எம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டு

This entry is part 5 of 14 in the series 24 ஜனவரி 2021

ஸிந்துஜா 

வர் கதைகள் மேகம் போன்றவை. அவற்றின் உருவ ஒரங்கள் விமர்சகர்களின் வரைபடக் கோடுகளை ஒட்டி வராமல் துரத்திக் கொண்டோ உள் தள்ளியோ இருக்கலாம். ஆனால் அதுவே வடிவமாகி விடும். தனித்தன்மை பெற்றவையாக இருக்கும்… வாசகனை நிமிர்த்தி உட்கார வைக்கும் அதிர்ச்சியும் ஆற்றலும் உள்ள எழுத்து அது”  என்று “இலக்கிய வட்டம்” ஜூலை 1964 இதழில் எம் .வி. வெங்கட்ராம் பற்றி தி. ஜானகிராமன் எழுதுகிறார். இந்த வரிகளில் காணப்படும் நிச்சயத்தையும் சந்தோஷத்தையும் வெங்கட்ராம் தன் எழுத்தில் நிதானமாகவும் அழுத்தமாகவும் ஸ்தாபித்திருக்கிறார், அவரது அறுபது வருஷ இலக்கிய வாழ்வின் பரிபூரணத்தை அவரது கதைகளில் நாம் காணமுடிகிறது. இதற்கு முன்பு “நிதானம்” என்று ஒரு வார்த்தை சொல்லப்பட்டது. இன்று அஸ்திவாரம் போட்டு அது கிட்டி இறுகுவதற்கு முன்பே கட்டிடத்தைக் கட்டி விட்ட சாதனையாளர்கள், அவர்களைத் துதிபவர்கள் ஆகியோர் நிறைந்த சூழலில் நிதானம் என்பது ஒரு கெட்ட வார்த்தை.

வாழ்க்கையில் லட்சியத்தைப் பிடித்துக் கொண்டு அலைபவர்களுக்கு ஏற்படும் சோதனைகள் பொதுவாக வலியையும் வேதனைகளையும் தரக் கூடியவையாக அமைந்து விடுகின்றன. ஊராரின் கேலிப் பேச்சுக்கள், அலட்சியங்கள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றை மீறித்தான் கடமையாற்ற வேண்டியிருக்கிறது. இத்தகைய லட்சியங்கள் பொதுவாழ்வு சம்பந்தப்பட்டவையாக இருக்கலாம். தனிமனிதரின் வாழ்க்கையை ஊடுருவதாகவும் இருக்கக் கூடியன. ‘கருகாத மொட்டு’வில் வரும் இளம் பெண்ணும், வாலிபனும் தனிமனித லட்சிய நோக்கத்தால் பீடிக்கப்பட்டு 

அதில் உழல்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின்  லட்சியம் என்பது எல்லோரையும் போலத் திருமணம் செய்து கொண்டு வாழும் வாழ்க்கையை வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டுத்  தமது சேவை மனப்பான்மை தரும் உந்துதலை முதலீடாகக் கொண்டு பணியாற்றுவதுதான்.

சாரதா ஓர் அநாதை இல்லத்தின் தலைவி. சுமார் அறுபது அனாதைக் குழந்தைகளைப் பராமரித்து வந்தாள். சர்க்கார் மானியத்தை எதிர்பாராமல் தனது சொந்தப் பொருள் வலிமையால் இல்லத்தை நடத்தினாள். அவளை ‘அதிசயமான பெண்மணி;  ஏராளமான சொத்து இருந்தும் சுகமான குடும்ப வாழ்க்கையை வெறுத்து அனாதைப் பெண் குழந்தைகளுக்கு வாழ்வளிக்கிறாள்’ என்றுதான் அவளுடன் வேலை பார்த்து விட்டுப் பிறகு திருமணம் காரணமாக இல்லத்திலிருந்து வெளியேறி விட்ட சக ஆசிரியை சுலோச்சனா நம்பினாள்.  சாரதாவுக்குக் கல்யாணம் என்றால் ஏனோ ஒரு வெறுப்பு. ஆடவர்களிடம் அலட்சியம். அவளுடைய இல்லத்தில் அவளுக்குத் துணையாக மூன்று சக ஆசிரியைகள் இருந்தார்கள். சாரதா, தான் மணந்து கொள்ளாததோடு, தன் சக ஆசிரியைகளையும் கன்னிகளாக வைத்திருந்தாள். கல்யாணம் செய்து கொண்டால் அவர்கள் வேலையை விட்டுப் போக வேண்டியதுதான். 

அவளைத் தேடி சுந்தரம் வந்தான். அவன் சுலோச்சனாவின் கணவனுடைய அண்ணன். சுலோச்சனா மூலம் சாரதாவைப் பற்றிக் கேள்விப்பட்டு சிதம்பரத்திலிருந்து கிளம்பி சென்னையிலிருக்கும் சாரதாவின் இல்லத்துக்கு வந்தான். ஆண்களை அடியோடு வெறுக்கும் சாரதாவின் குணத்தைப் பற்றி சுலோச்சனா சுந்தரத்துக்குக் கடிதம் எழுதி விவரித்து இருந்ததால், அவன் சாரதாவை வந்து பார்க்கும் போது தன்னை மணமானவனாக அறிமுகப்படுத்திக் 

கொண்டான். சுந்தரம் வந்த மூன்று நாட்களிலும் அவர்களுக்குள் இந்த ஆண்-பெண் விவகாரமும், திருமணப் 

பேச்சும் பெரும் விவாதப் பொருள்களாகி விட்டன. சாரதாவே அஞ்சும்படி சுந்தரம் அவளிடம் மட்டுமில்லாது அவளது சக ஆசிரியைகளுடனும் விவாதத்தில் இறங்கி நன்றாகப் பேசினான். அவனது பேச்சழகில் ஏமாந்து தனது சக ஆசிரியைகளில் யாராவது மனம் மாறி விடுவார்களோ என்று அவள் அச்சமுற்றாள்.அந்த அச்சத்தால் அவன் சென்னையை விட்டு விரைவில் புறப்பட மாட்டானா என்றிருந்தது அவளுக்கு.

ஆனால் அவனோ கடந்த மூன்று தினங்களாக ஒவ்வொரு நாளும் மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று விட்டு திரும்பி வந்து விட்டான். சாரதாவிடம்  “எனக்கு இந்த இடத்தை விட்டுப் போகத் தயக்கமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் என் புத்தி சஞ்சலம் அடைந்து விட்டது” என்றான்.

அவள் “எந்த விஷயத்தில்?” என்று கேட்டு அவனை உற்றுப் பார்க்கும் போது, அப் பார்வையால் கூச்சமுற்றவன் போல அவன் உடலை நெளித்துக் கொண்டான். அவர்கள் மேலும் பேசும் போது அவன் ஊருக்குத் திரும்பிப் போய்விடுவானோ என்று அவளுக்குக் கவலை ஏற்பட்டது. இவளேதான் இதற்கு முன்பு ஒரு கட்டத்தில் அவன் ஊரை விட்டுப் போய்விட மாட்டானா என்று அச்சமுற்றவள். அவ்வளவு குழப்பம் நிரம்பிய நாள்களாக அவளை அவை சுற்றி வருகின்றன என்பதை நம் ஊகத்துக்கு விட்டு விடுகிறார் ஆசிரியர். அவன் இன்னும் சில நாள்கள் இல்லத்தில் தங்க வேண்டும், கல்யாணத்தைத் தவிர வேறு எதைப் பற்றியாவது அவன் பேசுவதைக் கேட்க அவளுக்கு ஆசையாக இருந்தது. இந்த ஆசை தவறானது என்று அவள் நினைக்கவில்லை. ஆனால் இந்த ஆசை எப்படித் தனக்கு எழுந்தது என்பதுதான் அவளுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. இம்மாதிரித்  திண்டாடும் அவள் மனநிலையைக் குறைந்த தெளிவான வரிகளில் வெங்கட்ராம் விவரிக்கிறார்.

அவனுடைய பேச்சில் அவளுக்கு கவர்ச்சி ஏற்படக் காரணம் என்ன என்பது அவளுக்கே விளங்கவில்லை. அவளுக்குப் புனர் ஜென்மத்தில் நம்பிக்கை இல்லை. சிலரைப் பார்த்ததும் நெடுங்காலமாய்த் தெரிந்தவர்களைப் போன்ற உணர்வு வரும்; முன்பிறவிகளின் தொடர்ச்சியே என்று மனது நம்ப விரும்பும். அவன் பேச்சில் அவளுக்கு உண்டான கவர்ச்சிக்கும் அதுவே காரணமாக இருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். அறிவின் எல்லைக்குள் ஒத்து வராத ஒரு நம்பிக்கையை இறுகப் பற்றிக் கொண்டு அவள் மனது ஊஞ்சலாடுவதை எம்.வி.வி. படம் பிடித்துக் காட்டுகிறார். அறிவாளி, தைரியம் மிக்கவள், சுய சிந்தனையில் தேர்ந்தவள் கூட  இம்மாதிரி ஒரு தருணத்தில் தடுமாற வேண்டியிருக்கிறது என்பதைப் பாத்திரத்தின் தன்னுணர்வாக ஆசிரியர் கூறுகிறார். 

“மூன்று நாள்களாக இங்கே இருக்கிறீர்கள். வந்ததற்குக் காரணம் என் பிடிவாதத்தைத் தகர்க்கத்தானே? நீங்கள் குடும்பஸ்தன் என்று கூறிக் கொண்டு இங்கே வந்தாலும், உண்மையில் நீங்கள் பிரம்மச்சாரிதானே?” என்று சாரதா கேட்கும் போது “நான் பிரம்மச்சாரியாக இருந்து இறக்க வேண்டும் என்பது என் விதி” என்று சுந்தரம் வருத்தப் படுவது போல நடித்துக் கொண்டு சொன்னான்.

இந்தப் பதில் சாரதாவுக்கு மிகுந்த திருப்தியை அளித்தது என்று எம்.வி.வி. எழுதுகிறார் !  

“நீங்கள் என்னைக் காண வந்த காரணம் என் மனத்தைக் கலைக்க வேண்டும் என்கிற சுலோச்சனாவின் சூழ்ச்சிதானே?” என்று சாரதா கேட்டாள்.

“முனிவர்களின் தவத்தைக் கலைப்பதற்குத் தேவர்கள் அசுரர்களை அனுப்பியது போல், என்னை சுலோச்சனா இங்கே அனுப்பியிருக்கிறாள் என்கிறீர்களா?”

இந்தக் கேள்வி அவளுக்குத் திருப்தி தந்தது என்று  எம்.வி.வி. எழுதுகிறார் ! 

“சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்லி விடுகிறேன்” என்று சுந்தரம் தொடர்ந்தான்.”சாரதா ! நான் இங்கே வரும் வரை உங்கள் இனத்தைச் சேர்ந்தவனாகவே இருந்தேன். அதாவது நான் மணம் புரிய விரும்பவில்லை. நீங்கள் ஆண் சகவாசத்தை வெறுப்பது போல நான் பெண் சகவாசத்தை வெறுத்தேன். உறுதியாகவும் இருந்தேன்…..இந்த மூன்று நாட்களில் நான் எப்படியோ மாறி விட்டேன். ஆணாகட்டும், பெண்ணாகட்டும், அவசியம் மணம் புரிய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. மணக்காமல் ஆணாலோ பெண்ணாலோ இருக்க முடியாது என்று கண்டு விட்டேன்.” 

அவன் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள சாரதாவுக்கு இஷ்டமில்லை. ‘நீங்கள் ஆண்கள் அனைவருமே பலவீனத்துக்கு அடிமைகள்’ என்றாள். அவன் பதிலுக்கு அவளிடம் “உடல் வழிபாட்டைக் காமம் என்கிறோம். உயர்ந்த மன வழிபாட்டைத்தான் காதல் என்கிறோம். நம் உடலும் ஒன்றையொன்று சார்ந்தது என்பதால் மனத்தவிப்பையும் நீங்கள் உடல் தவிப்பாக நினைக்கிறீர்கள். ஆண் மனத்தால் எந்த ஒருத்தியையும் வழிபடக் கூடாது என்று இங்கே வருவதற்கு முன் நினைத்திருந்தேன்.இங்கே வந்த பின் எந்நாளும் அப்படி இருக்க முடியாது என்று ஏற்பட்டு விட்டது” என்றான். அந்த ஒருத்தி யார் என்று கேட்க அவள் நாக்கு தவித்தாலும் வார்த்தை வெளிவரவில்லை.

இறுதியில் சுந்தரம் அவளிடம் தன் விருப்பம் ஒன்றை வெளியிட்டான்: “நான் உங்கள் விருந்தாளியாக இன்று மத்தியானம் இருக்க வேண்டும்.” அவள் ஒப்புக் கொண்டு அவனைப் பனிரெண்டு மணிக்கு வரச் சொன்னாள். சாப்பாட்டைத் தயார் செய்து வைத்துக் கொண்டு அவள் காத்திருந்தாள். பனிரெண்டு மணிக்கு மேலாகியும் சுந்தரம் வரவில்லை. மனது எண்ணங்களில் புரண்டு தத்தளிக்க அவள் அறையை விட்டு வெளியே வந்தாள். சற்றுத் தொலைவில் தெருவின் எதிர்க்கரையில் அவன் உருவம் தெரிந்தது. அவனும் அவள் நிற்பதைப் பார்த்துக் கையைத் தூக்கிச் சைகை காட்டினான். அவன் தெருவைக் கடக்கும் போது விரைவாக வந்த லாரியில் அடிப்பட்டுக் கீழே ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

வரும் நாளில் அவள் அவனது வருகையைக் கற்பனை செய்து பார்த்து கொண்டிருக்கும் ஒரு பொழுதில் அவளது சக ஆசிரியை ஒருத்தி அவளிடம் வந்து “”சாரதா, நீங்களே இப்படி மனத்தளர்ச்சிக்கு இடம் கொடுக்கலாமா? சுந்தரத்தின் துர்மரணம் ஆழமான காயங்களை ஏற்படுத்த வல்லது. விதி என்று இதைத்தான் சொல்கிறார்களோ என்னமோ?அதற்காக நீங்கள் சாப்பிடாமல், இல்லத்தைக் கவனிக்காமல்…” என்றாள் .

“மாலா! உனக்குப் புரியாது. எனக்கே புரியவில்லையே, உனக்கு எப்படிப் புரியும்?” என்றாள் சாரதா.

அவள் கண்களில் நீர் பெருகுவதைக் கண்ட மாலா “என்ன சொல்லுகிறீர்கள்?” என்றாள்.

“மாலா! அவர் இங்கே வரும் வரை நான் கன்னியாக இருந்தேன். அவர் போனதும் நான் விதவையாகி விட்டேன் !” 

இந்தக் கடைசி வரியை ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எம்.வி.வி. எழுதவில்லை. கதை ஆரம்பித்து மெல்ல மெல்ல அது உருவாக்கிவரும் சித்திரத்துக்கு இந்த முடிவு  இயல்பாகப் பொருந்திப் போவதை ஒரு தீவிர வாசகர் உணர முடியும். உணர்ச்சியால் குதறப்படும் பாத்திரங்களாக (emotional derilicts) அல்லாது அவற்றிலிருந்து விலகி நிதானத்தைக் கடைப்பிடிப்பவர்களாக சாரதாவும் சுந்தரமும் கதையிலிருந்து வெளி வருவது ஒரு வித்தியாசமான வாசக அனுபவம். அது மட்டுமின்றி, ஒரு தேர்ந்த பேனாவின் மயக்கமூட்டும் லாகவத்தையும் இக்கதையில் நாம் சந்திக்கிறோம்.      

(“கருகாத மொட்டு” 

பாவை சந்திரனின்எம்.வி.வெங்கட்ராம் கதைகள்” 

என்ற தொகுப்பிலிருந்துபக்.763 ; விலை ரூ. 475/- 

வெளியீடு:கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்,

5, முத்துக்கிருஷ்ணன் தெரு,பாண்டி பஜார்,

தியாகராய நகர், சென்னை 6000017 

செல்: 9791071218

. 

 .

Series Navigationபடித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்! —-சிறுகதை ஆர் சூடாமணி
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *