ஜானகிராமனின் தேர்ச்சி பெற்ற கையில் மனித சுபாவங்கள், சம்பாஷணைகளின் மூலமும், நிகழ்ச்சிகளின் மூலமும் உறுத்தாமல் சொல்லப்படுகின்றன. இங்கு உறுத்தாமல் என்று சொல்லப்படுவதின் நீட்சி இரைச்சலற்ற, பின் புலத்தில் அடங்கிய குரலில் விவரணைகளை வாசகனுக்குத் தருவதையே குறிக்கிறது. வியாபாரத்தினூடே ஒரு வெற்றிலை வியாபாரிக்கும் , வெற்றிலை வாங்குபவருக்கும் இடையில் நடக்கும் பேச்சுதான் கதை. நிகழ்ச்சிகள் மேல் ஏறிச் சவாரி செய்யும் சம்பாஷணைகளைக் காண்பது ஓர் புத்தனுபவம்.
நாலு நாளைக்கு வரும் கவுளி வெற்றிலை ஒரே நாளில் உப்பிலியிடம் தீர்ந்து போனதன் மர்மம், அவருடைய வீட்டுக்கு வந்த
மாயவரம் மருமான் ஒரு தடவைக்குக் கால்கவுளி என்று அரைத்துத் தீர்த்து விட்டதுதான். இதைக் கேட்கும் வெற்றிலை வியாபாரி வேதாந்தி சாயபு, மாயவரத்துக்காரங்களுக்குக் காப்பிக் கொடிக்கால் வெற்றிலை போட்டுப் பழக்கம்; நறநறன்னு மாடு கடிக்கிறாப்பல கடிக்கணும்.என்றும், அந்த வெற்றிலை துருப்பிடிச்ச டின் கணக்கா கறுப்பா மொத்தமா இருக்கும்; எலை எல்லாம் காம்பாகத்தான் இருக்கும் என்றும் சொல்கிறார். தொடர்ந்து ‘இந்த மாதிரி குஞ்சுங்களை எங்க கண்டிருப்பாங்க? இது வாயிலே போட்டா புள்ளியார்பட்டி வெள்ளரிப்பிஞ்சு., பொக்கை வாயில் லேசாக அதக்கிக் கொண்டால் கூட அப்படியே கரைந்து அமிர்தமாகி விடுமே’ என்று சிரிக்கிறார். .
‘ஆனால் சாயபு அன்று கொடுக்கும் வெற்றிலையும் , உள்ளங்கையிலேயே மூன்று வெற்றிலை வைத்துக் கொள்ளும்படியாகச் சிறியதாகதானே இருக்கிறது?’ என்று உப்பிலி கேட்பதற்கு ‘ஆற்றில் தண்ணீர் வரட்டும்.ரெண்டு மாசம் கழிச்சுப் பாருங்க, தளதளன்னு உங்க உள்ளங்கையகலம் தங்க ரேக்குக் கணக்கா தரேன்’ என்கிறார். ஊரில் தண்ணீர் சரியாகக் கிடைக்கவில்லை என்பதால் பம்பு அடித்துத்தான் நீர் வருவதாகவும் இப்போது பம்பு போட்டுப் பத்து வருஷங்கள் ஆகி விட்டதால் பச்சை குழந்தை வாயிலிருந்து ஜொள்ளு கொட்டுவது போல தண்ணீர் வருகிறது என்கிறார் சாயபு.
கிட்டாததும் கிட்டாதனவற்றைக் கிட்ட எடுக்கும் மனித முயற்சிகளும் காலத்தின் கோலம். ஆனால் காலப்போக்கில் அந்த முயற்சிகள் எள்ளி நகையாடப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன என்பதை சாயபு பத்திரகிரிச் சித்தரின் பாட்டில் அடையாளம் காணுகிறார்: “கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட்டான். இரு காலில்லா நெட்டையன் முட்டிக்கிட்டான். ஈயில்லாத்தேனெடுத்துண்டு விட்டானது இனிக்கு தில்லையே ஞானப்பெண்ணே”
சாயபுவின் வயது எவ்வளவு என்று பேச்சு வருகிறது..தற்போது எழுபத்தி மூன்று வயதிலிருக்கும் சாயபு அவருக்கு இருபத்தியோரு வயதாகும் போது நடந்த ஒரு நிகழ்வைச் சொல்லுகிறார்.
அவரெல்லாம் அப்போது அக்கிரகாரத்துத் தெருவுக்குள் காலை வைக்க முடியாது. கொல்லைப் புறமாக வந்துதான் ஆடுகளை
மேய்ச்சலுக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டும். ஒரு தடவை கொளப்பாத்தி அய்யர் வீட்டு ஆடுகள் மேய்ச்சலுக்குப் போன போது கூட்டத்திலிருந்து ஒரு ஆடு விலகிப் போய் மறுநாள் கூட்ஸ் வண்டியில் மாட்டிக் கொண்டு ஆயுளை முடித்துக் கொண்டு விட்டது. அதற்காக சாயபுவைத் தூணில் கட்டிப்போட்டு அய்யர் அடித்தார். ஐம்பது அடியிருக்கும். ‘இனிமேல் கொல்லைப்பக்கம் காலை எடுத்து வைத்தால் காலையே வெட்டி விடுவேன்’ என்று அய்யர் எச்சரிக்கை விடுக்கிறார்
சாயபுவின் வார்த்தையில் : அடி பொறுக்க முடியாமல் “கொல்லைப் பக்கமா? உங்க தெரு மண்ணிலே காலை வச்சி, உங்க வீட்டு வாசலிலே அடி எடுத்து வைக்கிறேனா ,இல்லியா பாரு’ன்னு மக்யா நாளே கூத்தாநல்லூருக்குப் போனேன். மசூதிக்குப் போனேன். என்னா தம்பின்னாங்க. இப்படின்னேன். சரின்னாங்க. இஸ்லாமா ஆனேன். தொப்பி வச்சேன்.கைலி கட்டிக் கிட்டேன். கொடிக்கார ராவுத்தர் கிட்டே ஒரு முண்டு வெத்திலை வாங்கிக்கிட்டேன். இதே அக்கிரகாரத்தில் வித்துக்கிட்டு நடந்தேன். யார்றாது, கணவதி மாரில்ல இருக்குன்னாங்க எல்லாரும். கணவதி இல்ல, கலிபுல்லான்னேன். என்னடா வேசம்னாங்க. கலக்காத வேசம்னேன்.” சமூகக் கொடுமையால் பாதிக்கப்பட்டவரின்
மதமாற்றம் எவ்வளவு இயல்பாக நிகழ்கிறது?
பேசியபடியே சாயபு கொங்கணச்சித்தர் பாடிய ‘சாதி பேதங்கள் சொல்லுகிறீர்;;தெய்வம் தானென்றொருவுடல் பேதமுண்டோ?’என்று பாடுகிறார்.
இந்த வெற்றிலை வியாபாரத்துக்கு ஒரு முழுக்குப் போட இருப்பதாக சாயபு உப்பிலியிடம் சொல்லுகிறார். ஒரு தடவை மெக்கா போய்விட்டு வரப்போவதாகவும் அதற்காக இன்னும் ஒரு முன்னூறு நானூறு ரூபாயாவது சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார். “நீ போய்ட்டு வா. உனக்கு ஆயிரம் ரூபா செலவழிச்சு ஒரு வரவேற்பே கொடுக்கிறேன்” என்று உப்பிலி சொல்லுகிறார்.
“அப்போது அங்கு வந்த உப்பிலியின் அண்ணா மகன் சீமாண்டி “ஆயிரம் ரூபாயா?” என்று சிரிக்கிறான்.
“ஏண்டா நான் செய்ய மாட்டேனா? வேதாந்தி சாயபுவுக்கு என்னதான் செய்யக் கூடாது?” என்று உப்பிலி சிரிக்கிறார். சீமாண்டி அப்போது உப்பிலி, வேதாந்தி இருவர் கண்ணிலும் படாமல் திண்ணையின் தூணோரமாக எதையோ வைத்து விட்டு மறுபடியும் வந்து பேச்சில் கலந்து கொள்கிறான்.
“வேதாந்தி கண்ணை மூடினார்னா, அடக்க செலவையே நான் ஒப்புத்துப்பேண்டா. மைசூர் வத்தியா நூறு கட்டு வாங்கி அவர் தர்க்காவிலே வைப்பேன்” என்கிறார் உப்பிலி.
“அதெல்லாம் ஒண்ணும் வாணாம்.இப்ப ஒரு கவுளிக்கு நான் சொல்ற பத்தணா விலையைப் பேரம்பண்ணாம அப்படியே கொடுங்க போதும்” என்று வேதாந்தி சிரிக்கிறார். அவர் உப்பிலியின் வார்த்தைகளை எவ்வளவு அமைதியாக ஒதுக்கித் தள்ளுகிறார்!
அப்போது சீமாண்டி சிறிது நகர்ந்து “இது ஏது ஒரு ரூபா கிடக்கு, தூணுக்கிட்டே?” என்கிறான்.
“இங்க கொடு பார்ப்பம்” என்று உப்பிலி அதை வாங்கிப் பார்க்கிறார். “நான்தான்டா, காலமே குளிச்சிட்டு கச்சம் கட்டிண்டேன். இப்படி ஓரமா வச்சேன். எடுத்துக்க மறந்துட்டேன்” என்கிறார்.
”குளிச்சதுக்கு திருமண்னு நெத்தியில் காணுமே” என்கிறான் சீமாண்டி
“குளிச்சாத்தான் கச்சம் கட்டிக்கணுமோ? ராத்திரி தட்டுச் சுத்து கட்டிண்டு இருந்தேன். இங்க வந்து கச்சம் கட்டிண்டேன்” என்கிறார் உப்பிலி.
“வாசல்லே வந்தா? உன் இடுப்புக்குக் கீழே தெருவிலே போறவா வரவாள்லாம் பாக்கும்படியாவா?”
உப்பிலி முகம் சிவந்து ஒரு கோடையிடிக் கத்தல் கத்துகிறார்.”கயவாளிப் பயலே, என்ன ரெம்ப ரெம்ப துளுத்துப் போச்சு. நானாடா பொய் சொல்றேன். நாக்கை அடக்கிப் பேசு. உன்னைத் தெரியும் எனக்கு, பெரியவா சின்னவான்னு மரியாதை கிடையாது. என்னன்னு நெனெச்சிண்டிருக்கேன்னேன்” என்று உப்பிலியின் சத்தம் ஏறிக் கொண்டே போகிறது. அக்கம்பக்ககத்தில் கூட்டம்.
வேதாந்தி முகத்தில் அறைந்தாற் போல் அங்கு நிற்கிறார்.
“நான் என்ன சொல்லிப்புட்டேன் சித்தப்பா! வாசல்லே வந்து கச்சம் கட்டிக்க மாட்டியே நீ. இன்னிக்கு வந்து கட்டிண்டே ங்கிறியே.
எதுனாலேன்னு கேட்டேன். அந்த ரூபாய உன்னுது இல்லேன்னு நான் சொன்னேனா?”
உப்பிலி எழுந்து ரூபாயுடன் உள்ளே போகிறார். இந்த மனிதனின் சிறுமையை வேறு விவரணைகள் எதுவும் தராமல் கதை முடிந்து விடுகிறது.
வேதாந்தியின் பேச்சு அல்லது .உணர்ச்சி ஒவ்வொரு கட்டத்திலும். முதிர்ச்சியைக் காண்பிக்கிறது. மாயவரத்துக்காரர்களின் வெற்றிலையின் கடுமையைத் தான் விற்கும் வெற்றிலையின் இளசுத்தன்மையோடு ஒப்பிட்டு உரைக்கும் போது முன்னதன் மேல் எள்ளலைக்
காண்பிக்காத பேச்சு அவரிடமிருந்து வெளிப்படுகிறது. அதே போல அவரை உடல் ரீதியாகவும் கடும் பேச்சின் மூலமாகவும் துன்புறுத்தி விடும் மேல்சாதிக்காரரின் மேல் அவர் குமைந்து மறுக்குவதில்லை; பழிக்குப் பழி என்று நர்த்தனம் ஆடுவதில்லை. மதமாற்றத்தை தி. ஜானகிராமன் பாத்திரத்தின் மனதுக்கு இதம் தரும் மாற்றமாகக் காண்பிப்பதில் அன்றைய வரலாற்றுச் சூழலும், மனித முனைப்புகளும் தெளிவாகத் தெரிகின்றன.
வேதாந்தி கடமைகளை செய்து முடித்தவரின் திருப்தியோடு வியாபாரத்தை நிறுத்தி விடப் போவதாகக் கூறுகிறார். அவருக்கு மெக்கா செல்ல வேண்டும் என்று விருப்பம். அதை நிறைவேற்ற இன்னும் முன்னூறு, நானூறு ரூபாய் வேண்டியிருக்கும். அதைச் சம்பாதித்தபின் வேலையை விட்டு விடுவதாக அவர் உப்பிலியிடம் கூறுகிறார். ‘அந்தப் பணத்தை நான் தருகிறேன், நீ போய் வா’ என்று இருபத்திஐந்து வருஷ காலம் அவருடன் வியாபாரம் செய்யும் வேதாந்தியிடம் உப்பிலி சொல்லுவதில்லை. அதற்குப் பதிலாக ‘நீ மெக்காவுக்குப் போய்விட்டு வந்த பின்பு ஆயிரம் ரூபாய் செலவழித்து உனக்கு வரவேற்பு கொடுக்கிறேன்’ என்கிறார். உப்பிலியின் பேச்சு வெறும் விருதாப் பேச்சு என்பதை சாயபு
“அதெல்லாம் ஒண்ணும் வாணாம். இப்ப ஒரு கவுளிக்கு நான் சொல்ற பத்தணா விலையைப் பேரம்பண்ணாம அப்படியே கொடுங்க போதும்” என்று சொல்லி நமக்கு உப்பிலியின் இடத்தைக் காட்டுகிறார்.
உப்பிலிக்கும் சீமாண்டிக்கும் நடக்கும் வாத விவாதத்தில் சீமாண்டி உப்பிலியை மரியாதைக் குறைவாகக் கேலி செய்வதில் ஆரம்பிக்கிறது. இதனால் கோபம் அடைந்த உப்பிலி கடும் சொற்களால் சீமாண்டியைத் தாக்குகிறார். இருவரும் அவரவர் வயதுக்கேற்ப முதிர்ச்சியுடன் பேசாது மல்லுக்கு நிற்பதை ஜானகிராமன் ” வேதாந்தி முகத்தில் அறைந்தாற் போல் அங்கு நின்றார்” என்று குறிப்பிடும் போது அவர் கோடி காட்டிச் சொல்வது வேதாந்தியின் மனமுதிர்ச்சியை என்று நான் நினைக்கிறேன். தனக்குச் சம்பந்தமில்லாத விஷயம் என்று வேதாந்தி இந்த சம்பவத்தை வெகு எளிதாகக் கடந்து சென்றிருக்கலாம். ஆனால் அவர் அதை முகத்தில் அறையும் அதிர்ச்சியுடன் எதிர்கொள்வது மற்றவர்களின் உண்மை ரூபத்தையும் முதிர்ச்சியின்மையையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
. .
உப்பிலியின் கீழ்மை மனோபாவத்துக்கு எதிராக சாயபு நடமாடுவது அவரை சாதாரண கணவதியிலிருந்து கலிபுல்லாவிலிருந்து வேதாந்தியாக உயர்த்திக் காட்டுகிறது. சாயபுவும் உப்பிலியும் என்று ஏன் தி. ஜா. கதைக்கு அடையாளம் வைக்கவில்லை என்பதைத் தலைப்பு உள்ளொளியுடன் சுட்டிக் காண்பிக்கிறது.
- A lecture and discussion in remembrance of Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishna
- வாழ்வே தவமாக …
- புள்ளிக்கள்வன்
- கம்பன் காட்டும் தோள்வலியும், தோளழகும்
- சிலம்பும் மரபும் – நாட்டுப்புறச் சமய மரபும் சிலப்பதிகாரமும்
- “மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது.
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 19 – உப்பிலியும் வேதாந்தியும்
- மொழிபெயர்ப்புக் கவிதை – நிர்ணயிக்கப்பட்ட தீ
- லூயிஸ் க்ளிக்கின் இருண்மைக் கவியுலகு- ஒரு பார்வை
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பயணம் மாறிப் போச்சு
- காலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)
- ஒரு கதை ஒரு கருத்து -எழில்வரதனின் ஹைப்ரீட் குழந்தை