கு.அழகர்சாமி
அமெரிக்கக் கவிஞர் லூயிஸ் க்ளிக்கிற்கு (Louise Gluck( 1943–) இந்த ஆண்டு 2020-க்கான இலக்கியத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இணையத்தில் கிடைக்கும் அவரின் பல கவிதைகளின் வாசிப்பில், இருப்பின் இருண்மையில் வேர் விடும் பெரு விருட்சம் போல் அவர் கவிதைகள் தெரிகின்றன. அருவமும், படிமமும் அவர் கவிதைகளை வெகுவாகக் கடத்திப் போய் விடவில்லை. ”என் துன்பத்தின் இறுதியில் ஒரு கதவு இருந்தது; அதை நீ மரணம் என்று அழைத்தாய்” என்பது போன்ற படிமங்கள் அவர் கவிதைகளில் தெறிக்காமல் இல்லை. ஆனால் படிமத்திலும், புரியாத் தன்மையிலும் மட்டும் தன் கவிதைகளின் பிம்பத்தைக் கட்டமைக்காமல், இருப்பின் உண்மைகளை அதிலும் இருப்பின் இருண்மைகளை தயவு தாட்சண்யமின்றி நேரடியாய் முன்வைத்தும், மேற்போக்காக எளிமையாய்த் தோன்றினும் நாம் தவற விடும் இருப்பின் இருண்மையின் ஆழ்ந்த பிரக்ஞை நிலைகளை அசாத்தியமாய் வசப்படுத்தியும், மெல்லத் தொடங்கி மேல் செல்லச் செல்ல இறுக்கம் கூடி இறுதியில் தெறிக்கும் ஆழ்ந்த வரிகளில் முழுமை பெற்றும் அவர் கவிதைகள் அமைகின்றன. இக் கவிதை உத்தியில் லூயிஸ் க்ளிக்கின் கவிதைகள் ஒரு பிரத்தியேகமான அலங்காரமற்ற அழகை(austere beauty) அடைகின்றன.
இருப்பின் அனைத்து வலிகளையும் அவர் கவிதைகள் பேசுகின்றன- தனிமை, அவநம்பிக்கை, ஞாபகம், மரணம், விதவைமை, விவாக இரத்து, ஆணாதிக்கம், பாலுறவுச் சிக்கல்கள், முதுமை, நிலையாமை, இழப்பு- இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். மிகவும் மகிழ்ச்சிகரமாகத் தொடங்கும் புதிய வாழ்வு( (Vita Nova) இக் கவிதையின் தமிழாக்கம் கட்டுரையின் அடியில் தரப்பட்டுள்ளது) என்ற கவிதை கூட எப்படி முடிகிறதென்று பாருங்கள்.
”நிசசயமாக வசந்தம் என்னிடம் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது,
இந்த முறை ஒரு காதலனாய் அல்ல, காலனின் ஒரு தூதுவனாய்,
எனினும், அது இன்னும் வசந்தம் தான்.
அது இன்னும் மென்மையாகவே கருதப்படுகிறது.”
அதனால் லூயிஸ் க்ளிக்கை இருண்மைக் கவிஞர், அவநம்பிக்கைக் கவிஞர் ( A poet of despair) என்று மேற்போக்காக முத்திரை குத்தி விடவும் முடியாது. இருப்பின் இருண்மையை அவதானிக்காமல் இருப்பதால் அதிலிருந்து யாரும் தப்பித்து விட முடியாது. கூருணர்வு(sensitivity) இருக்கும் யாருக்கும் இது சாத்தியமில்லை. மாறாக இருண்மையின் அவதானித்தலில் இருண்மையை எதிர்கொள்ள முடியும் கலகத் தனமையில் இருண்மையைக் கடப்பது சாத்தியப்படுகிறது. இக் கலகத்தன்மையை லூயிஸ் கிளிக்கின் பல கவிதைகள் நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றன. அது எள்ளல், ஆதங்கம், மறுப்பு, கேள்விப்படுத்தல் என்ற சமிக்ஞைகளின் வ்ழியாய் நுணுக்கம் பெறுகின்ற்ன. இதையே லூயிஸ் க்ளிக், தான் எழுதுவது தூரதிர்ஷ்டம், இழப்பு, வலி சூழ்ந்த சூழ்நிலைக்கெதிரான ஒருவகை பழிவாங்குதலென்று ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். ( For her, writing is a kind of revenge against circumstance- bad luck, loss, pain). நோபெல் பரிசுக் குழு, லூயிஸ் க்ளிக் தன் கவிதைப் பயணத்தில், இழப்பின் ஆழ்ந்த உணர்விலிருந்து மீட்சியுற்று புதுவாழ்வின் பெரும்பாய்ச்சலை நிகழ்த்துவதை, அவரின் வெண்பனிப் பூக்கள் (Snowdrops) என்ற கவிதையிலிருந்து ஒரு பகுதியைச் சான்றாக எடுத்தாளுகிறது.
”மண் என்னை அழுத்த
பிழைத்திருப்பேனென்று எதிர்பார்த்ததில்லை நான்.
மறுபடியும் விழித்தெழுந்து
ஈர நிலத்தில் என்னுடலை உணர்ந்து
எதிர் வினையாற்ற முடிந்து
மிக முன்கூட்டி, வசந்தத்தின் குளிரொளியில்
எப்படி மறுபடியும் திறப்பிப்பதென்று வெகுகாலம் கழித்து
நினைவு கூர்வேனென்று எதிர்பார்த்ததில்லை நான்-
அச்சமுற்று, ஆம், ஆனால் உங்களின் மத்தியில் மறுபடியும்,
அழுது கொண்டு ஆம் ஆனந்தத்தை இழக்கும் ஆபத்தில்
புத்துலகின் குளிர்க்காற்றில்.”
பனியிலிருந்து விடுவித்துக் கொண்டு வசந்தத்தின் தொடக்கத்தில் முதன் முதலாய்ப் பூக்கும் வெண்பனிப் பூக்கள் இப்படி பேசுகின்றன. மண் கீழ் இருண்மையிலிருந்து விடுபட்டு மண் மேல் வெளிச்சத்தில் தம்மைத் திறந்து கொள்கின்றன அவை. இக் கவிதை உறக்கத்திலிருந்து விழிப்புக்கு நகரும் வெண்பனிப் பூக்கள் அந் நகர்தலில் அவை ஆனந்தமாய் உணரும் போதே அந்த ஆனந்தத்தை இழக்கும் ஆபத்தைப் பற்றிய இனம் புரியாத உணர்வும் நிழலிடுவதில் தவிப்பதை நுணுக்கமாய்ச் சித்தரிக்கிறது. ஆக இன்பம் X துன்பம், இருண்மை X வெளிச்சம் என்று நாம் தெளிவாக வரையறைத்துக் கொள்ளும் முரண்கள் அப்படியொன்றும் தெளிவானவை அல்ல; அவை ஒன்றுக்கு ஒன்று ஏதுவாய்ச் சார்பு நிலையில் மங்கலாகின்றன என்ற குறிப்பும் இக் கவிதையில் தொனிக்கிறது. லூயிஸ் க்ளிக்கின் கவியுலகில் அனுபவமாகும் இருண்மை இந்த மங்கலில் தான் மர்மம் கொள்கிறது. அப்போது அது மங்கலான வெளிச்சமாயும் தோற்ற்ம் கொள்கிறது. ஆனால் அது மர்மமுமல்ல. அது தான் இருண்மையின் இயல்பு. இப்படித் தான் இறப்பு X பிறப்பு என்ற முரணையும் அவதானிக்க வேண்டியிருக்கிறது. இருண்மையில் வெளிச்சமும் இறப்பில் பிறப்பும் உள்ளடங்கி மர்மமாய் அறியப்படும் மர்மத்தை அவர் கவிதைகள் அவிழ்ப்பதை லூயிஸ் க்ளிக் இப்படி பிரகடனப்படுத்துகிறார் பேரோடோஸ் (Parados) என்ற தன் கவிதையொன்றில்
”ஒரு புனிதப் பணிக்கு நான் பிறப்பெடுத்தேன்:
மகத்தான மர்மங்களுக்கு
சாட்சியாய் இருக்க.
இப்போது நான்
பிறப்பு இறப்பு, இரண்டையும் கண்டிருக்கிறேன்.
இருண்ட இயல்புக்கு
இவை ஆதாரங்கள்
மர்மங்களல்ல என்றறிகிறேன்.”
அவரின் பல கவிதைகள் சுயசரிதைத் தன்மையுள்ளவை என்ற ஒரு விமர்சனம் அவர் மேல் உண்டு. நான் தனியல்ல. நான் மனிதச் சங்கிலியின் ஒரு கண்ணி; நான் தான் உலகம். (I am the World) . என் பிரக்ஞை தனியல்ல; என் பிரக்ஞை அனைத்து மனிதப் பிரக்ஞையின் ஒரு கூறு. எங்கேயோ நிகழும் துயர் என் துயர். எங்கேயோ நிகழும் ஆனந்தம் என் ஆனந்தம். என் அனுபவம் அனைத்து மனித அனுபவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதைத் தத்துவார்த்தத் தளத்தில் அறிவார்த்தமாகப் புரிந்து கொள்வதில் உண்மையில்லை. ஆனால் ஓர் உண்மையான கவிதை தன் வெளிப்பாட்டில் தனிமனித அனுபவத்தை அதன் வாசிப்பில் அனைவரும் தத்தம் அனுபவமாய் உணருமாறு அனைவரையும் விகசிக்க வைத்து விடுகிறது. அதில் தனி மனித அனுபவம் பிரபஞ்சத் தன்மை பெறுகிறது. லூயிஸ் க்ளிக்கின் கவிதைகளில் இப் பிரபஞ்சத் தனமை கவிதையின் அழகியலோடு நிகழ்கிறது. இதைக் குறிப்பிட்டு, நோபெல் குழு தன் அறிவிப்பில், அலங்காரமற்ற எளிமையுடன் தனிமனித இருப்பை அனைவருக்கும் பொதுவாக்கிய தீர்க்கமான குரல் அவருடையது என்று லூயிஸ் க்ளிக்கைப் பாராட்டுகிறது. ( for her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal)
லூயிஸ் க்ளிக் புலிட்சர் பரிசு உட்பட அமெரிக்காவின் அனைத்து இலக்கிய விருதுகளையும் பெற்று , இப்போது நோபெல் பரிசு பெற்றதின் மூலம் உலகறியப்பட்டவராகி விட்டாலும், தன்னளவில் பிராபல்யத்தை விரும்பாத ஆளுமை அவருடையது. நியூயார்க்கில் பிறந்த லூயிஸ் க்ளிக், தன் பதின்மப் பருவத்தில் பசியின்மை நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு உளவியல் சிகிச்சை எடுத்துக் கொண்டார். தாய் தந்தையரொடு அவரின் உறவுகள் சுமுகமாயில்லை. இவையெல்லாம் அவர் கவிதையுலகில் தாக்கம் செலுத்தியுள்ளன. லூயிஸ் க்ளிக் வெளியிட்டுள்ள பன்னிரண்டு கவிதைத் தொகுதிகளை முழுமையாக வாசித்தாலே அவரின் கவிதையுலகை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். இணையத்தில்(www.poemhunter.com) நான் வாசித்த அவர் கவிதைகளில், இருபது கவிதைகளின் தமிழாக்கத்தைத் தந்துள்ளேன். அவை ஓரளவுக்கு லூயிஸ் க்ளிக் கவிதைகளை அறிமுகப்படுத்தும் என்று ஒரு நம்பிக்கை.
(1)
முதல் நினைவு
(First Memory)
வெகுகாலத்திற்கு முன்பு, நான் புண்படுத்தபட்டேன்.
என்னை நானே பழிவாங்குவதற்கு வாழ்ந்தேன்
என் தந்தைக்கெதிராக,
யாராய் அவர் இருந்தார் என்பதாலல்ல–
யாராய் நான் இருந்தேன் என்பதால்:
ஆரம்பக் காலத்திலிருந்தே, குழந்தைப் பருவத்தில்,
அந்த வலி- நான் நேசிக்கப்படவில்லை
என்பதைக் குறித்ததென்று கருதினேன். அது
நான் நேசித்தேன் என்பதைக் குறித்ததாயிருந்தது.
(2)
உவகை
(Happiness)
ஓர் ஆணும் ஒரு பெண்ணும்
ஒரு வெண் படுக்கையில் படுத்திருக்கிறார்கள்.
புலரி வேளை.
விரைவில் விழித்து விடுவார்களென்று எண்ணுகிறேன் நான்.
படுக்கைக்கு பக்க மேசை மேல்
லில்லி மலர்களின் ஜாடியொன்று இருக்கிறது;
அவர்களின் தொண்டையில் கதிரொளி ஒன்றுகுவிகிறது.
அவள் வாயினுள் ஆழமாக ஆனால் அமைதியாக
அவளது பெயரை உச்சரிப்பதற்காகப் போல்
அவளை நோக்கி அவன் திரும்புவதை
கவனிக்கிறேன் நான்–
ஜன்னல் விளிம்பில்,
ஒரு முறை,
இரு முறை,
ஒரு பறவை கூவுகிறது.
பின் அவள் சற்று அசைகிறாள்;
அவள் மேனி அவன் மூச்சால் நிரம்பியிருக்கிறது.
நான் என் கண்களைத் திறக்கிறேன்;
நீ என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறாய்.
இந்த அறையெங்கும் ஏறக்குறைய
சூரியன் சறுக்கிச் செல்கிறான்.
உன் முகத்தை எனக்கு நெருக்கமாக
ஒரு கண்ணாடியாக்கி வைத்துக் கொண்டு,
நீ கூறுகிறாய்,
என் முகத்தைப் பாரென்று.
எவ்வளவு அமைதியாய் இருக்கிறாய் நீ.
எரியும் சக்கரம் நம் மேல் மென்மையாக உருண்டு கடக்கிறது
(3)
விருப்பம்
(The Wish)
நீ விருப்பம் தெரிவித்த வேளை நினைவிருக்கிறதா?
நான் ஏராள விருப்பங்களைத் தெரிவிக்கிறேன்.
வண்ணத்துப் பூச்சி பற்றி உன்னிடம் நான்
பொய் சொன்ன சமயத்தில்,
நீ என்ன விரும்பியிருந்தாய் என்பதைப் பற்றி
நான் எப்போதும் ஆச்சரியப்பட்டதுண்டு.
நான் விரும்பியதைப் பற்றி
நீ என்ன நினைக்கிறாய்?
எனக்குத் தெரியாது. திரும்பி வருவேன் நான்,
முடிவில் எப்படியோ சேர்ந்திருப்போம் நாம்.
எப்போதும் நான் விரும்புகிறதையே விரும்பினேன் நான்.
விரும்பினேன் மற்றுமொரு கவிதையை நான்.
(4)
புனிதர்கள்
(Saints)
எங்கள் குடும்பத்தில், இரு புனிதர்கள் இருந்தார்கள்,
என் சித்தியும் என் பாட்டியும்.
ஆனால் அவர்களின் வாழ்வுகள் வித்தியாசமானவை.
என் பாட்டியின் வாழ்வு சாந்தமானது, இறுதியில் கூட.
அமைதியான தண்ணீர் மேல் நடந்து செல்லும் ஒருவர் போல் அவள்;
ஏதோ ஓரேதுவால் கடல் அவளைப்
புண்படுத்தத் துணியவில்லை.
என் சித்தி அதே பாதையைத் தேர்ந்தெடுத்த போது
ஓர் உண்மையான ஆன்மீக இயல்புக்கு
எப்படி ஊழ் எதிர்வினை செய்யுமென
அலைகள் அவள் மேல் சிதறித் தெறித்தன,
அவளைத் தாக்கின.
என் பாட்டி எச்சரிக்கையானவள்; பழமைவாதி:
அதனால் துன்பத்திலிருந்து தப்பித்தாள்.
என் சித்தி எதிலிருந்தும் தப்பிக்கவில்லை.
கடல் பின்வாங்கும் ஒவ்வொரு முறையும்
அவள் நேசிக்கும் யாரோ ஒருவரைப் பறிகொடுத்திருக்கிறாள்.
இன்னும் கடல் கொடுமையானதென
அவள் அனுபவம் கொள்வதில்லை.
அவளுக்கு அது எதுவாயிருக்கிறதோ அது :
அது கரை சேரும் இடத்தில்,
ஆவேசப்பட வேண்டும் அதற்கு.
(5)
அதீதக் கற்பனை
(A Fantasy)
உனக்கு சிலவற்றைச் சொல்வேன் நான்: நிதம்
மனிதர்கள் இறக்கிறார்கள். அது தொடக்கம் மட்டுமே.
ஒவ்வொரு நாளும், இழவு இல்லங்களில்
புதிய விதவைகள் பிறக்கிறார்கள்; புதிய அனாதைகளும்.
இப் புதிய வாழ்வைப் பற்றி முடிவு செய்ய முயன்று
அவர்கள் தம் கைகளைக் கட்டி அமர்ந்திருக்கிறார்கள்
பிறகு அவர்கள் கல்லறைப் பக்கம் இருக்கிறார்கள,
அவர்களில் சிலர் முதல் முறையாக.
அவர்கள் அஞ்சுகிறார்கள் அழ,
சில சமயங்களில் அழாதிருக்கவும்.
யாரோ ஒருவர் குனிந்து, அவர்களிடம்
அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று கூறுகிறார்.
அதன் அர்த்தம் சில வார்த்தைகளை
சொல்லச் சொல்வதிற்கிருக்கலாம்.
சில சமயங்களில் திறந்த புதைகுழியில்
பிடிமண்ணைப் போடுவதிற்கிருக்கலாம்.
அதன் பிறகு ஒவ்வொருவரும் வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.
விடு முழுவதும் உடனடியாக வருகையாளர்கள்.
விதவை மெத்தை மேல் அமர்ந்திருக்கிறாள், வீறார்ந்து,
ஆக, வந்தவர்கள் அவளை அணுக வரிசையில் நிற்கிறார்கள்,
சில சமயம் அவள் கையை ஏந்துகிறார்கள்,
சில சமயம் அவளை அணைக்கிறார்கள்.
அவளுக்கு ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒன்று சொல்லக் கிடைக்கிறது. அவர்களுக்கு நன்றி நவில்கிறாள், வந்ததற்கு நன்றி நவில்கிறாள்.
தன் மனதுக்குள் அவள் விரும்புவது அவர்கள் வெளியேறுவதையே.
அவள் விரும்புவது கல்லறைக்கு திரும்ப,
நோயாளி அறைக்கு, ஆஸ்பத்திரிக்கு திரும்ப.
அவளுக்குத் தெரியும் அது இயலாதென்று.
ஆயின் அது அவளின் ஒரே நம்பிக்கை,
பின் திரும்பிச் செல்லும் ஒரே விருப்பம். அதுவும் சிறிதே,
திருமணம், முதல் முத்தம் போல அவ்வளவு தொலைவுக்கல்ல..
(6)
முன்னிருள்
(Early Darkness)
எப்படி நீங்கள் கூற முடியும்
பூவுலகு எனக்கு ஆனந்தத்தைத் தர வேண்டுமென்று.
பிறக்கின்ற ஒவ்வொன்றும் என் சுமை.
உங்கள் அனைவருக்கும் பின் அடுத்து வர இயலாது நான்.
நீங்கள் எனக்கு ஆணையிட விரும்புவீர்கள்
நீங்கள் உம்மிடையே யார் மிக மதிப்புடையவர்,
யார் என்னை மிக ஒத்திருக்கிறாரென்று எனக்கு கூற விரும்புவீர்கள்.
நீங்கள் சாதிக்கப் போராடும்
தூய வாழ்க்கையையும், பற்றின்மையையும்
உதாரணமாக உயர்த்திக் காட்டுகிறீர்கள்—
உங்களையே நீங்கள் புரிந்து கொள்ள முடியாத போது
எப்படி நீங்கள் என்னைப் புரிந்து கொள்ள முடியும்?
உங்களின் ஞாபகம் போதுமாய்,
பின் திரும்பிச் சேருமளவு போதுமாய்
வலுவானதாயில்லை —
மறக்காதீர், நீங்களென் குழந்தைகள்.
நீங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாயிருந்ததால்
நீங்கள் துன்புறவில்லை,
ஆனால் நீங்கள் பிறப்பெடுத்ததால்,
என்னிடமிருந்து தனிப்பட்டு நீங்கள் வாழ்வை வேண்டியதால்.
(7)
ஏப்ரல்
(April)
யார் அவநம்பிக்கையும், என் அவநம்பிக்கை போன்றதல்ல-
இப்படிப்பட்டவற்றை எண்ணிக் கொண்டு,
அயர்ச்சிமிக்க புறவயக் குறியீடுகளை உருவாக்கிக் கொண்டு;
உங்களுக்கு இத் தோட்டத்தில் இடமில்லை;
ஒரு காடு முழுதையுமே களையெடுப்பதைக்
குறியாகக கொண்டிருக்கிறான் அம் மனிதன்.
தன் உடைகளை மாற்றவோ அல்லது
தலைமுடியைத் தூய்மையாக்கவோ மறுத்துக் கொண்டு
நொண்டிக் கொண்டிருக்கிறாள் அப் பெண்.
நீங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டால
நான் கவனிப்பேனென்றா நீங்கள் கருதுகிறீர்கள்?
பிரக்ஞையுள்ள உயிரினங்கள் இரண்டிடையே சிறந்ததை
நான் எதிர்பார்க்கிறேனென்று நீங்கள் அறிவதில்
நான் திட்டவட்டமாயிருக்கிறேன்: இல்லையெனில்,
நீங்கள் ஒருவருக்கொருவர்
உண்மையிலே அக்கறை கொள்வீர்கள்,
துக்கம் உங்களிடையேயும், உங்களைப் போன்ற எல்லோரிடையேயும்
பகிர்ந்தளிக்கப்படிருக்கிறதென்று குறைந்தபட்சம்
அறிந்து கொள்வீர்கள், எனக்கு
அடர் நீலம் காட்டு *ஸ்கில்லா மலர்களையும்,
வெண்மை காட்டு வயலெட் பூக்களையும் குறிப்பது போல
உங்களை நான் புரிந்து கொள்வதற்கு.
*குறிப்பு: The Wild Scilla: வசந்தத்தின் தொடக்கத்தில் பூக்கும் அழகான நீல நிறக் காட்டுப் பூக்கள். அழகுக்காக தோட்டத்திலும் வளர்க்கப்படுபவை.
(8)
பின் வாங்கும் காற்று
(Retreating Wind)
உங்களை நான் உருவாக்கிய போது
உங்களை நான் நேசித்தேன்.
இப்போது உங்களின் மேல் பரிதாபப்படுகிறேன்.
நீங்கள் தேவையென்ற அனைத்தும் அளித்தேன் நான்:
புவிப்படுக்கை, நீலக் காற்றுப் போர்வை–
உங்களிடமிருந்து விலகிச் செல்லச் செல்ல
உங்களை நான் மிகத் தெளிவாகப் பார்க்கிறேன்.
உங்களின் ஆன்மாக்கள் இவ் வேளைக்குள்
மகத்தானதாய் இருந்திருக்க வேண்டும்,
யாதாய் உள்ளதோ அது போலல்ல,
சின்னஞ் சிறு விடயங்களைப் பேசிக் கொண்டு.
உங்களுக்கு பரிசில் ஒவ்வொன்றையும் அளித்தேன்,
வசந்த கால விடியலின் நீலம்,
எப்படி பயன்படுத்துவதென்று நீங்கள் தெரிந்து கொள்ளாத காலம்-
நீங்கள் விரும்பினீர் மேலும், இன்னொரு படைப்புக்கெனத்
தனியாய் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பரிசிலையும்.
நீங்கள் நம்பியது எதுவாயினும்,
உங்களைத் தோட்டத்திலே வளர்கின்ற தாவரங்களிடையே
நீங்கள் கண்டு கொள்ள மாட்டீர்.
உங்களின் வாழ்வு அவற்றுடையதைப் போன்று வட்டமானதல்ல:
உங்களின் வாழ்வு நிச்சலனத்தில் தொடங்கியும் முடியும்,
வெண் பிர்ச் மரத்திலிருந்து ஆப்பிள் மரத்திற்கு செல்லும்
வில்வளைவை எதிரொலிக்கும் வடிவத்தில்
தொடங்கியும் முடியும்
பறவையின் பறத்தலைப் போன்றது,
(9)
வெண் லில்லிகள்
(The White Lillies)
தங்களுக்கிடையே நட்சத்திரங்களின் படுக்கையொன்றை நிகர்
தோட்டத்தை ஓர் ஆணும், ஒரு பெண்ணும் அமைத்துக் கொண்டதாய்,
இங்கு கோடை அந்தியில் அவர்கள் உலவுகிறார்கள்.
அந்தி அவர்களின் அச்சுறுத்தலால் குளிராகிறது:
அனைத்தையும் முடித்து விடக் கூடும் இது,
பேரழிவு செய்யும் வல்லமையுடையது இது.
குறுகிய தூண்களாய் உபயோகமின்றி உயர்ந்து,
அதற்கப்பால் அபினிப் பூக்களின் கடற் சுழற்சியெனும்
நறுமணமிக்க காற்றினூடே
அனைத்தையும், அனைத்தையுமே
இழக்க வைத்து விடக் கூடும் இது–
மூச், என் அன்பே, மறுபடியும் திரும்ப வருவதற்கு
எத்தனை கோடைகள் நான்
வாழ வேண்டுமென்பது ஒரு பொருட்டல்ல எனக்கு.
இந்த ஒரு கோடையில் நாம் நித்தியத்தில் நுழைந்திருக்கிறோம்.
அதன் பிரகாசத்தை விடுவிப்பதற்கு
என்னைப் புதைக்கும் உன் இரு கரங்களையும்
உணர்ந்தேன் நான்.
(10)
பனி
(Snow)
டிசம்பர் கடைசி: என் தந்தையும் நானும்
நியூயார்க்கிற்கு சர்க்கஸுக்கு சென்று கொண்டிருக்கிறோம்.
கடுங்குளிர்க் காற்றில் என் தோள்களின் மேல்
என்னைத் தூக்கிப் பற்றியிருக்கிறார் அவர்:
வெண்தாளின் கிழிசல்கள்
இரயில் பாதை இணைப்புகளைக் கடந்து கிடக்கும்.
என் தந்தை இப்படி நிற்பதையே விரும்பினார்,
என்னைப் பற்றிக் கொண்டு,
அதனால் என்னை அவர் காண முடியாதபடி.
நினைவு கொள்கிறேன் நான்
என் தந்தை கண்ட உலகை
நேரடியாய் வெறித்து மேல் நோக்கியதை,
அதன் வெறுமையை உள்வாங்கிக் கொள்ள
கற்றுக் கொண்டிருந்ததை,
வீழ்ந்தல்ல, எங்களைச் சுழற்றியடித்த கடும்பனியை.
(11)
காதல் கவிதை
(Love Poem)
சிரமத்துடன் உருவாக்கப்பட எப்போதும் ஏதோ ஒன்று இருக்கிறது.
உன் அம்மா பின்னுகிறாள்.
செந்நிறத்தின் ஒவ்வொரு சாயையிலும்
கழுத்துக் குட்டைகளைத் தயாரிக்கிறாள்.
கிருத்துமசுக்காக தயாரிக்கப்பட்டவை அவை.
உன்னை உடன் அழைத்துக் கொண்டு
திரும்பத் திரும்ப அவள் திருமணம் செய்து கொண்ட போதெல்லாம்
உன்னைக் கதகதப்பாய் வைத்தவை அவை.
இறந்தவர்கள் திரும்ப வந்தது போல்
அந்த அத்தனை ஆண்டுகளிலும்
தன் விதவைப்பட்ட மனதை
அவள் பொத்தி வைத்துக் கொண்ட போது
எப்படி அது பயனுள்ளதாய் இருக்க முடியும்?
ஆச்சரியமொன்றுமில்லை, நீ எப்படியோ அப்படி நீ,
குருதி வழி மரபஞ்சி , ஒரு செங்கற் சுவருக்குப் பின்னால்
இன்னொரு செங்கற் சுவர் போல
உன் பெண்டிரும் உளர்.
(12)
அடக்கம் செய்தலைப் பற்றிய அச்சம்
(The Fear of Burial)
வெற்று வயலில் , விடியலில்
உரிமை கோரப்படுவதற்கு உடல் காத்திருக்கிறது.
அதனருகில், சிறு பாறையொன்றின் மேல்
ஆன்மா உட்கார்ந்திருக்கிறது–
மறுபடியும் அதற்கு வடிவம் கொடுக்க எதுவும் வரவில்லை.
உடலின் தனிமையை எண்ணிப் பார்.
இறுக்கமாய்ச் சுற்றி அதன் நிழல் கொக்கியிட
அறுக்கப்பட்ட வயலில் இராவில் நடந்தபடி இருக்கிறது அது.
இப்படியொரு நெடும் பயணம்.
ஏற்கனவே நடுக்குறும் தூர கிராம விளக்கு வெளிச்சங்கள்,
அதைக் கண்டு சற்றும் தயங்கி விடாது,
வரிசைப்படி பார்வையிடுகின்றன.
எவ்வளவு தொலைவாய்த் தோன்றுகினறன மரக் கதவுகளும்
மேஜையின் மேல் கனஎடைகள் போல் வைக்கப்பட்டுள்ள
ரொட்டியும் பாலும்
(13)
தோட்டம்
(The Garden)
உன்னைத் தோட்டம் வியக்கிறது.
உனக்காகத் தன்னைப் பச்சை நிறத்திலும்,
ரோஜாவின் பரவசமூட்டும் பல் நிறங்களிலும் பூசிக் கொள்கிறது.
அதனால் நீங்கள் உங்கள் காதலரோடு வருவீர்களென்று.
அந்த வில்லோ மரங்கள்– பார்,
எப்படி இந் நிசப்தத்தின் பச்சைக் கூடாரங்களை
அவை வடிவமைத்திருக்கின்றன.
எனினும், ஏதோ ஒன்று இன்னும் உனக்கு தேவையாயிருக்கிறது.
கல்மிருகங்களிடையே உன் உடல் அவ்வளவு மென்மையாய், அவ்வளவு உயிர்ப்பாய்,
ஒத்துக் கொள், அவற்றைப் போன்றிருப்பது திகிலுடையதே,
தீங்கிற்கு அப்பால்.
(14)
அனைத்துப் புனிதங்கள்
(All Hallows)
இப்போது கூட இந்த இயற்கைக் காட்சி உருக்கூடுகின்றது..
குன்றுகள் இருட்டாகின்றன;
எருதுகள் அவற்றின் நீல நுகத்தடியில் உறங்குகின்றன.
பல்முளைத்த சந்திரன் எழும் போது,
வயல்கள் சுத்தமாக அறுக்கப்பட்டு,
கதிர்கள் சரிசமமாகக் கட்டப்பட்டு,
சாலையோரத்தில் ஐயிதழி மலர்களிடையே,
அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அறுவடையின் அல்லது கொள்ளை நோயின் தரிசுத் தனமை இது.
தன் கையைப் பணம் செலுத்த நீட்டுவது போல் நீட்டியிருக்கிறாள்
ஜன்னலின் வெளியே சாய்ந்திருக்கின்ற இல்லாள்,
விதைகள்
தனித்துவமாய், பொன்னிறமாய்
சின்னக் குட்டியே
இங்கு வா
இங்கு வா
என்று
அழைக்க,
ஆன்மா மரத்திலிருந்து வெளியே ஊர்ந்து வருகிறது.
(15)
புதுவாழ்வு
(*Vita Nova)
நீ என்னைக் காப்பாற்றினாய்,
நீ என்னை நினைவு வைத்திருக்க வேண்டும்.
ஆண்டின் வசந்தகாலம்;
படகுகளில் பயணிக்க கட்டணச்சீட்டு வாங்குகிறார்கள் வாலிபர்கள்.
உரத்த சிரிப்பு , காரணம் காற்றிலெங்கும்
ஆப்பிள் பூக்களின் மணம்.
நான் விழித்த போது, அதே மாதிரியான உணர்வில்
திளைக்க முடிந்ததென்று உணர்ந்தேன்.
என் பால்ய காலத்திலிருந்தே இந்த மாதிரியான ஓசைகளை,
ஒரு காரணமுமின்றி உரத்துச் சிரிப்பதை நினைவு கூர்கிறேன்,
வேறொன்றுமில்லை, இந்த உலகு அழகாயிருப்பதாய்,
இதைப் போன்று ஏதோ ஒன்று.
லுகானோ*. ஆப்பிள் மரங்களின் கீழ் மேசைகள்.
கடலோடிகள் வண்ணக்கொடிகளை உயர்த்தி, தாழ்த்திக் கொண்டு.
ஏரி முனையில் ஒரு வாலிபன் தன் தொப்பியைத்
தண்ணீருக்குள் வீசி எறிகிறான்.
ஒரு வேளை அவன் காதலி அவனை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.
விரிந்த பேசுபொருளுக்கு முன் போடப்பட்டு,
பின் பயன்படுத்தப்படாது, புதைந்த ஒரு வழித்தடமாய்
மிக முக்கியமான ஓசைகளும் சமிக்ஞைகளும் அங்கு.
தூரத்தில் தீவுகள். என் அம்மா
சிறு ரொட்டிகளுள்ள ஒரு தட்டை ஏந்தியபடி-
என் நினைவுக்கெட்டிய வரை, ஒரு விவரமும் மாற்றமின்றி
தெளிவாக, முழுமையாக, வெளிச்சரேகை படாத கணம் அது,
அதனால் நான் எக்களிப்புடன் விழித்தெழுந்தேன் என் வயதில்
வாழும் ஆசை கூடி, முழுத் தன்னம்பிக்கையுடன்-
மேசைகளின் அருகில், வெளிர்பச்சை,
தெரிகின்ற மைவண்ண நிலத்தோடு ஒட்டுப் போடப்பட்ட,
புதிய புல்வெளிப் பகுதிகள் அங்குமிங்கும்.
நிசசயமாக வசந்தம் என்னிடம் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது,
இந்த முறை ஒரு காதலனாய் அல்ல, காலனின் ஒரு தூதுவனாய்,
எனினும், அது இன்னும் வசந்தம் தான்.
அது இன்னும் மென்மையாகவே கருதப்படுகிறது.
*குறிப்பு1: Vita Nova: புது வாழ்வு (TheNew Life) என்பதைக் குறிக்கும் இத்தாலியச் சொல். இத் தலைப்பு தாந்தேயின், புதிய வாழ்வை அவரின் கலைத் தேவதையின் உருவில் கொண்டாடும் La Vita Nuova( Latin Tilte : Vita Nova) , என்ற அவர் படைப்பைச் சுட்டுவதாய் உள்ளது
* குறிப்பு2: Lugano: ஸ்விட்சர்லாந்திலுள்ள புகழ்பெற்ற இதமான சூழலும், குன்றுகளால் சூழப்பட்ட ஏரியும், இயற்கை அழகு கொஞ்சும் வசந்த காலச் சுற்றுலா வாசத்தலம்
(16)
நம்பிக்கைக்கு ஒவ்வாத சொற்காரர்
(The Untrustworthy Speaker)
கவனிக்காதே என்னை; நொறுங்கியிருக்கிறது என் இதயம்..
எதையும் நான் நடுவுநிலையில் காண்பதில்லை.
என்னை நான் அறிவேன்; ஓர் உளவியல்வாதி போல்
என்னை நான் செவியுறக் கற்றிருக்கிறேன்.
நான் தீவிரமாய்ப் பேசும் வேளையில் தான்
நான் மிகவும் குறைவாக நம்பத்தக்கவளாகிறேன்.
உண்மையிலே இது வருத்தத்துக்குரியது:
என் வாழ்நாள் முழுவதும், என் அறிவார்த்தம், என் மொழித் திறன், உய்த்துணர்தல், இவற்றுக்காகப் பாராட்டப்பட்டிருக்கிறேன்.
முடிவில் அவையெல்லாம் வீணடிக்கப்பட்டன-
என்னை நான் உள் நோக்குவதில்லை.
முகப்புப் படிகளில் நின்று கொண்டு.
என் சகோதரியின் கையைப் பிடித்துக் கொண்டு,
அதனாலேயே அவள் சட்டை முடிகிற இடத்திலுள்ள காயங்களை
என்னால் விவரிக்க முடியவில்லை.
என் சுய மனதிலும் நான் தெரிவதில்லை.
அதனால் தான் அபாயகரமானவள் நான்.
தன்னலமற்றவராய் என்னைப் போல் தோன்றுபவர்களான
நாங்கள் தாம் முடவர்கள்; பொய்யர்கள்.
நாங்கள் தாம் உண்மையின் நலன் கருதி
பிரித்தறியப்பட வேண்டியவர்கள்.
நான் அமைதியாய் இருக்கும் வேளை தான்
உண்மை வெளிப்படும் வேளை.
ஒரு தெளிந்த வானம், வெண்ணிழைகள் போல் முகில்கள்,
அவற்றின் கீழ் ஒரு சிறு சாம்பல் நிற வீடு,
சிவப்பிலும், ஒளிமிக்க இளஞ்சிவப்பிலும் அஜீலியாப் பூக்கள்.
நீ உண்மையை விரும்பினால்,
உன்னை நீ தனிமையாக்கிக் கொள்ள வேண்டும்
மூத்த சகோதரிக்கு, நினைவில் விலக்கி விடு அவளை :
நானென்னும் ஓர் உயிர்ப் பொருள்
அதன் ஆழ்ந்த வினைபுரிதல்களில் புண்படும்போது
அனைத்துச் செயல்பாடுகளும் மாறுதலுக்கு ஆட்படுகின்றன.
அதனால் தான், என்னை நம்பக் கூடாது.
ஏனென்றால், இதயத்தின் காயம்
மனதின் காயம் கூட.
(17)
குளம்
(The Pond)
குளத்தை இரா போர்த்தியிருக்கிறது அதன் சிறகால்.
மோதிர வளைவிலான நிலவின் கீழ்
நன்னீர் சிறு மீன்களுக்கும்
எதிரொலிக்கும் சின்ன விண்மீன்களுக்கும் இடையே
நீந்துகின்ற உன் முகத்தை என்னால் காண முடிகிறது.
இராக் காற்றில் குளத்தின் மேற்பரப்பு உலோகமாகிறது.
தம்முள், உன் விழிகள் திறந்திருக்கின்றன.
நாம் குழந்தைகளாய்ச் சேர்ந்திருந்தது போல
அவை ஒரு நினைவைப் பொதிந்து வைத்திருக்கின்றன
என்றறிகிறேன் நான்.
நம் குதிரைகள் குன்றில் மேய்கின்றன.
வெண்புள்ளிகளுடன் அவை சாம்பல் நிறத்தன.
இப்போது கருங்கல் மார்புக் கவச அடியிலுள்ள குழந்தைகள் போல்
காத்திருக்கும் இறந்தவர்களுடன் சேர்ந்து
துலக்கமாகவும், கையறுநிலயிலும் அவை மேய்கின்றன.
குன்றுகள் வெகு தொலைவிலுள்ளன.
குழந்தைப் பருவத்தை விட இருண்மையாய் அவை உயர்கின்றன.
குளத்தருகில் மிக அமைதியாய் சயனித்திருப்பது குறித்து
நீ என்ன நினைக்கிறாய்?
நீ அப்படி நோக்கும் வேளையில்
உன்னை நான் தொட விரும்புகிறேன்,
ஆனால் தொடவில்லை, இன்னொரு வாழ்வில்
நாம் ஒரே இரத்த உறவுடையவரென்பது போல் கண்டு.
(18)
கடந்த காலம்
(The Past)
இரு ஊசியிலைமரக் கிளைகளுக்கிடையே,
அவற்றின் நேர்த்தியான ஊசிமுனைகளுக்கிடையே,
வானில் சிறிய வெளிச்சம் உடன் தோன்றி
இப்போது பிரகாசமான பரப்பின் மேல் பதிந்து,
அதற்கு மேல், உயர்ந்த சிறகார்ந்த சொர்க்கம்-
காற்றை முகர், வெண் ஊசியிலை மரத்தின் மணம் அது.
அடர்த்தி மிகுந்திருக்கிறது அது, காற்று அதனூடே வீசும் போது,
திரைப்படமொன்றில் காற்று வீசும் ஓசை போல்
அது எழுப்பும் ஓசை அதே மாதிரி விநோதமாயிருக்கிறது.
நிழல்கள் நகர்கின்றன.
கயிறுகள் தாம் எழுப்பும் ஓசையை எழுப்புகின்றன.
நீ தற்போது கேட்கும் ஓசை
நைட்டிங்கேலின் ஓசை,
தன் பேடையைச் சேரக் கூவும்
ஒரு *முதுகெலும்பி ஆண் பறவையின் ஓசை.
கயிறுகள் சலனிக்கின்றன.
இரு ஊசியிலை மரங்களுக்கிடையே உறுதியாகக் கட்டப்பட்ட
வலை பின்னிய மஞ்சம் காற்றில் ஊஞ்சலாடுகிறது.
காற்றை முகர். வெண் ஊசியிலை மரத்தின் மணம் அது.
நீ கேட்பது என் தாயின் குரலா அல்லது
தம்மைக் காற்று கடக்கும் போது
மரங்கள் மட்டுமே எழுப்புகின்ற ஓசையா அது?
ஏனென்றால், சூன்யத்தைக் கடக்கும் போது
எந்த ஓசையை எழுப்பும் அது?
குறிப்பு: முதுகுநாணிகளில்( Chordates) முதுகெலும்பிப் பறவைத் தொகுதியைக் குறிக்கிறது இங்கு. இதில் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. மிகச் சிறியது bee humming bird. வாழும் மிகப்பெரிய பறக்கும் பறவை: Albatross
(19)
செவ் அபினிப் பூ
(The Red Poppy)
மனமென்ற ஒன்று இல்லாதிருப்பது
மகத்தானது. உணர்வுகள்:
ஓ, எனக்குமுண்டு; என்னை அவை ஆள்கின்றன.
சூரியன் என்று அழைக்கப்படுகிற ஒரு பிரபு எனக்கு
வானில் இருக்கிறான்.
அவன் இருத்தலின் தீ போல
என் சுய இதயத் தீ அவனுக்கு தெரியத்
திறந்து கொள்கிறேன் என்னை நான்.
இதயமில்லையாயின்
எதுவாய் இப்படிப்பட்ட கீர்த்தி இருக்கக் கூடும்?
ஓ,என் ச்கோதரரே, சகோதரிகளே,
வெகு காலத்திற்கு முன்பு,
நீங்கள் மனிதராயிருந்ததற்கு முன்பு,
ஒரு சமயம் என்னைப் போன்று இருந்தீரா?
ஒரு முறை திறந்தால், மறுபடியும் திறக்கவே முடியாதபடி
உங்களை நீங்கள் திறந்து கொள்ள அனுமதித்துக் கொண்டீரா?
ஏனென்றால், மெய்யாய்
நீங்கள் எவ் வகையில் பேசுவீரோ அவ் வகையிலே
இப்போது பேசிக் கொண்டிருக்கிறேன் நான்.
நான் பேசுகிறேன்
ஏனென்றால் நான் சுக்குநூறாய் உடைந்திருக்கிறேன்.
(20)
செவ்வியல் இசையின் ஒரு சிறு பகுதி
(*Nocturne)
இறந்து விட்டாள் அம்மா சென்ற் இராவில்,
இறக்கவே இறக்காத அம்மா.
குளிர்காலத்தின் வருகையை உணர முடிந்த்து.
திங்கள்கள் பல கழித்தே வரும் அது. ஆயின்,
இருந்தாலும் உணர முடிந்த்து அதை.
அது மே பத்தாம் தேதி.
பூங்கோரைப் புற்களும் ஆப்பிள் பூக்களும்
பின்புறத் தோட்டத்தில் பூத்திருக்கின்றன.
செக்கோஸ்லாவியாவிலிருந்து
மரியா பாடல்கள் பாடுவதைச் செவியுற முடிகிறது எம்மால்?-
எப்படி தனிமையில் நான் ?-
அவ்வகைப் பாடல்களும்.
எப்படி தனிமையில் நான் ,
தாயின்றி, தந்தையின்றி?-
அவர்களில்லாமல் என் சித்தம் காலியாய்த் தோன்றுகிறது.
வாசங்கள் மண்ணிலிருந்து அலைந்து செல்கிறது;
தட்டுகள் நீர்த்தொட்டிக்குள் கிடக்கின்றன-
அலசிக் கழுவப்பட்டு ஆனால் அடுக்கி வைக்கப்படாது.
முழுநிலவின் கீழ் மரியா
கழுவுதலை முடித்துக் கொண்டிருந்தாள்.
விறைப்பான விரிப்புகள் நிலவொளியின்
உலர்ந்த வெண் செவ்வகங்களாகி விட்டன.
எப்படி தனிமையில் நான் ,
ஆயின் இசையில் என் வெறுமை என் ஆனந்தம்.
ஒன்பது, எட்டு என்றிருந்தது போல
அது மே பத்தாம் தேதி,
அம்மா படுக்கையில் உறங்கினாள்,
அவள் கைகள் விரித்தபடி கிடக்க,
அவையிடையே அவள் தலை சமன் செய்யப்பட்டு.
குறிப்பு: Nocturne: செவ்வியல் இசையின் ஒரு பகுதி என்பதைக் குறிக்கும் சொல்.( A gentle piece of classical music)
.
கு.அழகர்சாமி
- A lecture and discussion in remembrance of Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishna
- வாழ்வே தவமாக …
- புள்ளிக்கள்வன்
- கம்பன் காட்டும் தோள்வலியும், தோளழகும்
- சிலம்பும் மரபும் – நாட்டுப்புறச் சமய மரபும் சிலப்பதிகாரமும்
- “மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது.
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 19 – உப்பிலியும் வேதாந்தியும்
- மொழிபெயர்ப்புக் கவிதை – நிர்ணயிக்கப்பட்ட தீ
- லூயிஸ் க்ளிக்கின் இருண்மைக் கவியுலகு- ஒரு பார்வை
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பயணம் மாறிப் போச்சு
- காலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)
- ஒரு கதை ஒரு கருத்து -எழில்வரதனின் ஹைப்ரீட் குழந்தை