நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்

This entry is part 5 of 13 in the series 8 நவம்பர் 2020

எனக்கு ஏழு வயதாகும் போதே அப்பா என்னை மலேயாவுக்கு கூட்டி வந்துவிட்டார். கோலாலம்பூரில் பெடாலிங் ஜெயாவுக்குப் பக்கத்தில் ஒரு கம்போங்கில் அப்பாவின் உணவுக்கடை. பெரிய இடம். பெரிய கழிவறை. கழிவறைக்கும் கடைக்கும் இடையே நீள அகலமான சிமெண்டுப் பெஞ்சுகள். அந்தப் பெஞ்சில்தான் அப்பா மதியம் இரண்டு மணி நேரம் தூங்குவார். அவைகள் நாலைந்து கடைகளின் உபயோகத்துக்காக இருந்த போதும் எங்களின் சொந்த உபயோகத்துக்கே அவைகள் பயன்பட்டன. சொற்பமான வாடகை. கம்போங்கில் உள்ள சில மலாய்ப் பெண்கள் எங்கள் கடையில் வேலை பார்த்தார்கள். அப்பா கோலாலம்பூர் அடிக்கடி போவார். அப்போது ராதா ஆன்ட்டி கடையை கவனித்துக் கொள்வார். அப்பா என்னை அங்குள்ள ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார். அங்கேயே படித்தேன். 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. கடையில் எனக்கென்று எந்த வேலையும் இல்லை. அப்பா என்னை ஊருக்குக் கூட்டிப் போனார்.

கும்பகோணத்துக்குப் பக்கத்திலுள்ளு சோழபுரம்தான் எங்கள் ஊர். ஊரிலேயே பெரிய வீடு எங்கள் வீடுதான். விவசாய வருமானமே போதும். எனக்கு இரண்டு அண்ணன்கள். ஊரிலேயே மருந்துக் கடை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கார் வாடகைக்கு ஓடுகிறது. அதையே சொந்த உபயோகத்துக்கும் வைத்துக் கொண்டோம். அப்பா ஊருக்கு வந்தால் அவருடைய அறையை விட்டு வெளியே வரமாட்டார். நிறைய சிகரெட் பிடிப்பார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி அறைக்குள்ளேயே இருக்கிறார் என்று. சில சமயம் அம்மாவும் அப்பாவும் காரில் கும்பகோணம் போவார்கள்.  தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு சினிமா பார்த்துவிட்டு வருவார்கள். அப்பா அப்போது பார்த்த ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்தைப் பற்றி அடிக்கடி பேசுவார். அதில் வரும் ‘ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே’ ங்கிற பாட்டை அடிக்கடி முணுமுணுப்பார். ஒரு நாள் அப்பாவிடம் கேட்டேன். ‘நமக்குத்தான் இவ்வளவு வசதி இருக்கிறதே ஏன் மலேயாவுக்குப் போக வேண்டும்’ என்று. அப்பா சொன்னார். ‘விவசாயத்தை குத்தகைக்காரர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். கடையை அண்ணன்மார்கள் கவனிக்கிறார்கள். ஊரில் எனக்கு யாரோடும் பழக்கமில்லை. அதோடு வேளிநாடு என்றால் இங்கு ஒரு மரியாதை இருக்கும். நாம் என்ன வேலை செய்கிறோம் என்று யாருக்கும் தெரியாது. அது எனக்கு பிடித்திருக்கிறது. நானும் ஒங்க அம்மாவும் ஒரு மாதத்துக்கு மேல் சேர்ந்து இருந்தால் சண்டை வந்துவிடும்.’ என்றார். ஒரு மாதம் இருந்துவிட்டு மலேயாவிற்கு வந்துவிட்டோம்.

இப்போது பள்ளி இறுதி ஆண்டு படிக்கிறேன். கடையில் சிகரெட்டும் விற்போம். அப்பா ஒரு டப்பாவைப் பிரித்து ஒன்றிரண்டை ஊதிவிட்டு டப்பாவை  கிடைக்கும் இடத்தில் போட்டுவிட்டு அடுத்து புதிதாக ஒரு டப்பாவை எடுத்துக்கொள்வார். எனக்கு நிறைய நண்பர்கள். நாங்கள் எல்லாரும் திருட்டுத்தனமாய் சிகரெட் பிடிப்பதை மிகப்பெரிய சாதனையாக நினைத்தோம். படிப்பு வரவில்லை. நான் தேர்ச்சி அடையவில்லை. எனக்காக அப்பா ரொம்பவும் வருத்தப்பட்டார். என்னை சென்னையில் நியூ காலேஜில் புகுமுக வகுப்பு படிக்க வைத்தார். நிறைய காசு அனுப்புவார். அங்கேயும் நான் நண்பர்களோடுதான் சுற்றினேன். படிக்கவே மாட்டேன். அங்கேயும் நான் தேர்ச்சி பெறவில்லை. சோழபுரத்துக்கே வந்து ஓராண்டு இருந்தேன். சவூதி அரேபியாவுக்கு விசாவோடு ஒரு பம்பாய் ஏஜண்ட் கும்பகோணம் வந்திருந்தார். என் நண்பர்கள் எல்லாம் அவரிடம் விசாவுக்காக முன்பணம் கொடுத்தார்கள். நான் மலேயாவிற்கு வருவதை அப்பா விரும்பவில்லை. படிப்பும் வரவில்லை. மருந்துக் கடையில் இருக்கவும் பிடிக்கவில்லை. அப்பாவிடம் கேட்டு நானும் 4000 ரூபாய் கொடுத்தேன். எல்லாப் பணத்தையும் வாங்கிக் கொண்டு அந்த ஏஜண்ட் பம்பாய் சென்றுவிட்டார். ஆறுமாதம் ஆகியும் பதிலில்லை. சோழபுரத்திலிருந்து எல்லாரும் பம்பாய் சென்றோம். அந்தேரியில் ஒரு வீட்டில் தங்கினோம். ஓர் ஆளுக்கு ஒரு மாதத்திற்கு 100 ரூபாய். காலையில் அந்த ஏஜண்ட்டின் அலுவலகத்துக்குப் போவோம். மாலை வரை இருப்போம். நாளை நாளை என்று அந்த ஏஜண்ட் ஆசை காட்டிக் கொண்டே இருந்தார். மேலே விமானம் பறந்தால் ‘நீங்க போங்க நாங்கள் நாளை வருகிறோம்’ என்று அந்த விமானத்திடம் பேசிச் சிரிப்போம். ஒரு நாள் காலை அவருடைய அலுவலகத்துக்குச் சென்றபோது அவருடைய அலுவலகத்தை நாலைந்து பேர் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். ஏஜண்டை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டுபோய் விட்டார்கள். அவரைப் பார்க்க நாங்களும் காவல்நிலையம் சென்றோம். அவர் அங்குள்ள தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வெளியே வருவார் என்று சொன்னார்கள். காத்திருந்தோம். வரவே யில்லை. பல ஏஜண்டுகளையும் ஏமாற்றிவிட்டாராம். அவரால் வரவே முடியாது என்று சொன்னார்கள். நாங்கள் ஊருக்கே திரும்பிவிட்டோம். இப்போது எனக்கு 20 வயதாகிறது. பணம் பறிகொடுத்த எல்லாரும் ஒன்றாகவே ஊர் சுற்றுவோம். என்னிடம் நிறைய காசு எப்போதும் இருக்கும். இரவு வெகுநேரம் கழித்துத்தான் வீட்டுக்கு வருவேன். எல்லாரும் சில சமயங்களில் குடிப்போம். அம்மாவுக்குத் தெரிந்துவிட்டது. அப்பாவிடம் சொல்லிவிட்டார். உடனே அப்பா என்னை மலேயாவுக்கு வரச் சொல்லிவிட்டார்.

ஒருநாள் கழிவறைக்குப் போக நள்ளிரவில் எழுந்தேன. அப்பா அறையில் பேச்சுக் குரல் கேட்டது. அது ராதா ஆன்ட்டிதான். அவர் அப்பாவோடுதான் இருக்கிறார். நான் புரிந்துகொண்டேன். அதற்குப் பிறகு கடையில் அப்பாவோடு சேர்ந்து இருக்கப் பிடிக்கவில்லை. அதோடு அந்தக் கடையில் எனக்கு வேலையே இல்லை. பெடாலிங் ஜெயாவில் என் நண்பன் ஒரு உணவுக்கடை நடத்திக் கொண்டிருந்தான். அந்தக் கடையை எடுத்து என்னை நடத்தச் சொன்னான். அப்பா சம்மதித்தார். ஏற்றுக் கொண்டேன்

அந்தக் கடையில் நிறைய பங்களாதேஷ், இலங்கை ஏஜண்டுகள் வந்து சாப்பிடுவார்கள். அவர்கள் பேசும்போது 100 விசா, 200 விசா, ஒரு லட்சம் வெள்ளி என்றெல்லாம் வார்த்தைகள் கேட்கும். மலேயாவில் வேலை செய்ய ஒரு விசா வாங்கிக் கொடுத்தால் 500 வெள்ளி தருவார்களாம். என் நண்பனின் அண்ணன் விசா வழங்கும் அலுவலகத்தில் வேலை செய்கிறார். அவரோடு ஓரிரவு வெகுநேரம் பேசினேன். அவர் ‘சேர்ந்து செய்வோம்’ என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது. பயிற்சி தேவைப்படாத வேலைக்கு விசா எளிதில் கிடைக்குமாம். ஒரு ஏஜண்ட் 30 பாஸ்போர்டுகளை என்னிடம் கொடுத்தார். ஒரே வாரத்தில் விசா கிடைத்துவிட்டது. 15000 வெள்ளி உடனே கைக்கு வந்துவிட்டது. அதில் தீவிரமாக ஈடுபட்டேன். விசாவின் எண்ணிக்கை 100, 200 என்று உயர்ந்தது. ஒரு பெரிய தொகையில் வீடு வாங்க முன் பணம் கொடுத்து பாக்கியை தவணையில் கட்டுவதுபோல் வங்கியில் கடன் பெற்றேன். வீடும் வாங்கிவிட்டேன். எனக்கு திருமணம் செய்து வைக்க அப்பா ஊரில் பெண் பார்த்தார். திருமணத்திற்காக 27வயதில் அப்பாவோடு நான் ஊருக்குப் போனேன். திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் மனைவியையும் அழைத்துக் கொண்டு பெடாலிங் ஜெயா வந்துவிட்டேன்.  

இப்போது எனக்கு இரண்டு மகன்கள். ஏஜண்டுகளுக்காக காசை தண்ணீராய் செலவு செய்தேன். அவர்களை மதுவில் குளிப்பாட்டினேன். ………எல்லாமும்? செய்து கொடுத்தேன். தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருப்பானா? அவர்களோடு நானும் கூத்தாடினேன். இப்போது வரும் வருமானம் நாளைக்கு கிடைக்குமா என்று நான் யோசிக்கவே இல்லை. ஒரு வேளை எனக்கு படிப்பறிவு இருந்திருந்தால் யோசித்திருப்பேன்.

என் மகன்களுக்கு 20,25 வயதாகிவிட்டது. மகன்கள் பெயரிலும் ஆளுக்கொரு வீடு வாங்கினேன். முன்பணம் கொடுத்து வங்கியில் கடன் எடுத்தேன்.  அப்போது தங்கியிருக்கும் தற்காலிக முகவரியை வங்கிக்குக் கொடுத்தேன். தவணை கட்டுவதே இல்லை. எந்தக் கடிதத்தையும் பார்ப்பதும் இல்லை. மனைவி பெயரில்தான் கார் வாங்கினேன். அதற்கான தவணையும் கட்டவில்லை. எந்தக் காசு வந்தாலும் அப்படி அப்படியே ஏஜண்டுகளோடு செலவழித்து கும்மாளமிட்டேன். அவர்களோடு பங்களாதேஷ், இலங்கைக் கெல்லாம் சென்றேன். நான் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்ச மல்ல. எல்லாக் கடனும் வட்டியோடு சேர்ந்து இரட்டிப்பாகி விட்டது. வீடுகளை விற்றாலும் அதற்கு மேல் பல ஆயிரம் செலுத்த வேண்டியிருந்தது. வங்கிகள் வழக்குத் தொடர்ந்தன. காரை வங்கி எடுத்துக் கொண்டது. எல்லார் பாஸ்போர்ட்டுகளையும் கோர்ட் முடக்கிவிட்டது. எல்லாவற்றையும் அப்பா கேள்விப்பட்டு ரொம்ப அழுதார். உடல்நலம் சரியில்லாமல் ஊருக்குப் போனார். அங்கேயே இறந்துவிட்டார். நான் மட்டும் சிறப்பு அனுமதி வாங்கி ஊருக்குப் போய் அவரை நல்லடக்கம் செய்துவிட்டு வந்தேன். அந்தச் செலவுக்குக்கூட கடன்தான் வாங்கினேன். என் மனைவி இரண்டு மகனகளையும் வைத்துக் கொண்டு மசாலா வியாபாரம் செய்தார். அதில் அவர்களுக்குத் தேவையான வருமானம் இருந்தது. ஆனாலும் என்னால்தான் அவர்களுடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.  அவர்கள் என்னை அடியோடு வெறுத்தார்கள். என்னை வந்து பார்ப்பதையே அவமானமாக நினைத்தார்கள். அவர்கள் மொத்தமாக என்னிடமிருந்து பிரிந்துவிட்டார்கள். இப்போது நான் தனி ஆள். கடை வியாபாரமும் படுத்துவிட்டது நான் ஏற்கனவே வாங்கிய விசாக்களில் சிலவற்றில் ஏதோ பிரச்சினையாம். அவர்களை கண்டுபிடித்து உடனே அவரவர் ஊர்களுக்கு திரும்ப அனுப்பி விட்டார்கள். அவர்களின் ஏஜண்டுகள் கொடுத்த பணத்தைக் கேட்டு விரட்டுகிறார்கள். வேறு ஏஜண்டுகளும் என்னைவிட்டு முழுமையாக ஒதுங்கி விட்டார்கள். ஏற்கனவே பெருந்தொகை கொடுத்து ஏற்பாடு செய்த விசாக்கள் எதுவுமே கிடைக்கவில்லை. அதற்காக மேலும் மேலும் கடன் வாங்க வேண்டியிருந்தது.

இப்போது எனக்கு வயது 65. சர்க்கரை வியாதி இருக்கிறது. இன்சுலின் எடுத்துக் கொள்கிறேன். ஒரு நாள் காலை சாப்பிடும்போது அப்படியே வாந்தி எடுத்தேன். சொட்டுத் தண்ணீர் உள்ளே இறங்கினாலும் வாந்தி வந்தது. மருத்துவரிடம் சென்றேன். இரண்டு கிட்னியும் வேலை செய்யவில்லை என்றார். டயாலிசிஸ்க்கு அனுப்பினார். ஒரு தனியார் நிறுவனத்தில் டயாலிசிஸ்க்கு சென்றேன். வாரத்திற்கு இரண்டு தடவை செய்ய வேண்டுமாம். செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் செய்து கொண்டேன். அதற்கும் பெரிய காசு தேவைப்பட்டது. அப்பா இறந்த பிறகு கடையை ராதா ஆன்ட்டிதான் நடத்தினார். அவரிடம் காசு கேட்டேன். ஒரு நாள் தகாத வார்த்தையால் திட்டினார். அவருடைய பிள்ளைகளை விட்டு என்னை அடித்து விரட்டச் சொன்னார். என் பழைய ஏஜண்டுகள், காசிருந்த போது நான் உதவி செய்த நண்பர்கள் எல்லாரையும் காசு காசு என்று நெருக்கினேன். மாற்றுக் கிட்னிக்கு ஒரு லட்சம் வெள்ளி வேண்டுமாம். இலங்கையில் ஒரு ஏஜண்ட் ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். அவரிடமே அந்தக் காசைக் கேட்டேன். அவர் ஹோ ஹோ வென்று சிரித்துவிட்டு ‘அன்னக்கி ஆடுனியல்ல. இப்ப அனுபவி’ என்றான். அடப்பாவி அவனும்தானே என்னோடு ஆடினான். ஆனாலும் என் மீது பரிதாபப் பட்டு சிலர் கொஞ்சம் உதவி செய்தார்கள். எல்லாம் டயாலிசிஸ்க்காவே சரியாக இருந்தது. இளைய மகன் இரக்கப்பட்டான். நான் தங்கிக் கொள்ள ஒரு சிறு அறையை ஏற்பாடு செய்தான். ஒரு கடையில் சாப்பிட்டுக் கொள்ளவும் ஏற்பாடு செய்தான். அவன் அம்மாவிடமும் அண்ணனிடமும் பேசி டயாலிசிஸ் செலவை பார்த்துக் கொண்டான். எப்படி எப்படியோ இருந்துவிட்டு இப்படி வாழ்வது மரணத்தைவிட வலித்தது. அவர்களும் எனக்காக செலவு செய்ய  ரொம்பவும் சிரமப் பட்டார்கள். ஊர்வாய்க் காகத்தான் அவர்கள் ஏதாவது செய்ய நினைத்தார்களே தவிர நான் செய்த காரியத்துக்காக என்னை அடியோடு வெறுத்தார்கள்.

என் காது படவே என் மகன் பேசும் சில பேச்சுக்கள் உடம்பு முழுதும் ஊசியால் குத்தியது. இப்போது என்னதான் செய்வது? என்னால் முடிந்தது ஒன்றே ஒன்றுதான். செத்துப்போவது. இனி டயாலிசிஸ் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தேன். அந்த வெள்ளிக்கிழமை நான் போகவில்லை. அதற்காக யாரும் வருத்தப் படவுமில்லை. சனிக்கிழமை உடல் லேசாக நீலம் பூத்தது. முகத்தில் கை வைத்தேன். முகம் பெரிதாக இருப்பதுபோல இருந்தது. கட்டிலிலிருந்து எழுந்திருக்க முடியவில்லை. முகம்  கண் பட்டைகளெல்லாம் வீங்கி கண்களை மூடி விட்டது. என்னால் பார்க்க முடியவில்லை. மூச்சு விட முடிகிறது. மூச்சை இழுக்க முடியவில்லை. தண்ணீருக்குள் மூழ்கிக் கிடப்பது போல் இருக்கிறது. எனக்குத் தெரிந்துவிட்டது. இன்னும் சில நிமிடங்களில் நான் செத்துவிடுவேன். என் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடத்தை சொல்ல நினைக்கிறேன். சொல்ல வந்தது மறந்துவிட்டது. அதை நீங்களே கூட இப்போது தெரிந்து கொண்டிருக்கலாம். மூச்சு இழுக்க முயற்சிக்கிறேன். ம்..ம்…ம்…………..

யூசுப் ராவுத்தர் ரஜித் 

Series Navigationகுருகுலத்தில் பூத்த இலக்கிய மலர் ஒன்று – பத்மா சோமகாந்தன்தக்கயாகப்பரணி [தொடர்ச்சி] 191–200
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *