அழகியசிங்கர்
கணையாழியில் பிரசுரமான கதை ‘நாகலிங்கமரம்’ என்கிற ஆர். சூடாமணியின் கதை.
நான் மதிக்கும் பெண் எழுத்தாளர்களில் ஆர்.சூடாமணி ஒருவர். இலக்கியத் தரமான எழுத்து வெகு ஜன எழுத்து என்று இரண்டு பிரிவுகள் தமிழில் உண்டு.
இலக்கியத் தரமான கதைகளைக் கவனத்துடன் படிக்க வேண்டும். பெண் எழுத்தாளர்களில் பெரும்பாலும் வெகு ஜன வாசிப்பு எழுத்தாளர்கள்தான்.
இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் கதைகளை எடுத்துப் படித்துவிட்டுத் தூக்கிப் போட வேண்டியதுதான். அதனால் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை. இன்னொரு முறை படிக்கவேண்டுமென்ற எண்ணமும் ஏற்படப்போவதில்லை.
ஆர்.சூடாமணியின் இந்தக் கதையை 1978ஆம் ஆண்டு கணையாழியில் வாசித்தபோது, எனக்கு இன்னும் இந்தக் கதையைப் படித்த பிரமை தீரவில்லை.
2021ல் சூடாமணி கதைகளை வைத்து கூட்டம் நடத்தும்போது எனக்குப் பிடித்த சூடாமணி கதையான நாகலிங்கமரம் என்ற கதையை எடுத்து வைத்துக்கொண்டேன்.
திரும்பவும் படித்தேன். அப்போது படித்தபோது ஏற்பட்ட நெகிழ்வு இப்போதும் குறையவில்லை.
ஒரு ஏழைப் பெண்ணை பெண் பார்க்க வருகிறார்கள். எப்படி
ஏழ்மை இளக்காரமாகப் படுகிறது என்பதை இக் கதை துல்லியமாகக் காட்டுகிறது.
பிருந்தா என்ற பெண்ணை வர்ணிக்கும் சமயத்தில் கதை ஆசிரியை இப்படி ஒரு வரியை அளிக்கிறார்.
‘ஈயை விரட்டுவதுபோல் வறுமையை ஒதுக்கிக் கொண்டு அனாயாசமாய் சுடர் விடும் கம்பீரம்.’
பெண்ணின் தகப்பனார் பெண்ணைப் பார்த்து அடிக்கடி அதிகாரமிடுகிறார்.
“வந்தவர்களுக்கெல்லாம் நமஸ்காரம் பண்ணு,”என்று அப்பா சொல்கிறார்.
நமஸ்காரம் பண்ணுகிறாள் பிருந்தா. “உட்காரு,” என்கிறார் பையனின் அப்பா. ஜன்னல் பக்கத்திலேயே நாகலிங்க மரத்தைப் பார்த்தபடி உட்கார்ந்து விடுகிறாள்.
இந்த இடத்தில் பிள்ளையின் தாய் அவள் கணவனை முறைத்துப் பார்க்கிறாள். உட்காரச் சொன்னால் அந்தப் பெண்ணும் உட்கார்ந்து விடுகிறதே என்ற கோபம் அவளுக்கு.
பிள்ளையின் தாய் பெண்ணிடம் என்ன படித்திருக்கிறாய் என்று கேட்கிறாள்.
பெண்ணின் தந்தை திடுக்கிடுகிறார். இந்த விபரங்களையெல்லாம் தரகர் சொல்லவில்லையா என்ற கோபம்.
“எய்த் ஸ்டாண்டர்டோட நிறுத்திட்டோம் அவளை,” என்றார் அப்பா.
பெண்ணுடைய படிப்பைப் பற்றி அந்த உரையாடல் தொடருகிறது.
“வசதின்னு வீட்டு நெலவரத்தைச் சொன்னேன். என் வொய்ப்புக்கு ஹெல்த் போறாது. எனக்கு ஊரூராய்ச் சுத்தற மருந்து விக்கற வேலை. பிருந்தா தான் படிப்பை நிறுத்திட்டு வீட்டையும் தாயாரையும் பார்த்துக்க வேண்டியிருந்தது,üü என்கிறார் பெண்ணின் அப்பா.
இந்த இடத்தில் இதுவரை பேசாமலிருந்த பையன் இப்படிச் சொல்கிறான். “அது ஒன்றும் பரவாயில்லை. ஸ்கூலுக்குப் போய்ப் படிச்சாதான?” என்கிறான்.
இந்த இடத்தில் ஒரு வரி.
யாருமே எதிர்பார்க்காத இதைக் கேட்டு பிருந்தாவைத் தவிர மற்றவர்கள் கண்கள் அவன் மீது திரும்பின. பிருந்தா அங்கிருந்தாளென்றாலும் அவள் கவனம் அங்கில்லை.
“காப்பி ஆறிப் போறதே,”என்றார் பெண்ணின் தந்தை.
“பேஷாயிருக்கு காப்பி,” என்கிறார் பிள்ளையின் தந்தை.
இந்த இடத்தில் தன் பெண்ணைப் பற்றி பெருமையாகச் சொல்கிறார் பெண்ணின் தந்தை. “எல்லா பிருந்தா போட்டதுதான். போண்டாவும் ரவா கேசரியும் கூட அவதான் பண்ணினா. ரொம்ப கெட்டிக்காரி,”என்கிறார்.
இந்த இடத்தில் ஒரு கடைக்கார பெருமையுடன் சொன்னார் என்ற வரி வருகிறது.
இப்போது பிருந்தாவிடம் வருவோம். அவள் ஜன்னல் வழியாக நாகலிங்க மரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்த மரத்தில் எத்தனை பூக்கள் என்று எண்ண ஆரம்பிக்கிறாள். ஒவ்வொரு முறையும் தவறாக எண்ணி வருகிறாள்.
பிள்ளையின் தாய் ,”பொண்ணு என்ன பேசவே காணோம்? ஏண்டியம்மா அப்படி என்ன வெறிச்சுப் பார்த்துண்டிருக்கே அங்கே?” என்று பிருந்தாவைப் பார்த்து பிள்ளையின் அம்மா கேட்டாள். பிருந்தா பார்வையை அகற்றாமல் “நாகலிங்க மரத்தைப் பார்த்துண்டிருக்கேன்,”என்றாள். இந்த இடத்தில் பிருந்தா சம்பந்தா சம்பந்த மில்லாமல் பேசினாள்.
“இந்த மரத்தைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா? வருஷத்தில் . மூன்று
தடவையாவது இதுக்கு இலையுதிர் காலம் வரது. நாலைஞ்சு நாள் சருகெல்லாம் அப்படியே காத்தில் உதிர்ந்து விழுந்துண்டே இருக்கும். கீழேயெல்லாம் குவிஞ்சு போயிடும். குப்பை பெருக்கி மாளாது. அப்புறம் அடுத்த நாலஞ்சு நாளைக்குள்ளேயே, நாம பார்த்துண்டிருக்கறபோதே, கபகபவென்று பச்சையா இலைகள் மொளச்சு அப்படியே மரத்தை நெறைச்சுடும்..” என்றெல்லாம் உற்சாகமாகப் பேசினாள்.
இந்த இடத்தில் பிள்ளை பெண்ணை மிகச் சந்தோஷத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான். பெண்ணின் தந்தை, பிள்ளையின் தாய் இருவருமே இதைக் கவனித்தார்கள்.
பையனின் அம்மா திரும்பவும் பிருந்தாவிடம், “சமையல் எல்லாம் பண்ணுவாயா?”என்று கேட்டாள்.
“பண்ணுவேன்,” என்றாள் பிருந்தா.
பெண்ணின் அப்பா அவர் பையன் சீனுவை காலேஜ்ல சேர்க்க அவர்கள் உதவியை நாடுகிறார். இங்கே வலது காலை ஏன் பையன் இழுத்துக்கொள்கிறான் என்பதைக் கவனிக்க வேண்டும்.
திரும்பவும் பேச்சு. பெண்ணின் தந்தை சிரித்தவாறு, “நமக்குள் இந்தத் தரகர் ரெண்டு தரப்புக்கு சொல்லியிருக்கிறார் இல்லையா?” என்றார்.
பணம் விஷயமாகப் பேசும்போது என்னன்னமோ வருகிறது. “பிள்ளையைப் பெத்தவா ஒவ்வொருத்தர் பத்தாயிரம் கொண்டா இருபதாயிரம் கொண்டான்னு கேப்பா. நாங்க ஏதோ போறதுன்னு ஏழாயிரத்துக்கு ஒத்துண்டோம். அதை நினைச்சுப் பார்க்கலையே நீங்க? உலகத்தில்லாத அதிசயமான்னா இருக்கு நீஙக கேக்கறது?” இது பிள்ளை வீட்டார் வாதம்.
“அந்த ஏழாயிரம் எங்களுக்கு எழுபதாயிரத்துக்குச் சமம் அம்மா அத்தனை கஷ்ட ஜீவனம். இருந்தாலும் பொண்ணூக்குச் செய்யாம விடக் கூடாதுன்னு செய்யறோம்..” இது பெண்ணின் அப்பா.
பிருந்தா நாகலிங்க மரத்தைப் பார்த்தாள்.
“படிப்பு கிடையாது. அதுக்கே இன்னும் ஒரு மூவாயிரம் சேர்த்துக் கொடுக்கலாம் நீங்க,” என்றாள் பையனின் தாய். இப்படி கேவலமாக இந்த உரையாடல் தொடர்ந்து நடைபெறுகிறது.
“ஆனா ஆவ காரியமெல்லாம் எப்படி இருக்கு? அதுக்கு இன்னும் ஒரு ரெண்டாயிரம் குறைக்கலாமே!”
இப்படி பேச்சு வார்த்தை கேவலமாகப் போய்க் கொண்டிருக்கிறது. பையன் அம்மாவிற்கும் பெண்ணின் அப்பாவிற்கும்.
பெண் தயாரித்துக் கொண்டு வந்த போண்டா ஒரே காரம் என்றாள் பையன் அம்மா. காப்பியிலே பொடி வாசனை அடிக்கிறது என்றாள்.
இங்கே ஒரு விவரிப்பு. பெண்ணின் தந்தை பிள்ளையின் பக்கம் ஒரு பார்வை பார்த்தார். ‘இந்தப் பிள்ளைக்கா?’ என்று ஒரு நிமிடம் பெண்ணின் அப்பா நினைக்கிறார். வாயால் கேட்கவில்லை. ஆனால் பிள்ளை கணப்பொழுதில் முகம் சிவந்து வலது காலை வேஷ்டிக்குள் இழுத்துக்கொண்டான். அவன் பெற்றோரும் சட்டென்று மௌனமானார்கள். பெண்ணின் அழகு பற்றி. பிள்ளையின் அம்மா கேவலமாகப் பேசினாள்.
இந்த இடத்தில் பிருந்தா நாகலிங்கப்பூவைப் பற்றி விவரித்தாள். பெண்ணின் தாய் கண்களை நிமிர்த்தவே இல்லை.
பெண்ணின் தந்தை பெண்ணைப் பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டே போகிறார். இந்த இடத்தில் ஒரு வரி வருகிறது. பெண்ணின் தந்தை பிள்ளையின் காலைப் பார்த்தார் என்று.
பிள்ளை அவர் பேச்சைக் கவனிக்காமல் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பெண் நாகலிங்க மரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
பேரம் பேசுவதில் பையனின் அம்மாவும் விடவில்லை.
பெண்ணின் அப்பா திடீரென்று இன்னொரு அஸ்திரத்தைத் தொடுக்கிறார். தன் மகளை விரட்டி வேற புடவைக் கட்டிண்டு வரச் சொல்கிறார்.
பிருந்தா ஜார்ஜெட் புடவை அணிந்து வந்தாள். இந்த இடத்தில் ஆர்.சூடாமணி ஒரு வரி பெண்ணைப் பற்றி விவரிக்கிறார். ‘ஒட்டிப் படிந்த துகில் அவள் உடலழகைத் துல்லியமாய் எடுத்துக் காட்டியது’ என்று.
பிருந்தா உட்கார இருதாள். .
“இந்தா பிருந்தா, அதோ அந்த மேஜை மேல ஒரு சவரன் பாக்குப் பொட்டலம் வச்சிருந்தேன். கொஞ்சம் எடுத்துண்டு வாயேன்,” என்று கட்டளை இடுகிறார் பெண்ணின் அப்பா.
அறையின் மறுகோடியிலிருந்த மேஜை வரையில் நடந்துவிட்டுத் திரும்பினாள் பிருந்தா. பிள்ளையின் கண்கள் அவளைத் தொடர்ந்தன.
“பாக்குப் பொட்டலம் அங்கு இல்லையப்பா,” என்கிறாள் பிருந்தா.
“ஒ..அப்பவே வாயில் போட்டுண்டுட்டேனா? மறந்து போயிடுத்து. போகட்டும். நீ உக்காரு.”
சூடாமணியின் இன்னொரு வரி. கவனிக்க வேண்டிய வரி. பிருந்தா உட்கார்ந்தாள். பையனின் கண்களும் அவளுடன் உட்கார்ந்தன.
பெண்ணின் தாய் விருட்டென்று எழுந்து உள்ளே போய்விட்டாள்.
பெண்ணின் தாய் இதுவரை எதுவும் பேசவில்லை. திடீரென்று எழுந்து உள்ளே போகிறாள்.
திரும்பவும் பணத்தைக் குறைச்சுக்க சொல்லிக் கெஞ்சுகிறார் பெண்ணின் அப்பா.
பிள்ளையின் தாய் பிடிவாதமாக இருக்கிறாள். இந்த இடத்தில் பையன், “குறைச்சல் என்னம்மா தப்பு? பரவாயில்லை சார் நீங்க ஐயாயிரத்துக்குச் செய்யுங்கோ, போறும்” என்றான் பையன்.
அவர்கள் பெற்றோர்களிடம் இன்னும் சொல்றான்.
“கல்யாணம் பண்ணிக்கப் போறவன் நான். எனக்கு ஆட்சேபமில்லேன்னா உங்களுக்கு என்ன வந்தது,” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டான்.
பிருந்தா மிகத் தீவிரமாய் நாகலிங்க மலர்களை எண்ணினாள்.
அவர்கள் ஒரு வழியாக விடைபெற்றுச் சென்று விட்டார்கள். ஒரு மரியாதைக்கு மட்டும் விடை கொடுக்கக் கடைசி நிமிஷத்தில் மறுபடியும் தாய் தன் கணவனை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்தாள்.
அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். “என்ன அப்படிப் பார்க்காதே..எனக்கு ரௌரவ நரகம் காத்திண்டிருக்கு. தெரியும். நான் பார்க் வரைக்கும் நடந்து போயிட்டு வரேன்.” என்று போய் விடுகிறார்.
பெண்ணின் தாய் மகளின் பக்கம் திரும்பினாள். பிறகு பார்வையை விலக்கிக்கொண்டாள். தள்ளாடி உட்கார்ந்தாள்.
கடைசி வரியில்தான் இந்தக் கதையின் சூட்சுமமே இருக்கிறது. நாகலிங்கப் பூவை எண்ணிக்கொண்டே வந்தபோது இருந்தாற்போலிருந்து மரத்தில் பூக்கள் மறைந்து மூன்று டஜன் நொண்டிக் கால்கள் தெரிந்தன.
இந்தக் கதையில் நாம் புரிந்து கொள்வது. கால் ஊனமான ஒரு பையனை ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளப் பேரம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்தச் சம்மதத்தில் பெண்ணின் தாயிற்கு விருப்பமில்லை. வேற வழியில்லை. வறுமை.
வெளிப்படையாக இதைக் கொண்டு வராமல் சொல்லாமல் சொல்லும் உத்தியைச் சூடாமணி கையாளுகிறார். பிருந்தா எப்போதும் நாகலிங்க மரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறாள். அதனால் அவள் சற்று மனப்பிறழ்வு உள்ள பெண்ணா என்ற சந்தேகம் கூட வருகிறது. இதை நுணுக்கமாக விவரிக்கிறார் .மேம்போக்காகக் கதை வாசிக்கிறவர்களுக்குக் கதையின் சூட்சுமம் பிடிபடாது.
19.01.2021
- புனிதக் கருமாந்திரம்
- டெனிஸ் ஜான்சன் கவிதைகள்
- பீதி
- படித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்
- எம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டு
- மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்! —-சிறுகதை ஆர் சூடாமணி
- காலம் மகிழ்கிறது !
- மற்றொரு தாயின் மகன்
- இலைகள்
- மொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்
- ஒரு கதை ஒரு கருத்து – ஆர்.சூடாமணியின் நாகலிங்க மரம்
- ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில்: குளச்சல் மு.யூசுப்)
- நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் – ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல் விமர்சனம்