கேதார்நாத் சிங் கவிதைகள்

கேதார்நாத் சிங் கவிதைகள்
This entry is part 8 of 8 in the series 7 பெப்ருவரி 2021

(1)

துக்கம்

(Sorrow)

 

துக்கங்களின் குன்றென்றிலை

துயர்களின் கடலென்றில்லை

ஒரு கட்டிலின் கயிறு போல்

நாள் முழுதும் துக்கத்தை நெய்கின்ற

சிறிய கைகள் மட்டுமே இருக்கின்றன

 

யாருக்கும் தெரியாது

எத்தனை காலமாக

என் நகரத்திலும்

உன் நகரத்திலும்

சிறு துக்கங்களும் துயர்களும்

இப்படி நெய்யப்படுகின்றன

ஒரு முடிவற்ற கட்டிலின் மேல்

பின்னுவதற்காய்

 

அந்தியில்

அக் கைகள் நெய்யக் களைத்து

தொடக்கமும் முடிவுமில்லாது

இந் நாள் வரைக்கும்

அவை நெய்வதை முடித்திருக்காத

கட்டிலின் மேல்

துயில்கின்றன,

.

(2)

கை

(Hand)

அவள்

கையை

என் கையில் ஏந்திய போது

எண்ணினேன் நான்

இவ்வுலகு

எப்படி

ஒரு கை

வெதுவெதுப்பாயும்

அழகாயும்

இருக்குமோ

அப்படி

இருக்க வேண்டுமென்று

 

(3)

விரல்பதிவு

(Thumbprint)

 

யார் இயற்றியது

அகரமுதலியின் எழுத்துக்களை

 

யார் உருவாக்கியது

இக் கறுப்பு குணச்சித்திரங்களை

இப் பழுப்பு குணச்சித்திரங்களை

 

சுண்ணாம்புக் கட்டி

சிறகு

கரையான்

கரும்பலகை

 

யார்

யார் தான்

இயற்றியது

அகர முதலி எழுத்துக்களை

 

நான் —- நான் –

ஒரு விரல்பதிவு

மெதுவாக

அனைத்துக் கையெழுத்துக்களின் மேல்

தன் மூக்கை அழுத்திக் கொண்டே

சொல்லி

 

ஒரு மையொற்றும் காகிதத் தாளினுற்குள்

காணாதானது.

 

(4)

தகவல்  தொடர்பின் மொழி

(Language of Communication)

 

ஏதோ ஒன்று-

தபால்காரன் கொண்டு வாராதது

ஏதோ ஒன்று-

நாள் முழுதும்

கூரைகளிலிருந்து தூசி போல்

வீழ்வது

 

ஏதோ ஒன்று-

அதனைப் பிடிக்கும் அவசரத்தில்

     பேருந்தைத் தவற விட்டு

     மேசையின் மேல் தொடாமலேயே

ஒரு கோப்பைத் தேநீரை விட்டு விட்டு

நகரத்தில் நடக்கும் கொலைகளைப் பற்றிய

செய்திகளால் அதிர்ச்சியோ புண்படவோ இல்லாமல்

இருக்கிறோம் நாம்-

நடக்கிறதெல்லாம்

ஒருவன் எழுகிறான்

சீப்பை எடுக்கிறான்

அதைக் கீழே வைக்கிறான்

கண்ணாடிக்கு நெருக்கமாய்க் கூட

 

ஏதோ ஒன்று-

அதற்காக எல்லாப் பென்சில்களும்

அவற்றின் துயிலில் அழுதும்

தெருவொன்றின் இரு மூலைகளில்

ஒரே நேர்கோட்டில்

ஆண்டுக்கணக்காக இருக்கும் வீடுகள்

ஒரு வார்த்தையின்றி

நின்றும் கொண்டிருக்கின்றன.

 

(5)

இசையின் மேல் எருதுகளின் காதல்

(The Oxen’s Love for Music)

 

நகரத்தை நோக்கி

சாலை நெடுகத் தம்

கட்டற்ற சுதந்திரத்தில்

எருதுகள்

அருகிலிருக்கும் வயலில்

உழுது கொண்டிருக்கும் டிராக்டரின்

இசை கேட்டு

தடதடவென்று நிற்கும்

 

எவ்வளவு இடரும்

இனிதுமானது-

இசையின் மேல் எருதுகளின் இப்படிப்பட்ட காதல்

 

என் காலத்தின் இசை-

எனக்கு நான் கூறிக் கொண்டேன்

நானும் தடதடவென்று   நிற்கையில்.

 

(6)

போதல்*

(To go)

 

போகிறேன் நான் –

புகன்றாள் அவள்

போ – பதிலிறுத்தேன் நான்

போதல்

இந்தியில்

மிகவும் அச்சுறுத்துகின்ற ஒரு வினைச்சொல்லென்று

முற்றிலும் அறிந்திருந்தும்

 

*குறிப்பு: Jaanaa

 

(7)

தக்காளிகளை விற்கின்ற மூதாட்டி

(The Old Woman Selling Tomatoes)

 

அவள் தக்காளிகளை விற்கிறாள்

 

தக்காளிகளின் பிரகாசத்தில்

அவள் முகம் நடுக்குறுவதைப் பார்க்கிறேன்

எனக்கு நானே கூறிக் கொள்கிறேன்

இது தாயின் முகம்

கார்க்கியின் தாயைப் பெரிதும்

நினைவு கூர்கிறேன்

 

கருஞ்சிவப்புத் தக்காளிகள்

அடுக்கி வைக்கப்படிருக்கின்றன அவள் கூடையில்

கதிரொளி அவற்றை ஒரு கத்தி போல்

சீவுகின்றன

தக்காளிகளுக்குள்

பல் நதிகளும் பல் நகரங்களுமுள்ளன

மூதாட்டியைத் தவிர வேறு யாருக்கும்

தெரியாது அது

 

ஒரு வாடிக்கையாளர் வருகிறார்

கூடை உதற ஆரம்பிக்கிறது

 

கூடையுடன் மூதாட்டி

இடம் விட்டு இடம் பெயர்கிறாள்

என்று தோன்றும் எனக்கு

இதற்கு தக்காளிகள் அவளுக்கு உதவுகின்றன என்று

நான் உணர்ந்த போது

பதறத் தொடங்குகிறேன் நான்

 

இப்போது மூதாட்டியின் கைகள்

தக்காளிகளை உருட்டுகின்றன

சிவப்பான ஒன்றை சத்தமின்றிப் பொறுக்கி

பசிய இலைகளடியில்

ஒளித்து வைக்கிறாள் அவள்

தாயைப் போல.

 

மூதாட்டியின்  தந்திரம்  என்

மனதிற்கு இதமளிப்பதாய்ப் படுகிறது.

முற்றிலும் இது தாயின் புதிய முகம்-

அம் முகம்

பசிய இலைகளின் அடியிலிருந்து

துருத்திப் பார்க்கிறது

 

முகத்தை கவனமாய் ஆய்கிறேன்

அம் முகத்தைப் போல் அப்படியே

தோற்றமளிக்கும் கூடையை

நோக்குகிறேன்

 

கூடையில் தக்காளிகள் உள்ளன

ஆனால் தக்காளிகளுக்கடியில் என்ன உள்ளது?

 

பசிய இலைகளினடியில் என்ன உள்ளது

அவற்றினடியில் என்ன உள்ளது

மூதாட்டியிடம் நான் வினவ விரும்புகிறேன்

 

மூதாட்டி மெளனமாய் இருக்கிறாள்-

தாயைப் போலவே

 

(8)

ஊசிக்கும் நூலுக்கும் இடையில்

(Between Needle and Thread)

 

என் தனிமையைப் பற்றிய சிந்தனையாகவே

இருக்கிறாள் என் தாய்

இப்போது மழை பெய்யவில்லை

ஆனால், எக் கணத்திலும் அது ஆரம்பிக்கக் கூடும்

வெளியே போக வேண்டும் நான்

அவள் வாய் மூடி மெளனியாய் இருக்கிறாள்

ஏனெனில் நான் வெளியே போக வேண்டியிருப்பதால்

 

இது நிச்சயம்

வெளியே போவது என் மனதிலிருந்து

அவளை அகற்றி விடும்

அவள் கோப்பையை

அவள் கண்ணாடியை

நான் மறக்கச் செய்யும்

இவ் அகல் உலகு முழுதும்

அவள், அவள் மட்டுமே அணிகின்ற

கறுப்பு ஓர வெண்சேலையை

முற்றிலும் நான் மறக்கச் செய்யும்

 

சிறிது காலத்திற்குள்

குளிர்காலம் ஆரம்பிக்கும் இங்கு

குளிராக இருக்கும் போது அவள்

தன் நிழலின் மேல்

சிறிது இன்னும் நெருக்கமாகக் குனிவதை

நான் கவனித்திருக்கிறேன்

கம்பளியைப் பற்றிய அவள் சிந்தனைகள் கடுமையானவை

மரணத்தைப் பற்றியவை மென்மையானவை-

பறவைகளைப் பற்றிச் சொல்ல

ஒன்றுமில்லை அவளுக்கு

துயிலில் ஒரு பறவை போல் மிகவும் அவள்

தோன்றினும்

 

எப்போது களைப்புறினும்

ஊசியையும் நூலையும் எடுக்கிறாள்

ஏனையெல்லோரும் துயில்கையில்

அவளின் விரல்கள்

ஊசியில் வேலையாய்

ஏதோ

சரி செய்ய வேண்டிய

என் நைந்த குர்தாவைப் போல்

நள் யாமம் கடந்தும்

மெதுவாக – மெதுவாக-

காலத்தைத் தைத்துக் கொண்டிருப்பதைக்

கவனித்திருக்கிறேன் நான்

 

கடந்த அறுபதாண்டுகளாக

ஓர் ஊசிக்கும் ஒரு நூலுக்கும் இடையில்

நெரிக்க இருக்கிறாள்

என் தாய்

மிகவும் அடர்த்தியாகவும் முரடாகவும் உள்ள

அறுபதாண்டுத் துணியை

நீளத்தின் மேல் நீளமாய்

மெதுவாக மெதுவாக

நெய்யும்

ஒரு தறியாகத்

தான் இருந்தாலும்.

 

(9)

என் குருதியில் தாமரை

(The Lotus in My Blood)

 

என் எலும்புகள்

என் உடலுக்குள்

ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் விதைகள்

என் உடல்

என் குருதியில் அலர்ந்த ஒரு தாமரை

 

ஒரு நாள்

ஒரு பளிச்சிடலில்

துளசிதாசை வாசித்துக் கொண்டிருக்கையில்

இதை அறிய நேர்ந்தேன் நான்

உன்னால்

இதை

நம்ப முடியுமா?

 

(10)

எங்கு செல்வேன்

(Where Will I Go?)

 

எங்கு செல்வேன் நான்

இங்கு வாழ்வேன் நான்

 

கதவின் மேல்

கையின் கறை போல்

உறைவேன் நான்

 

சுவரின்

அல்லது பெட்டியின்

ஒரு பழைய துளையின்

நெடியில் ஒளிந்து

உறைவேன் நான்

 

ஏதோ ஒரு பேரேட்டில்

என் நிரந்தர முகவரியின்

எழுத்துக்களின்  அடியில்

உறைவேன்

புதைந்து

நான்

 

அல்லது

முடியுமென்றால்

மலைச்சரிவுகளில்

உப்பைச் சுமந்து செல்கின்ற

கோவேறுக் கழுதையின்

ஒலிக்கும் மணியாவேன்

அல்லது மஜ்ஹி பாலத்திலிருக்கும்

ஓர் ஆணியாவேன்

 

எங்கு செல்வேன் நான்

பார்

ஒவ்வொன்றும் இருக்கிறது போலவே இருக்கும்

என் தினசரி ஒழுங்கு மட்டும் மாறும்

பறவைகள் கருக்கலில் திரும்புகையில்

கூடத் திரும்புவேன் நானும்

விடியலில் அவை வெளியே பறந்து செல்கையில்

கூடப் பறந்து செல்வேன் அவற்றோடு நானும்

 

(11)

காலணிகள்

(The Sandals)

 

கூட்டம் முடிந்தது

காலி அரங்கில் காலணிகள் விடப்பட்டு விட்டன

அரண்டிருண்ட

தூசி படிந்த

இரு காலணிகள்

திறந்த வாயுடன்

யாரும் அவற்றை

உரிமை கோராமல்-

 

காவலாளி வந்து

காலணிகளைக் கண்டான்

திறந்த வாயுடைய காலணிகளின் முன்

சிறிது நேரம் அமைதியாய் நின்று

இப்படி நினைத்துக் கொண்டே:

எவ்வளவு விநோதமானது இது

பேச்சாளர் போய் விட்டார்

அனைத்து விவாதங்களுக்குப் பிறகு

இக் காலணிகள் மட்டுமே

விட்டு வைக்கப்பட்டுள்ளன

 

எதுவும் பேசுவதற்கு

விட்டு வைக்கப்படாத

அக் காலியரங்கில்

எவ்வளவு அதிகமாக

எவ்வளவு மிக அதிகமாக

அக் காலணிகள் பேசின

 

(12)

ழீன் பால் சார்த்தரின் கல்லறையில்

(At The Graveyard of Jean Paul Sartre)

 

ஆயிரக்கணக்கான துயில் கொள்ளும்

கல்லறைகளின் மத்தியில்

இக் கல்லறை மட்டுமே

உயிர்ப்போடு இருந்தது

நேற்றைய வாடிய பூக்களுக்கு அணித்து

யாரோ ஒருவர்

ஒரு புதுப் பூங்கொத்தை வைத்து விட்டு

சற்று முன் தான் சென்றிருந்தார்

சிவப்புப் பூவொன்றின் கீழ்

அதே போல்

பதியதாய் இருக்கும்

ஒரு மஞ்சள் நிற

மெட்ரோ இரயில் பயணச்சீட்டு கிடக்கும்.

 

என்னுடைய வழிகாட்டி

முறுவலித்துக் கொண்டே

சொல்வார்

திரும்பிப் போவதற்கான பயணச்சீட்டு இது-

யாரோ ஒரு பழைய நண்பர்

வைத்திருக்க வேண்டும் அங்கு-

துயிலிலிருந்து நீ

விழித்தெழுந்தால் வா

 

இது கூட இருப்பின் ஒரு நிலையேயென

உணர்ந்தேன் நான்.

தான் இருந்ததற்குப் பிறகு

சார்த்ரே இருந்திருக்க வேண்டுமென்றால்

இதைப் பற்றி

என்ன கூறியிருப்பார்-

இப்படி எண்ணிக் கொண்டே

என் விடுதிக்கு திரும்பிச் செல்லும் வழியில்

நடந்தேன் நான்

 

(13)

தாய்மொழி

(Mother Tongue)

 

எறும்புகள்

தம் துளைகளுக்கு

திரும்புவது போல்

மரங்கொத்திப் பறவை

தன் வனத்திற்கு

திரும்புவது போல்

கருநீல வானில்

தம் சிறகுகளை விரித்து

விமானங்கள்

ஒன்றன் பின் இன்னொன்றாய்

விமான நிலையத்துக்கு

திரும்புவது போல்

 

ஓ, தாய்மொழியே

நீள் மெளனம்

என் நாவை வறளச் செய்யவும்

என் ஆன்மா வலிக்கவும்

ஆரம்பிக்கும் போது

உன்னிடம் நான்

திரும்புகிறேன்.

 

(14)

சந்தையொன்றில் ஓர் ஆதிவாசி

(A Tribal in a Bazaar)

 

ஆரவாரமிக்க சந்தையில்

தெளிவாய் ஓரம்பு போல் ஊடுருவி

பொருட்களின் மேல்

கூர்த்த அசுவாரசியத்துடன்

விரைவில் பார்வையிட்டு

விற்போர் வாங்குவோராகிய அனைவருக்கும்

இடையிலுள்ள சிறிய துளை

வழியாய்

அச்சுறுத்தும் ஒரு சாம்பல் நிற

அரவு போல்

மறைந்தான் அவன்

தனக்கே உரிய

அதிர்வும் துடிப்பும் கூடிய

உண்மையிலே உரம் பெற்ற உடலுடையான்

 

அவர்களின் அபுஜ்மட் காட்டில்

இராவில் அவ்வப்போது

அத் துடிப்பை நீ கேட்கலாமென்று

அவர்கள் கூறுகிறார்கள்

 

அடுத்த முறை ஒரு பாடகனைப் பார்க்கையில்

அக் குறிப்பிட்ட துடிப்புக்குரிய

துல்லியமான இசைச்சொல்

எதுவென்று வினவுவேன்

 

(15)

விஞ்ஞானமும் உறக்கமும்

(Science and Sleep)

 

ஒரு இரயில் வண்டியில் ஏறும் போது

விஞ்ஞானத்திற்கும் விஞ்ஞானிகளுக்கும் நான்

நன்றி கூறுகிறேன்

 

ஒரு விமானத்திலிருந்து இறங்குகையில்

விஞ்ஞானத்திற்கு அதிகமாயும்

கடவுளுக்கு கொஞ்சமாயும்

நன்றி கூறுகிறேன்

 

ஆனால்

இரவில் நான் உறங்கச் செல்லும் போது

வெளிச்சத்தில் உறங்க முடியாதெனின்

விளக்கை அணைத்து விட்டு

உறங்கி விடுகிறேன்

 

விஞ்ஞானத்தின் இருளில்

ஒருவர்

நன்றாகவே

உறங்கலாம்.

 

(16)

காலிப்பக்கம்

(Blank Page)

 

ஒரு காலிப்ப்க்கத்தில்

விடியலுமில்லை அந்தியுமில்லை

அரைக்கோளத்திற்கு அப்பாலிலிருந்து

ஒரு நள்ளிரவுச் சூரியன்

அதன் மேல் ஒளிர்கிறது

 

உற்று கவனி

அங்கு வெளிறிய இரு விழிகள்

ஜொலிப்பதை  நீ காண முடியும்

புலியின் அழகிய ரோமத்தின்

தீ

உன் மேஜையின் மேல்

தாவுகிறது; விரிகிறது

 

இந்த

உக்கிரமான ரோமத்தினூடே

உன் விரல்களால் வருடி

நெருங்கிச் செல்

அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை

ஒரு காலிப்பக்கம்

உன் தோல் போல்

மிருதுவும் கனிவும் கொண்டது

உன் அன்பு போல் பழமையானது

உன் வெறுப்பு போல் சுதந்திரமானது

உன் விரல்நகங்கள் போல் நாகரீகமானது

உன் குருதி போல் உப்பு கரிப்பது

 

தொடு அதை

உன் கழுத்தில் துடிப்பு போல்

உணர்வாகிறது அது

இதையே கவிதை

செய்கிறது

இந்த எளிய மற்றும் திகிலான விடயத்தை-

நமது எல்லா வார்த்தைகளுக்குப் பிறகு

எப்போதுமே அது

நம்மை விட்டுப் போய் விடுகிறது

காலிப்பக்கத்துடன்

 

(17)

வறட்சிக் காலத்தில் நாரைகள்

(Cranes in the Drought)

 

பிற்பகல் மூன்றுக்கு

வருகையுற்றன அவை.

அவை வந்த போது

நாரைகள் அப்படி வரமுடியுமென்று

யாரும் எப்போதும்

கற்பனை செய்ததில்லை

 

ஒன்றடுத்து

ஒன்றாய் அவை

பைய வந்தன

பறந்து பின் பறந்து

அவை மெல்ல

முழுவானம் பரந்தன

முழு நகரமும்

அவற்றின் கீச்சொலிகளில்

சிறுகச் சிறுக நிரம்பின

 

வட்டமிட்டன அவை

நகரத்தின் மேல்

வெகுநேரம்

கூரைகளின் மேல்

தாழ்வாரத்தின் மேல்

அவற்றின் சிறகுகளிலிருந்து

உலர் நெல்லிதழ்களின் நெடி

வீழ்ந்து கொண்டே இருந்தது

 

சட்டென்று

மூதாட்டியொருத்தி கவனித்தாள் அவற்றை

நிச்சயமாக

நீர் தேடி அவை

வந்த்திருக்க வேண்டுமென்று

உணர்ந்தாள்

 

அடுக்களைக்கு சென்று

கிண்ணமொன்றில் தண்ணீர் கொணர்ந்து

முற்றத்தில் வைத்தாள்

 

ஆனால் நாரைகள்

நகரத்தின் மேல்

வடடமிட்டுக் கொண்டே இருந்தன

அவை

மாதையும் நோக்கவில்லை

நீர் நிறைந்த கிண்ணத்தையும் நோக்கவில்லை

 

நாரைகளுக்கு

மனிதர்கள் கீழே வாழ்கிறார்களென்ற

எந்த யோசனையுமில்லை

அவர்கள் அழைக்கிறார்கள் அவற்றை நாரைகளென

தூர தேசங்களிலிருந்து

தண்ணீர் தேடி

வந்திருந்தன அவை

 

தூர தேசங்களோடு தளைப்பட்டிருந்தன அவை

தண்ணீர் தேடி

 

ஆகையால்

தம் கழுத்துகளை உயர்த்தின

ஒரு தடவை மட்டும் திரும்பிப் பார்த்தன

அப் பார்வை

என்ன உணர்த்தியதென்று அறிய முடியாது

பரிதாபமா அல்லது  பகைமையா

ஆனால்

விட்டுப் பிரியும் போது

நகரத்தை நோக்கி

தங்களின் கழுத்துகளைத் திருப்பி

ஒரு பார்வையை

வீசாமல் இல்லை அவை

 

பிறகு

சிறகுகளைக் காற்றில் அடித்துக் கொண்டு

தொலைவுகளில்

தொலைந்து போயின

அவை.

 

குறிப்பு:  இந்தியின் மகத்தான கவிஞர்களில் ஒருவர்  கேதார்நாத் சிங் (1934-2018). அவர் கவிதைகள், மேற்போக்காக ஏமாற்றி விடும் எளிமையில் ஆழங் கொள்ளும் சாதாரண அன்றாட வாழ்க்கைப் படிமங்களில் பின்னப்படும் அசாதாரணமான அர்த்தங்களில், நுணுக்கமான ஸர்ரிரியலிசத் தன்மையும் கூடி அலாதியானதோர் கவிதானுபவத்தைத் தருகின்றன. ஏராளமான விருதுகள் இவரைத் தேடி வந்திருக்கின்றன. அவற்றில் சாகித்திய அகாடமி விருதும் (1989 ), ஞானபீட விருதும் (2013) அடங்கும். இங்கு ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிதைகள் இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சாகித்திய அகாதமியின் வெளியீடான  Banaras and Other Poems , Kedarnath Singh Editted by K.Satchidanandan , Sakitya Akademi(2015) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. கேதார்நாத் சிங்கின் கவிதைகளுக்கே உரித்தான நிறுத்தற்குறிகளில்லாமை( without punctuations) ஆங்கில மொழிபெயர்ப்பில் அடியொற்றியுள்ளது போலவே தமிழாக்கத்திலும் அடியொற்றியுள்ளது.

Series Navigationமொழிபெயர்ப்பாளர்க்கான விருது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *