மற்றொரு தாயின் மகன்

This entry is part 8 of 14 in the series 24 ஜனவரி 2021

(7.6.1981 தாய் முதல் இதழில் ‘வழிகள் பிரிகின்றன’ என்று மாற்றப்பட்ட தலைப்பில் வெளியானது. மனசு எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் உள்ளது.)

      அமுதாப்பாட்டி என்று அக்கம்பக்கத்தில் அழைக்கப்படும் அமுதம்மாள் தூக்கம் வராமையால் தன் சின்ன வீட்டின் வாசற்புறத்தில் வந்து உட்கார்ந்துகொண்டிருந்தாள். வானத்தைப் பார்த்து இரவு பதினொரு மணிக்கு மேல் ஆகியிருக்க வேண்டும் என்று நினைத்தவாறு நெடிய கொட்டாவி ஒன்றை விடுவித்தாள். கொஞ்ச நாள்களாகவே இப்படித்தான், தூக்கம் வருவது போல் இருக்கும், ஆனால், படுத்தால் நன்றாக விழிப்புக் கொடுத்து விடும். கண்களை வெறுமே மூடிக்கொண்டு கொட்டுக்கொட்டென்று படுத்துக் கொண்டிருக்க மாட்டாமல், அமுதம்மாள் தெருவுக்கு வந்து குந்திக்கொண்டு விடுவாள். வீடு என்கிற பெயரால் அழைக்கப்பட்ட பெரிய குடிசைக்கு முன்னால் வாயிற்புறத்துக் கதவை ‘மட்ட மல்லாக்க’ அகலத் திறந்து வைத்துக்கொண்டு கால்களை நீட்டி உட்கார்ந்து கொள்ளுவாள். இவ்வாறு உட்கார்ந்ததற்குப் பிறகு, சில நாள்களில் சற்று நேரத்துக்குப் பின்னர் கண்கள் செருகத் தூக்கம் தன்னைப் பற்றிக்கொள்ள, எழுந்து உள்ளே போய்ப் படுத்தால் தூக்கம் போய் விடுமோ என்கிற அச்சத்தால், திண்ணையிலேயே அப்படியே தூங்கிப் போய் விடுவதும் உண்டு. கதவைத் திறந்துகொண்டு தூங்குவது பற்றிய கவலை அமுதம்மாளுக்குக் கொஞ்சமும் கிடையாது. எந்தத் திருடன் வரப்போகிறான்? அப்படியே வந்தாலும் சட்டிகளையும் பானைகளையும் திருடுவதற்குத்தானா மெனக்கெட்டு  ஒரு திருடன் பாதி இரவுக்கு மேல் அவள் வீட்டுக்கு வரப் போகிறான்? இந்த நினைப்பால் அவள் கதவு மூடப்படாதது குறித்துக் கவலை கொள்ளுவதே கிடையாது. உட்கார்ந்திருந்த அவள் மல்லாந்து படுத்துக்கொண்டாள்.

      இந்த வயதிலும் – அவளுக்கு அறுபது வயது ஆகிறது – எடுபிடி வேலைகளும் ஒரு வீட்டில் பற்றுப் பாத்திரம் துலக்கும் வேலையும் செய்து சம்பாதித்து வயிறு வளர்க்க வேண்டிய வறுமையில் இருக்கும் அமுதம்மாளுக்குக் கையில் பெரிய சேமிப்பும் இல்லை. இருந்தாலாவது திருடன் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு போய்விடுவானோ என்கிற கவலை எழும். அவள்  கையிருப்பெல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் எந்த ஒரு நேரத்திலும் பத்து ரூபாய்க்கு மேல் கூடியது இல்லை. அதையும் அவள் எப்போதும் தன் இடுப்பிலேயே வைத்துக் கொண்டிருப்பாள். எந்தத் திருடனும் அவளிடம் காசு இருக்கும் என்று எதிர்பார்த்து அவளை அடித்துப் போடப் போவதில்லை. இதனால் அவள் தெருவுக்கு அருகில், வீட்டு வாசற்படியில் தலையை வைத்தக்கொண்டு அவ்வப்போது படுத்துத் தூங்குவதைத் தன் வழக்கமாய்க் கொண்டிருந்தாள்.

      இன்றும்  அப்படித்தான், அமுதம்மாள் படுத்துக்கொண்டு கொட்டாவி மேல் கொட்டாவியாக உதிர்த்துக் கொண்டிருந்தாள். பாழாய்ப் போன உறக்கம் வருவேனா என்றது. வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்களையும் துன்பங்களையும் அனுபவித்திருந்தும், அமுதம்மாள் கூடியவரையில் தன் மனச்சுமைகளை வாய்விட்டுப் புலம்புகிற வழக்கம் இல்லாதவள். எப்போதாவது தாங்க முடியாத சோர்வு தாக்கினால், தனக்குத் தானே பேசிக்கொண்டும், புலம்பி அழுதுகொண்டும் தன் மனச்சுமையைக் குறைத்துக்கொள்ள முற்படுகிறவள். இன்று, எதனாலோ அவள் மனமும் உடலும் மிகவும் சோர்வுற்றிருந்தன. ‘வயசு ஆகுதில்லே?’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு அவள் புரண்டு படுத்தாள்.

      வானம் துப்புரவாக இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மெல்ல நகர்ந்து கொண்டிருந்த மேகங்களைத் தவிர வானம் அழகான நீல வண்ணம் கொண்டிருந்தது. இப்படி வானத்தைப் பார்த்தபடி படுப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும். தன் கவலைகள் பெருமளவுக்கு அதனால் குறைந்து போவது போன்ற பிரமைக்கு அவள் ஆளாவதுண்டு. இன்று, உடல் பலவீனத்தாலோ என்னவோ, வானத்தின் நீலத்தையும் நிலாவையும் அவளால் தன் சுமைகளைக் குறைக்கிற சாதனங்களாய்க் கருத முடியவில்லை. தெருவில் ஆளரவமே இல்லை. எங்கோ ஒரு நாய் நீளமாக ஊளையிட்டது. அவளுக்கு அறிமுகமில்லாத பெரிய பறவை ஒன்று சிறகடித்துப் பறந்து போயிற்று இரவு நேரத்தில் பறவையைப் பார்த்தது அவளை வியப்பில் ஆழ்த்திற்று. சற்றுப் பொறுத்து, நாயின் குரைப்பின் ஓசை மிகுந்து கேட்கலாயிற்று. நாயின் குரைப்பைத் தொடர்ந்து மனிதக் காலடிச் சத்தங்கள் வேறு கேட்டன.    அமுதம்மாள் சற்றுக் கலவரங்கொண்டு கையூன்றி எழுந்து உட்கார்ந்து கொண்டாள். பார்வை நாய்க்குரைப்புக் கேட்ட திக்கை நோக்கிப் போயிற்று. இரவில் கண்பார்வை முழுமையாகச் செயல்படாத நிலையில், தெளிவாக ஒன்றும் தெரியாததால், அவள் கண்களுக்கு மேல் வலக்கையை விரித்துப் பார்வையைக் கூர்மைப்படுத்திக்கொண்டு இருட்டில் கண்களல் துழாவினாள். ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. திடீரென்று தெருத் திருப்பத்தில் ஒருவன் ஓடி வந்தது தெரிந்தது. அவள் படபடப்புடன் கால்களை மடக்கி உட்கார்ந்தாள். அவள் எழ முயன்று வீட்டுக்குள் நுழைவதற்குள், மூச்சு இரைக்க ஓடிவந்து கொண்டிருந்த ஆள் அவள் வீட்டை நெருங்கிவிட்டான்.

       “அம்மா! நான் உங்க வீட்டில பதுங்கிக்கிர்றேன். என்னயப் போலீஸ் துரத்திக்கிட்டு வருது. ஆனா நான் திருடனில்லே, தாயி. என்னய நம்புங்க. தயவு செய்து காட்டிக்குடுத்துறாதீய,” என்று ஒரே மூச்சில் இரவின் விழிப்போடு, மெல்லிய கரகரப்பான குரலில் அறிவித்துவிட்டு, அவளைத் தள்ளாத குறையாகத் தாண்டிக்கொண்டு வீட்டுக்குள் சென்று அவள் பார்வையிலிருந்து மறைந்தான்.

      அமுதம்மாளுக்கு அச்சம் ஏற்படாவிடினும் குழப்பமும் கவலையும் ஏற்பட்டன. அத்தனை நெருக்கத்திலும் பார்வை தெளிவாக இல்லாவிட்டாலும், ஓடிவந்து பதுங்கியவன் முப்பதிலிருந்து முப்பத்தைந்துக்குள் சொல்லக்கூடிய வயதினன் என்பது புரிந்தது. தான் திருடனல்லன் என்று அவன் சொல்லிக்கொண்டது கூட ஒருகால் அவளது அச்சமெழாமைக்குக் காரணமாக இருக்கக்கூடும். ‘ஆனா, திருடனில்லையின்னா போலீசு  ஏன் தொரத்திக்கிட்டு வரணும்’ என்கிற கேள்விக்கு அவளால் விடை காண முடியவில்லை. ஒரு வேளை இவனைத் திருடன் என்று தவறாக எண்ணித் துரத்துகிறார்களோ என்கிற எண்ணம் தோன்றியது. எது எப்படியானாலும், தன்னை நம்பி அடைக்கலம் புகுந்துள்ளவனைக் காட்டிக்கொடுக்கக் கூடாது என்கிற முடிவுக்கு அவள் உடனே வந்துவிட்டாள். அவன் திருடனாகவே இருப்பினும், அன்றாடங்காய்ச்சியான தனக்கு அவனால் எந்தக் கெடுதலும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதாலேயே அவள் அந்த முடிவுக்கு வந்தாள்.

      அவள் வீட்டுக்குள் புக எண்ணிய நேரத்தில் வலுத்த காலடிகள் கேட்டன. அவள் தன் முடிவை மாற்றிக்கொண்டு கதவைச் சாத்தாமலே வீட்டு வசலில் முன்பு போல் கட்டையை நீட்டிப் படுத்துக்கொண்டாள். ஓரிரு நிமிடங்களில் தடதடவென்று கேட்ட காலடிகளின் ஓசையில் அப்போதுதான் எழுந்துகொண்டவள் போல் அவள் எழுந்து உட்கார்ந்தாள்.

       “ஏ, பெரியம்மா! இந்தப் பக்கமா ஒரு ஆளு வந்தானே, பார்த்தியா?” – மூன்று பேரில் அதிக உயரமானவன் வினவினான்.

       “அதோ, அந்தச் சந்துல நொளஞ்சு போயிட்டானே,” என்று அவள் பதில் சொல்லிவிட்டு, “ஏம்ப்பா, திருடனா அந்த ஆளு?” என்று கேட்டாள். கேள்விக்குப் பதில் சொல்ல நிற்காமல், அம்மூவரும் தலை தெறிக்க ஓடலாயினர்.

       அவர்கள் பார்வையிலிருந்து மறைந்து போனதற்குப் பிறகு, அமுதம்மாள் கதவை ஞாபகமாகச் சாத்தித் தாளிட்டுக்கொண்டு உள்ளே போனாள். சுவர்ப் பக்கம் நடந்து மாடத்திலிருந்து தீப்பெட்டியை எடுத்து மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினாள். அந்தச் சிறிய வீட்டுக்குள் வெளிச்சம் பரவிற்று. கிழவி நாற்புறங்களிலும் தன் மங்கிய பார்வையை ஓட்டினாள். ஆசாமி தென்படவில்லை.

       “இந்தாப்பா, எங்கிட்டு ஒளிஞ்சிருக்குற? போலீசுக்காரங்க வந்து கேட்டுட்டுப் போயாச்சு!” என்று மெதுவாக அவள் சொல்லிக் கொண்டிருந்த போதே பரணிலிருந்து அந்த ஆள் குதித்து அவளுக்கு முன்னால் வந்து நின்றான்.

       அந்த மையிருட்டில்     அவன் பரண் இருந்த இடத்தை எப்படிக் கண்டுபிடித்தான் என்கிற வியப்பில் அவள் கண்கள் விரிந்த போது, “என்ன பெரியம்மா, பாக்குறீய? டார்ச் வச்சிருக்குறேனாக்கும்!” என்றவாறு அவன் தன் கையிலிருந்த சின்ன மின் விளக்கைப் பொருத்திக் காட்டினான்.

       “எங்கே, அந்த பல்பை இங்கிட்டுக் குடு. உன்னய நல்லாப் பார்ப்பம்,” என்ற அவளிடம் அவன் புன்னகை செய்தவாறே அதைக் கொடுத்தான். கிழவி அதன் ஒளியை அவன் முகத்தின் மீது பாய்ச்சி நன்றாகப் பார்த்தாள். அவன் வயதைப் பொறுத்த வரையில் தனது மதிப்பீடு சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தாள். முகத்தில் ஒரு வாரத்துத் தாடி, மீசைகள் வளர்ந்திருந்தன. அவை பெரிய கண்களின் ஒளியை மிகைப்படுத்திக் காட்டியதாக அவளுக்குத் தோன்றியது. கண்கள் பெரியனவாக இருந்தது முகத்தில் சதை குறைந்திருந்ததால் என்பதும் அவளுக்குப் புரிந்தது. நல்ல சாப்பாடு சாப்பிட்டால் மிகுந்த பலசாலியாகக் கூடியவன் என்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த உடம்பு அவனுக்கு இருந்ததையும் அவள் மனத்தில் வாங்கிக்கொண்டாள்.  அவள் கண்கள் சற்றுக் கலங்கின. அவளையும் மீறிக்கொண்டு பெருமூச்சு ஒன்று சீறிக்கொண்டு பாய்ந்து அந்த இரவின் ஓசையின்மையைக் கலைத்தது.

       பின்னர், டார்ச் விளக்கை அவன் கையில் திருப்பிக் கொடுத்த அவள், “என்ன தப்புச் செய்தே அப்பா நீ?” என்று கேட்டாள்.

       அவன் உடனே பதில் சொல்லாமல், “ முதல்ல குடிக்கிறதுக்குக் கொஞ்சம் பச்சத்தண்ணி தருவீங்களாம்மா?” என்றான். அவள் பதில் சொல்லுவதற்கு முன்னால், “நான் இப்படிக் குந்தலாமா?” என்று கேட்டவாறு, இப்போதும் அவள் பதிலுக்குக் காத்திராமல் பொத்தென்று தரையில் சரிந்து களைப்புடன் உட்கார்ந்தான். பின்புறமாகவே சிறிது சிறிதாக உடம்பை நகர்த்திக்கொண்டே போய்ச் சுவரோரம் தேடிச் சாய்ந்து அமர்ந்தான். எழுந்து நடந்து போய்ச் சாய்ந்து அமர இயலாத அளவுக்கு அவன் உடல் சோர்வுற்றிருந்ததை அவனது அந்தப் பின்னோக்கி நகர்தலிலிருந்து தெரிந்து கொண்ட அவள், “குடிக்கத்  தண்ணி தர்றேன். ஆனா அதுக்கு முன்னாடி  எதுனாச்சும் சாப்பிட்றயாப்பா?” என்று கேட்டாள்.

       அவன் தலையை உயர்த்தி அவளைப் பார்த்தான். கண்களில் ஆவலும் பசியுணர்வும் ஒன்றோரொன்று அலைமோதிய விந்தையான பார்வையுடன், “எதுனாச்சும் சாப்பிடக் குடுத்தீங்கன்னாலும் நல்லதுதான், அம்மா. சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு,” என்று, தனது வெட்கத்தை விட்டு, ஒரு தாயிடம் கூறுகிற இயல்புடன் அவன் கூறினான்.

       ஏதேதோ நினைவுகள் நெஞ்சுக்குள் அலைபுரண்டதால், அமுதம்மாளுக்கு அழுகை வரும் போலாயிற்று. கண்களின் கலங்கலை அவன் பார்த்துவிடக் கூடாதவாறு, அவள் சுவரொட்டி விளக்கை அகற்றிப் பிடித்தபடி அந்தச் சின்ன வீட்டின் மிகச் சிறிய சமையலறையை நோக்கி நடந்தாள். சிறிது நேரத்தில் ஓர் அலுமினியத் தட்டில் கொஞ்சம் புழுங்கலரிசிச் சோறும் புளிக்குழம்பும் எடுத்து வந்து அவனுக்கு முன்னால் வைத்தாள்.

       “அப்பா! தொட்டுக்குறதுக்கு ஒண்ணுமில்லே. இதை முதல்ல சாப்பிடு. அதுக்குப் பெறகு, துளி மோரு இருக்குது, அடையும் சாப்பிடு. ஆனா புளிக்கும்…”

       அவன் தட்டை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மறு கையால் காணாதது கண்டவன் போல் அள்ளி அள்ளிப் போட்டுக்கொண்டு கடிக்காமலே விழுங்கியதைக் கண்ட அவள் அவனது பசியின் தீவிரத்தைப் புரிந்துகொண்டாள். கையைக் கூடக் கழுவாமல் அவன் சாப்பிடத் தொடங்கியது அதற்குப் பிறகே அவள் நினைவில் உறைத்தாலும், அவன் மடமடவென்று சாப்பிடத் தொடங்கிவிட்டதால், அது பற்றி ஞாபகப்படுத்த விரும்பாமல் அவள் அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

       “என்னமோப்பா. மதியம் வெச்ச கொளம்பு. ஊசிக் கீசிப் போயிருச்சோ?”

       “இல்லேம்மா. நல்லாத்தான் இருந்திச்சு.”

       “இங்ஙனவே ஒரு ஓரத்துல கையைக் களுவிக்க. இரு. மோரு கொண்டாறேன்.”

       … அவன் மோரையும் குடித்துவிட்டு,   “அம்மா! உங்களை நான் மறக்கவே மாட்டேன். நான் ரெண்டு நாளா ஓடி யிருக்குற ஓட்டத்துக்கும், நடந்திருக்குற நடைக்கும் இன்னும் ரெண்டே நாளுக்குள்ளே செத்தே போயிருப்பேன் …” என்று அவளைப் பார்த்துக் கும்பிட்டான்.

       அவள் தட்டையும் தம்ப்ளரையும் கொண்டு போய் நீரூற்றி வைத்துவிட்டு, அவனுக்கு முன்னால் வந்து உட்கார்ந்தாள்.

       “உனனய எதுக்குப் போலீசு தொரத்திக்கிட்டு வந்தாக?அதச் சொல்லலியே நீ? என்ன தப்பு செய்தேப்பா நீ?”           

       “ஒரு பெரிய ரௌடியைக் கொலை செய்துட்டேன், அம்மா!” என்று அவன் ஒரு சின்னத் தகவலைச் சொல்லுகிற குரலில் மிக இயல்பாகச் சொல்லிவிட்டுப் பற்கள் தெரியப் புன்னகை காட்டினான்.

        அமுதம்மாள் நிமிர்ந்து உட்கார்ந்தாள்: “என்னது! கொலை செய்தியா? ரவுடியையா? … அவன் ரவுடின்னா அவனைக் கடவுள் தண்டிப்பாரு. ஒரு மனுசனை இன்னொரு மனுசன் தண்டிக்கிறதாவது?”

        அவன் சிரிப்பு மாறாமல், “அம்மா! அப்பப்ப கடவுள் கெட்டவங்களை தண்டிச்சாருன்னா, இந்த உலகம் இப்படித்தான் இருக்குமா?” என்றான்.

       அவளால் பதில் சொல்ல முடியவில்லை. இருப்பினும், “கடவுள் மெதுவாத்தான் தண்டிப்பாரு. அதுக்குன்னு எல்லாரும் கத்தியை உருவறதா?” என்றாள்.

       “அவன் பொல்லாத ரவுடி, தாயே. அஞ்சாறு பொண்ணுங்களைக் கெடுத்திருக்கான். அரசியல்ல செல்வாக்குள்ள பெரிய மனுசன் வேற. எம்.பி. தெரியுமா, எம்.பி.? அவன் ஒரு எம்.பி … பெரிய பணக்காரன் வேற. பொதுப் பணத்தைக் லட்சக் கணக்குல சுரண்டினவன்.  எங்க கூட்டத்தார் இது வரைக்கும் இது மாதிரியான ரவுடிப் பணக்காரங்க ஒரு அஞ்சாறு பேரைக் கொன்னிருக்குறாங்க. .. ரெண்டு பேரு ஆப்டுக்கிட்டு மரண தண்டனை அடைஞ்சிருக்குறாங்க. பாக்கிப் பேர் தப்பிச்சுக்கிட்டிருக்குறோம். அவங்கள்ள நானும் ஒருத்தன்.”

        “கொலை செய்துட்டுத் தப்ப முடியாதுப்பா.”

 “தெரியும்தான். அப்படி போலீஸ் கையில சிக்குறதுக்குள்ளாற இன்னும் நாலஞ்சு ரவுடிங்களைக் கொலை பண்ணுவோம்.”

        அமுதம்மாள் காதுகளைப் பொத்திக்கொண்டாள். “கொலை செய்வம்னு சர்வ சாதாரணமாச் சொல்றியேப்பா?”

       “நாங்க நல்லவங்களைக் கொல்ல மாட்டோம், பெரியம்மா. கெட்டவங்க, பொண்ணுங்களைக் கெடுக்குறவங்க, வேலைக்காரங்களைக் கொடுமைப்படுத்துறவங்க, ஏழைகளுக்குக் கஷ்டம்  குடுக்குறவங்க, சர்க்கார் பணத்தை லட்சக் கணக்குல சாப்பிட்றவங்க, பொய்க்ணக்கு எழுதி வருமான வரி கட்டாம இருக்குறவங்க, அநியாய வட்டியில ஆயிரக்கணக்கா சொத்து சேர்த்து வச்சுக்கிட்டு ஏழைகளை ஏமாத்துறவங்க – இது மாதிரியான சமுதாயத் துரோகிகளைக் கொஞ்சங் கொஞ்சமாக் கொலை பண்ணி அழிப்போம்…. அதுக்குப் பெறகு இந்த நாடு ஏழைபாழைங்க வாழுறதுக்கு ஏத்த நாடா மாறும்கிறது எங்க நம்பிக்கை …”

       அமுதம்மாளின் பார்வை அகலமாகியது. “பணக்காரங்களையும் ரவுடிகளையும் கொல்றதுனால அவங்க வம்சம் அழிஞ்சுடுமாப்பா? அவங்க புள்ளைகுட்டிங்களுக்குத்தானே அந்தச் சொத்து சுகமெல்லாம் போகும்? ஏழைகளுக்கா கிடைக்கும்?”

       இளைஞன் திகைப்படைந்தது வெளிப்படையாய்த் தெரிந்தது. அவன் சிந்தனை வசப்பட்டதும் புலப்பட்டது. இருப்பினும் பேச்சை மாற்ற எண்ணி, “ஏம்பெரியம்மா? உனக்குத் துணை யாருமில்லையா?” என்றான்.

        “எனக்கு நாப்பத்தஞ்சு வயசுல புருசன் செத்துட்டாரு. ஒரே மகன். அவரு செத்தப்ப அவனுக்குப் பத்தே வயசு. … கஸ்டப்பட்டுப் படிக்க வச்சேன்.  பத்தாவது பாஸ் பண்ணினான். வேலைக்கு நாயா அலைஞ்சான். கிடைக்கல்லே. அவங்கூட உன்னய மாதிரிதான் கெட்டவங்களை யெல்லாம் கொன்னு குவிக்கணும்னு பேசிக்கிட்டுத் திரிவான். மலையாட்டமா அவனை நம்பிக்கிட்டிருந்தேன். கடைசியிலே ஒரு நாளு சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிட்டான். ஒரு தகவல் இல்லே. எங்க இருக்குறானோ, என்ன செய்யிறானோ, அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்,” என்று அவள் உயரே பார்த்துக் கும்பிட்டாள்.

       பிறகு கண்ணீரை முத்து முத்தாக உதிர்த்தாள்.

       “அழாதீங்கம்மா. … உங்க மகன் எப்ப ஓடிப்போனான்?”

       “அஞ்சு வருசமாச்சுப்பா.”

       “என்ன பேருங்க உங்க மகனுக்கு?”

       “எசக்குமுத்துன்னு பேருப்பா. உன்னாட்டமாத்தான் ஒசரமா நெடுநெடுன்னு இருப்பான். உன்னய விடக் கொஞ்சம் செவப்பு. எங்க வீட்டுக்காரரு நல்ல செவப்பாச்சே! … இப்ப எங்க இருக்குறானோ … மாணிக்கம்னு அவங்கப்பா கூப்டுவாரு. நான் எசக்கின்னு கூப்பிடுவேன். எம்மேல உசிராத்தான் இருந்தான். சம்பாரிக்கத் தொடங்கியதும் என்னய நல்லா வச்சுக்கப் போறதா அடிக்கடி சொல்லிக்கிட்டிருந்தான். வேலை கிடைக்காத வெக்கமோ என்னமோ தெரியல. ஒரு நா ஓடிட்டான். ஆனா அதுக்குன்னு ஓடிப் போயிறணுமா? பெத்த தாயை மறக்கலாமாப்பா?”

       “மறக்கக்கூடாதும்மா… ஆனா சில லட்சியவாதிகளுக்கு இதெல்லாம் குறுகின வட்டமாத் தெரியும்மா.”

       “எதுப்பா லச்சியம்? பெத்து, ஆளாக்கிப் படிக்க வச்ச தாயை மறந்துட்டு, அவ எக்கேடுங்கெட்டுப் போகட்டும்னு ஓடிப் போறதா?”

       “அம்மா, உங்க மகன் மறைஞ்சதுக்குக் காரணம் தெரியாம அவரு மேல கோவிக்காதீங்கம்மா. … அது சரி, உங்க மகன் படம் இருக்கா?”

       அமுதம்மாள் சிரித்தாள்: “ஏம்ப்பா? என்னயப் பாத்தா போட்டோ எடுத்து வச்சுக்குற பணக்காரப் பொம்பளையாவா தெரியுது உனக்கு?”

       “பள்ளிக்கூடத்துல படிக்கிறச்சே எடுத்த ஃபோட்டோ எதுனாச்சும் இருக்குதாம்மா? ஏன்னா, எசக்கிமுத்துங்குற பேர்ல எனக்கு ஒரு பையனைத் தெரியும்.”

       “அப்படியா? அவன் என் மகனாயிருந்தா முக்கியமான ரெண்டு அடையாளம் இருக்குமே”

       இளைஞன் திகைப்புடன், “கையிலேயும் கால்லேயும் ஆறாறு வெரல் இருக்குமாம்மா?”

       “ஆமாம்ப்பா, தம்பி. அப்புறம் இன்னொரு முக்கியமான அவையாளம் கூட இருக்குமே?”

       “ஒரு காது மட்டும் மடங்கியிருக்கும், இல்லியா?”

       அமுதம்மாள் பொறுக்க முடியாத ஆவலுடன், “ஆமாம்ப்பா. அவனேதான். எம்மவந்தான். சொகமா யிருக்குறானா?  எங்க இருக்குறான்? என்ன செய்துக்கிட்டிருக்குறான்? வெலாசம் சொல்லேன். இல்லைன்னா இங்கிட்டு வந்துரச் சொல்லேன். எம் மனசு என்னமா அடிச்சுக்குது! இதைத்தான் ஆண்டவன் செயல்ம்பாங்க. … இந்தத் தகவலைச் சொல்றதுக்குத்தான் நீ இன்னிக்கு இங்கிட்டு வந்து சேர்ந்திருக்குறே,” என்று தாள முடியாத மகிழ்ச்சியோடு அரற்றினாள்.

       இளைஞன் சில விநாடிகளுக்குப் பேசாமல்  இருந்துவிட்டு, “ஒரு ஊருன்னு  கிடையாதும்மா. சுத்திக்கிட்டே இருப்பான். ஆனா அடிக்கடி நாங்க சந்திப்போம். அடுத்த வாட்டி சந்திக்கிறச்சே நான் கண்டிப்பா உங்ககிட்ட அவனை அனுப்பி வைக்கிறேம்மா. அவன்கூட அடிக்கடி உங்களைப் பத்திச் சொல்லுவான் …”

       அமுதம்மாளின் முகம் சுவரொட்டி விளக்கின் மங்கிய ஒளியிலும் பளபளத்து ஒளிர்ந்தது.

       “அவனும் உன்னாட்டமேதான் வெட்டணும், குத்தணும்னெல்லாம் பேசிக்கிட்டிருப்பான். ஒரு வேளை எதுனாச்சும் தப்புத் தண்டாவில மாட்டிக்கிட்டுத் தலைமறைவாயிட்டானோ? உன் செநேகிதன்குறியே? வேற எப்படி இருப்பான்?”

      இளைஞனின் முகம் இருண்டதைக் கவனிக்காமல் கிழவி மேலும் சொன்னாள்: “… நான் உன்னய இங்கே ஒளிச்சு வெச்சுக் காட்டிக் குடுக்காததுக்குக் காரணம் என்ன, தெரியுமோ? நீயும் ஒரு தாய் வயித்து மகன்கிறதும், அந்தத் தாயும் என்னய மாதிரியே தவிச்சுக்  கிட்டிருப்பாங்குறதும் தான்! உனக்கு அம்மாப்பா இருக்காங்களா?”

       “இருக்காங்க.”

       “அப்ப நீயும் எசக்கிமுத்து கேசுதானா?”

       இளைஞன் திடீரென்று பலத்த எண்ணங்களில் ஆழ்ந்து போனவன் போல் பேசாதவனானான்.

       “என்னப்பா பேசாம இருக்குறே? அவனை இங்கிட்டு அனுப்பி வை. நீயும் ஒளுங்கா ஊருக்குத் திரும்பிப் போ. நீயும் படிச்சிருக்கேயில்ல?”

       “படிச்சிருக்குறேன்.”

       “படிச்சா புத்தி இப்படித்தான் போகுமா?”

       இளைஞன் பதிலே சொல்லவில்லை. விழியோரத்துக் கண்ணீரை வழித்துச் சுண்டியவாறு கால்களை நீட்டிப் படுத்தான். அவன் மனம் தன் சொற்களால் இளகிவிட்டதாகவும், அவன் ‘திருந்தி’ விட்டதாகவும், எசக்கிமுத்துவை அனுப்பிவைப்பதோடு தானும் தன் பெற்றோர்களிடம் போய்விடுவான் என்றும் நம்பிய கிழவி மகிழ்ச்சியுடன் கையைத் தலையணையாக வைத்துக்கொண்டு படுத்தாள்.      

“நக்சலைட்” எசக்கிமுத்து ஒரு வாரத்துக்கு முன்னால் தூக்கிலிடப்பட்ட சேதியைக் கிழவியிடம் சொல்ல மனமில்லாமல் இளைஞன் இருட்டை வெறித்தவாறு படுத்துக் கிடந்தான்.

…….

Series Navigationகாலம் மகிழ்கிறது !இலைகள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

  1. Avatar
    அழகியசிங்கர் says:

    ஜோதிர்லதாவின் கதையில் ஒரு திருடன் பேச்சால் திருந்துவதற்கு வாய்ப்பு குறைவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *