கும்பகணன் என்றதுமே நம்நினைவுக்கு வருவது தூக்கம் தான். ஆண்டாள் நாச்சியாரும் திருப்பாவையில்”கும்பகருணனும் தோற்று உனக்கே துயில் தந்தானோ?” என்று அவன் தூக்கத்தைப் பதிவு செய்கிறாள்.
இலக்குவனால் மூக்கறுபட்ட நிலையில் சூர்ப்பணகை
அரக்கர் குலத்து அவதரித்தீர்!
கொல் ஈரும் படைக் கும்ப
கருணனைப்போல் குவலயத்துள்
எல்லீரும் உறங்குதிரோ? யான் அழைத்தல் கேளீரோ
என்று இவனுடைய தூக்கத்தைத் தெரிவிக்கிறாள் இவன் ஆறு மாதம் தூங்கி ஆறுமாதம் விழித்தி ருப்பான் என்று சொல்வார்கள். தூக்கம்மட்டுமே இவனுடைய சிறப்பல்ல. தோள் வலியிலும் சிறப்பு மிக்கவன்.
அனுமன் இலங்கையை எரியூட்டிய பின் இராவணன் மந்திராலோசனை செய்கிறான் அமைச்சரவையில், ராவணனுக்கு அறிவுரை சொல்கிறான் கும்பகருணன். வேறொரு குலத்தோன் தேவியை வஞ்சனையாகச் சிறை வைத்த செயல் சரியா? இதைவிட வேறு பழியும் உண்டோ? என்று கேள்விக் கணை தொடுக்கிறான்.
பகைவர்கள் வரும் வரை காத்தி ராமல் நாமே சென்று நரர் வானரர் அனைவரையும் வேருடன் அழிக்க வேண்டும் என்கிறான். கும்பகருணனைப் பாராட்டிய இராவணன்,” படை எழுக” என்கிறான் ஆனால் இந்திரசித் குறுக்
கிட்டுத் தடுத்து விடுகிறான். இராம இராவணப் போர் தொடங்கு கிறது. முதல் நாள் போரில் அனைத்தையும் இழந்து இராவணான் வெறுங்கையோடு திரும்புகிறான்
குன்று என உயர்ந்த தோள்—குன்றைவிட உயர்ந்த தோள்
வெறுங்கையோடு வந்து வருந்தும் பேரனுக்குப் பாட்டனான மாலியவான் அறிவுரை சொல்கிறான்.
இந்த சமயம் மகோதரன் வந்து கும்பகருணனைப் போர்க்களம் அனுப்பலாமே என்று யோசனை சொல்கிறான். இராவணன் ஆணையிட, ஆயிர வீரர்கள் ஓடுகிறார்கள் ஓடி வெற்றி பொருந்திய பெரிய அரண்மனையில் புகுந்தார்கள்.
சென்றனர் பத்து நூற்றுச் சீரிய வீரர் ஓடி
இன்று இவன் முடிக்கும் என்னா, எண்ணினர்;
எண்ணி ஈண்ட
குன்று என உயர்ந்த தோளான் கொற்றமாக்
கோயில் புக்கார்
[யுத்தகாண்டம்] கும்பகருணன் வதைப்படலம் 48] 7319
சூலம் ஏகம் திருத்திய தோள்——சூலப்படையை ஏந்திய தோள்
ஆயிரம் இராக்கதர்கள் கும்பகருணனை உலக்கைகளால் அடித்து எழுப்புகிறார்கள்.எழுந்தவன் வயிறார உண்ட பின் இராவணன் அழைத்ததைச் சொல்கிறார்கள். கும்ப கருணன் கிளம்புகிறான்.எப்படி? பார்ப்போம்.
தோளில் சூலப்படை., கருக்கொண்ட மேகம் போன்ற தோற்றம். இவன் யமனோடும் போருக்குச் செல்வான். கால்களில் வீரக்கழல்கள். சிவந்த மயிர்க்கற்றை. இப்படிவருகிறான்.
சூலம் திருத்திய தோளினான்;
சூல மேகம் எனப் பொலி தோற்றத்தான்;
காலன் மேல் நிமிர் மத்தன்; கழல் பொரு
காலன்; மேல் நிமிர் செம் மயிர்க் கற்றையான்
[கும்பகருணன் வதைப் படலம் 64] 7336
ஓர் மலை கிடந்தது போல் இராவணனை வணங்குகிறான்.வணங்கிய தம்பியை ஆரத்தழுவி, கள் குடங் களை அருந்தக் கொடுத்து அணிகலன்களை அணிவிக்கிறான். இந்த ஏற்பாடுகளைக் கண்ட கும்பன், இவையெல்லாம் எதற்காக? என்று வினவுகிறான். அப்போது அவனுடைய புருவமும் உயர்ந்த தோள்களின் இடப்பக்கமும் துடித்தன (அபசகுனம் போல்)
விண்ணினைத் துன்னு தோள்—வானத்தை நெருங்கும்படியான
உயர்ந்த தோள்
”ஆயத்தம் யாவையும்
என்ன காரணத்தால்? என்று இயம்பினான்
மின்னின் அன்ன புருவமும், விண்ணினைத்
துன்னு தோளும், இடம் துடியா நின்றான்
[ கும்பகருணன் வதைப்படலம் 77] 72
காரணம் கேட்டவனுக்கு இராமனோடு போர் ஆரம்பமாகி விட்ட தெனவும், கும்பகருணன் போர்க்களம் சென்று வென்று வர வேண்டும் எனவும் இராவணன் சொல் கிறான். இதைக் கேட்ட கும்பகருணான்
கிட்டியதோ, செரு? முனம் சொன்ன சொற்களால்,
திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ? இது விதியின் வண்ணமே!
[கும்பகருணன் வதைப் படலம் 80] 7351
இன்னமும் சீதை துயர் தீரவில்லையா? அவளை இராமனிடம் ஒப்படைக்கவில்லையா? என்று கும்பன் கேட்க, நீ எனக்கு அறிவுரை சொல்லும் அமைச்சனில்லை. உனக்கு அச்சமாக இருந்தால் சென்று அல்லும் பகலும் உறங்கு” என்று கடிந்து கொள்கிறான்
பொலன்கொள் தோளி——–.அழகான தோள்களையுடைய(சீதை)
உடனே கும்பன் கிளம்பி , ”நான் வெற்றி யுடன் இங்கே திரும்பி வருவேன் என்று நினைக்கவில்லை. விதி பிடரியில் கை வைத்து உந்தித் தள்ளுகிறது. நான் வீழ்ந்து படு வேன். அப்படி நிகழ்ந்தால் சீதையை விட்டுவிடு அதுவே நலம். அவர்கள் என்னை வென்று விட்டால், இலங்கை அரசனே! உன்னையும் வென்று விடுவது உண்மை” என்று அறிவுரை சொல்லி..விடை பெற்றுச் செல்கிறான்.
வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன் விதி
நின்றது பிடர் பிடித்து உந்த நின்றது
பொன்றுவன், பொன்றினால் பொலன்கொள் தோளியை
நன்று என நாயக விடுதி”
என்னை வென்றுளர் எனில். இலங்கை காவல!
உன்னை வென்று உயருதல் உண்மை
[கும்பகருணன் வதைப் படலம் 95& 96] 7366& 67
தோளொடு தோள்ஒரு தோளிலிருந்து மற்றொரு தோள்
போருக்கு வரும் கும்பகருணனைப் பார்த்த இராமன் வியந்து போகிறான்.இவனுடைய ஒரு தோளிலி ருந்து மற்றொரு தோள்வரை தொடர்ந்து பார்க்கவே பல நாட்கள் கழியும் என்று தோன்றுகிறது [அவ்வளவு அகன்ற தோள்!] மலை களுக்கெல்லாம் அரசனாக விளங்கும் மேரு மலை போல் வருப வனை, யார் இவன்? என்று வீடணனிடம் கேட்கிறான்
தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்
நாள் பல கழியுமால், நடுவண் நின்றது
ஓர் தாளுடை மலை கொலாம்; ஆர் கொலாம் இவன்?
[கும்பகருணன் வதைப்படலம் 111] 7382 .
வலத்து இயல் தோள்
வருகிறவன் வீடணனுக்கு அண்ணன், இராவணனுக்குத் தம்பி என்றும் தெரிகிறது. இவன் அண்ணனுக்கு அறிவுரை சொன்னான் என்பதைத் தெரிந்து கொண்டதும் கும்ப கருணனை அழைத்து வரும்படி சொல்கிறான். வீடணன் கும்பனை அழைக்க வருகிறான். ஆனால் கும்பன் மறுத்து விடு கிறான்.”புலத்தியன் வழியில் வந்தகுலத்தின் பெருமை மாற்றான் மனவியைக் கவர்ந்ததால் அழிந்து விட்டது என்றாலும் உன்னால் புண்ணியத்தைப் பெற்றது என்று, என் வெற்றி பொருந்திய தோளைப்பார்த்து மகிழ்கிறேன். ஆனால் நீயோ திரும்பி இங்கு வந்திருக்கிறாய். இதனால் என் மனம் வருந்துகிறது,
“குலத்து இயல்பு அழிந்ததேனும், குமர! மற்று
உன்னைக் கொண்டே
புலத்தியன் மரபு மாயாப் புண்ணியம் பொருந்திற்று”
என்னா,
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன்
மன்ன! வாயை
உலத்தினை, திரிய வந்தாய்; உளைகின்றது உள்ளம்
கும்பகருணன் வதைப் படலம் 132] 7403
அமுதுண்பாய் நஞ்சுண்பாயோ? என்று வினவுகிறான்
கும்பகருணனுடைய இரு தோள்களில் ஒரு தோளாகிய இராவணன் பாழானாலும் இன்னொரு தோளான வீடணனாவது ஏற்றம் பெற்றானே என்பதால், ‘தோளை நோக்கி மகிழ்கின்றேன் என்கிறான்.ஆனால் வீடணனுடன் செல்ல மறுத்து விடுகிறான்.வீடணன்,” இன்றொடும் தவிர்ந்ததன்றே உடன்பிறப்பு” என்று அவனை நீங்குகிறான் வீடணன்.
=======================================================================
கும்பகருணன்(பகுதி 2)
கும்பன் போர்க்களத்தில் வானரப்படைமீது
குன்றை வீசுகிறான். குதிக்கிறான். குரங்குகளின் வாலைப் பற்றி ஒன்றோடு ஒன்றை மோதுகிறான். உதைக்கிறான் துகைக்கிறான்.
சிலவற்றை வாயிலிட்டு உமிழ்கிறான். வானரர்களின் தலையைப் பற்றித் திருகுகிறான். தரையில் தேய்க்கிறான் வானத்தில் வீசு கிறான். சிலவற்றைப் பிசைந்து மேலே பூசிக் கொள்கிறான்.
குன்று கொண்டு எறியும் பாரில் குதிக்கும்
வெங்கூலம் பற்றி
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும்; உதைக்கும்;
விட்டு உழக்கும்; வாரித்
தின்று உமிழும் ; பற்றிச் சிரங்களைத் திருகும்;
தேய்க்கும்;
மென்று மென்று இழிச்சும்; விண்ணில் வீசும்;
மேல் பிசைந்து பூசும்
[கும்பகருணன் வதைப் படலம் 178] 7449
கும்பகருணன் வானர சேனையைப் படாதபாடு படுத்துகிறான்
ஒரு தனித் தோள்——–ஒப்பற்ற ஒரு தோள்
நீலனுடன் பொருதும் சமயம் நீலன் தளர்ந்து போக அங்கதன் வந்து ஒரு குன்றத்தை எடுத்து வீசுகிறான்.
” மாண்டனன் அரக்கன் தம்பி” என்று உலகு
ஏழும் வாழ்த்த
அதனை அன்னான் ஒரு தனித் தோளில் ஏற்கிறான்
[கும்பகருணன் வதைப் படலம் 187 7458
அங்கதனை சுக்கிரீவனோ, அல்லது அனுமனோ என்று சந்தேகிக்கிறான். இதை உணர்ந்த அங்கதன், தான் வாலி மைந்தன் என்றும் தன் தந்தை செய்ததுபோல் கும்பகருணனை வாலில் சுற்றி இராமனிடம் கொண்டு சேர்ப்பேன் என்று சவால் விடுகிறான். இதற்குத் தக்க வகையில் பதிலளிக்கிறான் கும்பன். உடனே அங்கதன் கும்பனின் அழகிய தோள்மேல் வயிரத்தண்டை வீசுகிறான்.என்ன நடக்கிறது? தீப்பொறி போல் துண்டு துண்டு களாய்ச் சிதறியது வயிரத் தண்டு!
பொன் தடந்தோள்——–அழகிய பெரிய தோள்
பொன் தடந்தோளின் வீசிப் புடைத்தனன்; பொறியின் சிந்தி,
இற்றது நூறு கூறாய், எழு முனை வயிரத் தண்டு
[கும்பகருணன் வதைப் படலம் 195] 7466
வயிரக் குன்றேற்ற தோள்—மலையைத் தாங்கிய தோள்
அங்கதன் எறிந்த குன்று பொடியாகப் போனது கண்டு அனுமன் கும்பனுடன் போர் செய்ய வருகிறான். அனுமன் விட்ட மலையைத் தடுக்காமல் தன் தோள் மேல் ஏற்கிறான். அக்குன்று எல்லா உலகங்களும் அஞ்சும்படி சுக்கு நூறாகச் சிதறிப்போகிறது
கார் உதிர் வயிரக் குன்றைக் காத்திலன்,
தோள்மேல் ஏற்றான்;
ஓர் உதிர் நூற்று கூறாய் உக்கது, எவ் உலகும் உட்க
[கும்பகருணன் வதைப் படலம் 202] 7473
இதைக் கண்ட அனுமன். இவனை வெல்ல யாராலும் முடியாது.
இராமனுடைய அம்புகள் வேண்டுமானால் இவனைப் பிளக்கும் என்று அப்பால் போகிறான். தேவர்கள் இவன் போர் ஆற்றலைக் கண்டு, இவன் முத்தலைச் சூலத்தால் உலகம் மூன்றும் திரியும் என்று நடுங்குகிறார்கள்
துங்கத்தோள்—வலிய தோள்
தன்னோடு போர் செய்ய ஒருவரும் வராததால்
சலிப்புற்ற கும்பகருணன் இராம இலக்குவர்,”எங்குற்றார்? எங் குற்றார்? என்று தன் வலிய தோள்களைத் தட்டி அறைகூவல்விடுக்கிறான்.
துங்கத்தோள் கொட்டி ஆர்த்தான்—கூற்றையும்
துணுக்கம் கொண்டான்
[கும்பகருணன் வதைப்படலம் 206] 7477
கும்பகருணன் அறை கூவலைக் கேட்ட இலக்குவன் கும்பனை எதிர்க்கிறான், இருவரும் கடுமையாகப் போர் செய்கிறார்கள்.
இலக்குவன் வில்லாற்றலைக் கண்டு வியந்த கும்பன்,” திரி புரத்தை எரித்த சிவனும் இவனுமே ஒப்பற்ற வில்லாளர்கள்”
என்று பாராட்டுகிறான்.
கும்பகருணன்,மேரு மலையை ஒத்த தேரில் வருவதைக் கண்ட அனுமன், இளைய வள்ளலே! என் தோள் மேல் ஏறிக் கொள்ளூங்கள் என்று தோள் கொடுக்கிறான்.
வீங்கு தோள்—பருத்த தோள்
இலக்குவன் அனுமன் தோள் மேலேறியதைக் கண்ட கும்பன், தனக்கு ஏற்ற பெரிய மேருவை ஒத்த வில்லை வாங்கி வானவில்லும் நாணும்படி வளைத்தான்.
வீங்கு தோள்வலிக்கு ஏயது, விசும்பில் வில் வெள்க,
வாங்கினன், நெடுவரை புரைவது ஓர் வரி வில்
[கும்பகருணன் வதைப் படலம் 233] 7504
”நீ இராமன் தம்பி, நான் இராவணன் தம்பி
இருவரும் போர் செய்வதைப் பார்க்க தேவர்கள் வந்திருக்கிறார் கள். எங்களுடன் பிறந்தவளை மூக்கரிந்த கைகளைக் காக்க முடியுமென்றால் காத்துக் கொள் என்று ஆக்கிரோஷத்தோடு கூவுகிறான்கும்பன் இலக்குவனும் என் வில் பேசும்என பதிலடி கொடுக்கிறான். கும்பகருணனும் இலக்குவனும் செய்த போரைக் கண்டு, தேவர்கள் அதிசயிக்கிறார்கள்
மா முரண் திண்தோள்.-மாறுபடுகிற பெரிய திண் தோள்
கும்பன் வானரசேனையத் துவம்சம் செய்வதைக்
கண்ட சுக்கிரீவன் கண்களில் தீப்பொறி பறக்க, வாயிலிருந்து புகை வெளிப்பட ஓடி வருகிறான். அரக்கனின் தோள்கள் முறிந்தன என்று சொல்லும்படி பெரியமலையை எறிகிறான்.
பொறிந்து எழு கண்ணினன், புகையும் வாயினன்.
செறிந்து எழு கதிரவன் சிறுவன்—–சீறினான்
”முறிந்தன அரக்கன் மாமுரண் தோள்” என
எறிந்தனன், விசும்பில், மாமலை ஒன்று ஏந்தியே
[கும்பகருணன் வதைப் படலம் 255] 7526
சுக்கிரீவன் எறிந்த மாமலையைக் கும்பன் அநாயாசமாகக் கைகளில் ஏந்திப் ”போ” என்று சொல்லித் தூற்றி விடுகிறான். பின் சூலப் படையை சுக்கிரீவன் மேல் எறிகிறான். அனுமன் அச்சூலத்தை முறிக்கிறான். மீண்டும் சுக்கிரீவனும் கும்பனும் போர் செய்கிறார்கள்
ஒருவரை ஒருவர் அதட்டுகிறார்கள்.கும்பகருணன் தன் வலிமையால் தன் பெரிய கைகளால் சுக்கிரீவனைப் பிடித்து இறுக்குகிறான். அதனால் சுக்கிரீவன் தளர்ந்து மூர்ச்சையா கிறான்.
நெடும் புயங்கள் ——நீண்ட தோள்கள்
உறுக்கினர், ஒருவரை ஒருவர்; உற்று இகல்
முறுக்கினர், முறை முறை; அரக்கன் மொய்ம்பினால்
பொறுக்கிலாவகை நெடும் புயங்களால் பிணித்து
இறுக்கினான்; இவன் சிறிது உணர்வும் எஞ்சினான்
[கும்பகருணன் வதைப்படலம் 267] 7538
. சுக்கிரீவனைத் தூக்கிக் கொண்டு போகிறான் கும்பகருணன். இதைப்பார்த்த இராமன் கும்பகருணனைச் செல்ல விடாமல்ஆகாய வழியை அடைக்க,கும்பகருணன் சீற்றமடைந்து, ”என்னைத்தாக்கி இவனை விடுவிக்க வந்தாயோ? உன்னைத்தான் தேடினேன். நீ மட்டும் இவனை என்னிடமிருந்து விடுவித்து விட் டால், சீதையும் சிறையிலிருந்து விடுதலை ஆகி விடுவாள் என்று சவால் விடுக்கிறான்.
தோள் எனும் குன்று———குன்று போன்ற தோள்
கும்பனின் சவாலைக் கேட்ட இராமன், :என் இனிய நண்பனை எடுத்த தோள்களை யான் வீழ்த்தா விட்டால் உனக்குத் தோற்றாவனாவேன். இனி வில்லை
எடுக்க மாட்டேன் என்று சபதம் செய்கிறான்
இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும்,
குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின்,
பின்றினென், உனக்கு, வில் பிடிக்கிலேன்” என்றான்
[கும்பகருணன் வதைப் படலம் 285] 7557
இராமன் விட்ட கணையால்
கும்பகருணன் நெற்றியிலிருந்து குருதி கொப்பளிக்க, அக்குருதி யால் சுக்கிரீவன் மயக்கம் தெளிந்து எழுகிறான் அதே சமயம் கும்பகருணன் மயக்கம் அடைகிறான். சுக்கிரீவன் நாணமடைந்து கும்பனது நாசியையும் காதுகளையும் வேரோடு கொண்டு தன் படை வீரர்களோடு சேர்கிறான். மயக்கம் தெளிந்த கும்பன் முன் னிலும் கடுமையாகப் போர் செய்கிறான்.
தனித்து விடப்பட்ட போதிலும் கும்பகருணன் சளைக்காமல் போர் செய்கிறான். அதனால்,ஏற்பட்ட சேனையின் அழிவையும் கும்பனின் வலிமையையும் கண்டு, இன்று இங்கு யமனை இவன் கண்களுக்கு முன் கொணர்வேன் என்று தீர் மானிக்கிறான் இராமன்
தானையின் அழிவும், ஆங்கு அவன்
திண் நெடுங் கொற்றமும், வலியும், சிந்தியா
நண்ணினன் நடந்து எதிர் ”நமனை இன்று இவன்
கண்ணிடை நிறுத்துவென் என்னும் கற்பினான்
[கும்பகருணன் வதைப் படலம் 305] 7576
நெடுந்தோள்———நீண்ட[உயர்ந்த]தோள்
கும்பகருணன் அணிந்திருந்த சிவ கவசத்தை இராமன் அறுத்து விடுகிறான். இதனால் ஆத்திரமடைந்த கும்பன், வானரப் படை முழுவதையும் அழிக்க வேண்டும் என்று உறுதி கொண்டு ஒரு எழுமுனை வயிரத் தண்டைக் கைக்கொள்கிறான்.
காந்து வெஞ்சுடர்க் கவசம் அற்று உகுதலும்
கண் தொறும் கனல் சிந்தி,
ஏந்து வல் நெடுந்தோள் புடைத்து ஆர்த்து, அங்கு ஓர்
எழுமுனை வயிரப்போர்
வாய்ந்த வல் நெடுந்தண்டு கைப்பற்றினன்
[கும்பகருணன் வதைப்படலம் 333] 7604
குன்று ஒத்த தோள்——–மலையைப் போன்ற தோள்
கையிலிருந்த தண்டோடு கும்பன் காற்றாடி போல் சுழன்று சுழன்று போர் செய்கிறான். பின் வாளும் கேடய மும் கைக் கொண்டான். கும்பன் வாள் எடுத்ததும் வானரர்கள் கலங்கினார். வானவர்கள் தலை கவிழ்ந்தனர். இதைக் கண்ட இராமன், கும்பனின் குன்றை ஒத்த தோளைத் துணிப்பாய்” என்று ஒரு சரம் விடுக்கிறான்.
குன்று ஒத்த தோள் எடுத்தது துணித்தி”
என்று ஒரு சரம் துரந்தான் [கும்பகருணன் வதைப் படலம் 335] 7607
அச்சரம் கும்பனின் கையை அறுத்துத் தள்ளீயது. இரு கைகளூம் அற்ற பின்னும் கும்பன் சளைக்கவில்லை.
சுந்தரத் தடந்தோள்வளையும் வயிரத் தோளும்
துண்டிக்கப் பட்ட கும்பனுடைய அழகிய பெரிய தோள்களில் அணிந்திருந்த தோள்வளை பாம்பு சுற்றியது போலிருந்ததாம். வயிரத் தோள்கள், பாற்கடலைக் கடைந்த அந் நாளில் விளங்கிய மந்தரமலையைப் போலவும் தோன்றுகிறது.
என்கிறான் கவிஞன்
அந்தரத்தவர் அலைகடல் அமுது எழக்
கடைவுறும் அந்நாளில்,
சுந்தரத் தடந் தோள்வளை மாசுணம்
சுற்றிய தொழில் காட்ட,
மந்தரத்தையும் கடுத்தது—-மற்று அவன்
மணி அணி வயிரத்தோள்
[கும்பகருணன் வதைப் படலம் 342] 7613
பொன் தோள்——அழகிய தோள்
இராமன் ஒரு வாளி எய்கிறான். அந்தவாளி கருடனை ஒத்திருந்தது. கும்பனின் தோள் மந்தரமலையை ஒத்தி ருந்தது. திருப்பாற்கடலைக்கடைந்தபோது, திருமால் கருடனை அனுப்பி மந்தரமலையைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டார் என்று சொல்லப்படுகிறது
அயில் வாளி
உவண அண்ணலை ஒத்தது; மந்தரம்
ஒத்தது அவ் உயர் பொன் தோள்
[கும்பகருணன் வதைப் படலம் 343] 7614
கால்களை இழந்ததன் பின்னும் கொஞ்சமும் அயரவில்லை. மூங்கில்கள் நெருங்கியமலையை வாயால் கவ்வி வீசுகிறான். கும்பனது ஆற்றலைக் கண்டு இராமனும் அதிசயிக் கிறான். கும்பனோ, கை கால்களை இழந்த நான் இனி அண்ண னுக்கு உதவ முடியாதே என்று வருந்துகிறான். இனி இராவணன் உய்யும் வழி இல்லை என்று அண்ணனுக்காக இரங்குகிறான்.
பின் இராமனிடம் இரு வரங்கள் வேண்டுகிறான்
“உன்னைச்சரணடைந்த வீடணனை இராவணனிடமிருந்து காக்க வேண்டும்.வீடணனுக்கு தருமத்தைத்தவிர வேறொன்றும் தெரி யாது, எலாவற்றுக்கும் மூலமானவனே! அவன் உன்னைச் சரண டைந்திருக்கிறான். அரசன் உருவில் வந்திருக்கும் வேதமுதல் வனே! உன்னிடம் அடைக்கலம் வேண்டுகிறேன்
நீதியால் வந்தது ஒரு நெடுந் தரும நெறி அல்லால்
சாதியால் வந்த சிறு நெறிஅறியான் என் தம்பி;
ஆதியாய்! உன்னை அடைந்தான்; அரசர் உருக்
கொண்டமைந்த
வேதியா! இன்னம் உனக்கு அடைக்கலம் வேண்டினேன்
இராவணன், தம்பி என நினைத்து வீடணனிடம் இரக்கம் காட்ட மாட்டான் இவனைக் கண்டதும் கொன்று விடுவான். அதனால் இந்த வீடணனைக் காக்க வேண்டும் உன் தம்பி இலக்குவன் நீ, அனுமன் உங்கள் மூவரையும் என் தம்பி பிரியாமல் காப்பாற்ற வேண்டும்
கும்பகருணன் வதைப் படலம் 354] 7625
தம்பி என நினைந்து, இரங்கித் தவிரான்,அத் தகவு இல்லான்
நம்பி! இவன் தனைக் காணின் கொல்லும்; இறை
நல்கானால்;
உம்பியைத்தான், உன்னைத்தான், அனுமனைத்தான்
ஒரு பொழுதும்
எம்பி பிரியானாக அருளுதி; யான் வேண்டினேன்
[கும்பகருணன் வதைப் படலம் 356] 7627
என்று இராமனிடம் இறைஞ்சும் கும்பகருணின் வீரத்தோடு சகோதரன்(தம்பி) மீதுள்ள பாசத்தையும் கண்டு வியக்கிறோம்.
மூக்கில்லா முகம் என்று என்னை யாரும் ஏளனம் செய்யாதபடி என் தலையைக் கடலில் இட வேண்டும் எனவும் வேண்டுகிறான்
கும்பகருணன் கேட்டதை இராமன் நிறைவேற்றுகிறான். கும்பகருணன் மாண்டதைக் கேள்விப்பட்ட இராவணன் சகோதரபாசம் மேலிட மாலையணிந்த கிரீடங்கள் தரையில்வீழ மராமரம் தன் கிளைகளோடு வேரோடு மண்ணில் விழுவது போல வீழ்கிறான்.
தாரொடும் புனைந்த மௌலி தரையொடும் பொருந்த, தள்ளி
பாரொடும் பொருந்தி நின்ற மராமரம் பணைகளோடும்
வேரொடும் பறிந்து மண்மேல் வீழ்வதே போல வீழ்ந்தான்
[யுத்த காண்டம்] [மாயா சனகப் படலம் 76]7707
மல் ஒன்று தோள்———மற் போரில் சிறந்த தோள்
கல் அன்றோ, நீராடும் காலத்து, உன்கால் தேய்க்கும்
மல் ஒன்று தோளாய்! வட மேரு? மானுடவன்
வில் ஒன்று நின்னை விளிவித்துளது என்னும்
சொல் அன்றோ என்னைச் சுடுகின்றது, தோன்றால்!
[மாயா சனகப் படலம் 81] 7712
கும்பகருணன் நீராடும்சமயம் பாதத்தில் உள்ள அழுக்குப் போக மேரு மலையில் தேத்துக் கொள்வானாம். அவ்வளவு தோள்வலி யும் பொருந்திய உன்னை ஒரு மனிதனின் அம்பு வீழ்த்தியது என்னும் சொல் அல்லவா என்னைச் சுடுகிறது?. நான் இன்னும் என் தோள் நோக்கி நிற்கிறேனே! என்று புலம்புகிறான்
வீரம்மிக்க கும்பகருணன் தன் ஆற்றல் முழுவதையும் காட்டிப் போர் செய்கிறான்.போரில் தான் மரண மடையப் போகிறோம் என்று தெரிந்தும் அண்ணனுக்காகப் போர் செய்து செஞ்சோற்றுக் கடன் கழிக்கிறான் அவனது வீரமும் கடமை உணர்வும் சகோதர பாசமும்போற்றுதற்குரியது.
=======================================================================
- ஆர்.சூடாமணி – இணைப் பறவை – சிறுகதை ஒரு பார்வை!
- தேன்மாவு : மூலம் : வைக்கம் முகமது பஷீர்
- தமிழிய ஆன்மீக சிந்தனை
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கவிதையும் ரசனையும் – 10 – “பூஜ்ய விலாசம்” நெகிழன் கவிதைத் தொகுதி
- கடலோரம் வாங்கிய காற்று
- பக்கத்து வீட்டுப் பூனை !
- மகாத்மா காந்தியின் மரணம்
- மூன்று ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிதைகள்
- வானவில் (இதழ் 121)
- வீடு “போ, போ” என்கிறது
- நிரம்பி வழிகிறது !
- தோள்வலியும் தோளழகும் – இந்திரசித்
- தோள்வலியும் தோளழகும் – கும்பகருணன் (2)
- தோள்வலியும் தோளழகும் – வாலி
- சத்திய சோதனை