தமிழிய ஆன்மீக சிந்தனை

This entry is part 3 of 16 in the series 31 ஜனவரி 2021

******

எச்.முஜீப் ரஹ்மான்

தமிழர் ஆன்மீக மரபு என்பது முழுக்க முழுக்க அறிவை அடிப்படையாகக் கொண்டது. எனவே தான் தமிழிய சிந்தனை அல்லது இயல்பு வாதம் அல்லது பூதவாதம் ஒரு மரபாக இருந்து பல்வேறு சமயங்களுக்கு பெரும் கொடை அளித்திருக்கிறது. உண்மைமை சொல்லப்போனால் தமிழருடைய ஆன்மீகம் என்பது ஞானத்துக்கு உயர்ந்த இடத்தை கொடுக்கிறது. பொதுவாக மக்கள் ஆன்மீகத்தை புரிந்து கொள்வதின் அடிப்படையில் ஞானி, அறிஞர் ,சாதாரண மக்கள் என்று வகைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஞானியால் மட்டுமே அந்த அறிவை பெற முடியும். அறிஞர்கள் கூட அதை பகுத்தறிவுவாதமாக புரிந்து கடவுள் மறுப்பு வாதமாக ஞானத்தை புரிந்து கொள்வதை பார்க்க முடியும். சாதாரண மக்கள் வழிபாட்டு முறைகளை பாமரத்தனமாக செய்து அதைதான் ஆன்மீகம் என்று நினைக்கின்றார்.தொல்காப்பியம் ஐந்திறம் என்று சொல்லும் பஞ்சபூதம் தான் இயற்கை ஆன்மீக அறிவாகும். 

நிலம் தீ நீர் வளி விசும்பொடு / ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” (பொருளதிகாரம் மரபியல் 86) என்று வரையறுக்கிறது தொல்காப்பியம். நிலம் – நீர் – தீ – வளி – வெளியென்ற ஐந்தின் கலவைதான் இந்த மண்கோள் என்று முரண்பாடில்லாத கருத்தை முன்மொழிகிறது.

‘மண வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களைப் பெற்று இன்பவாழ்வு வாழ்ந்ததும், தலைவனும் தலைவியும் கடவுளைப் பற்றி எண்ண முற்பட வேண்டும். அதுவே வாழ்க்கையின் குறிக்கோளாகும்’ என்று தொல்காப்பிய நூற்பா கூறுகின்றது.

காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

(பொருள். அகத்திணையியல் – 5)

இது உயர்ந்த ஒரு கடவுள் தத்துவம் இருக்கிறது என்பதை சொல்கிறது. அது போல் திணை தெய்வம் என்பது பாமரமக்களின் வழிபாடு ஆகும்.

(மாயோன் = திருமால், மேய = விரும்பிய, காடுறை = முல்லை நிலம் (காடும் காட்டைச் சார்ந்த இடமும்), சேயோன் = முருகன், மைவரை = குறிஞ்சி நிலம் (மலையும் மலையைச் சார்ந்த இடமும்), வேந்தன் = இந்திரன், தீம்புனல் = மருதநிலம் (வயலும் வயலைச் சார்ந்த நிலமும்), பெருமணல் = நெய்தல் (கடலும் கடலைச் சார்ந்த இடமும்)

இவற்றிலிருந்து பழந்தமிழர்கள் கடவுட்கொள்கை உடையவர்கள் என்பதும், எல்லாவற்றையும் கடந்து நின்ற முழுமுதற் கடவுள் ஒருவனைப் பற்றிய கோட்பாட்டினை உடையவர்கள் என்பதும் பெறப்படும்.

”வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்” என்பது மற்றொரு நூற்பா. ‘வினையின் நீங்கிய முனைவன்’ என்பதாலேயே, அவன் என்றுமே வினையினால் கட்டப்படாதவன் என்பது பெறப்படுகிறது. பழந்தமிழர்கள் முழுமுதற் கடவுளையே தம் கருத்தில் கொண்டிருந்தனர் என்பர். இன்றும் பேச்சு வழக்கில் தெய்வத்தைக் குறிப்பதாக உள்ள கடவுள் என்னும் சொல் எல்லாவற்றையும் ”கடந்து நிற்பது” என்னும் பொருளைக் காட்டி நிற்கிறது. தொல்காப்பியர் இச்சொல்லை ஆள்கிறார்.

காமப்பகுதி கடவுளும், வரையார்,

ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்

(பொருள், புறத்திணையியல்: 81)

இங்கே ‘கடவுள்’ என்பது தத்துவப் பொருளாக அமைந்த கடவுளராவர். மாயோன், சேயோன், வருணன், இந்திரன் முதலியோர் திணைநிலைக் தெய்வங்கள் ஆகும்..இவற்றுக்கு வித்தியாசம் இருக்கிறது.அதுபோல

திருவள்ளுவர் ஆண்ட ‘இறை’ (388) என்னும் சொல், இருத்தலையும் எல்லா இடத்திலும் நிறைந்திருத்தலையும் குறிக்கும். இக்கருத்தைத் திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலிருந்து பெறுகிறோம். (இறைவன் 5,10) இறைவன் என்ற சொல்லால் எங்கும் நிறைந்தும் எல்லாவற்றையும் கடந்தும் உள்ள கடவுளைப் பற்றிய கோட்பாடு தமிழர்களிடையே நிலவி வந்தது எனலாம். தொல்காப்பியத்தில் வரும் கந்தழி என்னும் சொல்லும் தெய்வத்தையே குறிக்கும்.

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

(பொருள், புறத்திணையியல் : 85)

”இறைவன்” முழுமுதற் கடவுள், சுதந்திரமுடையவன், கடந்து நிற்பவன் என்னும் பொருள்களை இச்சொல் குறிக்கும் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்.

மதுரைக் காஞ்சியில் கடவுளின் பல சிறப்புகள் கூறப்படுகின்றன.எனவே முழுமுதல் கடவுள் குறித்து தான் அது பேசுகிறது.

நீரு நிலனுந் தீயும் வளியு

மாக விசும்போ டைந்துடனியற்றிய

மழுவாள் நெடியோன் தலைவனாக

(453-455)

(வளி = காற்று, விசும்பு = ஆகாயம்)

என்ற குறிப்பு வருகிறது.

இதன் பொருள்: திக்குகளை உடைய ஆகாயத்துடனே நீரும் நிலனுமாகிய ஐந்தினையும் சேரப்படைத்த மழுவாகிய வாளை உடைய பெரியோனை ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு …. என்று கொள்ளலாம்.மேலும்

பாவாணர் கடவுள் சமயம் குறித்து இப்படி சொல்கிறார் .

ஊர் பேர் காலம் இடம் வண்ணம் வடிவம் பால் பருவம் முதலிய வரையறையின்றி, எங்கும் நிறைந்து, எல்லார்க்கும் எல்லா வற்றிற்கும் பொதுவாய், எல்லாம் வல்லதாய், என்றும் மாறாதிருக்கும் பரம்பொருளை உள்ளத்தில் அகக்கண்ணாற் கண்டு தொழுது, முக்கரணத் தூய்மையுடன் ஒழுகுவதே கடவுட் சமயமாம். 

கடவுட் சமயம், இல்லறம் துறவறம் என்னும் இருவகை அறவாழ்க்கைக்கும் பொதுவாம். அதனாற் பெறும் பேரின்பமும், இம்மை மறுமை யிரண்டிற்கும் பொதுவாம். இம்மையிற் பெறுவது உடலிருந்த வீடு என்றும், மறுமையிற் பெறுவது உடலிறந்த வீடு என்றும் பெயர் பெறும்.

எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் கடவுள். எல்லா வுலகங் களையும் ஆள்வதால் ஆண்டவன் என்றும், எங்குந் தங்கியிருப்பதால் இறைவன் என்றும், எல்லா வுயிர்கட்கும் உணவைப் பகுத்தளிப்பதால் பகவன் என்றும் பெயர் பெறுவன். ‘ஆண்டவன்’ முதலிய பிற பெயர்கள் பெருந்தேவ மதங்களிலும் வழங்குவதால், கடவுட் சமயத்திற்குத் தனிச் சிறப்பாகவுரிய தெய்வப் பெயர் கடவுள் என்பதே.

தெய்வத்தையும், “நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்” (இராமலிங்க அடிகள் பாடல்) என்பதிற் பெருந்தேவ னையும், “தெய்வம் நின்று கொல்லும்” என்னும் பழமொழியிற் கடவுளையும், குறித்தல் காண்க. “வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள். 50) என்பதில், சிறுதெய்வத்தின் பாற்பட்ட தேவருலக வாழியைக் குறித்தது.

தன்வயத்தனாதல், எங்கும் நிறைதல், எல்லாம் வல்லனாதல், எல்லாம் அறிதல், என்று முண்மை, இயல் மாறாமை, முழுத் தூய்மை, ஒப்புயர்வின்மை, பேரருளுடைமை, வரம்பிலின்பமு டைமை என்பன கடவுளின் இயல்களாகச் சொல்லப் பெறும்.எல்லாம் வல்ல இறைவணக்கத்தையே கொண்ட சிவனியம், மாலியம், யூதம், கிறித்தவம், இசலாம் முதலிய எல்லா மதங்கட்கும், கடவுட் சமயம் பொதுவாம்.

இசுமவேல இசுரவேலரின் முன்னோனான ஆபிரகாமிற்கு முன்பே, நோவா காலத்துப் பெருவெள்ளத்திற்கும் முன்னரே, கடவுளை உலகில் முதன் முதலாகக் கண்டவர் குமரிநாட்டுத் தமிழரே. கடவுள் என்னுஞ் சொல் தொல்காப்பியத்தில் ஆளப்பட் டிருப்பதே, அதற்குச் சான்றாம்.

“காமப் பகுதி கடவுளும் வரையார்”(தொல். புறத். 28)         “கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.”(தொல். புறத். 33)

கடவுள் என்னுஞ் சொல், எல்லாவற்றையுங் கடந்து எண் ணிற்கும் எட்டாத பரம்பொருளையே குறிக்கும். சிறுதெய்வ வணக்க ஆரியர்(பிராமணர்), பிற்காலத்தில் அதைப் பிழைபட ஆண்டு விட்டனர்.

கடவுட்கு உருவ மின்மையால், உருவ வணக்கமு மில்லை. எவரும் எங்கும் என்றும் தமித்தும் பிறரொடு கூடியும், கடவுளைத் தொழலாம்.

திருவள்ளுவர் கடவுட் சமயத்தார். அதனால், முதற் பகவன், வாலறிவன், மலர்மிசை யேகி, விருப்பு வெறுப்பில்லான், இறைவன், ஐம்புலம் வென்றான், உவமையிலி, அறவாழி யந்தணன், எண் குணத்தான், பிறவி நீக்கி எனக் கடவுட் குரிய பல்சமயப் பொதுப் பெயர்களையே தம் கடவுள் வாழ்த்தில் ஆண்டார்.கடவுட் சமயம் துறவியர்க்கே உரிய தென்றும், இல்லறத் தார்க்கு உருவ வணக்கம் இன்றியமையாத தென்றும், கருத்து இற்றைத் தமிழ ருள்ளத்திற் புகுத்தப்பட்டுள்ளது.

உண்மையை சொல்லப்போனால் தமிழர் ஞானம் அல்லது அறிவு என்பது பரம்பரை பரம்பரையாக ஞானப் பரம்பரை அடிப்படையில் சித்தர்கள் அல்லது ஞானிகளிடம் மாத்திரமே கை அளிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு அந்த நிலை இல்லாத காரணத்தால் அவர்கள் இதை புரிந்துகொள்ள முடியாமல் திணறுகின்றனர். எனவேதான் பொதுவாக பூதவாதத்தை உலகாயதமாக உணர்ந்துகொண்டு அதை நாஸ்திக, அவைதிக மரபாக முன்னெடுத்த தன்மை காணப்படுகிறது. பொதுவாக வைதீக மரபு ஞானத்தை புரிந்துகொள்வதில் இன்னும் சிக்கல்களை முன்வைக்கிறது. எனவேதான் திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் நாம் புரிந்து கொள்வதில் நிறைய தவறிழைத்துக் கொண்டிருக்கிறோம்.

 தொல்காப்பியத்தில் ஞானமரபு சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அதுபோல் திருக்குறளிலும் அவை சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அவை ஞானம் கையளிக்கப்பட்ட ஞானிகளை தவிர மற்றவர்களுக்கு விளங்காத ஒன்றாகவே இருக்கிறது. இந்த ஞானத்தையுடைய ஒரு சில கூறுகளை தமிழர் திணை வழிபாட்டு கூறுகளிலும் தெய்வங்களும் தக்கவைத்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவை முழுமையானது அல்ல. சைவமும் வைணவமும் ஞானத்தை ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்ல முடியும். தமிழிய சிந்தனை அல்லது பூதவாதம் அல்லது ஒருமை வாதம் அல்லது இயல்பு வாதம் மட்டுமே சிறந்த அறிவு கொண்ட சித்த மதமாக கருதப்படுகிறது. அதுபோல பூத வாதத்தில் இருந்து கிளைத்த ஆசீவகம் கூட சரியான அறிவு மதமாக உருவாகாமல் போய்விட்டது. அது பின்னர் வழிபாட்டு மதமாகவே மாறி வைதிக சமயத்தில் அழித்தொழிக்கப்பட்டது என்ற வரலாறு காணப்படுகிறது. மேலும் சமணம் பௌத்தம் போன்ற மரபுகள் கூட நாஸ்திக தன்மையை வெளிப்படுத்தி அறிவு மரபை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. எனவேதான் சித்த மதம் என்கின்ற நம்முடைய அறிவு மதம் பூதவாதத்தை முன்னிலைப்படுத்தி இருந்தாலும் அந்த விஷயத்தை நாம் சரியாக புரிந்து கொள்வது பற்றி சொல்லித் தரப்படவில்லை என்று சொல்ல முடியும். 

உண்மையில் இந்த பிரபஞ்சமாக இயற்கையாக வெளியாகியுள்ள இந்த பஞ்ச பூதங்கள் இறைவனுடைய அகமியமாக இருந்து இறைவனை தனக்குள் காணுகின்ற ஒன்றாகவும் பிரபஞ்சத்தில் காணுகின்ற ஒன்றாகவும் இருக்கின்ற அத்துவிதம் என்கின்ற கோட்பாடு இருக்கிறது. இந்த அத்துவிதம் என்பதுதான் தமிழர் ஆன்மிக மரபு ஆகும். எனவேதான் இயற்கையை வழிபடாமல் அதன் மூலத்தை வழிபட வேண்டும் என்ற அடிப்படையில் அருவ வழிபாட்டை இது முன்னெடுக்கிறது. மூலமான ஒன்றுதான் ரூபமாக வெளியாகியிருக்கிறது. அந்த மூலமான ஒன்று அரூபமான ஒன்றாக இருக்கிறது என்ற அடிப்படையை அத்துவிதம் சுட்டிக் காட்டுகிறது. இது அனைத்து மதங்களிலும் ஆங்காங்கே சொல்லப்பட்டிருந்தாலும் தெளிவாக சொல்லப்படவில்லை என்பது தான் உண்மை. அதனால்தான் உருவ வழிபாடுகளும் சடங்கு சம்பிரதாயங்களும் ஏற்பட்டு மதங்களாக உருவாகிவிட்டன. 

தமிழர் ஆன்மீக கோட்பாடு இந்த பாடலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே

மரத்தினாலான ஒரு யானை செய்யப்பட்டிருக்கின்றது. இந்த யானையை லயித்துப்பார்க்கின்றபோது மரத்தைக் காணமாட்டோம். யானையைத்தான் காண்போம்.

மரத்தைப்பார்கின்றபோது யானையை பார்க்கமாட்டோம். மரம்தான் நமக்கு தெரியும். எனவே இந்த யானையின் ஒவ்வொரு அணுவிலும் வேறு எந்தப்பொருளும் யதார்த்ததில் இல்லை. இதேபோன்றுதான் சிருஷ்டி என நாம்  பார்க்கின்றபோது, இறைவனை காணமாட்டோம். இறைவன் என்று பார்க்கின்றபோது சிருஷ்டியைக்காணமாட்டோம். இறைவன் தான் சிருஷ்டியாக தோற்றுகின்றான்.

மரம்தான் யானையாக தோன்றியிருப்பதுபோல இறைவன் தான் சிருஷ்டியாக தோன்றுகின்றான். அதுபோல் இவ்வுலகத்தை ஐம்பூதங்கள் மறைக்கிறது.இவ்வுலகின் சிஷ்டிகளை பார்க்கிற போது ஐம்பூதங்கள் மறைந்து போகின்றன.ஆனால் இரண்டும் ஒன்று தான்.யானையின் ஒவ்வொரு அணுவிலும் மரம் இருப்பதுபோல, 

சிருஷ்டியின் ஒவ்வொரு அணுவிலும் ஐம்பூதங்கள்-அவனுடைய மெய்ப்பொருள்தான் இருக்கின்றது என்பதை   மிக மிகத்தெளிவான உதாரணத்தின் மூலம் இப்பாடல் விளக்குகிறது.

பூத வாதம் அல்லது சித்த மதத்தில்  சடங்குகளும் சம்பிரதாயங்களும் இல்லை. படைப்புகளின் யதார்த்தத்தை உண்மையை புரிவது தான் ஞானம் என்று சித்தர்கள் நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அந்த அனுபவத்தை நாம் தன்னில் அறிந்துகொண்டு அதை உணர்ந்து அத்துடன் ஐக்கியமாக மாறுகின்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை சித்தர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். எனவே தான் சித்தர்கள் தனிமையை நாடி தனித்து இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்று சொல்லலாம் .எனவே அத்தகைய ஒரு நிலையை அடைந்தவர்கள் தான் சித்தர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். சித்தர்கள் என்பவர்கள் தான் ஞானிகள் என்று அழைக்கப்படுகிறார். எனவே ஞானிகளை தவிர மற்றவர்களுக்கு இந்த அத்துவித உண்மை சரியாக புலப்படாது. அதனால்தான் அறிஞர்களும் சாதாரண மக்களும் கடவுளை புரிந்து கொள்வதில் தமிழர் சிந்தனையை புரிந்துகொள்வதில் தவறிழைத்து விட்டனர் என்று சொல்லமுடியும்.

@@@@

Series Navigationதேன்மாவு : மூலம் : வைக்கம் முகமது பஷீர்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

எச்.முஜீப் ரஹ்மான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *