ஜெ.பாஸ்கரன்
பால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில்: குளச்சல் மு.யூசுப்)
காலச்சுவடு பதிப்பகம்.
“ அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் பலதரப்பட்ட மனித உள்ளங்களின் துடிப்புகள் தெளிவாக ஒலித்துக்கொண்டிருக்கும். மேல் நாட்டு இலக்கியத்தோடு ஒப்புவமை கூற எங்களுக்கோர் பஷீர் இருக்கிறார் என மலையாள இலக்கியம் அபிமானம் கொள்கிறது “ என்னும் ஆ.மாதவனின் கூற்றில் உண்மையில்லாமல் இல்லை! ஐம்பது வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட இந்தக் குறுநாவல், இன்றும் உயிர்த்துடிப்புடன் இருப்பது பஷீர் என்னும் ஆளுமையின் எழுத்தின் வசீகரம் என்றால் அது மிகையில்லை.
இது ஒரு காதல் கதையா? வாழ்வின் சோகங்களை இயல்பாகச் சொல்லும் வாழ்க்கை பற்றிய புனைவா? ஒரு முஸ்லீம் சமுதாயத்துக் குடும்பங்களின் ஏழ்மையைச் சொல்லும் சோகக் கதையா? ஒவ்வொருமுறை வீழ்ந்து எழும்போதும், ஏதாவதொன்றை இழந்து, வாழ்வின் சிக்கல்களை எதிர்நோக்கும் இளைஞனின் கதையா? எல்லாமும்தான் – பஷீரின் துடிப்பான சின்னச் சின்ன வார்த்தைகளில், அதிக அலங்காரமில்லாத விவரணைகளில், ஏழு வயது சுகறாவுக்கும், ஒன்பது வயது மஜீதுக்கும் ஏற்படும் உறவு, காதலாகி, வாழ்க்கைப் புயலில் எப்படித் திசை மாறி, உருக்குலைகிறது என்பதைச் சொல்லும் சோக சித்திரம் ‘ பால்யகால சகி ‘.
“சிறு வயதிலிருந்தே சுகறாவும், மஜீதும் நண்பர்கள்” என்று நேரடியாகத் தொடங்கும் கதையின் வசீகரமே, சின்னச் சின்ன உரையாடல்களில் நகரும் மகிழ்ச்சியான தருணங்களும், சோகமான நிகழ்வுகளும்தான்! பறித்த இரண்டு மாம்பழங்களையும் சுகறாவுக்கே தருகிறான் மஜீது. சுகறாவின் இருதயம் உருகிவிட்டது. மஜிதுக்கு ஒன்று கொடுக்கிறாள். உடம்பு முழுதும் எறும்பு கடித்திருப்பதைப் பார்த்து வருந்துகிறாள். கற்பனை உலகில் வாழும் மஜீதுக்கும், அவனது கற்பனைத் தங்க மாளிகையில் ராஜகுமாரியாய் வாழும் சுகறாவுக்கும் காதல் மலர்வதைக் கவிதையாய் வெளிப்படுத்துகிறார் பஷீர்!
சுகறாவின் காதுகுத்து கல்யாணத்தில் வலி, மஜீதுவின் சுன்னத்து கல்யாண வைபவம் (“என்ன இருந்தாலும் வெட்டி ஒண்ணும் எடுக்க மாட்டாங்கோ” ஆறுதல் சொல்கிறாள் சுகறா!), சுகறா வீட்டின் வறுமை, மஜீது வின் வாப்பாவின் கண்டிப்பு, உம்மாவின் பாசம் என ஒரு மலையாள முஸ்லிம் குடும்ப சூழலைக் கண் முன் கொண்டு வருகிறார் பஷீர்!
மஜீதுவைப் பட்டணத்தில் உயர்நிலைப் பாடசாலையில் படிக்க வைக்கிறார் வாப்பா. தனக்கும் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், வறுமை, சுகறாவைத் தடுக்கிறது. மஜீதுவின் வாப்பாவுக்கு மனசில்லை அவளைப் படிக்க வைக்க. மஜிது வின் உம்மாவுக்கு சுகறாவைப் பிடிக்கும். ஆனாலும் கணவனை மீறி எதுவும் செய்ய முடியாத கையறு நிலை. சுகறாவின் காதல், மஜீது வின் காலில் எழும் வலியைக் குறைப்பதில் வெளிப்படுகிறது – “… உடல்கள் நடுங்க….. சுகமான ஒரு பதற்றம். புதிதாக ஒரு ஆசுவாசமும். எதுவோ நிகழ்ந்திருக்கிறது. என்ன அது?”
மஜீது வின் வாப்பாவின் கோபத்தால், ஊரை விட்டே போகிறான் மஜீது. சுகறாவிடம் கூட சொல்லிக்கொள்ள முடியாத நிலை. ஒன்பதோ பத்தோ வருடகாலம் சஞ்சாரம் செய்து மனிதர்களைப் புரிந்து கொண்டாலும், கையில் காசு ஏதுமின்றி ஊருக்குத் திரும்பி வருகிறான். வியாபார நஷ்டத்தில் வாப்பாவும், உம்மாவும்; அதிக வயோதிகம் அடைந்திருந்தார்கள் – இரண்டு சகோதரிகளும் திருமண வயது கடந்து போய் நிற்கிறார்கள். சுகறாவுக்கு ஒரு கசாப்புக்கடைக்காரனுடன் திருமணம் ஆகியிருந்தது! ஒரு புகையிலைக் காம்புக்குக் கூட வழியில்லாத வறுமையில் மஜிது வின் குடும்பம்.
சுகறா திரும்பி வருகிறாள் – வேற ஒரு பொஞ்சாதியும், இரண்டு குழந்தைகளும் இருக்கும் கோபக்காரன் அவள் கணவன். மஜிதுவிடம், ‘ஒரே ஒரு நாளு உன்னைப் பார்த்துட்டு மரிச்சுடனும்’ ன்னு இருப்பதாகச் சொல்லி அழுகிறாள்!
தன் சகோதரிகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும், சுகறாவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்கிறான் மஜீது. பணம் சம்பாதிக்க மீண்டும் யாத்திரை கிளம்புகிறான். சுகறா பொறுப்பை ஏற்றுக்கொள்கிறாள். மஜீது கிளம்பும்போது ஏதோ சொல்கிறாள் சுகறா – வெளிச் சத்தத்தில் காதில் விழவில்லை – மஜீது சென்று விடுகிறான். ஒரு விபத்தில் வலது காலை இழக்கிறான். ஊரில் கடனில் மூழ்கி குடுமபத்தையே வீட்டை விட்டு போகச் சொல்கிறார்கள்- ஆறுதலாக இருந்த சுகறாவும் ‘மஜீது வந்து விட்டானா’ எனக் கேட்டபடி மரிக்கிறாள்.
மஜிது வின் மனதில் நினைவுகள் மட்டும் நிரம்பி நிற்கின்றன. ஊரை விட்டுக் கிளம்பும்போது சுகறா சொன்னது என்ன? கடைசியாக சொல்ல நினைத்தது என்ன?
காதலின் தோல்வி மட்டுமல்ல, இஸ்லாமியப் பின்புலமும், ஏழை பணக்கார பேதங்களும், உணர்ச்சிக் குவியல்களும் கொண்ட நிறைவேறாக் கனவுகளின் கற்பனைக் கதை இது. பஷீரின் கைவண்ணத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம், வார்த்தைகளால் சொல்லி விட முடியாது – வாசித்து உணரவேண்டும்!
ஜெ.பாஸ்கரன்.
- புனிதக் கருமாந்திரம்
- டெனிஸ் ஜான்சன் கவிதைகள்
- பீதி
- படித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்
- எம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டு
- மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்! —-சிறுகதை ஆர் சூடாமணி
- காலம் மகிழ்கிறது !
- மற்றொரு தாயின் மகன்
- இலைகள்
- மொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்
- ஒரு கதை ஒரு கருத்து – ஆர்.சூடாமணியின் நாகலிங்க மரம்
- ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில்: குளச்சல் மு.யூசுப்)
- நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் – ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல் விமர்சனம்