மன்னிப்பு

This entry is part 5 of 9 in the series 20 டிசம்பர் 2020

                        

(11.6.1978 குங்குமம் வார இதழில் வந்தது. “விடியலின் வருகையிலே” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)

      அந்தக் கிழவர் இடிந்து போய்விட்டார். கண்ணீர் மல்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் மறுபடியும் அந்தத் தந்தியைப் படித்தார். தந்தியில் கண்ட செய்தியை நம்ப முயன்றார். முடியவில்லை.  அது தாங்கியிருந்த செய்தி அவர் சிறிதும் எதிர்பாராததாகும். அது மாதிரியான கனவு வந்திருந்தால் கூட அவர் திடுக்கிட்டு விழித்துப் பதறிப் போய் அதற்குப் பின்னர் விடிய விடியத் தூங்காமலே அந்த இரவைக் கழித்திருப்பார். அது மெய்யாகவே நிகழ்ந்துவிட்ட நிலையில் அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி பெரிதும் கனத்து அவரது இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்தது. தம்மைக் காட்டிலும் தம் மகள் மிகுந்த துயரமும் அதிர்ச்சியும் அடைவாள் என்பதை நினைத்துப் பார்த்த போதோ, அதை எப்படி அவளிடம் சொல்லுவது என்கிற கேள்வியால் விளைந்த திகைப்பும் வருத்தமும் அந்தச் செய்தியால் விளைந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் காட்டிலும் மிகுதியாக இருந்தன. அவர் தந்தியைப் பற்றியவாறு வாசலிலேயே நின்றுவிட்டுப் பின்னர் என்னதான் தயக்கமாக இருப்பினும் அது சொல்லியே தீர்க்கப்பட வேண்டிய செய்தி என்பதால் மனசைத் திடப்படுத்திக்கொண்டு தந்தியை மடித்துக் கையுள் மறைப்பாகப் பற்றியவண்ணம் வீட்டுக்குள் வந்தார்.

      கூடம் வரையில் தலையைக் குனிந்துகொண்டே நடந்த அவர் காலடிச் சத்தம் கேட்டுத் தலையை உயர்த்தித் தமக்கு எதிரில் ஏதோ பாட்டை முணுமுணுத்தவாறு வந்துகொண்டிருந்த மகளைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போய்ச் செய்வதறியாது தடுமாறிப் போனார். சிறிது நேரம் பொறுத்துச் செய்தியைச் சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்த அவர், “ … என்ன டெலெக்ராம்?” என்கிற கேள்வி மகளின் வாயிலிருந்து கிளம்பியதும் அப்படியே நின்று போனார். தற்காலிகமாகவேனும் தாம் மறைக்க எண்ணியதை இனி ஒரு கணமும் மறைக்க முடியாது என்கிற உண்மையால் ஏற்பட்ட வேதனையை விட, அவளது கேள்வி நிதானமாக, விபரீதமாக ஏதும் இருக்காது என்கிற நம்பிக்கை கொண்டார்ப்போல் மிகச் சாதாரணமான குரலில் வந்த நிலை அவருள் விளைவித்த வேதனை மிக அதிகமாக இருந்தது.

      மகளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “நீ சாப்பிட்டாச்சாம்மா?” என்று அவர் தம் குரலின் நடுக்கத்தைச் சமாளித்தவாறு வினவினார். தன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவள் சாப்பிட்டாகிவிட்டதா இல்லையா என்பதை அவர் முதலில் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பியது தந்தி ஏதோ விபரீதச் செய்தியைத் தாங்கி வந்துள்ளது என்பதை ஊகிக்கச் செய்வதாக இருந்ததால், அபிராமி தன்  அகன்ற கண்களால் அவரை ஆழ்ந்து நோக்கினாள். 

       “நான் சாப்பிட்டாச்சுப்பா. …அது இருக்கட்டும், என்ன தந்தின்னு கேட்டேனே?” என்று அவள் சிறிது பதற்றம் கொண்டு கேட்டாள். தந்தி விபரீதமானது என்பதை அவள் புரிந்துகொண்டுவிட்டது அவருக்கும் தெரிந்து போனதால், அவர் உடனே பதில் சொல்லாமல் தம் விழிகளைத் தாழ்த்தினார்.  அவர் அடக்க முயன்ற கண்ணீர் அவரது முயற்சியை மீறிக்கொண்டு கண்களை நிறைக்கவே, அதைக் கவனித்துவிட்ட    அபிராமி மிகவும் பதறிப் போய், “என்னப்பா?” என்று கேட்டுக்கொண்டு விரைந்து அவரை நெருங்கினாள். மேல்துண்டால் முகத்தை மூடிக்கொண்ட அவர் தம் கையுள் வைத்திருந்த தந்தியை அவளிடம் கொடுத்துவிட்டுப் பொத்தென்று ஊஞ்சலில் உட்கார்ந்து போனார்.

      தந்தியைப் பிரித்துப் படித்த அபிராமி சில கணங்கள் வரை பேச்சு மூச்சற்றுப் போனாள். அவரைப் போலவே மறுபடியும் மறுபடியும் அதைப் படித்தாள்.  பிறகு, மயக்கமடையாத குறையாக அவளும் பொத்தென்று சரிந்து தரையில் அவருக்கு முன்பாக உட்கார்ந்துகொண்டு அழத் தொடங்கினாள். அவளது அழுகை அவரையும் தொற்றிக்கொண்டது.

      சிறிது நேரம் குமுறிக் குமுறி அழுத அவள், “என்னப்பா இது? நம்பவே முடியல்லியே? அவர் ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணிட்டதாத் தந்தி குடுத்திருக்கார்னுன்னா நினைச்சேன்? நான் நினைச்சுக்கூடப் பார்த்ததில்லியேப்பா? நான் என்ன பண்ணுவேன்?” என்று புலம்பினாள். அவரால் ஆறுதலாகக்கூட ஒன்றும் பேச இயலவில்லை. தொண்டை அடைத்துப் போயிருந்தது. அவளைக் காட்டிலும் அவரே அதிகம் கலங்கிப் போயிருந்தார்ப்போலத் தெரிந்தது.

      சிறிது நேரத்துக்கு அவர்களிடையே மௌனம் நிலவிற்று. அவர் குரலைச் சரிசெய்துகொண்டு அதைக் கலைத்தார். “என்னம்மா செய்யலாம்? இனிமே ஆக வேண்டியதைத்தான் பார்க்கணும். ….உடனே கிளம்பறதுக்கு ஏற்பாடு பண்ணணும்…” என்ற அவர் பயணத்துக்கு ஏற்பாடு செய்வதற்கு எழுந்தார். அபிராமி உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே அழுதுகொண்டிருந்தாள்.  

      … தந்தையும் மகளும் கண் கலங்கியவாறே செய்த அந்தப் பயனத்தின்போது, அபிராமி விபத்தில் செத்துபோன தன் கணவன்  பற்றிய நினைவுகளில் மட்டுமே ஆழ்ந்திருக்க, அவர் மனம் அந்நினைவுகளில் மட்டுமல்லாமல், இன்னுமொரு சங்கடத்தில் ஆழ்ந்து உளைச்சல்பட்டுக் கொண்டிருந்தது. ஓர் ஆணின் மகத்தான சோகம் அவன் பெற்ற மகள் கைம்பெண்ணாவதால் விளையும் சோகம்தன் என்று அவருக்குத் தோன்றியது. அவரை வருத்திய வேறொரு துன்பம் மகளின் அந்நிலைக்குத் தாமே காரணம் என்கிற எண்ணத்தால் ஏற்பட்ட ஒன்றாக இருந்தது அவரது அந்தச் சோகத்தை ஆழப்படுத்தியது. கட்டிய கணவன் போய்விட்ட நிலையில் இனித் தம் மகள் தம்மோடு இருந்தாக வேண்டிய கட்டாயம் விளைந்துவிட்டது அவரை மலைப்பில் ஆழ்த்திற்று. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய நண்பராக இருந்துவரும் நமசிவாயத்தின் புன்னகை தவழும் முகமும், அவருக்குத் தாம் இழைத்துவிட்ட துரோகமும் இப்போது – முன்னெப்போதையும் காட்டிலும் – மிகுதியாக ஞாபகத்துக்கு வந்து அவரை உறுத்தின. உலகத்தில் நடக்கும் எத்தனையோ துரோகங்களில் எந்தத் துரோகத்துக்கு மன்னிப்பு இருந்தாலும் நட்புத் துரோகத்துக்கு மன்னிப்புக் கிடையாது என்று அவருக்குத் தோன்றிற்று. எவ்வகையான எதிர்பார்த்தலும் இன்றி இரண்டு உள்ளங்கள் ஒன்றின்பாலொன்று ஈர்க்கப்பட்டு வலுப்பெறும் நட்பில் துரோகம் செய்வது தகாது என்று இப்போது பட்டது. இரத்த பந்தத்தால் உள்ளங்கள் இணைவது இயல்பானது. கணவன்-மனைவி நட்பு எதிர்பார்த்தலையும் தன்னலத்தையும் ஓர் அவசியத்தையும் அடிப்படையாகக்கொண்டு எழுவது. தாய்-தகப்பன் குழந்தைகள் மேல் கொள்ளும் அன்பும் இயல்பானது. ஆனால், இவ்வகையான பந்தம் அல்லது தேவை ஏதும் இன்றி யாரோ இருவர் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு நட்புறவு கொள்ளுவது மிகப் பெரிய உறவு என்று தோன்றியது. அந்த நட்புக்குத் தாம் செய்த இரண்டகமே தம்மைப் பழி வாங்கிவிட்டதாகவும் அவருக்குப் பட்டது. அவரது மனம் பின்னோக்கி ஓடியது.

      நமசிவாயமும் அவரும் பலவற்றில் ஒன்றுபட்டவர்கள். ஒரே பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்தார்கள். மாற்றப்பட்ட போதும் சற்று முன்பின்னாக ஒரே ஊருக்கு மாற்றப்பட்டதால் அவர்கள் நட்புத் தொடர்ந்தது. கடைசியில் இப்போது இருக்கும் ஊரில் இருவரும் ஓய்வு பெற்றார்கள். ஓய்வு பெற்றதற்குப் பிறகு அவர்களது நட்பு மேலும் வலுவடைந்தது. நிறைய சந்தித்துக்கொள்ள முடிந்தது. பேசிக்கொள்ள முடிந்தது. இருவரும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்த மாதங்களில் ஓய்வு பெற்றார்கள். நமசிவாயத்துக்குப் பெண் குழந்தைகள் இல்லை. இரண்டே பிள்ளைகள். இருவரும் சுமாராகவே படித்தார்கள். இவருக்கு இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் இருந்தார்கள். நமசிவாயத்தின் மனைவி நோய்வாய்ப்பட்டவள். அவளால் அவருக்கு நிறைய செலவு ஏற்பட்டது.  ஓய்வு பெற்றதற்குப் பிறகு இருவருமே வறுமையில் வாடினார்கள். 

      அவர்கள் ஓய்வு பெற்றதன் பின்னர் சில மாதங்கள் கழித்து அவ்வூரில் ஒரு கூட்டுறவுப் பண்டகசாலை நிறுவப்பட்டது. ஓய்வு பெற்றிருந்த இருவரும் அது சம்பந்தப்பட்ட பணியில் ஈடுபட அழைக்கப்பட்டார்கள்.  ஆண்டுக்குச் சுமார் இருநூறு ரூபாய் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு இருந்தமையால், வருமானம் ஏதுமின்றி வாடிக்கொண்டிருந்த இருவரும் மனமுவந்து அந்தப் பதவிகளை ஏற்றுக்கொண்டார்கள். நமசிவாயம் செயலாளராகவும், ராஜாராமன் உதவிச் செயலாளராகவும் உறுப்பினர்களால் ஒருமித்த மனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்தக் கூட்டுறவுப் பண்டகசாலையின் வளர்ச்சியில் இருவரும் மிகுந்த அக்கறை காட்டி அதைப் பேணி வளர்த்தார்கள். ஊர் மக்கள் மதிப்பைப் பெற்றார்கள்.

      அந்தக் கிராமம் மதுரையிலிருந்து சுமார் இருபது மைல் தொலைவில் இருந்தது. கூட்டுறவுப் பண்டகசாலைக்கு வேண்டிய சாமான்களை யெல்லாம் நமசிவாயமும் ராஜாராமனும் சேர்ந்து மதுரைக்குப் போய் லாரி ஒன்றில் அல்லது டெம்போவில் கொண்டுவருவார்கள். அரிசி, பருப்பு போன்றவற்றை மதுரையிலேயே ஓர் ஓட்டலில் கொடுத்துச் சமைத்துப் போடச்சொல்லிச் சாப்பிட்டுப் பார்த்து வாங்கி வருவார்கள். பண்டகசாலையின் வாயிலாகத் தரமான பொருள்களையே மக்களுக்கு வழங்கவேண்டும் என்கிற குறிக்கோள் காரணமாக இருவரும் சிரமம் எடுத்துக்கொண்டு வேலை செய்தார்கள். அதற்குத் தோதாக அந்த ஓட்டலின் முதலாளி நமசிவாயத்தின் நண்பராக இருந்தது மிகவும் ஒத்தாசையாய்ப் போயிற்று. இருவரும் கடுமையாக உழைத்தது ஊர்மக்களின் நன்மதிப்பை அவர்கள் பெறக் காரணமானது. ஆதாயம் எந்த அளவுக்குப் பெருகுகிறதோ அந்த அளவுக்கு அவர்களது ஆண்டு முடிவிலான சதவீத வருவாயும் பெருகும் என்பது அந்த அளவுக்கு அவர்கள் மிகவும் உழைத்ததற்குக் காரணம் என்று சொல்லலாம்.

      இதற்கிடையில் அவர் மகள் அபிராமி அவருக்குப் பெரும் பிரச்சினையானாள். அவளது திருமணம் அவரது ஏழைமையால் தட்டிப்போய்க்கொண்டே இருந்தது. அவளும் அப்படியொன்றும் பெரிய அழகியாக இல்லை. அழகிகளைக்கூட வரதட்சிணை இல்லாமல் யாரும் ஏற்க முன்வருவது கிடையாது என்கிற நிலையில் அவள் சுமாரான தோற்றம் கொண்டிருந்தது அவரது கவலையை அதிகமாக்கிற்று. அவளுக்கு வயசு ஏற ஏற, வரதட்சிணைத் தொகையும் ஏறிக்கொண்டே போயிற்று. தம் மகளுக்குத் திருமணமே ஆகாதோ என்கிற சலிப்பிலும் மலைப்பிலும் ஆழ்ந்த ராஜாராமன் தம் மனைவியின் ஏச்சுகளால் துயரம் அதிகமாகிக் கிட்டத்தட்ட ஒரு நடைப்பிணமானார்.

      ஒரு நாள் அபிராமியைப் பார்க்க வந்த இளைஞன்  நாலாயிரம் கேட்டான். தன் படிப்புக்கும் தகுதிக்கும் அது குறைந்த தொகைதான் என்று வேறு சொல்லிக்கொண்டான். பார்க்க அழகாக இருந்தான். அபிராமி சுமாரானவளாகவே இருந்தும் எதனாலோ அவனுக்கும் அவன் பெற்றோருக்கும் அவளை மிகவும் பிடித்துப் போய், ஜாதகங்களும் நன்றாகப் பொருந்தி விட்டன.  நல்ல மனிதர்களாகத் தெரிந்தார்கள். குடும்பப்பாங்கான பெண்தான் தங்களுக்கு வேண்டும் என்றும் அதனாலேயே பையன் அழகாக இருந்தும் பெண்ணிடம் தாங்கள் அழகைத் தேடவில்லை என்றும் வெளிப்படையாகவே சொன்னார்கள். பையன் தாங்கள் கிழித்த கோட்டைக்கூடத் தாண்டாதவன் என்றும் பெருமை அடித்துக் கொண்டார்கள். நல்லவர்களாகத்  தெரிந்த பெற்றோர்க்கு அடங்கின பிள்ளையும் நல்லவனாகத்தான் இருப்பான் என்று ராஜாராமன் எண்ணினார்.  எனவே எப்படியாவது அந்த இடத்தை முடித்துவிட அவர் அவாவினார்.  அவருக்கும் வயசாகிக்கொண்டிருந்தது. அவர் மனைவியோ தொணதொணத்தாள்.  மகளுக்கும் வயசாகிக்கொண்டிருந்ததால் அவர் பரபரப்புக்கொண்டார்.  அவருக்குச் சொத்து சுகம் இல்லை. கடன் கொடுப்பாரும் இல்லை.  அவருடைய நண்பர்கள் எல்லாரும் அன்னக்காவடிகள்.  எனவே, யாரிடமும் கேட்பதில் பொருளும் இல்லை.  நமசிவாயத்துக்கு அது மாதிரியான தொல்லை இல்லை என்று எண்ணி அவர் தமக்குள் சிரித்துக்கொண்டார். ‘போகட்டும். எந்தக் குடும்பத்திலும் பெண் குழந்தைகளே வேண்டாம். நமசிவாயத்துக்கு ரெண்டும் பிள்ளைங்க. அவனாவது சௌக்கியமாய் இருக்கட்டும்…’ என்று அடிக்கடி எண்ணிக்கொள்ளுவார்.                                                                                                                                                                                                                                                                          

      எவ்வளவோ வாதாடியும் பிள்ளை வீட்டார் வரதட்சிணைத் தொகையைச் சிறிதும் குறைத்துக் கொள்ளுவதாக இல்லை. கடைசியில் ராஜாராமன் ஒத்துக்கொண்டார்.  அவர்கள் போனதும் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார். நல்ல இடத்தை விட மனமில்லாமல் ஒத்துக்கொண்டுவிட்டாலும், பணத்துக்கு என்ன செய்வது என்கிற கேள்வி அவரை அச்சுறுத்தியது. அன்றே நண்பரிடம் தம் கவலையைப் பகிர்ந்துகொண்டார்.  நமசிவாயம் அவரது பிரச்சினையைக் கேட்டுவிட்டுப் பெருமூச்சு விட்டார். அவர் செய்யக்கூடியது அது ஒன்றாகத்தான் இருந்தது.

       “ராஜா! … எங்கிட்ட பணம் இருந்தா உம் மகளுக்கு நானே கல்யாணம் கட்டி வெச்சிறுவேன். நானே தாளம் போட்டுக்கிட்டு இருக்குறேன், அவளுக்கு வேற ஒடம்பு சொகமில்லே. சீக்காளி. சதா படுத்துக்கிட்டுக் கெடக்குறவ. மருத்துக்கும் மாயத்துக்குமே நிறையச் செலவளிஞ்சு போகுது. ஒருவேளை சோறுதாண்டா திங்கிறேன் நான்! …” என்கிற சொற்கள் அந்தப் பெருமூச்சைத் தொடர்ந்து இன்னுமொரு பெருமூச்சில் நின்றன.

       “நீ புண்ணியம் செய்தவண்டா, நமசிவாயம். ரெண்டையும் பிள்ளைகளாகவே பெத்துக்கிட்டே …”

       “அதுக்கென்னடா செய்யறது? ஆனா, அதனால எனக்குப் பிரச்சினையா இல்லே?  ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சினை. அவங்க படிக்க மாட்டேங்குறாங்களே. அதுக்கு என்ன சொல்றே? வாத்தியாரு பிள்ளைங்களுக்குப் படிப்பு வராதுங்கிறது ரொம்ப கரெக்டாயிருச்சே என் விஷயத்துலே! அவங்களுக்கு எதுனாச்சும் கடை, கண்ணி வெச்சுக் குடுக்கலாம்னு பார்த்தா கையிலே தம்பிடி கூட இல்லியே, முதல் போடுறதுக்கு? இதுக்கு என்ன சொல்றே? ,,, அது சரி, பணத்துக்கு என்ன செய்யப்போறே? …”

      “அதாண்டா தெரியல்லே, நமசிவாயம். முழிச்சிண்டிருக்கேன். சம்மதம்னு வேற சொல்லிட்டேன். ஒரு வாரத்துலே லெட்டர் போடறேனு சொல்லியிருக்கேன். ஒரு வாரத்துக்குள்ளே முடிவு சொல்லல்லேனா வேற எடம் பார்த்துக்கறோம்னு சொல்லிட்டாங்க … என்ன செய்யறதுன்னே தோணல்லே. பெண்டாட்டி நகை, நட்டையெல்லாம் வித்துத் தின்னாச்சு. … ஏதாவது புதையல் கிதையல் கிடைச்சாத்தாண்டா உண்டு. …” என்ற ராஜாராமன் பெரிதாகச் சிரித்தார். அவர்கள் பேச்சு அத்துடன் நின்றது. ஆனால், ராஜாரமனுக்குப் புதையல் கிடைத்தது! அவரும் ஜாம் ஜாமென்று அபிராமியின் திருமணத்தை நடத்தி முடித்தார். …

      பக்கத்துத் தெருவில் இருந்த நண்பரிடம் கூடச் சேதியைச் சொல்லாமல் அவர் உடனேயே கிளம்பிவிட்டிருந்தார்.அவரைப் பார்க்கும் தெம்பு தமக்கு இல்லை என்பதே அதற்குக் காரணம் என்பது உள்ளூறத் தெரிந்திருந்தாலும், துக்கச் சேதியின் அவசரத்தால் உடனேயே கிளம்ப நேர்ந்ததால்தான் நண்பரிடம் சொல்லிக் கொள்ளவில்லை என்று தமக்குத் தாமே ஒரு சமாதனத்தைத் தேடிச் சொல்லிக்கொண்டார். ‘இந்த மனசுதான் எந்தத் தப்புக்கும் சமாதானம் சொல்லிவிடுகிறதே’ என்று எண்ணிக் கைப்புடன் சிரித்துக்கொண்டார்.

      அவரது சிந்தனை தொடர்ந்தது …  

      …அன்று அவரும் ராஜாராமனும் வழக்கம் போல் அம்மாதத்துச் சரக்குகள் வாங்கி வருவதற்காக மதுரை நோக்கிப் பயணமானார்கள். கூட்டுறவுப் பண்டகசாலையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கம் அங்கீகரிக்கப்பட்டு அதன் விளைவாக நிறைய சாமான்கள் வாங்கும் பொருட்டு வழக்கத்தை விடவும் அதிகமாகவே அவர்கள் வசம் பணம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல் பணத்துக்குக் கையெழுத்திட்டவர் நமசிவாயம்தான்.  அதை வைத்துக்கொன்டிருந்ததும் அவர்தான். அன்று அவர் வசம் ஆறாயிரம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மூவாயிரம் பழைய பாக்கிக்காகவும் மூவாயிரம் புதுக்கணக்கின் முன்தொகைக்காகவும் அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதிகாலை நாலேமுக்காலுக்குப் புறப்பட்ட பேருந்தில் இருவரும் உட்கார்ந்தார்கள். நமசிவாயம் வழக்கம் போல் பணத்தை ஒரு துணிப்பையில் வைத்து மடித்துக் கையில் இறுகப் பற்றிக் கொண்டிருந்தார். எப்போதுமே அவர் அப்படித்தான் செய்வார்.  சட்டைப்பையிலோ, பணப்பை என்று பார்த்த அளவில் தெரியும் படியான முறையிலோ பணத்தை வைத்துக்கொள்ளமாட்டார். துணிப்பையை இடக்கையில் பற்றியவண்ணம் அவர் சன்னலோரமாக உட்கார்ந்து சன்னல் கம்பியில் தலையைச் சாய்த்துக்கொண்டார். தமக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ராஜாராமனிடம், “ராஜா! நேத்தெல்லாம் அவளுக்காகக் கண் முளிச்சு மருந்து கொடுத்துக்கிட்டே இருந்தேன்.  ராத்திரி சரியாத் தூங்கல்லே. கண்ணை அசத்துது. நான் தலையைக் கொஞ்சம் சாய்க்கறேன்…” என்றார்.  ராஜாராமன் தலையாட்டினார். ராஜாராமன் துணிப்பையை இடக்கையில் பற்றியபடியே தூங்கலானார். அவர்கள் உட்கார்ந்திருந்த இடம் கடைசிப் பின்னிருக்கை. …

      தூக்கத்தில் பிடி தளர்ந்து அந்தத் துணிப்பையின் வாய் சிறிது சிறிதாய் விரிந்துகொண்டு வந்தது.  இதைக் கவனித்த ராஜாராமனின் மனம் திடீரென்று சலனமடைந்தது. சற்றுப் பொறுத்து நூலால் கட்டப்பெற்ற நூறு ரூபாய் நோட்டுக் கற்றைகள் இரண்டு துணிப்பையின் வாய் வழியே தங்கள் முக்கால் உடம்புகளைக் காட்டிக்கொண்டு நழுவியபோது அவர் மனம் குறுகுறுவென்றது. இதயம் இரைந்து துடித்தது.  அவரது கை தானாக அந்தப் பையின் மீது நடுக்கமாகப் பதிந்தது. பதித்த மறு கணம் மற்றொரு கற்றையும் பாதிக்கு மேல் வெளிவந்தது. அவர் மனம் யோசிப்பதற்குள் கைகள் மிகவிரைந்து செயற்பட்டு அந்நோட்டுக்கற்றைகளை உருவி எடுத்துத் தம் கைப்பையில் வைத்துக்கொண்டுவிட்டன. அவர் மனம் அதற்குப் பிறகு மிக விரைந்து வேலை செய்தது. ‘கண்டுபிடிச்சுட்டா, சும்மா வெளையாட்டுக்காக எடுத்து வெச்சுண்டு அழ வெச்சேன்னு சொல்லிச் சமாளிச்சாப் போச்சு. நம்பாமயா இருக்கப் போறான்? கையிலே பணத்தை வெச்சுண்டு இவ்வளவு அஜாக்கிரதையா இருந்தியேடான்னு கோவிச்சுண்டாப் போச்சு …’

      மூன்று கற்றைகள் கைமாறிய பிறகு, நான்காவதும் எட்டிப்பார்த்தது. அதையும் அவர் எடுத்துக்கொண்டார்.

      அந்தத் துணிப்பைக்குள், படிப்பதற்காக நமசிவாயம் எடுத்து வந்திருந்த தடிமனான புத்தகங்கள் வேறு இருந்ததால் நோட்டுகளின் கனம் குறைந்தது உடனேயே வெளித்தெரிய வாய்ப்பில்லை என்று ராஜாராமன் தமக்குள் நினைத்துக்கொண்டார்.

      பெரியகுளம் வந்ததும் பயணிகளின்  ஆரவாரத்தில் நமசிவாயம் விழித்துக்கொண்டார். அதற்காகவே காத்துக்கொண்டிருந்த ராஜாராமன், “ … நமசிவாயம்! என் ஃப்ரண்ட் ஒருத்தன் இந்த ஊர்ல இருக்கான். அபிராமி கல்யாணத்துக்கு ஏதாவது பணம் குடுப்பானான்னு போய்ப் பார்க்கிறேன்.  நீ மதுரைக்குப் போ. நான் வழக்கமான எடத்துலே உன்னை ஜாய்ன் பண்றேன். திடீர்னு ஞாபகம் வந்தது. பெரிய பணக்காரன். உதவி பண்ணினாலும் பண்ணுவான்… என்ன, வரட்டுமா?” என்று மிகுந்த அவசரம் காட்டி, அவரது பதிலுக்குக் கூடக் காத்திருக்குப் பொறுமை இல்லாதவர் போல் காட்டிக்கொண்டு அவசரமாக இறங்கினார்.

       “அப்ப, மத்தியானம் ரெண்டு மணிக்குள்ள வந்துடு. நீ வந்ததுக்கு அப்புறந்தான் பர்ச்சேஸ் …” என்று நமசிவாயம் பதில் சொன்னார். ராஜாராமன் தலையாட்டிவிட்டு ஓட்டமும் நடையுமாக அகன்றார்.

      சற்றுத் தொலைவு நடந்து ஓர் ஒதுக்கமான இடத்தில் நின்றார். ஒளிந்திருந்து கவனித்தார். அந்தப் பேருந்து கிளம்பிப் போனதும் மறைவிடத்திலிருந்து வெளிவந்து உடனே கிளம்பத் தயாராக இருந்த பேருந்தில் ஏறி ஊருக்குப் போய்ப் பணத்தை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்து விட்டு மறு பேருந்தில் மதுரைக்குப் பயணமானார்.

      மதுரையில் வழக்கமான இடத்தில் நமசிவாயத்தை அவர் சந்தித்த போது, நமசிவாயம் இடிந்து காணப்பட்டதைக் கவனித்து,  “என்ன, நமசிவாயம், ஒரு மாதிரி இருக்கே? உடம்பு கிடம்பு சரியில்லையா?” என்று கேட்டு அவரது நெற்றியில் கைவைத்துப் பார்த்தார்.

       “ஒடம்புக்கு ஒண்ணுமில்லே, ராஜா. …. நாம கொண்டுவந்த பணத்துல நாலாயிரம் காணாமெப் போயிருச்சு… “ – இப்படிச் சொன்ன போது நமசிவாயத்தின் கண்கள் தம்மை நேரடியாகப் பார்க்காமல் தாழ்ந்ததை ராஜாராமன் கவனித்தார்.  ‘எம்மேல இவன் சந்தேகப்பட்றான். அப்படித் தான் சந்தேகப்படறதைத் தன் பார்வை எனக்குக் காட்டிக் குடுத்துறக் கூடாதுன்னு பார்வையைத் தாழ்த்திக்கிறான் …’ என்று ராஜாராமன் சரியாகக் கணித்தார். நண்பரின் பண்புமிக்க அந்தச் செய்கையால் அவர் வெட்கப்பட்டுப் போனார். உள்ளூற வேதனையும் பட்டார். ஒரு நடிகனுக்குரிய சாகசத்துடன்,  “என்னது! பணம் காணமா? நாலாயரமா? எப்படி?” என்று ஒரு கூச்சல் போட்டார். ஞாபகமாய்க் கண்களை அகலமாக்கிக் கொண்டார்,

       “அதுதான் தெரியல்லே. பெரியகுளத்தைத் தாண்டினதும் தான் கவனிச்சேன். தூங்கிட்டேனில்லே?” என்று அவர் சொன்னார்.

       “நான் உன் பக்கத்துல இருந்த வரைக்கும் போறதுக்கு சான்ஸ் இல்லே. அதுக்கு அப்புறம் யார் வந்து உக்காந்தா உன் பக்கத்துல?”

       “யாருமே உக்காரல்லே. அந்தக் கடைசி சீட்டு முழுக்கக் காலியாயிருச்சு….” – அவர் அப்படிச் சொன்னதும் ராஜாராமனின் மார்பு அடித்துக்கொண்டது.

      நமசிவாயம் தொடர்ந்தார்: “ராஜா! நான் என்ன நினைக்கிறேன்னா, நோட்டுக்கட்டுங்க ஒண்ணொண்ணா நழுவிக் கீழே விழுந்திருக்கும். நிறைய பேரு வழியிலே இறங்கினாங்களே? அவங்கள்ளே யாராச்சும் எடுத்திருப்பாங்க…”

      நண்பர் தம்மைச் சந்தேகிக்கவில்லை போலும் என்று நினைத்து முதலில் தோன்றிய எண்ணத்தை மாற்றிக்கொண்டார், ராஜாராமன்.

       “இப்ப என்ன செய்யலாம்?” என்று அவர் கேட்டதற்கு, “போலீசுலே கம்ப்ளய்ன்ட் குடுத்திருக்கேன். யார் மேலேயாவது சந்தேகமான்னு கேட்டாங்க. இல்லேன்னேன். அப்புறம் உம்மேலே சந்தேகப்பட்டாங்க. நீ வேற பாதி வழியிலே எறங்கிட்டியா, அதனால நீயா இருக்கலாம்னாங்க. நான், ‘கிடையவே கிடையாது. நாங்க ரெண்டு பேரும் நாப்பது வருஷத்து ஃப்ரண்ட்ஸ். நான் வேணாத் திருடுவேன். அவன் அப்படிப் பண்ணவே மாட்டான். அவரைக் கூப்பிட்டு நீங்க விசாரிக்கிறது கூட எனக்குச் சம்மதமில்லே’ அப்படின்னு சொன்னேன்…” என்று அவர் சிரித்தார்.

      இதனால் ராஜாராமனின் வெட்கம் அதிகமாயிற்று.  “இன்னிக்குப் பார்த்துச் சோதனை போல நான் பாதியிலே எறங்கித் தொலைச்சேனேடா? நீயே கூட சந்தேகப்பட்டாலும் ஆச்சரியமில்லே. அது தப்புமில்லே … நமசிவாயம்! என் மேலே உனக்குச் சந்தேகம் வருதா?” என்று அவர் குரலில் ஒரு தழுதழுப்பை வரவழைத்துக்கொண்டு கேட்டார். சற்றே கலங்கிக் கண்களும் குரலுடன் ஒத்துழைத்தன. நமசிவாயம் பெரிதாகச் சிரித்தார். “என்னடா இது? பைத்தியக்காரா! … அஜாக்கிரதையாய் இருந்தது என் தப்பு. அவ்வளவுதான் …” என்றார்.

      பின்னர், “அது சரி, நீ போன காரியம் என்னாச்சு?” என்று கேட்டார்.

 “இன்னும் நாலு நாள் கழிச்சு வரச் சொல்லியிருக்கான் … அவனைப் பத்தி இதுக்கு முன்னாடி நான் உங்கிட்ட சொல்லியிருக்கேனா? ராதாகிருஷ்ணன் செட்டியார்னு ஒரு பெரிய பணக்காரர். எங்கப்பாவுக்கு அந்தக் காலதுதுலே ரொ.ம்ப வேண்டியவர். … எங்கப்பா கிட்ட படிச்ச விசுவாசம். பணம் தறேன்னார்….” என்று அவன், அவர் இரண்டும் கலக்க அவர் பதில் சொன்னார்.

… அபிராமியின் திருமணம் சில நாள்களில் இனிது நடந்தேறியது.

… காணாமற் போன பணத்துக்காகப் பண்டக சாலை நமசிவாயத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் பணத்தை அவர் இரண்டு ஆண்டுகளுக்குள் சிறுகச் சிறுகத் தவணைகளில் கட்டிவிட வேண்டும் என்று முடிவாயிற்று. நமசிவாயம் இதனால் மேலும் வறுமைக்கும் கவலைக்கும் ஆட்பட்டார். மனைவியின் எஞ்சியிருந்த ஒரு சில நகைகளையும் விற்றார்.  தாலியைக் கூட விற்றார். மகன்களை எடுபிடி வேலைகளுக்கு அனுப்பிப் பணம் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். மொத்தத்தில் நடமாடும் பிணமானார்.

அவர்களுடைய சந்திப்புகள், உரையாடல்கள் வழக்கம் போல் நடந்துகொண்டிருந்தன. ‘நான் இவனைச் சந்தேகிப்பதாக இவன் நினைத்துவிடக்கூடாது’ என்பது போல் நமசிவாயம் வழக்கத்தை விட அதிக நெருக்கமாகவே இவருடன் பழகினார். ‘நான் எடுத்திருந்தால் அல்லவா எனக்கு உன்னோடு பழகுவதில் தயக்கம் வரப்போகிறது?’ என்று காட்டிக்கொள்ளுவதற்காக ராஜாராமனும் அப்படியே செய்தார்.  ஆனால் ராஜாராமன்தான் பணத்தை எடுத்திருக்கவேண்டும் என்று ஊர் முழுவதும் பேச்சு அடிபட்டது. ஒரு முறை, அந்த ஊர்க்காரர் ஒருவர், “ராஜாராமன்! நீர் ரொம்பக் குடுத்து வெச்சவர்ங்காணும். கர்ணனுக்குத் துரியோதனன் கிடைச்ச மாதிரி உமக்கு ஒரு நல்ல ஃப்ரண்டு கிடைச்சிருக்கார். நீர்தான் அந்தப் பணத்தை எடுத்திருக்கணும்னு பலபேர் நமசிவாயம் மனசைக் கலைக்கப் பாத்தாங்க. அதுக்கு அவர் என்ன சொன்னார், தெரியுமா? ‘பணம் காணாமப் போனதுக்கு என் அஜாக்கிரதைதான் காரணம். அப்படியே அவன் மேல சந்தேகம் இருந்தாக்கூட அதை வாய்விட்டுச் சொல்றது தர்மமில்லே. ஏன்னா நான் கண்ணால பார்க்கல்லே. அவன் எடுக்கல்லேன்னு வச்சுக்குங்க. அப்ப அவன் என்னைப்பத்தி என்ன நினைப்பான்? அவன் மனசு என்ன பாடு படும்? எங்களுடைய நாப்பது வருஷத்து ஃப்ரண்ட்ஷிப்பும் போயிடும். மனவருத்தம்தான் மிஞ்சும். அது சிநேகத் துரோகம். தவிர, அவன் நிச்சயமாய் எடுத்திருக்கவே மாட்டான்’ அப்படின்னு சொல்லிட்டாராம்!” என்று அவரிடம் கூறிய அன்று அவர் தம் வீட்டுக்குப் போனதும் தமது அறைக்கதவைச் சாத்தித் தாளிட்டுக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார் …

அதற்குப் பிறகு எத்தனையோ சந்திப்புகளின் போது, ‘நமசிவாயம்! நான்தாண்டா அந்த நாலாயிரத்தையும் எடுத்தவன். என்னைப் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுட்றா…’ என்று அவர் கைகளைப் பற்றி முகத்தை அவற்றாலேயே மறைத்துக்கொண்டோ அல்லது அவரது மடியில் முகம் புதைத்தோ அழ வேண்டும் போல் அவருக்குத் தோன்றிய எழுச்சியை அடக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து கண்கலங்கி யிருக்கிறார்.

‘நான் செய்த இரண்டகச் செயலுக்குக் கடைசியில் தண்டனை கிடைத்துவிட்டது. …’ என்றெண்ணிய அவர் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

மாப்பிள்ளையின் இறுதிச் சடங்குகள் முடிந்து ஊர் திரும்பியதும் முதல் வேலையாக நண்பரிடம் உண்மையைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும் என்கிற தீர்ந்த முடிவுக்கு அவர் வந்தார். பெண்ணின் பேரிழப்பு அவரை அந்த அளவுக்கு மாற்றிவிட்டிருந்தது. இத்தனை நாள்கள் கழித்து உண்மையைச் சோலுவதில் இருக்கக்கூடிய தயக்கம், வெட்கம், அவமானம் ஆகியவை நீங்கிய தெளிந்த மனத்துடன் அவர் பயணத்தைத் தொடர்ந்தார்.

… ஊருக்குத் திரும்பி வருகிற வரையில் ஒவ்வொரு நாளும் அவருக்கு நமசிவாயத்தின் வற்றிய கன்னங்களும், ஒளி உமிழும் பெரிய கண்களும், நரம்புகள் தெரியும் உடம்பும் நினைவில் தோன்றிய வண்ணமாக இருந்தன.

கடைசியில் எல்லாச் சடங்குகளும் முடிந்து அவர் அபிராமியுடன் ஊருக்குத் திரும்பினார். ஊர் மண்ணில் கால் வைத்ததும் இன்னதென்று புரியாத வெறுமையை உணர்ந்தார். அவர் தம் தெருவுக்குள் நுழைந்த போது எதிர்ப்பட்ட நண்பர் ஒருவர், “ராஜாராம்! உம்ம சிநேகிதர் போயிட்டாருங்காணும் …” என்றார்.

ராஜாராமன் அப்படியே நின்றார்: “என்னது! அப்படின்னா?” என்று அர்த்தமில்லாமல் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அர்த்தம் நிறைந்த பதிலுக்குக் காத்து நின்றார்.

 “நமசிவாயம் செத்துப் போயிட்டார். அபிராமியுடைய புருஷன் கார் விபத்திலே செத்துட்டதாகவும் அதனாலே நீர் உடனே மறு வண்டியிலே புறப்பட்டுப் போயிட்டதாகவும் கேள்விப்பட்டதும் அவருக்கு ரொம்ப அதிர்ச்சியாயிடுத்து. செய்தியைக் கேட்ட பதினைஞ்சு நிமிஷத்துலே உயிர் போயிடுத்து …. ரொம்ப ஷாக் ஆயிருக்குன்னு நினைக்கிறேன் …”

ராஜாராமன் நிற்க முடியாமல் தெருவோரத்தில் உட்கார்ந்தார். ‘ஏங்கிட்டப் பணம் இருந்தா உம் மகளுக்கு நானே கல்யாணம் கட்டி வெச்சிருப்பேன்’ என்று அவர் சொன்னது காதுகளில் ஒலித்து, அவர் மனசைக் குத்தியது. தம் மகள் கைம்மை யடைந்ததால் அதிர்ச்சியுறும் அளவுகு அவர் தம் குடும்பத்தினர் மீது பாசம் கொண்டிருந்த உண்மை அவர் மனசை ரணப்படுத்திற்று.  அவர் தம் வயசு, ஆண்மை ஆகியவற்றை மறந்து போனவர் மாதிரி தோள்கள் குலுங்க அழலானார். பக்கத்தில் நின்ற அபிராமியும் கன் கலங்கினாள். சேதியைச் சொன்ன நண்பர் ஆறுதலாக ஏதோ சொல்லிவிட்டு அப்பால் நகர்ந்தார்.

 “பாவம், ராமலட்சுமணர்கள் மாதிரி ரெண்டு பேரும் இணை பிரியாம இருப்பாங்க ….ஃப்ரண்ட்ஷிப்புக்கு உதாரணம் இவங்க ரெண்டு பேரும்தான்…”என்று தம்முடன் இருந்த மற்றொருவரிடம் அவர்களைப் புகழ்ந்தவாறு அவர் போனார்.

 ‘ஃப்ரண்ட்ஷிப்புக்கு உதாரணம் நமசிவாயம் மட்டும்தான். நானில்லே. ஒரு நண்பன் எப்படி இருக்கக் கூடாதுங்கிறதுக்குத்தான் நான் உதாரணம் …’ என்று மனத்துள் உரக்கக் கூவிய அவர் கேவல்கள் மிகுதியாயின.

 ‘டேய், நமசிவாயம்! உங்கிட்ட மன்னிப்புக் கேட்கிற அவமானமும் கூச்சமும் எனக்கு வரக்கூடாதுன்னுட்டே நீ போயிட்டியோடா?’ என்று அவர் மனத்துள் புலம்பியவாறு மகளின் கையைப் பற்றிக்கொண்டு மெல்ல எழுந்து நடக்கலானார் ….…….

…….

Series Navigationசுழன்றும் அவர் பின்னது காதல்மலர்ந்தும் மலராத
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *