டார ஓ..லி….. ரொம்பநாளா, நான் இந்த சந்தேகத்துலதாண்டி இருந்தேன். கையும் களவுமா மாட்டிக்கிட்டியா நாயே.. இதுனால தானே, என்னைப் பார்த்தப்பல்லாம், அந்த நக்கல் சிரிப்பு சிரிச்சே”.. அப்பா தங்கம்மா மீது பாய்ந்தார். அவள், தலைமுடியைப் பிடித்து, கன்னம் கன்னமாய் அறைந்தார். தங்கம்மா, கொஞ்சம் கூடத் தடுக்கவில்லை.
அப்பா, கை வலித்திருக்கவேண்டும். அம்மாவைப் பார்த்தார். “சீ நீயெல்லாம் ஒரு பொம்பளை.” காலால், அம்மாவை ஓங்கி மிதித்தார்.
அம்மா, அலறினாள். இப்போதுதான், தங்கம்மா, வேகமாகத் திரும்பி அப்பாவை முறைத்தாள். அப்பா, அம்மாவை உதைத்ததும், அம்மா அலறியதும், தங்கம்மாவுக்கு, கோபத்தை உண்டாக்கியது போலும்.
“என்னடி தே..டியா முறைக்கறே.. அவ மேலே உனக்கு அவ்வளவு காதலா” அப்பா, தங்கம்மாவை உதைக்க முனைந்தார். ஆனால், தங்கம்மா, அவரை, அடித்து, பலம்கொண்ட மட்டும், கீழே தள்ளினாள், அப்பா, மூலையில் போய் விழுந்தார். அப்பா மண்டையில், ரத்தம் கொட்டியது.
தங்கம்மா உறுமினாள். “அம்மாவை மட்டும் அடிக்காதே ஒழுக்கம் கெட்டவனே”. தங்கம்மா,அம்மாவை, மறைத்து நின்றுகொண்டாள் தங்கம்மா நின்ற நிலையைப் பார்த்தால், இப்போது ஒரு பெண் போலவே இல்லை. காளி போல நின்றாள் தங்கம்மா.
இதுவரைப் பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு, அப்பா ரத்தம் கசிய விழுந்து கிடந்ததைப் பார்த்து, மனம் பதறியது. என்னுள் கோபம் கூடியது. நான், வேகமாகப் போய், தங்கம்மாவின் முடியைப் பிடித்து, அவளை, அடி அடியென்று அடிக்க ஆரம்பித்தேன்.
ஆச்சரியம், தங்கம்மா ஒன்றுமே சொல்லவில்லை. “அடிங்க சின்னராசா.. அடிங்க சின்னராசா..” என்று சொல்லிக்கொண்டே, நான் கொடுத்த, அத்தனை அடியையும் வாங்கிக்கொண்டாள். நான், மிதி மிதி என்று அவளை, என் காலால் மிதித்தேன். அவள், அப்போதும் ஒன்றும் சொல்லவில்லை.
“அவளை விட்டுடுடா மகனே..” அம்மா, இப்போது கதறி அழுதாள். நான், தங்கம்மாவை இப்போது விட்டுவிட்டேன்.
தங்கம்மா, எழுந்தாள். தனது கூந்தலை, அள்ளி முடிந்தாள். எனது அருகே வந்தாள்.
“சின்னராசா, அன்னைக்குச் சொன்னதையே, இன்னைக்கும் சொல்றேன். என் உடம்பை, உங்க அப்பா முதல்கொண்டு, எத்தனையோ பேரு தின்னுருக்கானுங்க. ஆனா, நான் தின்ற ஒரே ஒரு உடம்பு, உங்க அம்மா உடம்பு மட்டும்தான்.”
“ஊருலே உள்ளவன் எல்லாம், என்னைத் தின்னு தின்னு, பசியாறி, சந்தோசப்பட்டு இருக்கலாம். ஆனா, நான் ஒருபோதும், இவனுகளுக்கு, என் உடம்பை, சந்தோசமா, என் மனம் விரும்பித் தின்னக்கொடுத்தவள் இல்லை.”
“நானும் ஒழுக்கமானவதான் சின்னராசா.. உங்க அம்மாவும் ஒழுக்கமானவங்கதான்.. ஒருத்திக்கு ஒருத்தியா நாங்க வாழ்ந்த வாழ்க்கையை, ஊர் ஒத்துக்காம போகலாம். ஆனா, நிசம், நிசம்தான்”
சத்தியம் பண்ணுவதைப் போல, தரையை, பலங்கொண்டு, தனது கையால் அடித்தாள் தங்கம்மா. சொல்லிவிட்டு, தங்கம்மா வெளியே போனாள். தெருவே, திருவிழாவில் இருந்ததால். தங்கம்மா, தெருவில் நடந்து போனதை, யாரும் பார்க்கவில்லை.
நான், அப்பாவைக் கூட்டிக்கொண்டு, ஆஸ்பத்திரிக்கு விரைந்தேன்.
போகும்போது, அப்பா சொன்னார். “மகனே.. டாக்டர்கிட்டே உண்மையைச் சொல்லாதே.. தடுக்கிக் கீழே விழுந்திட்டேன்னு மட்டும் சொல்லு”
நானும் அப்படியே டாக்டரிடம் சொன்னேன். டாக்டர், அப்பாவிற்கு, தலையில் கட்டுப்போட்டு விட்டார். கட்டுடன் இருந்த அப்பாவை, வீட்டிற்குக் கூட்டிவந்து, படுக்க வைத்தேன்.
அம்மா ஓடி வந்தாள். என்னைக் கட்டிப்பிடித்து, “என் ராசா” என்றாள்.
நான், அவளை, உந்தி வெளியே தள்ளினேன். “பேசாத என்கூட..” நான் உறுமினேன்.
அம்மா, மறுபடியும் அழுதாள். நான், சட்டை செய்யவில்லை.
மனம் ரொம்ப பாரமாக இருந்தது. நடந்ததை, எதையும் என்னால், சீரணிக்கவே முடியவில்லை. நான், சைக்கிள் எடுத்துக்கொண்டு, என் கல்லூரி நண்பன் வீட்டிற்குப் போனேன். அடுத்தநாள், சென்னையில் இருந்த என் கல்லூரிக்குப் பயணமானேன்.
அதன் பிறகு, ஒரு வருடம், நான், வீட்டுப் பக்கமே வரவில்லை.
கல்லூரியில், என்னால், படிப்பிலும், சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. நாட்கள் மட்டுமே ஓடின. “யார் பக்கம் நியாயம்.. அம்மா பக்கமா? அப்பா பக்கமா? தங்கம்மா பக்கமா?” நான் விடை தெரியாது தவித்தேன்.
ஒருநாள், என் கல்லூரி நண்பன், அறையில், படித்துக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அது, ஒரு மகரிஷி எழுதிய, “நாம் வாழும் உலகம்” என்ற புத்தகம். மனிதன் தோன்றிய விதம் பற்றி, மகரிஷி சொல்லி இருந்த, வாசகங்கள் என்னை, ஆச்சரியப்படுத்தின.
“வெப்பம்தான், மனித உயிர்கள் தோன்றக் காரணம். உயிர்கள் தோன்றிய ஆரம்பக்கட்டத்தில், ஆண் என்றோ, பெண் என்றோ இனங்கள் இல்லை. எல்லோரும் ஒரே மாதிரியாகவே இருந்தார்கள். உள்ளுடம்பின், வெப்பம் கூடக்கூட, உயிர்களுக்கு, காம ஆசை தோன்றியது, இதில், வலுத்த, காம ஆசை கொண்ட உயிருக்கு, பரிணாமம் மாற மாற, முன்புறம் நீண்டு ஆண்குறி தோன்றியது. இளைத்த ஆசை கொண்ட உயிருக்கு, பரிணாமம் மாற மாற, முன்புறம் குழியாகி, பெண்குறி தோன்றியது. இனப்பெருக்கமும், இங்கேயிருந்துதான் ஆரம்பித்தது/”
நான், புத்தகத்தை மூடினேன். எனக்கு, இப்போது ஏதோ, விடை கிடைத்தது போல இருநதது. நான், எனக்குள் பேசிக்கொண்டேன்.
“மனித ஜனனம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே, ஆண், பெண் என்ற வரையறைகளின் இலக்கணங்களை, சமூகமே தீர்மானித்து இருக்கிறது. அப்படி, ஆண், பெண் இனங்கள் குறித்த, சமூகம் சொல்லிய இலக்கணங்களுக்குள் ஒத்துவராத உயிர்கள், ஆரம்பக்காலத்தில் இருந்தே, தனித்து விடப்பட்டு இருக்கிறார்கள்,”
“பரிணாம வளர்ச்சிக்கேற்ப, ஆண்குணங்களுடனோ, பெண்குணங்களுடனோ, பிறக்காத உயிர்களும், ஆரம்பத்தில் இருந்தே, உலகில், வாழ்ந்து கொண்டுதான், இருந்திருக்கின்றன. ஆனால், சமூகம், அது போன்ற, ஆண், பெண் சாராத, மனித உயிர்களை, அதிகம், கண்டுகொள்ளவேயில்லை.”
“மதங்கள் தோன்றிய பிறகு, நிலைமை இன்னமும் மாறிப்போனது. ‘இனப்பெருக்கம் ஒன்றே, ஆண், பெண்ணோடு உறவுகொள்வதின் நோக்கமாக இருக்கவேண்டும்’ என்ற மதக்கோட்பாடுகளின் அடிப்படையில், ஆண், பெண் இலக்கணம் இல்லாத உயிர்கள், பாவிகளாக, மாற்றப்பட்டு இருக்கின்றனர். கூடவே, கொடுமைகளுக்கும், உள்ளாகி இருக்கின்றனர்.”
“அன்று யார் கொடுமைப்பட்டார்களோ தெரியாது. இன்று, அம்மாவும், தங்கம்மாவும் கொடுமைப்படுகிறார்கள். வழி தவறிய ஆடுகளை கடவுள் காக்கிறார் என்றால், இனம் பிறழ்கிற, அம்மாவையும், தங்கம்மாவையும், யார் காப்பாற்றுவார்கள்?”
“பத்து பேரோடு படுத்து எழ, அப்பாவிற்கு உரிமை இருக்கிறது. இருபது வயதில், எனக்கு நாற்பது வயது, தங்கம்மா உடம்பு கேட்கிறது. இது எல்லாம், ஆணின் உரிமை என்றால், ஒருத்திக்கு, ஒருத்தியாய் வாழும், அம்மாவும், தங்கம்மாவும் ஒழுக்கம் கெட்டவர்கள் எப்படி ஆவார்கள்.?”
“பெண்ணோடு உடலுறவு கொள்ளவே பிடிக்கும் என் அம்மாவிற்கு, அப்பா மூலம் பிள்ளை பெற்றுக்கொள்ள மட்டுமே, ஆசை வந்து இருக்கலாம். பெற்ற பிள்ளையான, என்னை வளர்ப்பதற்காய், அம்மா, அப்பாவுடனேயே குடும்பமும் நடத்தி இருக்கலாம். அதற்காக, அவள் உடல் ஆசையை, எதற்கு அவள், காலத்திற்கும் துறக்க வேண்டும்? பத்து பேரோடு, படுத்த, அப்பா, அப்படி, உடலாசையைத் துறந்து வாழ்ந்துவிடுவாரா?”
“அம்மா போட்ட வெற்றிலைக்கு, கொட்டைப் பாக்காக, அப்பா இருந்து இருக்கலாம். ஆனால், அம்மா, ஆசை ஆசையாய்ப் போடும் கட்டைப் புகையிலையாக, தங்கம்மாவால் மட்டுமே இருக்க முடிந்து இருக்கிறது.”
எனக்கு, திடீரென, அம்மாவைப் பார்க்கவேண்டும் போல, இருந்தது. தினம் “ராசா.. ராசா” என்று கொஞ்சி, பாலூட்டிச் சோறூட்டி என்னை வளர்த்த அம்மா.. நான், இப்போது, கண் கலங்கினேன்.
“அம்மா இப்போது எப்படி இருப்பாளோ?” ஒரு வருடம் கழித்து, நான் வீட்டுக்குப் போனேன்.
வீடு, சுத்தமாக மாறியிருந்தது. அம்மா, என்னைப் பார்த்து “வா மகனே” என்று சொல்லவில்லை. மாறாய், என்னைப் பார்த்து, மிரள மிரள விழித்தாள். அவள், பயந்து நடுங்குவது எனக்குப் புரிந்தது.
“வாங்க ராசா..” யாரோ, ஒரு நடுத்தர வயதுப்பெண், அடுக்களையில் இருந்து வெளியே வந்தாள்.
“அம்மாவுக்கு மனநிலை கொஞ்சம் சரியில்லாமப் போச்சு.. சமையல், கிமையல் ஒண்ணும், பண்றது இல்லே. அப்பாவுக்கு, சமையல், வீட்டு வேலை, எல்லாமே, இப்ப நாந்தான்”. கட்டுக்குலையாத, அந்த வேலைக்காரியைப் பார்த்ததும், அப்பா, இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார், என்பது எனக்குப் புரிந்துபோனது.
நான், அம்மாவை அணைத்துக்கொண்டேன். அவள், அதற்கு எந்தவித மறுப்பும் சொல்லாமல், மலங்க மலங்க விழித்தாள். உணர்வில்லாத மனநிலையில் இப்பொது அம்மா இருந்தாள். குற்றம் அவளுடையது இல்லை. என்னுடையதுதான்.
அம்மாவை, ஒரு குற்றவாளிக்கூண்டில் ஏற்றி, ஒருவருடம், அவளைத் தவிக்க விட்டுவிட்டு, அவள் மனதை, நான்தான் சிதைத்து இருக்கிறேன். என்னை, விட்டால், அவளுக்கு, ஆறுதல் சொல்ல, யார் இருக்கிறார்கள்?
அப்பாவிடம் ஓடினேன். அப்பா, இறுகிய முகத்துடன் சொன்னார். “டாக்டர்கள் கிட்டேயெல்லாம் பார்த்தாச்சு ராசா. இனி பணம் செலவழிக்கிறது வேஸ்ட்”
அப்பா, பொய் சொல்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. அவர் பணத்தில், படித்துக்கொண்டிருக்கும், அந்தச் சூழ்நிலையில், என்னால், ஒன்றும் செய்ய முடியவில்லை.
காலங்கள் ஓடின. வீட்டுக்கு வேலைக்காரியாய் வந்தவள், அப்பாவின் வப்பாட்டி, என்பது, காலப்போக்கில், எனக்குப் புரிந்தது.
“அம்மா ஏமாற்றி விட்டாள்” என்ற காரணத்தைச் சொல்லியே, அப்பா, இஷ்டத்திற்கு ஆடினார் ஒரு நாள், அவர் ஆண்குறியில் நோய் வந்து இறந்துபோனார்.
நான், மனம் தளரவிடாது, படிப்பில் கவனம் செலுத்தினேன். சிங்கப்பூரில் எனக்கு வேலையும் கிடைத்தது. கைநிறைய சம்பளம். நல்ல வாழ்க்கை.
ஆனால், அம்மாவை மட்டும், என்னால் மாற்றமுடியவில்லை. அம்மா, என்னோடு பழகவோ, பேசவோ முடியாமல், பயந்து பயந்து, மிரண்டாள். என்னால், ஒன்றுமே செய்ய முடியவில்லை.
வருடத்தில் ஒரு முறை, பத்துநாள், பங்கஜத்துடன், இந்தியா வருவேன். அம்மாவைப் பார்ப்பேன். நடந்த விஷயம், பங்கஜத்திற்கு எதுவும் தெரியாது என்பதால், பங்கஜத்திடம், “அம்மா ஒரு மனநோயாளி” என்று மட்டும் சொல்லிவைத்தேன்.
ஆனால், நர்சான பங்கஜமோ, அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “உங்க அம்மா, பார்த்தாத்தான் மனநோயாளி மாதிரி தெரியுறாங்க.. ஆனால், அவங்க உண்மையில் அப்படி இல்லே. சிங்கப்பூர் கூட்டிக்கொண்டு போனா, மாத்திடலாம்” என்று, என்னிடம் நச்சரித்துக்கொண்டே இருந்தாள்.
நான், அம்மாவிடம் கெஞ்சினேன். அம்மாவோ, சிங்கப்பூர் வர, சம்மதிக்கவே இல்லை.
பங்கஜம், இப்போது கட்டிலில், திரும்பிப்படுத்தாள். எனது நினைவுகள், இப்போது திரும்பியது. அம்மா குறித்த மன வலியில், எனக்குத் தூக்கம் வரவில்லை. அந்த இரவே, எனக்குக் காய்ச்சல் வந்துவிட்டது.
காலையில் எழுந்தவுடனேயே, பங்கஜம், எனக்குக் காய்ச்சல் வந்து இருப்பதைக் கண்டுபிடித்து விட்டாள். “ஏங்க.. நேத்து ராத்திரி, நல்லாத் தூங்கலியா?” நான் ஏன் தூங்கவில்லை, என்பது பங்கஜத்திற்குப் புரிந்து போயிற்று.
பங்கஜம் நிதானமாகவும், அன்புடனும் சொன்னாள். “உங்க அம்மாவும், தங்கம்மாவும், திருமண வாழ்க்கைக்குள் போனது வேண்டுமானால், தப்பாக இருக்கலாம். ஆனால், ஒரு பெண், இன்னொரு பெண்ணிடம், அதீதமான உறவுடன் பழகினால், அதைக் கடுமையாக எதிர்க்கும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த, அந்த இரண்டு பெண்களும், வேறு என்னதான் செய்யமுடியும்?”
“அந்தப் பெண்கள் இரண்டுபேரும், ஆசைகளை வேண்டுமானால் கட்டுப்படுத்தி, சன்யாசி வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம். உங்க அப்பா, போக விரும்பாத சன்யாச வாழ்க்கைக்கு, உங்க அம்மா மட்டும் போக நினைப்பது, எந்த வகையில் நியாயம்?. ஆணும், பெண்ணும் சமம் என்கிற, இந்தக்காலம், நிச்சயம், உங்க அம்மா பக்கம்தான் இருக்கும்”
இப்போது, பங்கஜம் எனது தலையைக் கோதினாள். “கவலைப்படாதீங்க டார்லிங். நான், நேற்று இரவே, ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டேன்.”, அவள், அப்படிச் சொன்னவிதம், என்னை ஆச்சரியப்படுத்தியது. “என்ன ஏற்பாடு” நான் குழம்பினேன்.
இரண்டு மாதம் ஓடிவிட்டது. அந்த, அதிகாலையில், அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருந்தேன். யாரோ, அழைப்புமணியை அழுத்தினார்கள். நான், வேகமாகப்போய்க் கதவைத் திறந்தேன். ஸ்டெல்லாவும், ரோஸியும் நின்றுகொண்டு இருந்தார்கள்.
அந்த இரு பெண்களுக்கும், பின்னால் நின்றுகொண்டு இருந்தது, அம்மாவும், தங்கம்மாவும்.
என்னால் என் கண்களையே நம்பமுடியவில்லை. “அம்மா.. அம்மா” என்று, அம்மாவை ஆரத்தழுவினேன்.
“எப்படிப்பா இருக்கே.. நல்லா இருக்கியா?” அம்மா பேசினாள். நான், இப்போது சந்தோசத்தின் எல்லைக்கே போனேன். எத்தனை வருடம் கழித்து, அம்மா என்னிடம் பேசுகிறாள்.
“நல்லா இருக்கேம்மா… “. நான், குழந்தைபோல் அழுதேன். கொஞ்சநேரம் கழித்துத்தான், எனக்குத் தங்கம்மா நினைப்பு வந்தது. தங்கம்மா, எதுவும் பேசாது, என்னைப் பார்த்து சிரித்தாள்.
“இந்த சிங்கப்பூரில், தங்கம்மா போல, கடுமையாக உழைக்கும், எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், தங்கம்மா போல, கையால், மலம் அள்ளும் வேலை, யாரும் பார்க்கவில்லை. எப்பேர்பட்ட சமூக சேவை தங்கம்மா செய்து இருக்கிறாள்?”
தட்டுவாணி தங்கம்மா, இப்போது எனக்கு ஞானமும், அன்பும் நிறைந்த, கலைவாணியாகத் தெரிந்தாள்.
“வா தங்கம்மா”. வயதான், தங்கம்மாதான் அவள். ஆனால், இன்னும் அந்த ஆண் மிடுக்கு குறையவில்லை.
நான், என்ன நடந்தது என்று பங்கஜத்திடம் விசாரித்தேன்.
இரண்டு மாதத்திற்கு முன், எனக்குக் காய்ச்சல் வந்த அந்த இரவில், பங்கஜம், லெஸ்பியன் பெண்களான, ஸ்டெல்லாவிடமும், ரோசியிடமும்தான் பேசி இருக்கிறாள்.
அந்த லெஸ்பியன் பெண்கள் இருவரும், சந்தோசமாய், இந்தியா போய், அம்மாவைப் பார்த்து இருக்கிறார்கள். அம்மா, அப்போதும், பித்துப்பிடித்தவள் போல்தான் இருந்தாளாம்.
அப்புறம், அங்கும் இங்கும் அலைந்து, ரோஸியும், ஸ்டெல்லாவும், தங்கம்மாவைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். தங்கம்மாவைப் பார்த்த பின்னால்தான், அம்மா, பேச ஆரம்பித்தாளாம். பங்கஜம், எல்லாக் கதையையும், ஒன்று விடாமல், என்னிடம் சொன்னாள். நான், ஆச்சரியத்துடன், கேட்டுக்கொண்டு இருந்தேன்.
திடீரென்று, டாய்லெட்டில் இருந்து, யாரோ இருமுவது போலச் சத்தம் கேட்டது. நான், டாய்லெட் பக்கம் வேகமாகப் போனேன். தங்கம்மா, அங்கே நின்றுகொண்டு இருந்தாள். எனக்கு, விஷயம் புரிந்துபோனது.
அந்த, நவீன டாய்லெட்டில், எப்படி மலம் கழிப்பது எனத் தங்கம்மாவிற்குத் தெரியவில்லை. நான், தங்கம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
“கால் கழுவிட்டியா தங்கம்மா” நான் அன்புடன் அவளைக் கேட்டேன். தங்கம்மா, தலையை ஆட்டினாள். “சரி.. போய் அம்மாவுடன் உட்கார்ந்துக்கோ”. தங்கம்மா, நான் சொன்னதைச் செய்தாள்.
நான், உள்ளே டாய்லேட்டைப் பார்த்தேன். மலம் டாய்லெட் பேசினில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து இருந்தது, டாய்லெட்டுக்குள், சரியாக, வெளிக்கிப் போகத் தெரியவில்லை தங்கம்மாவிற்கு.
நான், இப்போது, தங்கம்மாவின் மலம் கழுவினேன். கழுவும் போதே, எனக்குக் கண்ணீர் வந்தது.
“ஊருக்கே மலம் வாரிச் சேவை செய்தவளுக்கு, நான் இப்போது மலம் கழுவுகிறேன். ஜாதியின் பெயரால், எவ்வளவு கொடுமைப்பட்டு இருக்கிறாள் தங்கம்மா”
“இதோ நான், காலம்காலமாய் அடிமைப்பட்ட, ஒரு ஒடுக்கப்பட்ட சாதியின், மலத்தைச் சந்தோசமாக அள்ளுகிறேன்”.
“அம்மாவிற்கும், தங்கம்மாவிற்கும், எப்படி டாய்லெட் போவது என்பதைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இங்கு இருக்கும்வரை, தங்கம்மாவை, டாய்லெட் கழுவவே விடக்கூடாது. வழக்கம்போல், நானே, என் வீட்டுக் கழிப்பறைகளைக் கழுவி, பளிச் என்று வைத்துக்கொள்ளவேண்டும்” மனதிற்குள், சொல்லிக்கொண்டே வெளியே வந்தேன்.
வெளியே, அம்மாவும், தங்கம்மாவும், அருகருகே உட்கார்ந்து இருந்தார்கள். எனக்குள் ஒரு நிம்மதி வந்தது.
“ஏம்மா.. இங்கே சிங்கப்பூர்ல, கட்டைப் புகையிலை கிடைக்காதே, என்ன செய்யப் போறே?” அம்மாவிடம், நான் கிண்டலாகப் பேசினேன்.
அம்மா, சிரித்துக்கொண்டே, இப்போது தங்கம்மாவைப் பார்த்தாள். எனக்குப் புரிந்தது. அம்மாவின், உண்மையான கட்டைப்புகையிலை, தங்கம்மாதான். அவள், இப்போது, அம்மா பக்கத்திலேயே இருக்கிறாள்.
சிங்கப்பூரில், அம்மா நிரந்தரமாகத் தங்க, நான், சிங்கப்பூர் குடிநுழைவு அலுவலக இணையத்தளத்தில் போய், விண்ணப்பம் பூர்த்தி செய்தேன்.
கூடவே, தங்கம்மா, என் வீட்டிலேயே தங்கி, என் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள, அவளுக்கும், பணி விண்ணப்பம் பூர்த்தி செய்தேன்.
அழகர்சாமி சக்திவேல்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ்
- எல்லாம் பத்மனாபன் செயல்
- ஒப்பிலா அப்பன் உறையும் திருவிண்ணகர்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கம்பனில் நாடகத் தன்மை
- தத்தித் தாவுது மனமே
- கேள்வியின் நாயகனே!
- கவிதை
- நிரந்தரமாக …
- ஆவலாதிக் கவிதைகள்
- வெகுண்ட உள்ளங்கள் – பதின்மூன்று
- வாரம் ஒரு மின்நூல் வெளியீடு – 8
- செவல்குளம் செல்வராசு கவிதைகள்
- நவீன செப்பேடு
- பேச்சுப் பிழைகள்
- கட்டைப் புகையிலை – இரண்டாம் பாகம்
- க.நா.சு கவிதைகள்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 7