நினைவுகளால் வருடி வருடி

This entry is part 5 of 19 in the series 1 நவம்பர் 2020


நினைவுகளால் வருடி வருடி
இந்த தருணங்களை நான்
உருட்டித்தள்ளுகிறேன்.
அது எந்த வருடம்?
எந்த தேதி?
அது மட்டும் மங்கல் மூட்டம்.
அவள் இதழ்கள்
பிரியும்போது தான் தெரிந்தது
இந்த பிரபஞ்சப்பிழம்புக்கு
ஒரு வாசல் உண்டென்று.

அவள் இமைகள் படபடத்த போது தான்
தெரிந்தது
இந்த வெறும் வறட்டுக்கடிகாரத் துடிப்புகளுக்கு
வண்ணங்கள் உண்டு என்றும்
சிறகுகள் கொண்டு அவை
இந்தக்கடல்களை எல்லாம்
வாரி இறைத்து விடும் என்றும்.

அது என்ன‌
பட்டும் படாத பார்வை என் மீது?
அவள் மேகங்களை தூவி விடுவது போல்
அல்லவா இருக்கிறது!

சொர்க்கவாசல் பார்க்கப்போகிறேன்
என்று
பெருமாள் கோயில்களில் அலை மோதும்.
அம்மா கூட போவேன்
அந்த அந்த சவ்வு மிட்டாய்க்குச்சிக்கும்
கையில் சுற்றி கிர் கிர் என்று
ஒலியெழுப்பும் கிர்கிர்ப்பானுக்கும்
ஆசைப்பட்டு கூடப்போவேன்.
அப்போது என் சொர்க்கவாசல்
அந்த கிர்கிர்ப்பான் தான்.

அதன் பிறகு ஒரு நாள் தெரிந்தது
பெண்ணே!
என்னை கிறு கிறுக்கவைக்கும்
உன் சுழல் மொழி அல்லவா
அந்த “கிறு கிறுப்பான்”.

அன்று ஒரு சொல் உதிர்த்தாய்!
அப்பப்ப!
என்னைச்சுற்றி மில்லியன் கணக்காய்
தட்டாம்பூச்சிகள்
தங்க ஜரிகை சிறகுகளின் அதிர்வுகளில்.
சொர்க்க வாசல்
மாறிக்கொண்டே இருப்பதற்கு
வயதுகளின் மைல் கற்கள்
பிடுங்கி பிடுங்கி இடம் மாறி
நடப்படுவது தானே காரணம்.

இப்போது இந்த கூன்விழுந்த ஈசிச்சேரில்
ஒரு கனத்த புத்தகத்துடன் நான்.
அன்டோனி ஸீ என்பவர் எழுதிய‌
க்யூ எஃப் டி எனும் குவாண்டம் புலம்
பற்றிய புத்தகம்.
ஹிக்ஸ் மெகானிசம் பற்றி
அவர் எழுதிய‌தைப்படித்தால்
சொர்க்கவாசல் என்பது இப்போது
எனக்கு மிகவும் சுவாரசியமான‌
அந்த “ஃபெய்ன்மன் வரைபடங்கள்”தான்.
துகள்களுக்குள் கள்ளத்தனமாய்
“மாஸ்” எனும் நிறை
சவ்வூடு பரவிய‌தை அவர் அழகாய்
விளக்குகிறார்.
அது ஹிக்ஸ் மெகானிசமா? காதல் மெகானிசமா?
தெரியவில்லை.

அதுவும் கூட‌
அன்று என் உள்ளத்துள்
நீ கள்ளத்தனமாய் நுழைந்த பிறகு
உன்னைக்காணவே முடியாமல்
தேடிக்கொண்டிருக்கிறேனே
அது போல் தான்.

அது போகட்டும்
இந்த நரைதிரைக் காடுகளின்
அடர்த்தியிலிருந்து
இந்த இருள் பொதிவுகளிலிருந்து
உன்னை இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேனே.

உன் மின்னல் வரிகள்
என்றாவது என் உள்ளத்தின் உடம்பில்
சாட்டை அடிகள் எனும்
இன்ப விளாறுகளை வீசாதா?

வரும் அந்த தருணங்கள் எல்லாம்
எனக்கு இனி
உன் அநிச்சப்பூக்கள் தைத்த‌
நடைவிரிப்புகளே.

=============================================

Series Navigationசில கவிதைகள்பயணக் குறிப்புகள் – காசி , சாரநாத்
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *