வாங்க, ராணியம்மா!

This entry is part 7 of 12 in the series 4 அக்டோபர் 2020

ஜோதிர்லதா கிரிஜா

(23.11.1978 குமுதத்தில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸின் “விடியலின் வருகையிலே” எனும் தொகுப்பில் இடம் பெற்றது.)

மணியின் பார்வை காற்றில் படபடத்துக்கொண்டிருந்த நாள்காட்டியில் பதிந்தது.

மே, பதினெட்டு. மே பதினெட்டு? ஆம். மே பதினெட்டு. அவன் வேலைக்கு வந்து சேர்ந்த நாள், இதே போல் ஒரு மே பதினெட்டுதான்.

பெரிய குளம் … பாதி நாள் பட்டினி. மீதி நாள்களில் அரை வயிற்றுக்குச் சாப்பாடு.  நான்கிலக்கச் சம்பளம் வாங்குகிற அளவுக்கும், கார் வைத்துக்கொள்ளுகிற அளவுக்கும் தன் வாழ்வு திசை திரும்பும் என்று அவன் அப்போது கனவு கூடக் கண்டதில்லை.

நாலு வீடுகளில் எடுபிடி வேலைகள் செய்து அவன் அம்மாவும், குறிப்பிட்ட ஒரு வீட்டில் சமையற்காரராக இருந்து அவன் அப்பாவும் ஏதோ சம்பாதித்து எப்படியோ வாழ்ந்துகொண்டிருந்த போது ஒரு நாள் அவன் அம்மா இறந்து போனாள். அப்போது அவனுக்குப் பத்து வயதுதான்.  அவன் அப்பாவுக்கு முப்பத்தெட்டு இருக்கும். அவனை வளர்த்துப் பெரியவனாக்கிப் படிக்க வைக்கும் எண்ணத்தில் அவர் மறுமணம் செய்துகொள்ளவில்லை. சொந்தக்காரர்களிடமிருந்து எத்தனையோ தூண்டுகோல்கள் போடப்பட்டது அவனுக்குத் தெரியும். அவற்றுக்கெல்லாம் அசைந்து கொடுக்காத அவர் பிடிவாதமாகக் கடைசி வரைக்கும் மறுமணம் செய்துகொள்ளாமலேயே இருந்துவிட்டார். தமக்கு வந்து வாய்க்கிறவள் தம் மகனைச் சரியாக நடத்தி அன்பு செலுத்தத் தவறினால் என்ன செய்வது என்கிற கவலையும் அச்சமுமே அவரது அந்தப் பிடிவாதத்துக்குக் காரணங்களாயின என்பதும் அவனுக்குத் தெரியும். விவரம் தெரிந்ததற்குப் பிறகு அப்பாவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவன் நெகிழ்ந்து போனான். அது எப்பேர்ப்பட்ட தியாகம் என்று முதன்முதலாய்ப் புரிந்த போது அவன் தான் எப்படி அழுதான்! முதல் தடவை அழுதது மாதிரி இப்போது கண்ணீர் வழிய அழாவிட்டாலும், இப்போதும் கூட அவன் கண் கலங்கவே செய்தான்.

ஒரு சமையைற்காரர் தம் மகனை எம்.ஏ. படிக்க வைத்து ஓர் ஐ.ஏ.எஸ். அலுவலராக்குவது என்பது பெரிய சாதனைதான். அதற்காக அவர் மேற்கொள்ள வேண்டியிருந்த பல இன்னல்களையும் சோதனைகளையும் எண்ணிப்பார்க்கையில் அந்தச் சாதனையின் மகத்துவம் இன்னும் அதிகமாவதாக அவனுக்குப்பட்டது.

விரலால் கதவு இலேசாய்த் தட்டப்பட்ட ஓசையில் அவன் எண்னங்கள் தடைப்பட்டன.

“யெஸ், கமின்.”

ராஜகோபாலன் ஒரு கட்டுத் தாள்களுடன் உள்ளே வந்தார்.

“உக்காருங்க. எல்லாத்தையும் கம்ப்பேர் பண்ணியாச்சா?”

“பண்ணியாச்சு, சார்.”

மணி அவற்றில் கையெழுத்துப் போட்டு முடித்ததம் அவற்றை அவர் எடுத்துக்கொண்டார். “மன்த்லி ஸ்டேட்மெண்ட்டை நாளைக்கு எப்படியாவது அனுப்பிடறேன், சார்.” – சென்றார்.

அவனுக்குத் திருமணம் ஒரு பெரிய இடத்தில் நடந்து முடிந்ததன் பிறகு அவன் ஒரு சமையற்காரரைத் தன் வீட்டில் வேலைக்கு அமர்த்தினான்.

அந்தச் சமையற்காரர் வேலைக்கு வந்த அன்று, “காலம் எப்படி மாறுகிறது, பார்த்தீர்களாப்பா? நீங்க சமையல் வேலைக்குப் போன இடத்துக்கெல்லாம் நானும் உங்களுக்கு உதவி பண்றதுக்கு வர்றதுண்டு. இப்ப நம்ம வீட்டிலேயே ஒரு சமையல்காரர்!” என்று அவன் தன் தந்தையிடம் சொல்லிச் சிரித்தான். அதற்கு அவரது பதில் ஒரு புன்சிரிப்புத்தான்.                                                                                                                                                    

… கமலா, “உங்கப்பாவுக்கு நீங்க அசிஸ்ட் பண்ணப் போனது ஊரெல்லாம் தெரியணுமாக்கும்! கொஞ்சம் மெதுவாத்தான் பேசறது,” என்று பின்னர் அவனைத் தனிமையில் பார்த்த போது கடிந்துகொண்டதும் இப்போது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

அறைக்கதவு மறுபடியும் தட்டப்பட்டது. அவன் அனுமதித்ததற்குப் பிறகு சுருக்கெழுத்தாளன் சுரேஷ் உள்ளே வந்து தட்டெழுதிய காகிதங்களை அவனிடம் நீட்டினான். ‘படிச்சு முடிச்சதும் ஸ்டெனோ வேலைக்குப் போகணும்னு ஆசைப்பட்டேன், இப்ப எனக்கே ஒரு ஸ்டெனோ!’ – புன்னகையுடன் கையெழுத்துப் போட்டுவிட்டு எழுந்தான்,

“நான் இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போறேன், சுரேஷ்…. வேலை ஒண்ணும் பாக்கி இல்லே. நீங்களும் போகலாம்…” என்றபடி கைப்பையை எடுத்துக்கொண்டான்.

“தேங்க்யூ சார்,” என்று சிரித்துவிட்டு சுரேஷ் அகன்றான்.

 … கார்க் கதவைத் திறக்க ஓடிவந்தான் தோட்டக்காரப் பையன். “அம்மா வந்துட்டாங்க, சார். மாடி ரும்ல இருக்காங்க. கூட யாராரோ அஞ்சாறு அம்மாங்க வந்திருக்காங்க … “

காரைப் போர்ட்டிகோவில் நிறுத்திவிட்டு அவன் உள்ளே போனான். மாடியிலிருந்து பேச்சும் சிரிப்பும் பெரிதாய்க் கேட்டன. அந்தச் சிரிப்பு அவனையும் தொற்றிக்கொண்டு விடும் போல் இருந்தது. அந்த இரைச்சலில் தான் வந்தது கமலாவுக்குத் தெரிந்திருக்காது என்று நினைத்தான். புன்னகையுடன் அடுக்களைக்குப் போனான். அவன் அப்பா அடுப்புக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அடுப்பில் வெந்துகொண்டிருந்த எதையோ கிளறிக்கொண்டு நின்றார். அவனுக்கு வியப்பாக இருந்தது.

“என்னப்பா சமையல்கார சாமிநாதன் வரல்லையா?”

“வரல்லே.  காலம்பரவே சமைச்சு வெச்சுட்டுப் போனவன், ‘அம்மாவுக்கு உடம்பு சரியில்லே. இன்னும் ரெண்டு நாளுக்கு வரமாட்டேன்னு சொல்லி அனுப்பிச்சுட்டான்.”

அவர் பதில் அவன் மனத்தில் பல கேள்விகளை எழுப்பிற்று.

“அது சரி, நீங்க எதுக்கு அடுப்படிக்கு வந்தீங்க?”

“ஏண்டா? நான் வரப்படாதா? அடுப்படிக்கு வந்து எத்தனை நாளாச்சு! எனக்கும் டிஃபன் பண்ணணும்னு ஆசையா யிருந்தது.”

“உங்களைப் பண்ணச் சொல்லிட்டாளா அவ?”

“அவ ஒண்ணும் சொல்லல்லேடா. நானாத்தான் பண்றேன். உப்புக்காரமெல்லாம் திட்டமாய் இருக்கான்னு பார்த்துச் சொல்லு. அடுப்படிக்கு வந்து ரொம்ப நாளாச்சு…” – சிறிது தக்காளிச் சாதத்தை எடுத்து அவனிடம் நீட்டினார்.

“அவ பண்றதுக்கு என்ன?”

“இப்ப என்ன குடி முழுகிப் போச்சு? அவ அடுப்படிக்கு வந்துட்டா சிநேகிதிகள் தனியா இருப்பாளோல்லியோ?”

“ஒரே ஒரு சிநேகிதியா வந்திருக்கா? அதுதான் அஞ்சாறு பேர் வந்திருக்காளே. இவ டிபன் பண்ணி முடிக்கிற வரைக்கும் அவங்க உக்காந்து பேசிண்டிருக்க மாட்டாங்களா என்ன?”

“கத்தாதேடா மணி! அவ காதுல விழுந்துவைக்கப் போறது.”

மணி சில கணங்கள் வரை பதில் சொல்லாமல் இருந்தான். அவன் தந்தையின் கை தக்காளிச் சாதத்துடன் நீட்டியது நீட்டியபடியே இருந்தது. அவன் அதை வாங்காமல், “காபி டிகாக்‌ஷன் போட்டாச்சா?” என்று கேட்டான்.

“ஓ… ஆயிட்டுது. டிஃப்னைச் சாப்பிட்டதும் கலக்கலாம்னு இருந்தேன்.”

“சரி. ஒரே நிமிஷத்துல வந்துடறேன். நான் வந்து சொல்ற வரைக்கும் டிஃபனைத் தட்டுகள்லே போட வேண்டாம்.”

அவன் மாடிப்படிகளில் ஏறினான். ஒருக்களித்துச் சாத்தியிருந்த கதவிடுக்கின் வழியே அந்தப் பெரிய அறையினுள் எட்டிப்பார்த்தான். எல்லாரும் பெரிதாய்ச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“உங்க மாமனார் நல்லா சமையல் பண்ணுவார் போல இருக்கே! டொமேட்டோ பாத் வாசனை இங்க அடிக்குதே!”

“அவர் பண்ணி இதுவரைக்கும் நான் சாப்பிட்டதில்லே. எல்லா அயிட்டமும் ரொம்ப நல்லாப் பண்ணுவார்னு எங்க ஹப்பி அடிக்கடி சொல்லுவார். எனக்கும் அவர் கையால பண்ணினதைச் சாப்பிடணும் போல ஆசையா இருந்தது. அதுதான் பண்ணிப் போடுங்கோன்னு சொல்லிட்டேன்.”

“ஐயோ!  ஏதாவது தப்ப நினைக்கப் போறாரே?”

“அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டார். ரொம்ப நல்ல மாதிரி. சாது.  தவிர, செஞ்சுட்டிருந்த தொழில்தானே? இப்ப இருக்கிற வாழ்வு புதுசா வந்த வாழ்வுதானே?”

அவன் ஒரு முடிவுடன் ஓசையில்லாமல் இரண்டிரண்டு படிகளாகத் தாவி இறங்கிக் கீழே வந்தான்.

தன் அலுவலக உடைகளைக் களைந்து ஓர் அழுக்கு வேட்டியையும் பனியனையும் அணிந்துகொண்டு மேலே ஒரு சிவப்புத் துண்டைப் போட்டுக்கொண்டு அடுக்களைக்குப் போனான்.

தக்காளிச் சாதத்தை ஆறு தட்டுகளில் அவன் அப்பா கரண்டியால் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். அவன் படியில் நின்றபடியே பார்த்துகொண்டு நின்றான். அவன் வந்ததைக் கவனிக்காத அவர் டிரேயில் ஆறு தட்டுகளையும் வைத்துவிட்டு அதை எடுத்துக்கொண்டு திரும்பினார். வழி மறிப்பது மாதிரி அவன் நிலைப்படியில் இரு கைகளையும் பதித்துக்கொண்டு நின்றான்.

“என்னடா இது வேஷம்?”

“அந்த ட்ரேயை இப்படிக் கொடுங்க, சொல்றேன்.”

“எதுக்குடா?”

“நான் எடுத்துண்டு பேறேன்.”

அவன் கடுமை காட்டி அவரிடமிருந்து அதைப் பிடுங்கிக்கொண்டு மாடியை நோக்கிப் புறப்பட்டான்.

மாடியறையின் கதவைத் தட்டிவிட்டு அவன் டிரேயுடன் உள்ளே போனான். எல்லாரும் அசடுதட்டிப் போனார்கள். கமலாவின் முக வெளிறிப் போயிற்று. மணியின் முகத்தில் புன்சிரிப்பு.

“ஹல்லோ! எப்படி இருக்கிறீர்கள் எல்லாரும்?” – மிகவும் இயல்பாக விசாரித்துவிட்டு டிரேயைப் பக்கத்தில் இருந்த மேசை மீது வைத்துத் தட்டுகளை ஒவ்வொன்றாக எடுக்கத் தொடங்கினான்.

கமலா கலவரத்துடன் எழுந்து, “நீங்க எதுக்கு …நான் எடுத்துக் கொடுக்கறேனே? வைங்க, சொல்றேன்…” என்று பதறிப்போய் அவனை நெருங்கினாள்.

“இருக்கட்டும் இருக்கட்டும். அப்பாவுக்கு மூச்சு வாங்கித்து. அதான் நான் வந்தேன்…” என்று சொல்லிவிட்டு அவர்களை யெல்லாம் நோக்கி மிக இயல்பாய்ப் புன்னகை செய்துவிட்டு ஒவ்வொரு படியிலும் நிதானித்து மிக மெதுவாக இறங்கினான். 

அவன் கீழே வந்ததும், “என்னடா, மணி, ரசாபாசமா என்னத்தையாவது சொல்லிட்டியா என்ன?” என்று அவன் அப்பா கவலையுடன் வினவினார்.

“விருந்தாளிகள் முன்னாடி அப்படியெல்லாம் நடந்துப்பேனாப்பா?”

“விருந்தாளிகள் முன்னாடி சமையல்காரன் கோலத்துல போய் நின்னவன் என்னதான் செய்யமாட்டே?”

“ஆசை உங்களுக்கு மட்டுந்தானா? எனக்கும் என் பழைய வாழ்க்கை ஞாபகம் வந்தது. அது மாதிரி ட்ரெஸ் பண்ணிண்டு செர்வ் பண்ணணும்னு ஆசை வந்தது. வரக்கூடாதா?”

… எல்லாரும் போனதற்குப் பிறகு கமலா வாசற்கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே வந்தாள். அவன் அப்போது அவனது அறையில் இருந்தான். தயங்கித் தயங்கி நடந்து அவள் அந்த அறைக்குப் போனாள்.

“வாங்க, ராணியம்மா! … புதுசா வந்த வாழ்வா?”

அவன் அப்பா பதறிக்கொண்டு அவனது அறைக்குள் நுழைவதற்கு முன்னாலேயே அவன் அவளை அறைந்த சத்தம் கேட்டது.

…….

Series Navigationஇனிப்பும் கசப்பும் – எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்துநம்மாழ்வார் காட்டும் பரமபத தரிசனம்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

  1. Avatar
    Nadesan Nadesan says:

    வாங்க, ராணியம்மா! பழயபாணி சிறுகதையாக இருந்தபோதிலும் மனத்தில் சர் எனக் குத்தக்கூடியது
    நான்மாணவப் பருவத்தில் இவரது கதைகளை ரசித்தேன். தற்பொழுதும் ரசிக்கமுடிகிறது என்பது ஜோதிர்லதா கிரிஜா வின் சாதனையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *