இளிக்கின்ற பித்தளைகள்

This entry is part 5 of 10 in the series 6 டிசம்பர் 2020

ஜோதிர்லதா கிரிஜா

(29.5.1981 தினமணி கதிரில் வந்தது. “மனசு” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)

      கண்ணப்பன் கையில் பிடித்திருந்த தந்தியை வெறித்துப் பார்த்தான். அதில் இருந்த சொற்கள் அவனைக் கேலி செய்தன. அவன் படித்தது ஆறாம் வகுப்பு வரையில்தான். ‘மதர் சீரியஸ். ஸ்டார்ட் இம்மீடியெட்லி’ என்று தந்தியாளர் கிறுக்கியிருந்ததை அவனால் எழுத்துக்கூட்டிக்கூடப் படிக்க முடியவில்லை. படிக்க முடிந்திருந்தால், ஒருவேளை அவ்வப்போது ஆங்கிலத்தில் உரையாடுகிற அலுவலக அதிகாரிகளிடையேயும் ஊழியர்களிடையேயும் இருந்து பழக்கப்பட்டுக் கொஞ்சம் ஆங்கிலப் பேச்சறிவு பெற்றிருந்ததன் அடிப்படையில் தந்தியின் பொருளை மனத்தில் வாங்கிக் கொண்டிருந்திருப்பான். தன் அம்மாவுக்குத்தான் ஏதோ என்பது மட்டும் உள்ளுணர்வாய் அவனுக்குப் புரிந்தது. அண்ணன் தான் கொடுத்திருக்க வேண்டும். ‘தந்திச் சேவகனையே கேட்டிருக்கலாம்…. விட்டுட்டமே?’ என்று எண்ணினான். மணி தெரியவில்லை. வெளியே இருட்டாக இருந்தது.  குடிசைக் கதவை வெறுமே சாத்திவிட்டு வெளியே வந்தான். இரண்டு வீடுகளுக்கு அப்பால் ஒரு படித்தவன் இருந்தான். அவன் வீட்டுக்குப் போய்த்தான் கதவைத் தட்டிக் கேட்க வேண்டும். வேறு யாரும் படித்தவர்களாக அந்தப் பகுதியில் அவனுக்குத் தெரிந்த வரையில் இல்லை. ‘கோவிச்சுக்கிறுவாரோ?’

      கண்ணப்பன் நடந்தான். அவனுக்கு உதவுவது போல் – அந்தப் படித்தவன் வீட்டு வாசலில் அவன் தயங்கிய போது –உள்ளேயிருந்து கெடியாரம் நான்கு தடவை அடித்து ஓய்ந்தது. ‘நல்ல வேளை! ரொம்ப அகாலத்துல எளுப்பப் போறதில்லே நான்!.’

      “ஸார்! ஸார்!” –  கூப்பிடு மணியை  அழுத்தத் துணிவில்லை. உள்ளே தூங்கும் எல்லாருக்கும் தூக்கம் கலைந்து போகும். திட்டுவார்கள்.  வாயால் கூப்பிடுவது பரவாயில்லை. சத்தம் அவ்வளவாக இல்லை. நன்றாகத் தூங்காதவர்கள் மட்டுமே விழித்துக்கொள்ளுவார்கள் …’

      பத்துப் பதினைந்து தடவைகள் கூப்பிட்ட பிறகு அவன் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். வெளி விளக்கைப் போட்டான்.  “யாருப்பா?” என்றான். அரைத் தூக்கத்தில் குரல் குழறியது.

       “ரெண்டு வீடு தள்ளி இருக்குறனுங்க. ஒரு தந்தி வந்திருக்குது. படிச்சுச் சொல்றீங்களா? அம்மாவுக்கு மேலுக்குச் சொகமில்லீங்க. அதுனால கவலையா இருக்குதுங்க.  பாதி ஒறக்கத்துல எளுப்பிட்டதுக்கு மன்னிக்கணுங்க…”

      குரலில் ஒலித்த வினயமும், வேதனையும், மரியாதையும், குற்ற உணர்ச்சியும் உள்ளே இருந்தவனைக் கலக்கி யிருக்கவேண்டும். அடுத்த வினாடி கதவு திறந்தது.  தூக்கக் கலக்கம் பெருமளவுக்குக் குறைய, அவன் தந்தியை வாங்கிப் படித்தான். கண்ணப்பனின் முகத்தைப் பார்த்தான். முகம் முழுக்க அழுகையாய் நின்ற அவனைப் பார்த்துச் சிறிது தயங்கிப் பின்னர் வேறு வழி இல்லாமல், “தம்பி! உங்கம்மாவுக்கு ரொம்ப சீரியஸா இருக்குதாம். உடனே வரச் சொல்லி யிருக்காங்க. ரங்கன்னு போட்டிருக்கு. செங்கல்பட்லேர்ந்து வந்திருக்குது தந்தி!” என்று கூறிவிட்டு அவன் தந்தியை இவன் கையில் கொடுத்தான். கண்ணப்பனின் கண்கள் கலங்கின.

       “வர்றனுங்க. ரொம்ப தேங்க்ஸ் …” என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட்டுக் குடிசைக்குத் திரும்பி வந்தான். அன்று அவனால் உடனே செங்கல்பட்டுக்குக் கிளம்ப முடியாது. அன்று ஞாயிற்றுக்கிழமைதான் என்றாலும், அவன் தான் வேலை செய்து வரும் அலுவலகத்துக்குப் போயே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது. டில்லியிலிருந்து சில மேலதிகாரிகள் அன்று சென்னைக்கு வருகிறார்கள். ஏதோ மகாநாடு நடத்தப் போகிறார்களாம். உள்ளூர் அதிகாரிகள் அனைவரும் காலை எட்டுமணிக்கெல்லாம் அலுவலகத்தைச் சேர்ந்த “கான்ஃபெரன்ஸ் ஹாலில்” குழுமுவார்கள். டில்லி அதிகாரிகளும் இவர்களும் சேர்ந்து ஏதோ கூட்டம் போடப் போகிறார்களாம். கூட்டம் பிற்பகல் சாப்பாட்டுடன் முடியும் என்று சொன்னார்கள். முந்திய நாள் இரண்டாம் சனிக்கிழமை. அந்தக் கூடத்தில் தூசுதும்புகள் விழுந்திருக்கக் கூடுமாதலால் அவற்றைப் பெருக்கித் தள்ளிச் சுத்தம் செய்து துப்புரவாக வைக்க அவன் அதிகாலையில் அலுவலகத்துக்குப் போக வேண்டும் என்பது அவனுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்த உத்தரவு. இதை மீறுவது இயலாத காரியம். அது அவனது வேலைக்கே தீம்பாக முடியலாம். எனவே அவன் அலுவலகத்துக்குப் போய்ப் பெருக்கித் தள்ளிச் சுத்தம் செய்துவிட்டு அதிகாரிகளிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப முடிவு செய்தான். அலுவலகத்துச் சாவி அவனிடம் தரப்பட்டிருந்தது. வேறு எவரிடமேனும் அந்த வேலையை ஒப்படைத்துவிட்டுப் போகலாம் என்றால் அதற்கு அவனுக்குத் துணிச்சல் இல்லை. அது தப்பு என்று தோன்றியது மட்டுமே அதற்குக் காரணமன்று, சக ஊழியர்களில் யாருடைய வீடும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. தவிர, அப்படியே தெரிந்திருந்து, அவசர அவசியம் கருதி அவன் அப்படிச் செய்தாலும், கட்டடப் பொறுப்பாளர் கனகசபை அதை ஒப்புக்கொள்ள மாட்டான். இவன் எது செய்தாலும் குற்றம் காண்பதே அவன் தொழில். தன் மச்சானுக்குக் கிடைக்க வேண்டிய வேலையை இவன் பறித்துவிட்டதாக அவனுக்குக் காழ்ப்பு. அதற்குக் கண்ணப்பன் எந்த வகையிலும் பொறுப்பில்லைதான்.  ஆனாலும் என்ன? பொறாமை வந்தால் கண்ணவிந்து போகிறதே என்று இவன் நினைத்துக் கொண்டான்.

      எனவே, போய்த்தானாக வேண்டும்.  விடிகிற வரையில் அம்மாவை நினைத்துக் கண் கலங்கியபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்துவிட்டு அவன் காலை ஆறரை மணிக்கு எழுந்து, குளித்து, எதிர்க்கடையில் நாலு இட்டிலியும் காப்பியும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பத் தயாரானான். திருவான்மியூரிலிருந்து அவன் இப்போது அண்ணாசாலைக்குப் போக வேண்டும். அவன் பேருந்து நிறுத்தத்தை அடைந்து நின்றான்.

…….

      … ரங்கசாமி நடுக்குகிற குளிரில் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். டில்லியிலிருந்து பம்பாய்க்கு வந்த வேலை முடிந்துவிட்டது. இனி மறு விமானத்தில் சென்னை செல்லவேண்டும். பம்பாயில் தம் பெண்ணுக்கு ஒரு பையன் இருப்பதாக அவர் அக்கா எழுதியிருந்தாள். இதற்கென்று பம்பாய்க்குப் புறப்பட்டு வருவதில் இருக்கக் கூடிய செலவை உத்தேசித்து அவர் அலுவலக விஷயமாகச் சென்னை அல்லது பம்பாய்க்குப் போக ஒரு வாய்ப்பை உண்டுபண்ணத் திட்டமிட்டார். சென்னையிலும் ஒரு வரன் இருந்தது பற்றி அங்கிருந்த அவருடைய அடுத்த சகோதரி எழுதி யிருந்தாள். எதையுமே நேரில் பார்த்து முடிவு செய்தால்தான் அவருக்குத் திருப்தி. பம்பாய் வழியாகச் சென்னைக்குப் போக முடிந்தால் இன்னும் நல்லது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். அவர் தம் அதிகாரி சுந்தர்லாலிடம் போய்த் தலையைச் சொறிந்தார். அவர் சிரித்து அனுமதித்தார்.  காரணம், அவரும் இப்படி ராமேஸ்வரம், கன்னியாகுமாரி என்று க்ஷேத்திராடனம் செய்வதற்கென்றே தென்னிந்தியப் பயணத் திட்டத்தை அலுவலகச் செலவில் செய்தது அவருக்குத் தெரிந்திருந்தது. பார்க்கப் போனால், அந்த யோசனையைச் சுந்தர்லாலுக்குச் சொல்லிக் கொடுத்தவரே ரங்கசாமி தானே! எனவே அலுவலகச் செலவில் பம்பாயில் ஒரு நாள் தங்கிய பிறகு சென்னைக்குப் போக முடிவாயிற்று. விமானப் பயணம். பம்பாய்ப் பையன் திருப்தியளித்தான். சென்னைப் பையன் இன்னும் அதிகத் திருப்தி அளிப்பவனா என்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ள விரும்பினார். இரண்டில் எது நல்லதோ அதை முடிக்க அவாவினார்.

      டில்லியிலிருந்து புறப்பட்டுச் சென்னைக்குப் போகும் அவருடைய இலாகாவைச் சேர்ந்த மற்றோர் அதிகாரி ராயப்பனுக்கும் அதே மாதிரி சென்னையில் ஒரு சொந்த வேலை இருந்தது. அதற்கும் இதற்கும் உதவி செய்யும் வகையில் சுந்தர்லால் இருவருடனும் ஒத்துழைத்துச் சென்னைப் பயணத்தை அரசாங்கச் செலவில் செய்துவைக்க முன்வந்தார். அவரும் இவரும் சேர்ந்துதான் கிளம்பினார்கள். ஆனால் அவர் முன்னதாகச் சென்னைக்குப் போய்விட்டார். இவர் போய் இனி அவருடன் சேர்ந்து கொள்ளுவார். இந்த இரண்டு அதிகாரிகளும் சென்னை அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகளைச் சந்தித்து உரையாடுவார்கள்.  இந்த உரையாடலுக்குத் தலை போகிற அவசரமோ, அவசியமோ இல்லைதான். கடிதப் போகுவரத்தின் வாயிலாகவே தீர்வு காணக்கூடிய படு சாதாரணப் பிரச்சினைதான் அது. இருப்பினும், சென்னை வந்து போக அது ஒரு சாக்காக ஆயிற்று.

…….

      … ஏழு மணிக்குப் பாலகுநாதன் கிளம்பத் தயாராகிவிட்டார். “ஞாயித்துக் கிழமை யன்னிக்குக் கூட  ஆபீசுக்குப் போகணு மாக்கும்? இதோ இங்க இருக்கிற    காஞ்சிபுரத்துக்குக் கூட்டிண்டு போங்கோ, கூட்டிண்டு போங்கோன்னு ஒவ்வொரு ரெண்டாஞ் சனிக்கிழமை வரச்சேயெல்லாமும் கேக்கறேன். ஒவ்வொரு தரமும் உங்களுக்கு ஒரு சாக்கு ஆப்டுட்றது. இந்த வாரம் கான்ஃபரன்ஸ் சாக்கு.  … அடுத்த ரெண்டாவது சனிக்கிழமை-ஞாயித்துக் கிழமைக்கு என்ன சாக்கு வச்சிருக்கேளோ?” – அவர் மனைவி கற்பகம் சமையலறையில் இருந்தபடியே இரைந்து கத்தியது அவர் காதில் விழவே செய்தது. ஆயினும், வழக்கம் போல் அவர் அவளது புலம்பலைக் காது கொடுத்துக் கேட்கவில்லை.  ‘இவளுக்கு இதே வேலை. எதுக்காவது என்னைக் குத்தம் சொல்லிண்டே இருக்கணும்’ என்று அவரும்  மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.

       “இந்த சனி-ஞாயர்  கூட்டிண்டு போவேள்னு நம்பி நான் பொறப்பட்டு வறேன்னு முந்தா நாள் ஃபோன்ல கூப்பிட்டுச் சொல்லிட்டேன். வரலைங்கிறதை இப்ப கூப்பிட்டு நீங்களே கொஞ்சம் சொல்லிடுங்களேன் …” என்று கூறியவாறு கற்பகம் எட்டிப் பார்த்தாள்.  கோட்டுப் பொத்தான்களைப் போட்டுக் கொண்டிருந்த அவர் திரும்பிப் பார்த்துவிட்டு, “ஏன்? வறேன்னு நீதானே உங்கம்மாக்கு ஃபோன்ல சொன்னே? இப்ப வரலைங்கிறதையும் நீயே சொல்லிடேன். அதுக்கு நானா?” என்றார்.

       “எனக்கு எஸ்.டி.டி. நம்பரெல்லாம் தெரியாது. எப்பவுமே நான் பண்றதில்லே. கௌரியைத்தான் கூப்பிட்டுக் கனெக்‌ஷன் குடுக்கச் சொல்லுவேன். .. ஆத்துல ஆஃபீஸ்ல குடுத்த ஃபோன் இருக்கு, பண்ணச் சொல்றேன். இல்லேன்னா முடியுமா?  ஆத்துல ஃபோன் இருக்குறது எத்தன காரியங்களுக்கு சௌகரியமா இருக்கு! டில்லி, பம்பாய், கல்கத்தான்னு அங்கே இருக்குற ஒறவுக்காராளோட எல்லாம் பேச முடியறது. அது ஒரு சௌகரியம்தான்  வேற என்ன சௌகரியத்தைக் கண்டேன்?”

       “வேற என்ன சௌகரியம்டீ வேணும்? டில்லி, பம்பாய், கல்கத்தான்னு காசு செலவழிச்சுப் போயிண்டிருக்க முடியுமா? … சரி, சரி… இந்தா பிடி. பேசு,” என்ற பாலகுருநாதன் தொலைப்பேசி இலக்கத்தைச் சுழற்றிக் கொடுத்தார்.

      தனது ஆத்திரத்தை ஓரளவு மறந்த கற்பகம், “யாரு? அம்மாவா? நான் மெட்றாஸ்லேர்ந்து கப்பு பேசறேன்.  நேத்து வர முடியல்லே. நேத்து லைன் கிடைக்கல்லே. அதனால பேச முடியல்லே. அடுத்த மாசம் பாக்கலாம். அப்பா சௌக்கியமா? நீ எப்படி இருக்கே? நீதான் வரப்படாதா? …” என்று பேசத் தொடங்கினாள்.

      பாலகுருநாதன் சைகையாலேயே அவளிடம் விடை பெற்றுக்கொண்டு படி இறங்கினார்.

…….

       “எளுந்திரிங்க, எளுந்திரிங்க. மணி நாலரையாச்சு. எளுப்பச் சொன்னீங்களே? …” – மீனாட்சி தன் கணவரைப் பல முறை உலுக்கியதற்குப் பிறகுதான் அவர் நீண்ட கொட்டாவியுடன் எழுந்தார்.

       “வெந்நீர் போட்டாச்சா?”

       “எல்லாம் போட்டு ரெடியா வச்சிருக்குறேன். குளிச்சுருங்க. கார் வர்ற நேரம் ஆயிறுச்சு. என்னய எங்கண்ணன் வீட்ல்  விட்டுட்டு நீங்க ஏரோட்ரோமுக்குப் போக அப்பதான் நேரம் சரியாய் இருக்கும்.”

       அய்யாதுரை எழுந்தார். “என்னமோ சொந்தக் காரு வச்சிருக்குற மாதிரி இல்ல பேசறே?”

       “சொந்தக் காராய் இருந்தா என்ன, ஆபீசுக் காராய் இருந்தா என்ன? பம்பாய்லேர்ந்து வர்ற அதிகாரியை ஏரோட்ரோமுக்குப் போய் அளச்சுக்கிட்டு வர்ற வேலையை உங்களுக்குக் குடுத்திருக்குறாங்க. அந்தச் சாக்குல நான் ஆவடிக்குப் போகப் போறேன்,  உங்க ஆபீஸ் கார்ல! இப்போதைக்கு அது சொந்தக் கார்  மாதிரிதானே?”

       “அது சரி,” என்று சொல்லிவிட்டு அவர் குளிக்கப் போனார்.

      அவர் குளித்துவிட்டுக் காப்பி சாப்பிட்டுப் புறப்படத் தயாரான பிறகு சிறிது நேரத்தில் அவரை விமான தளத்துக்கு அழைத்துச் செல்ல அவரது அலுவலகக் கார் வந்தது.

       “ராமு! அம்மாவும் கூட வருது. முதல்ல ஆவடிக்குப் போ. இவங்களை ஆவடியில இருக்குற இவங்கம்மா வூட்ல விட்டுட்டு நாம மீனம்பாக்கத்துக்குப் போறோம் ..”

       “சரி, சார்.”

       கார் வழுக்கிக்கொண்டு ஓடத் தொடங்கிற்று.

       “ஏங்க? நாம எப்ப சொந்தக் காரு வாங்குறது?” என்று மெதுவாக அவர் காதருகே கிசுகிசுத்தாள் மீனாட்சி.

       “காசைச் சேத்து வச்சுக்கிட்டு ரிடைரனாவுட்டுத்தாண்டி காரு வாங்கணும். இப்பதான் ஆபீஸ் காரு கிடைக்குதே – சினிமாக் கொட்டகையிலேர்ந்து சிந்தாமணி வரைக்கும் போய் வர்றதுக்கு? … பயித்தியக்காரி … பெட்றோல் வெலை தெரியுமாடி உனக்கு?” என்று அவரும் திருப்பிக் கிசுகிசுத்தார்.

…….

      அலுவலகத்தில் ஏதோ முக்கியமான “கான்ஃபரன்ஸ்” என்று சொல்லிவிட்டுக் கணவர் ஞாயிற்றுக் கிழமையன்று கூட வெளியே புறப்பட்டதைப் பார்த்துச் சரஸ்வதிக்கு எரிச்சலான எரிச்சல் வந்தது. அதை மூஞ்சியிலேயே அதைச் சின்னதாக்கிக் கொண்டு – புன்னகையற்றதாய் வைத்துக்கொண்டு – வெளிப்படுத்திக் கொண்டாள். சபாபதிக்கு அவளது எரிச்சல் தெரிந்தும், தெரிந்ததாய்க் காட்டிக் கொள்ளாமல் கிளம்ப முற்பட்டார்.

       “ஏம்ப்பா? வெள்ளைப் பேப்பரு வேணுமின்னு மூணு நாளாக் கேட்டுக்கிட்டே இருக்குறனில்ல? நேத்து நான் எக்ஸ்கர்ஷன் போய்ட்டேன். அதான் நேத்தே ஞாபகப்படுத்தல்ல. காசு குடுக்கிறீங்களாப்பா? கடைக்கிப் போய் வாங்கிக்கிறேன் …” என்று பையன் காசுக்கு வழி மறித்தான்.

       “ஷார்ஹேண்ட் நோட்புக்ஸ் கூடக் கேட்டியில்ல?”

       “ஆமாம்ப்பா! …”

       சபாபதி திரும்பி உள்ளே வந்து தமது மர பீரோவைத் திறந்து பிரிக்கப்படாத வெள்ளைத் தாள் கட்டு ஒன்றையும், பன்னிரண்டு சுருக்கெழுத்து நோட்டுப் புத்தகங்களையும் எடுத்தார். அவனிடம் கொடுத்து, “டேலே! வெளி ரேப்பரை எடுத்துக் கிளிச்சுப் போட்று. மறக்காம, ஷார்தேண்ட் நோட்டுங்க அட்டைங்களையும் எடுத்துக் கிளிச்சுப் போட்று. வேற ப்ரௌன்  பேப்பர் போட்டுத் தச்சுக்குறலாம். ..” என்றார்.  அவை அவரது அலுவலக முத்திரையோடு இருந்ததால் அந்த யோசனை – அல்லது எச்சரிக்கை – அவரது வாயிலிருந்து புறப்பட்டது. அதன் பின்னர் அவர் புறப்பட்டுப் போனார்.

…….

      கனகசபை அன்றைய அலுவலகக் கூட்டத்தை உத்தேசித்து அதிகாலையிலேயே எழுந்து விட்டான்.  “கான்ஃபரன்ஸ் ஹால்” எட்டு மணிக்கெல்லாம் துப்புரவாகிவிட வேண்டும் என்று கண்ணப்பனிடம் தெரிவித்துச் சாவியையும் அவனிடம் கொடுத்துவிட்ட போதிலும், தானும் போய் எல்லாவற்றையும் சரி பார்க்க அவன் விரும்பினான். அவர்களுக்குப் பிற்பகல் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ண வேண்டிய வேலை அவனிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருந்தது. எனவே அவன் ஏழரை மணி வாக்கில் கிளம்பினான்.  அலுவலகம் பக்கத்தில்தான் இருந்தது. எனவே, நடந்தே பத்தே நிமிடங்களில் சென்றுவிடலாம்.

      அவன் மனைவி அன்னம்மா, “என்னங்க? அப்ப, சாப்பாட்டுக்கு வருவீங்கல்ல?” என்று கேட்டாள்.

       “ரெண்டு மணிக்கு மேலதான் வர முடியும். ஆபீசைப் பூட்டிக்கிட்டு நான் வரணும். … நீ ஒண்ணு செய்யி. நம்ம சொக்கனை ஒண்ணரை மணி வாக்குல அங்கிட்டு அனுப்பிரு. ஒரு சோலி இருக்குது…”

       “என்ன சோலி?”

       “கொஞ்சம் கட்டைங்க குடுத்தனுப்புறேன். பளைய பேப்பருங்க ஒரு சாக்குல போட்டு வச்சிருக்குறேன். அதையும் எடுத்திட்டு வந்துரலாம். … அப்புறம் பளைய கஸ்கஸ் தட்டிங்க கூட ஆபீஸ்ல நெறையக் கெடக்குது. ஒரு நாலஞ்சு அனுப்பி வைக்கிறேன். மறக்காதே. என்ன?” என்று கேட்டுவிட்டு அவன் நகர்ந்தான்.

…….

      கனகசபை அலுவலகத்தை அடைந்த போது உள்ளே தாளிடப் பட்டிருந்தது. அவன் கூப்பிடு மணியை அழுத்தியதும் மாடியில் பெருக்கிக் கொண்டிருந்த கண்ணப்பன், “இத வாரனுங்க,” என்று குரல் கொடுத்து விட்டு இரண்டிரண்டு படிகளாக இறங்கி வந்தான்.

      ”என்னடா? எப்ப வந்தே?” என்று அதிகாரமாய்க் கேட்டவாறே கனகசபை அவன் தாளை நீக்கியதும் உள்ளே நுழைந்து கொண்டே வினவினான்.

        “வந்து பதினஞ்சு நிமிசமாகுதுங்க. மேசையெல்லாம் தூசு தட்டினனுங்க. பக்கத்து பில்டிங்குல இடிக்கிறதால நம்ம பில்டிங் முழுக்கத் தூசுங்க. ரூமை இனிமேலதான் பெருக்கணும் …”

      கனகசபை படிகளில் ஏறத் தொடங்கினான். கண்ணப்பனும் அவனுடன் ஏறினான்.  “கான்ஃபரன்ஸ் ஹாலை” இருவரும் அடைந்தனர். கனகசபை மேற்பார்வை பார்க்கிற தோரணையுடன் இடுப்பில் இரு கைகளையும் பதித்துக்கொண்டு நாற்புறங்களிலும் கண்களைச் சுழற்றினான்.

       பிறகு, “நல்லாத் துடை. துடைச்சது பத்தல. துடைச்சுட்டுப் பெருக்கித் தள்ளு. ஒரு தும்பு இருக்கப்படாது. தெரிஞ்சிச்சா? நீ பெருக்கிட்டிரு. நான் இத வந்துர்றேன். அவங்க இன்னும் அஞ்சு பத்து நிமிசத்துல வந்துருவாங்க. வந்ததும் நேர மேல இருக்குற க்வார்டர்சுக்குப் போயிறுவாங்க. டிபன் சாப்பிட்டுப்போட்டு ஒம்பதரைக்கு மேல்பட்டுத்தான் மீட்டிங் ஆரம்பிப்பாங்க. நான் கேட்டண்டையே நிக்கிறேன். அவங்க வந்ததும் கூட்டிக்கிட்டு மேல வர்றேன். நீ இங்ஙனவே இரு …” என்று படபடவென்று பொரிந்துவிட்டு, கனகசபை மடமடவென்று இறங்கிப் போனான்.

      கண்னப்பன் பெருக்கலானான். பெரிய ஹால் அது. ஐந்து நிமிடங்கள் கழித்து, ஹாலுக்கு எதிரே இருந்த அறையில் மேசை மீதிருந்த தொலைப்பேசியைப் பார்த்ததும் திடீரென்று அவனுக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது. விளக்குமாற்றைக் கீழே போட்டுவிட்டு, அவன் அந்த அறைக்குப் போனான். அந்த அறை அய்யாத்துரை என்கிற ஆபீசரின் அறை என்பது அவனுக்குத் தெரியும். அவன் அந்த அறைக்குள் நுழைந்தான். தொலைப்பேசிகளைப் பூட்டிவிட்டுதான் அலுவலகத்தை விட்டுப் போக வேண்டும் என்பது விதி. அவர் மறந்து போயிருந்தது அவனுக்கு நல்லதாய்ப் போயிற்று.

      அவன் அவசரமாகத் தன் சிறு பர்சை எடுத்துப் பிரித்து அதனுள்ளிருந்து கசங்கிய காகிதம் ஒன்றை எடுத்தான். அதில் செங்கல்பட்டு எஸ்டீடீ இலக்கமும் தொலைப்பேசி இலக்கமும் எழுதப்படிருந்தன. ‘அம்மாவுக்கு எப்படி இருக்கிறது’ என்று கேட்கவும், ‘ஒன்பதரை வண்டியில் புறப்பட்டு வருவதாகச் சொல்லவும் அவன் செங்கல்பட்டில் தன் அண்ணனின் வீட்டுக்கு எதிரே இருந்த  ஓட்டலுக்கு ஃபோன் செய்து அண்ணனைக் கூப்பிட நினைத்தான். அண்ணன் ஏற்கெனவே ஏதாவது அவசரமாக இருந்தால் அப்படிச் செய்யுமாறு யோசனை சொல்லியிருந்தது அந்த நேரத்தில் நினைவுக்கு வர,  அவன் ஆவலுடன் தொலைப்பேசியை நெருங்கி இலக்கங்களைச் சுழற்றினான்.  யாரோ பேசிக் கொண்டிருந்ததால் இணைப்புக் கிடைக்கவில்லை. இதனால் திரும்பத் திரும்பச் சுற்ற வேண்டி வந்தது.

      சில நிமிடங்களுக்குப் பிறகு, தொலைப்பேசி மணி அடித்தது தெரிந்தது. அவன் ஒலிவாங்கியை ஆவலுடன் பிடித்துக் கொண்டிருந்தான்.

       “சாந்தி ஓட்டல்…”

       “செங்கல்பட்டுதானுங்களே?” என்று கேட்டு அவன் நிச்சயப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் அறையில் அப்பாத்துரையும் கனகசபையும் நுழைந்ததை அவன் கவனிக்கவில்லை.

       மறு முனையிலிருந்து, “ஆமாம்,” என்று பதில் வந்ததும், “நான் மெட்றா

ஸ்லேர்ந்து பேசறங்க …” என்று அவன் தொடங்கினான். தொடங்கியதை அவன் பேசி முடிப்பதற்குள், “எஸ்டீடீ போட்டா பேசறே? என்ன தைரியம்! அதுவும் ஆபீசரோட ரூமுக்குள்ளாற  நொழஞ்சு?” என்ற அய்யாத்துரையின்  அதட்டலும், “ஏண்டா, ராஸ்கல்! என்ன தைரியம் உனக்கு?” என்ற கனகசபையின் மிரட்டலும் அவனை வெலவெலக்கச் செய்துவிட்டன. அவன் பயந்து போய் ஒலிவாங்கியைத் தொலைப்பேசியின் மீது நழுவ விடாத குறையாகத் திரும்ப வைத்துவிட்டுத் தலை உயர்த்தி அவர்களைப் பார்த்தான்.

      அவர்களுக்குப் பின்னாலேயே டில்லியிலிருந்து வந்திருந்த அலுவலர்களும் நின்றிருந்தனர்.

       “சஸ்பெண்ட் தட் ஃபெல்லோ! … ஹௌ டேர் ஹி ஈஸ்! ஸ்கௌண்ட்ரல்!” என்றார் டில்லி ரங்கசாமி.

       ’சின்னப் பயலா இருக்கான். எம்புட்டு நெஞ்சழுத்தம்! தீஸ் சாப்ஸ் ஷுட் பி டிஸ்மிஸ்ட் ஃபோர்த்வித்!” என்று டில்லி ராயப்பன் எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்தார்.

       “ஸார்! எங்கம்மாவுக்கு ரொம்ப …” என்று கண்ணீருடன் சொல்லத் தொடங்கிய கண்ணப்பனை இடைமறித்த கனகசபை, “எதிர்த்துப் பேசாதடா, மடப்பயலே! … அதிகாரிகளுக்கும் மேலதிகாரிங்கடா அவங்க. வாயை மூடிக்கிட்ரு. இல்லேன்னா சீட்டே கிளிஞ்சிரும் …” என்று உருட்டி விழித்தான்.

       கண்ணப்பனுக்கு நெஞ்சே உலர்ந்து இதயம் படபடத்தது.  நெற்றியில் வேர்வை துளித்தது. கால்கள் துவண்டு, கைவிரல்கள் ஆடின. கோட்டும் சூட்டுமாக நின்ற அவர்களைப் பார்த்து மயக்கமே வரும் போலா\யிற்று.

       “போடா வீட்டுக்கு முதல்ல! ஐயால்லாம் கோவமா இருக்காங்க. நிக்காத. ஓடு…” என்று கனகசபை விரட்டிய விரட்டலில் அவன் தள்ளாடி வெளியே வந்தான்.

       “திருட்டுப் பசங்க, ஸார்னா? ஆள் அசந்தா முளுங்கிறுவாங்க!” என்று கனகசபை சொன்னது காதில் விழுந்தது. கண்ணீரை மறைத்துக்கொள்ள முடியாமல் கண்ணப்பன் பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கலானான்.

…….

Series Navigationதிருக்குறள் காட்டும் மேலாண்மைகூக்குரலுக்காய்…
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *