மண்ணில் உப்பானவர்கள் – நூல் விமர்சனம்

This entry is part 14 of 19 in the series 1 நவம்பர் 2020

குமரி எஸ். நீலகண்டன்

உடலில் தண்ணீர் எவ்வளவு நிரம்பி இருக்கிறதோ அதே போல்தான் உப்பும் நம் உடலின் ஆரோக்கியத்தில் அதி உன்னதமான பங்கை வகித்துக் கொண்டிருக்கிறது. காற்றைப் போல் உலகம் முழுக்க நிரம்பி இருக்கிறது உப்பு.  அந்த உப்பைத் தின்றவர்கள்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வீறு கொண்டு எழுந்தார்கள். அந்த உப்புதான் இந்திய விடுதலைப் போரில் ஒரு புதிய வேகத்தையும் சக்தியையும் அளித்தது.

 காந்தியடிகளின் உப்பு சத்தியா கிரகத்தை அறியாமல் எந்த இந்தியனும் இருக்க இயலாது. அந்த உப்பு சத்தியாகிரகத்தை ஒரு முக்கிய சம்பவமாக மட்டுமே எந்த இந்தியனும் அறிந்திருப்பான். ஆனால் அந்த போராட்டப் பயணமானது பல மொழி, இன, சாதி, நிலக் களங்களையும் அது சார்ந்த மக்களின் சமூக ஏற்ற தாழ்வுகளையும் அவர்களின் மாறுபட்ட மனநிலைகளையும் கடந்து பயணப்பட்டது. பயணித்து பயணித்து போரட்ட வீரர்களை கோர்த்த பயணமது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்று தன்னை தியாகம் செய்த எத்தனையோ வீரர்கள் இன்னும் நம்முள்அறியப்படாமலேயே இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களின் மண்ணில் உப்பானவர்கள் என்ற நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. காந்தியை வாசித்து வாசித்து காந்தியையே சுவாசித்து சுவாசித்து தற்காலத்தில் ஒரு காந்தியவாதியாய் தன்னை நிலைநிறுத்தி வருபவர் சித்ரா பாலசுப்ரமணியன். பேராசிரியராக ஊடகவியலாளராக செய்தி வாசிப்பாளராக நல்ல பேச்சாளராக பன்முகங்கள் கொண்ட ஆளுமை அவர்.

சித்ராவின் மண்ணில் உப்பானவர்கள் என்ற இந்த நூல் தண்டி யாத்திரை, தேசிய வாரம், இந்தியாவும் உப்பும் என்ற மூன்று பாகங்களாக விரிகிறது . அகிம்சை போராட்டமானது எப்படி ஒரு பேரெழுச்சியாய் மாறுகிறது என்பதை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அறியப்படாத பல சுதந்திரப் போராட்ட தேசிய வீரர்களையும் தமிழக தியாகிகளையும் சிறப்புற அறிமுகம் செய்கிறது இந்நூல்.

விதிமுறைகளின்றி வீதியில் துள்ளி குதிப்பதல்ல போராட்டம்… போராட்டம் என்பதும் அதற்கென்ற அறம் சார்ந்த விதிமுறைகள் சார்ந்தது என்பதை மண்ணில் உப்பானவர்களின் போராட்டம் புரிய வைக்கும். உப்பு சத்தியாக்கிரக வரலாற்றின் ஒவ்வொரு காட்சியையும் நாள், நிமிடம், இடம், மனிதர்கள், அவர்களின் இயல்புகள், அவர்களின் உணர்வுகளென அழகுற ஒரு நாட்குறிப்பு போல அழகாக பதிவு செய்திருக்கிறார் சித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள்.

எந்த சூழலில் உப்பு சத்தியாகிரகம் உருவெடுத்தது அது எப்படி கடலில்லாத ஊரிலும் சுனாமியென்ற பேரலையை வீசியடிக்கிற வேகத்தைப் பெற்றது என்பதை சித்ராவின் வரிகளில் நாம் உணர்ந்து கொள்ள இயலும்.  

நூலில் ஆங்காங்கு போராட்ட வீரர்கள் உயிர்ப்புடன் காட்சி தருகிறார்கள்.

தண்டி யாத்திரையின் 25 நாள் பயணப் பாதைகளில் பயணித்து, அந்த நிகழ்வுகளுடன் ஒன்றி 26 ஆம் நாள் பீம்ராட் கிராமத்தில் காந்தி குனிந்து உப்பை எடுக்கும் தருணத்தில் நம்மையும் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்க வைத்த உணர்வை அளிக்கிறது இந்நூல்.

சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கையும் இந்நூல் அழகுற சித்தரிக்கிறது. வேதாரண்யம் சத்தியாகிரக நிகழ்வுகளோடு சுதந்திர போராட்ட அங்கங்களாய் இருந்த ஆளுமைகள் பற்றிய சிறு சித்திரமாய் வருகிற பக்கங்கள் சிறப்பிற்குரியவை. அகிம்சை என்ற நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அது யாரையும் சுடுவதில்லை என்பதை உணர்த்துகிறது இந்த நூல்.

நூலிற்கு ஒரு தங்க அங்கி போல் பாவண்ணனின் முன்னுரை நூலை நம்மை முன்னோக்கி நகர்த்துகிறது. நூல் வெளியால் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலின் தொடக்கத்தில் சிவராஜின் அறிமுக உரை கூட காந்தியை நேசிக்க ஒரு நல்ல வழிநடத்தல்.

தண்டி யாத்திரைக்கு முந்தைய தினம் காந்தி கூறி இருப்பார் இப்படி… ”நான் ஆரம்பித்த வேலையை முடிக்க இந்தியாவில் மனங்கள் இருப்பதாக நான் நம்புகிறேன்” என்று. அந்த நம்பிக்கையைத் தொடர நாங்கள் இருக்கிறோமென இந்த நூல்வழி அதை சாதித்திருக்கிறார் சித்ரா பாலசுப்ரமணியன்.

குக்கூ காட்டுப்பள்ளியின் தன்னறம் வெளியால் வெளி வந்திருக்கிற

192 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை 200 ரூபாய்.

நூல் கிடைக்குமிடம்

தன்னறம் நூல்வெளி,

குக்கூ காட்டுப்பள்ளி,

புளியானூர் கிராமம்,

சிங்காரப் பேட்டை -635307

கிருஷ்ணகிரி மாவட்டம்

thannarame@gmail.com

குமரி எஸ். நீலகண்டன் (punarthan@gmail.com)

Series Navigationஓவியக்கண்காட்சிஹமாம் விளம்பரமும் அப்பாவி சிறுமிகளும்
author

குமரி எஸ். நீலகண்டன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *