முனைவர் ந. பாஸ்கரன்
சிறுகதை, புதினம், கவிதை [மரபு, நவீனம்], கட்டுரை, விமர்சனம் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து இயங்கி வருபவர் வளவ. துரையன். அவர் எழுதி இதுவரை வந்துள்ள நூல்களைப் பற்றிய பருந்துப் பார்வையாகும் இது.
அவரின் முதல் நூல் “தாயம்மா” இது சிறுகதைத்தொகுப்பாகும். இதில் மொத்தம் 13 சிறுகதைகள் உள்ளன. ”தாயம்மா” ஒரு முக்கியமான கதை. அதுவே நூலின் பெயராக அமைக்கப்பட்டுள்ளது. ”தாயம்மா செத்துக் கிடந்தாள்” எனும் அமங்கலச் சொற்றொடருடன் கதை தொடங்குகிறது. அவள் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் பருவ வயதுள்ள தன் மகள் செல்லத்துடன் ஒண்டிக்கிடப்பவள்; வேறு யாரும் உறவு கிடையாது. தன் மகளுக்குப் பாதுகாப்பாக அந்தப் பகுதியின் சண்டியர் சோமுவிடம் உறவு கொள்ள வைத்திருப்பவள். அவள் இப்போது செத்துக் கிடக்கிறாள். சோமு வந்து தாயம்மாவை அடக்கம் செய்ய பணம் வசூலிக்கிறான். வசூலித்த பணத்தில் செல்லத்துக்குக் கொஞ்சம் கொடுத்து ஆறுதலுக்காக இரவு வரச்சொல்லி விட்டுப் போகிறன். பிணத்தை அநாதைப்பிணம் என்று கூறி நகராட்சியை விட்டு அடக்கம் செய்யச் சொல்கிறான்.
இக்கதை செல்லத்தின் நிலை என்ன என்று தெளிவாகக் கூறுகிறது. சோமுவின் கைப்பாவையாய்க் கிடக்கும் அவள் தான் என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனைக்கும் எட்டாதவளாக இருக்கிறாள். இது போல் பல செல்லங்களும், சோமுக்களும், தாயம்மாக்களும் சமூகத்தில் இன்னும் உலவுவதை இக்கதை மறைமுகமாய்ச் சொல்லிக் காட்டுகிறது.
தொன்மத்தைக் கொண்டு வந்து இன்றைக்கு ஆராயும் கதை “கவலை” இதில் இராமயண பாத்திரங்களான அனுமன், சுக்ரீவன், வீடணன் ஆகியோர் காட்டப்படுகின்றனர். அண்ணன்மார்கள் மறைந்து போனகவலை தீர ஆறுதலாக இருக்குமென்று அயோத்தி சென்று இராமனைக் காண வருகிறர்கள் சுக்ரீவனும் இராமனும். ஆனால் அங்கேயோ சீதையைக் கானகம் அனுப்பி விட்டு இராமனே கவலையில் ஆழ்ந்துள்ளார். பரம்பொருளே மனிதனாக வந்தாலும் கவலையிலிருந்து அகலமுடியாது என்பதும் தெரிகிறது
அப்போது அனுமன் கூறும் சொற்கள்தாம் கதையின் மையமே. “குளத்தில் பாசி இருக்கும்போது கையால் தள்ளிவிட்டுக் குளிக்கிறோம். எழுந்து வந்தவுடன் மீண்டும் வந்து கூடிவிடுகிறது. அதுபோல்தான் மனத் துன்பமும். அகற்ற வந்து நிற்கும். அதில் வெல்பவன்தான் பெருமை மிக்கவன் ஆவான்.” கவலையை யாரும் வெல்ல முடியாது. தற்காலிகமாக ஒதுக்கி வைத்து நாம் வெற்றியடையலாம். ஆனால் அந்த வெற்றியை நாம் நிலையானதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இன்னும் இத்தொகுப்பில் பயம், ஞாபகம், பண்டாரம் போன்ற முக்கியமான கதைகள் உள்ளன. இது 2000 –ஆம் ஆண்டில் பாவண்ணனின் வெளிவந்தது.
ஜெயமோகனின் பெரிய அணிந்துரையுடன் 2002-ஆம் ஆண்டில் வெளிவந்த “சிகரங்கள்” வளவ. துரையனின் சங்க இலக்கியப் பயிற்சியைப் புரிந்துகொள்ள வைக்கிறது..
‘சங்க இலக்கியத்தில் உழவு’ என்பது இந்நூலில் உள்ள முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாகும். வயல்களில் கரும்பை வெட்டி முடித்த பின்னர் அக்கரும்பின் அடி மீண்டும் துளிர்க்கும். இப்படிக் கரும்பை விளைவிப்பதை ‘மறுகால்’ என்பர். இதைக் குறுந்தொகையில் கடுவன் மன்னனார் பாடியுள்ளதாக நூலில் காட்டப்படுகிறது. பரிபாடலில் திருமாலும் முருகனும் எவ்வெவ்வாறெல்லாம் போற்றப்படுகிறர்கள் என்று ஒரு கட்டுரையில் சுட்டப்படுகிறது.
பத்துப்பாட்டுகளுள் ஒன்றான ’மலைபடுகடாம்’ பற்றி ஓர் ஆய்வுக்கட்டுரை இத்தொகுப்பில் காணப்படுகிறது. நூலின் பெயர்க்காரணம், நூலின் பாட்டுடைத் தலைவன், நூல் முழுதும் கூத்தனின் கூற்றாகவே இருப்பது, பலவித ஒலி எழுப்பும் இசைக்கருவிகள், விறலியின் வருணனை, மலைப்பகுதியில் காணப்படும் இயற்கைக் காட்சிகள் போன்றவற்றை நூலில் ஆசிரியர் காட்டுவது நூலை நாம் ஒரு முறை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்க்கிறது. மேலும் இத்தொகுப்பில் உள்ள சூளாமணியின் பெருமை, இலக்கியத்தில் காதல் ஆகியன அவசியம் படிக்க வேண்டியவை. அவற்றில் பல புதிய செய்திகள் உள்ளன.
வளவ, துரையன் வைணவத்தில் ஆழங்கால்பட்டவர். அவ்வப்போது சப்தகிரி, ஆலயதரிசனம், திருமால் போன்ற இதழ்களில் வைணவக்கட்டுரைகள் எழுதி வருபவர். அவர் எழுதிய வைணவக் கட்டுரைகள் “வைணவ விருந்து” எனும் பெயரில் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. வைணவ உரைவளத்தை ஆய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ள பச்சையப்பர் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். தெ, ஞானசுந்தரம் இந்நூலுக்குச் சிறப்பான அணிந்துரை எழுதி உள்ளார்கள்.
இந்நூலில் பன்னிரு ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாறுகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ள “பரிபாடலில் திருமால்நெறி, சிலம்பில் திருமால் நெறி” என்னும் கட்டுரைகள் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளாகும். ஸ்ரீ வைணவத்தின் முக்கியமான “ஓம் நமோ நாராயணாய” எனும் திருமந்திரம் எப்படித் தோன்றிய அதை யார் யாருக்கு உபதேசித்தார் எனும் விளக்கம் “திருமந்திர வரலாறு எனும் கட்டுரையில் காணப்படுகிறது.
’தாண்டகம்’ எனும் பாவகையின் இலக்கணத்தைக் கூறி திருமங்கை ஆழ்வாரின் திருத்தாண்டகப் பாசுரங்களின் சீர்மையை ஒரு கட்டுரை விளக்குகிறது. திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளி உள்ள பெருமானிடம் நாயகி உள்ளம் பறிகொடுக்கிறாள். அவரிடம் தன் உள்ளக் கிடக்கையைக் கூறுமாறு நாரையைத் தூது விடுகிறாள். அப்போது ”நீ தூது சென்று சொல்லி வந்தாயானால் உனக்கு இக்காட்டையே உரிமையாக்கி, வயலில் உள்ள மீன்களையும் தருவேன். நீ உன் சுற்றத்தோடு இனிது வாழலாம்” என்று தலைவி ஆசை காட்டுவதாக திருமங்கை ஆழ்வார் ஆசை காட்டுவதாக வளவ. துரையன் நயம் தோன்ற இக்கட்டுரையை எழுதி உள்ளார். மேலும் பாரதியார் எழுதியுள்ள “கண்ணன் என் தோழன், கண்ணன் என் தாய்” எனும் பாடல்களை அடியொற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் பாரதியார் கவிதைகளின் மீது ஆசிரியர் கொண்டுள்ள தாக்கம் தெரிகிறது.
2005-இல்வெளிவந்த வளவ. துரையனின் “தேரு பிறந்த கதை” முக்கியமான கதைகளைக் கொண்ட தொகுப்பாகும். இத் தொகுப்பு எட்டயபுரம், சேலம், கம்பம் ஆகிய ஊர்களில் உள்ள இலக்கிய அமைப்புகளால் முதல் பரிசு அளிக்கப்பட்டு பாராட்டப்பட்ட தொகுப்பு. திருவிழாக்களில் தேர் வீதிகளில் வருவது ஒரு முக்கியமான நிகழ்வாகும். அந்தத் தேரானது வலம் வருகின்ற திருவிழா எப்படித் தோன்றியது என்பதைக் கற்பனையுடன் கலந்து அற்புதமான ஒரு சிறுகதைப் படைத்துள்ளார். ”இறைவனைத் தேரில் அமர்த்தி இட்டுச் செல்வது அவர்கள் கோயிலுக்குள் வராமல் தடுத்திடத்தான்; அது ஒரு தந்திரம் கூட” என்று அக்கதை எழுந்த நோக்கத்தை இத்தொகுப்பின் அணிந்துரையில் எழுத்தாளர் எஸ்ஸார்சி கூறுகிறார்.
நவீனத்துவப் பார்வையில் கண்ணப்ப நாயனாரின் வரலாற்றைக் கட்டுடைத்துப் பார்க்கும் :நயனபலி” இத்தொகுப்பின் ஒரு முக்கியமான சிறுகதை. இதேபோல ”சில சிதைவுகள்” சிறுகதையில் பரசுராம அவதாரத்தின் நிகழ்வுகள் இக்கால நோக்கில் பார்க்கப்படுகின்றன. “அவசரக் காரனுக்குப் புத்தி மட்டு” என்னும் பழமொழி மறைமுகமாகக் கதையில் விளக்கப்படுகிறது எனலாம்.
வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள ஏழைகளின் உலகம் தனியானது. அங்கு காணப்படும் அன்பு எங்கும் பார்க்க முடியாதது. அவர்களின் முக்கியமான பிரச்சனை வயிற்றுப் பிரச்சனையே ஆகும். அதன் காரணமாக அவர்களுக்குள் மனித நேயம் மறைந்துவிடவில்லை என்பதைக் காட்டும் நல்ல கதைதான் “அவர்கள் உலகம்”. கிராமப்புறங்களில் பணிக்குச் செல்லும் பெண்களுக்குக் கழிவகம் இல்லாத சிக்கலைக் கனமாகக் கூறுகிறது “இதுவும் பிரச்சனைதான்” சிறுகதை.
வளவ. துரையன் புதுச்சேரி வானொலியில் பல்லாண்டுகளாக உரை நிகழ்த்தி வருகிறார். அந்த உரைகள் எல்லாம் தொகுக்கப்பட்டு “பெரியோர் சிந்தனை’ எனும் பெயரில் வெளிவந்துள்ளது. அரிய பல பெரியோர்களின் எண்ணங்கள் இத்தொகுப்பில் உள்ளன. நக்கீரர், மகாவீர்ர், ஔவையார், விவேகானந்தர், தாயுமானவர், ஆகியோருடன் பெரியார், ராஜாஜி, அகிலன், பெரிய சாமித்தூரன் போன்ற தற்கால அறிஞர்களின் கருத்துகளும் இதில் காணப்படுகின்றன.
நமது நாடு சுதந்திரம் பெற்ற வரலாற்றைத் “தியாகத்தினால் விளைந்த சுதந்திரம்” எனும் கட்டுரை விளக்கும் அதே நேரத்தில் நாம் பெற்ற சுதந்திரத்தைக் காக்க வேண்டியதன் அவசியத்தையும், தேசம் போற்றுக, தேசம் காப்போம் ஆகிய கட்டுரைகல் விளக்கிச் சொல்கின்றன. ‘பதறியது சிதறும்; சொல்லைப் போர்ரு எனும் கட்டுரைகல் நாம் பேசும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் பற்றிக் கூறுகின்றன. “இனிய உளவாக இன்னாத கூறல், அல்லவை தேய அறம் பெருகும்” போன்ற திருக்குறள் பாக்களின் கருத்துகள் ஆங்காங்கே பல கட்டுரைகளில் சான்றாகக் காட்டபடுகின்றன.
‘கூச்சம்’ வளவ. துரையனின் மூன்றாம் சிறுகதைத் தொகுப்பாகும். அரசியல் கூட்டங்களுக்குக் கூலியில் ஆள் பிடித்துச் சேர்த்து விடும் அவலத்தைக் கூறும் சிறுகதை அப்படி ஆளாய்ப் போன ஒருவன் அதற்கான கூலியை வாங்கக் கூச்சப்படுகிறான் என்பதைக் காட்டும் கதைதான் ‘கூச்சம்’ எனும் கதையாகும். முழுக்க முழுக்க நவீனத்துவ பாணியில் இரண்டு மிதி வண்டிகள் பேசிக் கொள்வது போல எழுதப்பட்ட கதைதான் ‘திருட்டு’. சில பெரிய இடத்து விவகாரங்களையும் எள்ளல் தொனியில் கிண்டல் செய்கிறது இக்கதை. சாதாரணமான சிறிய ஒரு பிரச்சனைக்காக ஊடல் கொண்டுள்ளாள் மனைவி. இரவில் அவளைத் தொட முடியாமல் தவிக்கும் ஒரு கணவனின் மன உளைச்சலைக் கதையாகக் காட்டுகிறது ”ஏன்”. துளி தவறினாலும் கீழே விழுந்து விடும் கம்பி மேல் நடக்கும் சாகசத்தைச் செய்திருக்கிறார் இக்கதையில் வளவ. துரையன்.
வளவ. துரையனின் முதல் புதினம் “மலைச்சாமி”. இது மிக எளிய கிராமத்தில் நடக்கும் கதை. இந்நாவலில் நாம் பார்க்கும் பாத்திரங்கள் எல்லாம் மிகச் சாதாரணமானவர்கள். அத்துடன் நமக்குப் பழக்கமானவர்கள். தெளிந்த நீரோடையாய் ஓடிக் கொண்டிருந்த முருகேசனின் வாழ்வு புயலில் சிக்கிய சிறு செடியாய் மாறிப்போகிறது அவன் மலைச்சாமியாய் மாறுவது மிக இயல்பாய் நடக்கிறது. ஏராளமான சாத்தியக் கூறுகளையும் மௌனங்களையும் உள்ளடக்கியதாக இந்நாவல் இருக்கிறது என்கிறார் அணிந்துரை எழுதி உள்ள முனைவர் க. நாகராசன். நாவல் பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் நடையில் அமைந்துள்ளது. “குழந்தைகள் இறைத்த சோற்றுப் பருக்கைகளாய் ஏரியில் வெள்ளைநிறக் கொக்குகள் மிதந்தன” போன்ற எளிய உவமைகள் நாவலில் ஆங்காங்கே காணப்படுகின்றன.
வளவ. துரையன் முதலில் இலக்கிய உலகிற்கு மரபுக் கவிஞராகத்தான் அறிமுகமானார். தொடக்க காலத்தில் நிறைய கவியரங்குகளில் பங்கு கொண்டவர் அவர். மரபில் அவர் எழுதிய கவியரங்குக் கவிதைகளும், தனிக்கவிதைகளும் கொண்ட தொகுப்பாக “பசிமயக்கம்” வெளிவந்துள்ளது. பதினேழு ஆண்டுகளாகக் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது இது. இக்காலப்பாவலர்களைப் பார்த்து இயற்கையை, முத்தமிழைப் பாடியதெல்லாம் போதும்; இனிமேல்,
”கஞ்சிவேண்டும் எனக்கேட்டுக் கந்தலுடை கொண்டு மூடி
கெஞ்சுவிழி தனைப்பெற்றுக் கேவலமாய் நாள்தோறும்
அஞ்சிஅஞ்சி வாழ்கின்ற அம்மனிதன் குறைதீர
எஞ்சியுள்ள காலத்தில் எல்லாரும் பாடிடுவீர்”
என்றவர் எழுதி வேண்டுவது கவிஞரின் சமுகப் பார்வையைக் காட்டுகிறது. இதே போல ”முற்றுப்புள்ளி” எனும் தலைப்பில் எவ்வெவற்றிற்கு எவ்வெவவை முற்றுப்புள்ளி என்று அவர் எழுதும் நயம் மனத்தில் இடம் பிடிக்கிறது.
”நதியினுக்குக் கடலதனால் முற்றுப் புள்ளி
நாளுக்குக் கதிரவனால் முற்றுப் புள்ளி
புதிருக்குச் சிந்தனையால் முற்றுப் புள்ளி
பூவிற்குச் சூடுவதால் முற்றுப் புள்ளி”
இந்த அடிகளில் புதிருக்குத் தெளிவு பிறக்க சிந்தனைதான் வழிகாட்டும் என்பது நல்ல கருத்தாகும்.
”வீணே! வீணே!” “இரண்டு” ”தன்னுரிமை” ”அச்சம்” ”கம்பன் முதல் கண்ணதாசன்வரை” ”கதிர்” “முடியாது முடியாது” அண்ணா ஒரு கடை” ”காந்தி முதல் காமராசர்வரை” ”மின்சாரம்” ”வயிறு” ”காந்தியாரின் பொறுமை திறமை” ’அனுமன்” இலஞ்சம்’ போன்ற கவியரங்கப் பாக்கள் வளவ. துரையனின் மரபுப் பயிற்சிக்கும் கருத்து வளத்திற்கும் சான்றுகளாக விளங்குகின்றன.
வளவ. துரையன் மனத்தில் இடம் பிடித்துள்ள நாவலர் கணேசனார் பற்றி எழுத்தியுள்ள ஓர் அந்தாதியும் இந்நூலின் இறுதியில் அமைந்துள்ளது. தொடக்க காலத்திலேயே சிற்றிலக்கியங்களில் ஒன்றான ஆற்றுப்படையைக் கைக்கொண்டு “அர. இராசாரமன் ஆற்றுப்படை” எனும் ஒன்றை அவர் எழுதியுள்ளது இந்த நேரத்தில் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.
நவீன இலக்கியம் அறிமுகமான பின்னர் வளவ. துரையன் புதுக்கவிதைகளில் பிரவேசித்தார். பலவேறு சிற்றிதழ்களில் அவரின் நவீன கவிதைகள் அறிந்து கொண்டிருக்கின்றன. அவரின் நவீன கவிதைகள் இரண்டு தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. முதல்தொகுப்பின் பெயர் “விடாத தூறலில்”
இரண்டாவது தொகுப்பாக “ஒரு சிறு தூறல் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் எல்லாம் நாம் அன்றாடம் பார்க்கும் காட்சிகளாகவே உள்ளன. அவற்றைக் கவிதைக்கண் கொண்டு பார்ப்பவரே கவிஞர் என்று நிரூபிக்க்கிறார் வளவ. துரையன். ”கவிஞர் வளவ. துரையன் தன் இலக்கிய வாழ்வின் ஒவ்வொவொரு காலகட்டத்திற்கும் ஏற்ப கவிதையின் போக்கிலேயே பயணம் செய்திருக்கிறார். சில வேளைகளில் கவிதையின் போக்கையே மாற்றி மற்றவர்களுக்கு வழிகாட்டியும் இருக்கிறார்” என்று இந்நூலின் அணிந்துரையில் கூறுகிறார் வழக்கறிஞர் கோ. மன்றவாணன்.
மின்சாரக் கம்பிகளில் ஒரு பட்டம் மாற்றிக்கொண்டிருக்கிறது அதைப் பார்க்கிறார் வளவ. துரையன். அப்பட்டம் அவர் மனத்தில் பல எண்ணங்களை விதைகிறது. அவர் மனம் அப்பட்டத்தை விட்ட அப்பையனை நினைத்துப் பார்க்கிறது. அதை உடனே கவிதையாக வடிக்கிறார். இதோ அக்கவிதை:
தற்கொலை
சஞ்சலப்படும் மனம் போல
ஆடிக்கொண்டிருக்கிறது
மின்கம்பியில் பட்டம்
வாலறுந்தோ இல்லை
நூலறுந்தோ
குதூகலம் தொலைந்து
வழிதெரியாமல்
வந்து மாட்டி உள்ளது
தன்னை வைத்து
ஆடிய
அச்சிறுவனின்
சோகத்தில் மூழ்கிக்
காற்றில் தற்கொலை
செய்துகொள்கிறது
வளவ. துரையனின் இரண்டாவது புதினமாக “சின்னசாமியின் கதை” வெளிவந்துள்ளது. இது சின்னசாமியைப் பற்றியதா என்று ஐயம் தோன்றினாலும் நாவலின் மையங்களாக சின்னசாமி, மாதவன், மற்றும் முருகனையும், அவர்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளையும் கொண்டுள்ளன. இந்நாவலில் இடையிடையே கிராமத்தில் உள்ள தெய்வங்கள் பேசிக்கொள்வது போல் காட்டியிருப்பது நாவலை வாசிக்க உற்சாகமாக உள்ளது.
இந்நாவலில் உள்ளவை எல்லாம் கற்பனையே என்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை என்று வளவ. துரையன் கூறுவதிலிருந்து நாவலின் பெரும்பகுதி யதார்த்தத் தளத்தில் உலவுவதை உணர முடிகிறது. உள்ளதை உள்ளபடி பேசும் முருகன், நிதானமாக முடிவெடுக்கும் மாதவன், அவசரப்பட்டு எல்லார்க்கும் அதன் விளைவுகளை ஏற்படுத்தும் சின்னசாமி என்று நாவல் பலதரப்பட்ட மனிதர்களுக்கிடையே காணப்படும் முரண்களைக் காட்டி நாவலை நடத்திச் செல்கிறார் வளவ. துரையன்.
இவை தவிர ”வலையில் மீன்கள்” என்று ஒரு வித்தியாசமான சிறுகதைத் தொகுப்பும் வளவ. துரையன் எழுதி வெளியிட்டுள்ளார். பழந்தமிழ் இலக்கியமான முத்தொள்ளாயிரம் பாடல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவை ஒவ்வொன்றிற்கும் இக்காலச் சூழலுக்கேற்ப ஒரு சிறுகதை எழுதி உள்ளார். அகத்துறைப் பாடலான அவற்றை இன்றைய புறச் சூழலுக்குக் கொண்டு வந்து கதை எழுதுவது சவாலாக இருந்தது என்கிறார் வளவ. துரையன்.
ஒரு சம்பவம் பள்ளியில் நடக்கிறது. பக்கத்து மாணவனின் புத்தகத்தைத் திருடி விட்டதாக ஆறுமுகம் என்பவனுக்குத் தண்டனையளிக்கப்படுகிறது. ஆனால் அதை ஆறுமுகம் எடுக்க வில்லை என்பது பின்னால் தெரிய வருகிறது. இதை ஒரு முத்தொள்ளாயிரப் பாடலுக்குக் கொண்டு வந்து காட்டுகிறார் வளவ. துரையன்.
ஒரு கழுதை வந்து வயலில் விளைந்துள்ள உளுந்துச் செடிகளை மேய்ந்து விட்டுச் சென்று விடுகிறது. ஆனால் வயலுக்குரியவன் வந்து பார்க்கும்போது அங்கே வயலுக்குப் பக்கத்தில் இருந்த கன்றுதான் மேய்ந்துவிட்டது என்று கருதி அதன் காதுகளை அறுத்து விடுகிறான்.
முத்தொள்ளாயிரத் தலைவி ஒருத்தி “என் கண்கள் தாமே மன்னனைக் கண்டன. ஆனால் உடலுக்குப் பசலை நோய் வந்து விட்டதே; பாவம் இது தவறு செய்யாமலே தண்டனை பெற்றதே “ என்று வருந்துவதாக ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். இவ்வாறு நூல் முழுவதுமே படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வளவ. துரையன் எழுதி உள்ள சிறுகதைகள் அனைத்தும் சேர்ந்து ”வளவ. துரையன் கதைகள்” எனும் பெயரில் வந்துள்ளது. இதேபோல அவரின் வைணவம் தொடர்பான படைப்புகள் அனைத்தும் ஒப்ன்று சேர்ந்து “ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யவைபவம்’ எனும் பெயரில் வந்துள்ளது. அவரின் நூல்களுக்கு பல்வேறு ஊர்களில் உள்ள இலக்கிய அமைப்புகள் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன.