மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்! —-சிறுகதை ஆர் சூடாமணி

author
0 minutes, 1 second Read
This entry is part 6 of 14 in the series 24 ஜனவரி 2021

ஆர் கே இராமநாதன்

கதைக்குறிப்பு:-

நிறைவான வாழ்க்கை வாழும் ராமநாதன் கோமதி தம்பதியர் 35 வருட தாம்பத்ய பந்தத்தில் நாலு மணியான குழந்தைகள், அரை டஜன் தொடும் பேரன் பேத்திகள் என வரம் வாங்கி வந்த இனிய சூழ்நிலைதான். குடும்பத்தில் ஆனந்தத்திற்கும் சொந்தங்களின் பரஸ்பர அன்பு பரிமாற்றங்களுக்கும் பஞ்சமே இல்லை. தம்பதியரின் பெண்களும் பிள்ளைகளும்,அத்தை மாமாக்களும் ,தாத்தா பாட்டியும் சேர்ந்து ராமநாதனின் சஷ்டியப்த பூர்த்தியான அறுபதாம் கல்யாணத்தை விமரிசையாக கொண்டாட நினைக்கிறார்கள். அதற்கு முனைப்பு எடுத்து செயலிலும் இறங்குகிறார்கள். உறவினர்களை, நண்பர்களை அழைப்பது, விருந்து உபசார ஏற்பாடுகள், பெரிய அளவில் புகைப்படப் பதிவுகள் எல்லாம் என ஏகோபித்த எதிர்பார்ப்பு மகிழ்வுடன் அரங்கேற ஆயத்தமாகின்றன. புத்தாடை என்ன, அணிகலன்கள் என்ன,விழா அலங்காரம் என்ன என அமர்க்களப்படுகிறது விழா முஸ்தீபுகள்.

ராமநாதன் சொல்லும் ஒரு நிபந்தனைத்
தகவலில் மொத்த விழாவும் grinding halt என்பதான ஸ்தம்பிப்பில் வந்து நின்றுவிடுகிறது. செய்திசூடாக பரவுகிறது அனைவரின் காதுகளிலும் இதயங்களிலும்.

“மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்!”

மாமனார் மாமியாரில் துவங்கி பெண்கள் பிள்ளைகள் வரை “என்னாயிற்று இந்த மனிதருக்கு? புத்தி கித்தி பிசகி விட்டதா?” எனும் அங்கலாய்ப்பும் குணாதிசயம் குறித்த கடும் விமர்சனங்களும் தலை தூக்குகின்றன.

இத்தனைக்கும் ஓய்வு நாள் வரை திறம்பட பணியாற்றியவர்.
முசுடுகளைக்கூட சகஜமாக சிரித்துப் பழக வைக்கும் இன்குணத்தாளர்.

அவரா இப்படி ஒரு முடிவெடுத்து நிபந்தனை போட்டார்?

மேடை உண்டு மாலை உண்டு புத்தாடை உண்டு தன் தர்மபத்தினி அருகில் அமர்ந்தபடி தனிப்படம் குழுப்படம் எல்லாமும் உண்டு. ஏன் மாலை மாற்றுதல் கூட உண்டுதான்.

ஆனால் சடங்குகள் கிடையாது. ஆனால் ஹோமம் கிடையாது. அதிலும் அறுபதாம் வயது கல்யாண மாப்பிள்ளை தன் சொந்த (ம்) மனைவிக்கு தாலிகூட கட்ட மாட்டார்.

மொத்த வைபவத்தின் சிறப்பே தன்னுடன் இனிய இல்லற வாழ்வில் பயணித்து வரும் கணவர் கையால் முப்பத்தைந்து ஆண்டுகால கணவன் மனைவி பந்தத்தின் ஆனந்த அங்கீகாரமாக கோமதி என்னும் தான் தழையத்தழைய கழுத்து , மனது நிறைவாக இரண்டாம் முறையாக தாலிகட்டிக்கொள்ளும் எதிர்பார்ப்பிலிருந்தவளுக்கு வாய்ப்பில்லை. மனம் உடைகிறாள் கோமதி. அதிர்ந்து போகின்றன உறவுகள். ஆளுக்கொரு விமர்சனம்.
அப்படியென்ன பிடிவாதம்? இன்னும் ஒரு படி மேலே போய் வேறு யாராவது அவர் மனதில்?! அதிலும் இந்த வயதில்.?
விழா நாளன்று ஊர் காரணம் கேட்டால்?
தாலிகட்டாமல் என்ன அறுபதாம் கல்யாணம் வேண்டிக்கிடக்கிறது என கேள்விகேட்டால்?
பேசாமல் விழாவை நிறுத்திவிட்டால் என்ன? அவரோடு யார் மல்லுக்கட்டுவது?

ஆளாளுக்கு எல்லோரும் புலம்ப, கோமதி இறுதிக்கட்ட முயற்சியாய் தன் கணவனுடன் தனியே பேசுகிறாள்.

ஒரு தெளிவு பிறக்கிறது எல்லாவற்றிற்கும். கூடவே கோமதிக்கும்.

அந்த நாளும் வருகிறது. பாவம் அம்மா என பிள்ளைகள் பரிதவிக்க அம்மாவின் முகத்தில் அளவுகடந்த திருப்தி. சந்தோஷப் பொலிவு. என்னாயிற்று இந்த அம்மாவுக்குத்தான்?

கோமதி தன் கணவன் ராமநாதனுடன் நடந்த உரையாடலை மறுபடி நினைத்துக்கொள்கிறாள்.

அந்த உரையாடலுடன் முடிகிறது கதை.

கதை பாதிப்பின் விமர்சனப்பார்வை.!
__________________________________________

மாப்பிள்ளை தாலி கட்டமாட்டார்.

## எல்லோருமே திகைத்துப்போனார்கள். கோமதியின் வயோதிகப் பெற்றோர்க்கு அச்சானியமாய்க் கூட இருந்தது.
“இதென்ன கூத்து?! தாலி கட்டமாட்டேன்னா என்ன அர்த்தம்?” என்று கோமதியின் தாய் அதிர்ந்தாள்.##

தலைப்பு முடிந்தவுடனேயே கதை வேகமெடுத்து விடுகிறது.

கதை சொல்வதான நேர்த்தியில் இம்முறையும் ஆர் சூடாமணியின் எழுத்து வன்மை நிரூபணமாகிறது.

ஓ ஹென்றி,அசோக மித்திரன், சுஜாதா இவர்களின் சிறுகதைகளின் முடிவில் ஒரு எதிர்பாரா திருப்பம் முடிச்சிடப்பட்டிருக்கும் என சொல்வதுண்டு. ஆர் சூடாமணியின் இந்த கதையில் அது நுணுக்கமாய் மிளிர்கிறது என்பது கண்கூடு.

உண்மையில் அந்த முடிவை சொல்லிவிட்டால் கதையின் narration சுடர் குறையக்கூட வாய்ப்பிருக்கிறது.

ஆனால் முடிவைக் கோடிட்டாவது காட்டவில்லையென்றால் கதைக்கட்டுமானத்தின் உன்னதம் வாசகர்களுக்கு உணர்த்தபடாமலேயே போய்விடலாம். அதை தேடிப்பிடித்து வாசிக்கும் வரை ஒரு தேர்ந்த வாசகன் விமர்சன பாரத்தை சுமந்தபடி அலைய நேரிடும். அது நல்ல வாசகனுக்கும் தகுதியான படைப்பாளிக்கும் உள்ள பந்தத்திற்கு ஹானி செய்வதுபோலகூட ஆகிவிடும்.

கதையின் துவக்கத்தில் கதையின் நாயகன் ராமநாதன் மீதான பார்வையும் விமர்சனங்களும் நம்முன் ஒரு தீவிர தோற்றத்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

கதை மாந்தர்களுக்குள் எழும் கேள்விகள், மனமாற்றங்கள் இவை எல்லாமுமே அதே த்வனியில் நம்முள் கடத்தும்படி இருப்பது எழுத்தாளரின் ஆளுமை நேர்த்திதான்.

தாலி கட்டமாட்டேன் என்னும் முடிவெடுத்ததால் இதுவரை கொண்டாடப்பட்ட நாயகன் குணாதிசய மாறுபடாக, ஸெனிலிட்டியாக பார்க்கப்படுகிறார். பீடத்திலிருக்க வேண்டியவரை கீழே சரிக்கின்றனர்.
கோமதிக்கோ தாளவில்லை. என்ன குறை வைத்தேன் இவருக்கு என அரற்றுகிறாள்.

ஆற்றாமை அவளை கலங்கடிக்கிறது. கதையின் புயல்மையம் சுழல் கொள்கிறது.

எந்தப்புயலும் கரை கடந்தோ வலுவிழந்தோ போவதுதானே இயற்கை விதி?!

நேரே கேட்டு விடுகிறாள் கணவனிடம்.

அவளின் தோளை அணைத்து நிறுத்தி நேரே விழிகளுக்குள் பார்த்து சொல்கிறார் கணவர் ராமநாதன்.

“கோமு! நான் சொல்றது உனக்குப் பைத்தியக்காரத்தனமாத் தோன்றலாம்.
ஆனா என் உணர்ச்சி என்னமோ இப்படித்தான் இருக்கு. என் ஆயுசில் எனக்கு ஒரு மனைவிதான். வேறு விதமாய் சொப்பனத்தில் கூட என்னால் நினைக்க முடியாது. ரெண்டாம் தடவையாய் ஒரு பெண் கழுத்தில் தாலிகட்ட நான் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். அவள் என் மனைவியாகவே இருந்தாலும்கூட !”

அந்த முடிவில் உயர்கிறது அந்த கதாபாத்திரத்தின் சிறப்பும் எழுத்தாளரின் தனித்துவ அடையாளத்தின் சிறப்பியல்பும்.!
——–ஆர் கே இராமநாதன்! 

Series Navigationஎம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டுகாலம் மகிழ்கிறது !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *