ஒரு கதை ஒரு கருத்து -எழில்வரதனின் ஹைப்ரீட் குழந்தை

author
4 minutes, 6 seconds Read
This entry is part 14 of 14 in the series 15 நவம்பர் 2020

அழகியசிங்கர் 

‘செம்புலி வேட்டை’ என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து எழில்வரதன் எழுதிய ‘ஹைப்ரீட் குழந்தை’ என்ற கதையைப் படித்தேன்.  இது ஒரு சிக்கலான  கதை.  அதை அனாயசமாக எழுதிச் செல்கிறார் எழில்வரதன். 

            இயல்பாகவே இவர் கதைகளில் நகைச்சுவை உணர்வு அடிக்கடி தட்டுப் படுகிறது.  சுலபமாக ஒரு கதையை எடுத்துக்கொண்டு போகும் பாங்கும் இவர் கதையில் தட்டுப் படுகிறது.

            10 கதைகள் அடங்கிய இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையும் அளவுக்கு மீறிய பக்கங்கள்.  கிட்டத்தட்டக் குறுநாவல்கள் என்று சொல்லத்தக்கக் கதைகளாக எழுதி உள்ளார்.

            இவர் கதை சொல்லல் முறையில் முக்கிய அம்சம் நகைச்சுவை உணர்வு.  இது தானாகவே கதையின் போக்கில் வருகிறது.  வலிந்து  திணிக்கும் நகைச்சுவை உணர்வல்ல.

            ‘ஹைப்ரீட் குழந்தை’ என்ற கதையில் குழந்தையைப் பற்றிச் சொல்லல் முறை சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

            ஜோஸ்னா என்ற குழந்தை சற்று ஹைப்ரீட்டாக நடந்து கொள்கிறாள். அவள் அம்மா மாலினிக்கு  பள்ளிக்கூடத்திலிருந்து அழைப்பு வருகிறது.  அதற்கு முன் மாலினியைப் பற்றி கதா ஆசிரியர் இப்படி விவரிக்கிறார்.”  

            அம்மா பெயர் மாலினி.  வயது சொன்னால் கோபித்துக் கொள்வாள்.  எம்சிஏ படிப்பு.  இந்தியாவில் தொப்பை வளர்க்கிற அமெரிக்க நிறுவனம் ஒன்றில் அதிகாரம் மிக்க பதவி.  நுனிநாக்கு ஆங்கிலம்.  ஜெர்மன் தெரியும்.  போன மாதம் கத்தார் டெலிகேட் ஒருத்தன் ‘ஐ லவ் யூ’  சொல்லி உதை பட்டிருக்கிறான்…அந்தளவுக்கு அழகு மற்றும் துணிச்சல்.  அதைவிடத் திறமையும் அதிகம்….

        மாலினிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து குறிப்பாணை வருகிறது.  அவளுடைய குழந்தையைப் பற்றிப் பேச வேண்டும்.  வரச் சொல்கிறார்கள். அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் மாலினி பள்ளிக்கூடத்திலிருந்து அழைப்பு வருகிறது என்றவுடன் சற்று பதட்டத்துடன் காணப்படுகிறாள். பெண் விஷயத்தில் கவலைப் படுகிறாள்.

            மாலினி பள்ளிக்கூடம் போனவுடன், மிஸஸ் மோத்வானி அவள் தான் பிரின்ஸிபல்.   ஜோஸ்னாவைப்பற்றி அவளிடம் புகார் கூறுகிறாள்.

            ‘ஜோ அடிக்கடி சுண்டு விரலைக் காட்டுகிறாள்,’ என்கிறாள் மோத்வானி.

            மாலினிக்கு இதற்காகவா தன்னை கூப்பிட்டிருக்கிறார்கள் என்று தோன்றியது

.  “

            ‘சுண்டுவிரலா துப்பாக்கியா எதைக் காட்டினாள்,’ என்று கேலியாகக் கேட்கிறாள் மாலினி

.

            பிரின்ஸ்பால் கடுப்பாகிறாள்.  ‘சுண்டுவிரல் காட்டினால் ஒன் பாத்ரூம் போக விரும்புகிறாள் என்று அர்த்தம்.  அடிக்கடி ரெஸ்ட் ரூம் போக விரும்புகிறாள்,’ என்கிறாள் மோத்வானி.    

            மாலினிக்கு உடனே ஞாபகம் வருகிறது.  போனவாரம்தான் உலக சர்க்கரை நோயாளிகள் குறித்த கட்டுரையை  படித்திருந்தாள்.  தன் பெண்ணிற்கு அதுமாதிரி எதாவது நோய் இருக்குமோ என்று சந்தேகப் படுகிறாள்.  

‘அதுமாதிரி எதுவுமில்லை  வெறுமனே போய்விட்டு வருகிறாள்.  வருவதுபோல் இருந்தது.  ஆனால் வரவில்லை, என்கிறாள், ‘

            “அவளுக்குப் படுக்கையில் ஈரம் செய்கிற வழக்கம் இருக்கிறதா?” 

“ஜோஸ்னா ஒன்றிரண்டு முறை அப்படிச் செய்திருக்கிறாள்.   காரணம் ஏன் என்று புரியவில்லை.”

            பிரின்ஸி இப்போது விளக்குகிறாள்.  ஏன் ஜோஸ்னா அப்படிச் செய்கிறாள் என்பதை விளக்குகிறாள். 

            “அச்சம், பாதுகாப்பின்மை, பய உணர்வு போன்றவை குறைபாட்டுக்குக் காரணமாய் இருக்கலாம்.. நீங்களும் உங்கள் கணவரும் குழந்தைக்கு முன்னால் சண்டையிட்டுக் கொள்கிறீரா?  ஏன் கேட்டால் அப்பா பெயரை எடுத்தால் குழந்தை டென்சன் ஆகிவிடுகிறாள்.”

“அது மாதிரி நீங்கள் நினைக்கிறதே அபத்தம்.  நானும் இவளோடு அப்பாவும் டைவர்ஸ் பண்ணி பன்னிரண்டு வருஷம் ஆச்சு.”

            எளிமையானவன் நேர்மையானவன் என்று நம்பி, காதலித்து கல்யாணம் செய்து, ஏமாற்றம் அடைந்து விடுதலை கேட்டு நீதிமன்றத்தை அணுகி விவாகரத்தும் கிடைத்து விட்டது  மாலினிக்கு. .

இப்போது   மாலினி மகளோடு இருக்கிறாள்.  தனியாக..  மாலினிக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி.   தன் மகள் படிப்பில் மோசமாக மார்க் வாங்கியிருக்கிறாள் என்ற செய்தியை கேட்டவுடன்.  அவள் கணக்கில் வாங்கிய மார்க்கைக் கேட்டு இன்னும் அதிர்ச்சி ஆகிவிட்டாள்.

            வெறும் 3 மார்க்குதான் வாங்கியிருக்கிறாள்.   மாலினியால் இதை நம்பமுடியவில்லை. 

            நிஜத்தில் ஜோஸ்னா துருதுருப்பும், சாமர்த்தியமும் கொண்டவள்.  படிப்பில் புகார் வராத அளவுக்குப் பார்த்துக்கொள்வாள்.  சன்னமாக பாடுவாள்;.  டிவி பார்த்தபடி ஆடுவாள்.  ஓவியம் தீட்டுவாள். அபாரமான ஞாபகசக்தி.  ஆனால் கணக்கில் மூன்று.  ஜோஸ்னாவிடம் ஏதோ தப்பியிருக்கிறது.  அவளுக்கு என்னவோ ஆகிவிட்டது..   மாலினி பதறுகிறாள்.

            அம்மாவுக்கும் பெண்ணிற்கும் இது விஷயமாகப் பேச்சு நடக்கிறது. 

            ஜோஸ்னா கணக்கில் மூன்று மார்க் வாங்குவதற்குக் காரணம் தெரிகிறது.  ஜோஸ்னாவுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஜீ.பிரீத்தாதான்.  அவள் கணக்கில் மக்கு.  மூன்று எடுத்தால் உலக  சாதனை .  அவளைவிட ஜோஸ்னா அதிகமாக எடுத்தால், பீரித்தி அழுவாளாம்.  அவள் அப்பா ராஜகுருவின் உபதேசம்.  மத்துவங்களை விட அதிகமா மார்க் எடுத்து அவங்களை நோகடிச்சா அது அல்ப புத்தி.  சாட்டிஷம். அதனால் பிரித்தாவைவிட அதிக மார்க் வாங்கக்கூடாது என்று ஜோஸ்னாவும் எழுதலை.

            இதைக் கேட்டவுடன் கோபத்தில் ஒரு அறை அறைந்து வெளியே துரத்துகிறாள் ஜோஸ்னாவை.  

            மகளின் எதிர்காலத்தை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.  இதற்கெல்லாம் காரணம் ராஜகுரு. போட்டியற்ற உலகமாம்.  பொறாமையற்ற சமூகமாம்.  அவன் ஒரு பைத்தியக்காரன்

            ஜோஸ்னா ஒரு அப்பாவி குழந்தை. அவளுக்கு அப்பா கொடுக்கும் சுதந்திரமும் பிடித்திருக்கிறது.  அம்மா ஓட்டும் காரும் பிடித்திருக்கிறது.  . ஒரு குழந்தைக்கு இரண்டு மேய்ப்பார்கள்.

ஜோஸ்னாவிற்கான நிஜமான கோளாறே இங்கிருந்துதான் தொடங்குகிறது.  அதனால் ஜோஸ்னா வேற மாதிரி ஆகிவிட்டாள்.

            இரண்டு மேதாவிகள் கூட்டு ஒப்பந்தம் போட்டு ஒரு பிள்ளையைத் தாறுமாறாக வளர்த்திருக்கிறார்கள்.  அதன் நேரடி விளைவு என்ன? 

            ஜோஸ்னா எப்படி மாறி விடுகிறாள் என்பதை மூன்று சம்பவங்கள் மூலம் கதாசிரியர் விவரிக்கிறார். 

முதல் சம்பவம்.ஜோஸ்னா மும்முரமாக பரிட்சைக்குப் படிக்கிறாள்.  ராத்திரியெல்லாம் கண் விழித்துப் படிக்கிறாள்.  அவள் முன்னால் ஒரு தலையணை இருக்கிறது.  அதன் மீது அமர்ந்து அதை ஒரு குழந்தையாகப் பாவித்து அதன் கழுத்தைப் பிடித்துத் திருகி வெறியோடு கத்துகிறாள்.  

            “பிசாசே கொன்னுடுவேன் கொன்னு.. நீ வேற ஸ்கூலுக்குப் போயேன்டி”..

            இரண்டாவது சம்பவம். ஜோஸ்னா பள்ளி விட்டுத் திரும்புகிறாள்.             பிச்சைக்கார சிறுமியைப் பார்க்கிறாள்.  அவளிடமிருந்த நொறுக்குத்தீனி, பாடப்புத்தகம், வாட்டர் பாட்டில், என்றெல்லாம் கொடுத்து விடுகிறாள்.  மேலும் அவள் அழுக்குத் துணி கட்டியிருக்கிறாள். அது கிழிந்திருக்கிறது.  இரக்கப்பட்டுப் போட்டிருந்த உடை எல்லாவற்றையும் கழட்டிக் கொடுத்துவிட்டு அவள் ஜட்டியோடு வீடு திரும்புகிறாள்.இல்லாதவங்களுக்கு உதவி பண்ணு.  அன்பு காட்டு என்ற அப்பாவின் தாக்கத்தால் அவள் அதுமாதிரி நடந்து கொள்கிறாள்.

            மூன்றாம் சம்பவம்.  

மாலினியும் ஜோவும் காரில் போகிறார்கள்.  ஒரு பைக் அவர்களை முந்துகிறது.  ஜோவுக்கு வெறி ஏறுகிறது. அந்த பைக் காரை முந்துகிறது.  ஜோவுக்கு வெளி ஏறுகிறது.  அவள் அம்மாவை அந்த பைக் முந்தச் சொல்லி   வெறியுடன் கத்துகிறாள்.  இறுதியில் கார் ஒரு காம்பவுண்ட் சுவரில் மோதி ஹெட்லைட் உடைகிறது.

            இதற்குக் காரணம்.  அம்மாவின் கொள்கை.  அடிப்படையில் வெற்றிதான் முக்கியம்.  முந்திச் செல்.  போராடு என்பதுதான்.

            ஜோவை ஒரு லேடி டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போகிறாள் அவள் அம்மா. 

            இந்த இடத்தில் கதையில் கதாசிரியர் மேலே குறிப்பிட்ட மூன்று சம்பவங்கள் மூலம் நாம் என்ன தெரிந்து கொண்டோம் என்று கேட்கிறார்.

            இந்தக் கதையை வாசகருடன் பேசுகிற பேச்சாக மாற்றுகிறார். லேடி டாக்டர் அவளுக்கு ஒன்றுமில்லை சாதராணமாகத்தான் இருக்கிறாள் என்று சில வைட்டமின் மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பி விடுகிறாள்.

            மாலினி அப்படி நினைக்கவில்லை.  இப்படியே விட்டால், ஜோஸ்னா எப்படியோ மாறி விடுவாள்.  இந்தத் தருணத்தில் வேறு வழியில்லாமல் ராஜகுருவைக் கூப்பிடுகிறாள் மாலினி.

            இரண்டு பேர்களும் சந்திக்கும்போது ஒருவரை ஒருவர் குற்றம் சாடடுகிறாரகள்.  அவர்கள் இருவரும் மாறப்போவதில்லை. 

ஜோ எப்போதும் போல்   இருக்கிறாள்.  ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து மாலினிக்கு அழைப்பு.  பள்ளிக்கூடத்தில் கரோலின் அவளுக்காகக் காத்திருக்கிறாள். மாலினி வந்தவுடன் அவள் ஜோ இருந்த அறைக்கு அழைத்துச் செல்கிறாள்.  அங்கு ஜோ பொம்மைகளுடன் பேசுகிறாள்.  அந்தப்  பொம்மைகளைத் திட்டுகிறாள்.  உடைக்கிறாள்.  தூக்கிப் போடுகிறாள்.  

            மாலினி கரோலினைப் பார்த்து, ஜோவுக்கு என்ன ஆச்சுங்க என்று கேட்கிறாள்

            கரோலின் சொல்கிறாள் : ஜோ மொத்தமா மாறிட்டாள்.  அவள் இனிமேல் குழந்தை இல்லை.  அவள்கிட்டே கடவுள் சாத்தான் இரண்டுமே இல்லை.  எதிர்காலத்தில் என்ன பண்ணுவாள் என்று தெரியவில்லை.  

            கடைசியில் கதையை முடிக்கும்போது ஜோ புது அவதாரம் எடுத்திருக்கிறாள்.  ஹைப்ரீட் குழந்தையாக.  இந்த இடத்தில் கதையை முடிக்கும் ஆசிரியர் ஜோஸ்னா எதிர்காலத்தில் என்னதாங்க ஆவா? அது நீங்கதான் சொல்லணும் என்று நம்மிடம் கதையை முடித்துவிடுகிறார்.

            நீண்ட கதையாக எழுதியிருக்கும் கதாசிரியர் ஹைப்ரீட் குழந்தை என்று குழந்தையின் வன்முறையை வெளிப்படுத்துகிறார்.  இந்தக் குழந்தையின் வளர்ப்பு முறை சரியில்லை என்று சொல்கிறார்.  அம்மாவும் அப்பாவும் பிடித்து தங்கள் பக்கம் இழுக்கக் குழந்தை தறிகெட்டுப் போகிறது.  குழந்தையிடம் அப்பாவும் அம்மாவும் எல்லாவற்றையும் திணிக்கக் கூடாது என்று ஒரு கருத்தைச் சொல்கிறாரா கதையாசிரியர்?  எல்லா இடங்களிலும் இயல்பான நகைச்சுவையுடன் இந்தக் கதை முடிகிறது. 

Series Navigationகாலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *