’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

2
0 minutes, 1 second Read
This entry is part 12 of 14 in the series 24 ஜனவரி 2021

1.குடிபெயர்தல்



வீடு ஆகுபெயரெனில் யாருக்கு?
எனக்கா உனக்கா அவருக்கா இவருக்கா …
கற்களாலானவை வீடுகள் என்றே கணக்கில் கொண்டால்
உயிரற்றவைகளிடம் அன்புவைக்கும் அவஸ்தை மிச்சம்
உயிரின் உயிர் எங்கு நிலைகொண்டிருக்கிறது
மனதிலா?
ஒரு வீட்டிலும் என் மனதை விட்டுவைத்து வந்ததில்லை.
என் வீடு நான் தான்
என்றால் நானும் தானும் ஒன்றேயா ஒன்று போலா வெவ்வேறா
பாராளப்பிறந்தவர்க்கெல்லாம் இருப்பது
ஒரேயொரு பார் தானா
இன்றெனக்குக் கேட்பது
நேற்றுவரை இல்லாத இருமலா
இருந்தும் எனக்குக் கேட்காததா?
வரளும் நெஞ்சங்களெல்லாம் இருமிக்கொண்டிருக்கின்றனவா?
சரியாகியிருக்கும் சில
சவப்பெட்டிகளுக்குள்ளும்
எரிந்த சாம்பலிலும்
திருவாயற்றமொழியாகியிருக்கும் சில…
எல்லோருக்கும் சமயங்களில் நன்றி சொல்லத் தோன்றுவது போலவே
இந்த வீட்டுக்கும் சொல்லத் தோன்றுகிறது
கண்ணீரேதும் திரளாதபோதும்.
கொரோனா காலகட்டத்தை இதுவரை நான்
பாதுகாப்பாகக் கடந்ததற்கு
இந்த வீடும் ஏதோ ஒருவகையில் உதவியிருக்கிறது.
ஏதொரு வீதியை தெருவை சந்துபொந்தைக் கடக்கும்போதும்
பாதிப்பேதும் அடைந்ததில்லை
எதிலிருந்தும் விலகியே நிற்கும் மனம்
ஒரு காலத்தில் பிரம்மப்ப்ரயத்தனமாகக்
கற்றது கசடற
இன்று இரண்டாம்தோலாகிவிட்டதொரு
வரம்போலும் சாபம்போலும்.
புதிதாய் குடிபுகும் வீட்டில்
காத்துக்கொண்டிருக்கின்றன கேள்விகள்.
வழக்கம்போல் குரல்வளையிலிருந்து தெறித்துவிழும் சில;
கண்களில் மின்னித் தெரியும் சில.
பெரும்பாலானவர்களிடமோ ஒருசிலரிடமோ
பாஸ் மார்க் வாங்கக்கூட நிறைய பாவனைகளைக் கைக்கொள்ளவேண்டியிருக்கும்.
ICU வார்டில் கணவனின் இருதயப்பகுதியெங்கும் குறுக்கும் நெடுக்குமாய் நுண்குழாய்கள் படர்ந்திருக்க
கீழே காத்திருப்பு அறையில் தூக்கம் தொலைத்து அமர்ந்திருப்பவளின்
சொந்த வீடு இந்நேரம் அவள் சொந்தவீடுதானா?
நாளை நல்லதாக விடியட்டும் எல்லோருக்கும் என்றொரு பிரார்த்தனையில் மனம் தன்னிச்சையாகக் கைகூப்பிக் கண்மூடி ஒன்றுகிறது.
நகுலனிடம் சொல்லவேண்டும்போலிருக்கிறது _
திரும்பிப்பார்க்கையில் இடம் காட்சியளிக்கிறது
காலமாக.

  •  

2.உள்ளொளியின் இருளில்….




சுடர் விளக்கொளியைப் பார்த்தல்
ஒரு தரிசனமாக
இருகைகூப்பித் தொழுகிறாள்.
சுடர் அணையப் பார்க்கிறது.
கை குவித்துத் தடுக்கிறாள் காற்றை.
உள்ளிறங்கிய திரியை உடனடியாக விளக்கின் குகைவழியாக மேலுயர்த்துகிறாள்.
கொஞ்சம் எண்ணெய் எடுத்துவந்து ஊற்றுகிறாள்.
அலையும் சுடருக்குள்ளிருந்து காலம் எட்டிப்பார்ப்பதுபோல்
தோன்றுகிறது.
நக்கலாக சிரிப்பதுபோலவும்.
மருள் மனம் மறுபடி மறுபடி சொல்லிக்கொள்கிறது
தனக்குத்தானே _
‘அணையவே ஒளி
ஒளியின் மறுபக்கம் இருள்
பொருளின் பொருள் அனர்த்தமாக
அதற்கொரு அர்த்தம் கற்பிக்கும் பிரயத்தனமே
பிரகாசமாக
திரும்ப
இருளும் ஒளியும்
திரும்பத்திரும்ப
திரும்பத்திரும்பத்திரும்ப……..’

மனதின் ஓரத்தில் சுடர்விட்டவாறிருக்கிறது
ஓர் ஒளித்துணுக்கு.

  •  

3.வடிகால் வெளியே இல்லை




மனதின் மோனலயத்தை வெட்டிப் பிளக்கும் கூர்முனை வாளாய்
அருகில் மிக அருகில்
ஒரு குரல் அலறிக்கொண்டிருக்கிறது.

அலைபேசிக்கு வலிக்குமோவென
அத்தனை சன்னமாய் பேசும் தோழி
நினைவுக்கு வந்து கண்களில் நீர்குத்தச் செய்கிறாள்.

ஒரு குரலின் வெறும் பேச்சு அதன் செவிக்கு
அத்தனை இனிமையாய்;
அடுத்திரு காதுகளுக்கு துருப்பிடித்த கத்திக்கீறல்களாய்……

வேற்றுமையில் ஒற்றுமை காணும் எல்லைக்கப்பாலிருக்கும்
இக்குரலின் பிளிறல்
நடுமண்டையில் கீறி உட்புகுந்து அங்குள்ள நரம்புகளின்
வலைப்பின்னலமைப்பை சீர்குலைத்து
இதயத்தில் விவரிக்கவியலா வலியேற்படுத்தி
வெகு நிராதரவாக உணரவைக்கிறது என்னை.

நல்லவராகவே இருக்கக்கூடும் என்றாலும்
நாராசக்குரலால் கவிதையை பின்னங்கால் பிடரிபட
ஓட ஓட விரட்டுபவரை
வெறுத்தொதுக்காமல் புறக்கணிக்காமல்
இருந்தவாறு
என்னையும் பறிகொடுக்காமல் புரந்துகாக்கும்
உரமளிப்பாய்
வரமளிப்பாய்
மாகாளி….
பராசக்தி…

  •  
Series Navigationஒரு கதை ஒரு கருத்து – ஆர்.சூடாமணியின் நாகலிங்க மரம்பால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில்: குளச்சல் மு.யூசுப்)
author

ரிஷி

Similar Posts

2 Comments

  1. Avatar
    அழகியசிங்கர் says:

    குடி பெயர்தல் கவிதையில் ஏன் நகுலனின்
    சொல்ல வேண்டியிருக்கிறது என்ற வரி புரியவில்லை

    1. Avatar
      latha ramakrishnan says:

      வணக்கம். நீங்கள் பல வருடங்களாக சிறு பத்திரிகை நடத்திவருகிறீர்கள். சிறுபத்திரிகைவாசியாகவும் அறியப்படுபவர். கவிஞர் நகுலனை அறிந்தவர். அவருடைய கவிதைகளை வெளியிட்டிருப்பவர். நீங்கள் இவ்வாறு ‘புரியவில்லை’ என்று கூறியிருப்பது வருத்தமளிக்கிறது. எப்போதுவேண்டுமானாலும் நகுலனின் வரிகள் நினைவில் மேலெழலாம் என்பது ஒருபுறமிருக்க என் கவிதையில் நகுலன் நினைவுகூரப்படுவதற்கான காரணம் எந்தப் பூடகத்தன்மையும் இல்லாமல்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘திரும்பிப் பார்க்கையில் காலம் ஒரு இடமாகக் காட்சியளிக்கிறது’ என்பது நகுலனின் பிரபலமான வரி. என் கவிதை ‘இடத்தைக் காலமாக உணர்கிறது’ இதன் தொடர்ச்சியாய் நகுலனின் வரியை நினைவுகூர்கிறது. இவ்வளவே. தோழமையுடன் லதா ராமகிருஷ்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *