“எலி” – சிறுகதை அசோகமித்திரன் (1972)

author
0 minutes, 16 seconds Read
This entry is part 1 of 12 in the series 17 ஜனவரி 2021

ஜெ.பாஸ்கரன்

அசோகமித்திரனின் படைப்புகள் எளிமையாகத் தோன்றும்; உண்மையில் அவை மிக ஆழமான, அடர்த்தியான கருத்துக்களை உள்ளடக்கி இருக்கும். கதை சொல்லுகிற போக்கில், அதனூடே மெல்லிய நகைச்சுவையும், எள்ளலும் மிக இயல்பாக வந்து விழுந்த வண்ணம் இருக்கும். எளிமையான, மத்தியதர மக்களின் வாழ்க்கையில் இருக்கும் அன்றாடப் பிரச்சனைகளே பெரும்பாலான கதைகளின் அடிநாதமாக இருக்கும். ‘எலி’யும் அதற்கு விதிவிலக்கல்ல! ஏழ்மைக்கும், எலிக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதாக எனக்குத் தோன்றும்! – ஒரு எலியினால் ஏற்படும் பிரச்சனைகளை, அது வளைய வரும் வீட்டின் ஏழ்மையுடனும், மனித மனங்களின் விசித்திரமான எண்ணங்களுடனும் பின்னி  அசோகமித்திரன் காட்டும் சொற்சித்திரம்தான் ‘எலி’ என்னும் சிறுகதை! 

‘பத்துப் பேர் சேர்ந்தாற்போல் படுக்கவோ, சாப்பிடவோ முடியாத இடம் – அங்குதான் கணேசன், ஐம்பது வயதான தன் அக்கா, நாற்பது வயது மனைவி, பதின்மூன்று வயது மகள் ஆகியோருடன் வாழ்கிறான். இவர்களுடன் நான்கைந்து எலிகள் சர்வ சுதந்திரத்துடன் ஓடியாடி விளையாடுகின்றன! இரவில் துணி உலர்த்தும் மூங்கில் கோல், பித்தளைத் தாம்பாளம், செய்தித்தாள்கள்,  பரண், பீரோ காலித் தகர டின்கள், எண்ணெய் ஜாடி என எலிகள் உருட்டும் சத்தம் தூங்க விடாமல் செய்கின்றன. 

எலிப்பொறியில் மாட்டி வைக்க, வீட்டில் ஒன்றும் மீதி இல்லை – “என்னத்தை மிச்சம் வைக்கிறது? ரசத்தை எலிக்கு வைக்கிறதா? இல்லெ, உப்புமாவை பொறிக் கொக்கியிலே மாட்டி வைக்கறேளா?” எண்ணெய் விக்கிற விலையில், அடையும், தோசையும், பப்படமுமா தினமும் வீட்டில் செய்கிறோம்?” என்று மனைவி கேட்பதில் வீட்டின் நிதி நிலவரம் தெளிவு! மனைவி கொடுக்கும் உலர்ந்த வெங்காயத்தைப் பார்த்து, “இந்த வெங்காயத்தைத் திங்க என்னிக்கு எலி வந்தது?”  – கணேசன் கேள்வியில் நகைச்சுவையை விட பகடியும், விரக்தியுமே மேலோங்கியிருக்கிறது!

எலிப்பொறியில் வைக்க வடையைத் தேடி, வெளியே போகிறான் கணேசன். இரவு எல்லா ஹோட்டல்களும் மூடி விட்டார்கள் – ரொட்டி, பன், பிஸ்கட்டு, வாழைப்பழம் போன்றவற்றை எலி சட்டை செய்வதில்லை! 

முப்பது அல்லது நாற்பது பேர் கூடியுள்ள பொதுக்கூட்டம் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது – பேச்சாளர், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், இந்திராகாந்தி, தமிழகத் தலைவர்கள் என எல்லோருக்கும் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார். “எலிகளுக்கு ஏன் தமிழ் புரிவதில்லை? புரிந்தால் இந்த எச்சரிக்கைகளுக்குப் பயந்து, வங்காளக் கடலில் போய்த் தஞ்சம் புகுந்து விடுமே” என்று கணேசன் நினைக்கிறான்! அரசியல்வாதிகளின் வெட்டிப் பேச்சு பற்றிய அசோகமித்திரனின் பகடி நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது!

கூட்டத்திற்காக,  தள்ளு வண்டி ஒன்றில் சூடாக மிளகாய் பஜ்ஜியும், வடையும் போட்டு விற்றுக்கொண்டிருக்கிறார்கள் – மிளகாய் பஜ்ஜிக்கே நிறையத் தேவை இருந்தது. பொறுத்திருந்து, இரண்டு மாசால் வடை (‘ஒன்று என்று கேட்கத் தயக்காமாயிருந்ததால், இரண்டு!) வாங்கிக்கொள்கிறான். ‘அந்த வடை எலிக்குத்தான்’ என்று தெரிந்தால் அங்குள்ளவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்து வேதனைப் படுகிறான் கணேசன்! தள்ளு வண்டிக் கடை, மற்றும் அங்கு வாங்குபவர்களைப் பற்றிய விவரணைகள் அசோகமித்திரனின் எழுத்துக்களில் உயிரோடம் பெறுகின்றன!

வீட்டிற்கு வந்து ஒரு வடையை எலிப்பொறியில் பொருத்துகிறான். மற்றதை அவன் தின்கிறான்! இரவில் எலி மாட்டிக்கொண்டு, ஏகமாகச் சப்தம் எழுப்புகிறது – கணேசனின் வயிறுக் குழப்பாமாக இருந்ததாம் – பொறியில் எலி படுத்தும் பாடு, கணேசன் வயிற்றில் வடை படுத்துகிறது!

எலியைக் கொண்டு போய் ஒரு மைதானத்தில் விடுகிறான் கணேசன் –  பெரியதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் இருந்த எலி தாறு மாறாக ஓட, ஒரு பையன் கல்லை விட்டெறிந்தான். கணேசன் “வேண்டாம் பையா” என்கிறான். எலியைப் பிடித்து விட்டாலும், அதனைக் கொல்வதற்கு மனது வரவில்லை கணேசனுக்கு! ஆனாலும் எங்கிருந்தோ பறந்து வந்த காக்கை ஒன்று, எலியைக் கொத்திக்கொண்டு போகிறது. பொறியில் கொக்கியில் மாட்டிய வடை அப்படியே தின்னப் படாமல் இருக்கிறது! கணேசனுக்குத் துக்கமாக இருக்கிறது. 

மனித மனம் விசித்திரமானது – கொல்ல வேண்டி, பிடிக்கப்பட்ட எலி, உண்மையிலேயே கொல்லப் படும்போது, மனது அதற்காக வருந்துகிறது.  அசோகமித்திரன் இந்தக் கதை பற்றி சொல்வதைப் பார்க்கலாம்:

       “எலிக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுகிறது என்பதுதான்! எலி சாவை நோக்கிப் போகிறது.      

       இவன் உயிரோடு இன்னும் இருக்கப் போகிறான். ஆனால் எலியைக் கொல்வதற்காக இவன் வைத்திருந்த  

       வடையைச் சாப்பிட்டு விடுகிறான்!  ‘உன்னைக் கொன்று விடுகிறேன் பார்!’ என்று சொல்லி விடுகிறோம். ஆனால்

       நிஜமாகவே அப்படிச் செய்யும் போது, பச்சாத்தாபம் வந்து விடுகிறது” 

நான் வாசித்து ரஸித்த கதை இது!

ஜெ.பாஸ்கரன்.

Series Navigationஇருப்பதோடு இரு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *