தோள்வலியும் தோளழகும் – இந்திரசித்

This entry is part 13 of 16 in the series 31 ஜனவரி 2021

                                                 

                        இடியும் மின்னலுமாக இருந்தபோது இவன் பிறாந்ததால் மேகநாதன் எனப் பெயரிடப்பட்டான். பின்னால் இந்திரனைப் போரில் வென்றதால் இந்திரசித் எனப் பெயர் பெற்றான்i மேகநதன் இந்திரனை வெற்றி கொண்டதை சூர்ப்பணகை

     தானவரைக் கரு அறுத்து, சதமகனைத் தளையிட்டு

     வானவரைப் பணி கொண்ட மருகன்

        என்றும்

     இருகாலில் புரந்தரனை, இருந்தளையில்

       இடுவித்த மருகன் என்றும்  பெருமையோடுகுறிப்பிடுகிறாள்

                        கடும் தவமிருந்து, மும்மூர்த்திகளிட மிருந்து பிரும்மாஸ்திரம், நாகாஸ்திரம், பாசுபதாஸ்திரம் போன்ற பலவிதமான அஸ்திரங்களைப் பெற்றவன் இவன். இலங்கையில் பிராட்டியைத் தேடிய அனுமன் ஒரு அரண்மனையில் உறங்கிக் ஜொண்டிருக்கும் இந்திரசித்தைப் பார்க்கிறான். சிங்கம்  போல் விளங்கும் இவன் தான் இராவணனோ? சிவ குமாரனான முரு கனோ? மும்மூர்த்திகளுக்குச் சமமான வீரனைத்துணையாகப் பெற்ற இராவணன் மூவுலகங்களையும் வென்றது அதிசயமன்று வீரத்திலும் அழகிலும் நிகரற்று விளங்கும் இவன் யாராக இருந் தாலும் இராம இலக்குவர்கள் இவனால் போரில் பெரும் இன்னல் களைச் சந்திக்கப் போகிறார்கள் என்று கணித்து விடுகிறான்.

     இவனை இன்துணை உடைய போர் இராவணன் என்னே

     புவனம் மூன்றையும் வென்றது ஒரு பொருள் எனப் புகறல்?

     சிவனை நான்முகத்தொருவனைத் திருநெடுமாலாம்

     அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ?

             [சுந்தர காண்டம்] ஊர் தேடு படலம் 141]  4976

. இப்படி அனுமனால் பாராட்டப் பெற்றவன் இந்திரசித்.

                   பிராட்டியைக் கண்டு கணயாழி காட்டிய அனுமன், பிராட்டி கொடுத்த சூடாமணியைப் பெற்றுக் கொள் கிறான். உடனே திரும்பிச்செல்லாமல், ஏதேனும் செய்து எப்படியும் இராவணனை சந்திக்க நினைக்கிறான்.அதற்காக அசோகவனத்தை அழிக்கிறான் இதைக் கண்ட காவலளிகள், இராவணனிடம் சென்று ஒரு வானரம் அசோகவனத்தை அழிப்பதாகச் சொல்கிறார்கள். இராவணன் இதை நம்ப மறுக்கிறான். கிங்கரர்கள், மன்னனத் தடுத்து, குரங்கைக் கைப்பற்றச் செல்கிறார்கள். பின் பஞ்ச சேனா பதிகள், சம்புமாலி, இராவணன் மகன் அக்க குமாரன் என ஒவ் வொருவராக வந்து விட்டில் பூச்சி மடிவது போல் வீழ்கிறார்கள்

பணைத்தோள்——-பருத்த தோள்               

                               அக்க குமாரனைக் கொன்ற குரங்கைப் பிடித்துக் கொண்டு வருவேன் என்று சூளுரைத்துப் போர் செய்ய

வருகிறான் இந்திரசித். ”எம்பியோ தேய்ந்தான்? எந்தை புகழன்றோ தேய்ந்தது?”என்று சீறி அவன் வருவதைக் கண்ட அனுமன், வாரும் வாரும் என்று முகமன் கூறி அழைக்கிறான் அனுமன். அவன் செய்த போரில் தேர்களூம் யானைகளும் அரக்கர்களூம் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு இந்திரசித் கோபமடைந்தாலும் அனுமனின் ஆற்றலை  நினைத்து முறுவலும் கொள்கிறான்.வீரத்தை மதிக்கிறான்

          தேரும், யானையும், புரவியும், அரக்கரும் சிந்திப்

          பாரின் வீழ்தலும், தான் ஒரு தனி நின்ற பணைத்தோள்

          வீரர் வீரனும், முறுவலும் வெகுளீயும் வீங்க,

          ”வாரும், வாரும்” என்று அழைக்கின்ற அனுமன்மேல்

                                                              வந்தான்

               [சுந்தர காண்டம்] [பாசப் படலம் 59] 5776

பாழித் தோள்—பருத்த தோள்

                               இருவரும் போர் செய்கையில் அனுமன் கொண்ட பேருருவத்தைக் கண்டு மாயையில் வல்லவனான இந்திரசித் வியந்து பார்க்கிறான். அனுமன் தேரோடு சாரதியையும் அடித்து வீழ்த்துகிறான். உடனே இந்திரசித் இன்னொரு சேமத் தேரில் ஏறுகிறான்

          ஊழிக்காற்று அன்ன ஒரு பரித்தேர் அவண் உதவ,

          பாழித்தோளவன், அத் தடந்தேர் மிசைப் பாய்ந்தான்

                        [பாசப் படலம் ]  5785

                               அனுமன் மேனியை சக்கரப் படை போன்ற வாளிகளால் மறைக்கிறான் இந்திரசித். இருவரும் கடுமையாகப் போர் செய்கிறார்கள்.தேர்களையெல்லம் அனுமன் தவிடு பொடியாக்குகிறான் .இதைக் கண்ட இந்திரசித் அயன் படையை ஏவி விடுகிறான் அப்படைக்கலம் வருவதையறிந்த மாருதி அதற்கு மதிப்பளித்து கட்டுப்படுகிறான். அப்படை மாருதியின் உடலைப் பிணித்தது. அரக்கர்கள் ஆரவாரம்

செய்கிறார்கள். பிரமாஸ்திரத்தால் கட்டிய அனுமனை இராவணன் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான் இந்திரசித். தூதனைக் கொல்வது தகாது என்று வீடணன் தடுத்ததால் அனுமன் வாலில் தீ வைக்க, அத் தீயாலேயே இலங்கையை எரித்துச் சாம்பலாக்கு கிறான் அனுமன்

                       வானரர்களின் உதவியோடு கடலைத்தூர்த்து அணை கட்டி இலங்கைக்கு வருகிறார்கள் இராம இலக்குவர்கள்.

இராம இராவண யுத்தம் தொடங்கி கும்பகருணன் மாண்டபின் இராவணன் மகனான அதிகாயன் போர் செய்ய வருகிறான்.

இலக்குவனுக்கும் அதிகாயனுக்கும் நடந்த உக்கிரமான போரில் இலக்குவனால் அதிகாயன் வீழ்த்தப் படுகிறான். இதற்குப் பழி தீர்க்க வருகிறான் இந்திரசித்

குவடு அனைய தோள்கள்————–மலையை ஒத்த தோள்

                   அணிகலன்கள் அலங்கரித்த மலையை ஒத்த தோள்கள் பூரிக்க, திசைகளோடு மலைகளும் செவிடுபடும்படி வில்லில் நாண் பூட்டி அந்த ஒலியால் கடல்சூழ் உலகமெல்லாம் நடுங்கும் படி செய்கிறான்.இந்திரசித்

                  பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு

                   புடை பரந்து உயர, அடல் வலித்

               தூண் எறிந்தனைய விரல்கள் கோதையொடு

                    சுவடு எறிந்தது ஒரு தொழில்பட,

               சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை,

                    செவிடு எறிந்து உடைய—-மிடல் வலோன்

               நாண் எறிந்து, முறை முறை தொடர்ந்து, கடல்

                    உலகம் யாவையும் நடுக்கினான்

               [யுத்த காண்டம்]  [நாகபாசப் படலம் 61] 8062

                               இந்திரசித்தோடு போர் செய்ய சுக்கிரீவன் வருகிறான். சுக்கிரீவன் எறிந்த மரத்தை பொடியாக்கு கிறான் இந்திரசித். உடனே அனுமன் வந்து எதிர்க்கிறான். இதைக் கண்ட இந்திரசித், ”இலக்குவன் எங்கே போய் விட்டான்?அவனைக் கொன்று என் சினம் தணிக்க வந்துள்ளேன். இன்று பகற் பொழுது வெல்வேன். உங்களை வெற்றி கொள்ளாமல் போக மாட்டேன்” என்று சூளுரைக்கிறான் அனுமன் மேல் பகழி மழை பொழிகிறான்

உயர் தோள்—-உயர்ந்த தோள்

                              இதைக் கண்டு அங்கதன் விரைகிறான் உயர்ந்த மலைகளையெல்லாம் வேரோடு பிடுங்கி எடுத்து இந்திர சித்தின் மீது வீசினான்.ஆனால் அம்மலைகள் இந்திரசித்தின் ஆற்ற

லுக்கு முன் நிற்கமுடியுமா? அங்கதன் ஏவிய அத்தனை மலை களையும் பொடிப்பொடியாக்கி விடுகிறது இந்திரசித்தின் கணைகள்              

                    ”மேரு, மேரு, என ,அல்ல, அல்ல” என

                    வேரினொடு நெடு வெற்பு எலாம்

                மார்பின் மேலும் உயர் தோளின் மேலும் உற

                        வாலி காதலன் வழங்கினான்.

               சேருமே அவை, தனுக்கை நிற்க? எதிர்

                        செல்லுமே? கடிது செல்லினும்,

                   பேருமே? கொடிய வாளியால் முறி

                        பெறுக்கலாவகை நுறுக்கினான்

                          [நாகபாசப் படலம் 85]  8086

                              பகல் பொழுது முழுவதும் மாறி மாறி வானரர்களுடன் சற்றும் சளைக்காமல் போர் செய்கிறான் இந்திர சித். மாலை நெருங்க வீடணன், இலக்குவனிடம் இன்னும் கால் நாழிகைக்குள் இந்திரசித்தை வீழ்த்தாவிட்டால், இரவு வந்ததும் அரக்கர்கள் பலம் பெற்று விடுவார்கள். மாயையில் தேர்ந்த இந்திர சித் வானில் மறைந்து நின்று போர் செய்யத்தொடங்கினால் அவனை வெல்ல முடியாது, என்று நிலைமையை உணர்த்து கிறான்,

                          இலக்குவன் உடனே இந்திரசித்தின் தேரை அழிக்கிறான். இந்திரசித் மறைந்து நின்று நாக பாசத்தை ஏவி விடுகிறான். அப்படையால் இருள் சூழ, வானரப்படை தறிகெட்டு ஓடுகிறது. மேலும் அப்படை இலக்குவனின் திண் தோள்களையும் அனுமனின் வயிரத்தோளையும் சுற்றிப் பிணிக்கிறது! ஆயிரமா யிரம் அம்புகள் தன்னைத் துளைத்தபோதும் கலங்காத அனுமன் இராமன் தம்பிக்கு நேர்ந்த துன்பத்தைக் கண்டு மனம் பதை பதைக்கிறான்

                        ”சொன்னதைச் செய்துவிட்டேன், நாளை மற்றவற்றையும் முடிப்பேன்” என்று, மங்கல வாத்தியங்கள் முழங்க இராவணன் அரண்மனை செல்கிறான்.இந்திரசித். தந்தை யிடம் நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டுத் தன் அரண்மனை சேர் கிறான்.

                        போர்க்களம் வந்த இராமன் நடந்ததை அறிந்து. தம்பியே இல்லையென்றால் இனி எனக்கு  புகழ் என்ன பழி என்ன? அறம் தான் என்ன? “ என்று புலம்புகிறான். தேவர்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள்..இதைக் கண்ட கருடன் மெள்ள போர்க்களம் வருகிறான். இராமனுக்கு ஆறுதலோடு. அறிவுரை களும் சொல்கிறான். கருடன் வரவால் நாகபாசத்திலிருந்து விடு பட்டு அனைவரும் உணர்வு பெற்று எழுகிறார்கள். ஆரவாரம் செய்

கிறார்கள் விண்ணதிர.

ஏத்த அருந் தடந்தோள் பரந்த தோள்—-புகழ்ச்சிக்கு அடங்காத

                          தூதுவர் வந்து, இராமன் வருந்தியதையும் கருடன் வந்ததும் நாகபாசம் வலுவிழக்க அனைவரும் உணர்வு பெற்றதையும் கூறினர். இது கேட்ட இராவணன் சீற்றமும் ஏளன மும் பொங்க

        ”ஏத்த அருந்தந்தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம்

        காற்றிடை கழித்துத் தீர்த்தான் கலுழனாம் காண்மின்,

                                                       காண்மின்!

          [யுத்த காண்டம்]  [நாகபாசப் படலம் 296]  8297

என்று கூச்சலிடுகிறான்”

குன்று எனக் குவிந்த தோள்

                            நாகபாசம் பயனற்றுப் போனதை அறிந்தபின் படைத்தலைவர்கள் வந்து போர் செய்து மாண்டு போகிறார்கள். இராவணன் இந்திரசித்தை அழைக்கிறான்.”போன படைத்தலைவர்கள் எல்லோருமே இறந்து பட்டார்களா?” என்று கேட்ட மகனுக்கு,” உன்னைத்தவிர யார் மீண்டு வரமுடியும்?” என்று பாராட்டுகிறான்

                           உடனே இந்திரசித், தந்தையை வணங்கி,” ஐய! புதல்வர்களை இழந்ததற்காக வருந்த வேண்டாம். இன்றே  குரங்குகளின்  பிணக் குவியலையும் உயிர்பிரிந்த மனிதர்களின் உடல்களையும் நீயும் சீதையும் தேவர்களும் காணப் போகிறீர்கள்”{ என்று வணங்கி, போர்முரசம் முழங்கப் போகிறான். இந்திரசித் தைக் கண்ட வானர சேனைகள் ஓட்டமெடுக்கின்றன.

                            அனுமன், அங்கதன் தோள்களில் முறையே இராமனும் இலக்குவனும் ஏறுகிறார்கள் இராம இலக்கு வர்களின் போர்த்திறம் கண்டு வியந்து போகிறான் வீரனான இந்திரசித். கண் இமைக்கும் நேரத்தில் இராக்கத வெள்ளத்தைக் குமைத்த பேராற்றாலை எண்ணி அதிசயிக்கிறான். இருவரா போர் செய்கிறார்கள் இப்பெரும் இராக்கத வெள்ளத்தை அழித்தது இந்திரசால வித்தையோ? என்றுவியப்படைகிறான். ஆரவாரம் செய்யும் தேவர்களையும் அவர்கள் தூவுகிற மலர்களையும், பின் னால் வரப்போகும் பெருந்துன்பத்ததிற்கு முன்னோட்டம்போல்

துடிக்கின்ற இடது தோளையும் வீழ்ந்து கிடக்கும் பிணங்களைம் கூட்டத்தையும், குருதி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படும் யானைகளின் பிணங்களையும் மாறி மாறிப் பார்க்கிறான்.

துடிக்கின்ற இடத்தோள்—-[அப சகுனமாக] துடிக்கும் இடது தோள்

   ஆர்க்கின்ற அமரர் தம்மை நோக்கும்; அங்கு அவர்கள் அள்ளித்

    தூர்க்கின்ற பூவை நோக்கும்; துடிக்கின்ற

                                             இடத்தோள் நோக்கும்

    பார்க்கின்றா திசைகள் எங்கும் படும் பிணப் பரப்பை நோக்கும்

   ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும்                                பிரமாத்திரப் படலம் 33]  8473

                  பின்னால் நிகழப்போகும் தீமைக்கு அறிகுறியாக இந்திரசித்தின் இடது தோள் துடிக்கிறது! இராம இலக்குவர்களால் அரக்கர் சேனை முழுவதும் அழிந்தபின்னும் மனம் தளராமல் தனி யொருவனாகப் போர் செய்கிறான் இந்திரசித்.. இந்திரன் பகைவ னான இந்த இந்திரசித்தின் தலையை என் சரத்தால் கொய்யா விட்டால், நான் யமனுக்கு விருந்தாகி, வீரர்களில் கடைப்பட்டவன்

என்று பழிக்கப்படுவேன் என்று சூளுரைக்கிறான் இலக்குவன்

          ”இந்திரன்பகை எனும் இவனை, என் சரம்

           அந்தரத்து அருந்தலை அறுக்கலாது எனின்,

           வெந் தொழிற் செய்கையன் விருந்தும் ஆய், நெடு

           மைந்தரில் கடை எனப்படுவன்

                   பிரமாத்திரப்படலம் 41] 8481

. இராம இலக்குவர் களின் அம்புகளால் தனிமைப்பட்ட இந்திரசித், ”நீங்கள் இருவரும்ன்சேர்ந்து என்னுடன் போர் செய்யப் போகிறீர் களா? அல்லது ஒருவர் ஒருவராக வந்து உயிரைத் தரப் போகிறீர் களா? அல்லது உம் படைகளோடு வந்து போர் செய்து  மாளப் போகிறீர்களா? இதில் எதைச் செய்யப் போகிறீர்கள்?

         ”இருவிர் என்னொடு பொருதிரோ? அன்று எனின், ஏற்ற

         ஒருவிர் வந்து உயிர் தருதிரோ? உம் படையோடும்

         பொருது பொன்றுதல் புரிதரோ? உறுவது புகலும்

         தருவல், இன்று உமக்கு ஏற்றுளது யான்”

                   பிரமாத்திரப் படலம் 61]  8501

என்று, தான் எதற்கும் தயார்என்பதைத் தெரிவிக்கிறான்.

                                ”உன் உயிர் கொள்வதாக நான் சபதம் செய்திருக்கிறேன்” என்கிறான் இலக்குவன்.

                     “நீங்கள் போரில் கொன்ற தம்பி கும்பன் அல்ல, நான் இராவணன் மகன் என்கிறான் இந்திரசித். “உன் தந்தைக்கு நீ செய்ய வேண்டிய கடன்களையெல்லாம் உனக்கு அவன் செய்யப் போகிறான்”.என்கிறான் இலக்குவன். பின் இருவரும் கடுமையாகப் போர் செய்கிறார்கள்.

                        கண் இமைக்கும் நேரத்தில் இந்திரசித் ஆகாயத்தில் மறைய இலக்குவன் பிரமாஸ்திரம் ஏவத் தயாராகி

நிற்க,, அதனால் மூவுலகங்களும் அழியும் என்று தடுத்து விடு கிறான் இராமன். ஆனால் இந்திரசித் மறைந்து வானில் சென்று விடுகிறான்.. இந்திரசித்தின் கபடத்தை இராம இலக்குவர்கள் அறியவில்லை. வீடணன் படைவீரர்களுக்கு உணவு கொண்டு வரச் செல்கிறான். படைக்கலங்களுக்குப் பூசை செய்ய இராமன் செல்கிறான்                       

                         மகோதரனும் மற்ற அரக்கர்களும் சென்று வானரப் படைகளுடன் போரிடுகிறார்கள் அரக்கர்களின் மாயை யால் வானரங்கள் மயங்க, இலக்குவன் சிவன் படையை ஏவு கிறான். வானரர்கள் மயக்கம் தீர்ந்தனர்.. இராமன் இல்லாத நேரம் பார்த்து பிரமாஸ்திரம் விடத் தீர்மானிக்கிறான் இந்திரசித்.

                               அந்த அஸ்திரம் இலக்குவன் மேனியை முழுவதும் மூடிச்சுற்றத் தொடங்க,. வானரர்கள் ஒவ்வொருவ ராகக் கீழே சாய்கிறார்கள். அனைவரும் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட இராமன் புலம்புகிறான். இலக்குவன் நிலையைக் கண்ட இராமன் மயங்கினான். இதைக் கண்ட தூதர்கள் இராவணனிடம் சென்று ”உன் பகை முடிந்தது” என்று அறிவிக்கிறார்கள்.

                        உணவு கொண்டுவரச் சென்ற வீடணன்

வானர வீரர்கள் வீழ்ந்து கிடக்க இலக்குவனோடு இராமனும் சாய்ந்து கிடப்பதைக் காண்கிறான். கூர்ந்து பார்த்து இராமன் மேனி யில் காயங்கள் எதுவும் இல்லை என்பதைக் கண்டு சிறிது நிம்மதி அடைகிறான். பின், அனுமனைத் தேட யானைப் பிணங்களுக்கு  நடுவில் இருப்பதைக் கண்டு முகத்தில் நீர் தெளித்து மயக்கம் தெளிவிக்கிறான்.

========================================================================

                        இந்திரசித்(பகுதி 2)

                சாம்பனது அறிவுரைப்படி மருந்து மலையிலிருந்து மருந்து கொண்டு வந்து அனைவரையும் எழுப்புகிறான் அனுமன். இராம இலக்குவர்கள் வீழ்ந்தார்கள், பகை முடிந்தது என்று குதூ கலித்த இராவணன் மகளிரின் களியாட்டத்தில் திளைக்கிறான். இந்திரசித், நிகும்பலை யாகம் செய்து இலக்குவனை வீழ்த்தப் போவதைத் தெரிவிக்கிறான்.

               மாயாசீதையை உருவாக்கி, அனுமனுக்கு எதிரே அவளைக் கொன்றுவிட்டு, அயோத்தி சென்று பரதனையும் மற்று முள்ளோர்களையும் கொல்லப் போவதாகச்சொன்னால் இராம இலக்குவன் இருவரும் அனுமனும் செய்வதறியாது திகைப்பார்கள். ஒருவேளை அனுமனை அயோத்திக்கு அனுப்பலாம். அதற்குள் நிகும்பலை சென்று வேள்வியை முடித்து விட்டால் தன்னை ஒருவராலும் வெல்ல முடியாது என்பது இந்திரசித்தின் திட்டம்.

                       திட்டத்தைச் செயலாற்றுகிறான் இந்திரசித் அனுமன் அதை உண்மை என நம்பி பதைபதைத்து இந்திரசித் துக்கு அறிவுரைகள் சொல்கிறான். மாயாசீதையை வாளால் கொன்று விட்டு புட்பக விமானத்தில் அயோத்தி செல்வதாகப் போக்குக் காட்டி நிகும்பலை செல்கிறான். அனுமன் புலம்புகிறான். அதைக்கேட்ட இராம இலக்குவர்களும் மயங்கிச்சாய வீடணன் வண்டு உருக் கொண்டு உண்மையை அறிகிறான்

                              வீடணன் மூலம்  நிகும்பலை

பற்றி அறிந்த இலக்குவன் “இந்திரசித்தின் தலை கொண்டு வரு வேன்” என்று சபதம் செய்து இந்திரசித்தை எதிர்க்க வீடணனுடன் நிகும்பலை செல்கிறான். நிகும்பலை வேள்வியை அழிக்கிறான் இலக்குவன்.

ஆற்றல் இழந்த தோள்——வலிமை இழந்த தோள்

               நிகும்பலை யாகம் அழிந்ததுகண்டு முதன் முறை யாகத் தளர்ச்சியடைகிறான் இந்திரசித்.

         பொங்கு போர் ஆற்றல் என் தோளும் போனதோ?

          [யுத்த காண்டம்] நிகும்பலை யாகப் படலம் 64] 8997

                              தளர்ந்த இந்திரசித்தை அனுமன், எள்ளி நகையாடுகிறான். ”இந்திரசித்! அயோத்தி போய் வந்தாயா? பரத னைக் கண்டாயா?உன் மாயப்போர் எல்லாம் இன்றோடு முடியும். எந்தத்தெய்வங்கள் வந்தாலும் நீ மடிவது திண்ணம்” என்று உறுதி யாகச் சொல்கிறான்.

பொன் தோள்—திண்ணிய தோள்

               இதைக்கேட்ட இந்திரசித், “என்னுடைய வீரத் தோள்களும் என்னுடைய வில்லும் இருக்கும் வரை என்னை எதிர்க்கும் எவையும் ஓடி ஒளிவதல்லாமல் உயிர் பிழைக்க முடி யுமோ? கூனுடைக் குரங்குகளோடு அந்த இரு மனிதர்களையும் கொன்று தீர்வேன். ஒருவேளை அவர்கள் வானுலகம் சென்றால் அங்கும் தொடர்ந்து சென்று கொல்வேன். முன்பு போல் மருந்தா லும் பிழைக்க முடியாது என்று சூளுரைக்கிறான்.

     “யானுடை வில்லும் என் பொன் தோள்களும் இருக்க

     ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ, ஒளிப்பு இல்லாமல்

    கூனுடைக் குரங்கினோடு மனிதரைக் கொன்று, சென்று அவ்

     வானினும் தொடர்ந்து செல்வேன்; மருந்தினும் உய்யமாட்டீர்

               [நிகும்பலை யாகப் படலம் 81] 9015

.இருவரும் கைகலக்கிறார்கள். அனுமன் ஒரு வயிரக் குன்றை வீசுகிறான் குண்டலங்கள் அசைந்து ஒளிவீச, மேருமலையை ஒத்த தோள்களையுடைய இந்திரசித், அண்டம் குலுங்க ஆர்ப் பரித்து இமையாத கண்களை உடைய தேவர்களும் காண முடி யாதபடி அவ்வளவு வேகத்தில் அக்குன்றை வெறும் தூளாக்கி விடுகிறான்!

 மேருவின் குவிந்த தோள்———-மேருமலையை ஒத்து திரண்டு

                                                  உயர்ந்த தோள்             குண்டலம் நெடு வில் வீச, மேருவின் குவிந்த தோளான்

        அண்டமும் குலுங்க ஆர்த்து,மாருதி, அசனி அஞ்ச

        விண் தலத்து எறிந்த குன்றம் வெறுந்துகள் ஆகி வீழக்

        கண்டனன் எய்த தன்மை கண்டிலர், இமைப்பு இல்

                                                        கண்ணார்.

                       [நிகும்பலை யாகப் படலம் 93] 9026

,தோள்வலி——-தோளின் வலிமை

     அனுமனைக் கண்டிலீரோ?அவனினும் வலியிரோ? என்

    தனு உளதன்றோ? தோளின் அவ்வலி தவிர்ந்ததுஉண்டோ? 

                   [நிகும்பலை யாகப் படலம் 98] 9034

என் அம்புகளால் தளர்ந்த அனுமனைக் கண்டீர்களா? நீங்கள் அவனைவிட வலிமை உடையவரா? என் வில் அழிவில்லாமல் இருக்கிறது என் தோள்வலி குறாஇந்து போய்விட்டதோ? என்று இலக்குவனிடம் கேள்விகளை அடுக்குகிறான். இதன்பின் அனுமன் தோள் மீது ஏறி இலக்குவன் போர் செய்கிறான்.

                              இருவரும் சமமான வீரர்கள் என்பதால்,  ஒருவருக்கொருவர் சளைக்காமல் தக்க பதிலடி கொடுக்க,போர் நீண்ட நேரம் தொடர்கிறது.. இந்திரசித் மாயோன் படை ஏவ, அது இலக்குவனை விலகிச் செல்கிறது! இதைக் கண்ட இந்திரசித், சிவன் படையை, , இந்த இலக்குவன் உயிரைக் கவர்ந்து வருவாய் என்று செலுத்துகிறான்.

தடந்தோள்

       ”இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய்” என நிமிர்ந்தான்

      சினத்தால் நெடுஞ்சிலை நாண் தடந்தோள் மேல் உறச்

               நிகும்பலை யாகப் படலம் 151]  9085

செலுத்த தேவர்கள் நடுங்குகிறார்கள். வானரர்களுக்கு அபயம் அளித்து, இலக்குவனும் சிவன் படை விடுகிறான்.

           ”அபயம் உமக்கு அளித்தோம்” என, தன் கைத்தலத்து

                                                     அமைத்தான்

          சிவன், ஐம்முகம் உடையான், படை தொடுப்பேன் எனத்

                                          தெளிந்தான்.

                     இதைக் கண்ட இந்திரசித் வீடணனைப் பலவாறு கடிந்து பேசுகிறான். வீடணனும் தக்க பதிலளிக்கிறான். தன் தேர் அழிந்ததைக் கண்ட இந்திரசித், தேர் இல்லாமல் போர் செய்வது கடினம் என்றுணர்ந்து விண்ணில் மறைந்து, இராவணனிடம் செல் கிறான்.                   

தோளில் தைத்த அம்பு——தோளில் பதிந்த அம்பு.

                                    ”நீ தொடங்கிய வேள்வி முற்றுப் பெறவில்லை என்பதை உன் தோள்களில் தைத்துள்ள அம்புகளே பறை சாற்றுகின்றன. மிகவும் தளர்ந்து காணப்படுகிறாய். கருடன் நெருங்குவதைக் கண்ட பாம்புபோல்  நடுங்குகிறாய். நிகழ்ந்தது என்ன என்பதைச் சொல் என்று  வினாத் தொடுக்கிறான். அனைத் திற்கும் வீடணனே காரணம் என்கிறான் இந்திரசித்.

          தொடங்கிய வேள்வி முற்றுப் பெற்றிலாத் தொழில்

                                 நின் தோள் மேல்

          அடங்கிய அம்பே என்னை அறிவித்தது; அழிவு

                                            இல் யாக்கை

          நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை; உற்றது

                                      பகர்தி என்றான்

          [[யுத்த காண்டம்] இந்திரசித்து வதைப் படலம் 2

 இராவணன். இந்திரசித், போரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்க ளால் இராம இலக்குவர்களின் வில்லாற்றலை புகழ்ந்து பேச, அதைக் கேட்டு சீற்றம் கொண்ட இராவணன் தானே போருக்குச் செல்வதாகச் சொல்கிறான்.

                                உலகத்தையெல்லாம் தன் வீரத்தால் கலக்கிய இந்திரசித். “தந்தையே! நான் அவர்களைக் கண்டு அஞ்சு கிறேன் என்று எண்ண வேண்டாம். சீதை மேலுள்ள ஆசையை நீ விட்டுவிட்டால் அவர்கள் சீற்றம் தணிந்து, நீ செய்த தீமைகளைப் பொறுத்து அருள் செய்து திரும்பி விடுவார்கள். உன் மேலுள்ள பாசத்தால் இதைச் சொல்கிறேன் என்றவன்

                “அஞ்சினேன்” என்று அருளலை; ஆசைதான் அச்

     சீதைபால் விடுதி ஆயின், அனையவர் சீற்றம் தீர்வர்;

    போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர் உன்மேல்

    காதலால் உரைத்தேன்” என்றான்—உலகெலாம் கலக்கி

                                                      வென்றான்

          [இந்திரசித்து வதைப்படலம் 6]  9121

தந்தையைத் தடுத்து இரு கண் நீர் கலுழப் போகிறான்.

விலங்கல் அம் தோள்—மலை போன்ற தோள்

                   உடனே அரக்கர் எல்லாம் விரைந்து வந்து

“மலை போன்ற தோள்களை உடையவனே உன்னைப் பிரிந்து நாங்கள் வாழமாட்டோம் என்று தொடர்கிறார்கள்.அவர்களிடம் ”மன்னனைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கும் கலங்க வேண்டாம் இப்பொழுதே சென்று அந்த மனிதர்களை வெல்வேன்” என்று உறுதியாகச் சொல்கிறான்.

    “விலங்கல் அம் தோளாய்! நின்னைப் பிரிகலம் விளிதும் என்று

   வலங் கொண்டு தொடர்ந்தார் தம்மை,

                                      ”மன்னனை காமின், யாதும்

   கலங்கலிர்; இன்றே சென்று மனிசரைக் கடப்பென் என்றான்

               [இந்திரசித்து வதைப் படலம் 15]  9130

                   ஆயிரம் குதிரைகள் பூட்டிய தேரில் இந்திரசித் வருவதைக் கண்ட இலக்குவன் உக்கிரமாகப் போர் செய்கிறான். இனியும் தாமதிக்காமல் இந்திரசித்தை வீழ்த்தும் படி வீடணன் அறிவுறுத்த, இலக்குவன் அம்புமழை பொழிகிறான். ஆனால் சற்றும் அயராத இந்திரசித், அனைவர் மேலும் கணை தொடுக் கிறான். தேர் இருக்கும் வரை அவனை வீழ்த்த முடியாது என்

பதை உணர்ந்த இலக்குவன், அவன் தேரை அழிக்க, இந்திரசித் விண்ணில் சென்று மறைகிறான்.

மல்லின் மா மாரி அன்ன தோள்—–மற்போர் பயிற்சி பெற்ற, கரிய

                                               மேகம் போன்ற தோள்.

                                    மறைந்த இந்திரசித் தன் வரத்தின் வலிமையால் மேகம் கல்மழை பொழிவதுபோல வில்லால் அம்பு மழை பொழிய, .திசைகள் மறைந்தன மேகம் இருண்டது.  .

        மல்லின் மா மாரி அன்ன தோளினான் மழையின்

                                                         வாய்ந்த,

        கல்லின் மாமாரி,  பெற்ற வரத்தினால் சொரிகிறான்

                     இந்திரசித்து வதைப் படலம் 40] 9155

                      இதைக் கண்ட இலக்குவன், இவனுடைய வில் அறுபடாது என்றால் வில்பிடித்த தோளையே வீழ்த்துவேன் எண்று எண்ணி, வரிசிலை வாங்கி பிறைச்சந்திரனைப் போன்ற அம்பால் , மணிகள் பதித்த அணிகலன்களோடு கூடிய கையை வீழ்த்தினான்

திரண்ட தோள் மலை——மலை போன்ற திரண்ட தோள்

     சிலை அறாது எனினும், மற்று அத் திண்ணியோன்

                                      திரண்ட தோளாம்

     மலை அறாது ஒழியாது, என்னா, வரிசிலை ஒன்று வாங்கி

     கலை அறாத் திங்கள் அன்ன வாளியால் கையைக்

                                          கொய்தான்

                  [இந்திரசித்து வதைப் படலம் 42] 9158

.இந்திரசித் விரல்களால் இறுகப் பற்றியிருந்த வில்லோடு அழகிய பொன்தோள் நிலத்தில் விழுந்து துடித்தது

     கோலவிரல்களால் இறுகக் கட்டிப்

       பிடித்த வெஞ்சிலையினோடும், பேர் எழில்வீரன் பொன்

       தோள் துடித்தது

               [இந்திரசித்து வதைப் படலம் 45]  9160

இதைக் கண்ட வானவர்கள், இந்திரசித்தின் பொன் போன்ற தோள் களே வீழும் என்றால் உயிர் வாழ்க்கையை நிலையென்று எண் ணிச் சிலர் மகிழ்வதால் என்னபயன்? என்று வியந்து பேசு கிறார்கள்                          

                                           அருக்கன் வீழா,

    சந்திரன் வீழா, மேரு மால் வரை தகர்ந்துவீழா

   இந்திரசித்தின் பொன் தோள் இற்று இடை விழுந்தது என்றால்

   எந்திரம் அனைய வாழ்க்கை இனிச் சிலர் உகந்து என்?

               [இந்திரசித்து வதைப் படலம் 40] 9161

                      இதற்குள் இந்திரசித், இந்திரனிடமிருந்து பெற்ற ”சூலம் கொண்டு எறிவேன், நின்னை முடித்தன்றி முடியேன் என்று தோன்றுகிறான். இனியும் காலம் தாழ்த்தலாகாது என்று எண்ணிய இலக்குவன்,

வேதங்களும் வேதியர்களும் வணங்கத்தக்க இறைவன் இராமன் (தரும மூர்த்தி) என்பது உண்மையானால் இந்த வாளி இவன் உயிரை வாங்கட்டும் என்று  அம்பை விடுகிறாஅன்

     மறைகளே தேறத்தக்க வேதியர் வணங்கற்பால,

     இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி என்னின்

     பிறை எயிற்று இவனைக் கோறி, என்று ஒரு

                                          பிறை வாய் வாளி

     நிறை உற வாங்கி விட்டான்—உலகெலாம் நிறுத்தி நின்றான்

               [இந்திரசித்து வதைப் படலம் 51] 9166

         .                       அவ்வாளி இந்திரசித்தின் சிரத்தைத் தள்ள, தேவர்கள் பூமாரி பொழிகிறார்கள். தலையும் மண் மேல் விழுந்தது! விழுந்த தலையை அங்கதன் கொண்டு செல்ல அனு மன், தோள் மேல் இலக்குவன் செல்கிறான். தம்பி வருகின்ற காட்சியை இராமன் பார்க்கிறான். தாமரை போன்ற கண்களி லிருந்து பெருகி வரும் தாரையை எப்படிச் சொல்வது/

          தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை,

          அன்புகொல்? அழுகணீர் கொல்? ஆனந்த

                                                  வாரியே கொல்?

          என்புகள் உருகிச் சோரும் கருணையே கொல்?

                                              யார் அது ஓர்வார்

               [இந்திரசித் வதைப் படலம் 64] 9179

என்று கவிஞனே திகைக்கிறான்! வந்த இலக்குவன் இராமன் திருவடியை வணங்கி இந்திரசித் தலையை வைக்கிறான்

,            அடி முன்னர் இட்டான், மடித்த பேழ் வாய்த்தலை

                                      அடியுறை ஒன்று ஆக

          [இந்திரசித்து வதைப் படலம் 65]  9180

இதைக்கண்ட இராமன், சனகன் புதல்வியாகிய சனகியும் இனி என்னிடம் வந்து சேர்ந்துவிட்டாள் என்று மனமகிந்தேன் “தம்பி உடையவன் பகைஅஞ்சமாட்டான்” என்னும் பெருமையை எனக்குத் தந்தனை”              

                                      ”சனகன் பெற்றேடுத்த

         கொம்பும் என்பால் இனிவந்து குறுகினாள் என்று

                                 அகம் குளிர்ந்தேன்

       தம்பி உடையான் பகை அஞ்சான் என்னும் மாற்றம்

                                                     தந்தனையால்

               [இந்திரசித்து வதைப் படலம் 68]  9183

என்று தம்பியைப் பாராட்டுகிறான். அதே சமயம், “வீடணன் தந்த வென்றி ஈது” என்று அவனையும் பாராட்டுகிறான்.

                       முதல் பார்வையில் அனுமன் கணித்தது போலவே இந்திரசித்தை வெற்றி கொள்வது அவ்வளவு எளிதல்ல

என்பதைப் பார்க்கிறோம். !தோள்வலியில் சிறந்தவன்! வீரருக்குள் வீரன் அவன்!

========================================================================

Series Navigationநிரம்பி வழிகிறது !தோள்வலியும் தோளழகும் – கும்பகருணன் (2)
author

எஸ். ஜயலக்ஷ்மி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *