ஒரு கதை ஒரு கருத்து – சுப்ரமண்யராஜுவின் நாளை வரும் கதை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 7 in the series 21 மார்ச் 2021



 

 

அழகியசிங்கர்

 

          எண்பதுகளில் முக்கியமான எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜ÷.

கிட்டத்தட்ட 100 கதைகள் எழுதியிருப்பார்.  இன்னும் பிரசுரமாக வேண்டிய கதைகள் இருப்பதாக இலக்கிய நண்பர் ஒருவர் சொல்கிறார்.  சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் என்று கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தில் 32 கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு குறுநாவல்கள்.

          பொதுவாக எல்லாக் கதைகளையும் கச்சிதமாக ஆரம்பித்து கதைகளைச் சுலபமாக முடிக்கிறார் சுப்ரமண்ய ராஜ÷.

          அதில் நான் எடுத்துக்கொண்டு எழுத உள்ள கதை நாளை வரும் என்ற கதை.  அம்மா வீட்டிற்கு ஊருக்குப் போக விரும்புகிறாள் சுமதி.  அம்மாவைப் பார்க்க  சுமதியின் அக்காவும் சில நாட்கள் தங்க அந்த ஊருக்கு வருகிறாள்.  அக்காவைச் சந்திக்காமல் விட்டால் சந்திப்பது 2 மூன்று வருடம் ஆகிவிடும்.

          ஊருக்குக் கிளம்புவதற்கு முன் முதல் நாள் தூக்கம் வராமல் படுத்துக்கொண்டிருக்கிறாள் சுமதி.  கணவனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

          கண்ணை மூடி அரைத் தூக்கத்திலிருந்தபோது ஏதோ சத்தம் கேட்க விழித்துக் கொள்கிறாள். நேரம் பார்க்கிறாள்.  மணி பத்து நாற்பது.  அவள் கணவன் தியாகராஜன் வரவில்லை.   இரவில் இவ்வளவு நேரம் ஏன் ஆகிறது என்று நினைத்துக்கொண்டு எழுந்து சன்னல் வழியாகப் பார்க்கிறாள்.

          காம்பவுண்ட் கேட் அருகில் தியாகராஜன் கார் நிற்பதைப் பார்த்துத் திகைக்கிறாள்.  அன்றுதான் அவள் வீட்டில் ஒரு புகைப்படம் கிடைக்கிறது. 

 அந்தப் புகைப்படத்திற்குப் பின் பக்கம் நிர்மலா என்று கையெழுத்திட்டிருக்கிறது.  

          ஏற்கனவே ஒரு நெருடல் சந்தேகமாக மாறி அந்த சந்தேகம் உறுதி ஆகிவிடுகிறது.  அவர்கள் வீட்டு அவுட் ஹவுஸில் நிர்மலா ஆரம்பத்தில் அம்மாவுடன் குடிவந்தவள். அவள் அம்மா இறந்து போக அவள் அங்கயே தனியாகத் தங்கிக்கொண்டிருக்கிறாள்.  அவள் மவுண்ட் ரோடில் ஒரு கம்பெனியில் பணிபுரிகிறாள்.  அவளுக்கும் அவள் கணவனுக்கும் தொடர்பு.  இது திருமணத்திற்கு முன்னாலிருந்து நடக்கிறது. 

          இந்தக் கள்ளத் தொடர்பை அறிந்து பொங்குகிறாள் சுமதி.  அதுவும் அம்மாவைப் பார்க்க ஊருக்குப் போகும்போது உறுதியாகத் தெரிகிறது.  ஆனால் கணவனிடம் நேரிடையாகக் கேட்கத் தயக்கமாக இருக்கிறது.  இது நல்ல சந்தர்ப்பம் இல்லை என்றும் நினைக்கிறாள்.  அம்மா வீட்டிற்குப் போய் அங்கயே தங்கி விடலாமென்று யோசனை செய்கிறாள்.

          ஊரில் வீட்டு வாசலில் சுமதி வரவிற்காகக் காத்திருக்கிறாள் இவள் அக்கா.

          அக்காவுடன் பேசத் தொடங்குகிறாள் தங்கை.  “ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு லெட்டர்ல எழுதியிருந்தியே, அதைச் சொல்லு முதல்லே,” என்கிறாள் தங்கை.

          “எதைச் சொல்றது? நான் ஓடா உழைச்சு எறும்பா தேஞ்ச கதையையா,”  என்கிறாள் அக்கா.

          அவள் வீட்டில் ஒரு வேலைக்காரி மாதிரி எல்லோருக்கும் உழைப்பதை வருத்தத்துடன் சொல்கிறாள் அக்கா. அதனால் அங்கே போகப் பிடிக்கவில்லை அவளுக்கு.

          “உன் வீட்டில் உன் கிட்டே உன் வீட்டுக்காரர் எப்படி நடந்துக்கறார்” என்ற கேள்வியைக் கேட்கிறாள் சுமதி, அக்காவைப் பார்த்து.

          “அவரைப் பற்றி எந்தக் குற்றமும் சொல்ல முடியாது,” என்கிறாள்.

          “அவருக்கு எதாவது கெட்ட வழக்கம் உண்டா? அவருக்காக உன் மற்ற கஷ்டங்களையெல்லாம் பொறுத்துக்க முடியாதா?”

          “அதுக்காக நாள் பூராவும் இப்படி அவஸ்தைப் பட வேணுமா?” என்கிறாள் அக்கா.

          தங்கை சொல்கிறாள் :  “நாளைக்கே நீ ஊருக்குப் புறப்படு.  எந்தக் கெட்ட வழக்கமும் இல்லாத கணவன் கிடைக்கிறதுதான் முக்கியம்.”

          நிர்மலாவின் போட்டோவைக் காட்டுகிறாள் சுமதி. அவளுக்கும் அவள் கணவனுக்கும் இருக்கிற கள்ளத் தொடர்பைக் கூறுகிறாள்.  மவுண்ட்ரோடில் உள்ள தாம்சன் கம்பெனியில் 

அவள் வேலை பாக்கிறதையும் சொன்னாள் சுமதி.

          இதைக் கேட்டவுடன் மறுநாள் அக்கா ஊருக்குக் கிளம்பினாள்.  ரயில் ஏறும்போது அக்கா தங்கைக்காகக் கடவுளைத் தினமும் வேண்டிக்கொள்ளப் போவதாக அக்கா சொன்னாள்.

          அவள் அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.  அவள் வீட்டைத் திட்டியபடி இருந்தவள் உடனே கிளம்பிப் போய்விட்டாளே என்று.

 

          சுமதி அவள் வீட்டிற்குப் போகவில்லை.  அவள் கணவனிடமிருந்து இரண்டு மூன்று கடிதங்கள் வந்து விட்டன.  ஒருநாள் ஊருக்குப் போவது என்று தீர்மானித்தாள்.

          ஊரிலிருந்து வந்தபிறகும் கணவனைப் பார்க்கும்போது அவள் கோபம் நீங்கவில்லை. பொதுவாக அதிகம் பேசாதவன் அவளைப் பார்த்து அதிகம் பேசினான்.  இளநீர் வாங்கிக் கொடுத்தான்.  மனைவியைச் சமாதானப் படுத்தினான்.

          இந்த இடத்தில் அவள் கோபத்தை அவனிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.  அவனும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.

          கதாசிரியர் இந்த இடத்தைப் பூடகமாக விட்டுவிடுகிறார். காரசாரமாகச் சண்டையை ஏற்படுத்தவில்லை.  

          அடுத்தநாள் சுமதிக்கு ஒரு ஆச்சரியம்.  அவுட்ஹவுஸ் காலியாக  இருந்தது.  தோட்டக்காரர் வேலுவை கேட்கிறாள்.  வேலு சொல்கிறான்.  அந்தப் பெண்ணிற்கு பேங்களூருக்கு வேலை மாற்றம் கிடைத்துவிட்டது.   வீட்டை காலிசெய்து நாலைந்து நாட்கள் ஆகிவிட்டது என்கிறான்.

          இரண்டு நாள் கழித்து அக்காவிடமிருந்து கடிதம்.

          நிர்மலாவின் மாற்றலுக்குச் சுமதியின் அக்காவின் கணவர்தான் தெரிய வருகிறது.  அவள் பணிபுரியும் தாம்ஸன் கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் அவள் அக்காவின் நெருங்கிய நண்பர்.  அக்கா கணவர்  சொல்லி  மாற்றல் நடக்கிறது.

          இறுதி வரிகளில் வேலு சொல்கிறான். 

          “தோட்டத்துல ரெண்டு மூணு நாளா பூப்பறிக்காமல் நிறையச் சேர்ந்து போச்சும்மா,” என்கிறான்.  “மாலை கட்டி சாமிக்குப் பேடறீங்களா?” என்று கேட்கிறான்.  

          “எல்லாப் பூக்களையும் பறி” என்கிறாள்

          இந்தக் கதையில் கணவன் மனைவிக்குள் உள்ள உறவு ரொம்ப முக்கியமானது.  கணவனின் நடத்தை அவளுக்குப் புரிந்தாலும், .உடனே  அவனிடம் அவள் பற்றித் தெரிவிக்காமல் ஒரு கோபத்தை மௌனமாக வெளிப்படுத்துகிறாள்.

          அவளுக்கு ஏன் கோபம் என்பது அவனுக்குப் புரியவில்லை.  ஆனால் ஒரு இடத்தில் இந்தக் கதையை முற்றுப் புள்ளி வைத்தாலும், அவளுடைய சந்தேகம் அவனிடத்தில் எப்போதும் இருக்கும். எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அதை அவனிடத்தில் தெரியப்படுத்தினாலும் தெரியப்படுத்துவாள். 

         

         

         

         

         

         

         

         

         

           

 

         

 

Series Navigationசரித்தான்வடக்கிருந்த காதல் – நான்காம் பாகம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *