தண்ணார் மதியக் கவிகைச்செழியன்
தனிமந்திரிகாள்! முனிபுங்கவர் ஓர்
எண்ணாயிர வர்க்கும் விடாத வெதுப்பு
இவனால்விடும் என்பது இழிதகவே. [191]
[தண்ணார்மதியம்=குளிர்ச்சியான முழுநிலவு; கவிகை=குடை; விடாத=விலகாத; வெதுப்பு=சூடு; விடும்=நீங்கிவிடும்; இழிதகவு=அறியாமை]
”முழுநிலவின் குளிர்ச்சி போல வெண்கொற்றக் குடை கொண்ட, பாண்டிய மன்னனின் பெருமை உடைய அமைச்சர்களே! சமண முனிவர்கள் எட்டாயிரம் பேர்க்கும் விலகாத இந்த வெப்பநோய் இந்தச் சிறுவனாகிய சம்பந்தனால் நீங்கிவிடும் என்பது அறியாமையே ஆகும்.”
=====================================================================================
என்றார்;அவர் என்றலுமே “கெடுவீர்!
எரியால் அரவால் இடியால் முடியச்
சென்றார்பவம் ஏழினும் இப்படியே
செல்வார்இவர் முன்பு செயித்தவரே” [192]
[அரவம்=பாம்பு; பவம்=பிறப்பு; செயித்தவர்=கோபிக்கின்றவர்]
என்று சமணர்கள் கூறவும் அச்சொற்களைக் கேட்ட குலச்சிறையார், ”இப்படி நீங்கள் அவரை நிந்தனை செய்து பேசினால் நீங்கள் பாம்பால், இடியால், அழிக்கப்படுவீர்கள். இப்படிக் கோபிக்கின்றவர்கள் தொடரும் ஏழ்பிறப்புகளிலும் துன்பப்படுவீர்கள்” என்றார்.
=====================================================================================
நாணீர் அறியீர் உறிவல் அமணீர்
மதுரேசனை எம்குல நாயகனைக்
காணீர் இவர்தம் திரு நீறிடவே
முகில் ஊர்தி பெறாத கவின்பெறவே. [193]
[நாணீர்=வெட்கப்படமாட்டீர்; மதுரேசன்=மதுரையின்அரசன்; ஊர்தி=வாகனம்; கவின்=அழகு]
வெட்கப்படாத அறியாமையில் இருக்கும் சமணர்களே! உறிக்கயிறு திரிக்கத்தான் உங்களுக்குத் தெரியும்; எம் குலநாயகனாம் மதுரையின் அரசனைக் காக்க, இவர் வந்து திருநீறு இட்டவுடனே மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனைவிட அழகுடன் நலம்பெற்று அவர் எழுவதை நீங்கள் பார்க்கலாம்.
=====================================================================================
ஏ!எய் இமவான் மகளார் மகனே!
எந்தாய்! சிந்தாகுல வேர்அரியும்
சேயே! வரசைவ சிகாமணியே
திருநீறினி இட்டருள் செய்க எனவே. [194]
[இமவான்=பர்வதராசன்; சிந்தாகுலம்=மனக்கவலை]
எனக்கூறிய குலச்சிறையார் திருஞானசம்பந்தரைப் பார்த்து, “ஐயா, மலையரசன் பெற்ற மகனே! எமக்கெல்லாம் தாய் போன்றவரே! எம் மனத்துயராகிய வேரை அறுக்க வந்த ஞானக்குழந்தையே! சைவசமயம் தழைக்க வந்த மாமணியே! எம் அரசருக்குத் திருநீறு இட்டு அருள்செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
=====================================================================================
எப்புத்தரொடு எவ்அமணும் களைவார்
திருநீறு இவன்நெற்றியில் இட்டலுமே
வெப்புத் தடைபட்டது; பட்டளவே
வேவாத உடம்புடை மீனவனே. [195]
[அமணர்=சமணர்; வெப்பு=வெப்பம்; வேவாத=வெப்பம் இலாத; மீனவன்=பாண்டியன்]
புத்தர்கள் மற்றும் சமணர்கள் ஆகிய களைகளை அறுத்தெறியக் கூடிய ஞானசம்பந்தர் திருநீற்றை இட்டவுடன் வெப்பம் விலகியது. மீன்கொடியை உடைய பாண்டியன் உடம்பு வெப்பம் இலாததாக மாறிக் குளிர்ச்சி உடையதாயிற்று.
=====================================================================================
உய்யா உணரா விழியா அருகே
சரியா ஒருகேசரி ஆசனமேல்
வையா அதிகாரிகளும் பெருமாள்
மகளாரும் வணங்க வணங்கினனே. [196]
[கேசரி=ஆண்சிங்கம்; பெருமாள் மகளார்=மங்கையர்க்கரசியார்]
உடனே பாண்டிய மன்னன் உயிர் பிழைத்ததுபோல் எழுந்தான். உணர்வு பெற்று விழித்துப் பார்த்தான். ஆண்சிங்கம் போன்ற திருஞானசம்பந்தரைச் சரியாசனத்தில் அமரச் செய்து, அமைச்சர்கள், அரசி மங்கையர்க்கரசி ஆகியோருடன் வீழ்ந்து வணங்கினான்.
=====================================================================================
சுடுகின்ற மருங்கு இருபாலும் இருந்து
அனைவேமும் விடாது தொடத்தொடவே
விடுகின்ற வெதுப்பை வெறும் பொடியால்
விடுவித்தனனாம்! இவன் வேதியனே! [197]
[சுடுகின்ற=வருத்துகின்ற; மருங்கு=பக்கம்; தொடத்தொட=பல மந்திரம் இட்டு; விடுகின்ற=விலகுகின்ற; பொடி=திருநீறு; வேதியன்=வேதம் ஓதுபவன்]
இரு பக்கங்களிலும் இருந்து பல யந்திரங்களிட்டுச் சுடுகின்ற இந்த நெருப்பு நோய் நீங்க நாம் தொட்டும் தடவியும் செய்த சிகிச்சைகளால் விலகும் நிலையிலிருந்த நோயை இச் சிறுபிராமணன் வந்து வெறும் திருநீற்றுப் பொடியால் விடுவித்தான்; இவன் வேதம் ஓதியவனே!
=================================================================================
யாம்யாதும் இதற்கு முயன்றிலமோ
எம்மந்திரமும், யந்திரமும் இல்லைகொலோ?
கோமான் இவனைப் பணிகின்றதென்? நீறு
அணிகின்றதென்? என்று கொதித்தனரே. [198]
[கோமான்=அரசன்; அணிகின்றது=பூசிக் கொள்கிறது. என்கொலோ=என்ன அதிசயமோ?]
“அரசே! நாங்கள் இந்த நோயைத் தீர்க்க முயற்சி செய்யவில்லையா? எம்மிடமும் யந்திரங்களும் மந்திரங்களும் இல்லையா? இந்தச் சிறுவன் தந்த பொடியால்தான் நோய் தீர்ந்துவிட்டதென எண்ணிக்கொண்டு அவன் காலடியில் விழுந்து வணங்குகிறாயே! திருநீறையும் பூசிக் கொள்கிறாயே? என்று சமணர்கள் சினம் கொண்டனர்.
=====================================================================================
கெடுவீர்! கெடுவீர் இவைசொல்லுவதே?
கெட்டேன்! அடிகள் இவர் கேவலரோ?
விடுவீர்! விடுவீர்! இனி என் எதிர்நீர்
வெங்கோபமும் உங்கள் விவாதமுமே. [199]
[கேவலரோ=இகழ்ச்சிக்குரியவரோ?; வெங்கோபம்=கொடிய கோபம்; விவாதம்=வாதிடுதல்]
”இப்படி எல்லாம் நீங்கள் பேசினால் அழிவீர்! உங்கள் பேச்சைக் கேட்டுத்தான் நான் இதுவரை கெட்டேன். இந்தச் சம்பந்தர் இகழ்ச்சிக்குரியவரா? இனிமேல் என் எதிரே கொடிய கோபமும் வீண் வாதமும் கொண்டு இருப்பதைவிட்டு ஒழியுங்கள்” என்று பாண்டிய மன்னன் கூறினான்.
=====================================================================================
நீர்வந்துதொடத்தொடநின்றுருகி
நெடுவேனில்சுடச்சுடநின்றலறிக்
கார்வந்துதொடத்தொடஉய்ந்திளகும்
காடுஒத்தனன்யான்இவர்கைப்படவே. [200]
[வேனில்=கோடைகாலம்; கார்=மழைக்காலம்]
“நீங்கள் வந்து என்னைக் குணப்படுத்துவதாகச் சொல்லி என் உடம்பைத் தொடத்தொடக் கோடைகால வெப்பம் சுட்டுப் பொசுக்குவதுபோல் என் உடம்பு வருந்தியது. இவர் வந்து தொட்டவுடன் மழைக்கால மழையில் துளிர்த்த காடு போல என் உள்ளமும் உடம்பும் குளிர்ந்தன”
=====================================================================================
- மிஸ்டர் மாதவன்
- வரிக்குதிரையான புத்தகம்
- கவிதையும் ரசனையும் – 4
- குருகுலத்தில் பூத்த இலக்கிய மலர் ஒன்று – பத்மா சோமகாந்தன்
- நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்
- தக்கயாகப்பரணி [தொடர்ச்சி] 191–200
- கலந்த கேண்மையும் கடவுள் நம்பிக்கையும்
- திருவாலி, வயலாளி மணவாளன்
- அவசியம்
- ஒதுக்கீடு
- மதுராந்தகன் கவிதைகள்
- நல்ல தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை
- சாம் என்ற சாமிநாதன் – ஐம்பதாண்டு கால நட்புறவு