ஆல்- இன் – வொன் அலமேலு

This entry is part 3 of 15 in the series 13 டிசம்பர் 2020

 

(14.8.1987 குங்குமம் இதழில் வந்தது. “அம்மாவின் சொத்து” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)

      சட்டென்று வந்த விழிப்பில் அலமேலு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து, மெதுவாய் நகர்ந்து சுவர்க் கெடியாரத்தில் நேரம் பார்த்தாள். மணி ஐந்து என்று அது அறிவிக்க, அவள் பதற்றமாய்ப் படுக்கைக்குத் திரும்பி வந்து கணவனைத் தொட்டு அசைத்து எழுப்ப முற்பட்டாள்.

கைகால்களை நீட்டி விறைத்துச் சோம்பல் முறித்துப் பெரிய ஓசையுடன் கொட்டாவி விட்ட பிறகும் உடனே எழாமல், “மணி என்ன, அலமு?” என்று அவன் கேட்டதும், நாலரைக்கே அவன் எழுப்பச் சொல்லி இருக்க, அரை மணி போல் தாமதித்து எழுப்பிய குற்ற உணர்வில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த அலமேலு, “ஸாரின்னா. நாலரைக்கே எழுப்பச் சொன்னேள். அஞ்சாயிடுத்து. தூங்கிப் போயிட்டேன்,” என்றாள் சன்னமாக.

அவன் படக்கென்று எழுந்து உட்கார்ந்து அவளை முறைத்தான்.

“என்னது நீ இப்படிப் பண்ணிட்டே? அலாரம் வெக்கச் சொல்லி யிருந்தேனே? வெக்கலியா?”

“வெச்சேனே. அந்தச் சனியன் இன்னிக்குப் பார்த்துக் காலை வாரி விட்டுடுத்து. அடிக்கவே இல்லே.”

“இல்லே, அடிச்சும் தூங்கிண்டிருந்தியா?” என்று அவன் குற்றம் சாட்டிக் கேள்வி கேட்டபோது, அலமேலுவுக்கு எரிச்சலிலும் சிரிப்பு வரும் போல் ஆயிற்று.

“அடிச்சிருந்தா உங்க காதுலயும் விழுந்திருக்குமே?” – அவள் சொன்ன பதிலில் இரண்டு மூன்று அர்த்தங்கள் தொனிக்க, அவன் இன்னும் அதிகரித்த சீற்றத்துடன் அவளைப் பார்த்தான்.

அவள் அதைக் கவனியாதவள் போல் கண்ணாடிக்கு எதிரில் நின்று தலையைக் கோதிக்கொண்டாள். என்றைக்கேனும் நான்கு, ஐந்து என்று அதிகாலை நேரத்தில் அவன் அவளை எழுப்பச் சொல்லுவதுண்டு. அப்போதெல்லாம் அவளே அலாரம் வைத்துப் படுப்பாள். அலாரம் அடித்தாலும் அவன் எழ மாட்டான். இரண்டு பேருக்கும் பொதுவாகத்தான் தலைமாட்டில் அந்த அலறும் கெடியாரம் இருக்கும். ஆனாலும், அதை நிறுத்துவதும் நிறுத்திவிட்டு அவனை எழுப்புவதும் எப்போதுமே அவள்தான். அலார ஓசை காதில் விழுந்தாலும் அவன் எழுவதில்லை என்பதுதான் உண்மை. இத்தனை மனக்குறையும் அந்த ஒரு கேள்வியில் வெளிப்பட்டது புரிந்து போனதில்தான் அவனது எரிச்சல் அதிகமாயிற்று.

அவள் தலையைக் கோதி முடித்து அந்த அறையை விட்டு வெளியே போனது வரையில் அவன் தன் பார்வையால் அவளைத் துளைத்தபடி இருந்தான். அவளோ அவனைக் கவனித்தது போன்றே தெரியவில்லை. அவன் ஆத்திரமாய்க் கொட்டுக்கால் கொட்டிக்கொண்டு பின்கட்டுக்குப் பல் விளக்கப் போனான்.

அலமேலு அவசரமாய்ப் பல் விளக்கிவிட்டுக் காபி தயாரிக்கச் சமையல்கட்டுக்கு விரைந்தாள்.

 மாதத்தில் இரண்டு தடவைகள் அயலூருக்குப் பயணப்பட வேண்டிய உத்தியோகம் அவனுடையது. காலை வண்டியைப் பிடிக்க வேண்டியிருப்பின் இம்மாதிரி அதிகாலை நேரங்களில் அவன் எழுவதுண்டு. அவளும் உடன் எழுந்து காபி, சிற்றுண்டி தயாரித்துக் கொடுக்கவேண்டும். முதல் நாளே இதற்கென்று அரைத்து வைக்கும் மாவில் இட்லியோ தோசையோ தயார் செய்து பொட்டலங்கட்டிக் கொடுக்க வேண்டும். நாலரைக்கே எழுப்பப் பணித்திருந்த கணவனை ஐந்துக்குத்தான் எழுப்ப முடிந்தது என்கிற குற்ற உணர்ச்சியில் அவளுக்குக் கைகால்கள் ஓடவில்லை. முன்பு ஒரு தரம் இப்படித் தாமதமாய் எழ நேர்ந்த போது, போதுமான நேரம் இருந்தும், அவள் செய்துவைத்த சிற்றுண்டியை மறுதலித்து அவன் சினத்துடன் புறப்பட்டுச் சென்றது ஞாபகத்துக்கு வர,  அவள் நெற்றியில் சூடு ஏறி வேர்க்கலாயிற்று.

காஸ் அடுப்புடன் ஸ்டவ்வையும் ஏற்றிக்கொண்டு அவள் பரபரவென்று வேலை செய்யலுற்றாள். முதல் டிகாக்‌ஷனில் காபியைக் கலக்கி அவள் டபராவில் ஊற்றிய நேரத்தில், அவன் அடுக்களைக்குள் புகுந்து, “என்ன? காப் ஆச்சா?” என்றான்.

 “ஆயிடுத்து,” என்றவாறு அவள் அவன் கையில் காபியைக் கொடுத்ததும் அவன் உண்மையிலேயே வியப்படைந்து போனான். எனினும் வியப்பை வெளியிட்டு அவளைப் பாராட்ட அவனுக்கு மனம் இல்லை. அலாரம் குறித்து அவள் கேட்ட இரட்டை அர்த்தக் கேள்வி அவனை இன்னும் உறுத்திக்கொண்டிருந்ததால்,  முதல் டிகாக்‌ஷன் காபியைப் பருகியதும் தன்னை மீறி முகத்தில் விளைந்துவிடும் பரவசத்தை அவன் கவனமாய் உள்ளடக்கிக் கொண்டான்.

அவள் தலை உயர்த்தி அவனைப் பார்த்து, “காபி நன்னால்லியா?” என்றாள்.

 “சரியாத்தான் இருக்கு.”

 அவள் திரும்பவும் பரபரப்பாகி இட்லிப் பானையை இறக்கினாள்.

 “குளிச்சுட்டு வறேளா?”

 “குளிச்சிண்டிருந்தா வண்டி போயிடும். அப்புறம் ஆஃபீசர் கிட்டப் போய்த் தலையைச் சொறிஞ்சுண்டு நிக்கணும். சட்டுப்புட்னு தட்டில நாலு இட்லியை எடுத்து வை.  நான் ட்ரெஸ் பண்ணிண்டு வந்துடறேன்,” என்று குற்றஞ்சாட்டுகிற முறையில் படபடத்துவிட்டு அவன் தன்னறைக்குப் போனான்.

அவள் தட்டில் நான்கு இட்லிகளை வைத்து மிளகாய்ப் பொடியும் எண்ணெயும் விட்டுக் கலக்கி வைத்து மேஜை மீது வைத்தாள். பத்தே நிமிடங்களில் அவன் திரும்பிவிட்டான். மவுனமாய் இட்லிகளைத் தின்று மேலும் ஒன்று கேட்டுப் போட்டுக்கொண்டான். அவன் கைகழுவி வந்ததும் இட்லிப் பொட்டலத்தை அவள் அவனிடம் நீட்டினாள்.

 “இட்லி நன்னா வெந்திருக்குமோல்லியோ?” என்றான் அவன். மிகுந்த சுருக்கில் தான் பொட்டலம் கூடத் தயாரித்து விட்டதைப் பாராட்டுவதற்குப் பதில் இப்படி வினவிய கணவனை அண்ணாந்து பார்த்த அவள், “இப்ப சாப்பிட்டது வெந்திருந்ததோல்லியோ?” என்றாள்.

“கவனிக்கல்லே. அவசரமாய் முழுங்கினேன்.” – அவன் வேண்டுமென்றே பொய் சொன்னது அவளுக்குப் புரிந்தது. வெந்ததும் வேகாததுமாய்த் தட்டில் விழுகிறவற்றை விழுங்குகிற வாய் இல்லை அவனுடையது.

 “நேத்து முழுக்க ஒத்தைத் தலைவலி. சரியான தூக்கமே இல்லே,” என்று அவள் சொன்னதும், “சம்பந்தா சம்பந்தமில்லாம  இப்ப எதுக்குத் தலைவலி பத்திச் சொல்றே?”  என்று அவன் சற்றே எரிச்சலாய்க் கேட்டான்.

 ‘தலைவலியால் அவஸ்தைப்பட்டுத் தூங்காமல் இருந்தும், உங்களுக்காக எழுந்து இவ்வளவும் செய்திருக்கிறேன்’ என்கிற உட்கிடை அவனுக்குப் புரியவே செய்தது. அவள் சொல்லிக் காட்டியதாக நினைத்ததில் எரிச்சல் இன்னும் மிகுதியாயிற்று.

 “பக்கத்தாத்து மாமிக்கு தினமும் தலைவலி வருதாமே? நேத்து அம்மா சொல்லிண்டிருந்தா. அது மாதிரி வந்தா நீ என்ன பண்ணுவியோ!” என்று கேட்டபடி அவன் தன் தோல் பைக்குள் சிற்றுண்டிப் பொட்டலத்தை வைத்துக் கொண்டான்.

 அலமேலு, சட்டென்று முகத்தில் தோன்றத் தொடங்கிய கடுமையை மறைக்க முயன்று கொண்டே, “பக்கத்தாத்து மாமி என்னாட்டம் ஆஃபீசுக்குப் போய் வேலை செய்யறாளா என்ன? தலைவலி வந்தா ஒரு ஓரமாச் சுருண்டு படுத்துட்றா. சமையல் ஒட்டல்லேர்ந்து வரவழைச்சாறது. தெரியுமோல்லியோ?” என்றாள். ஆத்திரத்தை அடக்கியதில் முகம் சிவந்து உதடுகள் துடித்தன.

 “போகாதயேன். உன்னை யாரு சம்பாதிக்கச் சொல்றா?”

 “சரி. ஊருக்குப் புறப்பட்ற நேரத்துல வாக்குவாதம் வேண்டாம். நீங்க வந்ததுக்கு அப்புறம் இதுக்குப் பதில் சொல்றேன்.”

  அவன் ஆத்திரமாய்த் தோல் பையின் ஜிப்பை இழுத்து மூடிவிட்டு நிமிர்ந்த போது, “என்னடா, கிளம்பிட்டியா?” என்றபடி அவன் அம்மா எதிர்ப்பட்டாள்.

 “ஆமாம்மா.  போயிட்டு வறேன்.”

 “என்னிக்குத் திரும்புவே?’

 “இன்னிக்குப் பதினெட்டாந் தேதியா? இருபத்தொண்ணாம் தேதி காலையில ஏழுக்கெல்லாம் ஆத்துல இருப்பேன். அப்பா எழுந்ததும் சொல்லிடு. நான் வறேன்.”

 தன்னை நோக்கி அவன் விடை பெறாததை அவள் மனத்தில் வாங்கிக்கொண்ட போதிலும், வழக்கம் போல் அவனைப் பின் தொடர்ந்து வாசலுக்குப் போய் வழியனுப்பினாள். அவன் திரும்பிப் பார்க்காமல் விடுவிடுவென்று தெருவில் இறங்கி முதல் பேருந்தைப் பிடிக்கப் போனான்.

 … உள்ளே வந்த மருமகளிடம், “இன்னிக்கு என்ன சமைக்கப் போறே?” என்று கேட்டாள் மாமியார்.

 இப்படித்தான் அவளிடமிருந்து ஒரு கேள்வி கிளம்புமே ஒழிய, சமையல் அயிட்டங்களை அவளேதான் சொல்லுவாள்.

 எனவே, வழக்கம் போல், “என்ன சமைக்கட்டும்?” என்று கேட்டுவிட்டு, அலமேலு தலை உயர்த்தித் தன் மாமியாரைப் பார்த்தாள்.

 “அஞ்சாறு கறிகாய் இருக்கு. எல்லாத்துலேயும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கு. அவியல் பண்ணிடேன்.”

 “இன்னிக்கு சீக்கிரமா நான் ஆஃபீசுக்குப் போகணும்மா. அதனால காலைச் சமையலுக்கு அவியல் வெச்சுண்டா கஷ்டம். சாயந்தரம் பண்றேனே?”

 “ஏற்கெனவே காயெல்லாம் வாடி இருக்கு. சாயந்தரம் இன்னும்னா வாடிப் போகும்?”

 மாமியாருக்குக் காது சரியாய்க் கேளாது. எனவே, ‘நான் வாடி வதங்கறது யார் கண்ணுக்கும் தெரிய மாட்டேங்கறது. காய்கறி வாடிப் போறதாமே?’ என்று அலமேலு வாய்விட்டு முனகிக்கொண்டாள்.

அவள் முனகலைக் காதில் வாங்காத மாமியார், “அவனுக்காகச் சீக்கிரம் எழுந்திருக்கியோல்லியோ? அதனால அவியல் ஒண்ணும் பிரமாதக் கஷ்டம் குடுக்காது,” என்று கருத்துத் தெரிவித்தாள்.

“சீக்கிரம் எழுந்திருக்கேந்தாம்மா. ஆனா நானும் இன்னிக்கு சீக்கிரம் ஆஃபீசுக்குப் போகணும். எங்க ஆஃபீள்ல இன்ஸ்பெக்‌ஷன். அதனால அவியலை சாய்ந்தரம் வந்து பண்றேங்கறேன்.”

 “நான் ஒண்ணு சொன்னா அதைக் கேட்டுடக் கூடாதே உனக்கு?” என்று எரிச்சலாய் முணுமுணுத்து விட்டு அப்பால் சென்ற மாமியாரைப் பார்த்து அவள் மனசுக்குள் வெகுன்டாள்.

 ஒருவேளை தன் பேச்சு மாமியாரின் காதில் சரியாக விழவில்லையோ என்கிற ஐயத்துடன் விடுவிடுவென்று அவளுக்கு அருகில் போய், “நீங்க புரிஞ்சுக்காம பேசறேள்மா. இன்னிக்கு எனக்கு ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்‌ஷன். வழக்கத்தை விட சீக்கிரமாப் போகணும். இன்னிக்குப் பார்த்து லேட்டாப் போனா ஒத்துக்க மாட்டா. மெமோ குடுப்பா,” என்று இரைந்து சொன்னாள்.

 “எதுக்கு இப்படிக் கத்தறே? எனக்கு ஒண்ணும் காது செவிடு இல்லே!” என்று மாமியார் பதிலுக்குக் கத்தியதும் அவளுக்குச் சிரிப்பு வரும் போலாயிற்று. முகத்தில் அதைக் காட்டாமல் அவள் நகரலானாள்.

 “அஞ்சும் பத்தும் போட்டு வாங்கின கறிகாய். பாழாப் போனா மனசு கேக்க மாட்டேங்கறது. மாடா ஒழைச்சு சம்பாதிச்சுண்டு வர்ற பணம் …”

மாடாய் உழைப்பதாய் அவள் சொன்னது தன் மகனைப் பற்றி மட்டுந்தான் என்பது புரிய அலமேலுவுக்கு ஆத்திரம் வந்தது. ‘புரியாமல் பேசுகிறவர்களோடு வாதிடலாம். புரிந்துகொண்டே பேசுகிறவர்களோடு பேச்சே வைத்துக்கொள்ளக் கூடாது’ என்றெண்ணியபடி அவள் அப்பால் சென்றாள்.

 … அவியலைச் செய்யாவிட்டால், அன்று மட்டும் இல்லாமல், மேலும் சில நாள்களுக்கு அதைப் பற்றியே மாமியார் சொல்லிக் கொண்டிருப்பாள் என்பதால் அவள் அவசர அவசரமாய்க் காய்களை அரிந்து வேகவிட்டாள். காய் அரியும் போது விரலும் அறுபட்டது கூடத் தெரியாதவளாய்க் காயின் சிவப்பிலிருந்து அதை அறிந்து பச்சைத் தண்ணீரில் விரல் வைக்க ஓடினாள்.

குழாயைத் திறந்து விரலைக் காட்டிக்கொண்டு அவள் நின்றதைப் பார்த்து, “என் மேல பழி சுமத்தணுமோல்லியோ? அதுக்காக வேணும்னே விரலை வெட்டிண்டிருப்பா!” என்று மாமியார் மாமனாரிடம் கூறியது அவள் காதுகளைத் தெளிவாய் வந்தடைந்தது.

 “மெதுவாப் பேசேண்டி. அவ காதுல விழுந்து வைக்கப் போறது. உனக்குக் காது கேக்கலைன்னா ஊரெல்லாம் காது கேக்காதா என்ன?” என்ற மாமனாரின் பதிலும் அவளுக்குக் கேட்டது. அவள் வெறுப்புடன் சமையலை ஒரு வழியாய் ஒப்பேற்றிவிட்டு வியர்த்துக் கிடந்த முகத்தை மறுபடியும் அலம்பிப் பவுடர் பூசிப் பொட்டிட்டுக்கொண்டு கெடியாரத்தைப் பார்த்த போது அது மணி எட்டரை என்றது.

இதற்குள் எழுந்து பல் விளக்கிக் குளித்து உடை உடுத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்லத் தயாராகி விட்டிருந்த மகன் சாமா, “சாதம் போடறியாம்மா?” என்று தட்டை எடுத்துக்கொண்டு வந்தான்.

 “சாமா! எனக்கு இன்னிக்கு சீக்கிரம் ஆஃபீசுக்குப் போகணுண்டாப்பா. நீயே எடுத்துப் போட்டுண்டு சாப்பிடேன்.”

 “நானே எடுத்துப் போட்டுண்டு சாப்பிட்டா பாட்டி திட்டுவாம்மா. எச்சில் கையோட எல்லாத்தையும் தொட்டுடறேனாம். அம்மா! ப்ளீஸ் நீயே போட்டுடும்மா…”

 பக்கத்தில் இருந்த மாமியார் மனமிரங்கி உதவிக்கு வரக் கூடும் என்கிற நைப்பாசையுடன் சற்றே தாக்காட்டிய அலமேலு அவள் எழுந்து அப்பால் போய்விடவே,  “சரிடா. வா, வா. வந்து உக்காரு. அவன் எங்கே, உன் தம்பிக்காரன்? அவனையும் கூப்பிடு. ரெண்டு பேரும் சேர்ந்து உக்காருங்கோ….” என்றாள்.

 “அவனையும் கூப்பிட்டு உக்கார வை. இதோ, அதுக்குள்ள ட்ரெஸ் மாத்திண்டு அஞ்சே நிமிஷத்துல வந்துடறேன்,,” என்று ஓடினாள்.

… பிள்ளைகள் இருவருக்கும் சாப்பாடு போட்டுவிட்டு அவள் கெடியாரத்தைப் பார்த்த போது மணி ஒன்பது ஆகியது. அவளுள் பதற்றம் விளைந்தது.

  “டேய், சாமா, இன்னிக்கு ஒரு நாளைக்கு சாப்பிட்ட இடத்தை சுத்தம் பண்ணிட்றாப்பா, ப்ளீஸ். சாயந்தரம் வரப்ப ஏதாவது வாங்கிண்டு வறேன்,” என்று ‘லஞ்சம்’ வாக்களித்துவிட்டு வாசலுக்கு வந்து அவசரமாய்க் கால்களைச் செருப்புகளுள் திணித்த போது, அங்கே நின்றிருந்த மாமியார், “சாப்பிடல்லே?” என்று விசாரித்தாள்.

       “இல்லேம்மா. சாப்பிட உக்காந்தா இன்னும் லேட்டாயிடும். இன்னிக்கு வழக்கத்தை விட நாழியாயிடுத்து,” என்று குரலைக் கூடிய வரை சாந்தமாய் வைத்துக்கொண்டு பதில் கூறிவிட்டுப் படி இறங்கி வெகு விரைவாய் நடக்கலானாள்.  விரைவாக நடந்ததில் காலருகே புடைவையின் கரை விட்டுப் போய்ப் பாவாடை ஒரு சாண் உயரத்துக்கு வெளியே தெரிந்தது.  நடக்க, நடக்க, மேலும் மேலும் அது கிழிந்துகொண்டே போயிற்று.  கையில் ஊசி-நூலும் இல்லை. இதனால் அலுவலகம் சென்ற பிறகு அங்கே உட்கார்ந்து தைத்துக்கொள்ளவும் முடியாது.  இன்றைக்குப் பார்த்து உயர் அலுவலர்கள் வரவிருந்தார்கள். காலருகே கிழிந்து போய் வாய் பிளந்த புடைவையுடன் சுற்றிச் சுற்றி வர வேண்டியதிருக்கும் என்பதை நினைத்துப் பார்த்த போது அவளை அவமானம் தின்றது.  வீட்டுக்குத் திரும்பிப் போய்த்தானாக வேண்டும். வேறு வழியே இல்லை.

       திரும்பினாள். சேதியைச் சொன்னதும் அவள் மாமியாரின் முகத்தில் ஒரு புன்னகை படர்ந்தது. அவள் உடை மாற்றிக்கொள்ள அறைக் கதவைச் சாத்திக் கொண்டவுடன், “பகவானுக்கே பொறுக்கலை. சின்னதா ஒரு சமையல் சமைக்கிறதுக்கு அந்த ஆட்டம் ஆடினா. இப்ப இன்னும் லேட்டாயிடுத்தே? என்ன பண்ணப் போறா?” என்று மாமனாரிடம் சொல்லி மகிழ்ந்தது அவள் காதுகளை வந்தடைந்தது.

       “செத்த பேசாம இரேண்டி. அவ காதுல விழுந்து வைக்கப் போறது,” என்ற அவரது எதிரொலியும்  செவிகளில் விழுந்தது.

       வெளியே வந்ததும், “ஒரு பத்து ரூபா குடுங்கோம்மா. இன்னிக்கு ஆட்டோவிலயா, ஆட்டோ கிடைக்கலைன்னா, டாக்சியிலயோதான் போகணும்,” என்று கூறி மாமியாரிடமிருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளைப் பெற்றுக்கொண்டு வெளியேறினாள்.

    அலுவலகத்துக்குள் நுழையும் போது சரியாக மணி பத்து. அவள் தன் பிரிவுக்குள் நுழைந்த போது சொல்லி வைத்தது மாதிரி கெடியாரம் பத்து முறை அடித்து நின்றது. வேர்க்க விறுவிறுக்க இருக்கையில் அமர்ந்து முகம் துடைத்துக்கொண்ட அவளையே எல்லார் கண்களும் கவனித்தன. அவள்தான் கடைசியாக வந்தவள். இதனால் அவளுக்கு வெட்கமும் தடுமாற்றமும் ஏற்பட்டன. எப்படியோ, தாமதம் விளையவில்லை. பத்து மணிக்கு வந்தாகிவிட்டது. அது வரையில் அவளுக்கு நிம்மதிதான்.

       “அம்மா, அலமேலு, அந்த ஸ்டேட்மெண்ட் ஃபைலை முடிச்சு எடுத்தாறேன்னு வீட்டுக்கு எடுத்துட்டுப் போனீங்களே, அதைக் கொண்டாந்தீங்களா?” என்று தலைமை எழுத்தர் வினவியதும், அவளுக்குப் பக்கென்றது.

       உடனே எழுந்து நின்றாள்:  “மறந்தே போய்ட்டேன் – கம்ப்ளீட்டா. … இப்பவே போய் எடுத்துண்டு வறேன், சார்…”

       “வேலையைக் கம்ப்ளீட் பண்ணிட்டீங்கல்ல?” என்று அவர் கிண்டலாய்க் கேட்கவும், சிறுமையில் அவள் முகம் கறுக்க, “முடிச்சுட்டேன், சார். வீட்டுல ஒரு ப்ராப்ளம். எங்க வீட்டுக்காரர் திடீர்னு வெளியூர் போக வேண்டி வந்துடுத்து.  அந்த அமளியில இதை மறந்துட்டேன் …” என்று கிளம்பினாள்.

       “டாக்சியில போங்க, டாக்சியிலயே வாங்க. இன்ஸ்பெக்‌ஷன் பார்ட்டி பத்தரைக்கெல்லாம் வந்துடுவாங்க. வீட்டுக்கு ஃபைல் போனது தெரிஞ்சா கொன்னுடுவாங்க.  எனக்கும் சேர்த்து மெமொ கிடைக்கும் …”

       “டாக்சிக்குக் குடுக்கப் பணம்….”

       “மாசக் கடைசியில யார்ட்ட இருக்கும்? சரி. ஆளுக்கு ரெண்டோ மூணோ குடுங்கப்பா. அப்புறமா அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ஆஃபீஸ் கணக்குல போட்டுக்கலாம்.  ஆனா இப்ப ஆஃபீஸ்லேர்ந்து வாங்க முடியாது…”

      எல்லாரிடமிருந்தும் தலைமை எழுத்தர் பணம் வசூல் பண்ணித்தர, அதைப் பெற்றுக்கொண்டு அவள் டாக்சியில் வீடு நோக்கிப் பறந்தாள்.    

      மாமியாருக்கு மறுபடியும் சிரிப்பாயிற்று. மறதியால் விட்டு வந்த கோப்புடன், கிளம்பிய அரை மணி நேரத்துக்குள்                            அலமேலு தன் பிரிவுக்குத் திரும்பினாள்.

      அந்த அலுவலகத்தில் மொத்தம் பத்துப் பிரிவுகள் இருந்தன.  ஆய்வாளர்கள் முதலில் ஆய எடுத்துக்கொண்டது அவள் பிரிவைத்தான். அதிலும் குறிப்பாக அவள் இருக்கை தொடர்புள்ள அலுவல்களைத்தான். காலி வயிற்றுடன் வந்துவிட்டு ஆய்வுக்குழு சரியாகப் பத்தரை மணிக்கெல்லாம் நுழைந்து விட்டதால் ஒரு வாய்க் காபி குடிக்கக் கூட வழியற்றுப் போன அலமேலு மயக்கமடையாத குறைதான். பசியால் காது அடைத்துக் கிட்டத்தட்ட அரை மாமியாராகிப் போனாள். அவளுக்குக் காது கொஞ்சம் மந்தம் என்கிற அனுமானத்தை ஆய்வாளர்களிடம் ஏற்படுத்தினாள்.

      சரியாக ஒரு மணிக்குத்தான் ஆய்வுக்குழு எழுந்து சென்றது. இதற்குள் பசி முற்றிப் போய் அவளுக்கு வயிற்றில் ஏதேதோ ஓசைகள் கேட்டன. தோழிகளின் வற்புறுத்தலால் காண்டீனுக்குப் போய் எதையோ கொறித்துவிட்டு வந்து உட்கார்ந்தாள். தற்காலிகமாய் நின்றது போன்றிருந்த தலைவலி மறுபடியும் தொடங்கியது. தன் தலைவலி நிற்கவே இல்லையோ என்கிற சந்தேகம் முதன் முதலாக அவளுக்கு ஏற்பட்டது. மனம் வேறு அலுவல்களில் லயித்ததால் தலைவலியை மறந்து போய் விட்டோமோ என்று நினைத்த போது அவளுக்கே சிரிப்பு வந்துவிடும் போல் ஆயிற்று. பயித்தியம் பிடிக்காத குறைதான் என்று தனக்குள் கூறிக்கொண்டாள்.

      முகத்தில் குளிர்ந்த நீரை அடித்துக்கொண்டு மின் விசிறியின் கீழே உட்கார்ந்ததும் கொஞ்சம் தெம்பு வாந்தார்ப்போல் இருந்தது. பிற்பகலிலும் சரியாக இரண்டு மணிக்கு ஆய்வுக்குழு வந்துவிட்டது. இதனால் அவளுக்கு வேலை மென்னியைப் பிடித்தது.

      வழக்கம் போல் ஐந்தரை மணிக்கெல்லாம் பையைத் தூக்கிக்கொண்டு புறப்பட முடியவில்லை.  ஆறரை மணி வரையில் இருக்க நேர்ந்தது. அவள் பிரிவில் எல்லாருமே அது வரையில் இருக்க நேர்ந்தது. கிளம்புவதற்கு முன்னால் தலைமை எழுத்தர் தம் செலவில் எல்லாருக்கும் காபி வாங்கிக் கொடுத்தார். சூடான காபி தொண்டையில் சுகமாக இறங்கி அலமேலுவின் களைப்பைக் கொஞ்சம் போக்கியது.

      அவள் வீட்டுக்குள் நுழைந்த போது மணி ஏழேமுக்கால் ஆகியது. மாமியார் கூடத்தில் படுத்துக் கொண்டிருந்தாள். முக்கலும் முனகலும் அவளுக்கு உடம்பு சரியில்லை என்பதை உணர்த்தின. அவளுக்குப் பின்னாலேயே மூர்த்தி நுழைந்தான். காலடியோசை கேட்டுத் திரும்பிய அவள் கணவனைப் பார்த்து வியப்படைந்தாள்.

       “டூர் போகலையா?”

       “இல்லே, கான்சல் ஆயிடுத்து. காலங்கார்த்தால கிளம்பி இத்தனை நேரமும் ஆஃபீஸ்ல இருந்தது ஒரே போரடிச்சுப் போச்சு. ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி கொண்டு வா, பார்ப்போம்.”

       காலணிகளைக் கூடக் கழற்றாத அவளைப் பார்த்து அவன் விடுத்த கட்டளை அவள் முகத்தைச் சுருக்கியது. அவள் பதிலே சொல்லாமல் உள்ளே போனாள்.

       கூடத்தில் முனகிக் கொண்டிருந்த மாமியாரைப் பார்த்து,  “ஏம்மா? உடம்பு சரியில்லையா?” என்று விசாரித்தாள்.

       “ஆமா. ஜொரம் வர்ற மாதிரி உடம்பு கதகதன்னு இருக்கு. கொஞ்சம் மிளகுக் கஷாயம் வச்சுக் குடு, அலமேலு. வந்ததும் வராததுமா உன்னை சிரமப்படுத்த வேண்டியிருக்கு.”              

       “ஆகட்டும்மா. வச்சுத் தறேன். டிகாக்‌ஷன் ஏதாவது மிச்சம் இருக்காம்மா?”

       “இல்லேடியம்மா.   … அட! மூர்த்தி வந்துட்டானா?”

       “ஆமாம்மா.  டூர் கான்சல் ஆயிடுத்து. அதான்.”

       “காலம்பற நிறைய டிகாக்‌ஷன் போட்டு வச்சுட்டுப் போயிருந்தேனேம்மா?”

       “எல்லாத்தையும் நான் தான் குடிச்சுட்டேன், போயேன். … தேவி வந்திருந்தா – அவ ஆத்துக்காரரோட. ரெண்டு பேருக்கும் கலந்து குடுத்துட்டேன். டிகாக்‌ஷன் வச்சுட்டுப் போனேன்னு ஒரு கேள்வியா?”

       “அய்யோ! அதுக்குக் கேக்கல்லேம்மா. எனக்குக் காலம்பர இருந்த தடுமாற்றத்துல வழக்கமா விட்டு வைக்கிற பாத்திரத்துல விட்டு வைக்காம வேற எதுலயாவது கொட்டி வெச்சிருந்திருப்பேனோ, அதை நீங்க கவனிக்கலையோங்கிறதுக்காகக் கேட்டேம்மா. …”

        ‘காப்பி போட்டாக வேண்டும். மிளகுக் கஷாயம் தயாரித்தாக வேண்டும். மாமியார், அவள் வரத் தாமதமாவதைப் பார்த்து ஒரு சாதமாவது செய்து வைத்திருப்பாளா ..’

      அலமேலு சோர்வுடன் உள்ளே நுழைந்த போது, மூத்த மகன் குடிக்க ஏதாவது தருமாறு கேட்டான். “பாட்டியைக் கேட்டேம்மா. எனக்குத் தள்ளலை. எல்லாம் உங்கம்மா வரட்டும்னுட்டாம்மா…”

       “அவன் எங்கேடா?”

 “மேத்ஸ் க்ளாஸ்க்குப் போயிருக்காம்மா.”

       முகத்தைக் கூடக் கழுவிக்கொள்ள முடியாமல், அலமேலு எல்லாருடைய தேவைகளையும் நிறைவேற்ற முற்பட்டாள்.

       மெல்ல எழுந்து வந்த மாமியார், “மிச்சமிருந்த அவியலை தேவி எடுத்துண்டு போயிட்டா. அதனால ராத்திரிக்குத் தொட்டுக்க ஏதாவது பண்ணியாகணும் … அப்புறம் வேலைக்காரி வேற வரலை. பத்துப் பாத்திரமெல்லாம் பாத்ரூம்ல அலங்கோலமாக் கெடக்கு …” என்று மேலும் இரண்டு கசப்பான செய்திகளை அறிவித்தாள்.

      அலமேலுவுக்குத் தலை மெய்யாகவே சுற்றியது. காலையில் காய் அரியும் போது அறுபட்ட ஆள்காட்டி விரல் இப்போதுதான் அதிக வலியுடன் தெறித்துக் கொண்டிருந்தது. காயம் பட்ட விரலை வைத்துக்கொண்டு பாத்திரங்களை வேறு துலக்கியாக வேண்டுமே என்று நினைத்த போது அவளுக்கு எல்லாமே வெறுத்துப் போனது.

       “கையில என்ன கட்டுப் போட்டுண்டிருக்கே?” என்றபடி  மூர்த்தி காபிக்காக வந்து நின்றான்.

       “காய் அரியும் போது நறுக்கிண்டுட்டேன். வேலைக்காரி வேற இன்னிக்குப் பார்த்து வரலையாம். அத்தனை பத்தும் அப்படியே கிடக்கு. எப்படித்தான் எல்லாத்தையும் தேய்க்கப் போறேனோ!”

       “ஒண்ணு பண்ணு, அலமு. அடி பட்டிருக்குற ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி வெச்சுண்டு மத்த விரல்காளால தேயி, என்ன?” என்று மூர்த்தி அவளுக்கு யோசனை சொன்னவாறு காபியை வாங்கிக்கொண்டு கூடத்துக்கு போனான். அந்த யோசனை அவள் கண்களை நிரப்பியது.

       ‘சமையல் வேணாப் பண்ணத் தெரியாது. பாத்திரங்களைக் கொஞ்சம் தேய்ச்சுக் குடுத்தா குறைஞ்சா போயிடுவா மனுஷா?’ என்று அவளால் நினைக்காதிருக்க முடியவில்லை. நினைத்ததைக் கேட்டுவிடும் துணிச்சல் அவளுக்கு உண்டுதான். ஆனால் ரகளைதான் மிஞ்சும்.

      சற்றுப் பொறுத்துச் சமையலறைக்குத் திரும்பி வந்த மூர்த்தி, காபி தம்ப்ளரை முற்றத்தில் போட்டுவிட்டு, “நான் காத்தாட வெளியில கொஞ்சம் போயிட்டு வறேன். ஒம்பதுக்குள்ள வந்துடுவேன். அதுக்குள்ள சமையல் முடிஞ்சுடுமோல்லியோ?” என்றான். அவள் பதிலுக்கு நில்லாது வெளியேறினான். கண்களில் விளிம்புகட்டி நின்ற கண்ணீர் உருண்டு தெறிக்கலாயிற்று.

      … சொன்னபடியே சரியாக ஒன்பது மணிக்கு மூர்த்தி திரும்பி வந்தான். ஓசைப்படாமல் எதையோ மறைத்து எடுத்துப் போய்த் தன்னறைக்குள் அவன் வைத்ததை அலமேலு கவனித்தாள். அவன் மறைத்தாலும் மல்லிகை தன் வாசனையைப் பரப்பி, நான் தான், நான் தான் என்று அறிவித்தது. அவன் எண்ணம் புரிய அவளுள் ஆத்திரம் பெருகிற்று. அவன் மல்லிகைப் பூ வாங்கி வந்தால் அதற்கு ஒரே ஓர் அர்த்தம்தான். …

       தரையை மோந்ததுமே மயக்கம் போல் தூங்கும் சோர்வில் அவள் இருந்தாள்.

       ஒன்பதேகாலுக்கு அவன் சாப்பிட உட்கார்ந்த போது பக்கத்து வீட்டில் அவளுக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்திருப்பதாய் அவர்கள் வீட்டுப் பெண் வந்து அழைத்தாள். அவள் அம்மாவோ அப்பாவோதான் எப்போதாவது கூப்பிடுவார்கள். அவள் என்ன சேதியோ என்று கவலையுடன் எழுந்து போனாள். 

       பேசியது அவள் அப்பாதான். அவள் தம்பி தமிழ் நாட்டிலேயே முதலாவதாகப் பன்னிரண்டாம் வகுப்பில் தேறிவிட்டானாம். அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்குமே என்பதற்காக இரவு நேரமாயிற்றே என்றும் பார்க்காமல் கூப்பிட்டாராம். பகலில் அந்த வீட்டுத் தொலைப்பேசி கிடைக்கவில்லையாம்.                                    

       திடீரென்று ஏற்பட்ட யோசனையுடன், “அப்பா! எனக்கு ரெஸ்ட் வேணும் போல இருக்கு. நான் இப்பவே கெளம்பி அங்கே வரேம்ப்பா.  அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு நீங்க என்னை வரச்சொன்னதா மாமியார் கிட்ட சொல்லிட்டு வறேன். வந்து எல்லாம் விவரமாச் சொல்றேன். அம்மாவுக்கு நெஞ்சு வலின்னு சொல்லணும். என்ன? அம்மா,  ‘அப்படியெல்லாம் இல்லியே’ன்னு உளறி வைக்கப் போறா. இவரே கொண்டுவந்து விட்டாலும் விடுவார். இல்லாட்டா நானே தனியா வருவேன். எதிர் வீட்டு டாக்சிக்கார ஆளு தெரிஞ்சவர்தானே? ஒண்ணும் பயமில்லே. இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்.“                                                                                                                                                              

       “என்னம்மா, இப்படி யெல்லாம் பொய் சொல்லச் சொல்றே? என்ன ஆச்சு?”

       “அதையெல்லாம் வந்து சொல்றேம்ப்பா. அம்மாவுக்கு ரொம்ப நெஞ்சு வலி. சரியா?” என்று கேட்டுவிட்டு அவள் ஒலிவாங்கியை வைத்தாள்.

       தன் வீட்டுக்குள் புகு முன் எதிர் வீட்டு டாக்சியை ஏற்பாடு செய்துகொண்டாள்.

       முகத்தில் கவலை காட்டி, “ஏன்னா, எங்கம்மாவுக்கு ஒரே நெஞ்சுவலியாம். நான் உடனே போயாகணும், எதிர் வீட்டு டாக்சியை புக் பண்ணிட்டேன். நான் வறேன்… ரெண்டே நாள்ல வந்துடுவேன். … அம்மா! இவருக்கு மோர் சாதத்தை நீங்க பரிமாறிடுங்கோ – தயவு செய்து …” என்று பரபரப்புடன் கூறிய பிறகு, அலமேலு துணிமணிகளை ஒரு பையில் திணித்துக்கொண்டு குழந்தைகளுடன் படி இறங்கினாள்.

       டாக்சியில் ஏறி அமர்ந்து கொண்டதும், ஏதோ பெரிய குகையிலிருந்து தப்பி ஓடுகிற உணர்ச்சியில் அகமும் முகமும் மலர்ந்து தன்னையும் மறந்து பெரிய புன்னகையை உதிர்த்தாள். அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று புறப்பட்ட பெண்ணின் முகத்தில் இவ்வளவு பெரிய புன்னகை ஏன் என்று கார்க் கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்த்து வியந்த பின், உதட்டைப் பிதுக்கிவிட்டு டாக்சி ஓட்டுநர் டாக்சியை ஓட்டத் தொடங்கினார்.

…….

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 22 – பாரிமுனை டு பட்ணபாக்கம்ஒரு கதை ஒரு கருத்து – பாரதியாரின் ஸ்வர்ண குமாரி
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

  1. Avatar
    முருகன் says:

    சே… கதை படித்து முடிந்ததும்… காலையிலிருந்து (அதி) அலமேலுவுடன் ஓடியது போல் ஒரு பிரமை. அதுவும் அந்த மல்லிகை பூ மேட்டர்… மூர்த்தி மேல் கொலை வெறியே வந்து விட்டது.. டாக்சியினுள்ளே அலமேலுவின் சிரிப்பு ஒரு ஆறுதல்…

    ஆமாம் எல்லா அலமேலுக்களாலும் இது முடியுமா?.. மூர்த்திகள் புரிந்து கொள்வார்களாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *