அழகர்சாமி சக்திவேல்
பாரதிதாசன் சின்னப்பன் – ராசக்கா பட்டி.
இசைமரபு ஆக நட்பு கந்தாக
இனியதோர் காலை ஈங்கு வருதல்
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே.
விமானத்தில் ஏறி உட்கார்ந்த நேரத்தில் இருந்து, புறநானூற்றின், இந்தப 217வது பாட்டுத்தான், எனது நினைவில், வந்து வந்து போனது. கோப்பெருஞ்சோழன், சொன்ன[படியே, அன்று பிசிராந்தை வந்து சேர்ந்தான். இந்தச் சந்திரனும், அப்படி வருவானா? எனது நினைவெல்லாம், சந்திரனும், அரண்மனையாரும்.
இப்போது நான், தாய்லாந்துவில் இருந்து, சென்னை விமானநிலையம் வந்து சேர்ந்துவிட்டேன். அங்கிருந்து, எக்மோர் ரயில் நிலையமும் வந்து சேர்ந்து விட்டேன். இதோ, எக்மோரில் இருந்து, திருச்சி போகும், அதிவிரைவு வண்டி, இன்னும் கொஞ்ச நேரத்தில் வரப்போகிறது.
நான், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ரொம்பவே களைப்படைந்து விட்டேன். எனது ஆருயிர் அரண்மனையார் கோப்பெருஞ்சோழனின், காதலி, பிசிராந்தையார் சந்திரனை, நான் கண்டுபிடிக்கவே முடியாது போலும்.
அரண்மனையார் என்ற அந்தக் கோப்பெருஞ்சோழன், உறுதியாகச் சொல்கிறான், “எனது சந்திரன் என்ற பிசிராந்தையார் நிச்சயம் வருவான்” என்று. ஆந்தையையோ, இன்னும் கண்டுபிடித்த பாடில்லை. ஒருவேளை, ஆந்தை, யாருக்கும் சொல்லாமல், நேராக, அரண்மனையார் முன்னால் வந்து, ஒரு திருநங்கையாய் நிற்பாளோ? அவள் எப்படி இருப்பாள்? நான் உடலுறவு கொண்ட, அந்தத் திருநங்கை போலவே, அழகாக இருப்பாளா? எனக்கு சிரிப்பு வந்தது.
வண்டி வந்துவிட்டது. நான், எனக்குரிய இருக்கையில், அமர்ந்து கொண்டேன். வயிறு பசித்தது. பசியை அடக்க, எதையெதையோ, வாங்கிச் சாப்பிட்டேன். வண்டி கிளம்பிவிட்டது.
“என்னே ஒரு ஆழமான அரண்மனையாரின் காதல்.. அட அது ஒரு ஆண்-ஆண் காதலாகவே இருக்கட்டுமே. அரண்மனையார் நினைத்தால், அவர் பணத்தின் முன்னால், எத்தனை எத்தனை ஆண்கள் கிடைத்து இருப்பார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டிய காதல் அல்லவா அவர் காதல்” எனக்கு அரண்மனையாரை நினைத்து, பிரமிப்பாக இருந்தது.
அதே நேரத்தில், அது ஒரு பைத்தியக்காரத்தனமாகவும் இருந்தது. ‘இதோ நான் தாய்லாந்து போனேன். சூழ்நிலையால், ஒரு திருநங்கையோடு உடலுறவு கொள்ளவேண்டியது ஆயிற்று. அவள் உடல் அழகும், பேரழகுதான். கூடவே, மற்ற பெண்கள் தராத, இன்னொரு சந்தோசத்தையும், அந்தத் திருநங்கை, வாரி வாரி வழங்கிவிட்டாள். ஆனால், எல்லாம் முடிந்து போனது. நான், அந்தத் திருநங்கையை, இப்போது, மறந்துவிட்டேன். அடுத்து, வீட்டுக்குப் போய், மனைவியோடு ஒருமுறை… இப்படி, அரண்மனையாரும் இருந்துவிட்டுப் போக வேண்டியதுதானே.’ எனக்கு, அரண்மனையார் மீது, கோபமும், இரக்கமும், மாறி மாறி வந்தது.
நான், அரண்மனையார் குறித்த எனது எண்ணங்களை மாற்ற, சன்னல் வழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தேன். அப்போதுதான், அந்த பெரிய போஸ்டர் என் கண்ணில் பட்டது.
“திருநங்கை ரோஸி சந்திரன் அழைக்கிறார்” என்று, பிரமாண்டமான அளவில், எழுதப்பட்டு இருந்த, அந்த போஸ்டரை, நான் முழுதும் படித்தேன். அது ஒரு, கிறித்தவ சுவிசேஷப் பிரசங்க நிகழ்ச்சிக்கான அழைப்பு. அந்தப் பேச்சாளரின் பெயர் மட்டும் “திருநங்கை ரோஸி சந்திரன்” என்று, பிரமாண்டமான எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. அதற்கும் கீழே, திண்டுக்கல் திருச்சபை, என்று முழு விலாசம், எழுதி இருந்தது.
“திருநங்கை சந்திரன்.. திருநங்கை சந்திரன்.. ஆஹா.. கண்டுபிடித்து விட்டேன்.. நான் சந்திரனைக் கண்டுபிடித்து விட்டேன்” நான் சத்தம் போட்டுக்கத்தி விட்டேன் போலும்.
ரயிலில், பிரயாணம் செய்துகொண்டு இருந்தவர்கள், என்னை ஒரு மாதிரிப் பார்த்தார்கள். .ஆனால், அதையெல்லாம், கண்டுகொள்ளும் நிலையிலேயே, நான் இல்லை.
ஏதோ ஒரு பரவசம், என் உடல் முழுவதும் ஓடியது. நான், கடவுளை வேண்டினேன். “கடவுளே.. இந்த முறையாவது, சந்திரனை எனக்குக் காட்டிக்கொடு. நான், தோல்வியில், ரொம்பவும், துவண்டு போய் இருக்கிறேன் சுவாமி”. என் குலதெய்வம் மதுரைவீரனை, ஒருமுறை, நான் மனதார வேண்டினேன்.
இதோ, திருச்சி ரயில்நிலையம் வந்து விட்டது. நான், வேகமாக, வாசலுக்கு ஓடினேன். டிக்கட் பரிசோதகர், ஒவ்வொரு டிக்கட் ஆகப் பரிசோதித்து, ஆட்களை வெளியில் விட்டுக்கொண்டு இருந்தார். எனக்கோ, வரிசையில் நிற்கும் பொறுமை இல்லை. எனக்கு முன்னால், நின்றுகொண்டு இருந்தவர்கள், ஏச்சுப் பேச்சுகளையெல்லாம் பொருட்படுத்தாமல், முண்டியடித்துக்கொண்டு, டிக்கட் பரிசோதகர் முன்னால் போனேன்.
வெளியில் வந்தவுடன், நேராக ஒரு டாக்ஸி பிடித்து, திண்டுக்கல் பயணமானேன். திண்டுக்கல் போய்ச் சேர, இன்னும், இரண்டு மணி நேரம் ஆகும். வழியெங்கும், “கடவுளே.. கடவுளே..” என்று வேண்டிக்கொண்டே இருந்தேன்.
இதோ, அந்தத் திண்டுக்கல் திருச்சபை வந்துவிட்டது. நான், டாக்ஸி ஓட்டுனருக்கு, அவசரம் அவசரமாக, பணத்தைக் கொடுத்து செட்டில் செய்தேன்.
சர்ச் வாசல் மூடியிருந்தது. நல்லவேளை, காவலாளி, வாசல் முன்னே உட்கார்ந்து இருந்தான். “அய்யா.. நான் பாதரைப் பார்க்கணும் ஐயா”.. நான் பதறிய குரலில் பேசினேன்.
“நீங்க யாரு..” அவன் என்னைச் சந்தேகத்துடன் பார்த்தான். எனக்கு இப்போது வேறு வழி தெரியவில்லை. “நான் பாதரோட, சொந்தக்காரன்.. அவர் எனக்குத் தம்பி முறை வேணும்.”. உடனே, வாட்ச்மேன், என்னை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு, உள்ளே நடந்து போனான்.
நான், என் கண் முன்னால் நின்ற, அந்த பிரமாண்டமான சர்ச்சைப் பார்த்தேன். சர்ச்சின் சுவற்றில் இருந்த சிலுவை, அமைதியாய் என்னைப் பார்த்து சிரித்தது. நான், “சாமி.. இயேசு சாமி.. காப்பாத்துங்க சாமி” எனப் புலம்பினேன்.
பாதரும், காவலாளியும் என்னை நோக்கி வேகமாக வந்தார்கள். பாதர், என் கிட்ட வந்து, என்னை உற்றுப் பார்த்தார். அவர் முகம் மாறியது. எனக்கு அவர் முகம், ஏன் மாறியது என்று புரிந்து போனது. நான், அவசரமாகக் குறுக்கிட்டேன்.
“என்னை மன்னியுங்க பாதர்.. நான், ரொம்ப அவசரமா உங்களைப் பார்க்கணும். ஒருவரது உயிர் துடித்துக் கொண்டிருகிறது. சாமி. நீங்கள்தான், அவரைக் காப்பாற்ற முடியும் சாமி” நான் கெஞ்சினேன்.
“அதுக்கு எதுக்குப் போய் சொல்லனும். உள்ளே வாருங்கள்.” பாதர், என்னைக் கடிந்துகொண்டார். நான், ஒன்றும் பேசவில்லை. காவலாளி, கதவைத் திறந்தான். நான், பாதரைப் பின்தொடர்ந்தேன்..
பாதர், வீட்டிற்குள் போய், தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். “முதலில், ஆசுவாசமாகுங்கள்” என்றார். ஆஹா, பாதர் மிகவும் நல்லவர். எனக்கு, இப்போது நம்பிக்கைக் கூடியது.
“நான்.. திருநங்கை ரோஸி சந்திரனைத் தேடி வந்து இருக்கிறேன் பாதர். அவரைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில், என் அருமை நண்பனின் உயிர், என் கிராமத்தில், துடித்துக் கொண்டு இருக்கிறது. பாதர். நீங்கள்தான் கருணை செய்யவேண்டும் பாதர். என் கண்கள் கலங்கியது.
எனது பேச்சைக் கேட்டு, பாதரின் கண்கள் விரிந்தன. “ரோஸி சந்திரனுக்கு உறவினர்கள் இருக்கிறார்களா? ஆச்சரியமாக இருக்கிறதே.. அவள், அனாதை என்று என்னிடம் சொன்னாளே.. சரி.. நீங்கள் எல்லா உண்மையையும், என்னிடம் சொல்லுங்கள்” என்றார் பாதர்.
நான், எல்லா உண்மைகளையும் பாதரிடம் சொன்னேன். ராசக்காபட்டியில் ஆரம்பித்த எனது கதை, அரண்மனையார், சந்திரன், அவர்களுக்குள் இருந்த உடலுறவு, சந்திரன் திருநங்கை ஆன விஷயம், அரண்மனையாரின் உயிர் ஊசலாட்டம், என ஒன்றையும், நான் விடவில்லை.
எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்டுக்கொண்டிருந்த பாதர், இப்போது கண்கலங்கினார். “கர்த்தரின் மகிமை உயர்ந்தது. வழிதவறிய ஆடுகளின் மேய்ப்பர் இயேசு சுவாமி..” எனக்கு பாதர் பேசப் பேச, ஆனந்தம் கூடியது.
“நிச்சயம் உங்கள் அருமை நண்பன், அரண்மனையார் நலம் பெறுவார். சந்திரன், நிச்சயம், அரண்மனையாரைப் பார்க்க வருவார். கவலை வேண்டாம்” நான், இப்போது, பாதரின் கைகளைப் பிடித்துகொண்டேன்.
“நன்றி பாதர்.. நன்றி.” நான் நாத்தழுதழுக்க அவரைக் கும்பிட்டேன். இப்போதைக்கு, அவர்தான் என் குலதெய்வம் மதுரை வீரன்.
கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்த பாதர், அப்புறம் பேசினார். “ஆனால், ரோஸி சந்திரன், இப்போது இங்கு இல்லை. மதுரை போய் இருக்கிறார். நான், அவரைத் தொலைபேசியில் பிடித்துப் பேசி, நாளை, அழைத்து வருகிறேன். நீங்கள் இப்போது உங்கள் ஊருக்குக் கிளம்புங்கள். சரி.. நாளை, நான், ரோஸி சந்திரனோடு எங்கு வரவேண்டும்?
“பாதர்.. நீங்கள் ஈசநத்தம் பஸ் நிலையம் வந்துவிடுங்கள் பாதர்.. அங்கிருந்து, உங்களையும், ரோஸி சந்திரனையும், மாட்டு வண்டியில், அரண்மனையார் வீட்டுக்குக் கூட்டிப்போக, நான், ஏற்பாடு செய்கிறேன் பாதர்.” நான், பணிவாகப் பேசினேன்.
“சரி” என்று, தலையாட்டியவர், “கொஞ்சம் இருங்கள்” என்று உள்ளே போனவர், கையில், ஒரு சிலுவை மாலையுடன் வந்தார்.
“உங்கள் நண்பர் அரண்மனையாரிடம், இந்தச் சிலுவை மாலையைக் கையில் கொடுங்கள். இந்த மாலை, அவர் நலம் காக்கும். கர்த்தர், யாரையும் கைவிடுவதில்லை. ‘சந்திரன், நிச்சயம் அவரைப் பார்க்க வருவார்’ என்று, உங்கள் நண்பருக்கு ஆறுதல் சொல்லுங்கள். நான், நாளை மதியம், ரோஸி சந்திரனோடு அங்கு இருப்பேன்.. சரியா”
நான், பாதரை வணங்கி விடை பெற்றுக்கொண்டேன்.
அந்த இரவே, அடித்துப் பிடித்து, அரண்மனையார் வீட்டுக்குப் போய் விட்டேன்.
“அரண்மனை… நீர் அதிர்ஷ்டக்காரன் ஐயா.. உம் ஆருயிர் நண்பன் சந்திரன், நாளை வரப்போகிறான். நான், நடந்த எல்லாவற்றையும் அரண்மனையாரிடம் சொன்னேன். “அப்படியா.. என் சந்திரன்.. என் சந்திரன்…” அரண்மனை, எழுந்தே உட்கார்ந்து விட்டார்.
“சாமியார், நாளை, உம்ம சந்திரனைக் கூட்டிக் கொண்டு வருவாராம். இந்தாரும்.. சாமியார் மந்திரித்துக் கொடுத்த சிலுவை மாலை. சிலுவை மாலையை, நெஞ்சிலேயே வைத்துக்கொள்ளும். எல்லாம், சரியாகிவிடும்” அளவு கடந்த சந்தோசத்தில், எனது நண்பனிடம், நான், உளறி உளறிப் பேசினேன்.
அரண்மனையார், ஏதோ கனவுலகத்துக்குப் போய் விட்டார். நான், வாசலுக்கு வெளியே வந்தேன். வேலைக்காரனிடம், “சாராயம் கிடைக்குமாயா” என்றேன். கொஞ்ச நேரம், தலையைச் சொறிந்த அவன், எங்கோ, ஓடிப்போய், சாராயத்துடன் வந்தான்.
நான், வயிறு முட்டக் குடித்தேன். அப்புறம், அரண்மனைச் சாப்பாட்டை, நன்கு ஒரு பிடி பிடித்தேன். “நாளைக்கு காலைலேயே ஈசநத்தம் பஸ் நிலையம் போகணும். மாட்டு வண்டியைத் தயார் செய்”
வேலைக்காரனிடம் சொல்லிவிட்டு, மல்லாந்து படுத்தேன்.
ஆயர் டேனியல் – திண்டுக்கல்.
ஈசநத்தத்தில் இருந்து வந்த, அந்த நபர் சொன்ன சந்திரன் கதை, என்னை வெகுவாக பாதித்து விட்டது. நான் உடனடியாக, ரோஸி சந்திரன், எங்கே இருக்கிறாள் என்று, அவள் எண்ணுக்கு போன் அடித்தேன். ரோஸி, மதுரைச் சொற்பொழிவு முடித்து, அவள் தங்கி இருக்கும், திண்டுக்கல் அண்ணா நகர் வீட்டுக்கு வந்து விட்டாளாம்.
“ரோஸி, நாளைக் காலை நீ என்னுடன் ஒரு இடத்துக்கு வரவேண்டும். நீ, அண்ணா நகர் வீட்டிலேயே இரு. உன்னை, நான் டாக்ஸியில் வந்து கூட்டிச் செல்கிறேன்.”
“சரிங்க பாதர்.. நான் தயாராக இருக்கிறேன். ஏதேனும் முக்கியமான விஷயமா பாதர்?”
ரோஸி சந்திரன் இப்படிக் கேட்டபோது, என்னால் நடந்த விசயங்களைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஈசநத்தம் நபர், சந்திரனைத் தேடிவந்ததில் இருந்து, ஒன்று விடாமல், எல்லா விசயத்தையும், நான் ரோஸி சந்திரனிடம் பேசினேன்.
நாங்கள் இருவரும், ரொம்பநேரம், தொலைபேசியில், அரண்மனையார் நலம் குறித்துப் பேசினோம். அரண்மனையாரை நேரில் பார்க்கப்போக வேண்டிய அவசியத்தை, ரோஸி சந்திரன் ஒத்துக்கொண்டாள். அவள், மிகத்தெளிவாக இருக்கிறாள் என்பது, அவள் பேச்சிலேயே, புரிந்தது.
நான், ரொம்ப நேரத்திற்குப் பிறகு, அவளோடு பேசிக்கொண்டு இருந்த, தொலைபேசி உரையாடலை முடித்தேன். அப்படியே வந்து படுக்கையில் சாய்ந்தேன். எனது, தலை லேசாக வலித்தது.
“அரண்மனையார், சந்திரனைப் பார்த்தபின் என்ன செய்வார்? சந்திரனைக் கூடவே இருக்கச் சொல்லுவாரா? ஆனால், அது எப்படி முடியும்? இல்லை, அரண்மனையார், திண்டுக்கல் வந்து விடுவாரா.. ரோஸி சந்திரன், அரண்மனையார் காதல் குறித்து என்ன நினைத்துக்கொண்டு இருப்பாள் சந்திரனுக்கு எது முக்கியம்? காதலா.. கர்த்தரின் பணியா?
நான், குழப்பங்களில் இருந்து விடுபட்டுத் தூங்க, நள்ளிரவுக்கு மேல் ஆவிட்டது.
பாரதிதாசன் சின்னப்பன் – ராசக்கா பட்டி
நான் அதிகாலையிலேயே, குளித்துவிட்டு, அரண்மனை வீட்டில் இருந்து, மாட்டு வண்டியில் கிளம்பி விட்டேன். மாட்டுவண்டி, ஈசநத்தம் பஸ் நிலையம் வந்து சேர அரை மணிநேரம் ஆனது.
நான், பஸ் நிலையத்தை விட்டு எங்கேயும் போகவில்லை. பாதர், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார், என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்த்து.
பஸ் நிலையத்த்க்குள் நுழையும், ஒவ்வொரு காரையும், பஸ்ஸையும், நான் கவனமாக நோட்டமிட்டுக்கொண்டே இருந்தேன். “சந்திரன்.. சந்திரன்..” எனது மனம் புலம்பிக்கொண்டே இருந்தது.
சரியாக, பதினோரு மணிக்கு, ஒரு டாக்ஸி, பஸ்நிலையம் உள்ளே வந்தது. அதில் இருந்து பாதர் இறங்கினார். கூடவே, ஒரு அழகான பெண்மணியும் இறங்கினாள். நான், அவள்தான், ரோஸி சந்திரன் என்று புரிந்துகொண்டேன். வயதானவள்தான் அவள். ஆனாலும், அழகும், இளமையும், இன்னமும் அவளிடம் இருந்தது.
“வாங்க பாதர்.. வாங்கம்மா..” நான், இருவரையும் வரவேற்று, மாட்டு வண்டியில் ஏற்றிவிட்டேன். இதோ, மாட்டுவண்டி, அரண்மனையார் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
இந்த முறையும், வண்டிக்காரன் குறுக்குப்பாதையிலேயே வண்டியை ஓட்டினான். மேட்டிலும், பள்ளத்திலும் ஏறி, இறங்கிச்சென்ற மாட்டுவண்டியால், தடக் தடக் என்ற சத்தம் வந்தது. எனது, இதயமும், என்ன நடக்குமோ, என்ற சிந்தனையில், தடக் தடக் என அடித்துக்கொண்டது.
நான், ரோஸி சந்திரனையும், பாதரையும், பார்த்தேன். இருவர் முகமுமே, இறுகியிருந்தது. எதுவும் பேசிக்கொள்ளாமல், எங்கோ கவனித்துகொண்டே வந்தாள், ரோஸி சந்திரன்.
அரண்மனையார் வீடு வந்துவிட்டது. நான், பாதரையும், சந்திரனையும் வண்டியில் இருந்து இறக்கிவிட்டேன். அப்புறம், உடனே உள்ளே ஓடினேன்.
“அரண்மனை.. அரண்மனை.. உன் சந்திரன் வந்தாச்சுயா.. வந்தாச்சு.. அரண்மனை..” நான் கத்திக்கொண்டே உள்ளே, ஓடினேன். பாதரும், சந்திரனும், என்னைப் பின்தொடர்ந்து வந்தார்கள்.
அரண்மனை எழுந்தே உட்கார்ந்து விட்டார். எனக்கோ, சந்தோசம் தாங்கவில்லை. நான் ரோஸி சந்திரனை அரண்மனைக்குப் பக்கத்தில் அழைத்தேன். “அரண்மனை.. அரண்மனை… இதோ உன் சந்திரன்.. பாருமையா.. கண் குளிரப் பாரும்.”
“சந்திரன்… சந்திரன் என் செல்லமே.. என் உசிரே… இந்த மாமாவ மறந்திட்டியா என் செல்லம்.. என் கண்ணே.. என்னை இவ்வளவு நாள், பிரிஞ்சு இருக்க, உனக்கு எப்படி மனசு வந்தது கண்ணே.. ஐயோ..”
அரண்மனை, கதறிய கதறலில், வீட்டு வேலைக்காரர்கள் எல்லோரும் அவர் அறைக்கு வந்து விட்டார்கள்.
அரண்மனை அழுது புலம்பினார்.. :என் கிட்ட வாயேன் செல்லம்..”. அரண்மனை கதறும் கதறலுக்கு, ரோஸி, அரண்மனையின் கிட்டே போவாள் என்று நினைத்தேன். ஆனால், அவள்.. அவள்.. அரண்மனையின் கிட்டவே போகவில்லை.
மாறாய்.. “மாமா, என் மாமா..” என்று கதறிக்கொண்டே, பாதர்தான், அரண்மனையின் முன்னே போனார். பாதர், தன் கிட்டே வந்ததும், அரண்மனையார், பாதரை ஆவேசமாக, கட்டித் தழுவினார். பாதர், அந்தக் கட்டித்தழுவலுக்கு ஏற்ப, தனது முதுகை வளைத்துக் கொடுத்தார். எச்சில் வழிந்த தனது வாயால், அரண்மனையார், பாதர் முகத்தில், ‘இச் இச்’ என்று, முத்தமழை பொழிந்தார். பாதர், அழுதுகொண்டே, அரண்மனையின் தலையை, பாசமாகத் தடவினார்.
நான், அதிர்ந்துபோய் நின்றிருந்தேன். அப்படியென்றால், அப்படியென்றால், பாதர்தான், அந்தச் சந்திரனா? நான், ரோஸியின் அருகில் வேகமாகச் சென்றேன். ரோஸியும், இப்போது, மௌனமாக அழுதுகொண்டு இருந்தாள். “ரோஸி.. பாதரின்.. முழுப்பெயர் என்ன?” என்று நான் கேட்டேன்.
அவள், “பாதரின் முழுப்பெயர் டேனியல் சந்திரன்” என்று சொன்னபோது, நான், “ஒ அப்படியா?” என்று கத்தினேன்
“சந்திரன்.. சந்திரன்.. நான் உசிரைப் பிடிச்சுட்டு இருக்கிறதே,, உனக்காகத்தாண்டா செல்லம்” அரண்மனை, குழந்தை போல, விசும்பினார்.
அரண்மனையார் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த, பாதரோ கதறினார். “ஆனால், மாமா, நான் எப்போதோ மரித்துவிட்டேன் மாமா.. எனக்கென இப்போது எந்த ஆசைகளும் இல்லை மாமா. என் ஆசைகள் எல்லாம் மரித்துப் போனதாலேயே, எனது உடலையும், உள்ளத்தையும், நான் கர்த்தருக்கு, முழுமையாக அர்ப்பணிக்க முடிந்தது மாமா.. உங்கள் சந்திரனாய், நான், எப்போதோ செத்துப்போய் விட்டேன் மாமா. நான், இப்போது டேனியல் சந்திரன் மாமா.. ஆயர் டேனியல் சந்திரன் மாமா.”
பாதர், அரண்மனையாரின் முன், மண்டியிட்டுக் கதறினார்.
அரண்மனையார் சிரித்தார். ”நீ செத்து விட்டாயா.. நீ செத்து விட்டாயா.. அப்படியென்றால்.. நானும், இனி சந்தோசமாக, சாகவேண்டியதுதான் கண்ணே.. சாகக்கிடந்தவனுக்கு, கடைசி நேரத்தில், சந்திரனைக் காட்டிய இறைவனுக்கு நன்றி” சொல்லிக்கொண்டே அரண்மனையார் கீழே சாய்ந்தார்.
நான், அரண்மனையார், கைகளைப் பிடிக்க ஓடினேன். ஆனால், எல்லாம் முடிந்தது. அரண்மனையார் மூச்சு நின்று போனது. அவர் கைகள் மட்டும், அவரது ஆருயிர்ச் சந்திரனைக் கெட்டியாகப் பிடித்து இருந்தது. இன்னொரு கையில், அவரது சந்திரன் கொடுத்த, சிலுவை மாலை.
நாங்கள் எல்லோரும் அழுதோம். ஆனால், பாதர் அதற்கு மேல் அழவே இல்லை.
“கர்த்தரின் மகிமை உயர்ந்தது. இறைவனின் விண்ணரசுக்குள், என் மாமா சென்றுவிட்டார். இனி, எல்லாம் சுபமே” பாதர், தெளிவாகப் பேசினார். என்னைப் பார்த்தார். “அரண்மனையாரை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். நான் வேகமாகத் தலையாட்டினேன்.
அதற்குள், சேதிகேட்டு, அரண்மனையாரின் மகன் ஓடோடி வந்தார். வேலைக்காரர்கள், செய்ய வேண்டிய இழவு காரிய நிமித்தமாக, அங்கேயும், இங்கேயும் ஓடினர்.
இதற்கு மேல், அங்கே பாதரும் ரோஸியும் இருப்பது, எனக்குச் சரியாகப்படவில்லை. நான், பாதரையும், ரோஸியையும் கூட்டிக்கொண்டு, மாட்டு வண்டியில், ஈசநத்தம் வந்து சேர்த்தேன்.
பஸ் நிலையத்தில்தான், நான் பாதரோடு மறுபடியும் பேச முடிந்தது. “பாதர்.. உங்களைத் தேடி நான் எங்கெங்கெல்லாம் அலைந்தேன் தெரியுமா? சென்னை சென்றேன்.. அப்புறம், தாய்லாந்து சென்றேன்.. பாதர்”
பாதர் அமைதியாகச் சொன்னார். “எல்லாம் உண்மைதான். நான், குமாரோடு தாய்லாந்து வரை போனது உண்மைதான். ஆனால், குமாரைப் போல, எனது மாமாவுக்கு மட்டும் சொந்தமான, எனது உடலை, பிறர் சுகத்துக்காக, காசுக்கு விற்று வாழ, எனக்கு ஆசையில்லை.”
“நான், தாய்லாந்தில், அந்த எஜமானி அம்மாவிடம் சண்டை போட்டதும், போலீசுக்கும், இந்திய வெளியுறவுத்துறைக்கும் பயந்து, என்னைத் திரும்ப, இந்தியாவிற்கே அனுப்பி விட்டார்கள்..”
“திரும்ப சென்னை வந்த நான், அநாதை போலத் திரிந்தேன். அப்போது, என் மீது இரக்கம் கொண்ட திருச்சபை பாதர், எனக்கு அவர் வீட்டில் அடைக்கலம் தந்தார். தனது மகன்களோடு, என்னையும் படிக்கவைத்தார். அதன்பிறகு, எனது விருப்பம் அறிந்து கொண்டு, என்னை வேதாகமக் கல்லூரியில் சேர்த்துவிட்டு, என்னை பாதர் ஆக்கினார்.”
“நான் மாமாவை அப்போதே மறந்தேன்.. ஒரு நல்ல சாமியார் ஆகச் செய்யும் தொண்டில், எனது எல்லா வேதனைகளையும் நான் புதைத்துக்கொண்டேன்.”
பாதர் சொல்லி முடித்தார். ரோஸி இப்போது பேசினாள். “நேற்று இரவு, உங்கள் கதையை, நீங்கள் சொன்னபோது.. நான் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன் பாதர். ஆனால். இன்றோ, நீங்கள் எனது உள்ளத்தில், வானளவு உயர்ந்துவிட்டீர்கள் பாதர்”
டாக்ஸி கிடைத்துவிட்டது. அதில் ஏறி பாதரும், ரோஸியும் போய் விட்டார்கள்.
எனது மனம் மட்டும் மிகவும் பாரமாக இருந்தது. நான், இப்போது கொஞ்சம் ஒய்வு எடுத்தாக் வேண்டும்.
வீட்டுக்குள் போனதும், அந்தப் புறநானூறு புத்தகம் என் கண்ணில் பட்டது.
திடீர் என்று எனக்கு அழவேண்டும் போல் இருந்தது. இதோ, என் கண் முன்னே, இன்னொரு பிசிராந்தையின் காதலை நான் பார்த்துவிட்டேன்.
அரண்மனையார், தனது காதலுக்காக, வடக்கிருந்து உயிர் விட்டான். பிசிராந்தையோ, தனது காதலை மறக்க, ஏற்கனவே இறந்து போய், சாமியாராகி விட்டான்..
நான், இப்போது புறநானூற்றின் 67 ஆம் செய்யுளுக்குப் போனேன். பிசிராந்தை, கோப்பெருஞ்சோழனை நினைத்துப் பாடிய, அந்தப் பாட்டை, ஒரு விதக் காதலுடன், மிகச்சத்தமாக படிக்க ஆரம்பித்தேன்.
அன்னச் சேவல் ! அன்னச் சேவல் !
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்,
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
எனது மனைவி, என்னைப் பார்த்து, “லூசு.. லூசு” என்று எரிச்சலுடன் முனகுவது, எனது காதில் கேட்டுக்கொண்டிருந்தது.
முற்றும்
அழகர்சாமி சக்திவேல்
- பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது பிரபஞ்சம். துவக்கமும் முடிவும் இல்லாதது.
- இலக்கியமும் காசநோயும்! – (மார்ச் 24, உலக டி. பி. தினம்)
- சரித்தான்
- ஒரு கதை ஒரு கருத்து – சுப்ரமண்யராஜுவின் நாளை வரும் கதை
- வடக்கிருந்த காதல் – நான்காம் பாகம்
- ம ன சு
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ்