என் செல்வராஜ்
வாழாவெட்டியாக அம்மா வீட்டுக்கு வந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. தங்கை கல்யாணத்துக்கு தயாராகிவிட்டாள். வரும் மாப்பிள்ளை வீட்டார் வாழாவெட்டியாக இருக்கும் அவளைக் காரணம் காட்டித் தங்கையை திருமணம் முடிக்கத் தயங்குகிறார்கள்.அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்ட அந்தக் கயவனை கேள்வி கேட்க யாரும் இல்லை. அவன் இன்னமும் கல்யாணம் ஆகாமல் ஊரில் திரிகிறான். படித்திருக்கிறான், வேலையிலும் இருக்கிறான், ஆனாலும் பெண்களுக்கு வலை விரிப்பதை விடுவதில்லை. அவனுக்கு இந்த பஞ்சாயத்தார் பாடம் புகட்டினால் நல்லது. பஞ்சாயத்து அதற்காக கூட்டவில்லை என்பதும் அவளை வீட்டை விட்டு அனுப்ப வழி காண்பதே பஞ்சாயத்தார் நோக்கம் என்பதையும் அவள் அறிவாள். பஞ்சாயத்துத் தலைவர் தங்கராசு வீட்டிலே தான் அம்மா வேலை செய்கிறாள். அதனால் தான் அவர் இந்த பஞ்சாயத்துக்காக மெனக்கெட்டு வந்திருக்கிறார்.அவளின் அப்பா வெளியூரில் வேறு ஒருத்தியுடன் வாழ்கிறார்.
பஞ்சாயத்து தொடங்கியது. . ” ராஜத்தின் அப்பாவுக்கு சேதி சொன்னீங்களா” என்றார் தலைவர் தங்கராசு. கணேசன் எழுந்து “நான் தான் போய் சேதி சொன்னேன். மகளை திருப்பி அனுப்ப விருப்பமில்ல, அதால பஞ்சாயத்துக்கு வரமுடியாது அப்படீன்னு சொல்லிட்டார்” என்றான். “நாம எத சொன்னாலும் அவன் கேட்க மாட்டான். அவன் வராவிட்டலும் ஒன்னும் பெரிசா ஆகப்போறதில்ல, வந்தா தான் ஏதாவது சிக்கல் பண்ணுவான், மத்தவங்களெல்லாம் வந்தாச்சா” என்று கேட்டார் தலைவர்.” நம்ம நாட்டாமையை இன்னும் காணோமே. போய் அழச்சிட்டு வாங்க என்று தலைவர் கூறவும் “இதோ வந்துட்டேன் ” என்றவாறு நாட்டாமை ஆஜரானார். “பொண்ணுக்கு ஆதராவா பேச ஒருத்தரும் இல்லாம எப்படி பஞ்சாயத்து பண்ணமுடியும்?” என்ற கணேசனுக்கு “வேலுச்சாமியை கூப்பிடுங்க , அவன் எல்லாத்தையும் கேட்டுடுவான் ” என்றார் தலைவர். வேலுச்சாமி வந்து சேர்ந்தான். ராஜம் ஒர் ஓரமாக நின்றிருந்தாள், அவள் அருகில் அவள் அம்மா. அம்மாவும் இந்த பஞ்சாயத்துக்கு உடன்பட்டவளாகவே தோன்றினாள்.அப்பா வந்தால் நன்றாக இருக்கும் தன்னை அனுப்புவதை எப்படியாவது தடுப்பார் என்று நினைத்தாள் ராஜம்.
பஞ்சாயத்து ஆரம்பமானது. பஞ்சாயத்து தலைவர் தங்கராசு ” ராஜம் 5 வருஷமா வாழாவெட்டியா வந்து இங்க இருக்கா, அதால அவ தங்கச்சிக்கு வர சம்மந்தமெல்லாம் தள்ளிப்போவுது. இந்த பஞ்சாயத்து ராஜத்தை இங்க வச்சிருக்கலாமா அல்லது அவளை அவ புருஷன் வூட்டுக்கு அனுப்பிடலாமான்னு முடிவு செய்யத்தான் அவ அம்மா கூட்டியிருக்காங்க.இதப்பத்தி பேசறவங்க பேசலாம் ” என்றவுடன் வேலுச்சாமி ” சோறுபோட வக்கில்லன்னு சொல்லுங்க, அந்த பொண்ணு ஏதோ தப்பு செஞ்சி தானே அவளை வீட்டை விட்டு துரத்திட்டாங்க. அவளை திரும்பி போவச்சொன்னா அங்க எப்படி போறது?” என்றான். ” அதற்குத்தானே இந்த பஞ்சாயத்து. இவள் தப்பு பண்ணியிருந்தாலும் இந்த பஞ்சாயத்துல என்ன முடிவு எடுக்குறமோ அதை நிறைவேத்த முடியும்கிறேன், ஏன்னா அவள் மாமனார் தங்கமான மனுஷர். யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாதுன்னு நெனைக்கிறவர். நாம பஞ்சாயத்துபேசி கொண்டுபோய்விட்டா அவர் ஏத்துக்குவார். தப்பை மன்னிக்கிறவன் தான்யா மனுஷன். அவ மாமனார் கடவுள் மாதிரி ” என்றார் தலைவர்.
”
மாமனார் நல்ல மனுஷன், மாமியாரும் நல்லவங்க, ஆனா வாழப்போறவன் இவளை ஏத்துக்கணுமில்ல” என்றார் நாட்டாமை சத்தியமூர்த்தி. “சத்தியமூர்த்தி நாம போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலமா அவனை மிரட்டி இதுக்கு சம்மதிக்கவச்சுடலாங்கிறான் வெங்கடாலம். என்ன சொல்ற நீ ” “அதெல்லாம் சரிதான், போலீஸ் மிரட்டினா பயப்படத்தானே வேணும், ஆனா அந்தப் பயம் இவளுக்கு வாழ்க்கையை கொடுக்குமா? கொஞ்சம் யோசனை பண்ணுங்க, மாப்பிளைகிட்ட பஞ்சாயத்தார் பேசி சம்மதிச்சா நல்லா இருக்கும் ” என்றார் சத்தியமூர்த்தி. ” அது கஷ்டம்யா, கட்டிக்கிட்டவ ஆறு மாசத்தில சோரம்போயிட்டா எவன் அவளோட வாழ ஒத்துக்குவான் ” என்றார் வேலுச்சாமி. ” எத்தனையோ பொம்பளங்க சோரம்போயிடராங்க, அவங்களை எல்லாம் பிற்ந்த வூட்டுக்கா தொரத்திடுறம். மன்னிச்சு ஏத்துக்கல. அவளைத் திருத்தலாம்ல ” என்றார் குப்புசாமி. இந்த வாக்கு வாதங்கள் நெடுநேரம் தொடர்ந்தன முடிவில் தலைவரின் முடிவான போலீஸ் உதவியுடன் ராஜத்தை அவள் கணவன் வீட்டில் கொண்டுபோய் விட முடிவானது.
திட்டை இன்ஸ்பெக்டரிடம் சென்ற ராஜம் ஊர் தலைவர் தங்கராசு அவரிடம் பேசி ராஜத்தின் கணவன் குடும்பத்தார் அனைவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தார். ராஜத்தின் மாமனார் ராமச்சந்திரன் இன்ஸ்பெக்டரிடம் “ஐயா, இது எங்க குடும்ப விவகாரம், இதுக்கு எதுக்கு எங்களை போலீஸ் ஸ்டேஷன் வரவழைக்கனும் ” என்றார். அதற்கு இன்ஸ்பெக்டர் ” பொண்ணோட ஊரில இருந்து பஞ்சாயத்துகாரங்க வந்திருக்காங்க. நீங்க ரெண்டுபேரும் பேசி ஒரு நல்ல முடிவை சொல்லுங்க.” “என் மருமவ நடத்தை கெட்டுப்போனதால தான் அவளை அவங்க வீட்டுக்கு அனுப்புனோம். அன்னியிலேருந்து என் பையன் நடைப்பிணமா வாழ்ந்துட்டு இருக்கான். புத்தி பேதலித்து போச்சு. ஆசைப்பட்டு கட்டிக்கிட்டான். அவள் இப்படி நடந்துக்குவான்னு நாங்க எதிர்பார்க்கல” என்றார் ராமச்சந்திரன். ” அவளை நீங்க தான் மன்னிச்சு வாழ்க்கை கொடுக்கணும்னு அவங்க உங்ககிட்ட கேக்குறாங்க. உங்களை நாங்க குறை சொல்லமாட்டோம். ஆனால் தப்புக்கு காரணமானவன் உங்க குடும்பத்தை சேர்ந்தவந்தானே” என்றார் இன்ஸ்பெக்டர். ” பையன் ஒத்துக்கணுமே ” என்றார் ராமச்சந்திரன். “உங்க மகனுக்கு பிடிக்கலேன்னா விவாகரத்து வழக்கு போட்டிருக்கலாமே. இப்போ அவளை ஒங்க வீட்டுல வச்சிக்கிறது தான் நியாயம்” என்றார் இன்ஸ்பெக்டர்.
வேறு வழி இல்லாமல் ஒத்துக்கொண்டார் ராமச்சந்திரன். அப்பாவின் முடிவில் சம்மதம் இல்லாவிட்டாலும் அமைதியாக இருந்தான் மகன் கண்ணன். கண்ணனின் மாமன் கந்தனும் அங்கே வந்திருந்தார். அவர் இன்ஸ்பெக்டரிடம் ” ஐயா, உங்களுடைய கட்டாயத்தில் அந்தப் பெண்ணை எங்க மாமா ஏத்துகிட்டாலும், மச்சான் இதுவரை ஏத்துக்கல, அவ இங்க வந்தாலும் ஒரு வாழாவெட்டி வாழ்க்கையத்தான் வாழப்போறா, ஏதாவது மனசு சரியில்லாம போயி அவ தற்கொலை பண்ணிகிட்டா நாங்க என்ன செய்யிறது ? சொல்லுங்க ” என்றார். “சரியான கேள்விதான் ” என்ற இன்ஸ்பெக்டர் பெண்வீட்டுக்காரங்களைப் பார்த்து “பதில் சொல்லுங்க, உங்க பொண்ணு தற்கொலை பண்ணிகிட்டா என்ன செய்யறதுன்னு அவங்க சந்தேகப்படுறாங்க, நீங்க தான் அதற்கு உத்தரவாதம் தரணும்” என்றார்.அதற்கு தலைவர் ” எங்க பொண்ணு அதெல்லாம் செய்யமாட்டா, அப்படி ஏதாவது செஞ்சான்னா நாங்க கேஸுக்கு வரமாட்டோம், அவ நல்லா வாழ்வா ” என்றார்.
இந்தப் பதிலில் கண்ணனின் மாமனுக்கு திருப்தி இல்லை. ” இன்ஸ்பெக்டர் ஐயா, நாங்க கொடுமை படுத்துறவங்க இல்ல. ஆனாலும் அவ தற்கொலை ஏதாச்சும் பண்ணிகிட்டா எங்களைத்தானே உள்ள வைப்பீங்க, விரும்பாத வாழ்க்கையை எப்படி நடத்துவான் என் மவன், அவனுக்கு கோபமா பேசக்கூடத்தெரியாது” என்றார் ராமச்சந்திரன்.” நம்பித்தானே குடும்பம் நடத்தணும், அப்படி ஏதேனும் தப்பா நடந்தா அந்த பொண்ணோட அம்மாவுக்குச் சொல்லுங்க. வந்து அழைச்சிட்டு போகட்டும், நாளைக்கு பொண்ண கொண்டாந்து மாப்பிள்ளை வீட்டில விட்டுடுங்க” என்றார் இன்ஸ்பெக்டர். எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான் கண்ணன். ராமச்சந்திரன் மகனுடனும் மற்றவர்களுடனும் வீடு திரும்பினார் போலீசுக்கு இதில் என்ன வேலை என்ற வருத்தத்தில்.
கண்ணன் அதிர்ந்து பேசாதவன். வாழ்க்கையை ஆறு மாதத்துக்குள் இழந்ததால் அதிர்ந்து போனவன். காதில் ஏதோ குரல் கேட்பதாகவும் , யாரோ வந்து பேசுவதாகவும் , அதனால் தூக்கம் வராமல் தவித்தவன். காதில் ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ என்று டாக்டரிடம் காட்டி கடைசியில் மனநோய்க்கு தூக்கமாத்திரை சாப்பிட ஆரம்பித்துவிட்டான். மாத்திரை போடவில்லையென்றால் தூக்கம் வராமல் தடுமாற ஆரம்பித்துவிட்டான் .மனைவி கெட்டுப்போனவள் என்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.எப்போது பார்த்தாலும் வாழ்க்கையைத் தொலைத்த அவனின் கண்கள் துயரத்தைக்காட்டும். துக்கத்தை ஆற்ற சிகரெட்டை விடாமல் குடித்து செயின் ஸ்மோக்கர் ஆனான்.பெரியப்பா மகன் பழனிவேல் அண்ணன் தான் இதற்கு காரணம் என்று தெரிந்தபோது பழி வாங்கத் துடித்தான். ஆனாலும் அமைதியானவன் என்பதால் அவனால் பெரியப்பா குடும்பத்துடன் பேசுவதைத்தான் நிறுத்தமுடிந்தது. மனைவியின்றி வாழ்வதைத் தன் தலையெழுத்து என மாற்றிக்கொண்டான். குடிகாரனாக மட்டும் மாற விரும்பவில்லை.அதனால் குடியிலிருந்து தப்பி விட்டான்.
கண்ணன் ராஜத்தை விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டான். ஏதோ ஒரு சொந்தக்காரங்க கல்யாணத்தில் அவளைப்பார்த்தான், அவளைப்பிடித்து விட்டது. அவளை கட்டிவைக்க அப்பாவிடம் கட்டாயப்படுத்தினான்.அவனால் வாழ்க்கையில் வசந்தத்தை ஆறு மாதம் தான் அனுபவிக்க முடிந்தது. அவனுடைய அண்ணனுடன் கள்ளத்தொடர்பு உண்டானவுடன் வசந்தம் கண்ணன் வாழ்க்கையில் புயலாக மாறத்தொடங்கியது. அவ்ள் மீதான சந்தேகம் வலுத்தது.கடைசியில் அவர்கள் கள்ள சந்திப்பில் அவளைப்பிடித்த போது அவள் தப்பாக எதுவும் நடக்கவில்லை என சாதித்தாள். பலமுறை கடுமையாக கேட்டபின் தான் ஒத்துக்கொண்டாள். ஆனால் பலர் முன்னிலையில் கேட்ட போது அவள் சொல்ல மறுத்தாள். அது அவனுக்கு அவமானமாகப் போயிற்று.அவளை அவள் ஊருக்குப் போகச் சொல்லிவிட்டான். அன்று போனவள் தான் இதுவரை திரும்ப வரவில்லை. ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. வேறு ஒரு திருமணம் செய்துகொள்ள அவன் அப்பா சொன்ன போதும் மறுத்துவிட்டான். இப்போது என்ன வந்தது அவளுக்கு ? அவள் ஏன் நிம்மதியாக மாற்றிக்கொண்ட என் வாழ்வைப் பறிக்க வரவேண்டும், இது தான் வாழ்க்கை என்று கூட்டுக்குள் வாழக் கற்றுக் கொண்டாகிவிட்டது, இனி எப்படி அவளை ஏற்றுக்கொள்ள முடியும்? என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அவனுக்கு. ஆனால் விடை தான் தெரியவில்லை. உண்மையிலேயே கவலையில் மூழ்கிப்போனான்.
மறுநாள் காலை 11 மணியளவில் ராஜம் அவள் ஊர் பஞ்சாயத்தார் உடன்வர கண்ணன் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். பூவாக வந்திருக்க
வேண்டிய அவள் ஒரு பூனைபோல் வீட்டுக்குள் நுழைந்தாள். அவளது மாமியாரும் மாமனாரும் அவளையும் அவள் ஊர்க்காரர்களையும் அரை மனதுடனே வரவேற்றனர். கண்ணன் வழக்கம்போல அமைதியாகவே அமர்ந்திருந்தான். யாருடனும் பேசவில்லை. அவனுடைய மாமன் கந்தன் அவனருகே அமர்ந்திருந்தார். இருவருக்கும் ராஜம் வந்ததில் விருப்பம் இல்லை. இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை.” மாமா நான் இனிமே என்ன செய்யட்டும் ” என்று கேட்டான் கண்ணன். ” எப்படி நடந்துக்குறான்னு பாத்துட்டு நீ ஒரு முடிவுக்கு வரலாம், இப்ப அமைதியா இரு ” என்றார். “மாமா, என்னால அவளை ஏத்துக்க முடியாது”
என்றவனிடம், ” கண்ணா அஞ்சு வருடம் வனவாசம்போல முடித்து வந்திருக்கிறா, இனிமே தப்பு எதுவும் செய்ய மாட்டா, அதால பொறுமையா இரு, அடக்கமா இருந்தா அவளை ஏத்துக்கலாம், இல்லேன்னா விட்டு விடலாம்”என்றார் கந்தன். அவர் மாலையில் கிளம்பி வடலூர் போய்விட்டார்.
தினமும் கந்தன் மாமா கண்ணனுடன் பேசி அவனுக்கு அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருந்தார். ராஜம் மாமியாருடனும் மாமனாருடனும் சகஜமாகப் பழகினாள். ஆனால் அவளுடைய கணவன் கண்ணன் அவளை நேருக்கு நேர் சந்திக்கவே தயங்கினான்.சாப்பிட வருவதும் சாப்பிட்டவுடன் வெளியே போய்விடுவதுமாக இருந்தான்.ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை. அவனுடைய மாமா பலமுறை அறிவுரைகள் சொன்னார். என்னதான் அறிவுரைகள் சொன்னாலும் அவன் மனது அவளை ஏற்கத்தயாராக இல்லை.வீட்டில் இருப்பது பிடிக்காமல் ஒரு நாள் திடீரென அவன் தன்னுடைய ஆயா வீட்டுக்கு கிளம்பினான். அம்மாவும் ராஜத்துடன் பேசச் சொன்னார், ஆனால் அதை அவன் காதில்கூட வாங்கவில்லை.அவன் வீட்டைவிட்டுப்போன நாள்முதல் ராஜம் சரியாக சாப்பிடாமல் கிடந்தாள்.எப்போது வருவார், தன்னுடன் எப்போது பேசுவார் என்று காத்துக்கிடந்தாள். சேத்தியாதோப்புக்கருகில் உள்ள தன் ஆயா வீட்டில் கண்ணன் நிம்மதியாக இருந்தான்.இப்படியே ஒரு வாரம் கடந்தது. வருத்தத்தில் ராஜம் வீட்டிலேயே இருந்தாள். எப்போது பார்த்தாலும் ” நான் சாகப்போறேன் அத்தை ” என்று மாமியாரிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளுக்கு மாமியார் ஆறுதல் சொல்லி தேற்றிக் கொண்டிருந்தார்.
கந்தனுக்கு மச்சினன் கண்ணன் ஏதாவது செய்துகொண்டால் என்ன செய்வது என்ற பயத்திலேயே இருந்தார். அதனாலேயே அவன் அவருடைய அம்மா வீட்டுக்குப் போனதில் கொஞ்சம் நிம்மதி வந்தது. ஆனால் அது நிலைக்கவில்லை. ஒரு வாரம் கடந்த நிலையில் அவருடைய அக்காவின் போன் ஒரு நாள் வந்தது. ” தம்பீ , பாவி மவ தீக்குளிச்சிட்டாடா, எல்லாரையும் போலீஸ் புடிச்சுக்கிட்டு போயிட்டாங்க, மாமாவும் மீதி புள்ளைங்களும் ஸ்டேஷனில தான் இருக்காங்க, உடனே கிளம்பி வா தம்பி ” என்றார்.உடனடியாக பைக்கில் கிளம்பி கிராமத்துக்கு சென்று கண்ணனை அழைத்துக்கொண்டு திட்டை சென்றடைந்தார் கந்தன்.அங்கே அவர்கள் சென்றபோது கருகிப்போன நிலையில் படுக்கையில் கிடந்தாள் ராஜம். அவளிடமிருந்து வாக்குமூலம் வாங்கிக்கொண்டிருந்தார் மாஜிஸ்ட்ரேட். வாக்குமூலத்தில் தன் கணவன் தன்னிடம் பேசாமல் இருந்ததாலும் அவரது பாசத்தைப்பெறவுமே தீக்குளித்ததாக ராஜம் சொன்னாள். யாரும் தன்னைக் கொல்ல முயற்சிக்கவில்லை என்றாள். தானாகவே மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றிக்கொண்டு நெருப்பு வைத்துக் கொண்டதாக வாக்குமூலம் கொடுத்தாள்.
மருத்துவர் அனுமதி கொடுத்ததும் கந்தனும் கண்ணனும் ராஜத்தைப் பார்க்கச் சென்றனர். ராஜத்தை அந்த கோலத்தில் பார்த்த கண்ணன் மிகவும் கவலைப்பட்டான். “ராஜம் …. ராஜம் ” என்று அவளை அழைத்தான். ராஜம் கண்களைத்திறந்து தன் கணவனைப் பார்த்தாள்.”ஏன் இப்படி பண்ணினே, நீ இப்படி செய்வேன்னு நான் நெனைக்கவே இல்லை ” என்றான் கண்ணன்.” மாமா, நீங்கள் கடைசிவரை எங்கிட்ட பேசமட்டீங்களோன்னு நெனைச்சுதான் அப்படி பண்ணிட்டேன்” பதில் தெளிவாக அவளிடமிருந்து வந்தது . ” சரி நான் டாக்டரைப் பார்த்துட்டு வரேன் ” என்று சொல்லிவிட்டு டாக்டரைப் பார்க்க மாமாவுடன் சென்றான் கண்ணன். டாக்டர் ” அவளுக்கு தீக்காயம் அதிகமில்லை, உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை, ஆனா மேல் சிகிச்சைக்கு ஜிப்மர் கொண்டு செல்வது நல்லது ” எனச்சொன்னார். அதற்குள் அலறியடித்துக்கொண்டு அவள் அம்மாவும் தலைவரும் மற்ற அவள் ஊர் சொந்தங்களும் வந்துவிட்டனர்.
தலைவர் தங்கராசு ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் உடனடியாக புகார் ஒன்று தயார் செய்து இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து எல்லோரையும் கைது செய்யவேண்டும் என்று மிரட்டினார். சற்றுநேரத்தில் மாவட்டம் பேசியது. அடுத்து மந்திரி லைனில் வந்து பேசினார்.தொடர்ந்த மிரட்டல்களுக்கு அடிபணிந்த அந்த இன்ஸ்பெக்டர் கண்ணனையும், அவர்கள் வீட்டாரையும் காவல் நிலையத்திலேயே இருக்கச் சொல்லிவிட்டார். கந்தன் இன்ஸ்பெக்டரிடம் சென்று விசாரித்தார்.முன்னர் அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டினார். இன்ஸ்பெக்டர் ” அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் எல்லோரையும் அனுப்பிவிடலாம், ஏதாவது ஆகிவிட்டால் வழக்கு போடுவதைத்தவிர வேறு வழியில்லை “என்றார்.
போலீஸ் ஸ்டேஷனிலேயே இரண்டு நாள் கழிந்துவிட்டது. ஜிப்மரில் சேர்க்கப்பட்ட ராஜம் உடல்நிலை முன்னேற்றம் கண்டது. அவள் பிழைத்துக்கொண்டாள். அவளுடன் அவள் அம்மா இருந்தாள். இன்ஸ்பெக்டர் கண்ணன் வீட்டார் அனைவரையும் வீட்டுக்குப்போகச் சொல்லிவிட்டார். தலைவர் தங்கராசு கேட்ட போது அவள் தானாகவே தீ வைத்துக்கொண்டதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறாள், அதனால் ராஜத்தின் மாமனார் வீட்டாரை சிறைக்கு அனுப்ப வழியில்லை என்றார்.” அவள் செத்து தொலைந்திருக்கக்கூடாதா? என்று தலைவர் அலுத்துக்கொண்டார்.
ஒரு மாதம் ஜிப்மரில் கடந்துபோனது. ராஜம் பெருமளவு குணமானாள். ராஜத்தின் அம்மா “நம்ம வீட்டுக்கே போய்விடலாம் “என அழைத்தாள். துரத்தாத குறையாக பஞ்சாயத்து பண்ணி வீட்டை விட்டு அம்மா அனுப்பியதை அவள் மறக்கவில்லை. எனவே அவள் மறுத்துவிட்டாள்.” எங்கேடி போவே “என்ற அம்மாவுக்கு” என் புருஷன் வீட்டுக்கே போறேன் “என்றாள் ராஜம். “அங்கே உனக்கு யாருடி இருக்கா ” “அன்பான மாமியார் இருக்காங்க, நல்ல மாமனார் இருக்கார், ராமனைப்போன்ற என் கணவர் இருக்கார் என்றவள் கணவனின் வீட்டுத் தொலைபேசியில் அழைத்துப் பேசினாள். அவள் மாமியார் மகிழ்ச்சியாகப் பேசினார். “என்னடி சொன்னாங்க உன் மாமியார் “என்ற அம்மாவிடம் ” வீட்டுக்கு வரச்சொன்னாங்க” என்றாள் ராஜம்.
தீக்காயம் பட்டதால் முகம் பல இடங்களில் கறுத்தும் சில இடங்களில் வெளுத்தும் , தோல் சுருங்கியும் காணப்பட்ட அவளை மனம் கோணாமல் வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார் அவள் மாமியார். “ராஜம், ஏண்டி இப்படி பண்ணினே என்ற மாமியாரிடம் ” அத்தே, சீதையை ராமர் தீக்குளித்து பத்தினின்னு நிரூபிக்கச்சொன்னார். அதற்காக தீக்குளித்து ராமனிடம் சேர்ந்தாள் சீதை. நான் தப்பு பண்ணினவ தானே, அதால ராமன் போன்ற என் புருஷன் என்னை தீக்குளிக்கசொல்லல. நான் அவரை பிரிஞ்சு வாழ்ந்த இந்த அஞ்சு வருஷ வனவாசத்தில் பத்தினியாதான் இருந்தேன்னு அவருக்கு காட்டினா அவர் மனசு மாறும்னு தான் நான் தீக்குளிச்சேன், “என்னை மாமா ஏத்துக்குவாரா ” எனக் கேட்டாள் ராஜம். புதிய வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கண்ணன் வருகைக்காக காத்திருந்தாள் ராஜம்.
மாலையில் கண்ணன் வீட்டுக்கு வந்தான். அதற்குள் கண்ணனின் அப்பாவும் வீட்டுக்கு வந்துவிட்டார். வீட்டுக்குள் நுழைந்த கண்ணன் படுக்கையில் ராஜம் படுத்திருப்பதையும் அவளருகிலேயே அவன் அம்மா நிற்பதையும் கண்டான். ராஜம் அருகில் சென்ற கண்ணன் ” எப்படியிருக்க” என்று கேட்டான். “பொழச்சுக்கிட்டேன், உங்களோட வாழனும்னு ஆசப்பட்டேன், தப்பு பண்ணின என்ன மன்னிச்சு ஏத்துக்குவீங்களா மாமா” என்றாள் ராஜம். அவள் கண்களில் கண்ணீர். அமைதியாக அமர்ந்திருந்த கண்ணன் ” தப்புன்னு நீயே எப்ப ஒத்துகிட்டியோ அப்பவே ஒன்ன நான் மன்னிச்சுட்டேன். போலீசைக்கொண்டு மிரட்டி வீட்டுக்கு வந்ததால என்னால ஒன்ன உடனே ஏத்துக்க முடியல, ஆனா அதுக்காக தீ குளிச்சு ஒன்ன நீயே ரணமாக்கிட்டியே. எந்த அழகால உன்னை பறிகொடுத்தியோ அந்த அழகையே அழிச்சுக்கிட்டியே, இப்பவும் ஒன்ன நான் ஏத்துக்கலன்னா நான் மனுஷனே இல்ல, நிம்மதியா இரு, நடப்பது எல்லாமும் நல்லதுக்கே” என்ற கண்ணன் அவளின் கைகளைப் பிடித்து ஆறுதல் சொன்னான்.
Email: – enselvaraju@gmail.com
- ஒரு தலைவன் என்பவன்
- திருவழுந்தூர் ஆமருவியப்பன்
- காலம்
- தி.ஜானகிராமன் சிறுகதை“பசி ஆறிற்று”
- சில கவிதைகள்
- நினைவுகளால் வருடி வருடி
- பயணக் குறிப்புகள் – காசி , சாரநாத்
- பாவேந்தரின் கவிதைகளில் உயிரி நேயம்
- திருமாலை இயற்கையாய் கண்ட கோதையார்
- முகநூலில்…
- ஓடுகிறீர்கள்
- ஒரு மாற்றத்தின் அறிகுறி
- ஒரு கதை ஒரு கருத்து – ஆறுதல் என்கிற தி.ஜானகிராமன் கதை
- ஓவியக்கண்காட்சி
- மண்ணில் உப்பானவர்கள் – நூல் விமர்சனம்
- ஹமாம் விளம்பரமும் அப்பாவி சிறுமிகளும்
- வாக்குமூலம்
- கொரோனா காலம்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்