அஞ்சலை அம்மாள் – நூல் மதிப்பீடு

author
0 minutes, 2 seconds Read
This entry is part 2 of 8 in the series 28 மார்ச் 2021

 

 

கோ. மன்றவாணன்

 

ராஜா வாசுதேவன் அவர்கள் எழுதிய அஞ்சலை அம்மாள் என்றொரு நூல் வெளிவந்துள்ளது. அண்மையில் வெளிவந்த நூல்களில் இது முக்கியமானது.

மறைக்கப்பட்டோ அல்லது மறக்கப்பட்டோ உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரிசையில் உள்ளவர் கடலூர் அஞ்சலை அம்மாள். அவரைப் பற்றிய தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆனால் கடலூரில் உள்ளவர்களுக்கே அவரைப் பற்றித் தெரியவில்லை. இத்தனைக்கும் இரண்டு முறை கடலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

1934 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காந்தி அடிகள் கடலூருக்கு வந்தார். அவரை வரவேற்கவோ சந்திக்கவோ கூடாது என்று தென்னார்க்காடு காவல் துறை தடை விதித்து இருந்தது. அப்போது முகமதிய பெண்போல் புர்கா அணிந்து கடலூர் முதுநகர் தொடர்வண்டி நிலையத்துக்குள் நுழைந்து காந்தி அடிகளைச் சந்தித்ததோடு அல்லாமல் அவரைக் கைவண்டியில் ஏற்றித் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. (சில நூல்களில் காந்தி அடிகளைச் சந்தித்ததாக மட்டும் சொல்லப்பட்டுள்ளது.) இவரின் துணிவையும் வீரத்தையும் கண்டு காந்தி வியந்தார். அஞ்சலை அம்மாளைத் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று போற்றிப் புகழ்ந்தார்.

புதுச்சேரியில் பாரதியார் தங்கி இருந்தபோது கடலூரில் உள்ள அஞ்சலை அம்மாள் வீட்டுக்கு மூன்றுமுறை வந்ததாகச் சொல்லப்படுகிறது. (குடும்ப உறுப்பினர்கள் சொன்ன தகவல் இது. வேறு ஆதாரம் இல்லை). பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவே அஞ்சுகிற காலத்தில் அஞ்சலை அம்மாள் பொதுவாழ்க்கைக்கு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று 1914 வாக்கில் பாரதியார் சொல்லி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை வகித்தபோது ஈ.வெ.ரா அவர்கள் இவரின் வீட்டுக்கு வந்துள்ளார். பிற்காலத்தில் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈ.வெ.ராவுடன் சேர்ந்து கடலூர் வீதிகளில் கதர்த்துணி மூட்டையைச் சுமந்து சென்று விற்றுள்ளார்.

நீல் சிலை அகற்றும் போராட்டத்தில் தன் மகள் அம்மாப்பொண்ணுவுடன் கலந்துகொண்டார். இதில் அஞ்சலை அம்மாளுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் அவருடைய மகள் அம்மாப்பொண்ணுக்கு நான்கு ஆண்டுகள் சிறார் சீர்திருத்த இல்லத்தில் தங்கி இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 1927 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை வந்த காந்தி அடிகள் சிறையில் இருந்த அஞ்சலை அம்மாளையும் சீர்திருத்த இல்லத்தில் இருந்த அம்மாப்பொண்ணையும் சந்தித்துப் பேசினார். அம்மாப்பொண்ணு என்ற பெயரை லீலாவதி என்று மாற்றி வைத்தார். பின்னர் லீலாவதியைத் தனது வார்தா ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று வளர்த்தார்.

கள்ளுக்கடைப் போராட்டங்கள், உப்புக் காய்ச்சும் அறப்போராட்டங்கள், அயல்நாட்டுத் துணிஎதிர்ப்புப் போராட்டங்கள், எனப் பல ஊர்களில் நடந்த போராட்டங்களில் அஞ்சலை அம்மாள் தீவிரமாகப் பங்கேற்றார். பல முறை சிறைத்தண்டனை பெற்றார். வேலூர் சிறை, சென்னை சிறை, கண்ணனூர் சிறை, பெல்லாரி சிறை எனப் பல ஊர்களில் இருந்த கொடுஞ்சிறைகளில் அடைக்கப்பட்டார். வேலூர் சிறையில் இருந்தபோது அவர் பிள்ளைத்தாய்ச்சியாக இருந்தார். சிறைவிடுப்பில் வெளிவந்து குழந்தை பெற்றார். பச்சிளம் குழந்தையுடன் சிறைக்குத் திரும்பினார். அதனால் அந்தக் குழந்தைக்குச் சூட்டிய பெயர் ஜெயில்வீரன். கதர்த்துணி விற்பனை போன்ற நிகழ்வுகளில் செயல் ஆற்றினார். விடுதலை வேண்டி காங்கிரஸ் நடத்திய போராட்டங்களிலும் மாநாடுகளிலும் பங்கேற்றார். ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசும் திறனையும் பெற்றிருந்தார். சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த வீரப் பெண்மணி இவர்.

இந்த வீரமிக்க வரலாற்றுக்குச் சொந்தக்காரர் ஆன அஞ்சலை அம்மாளை மையமாக வைத்து நாவலாக எழுதி உள்ளார் ராஜா வாசுதேவன். உண்மை வரலாற்றோடு புனைவையும் கலந்து எழுதப்பட்ட இந்த நாவல் விறுவிறுப்பாக உள்ளது. அஞ்சலை அம்மாள் வரலாற்று நிகழ்வுகளோடு சமகாலத்தில் நடந்த சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளையும் உலகப்போர் நிகழ்வுகளையும் சொல்லிச் செல்லுகிறார். இதன் காரணமாக அந்தக் காலத்துக்கே நம்மை கொண்டுசென்று விடுகிறார்.

இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி என மூன்று மாவட்டங்களாகப் பிரிந்து கிடக்கும் அன்றைய தென்னார்க்காடு மாவட்டத்தின் நில அமைப்பை தன் நாவலில் ஆசிரியர் கொண்டு வந்துள்ளார். கடலூர் நகர நிகழ்வுகளையும் பிற ஊர்களின் நிகழ்வுகளையும் புவிப்படத்தின் அச்சுப் பிசகாமல் திசை மாறாமல் விவரித்துச் செல்கிறார். இதற்காக ஆசிரியர் உழைத்த களப்பணியை அறிய முடிகிறது.

அஞ்சலை அம்மாளின் வரலாற்று நாவலில் புனைவுகளும் கலந்து உள்ளதால் உண்மை எது புனைவு எது என்று தெரியாமல் போய்விடும் வாய்ப்பும் உள்ளது. இதனால் புனைவு நிகழ்வுகளை மெய்யென நம்பிப் பரப்பிவிடும் வரலாற்றுப் பிழைகளும் வருங்காலத்தில் ஏற்படும், இதை உணர்ந்து நூலாசிரியர் ராஜா வாசுதேவன் தன் பின்னுரையில் எதுஎது புனைவுப் பாத்திரங்கள் என்று பட்டியல் இட்டுள்ளார். மேலும் புனைவு கலக்காமல் அஞ்சலை அம்மாளின் வரலாற்றைச் சிறுநூலாகவும் எழுதி இந்த நாவலுடன் இணைப்பு நூலாகத் தந்துள்ளார். இந்தச் சிறுநூலின் ஆசிரியர்களாகத்  தன் பெயருடன், தரவுகளைத் திரட்டித் தந்த இதழியலாளர் பொன். மூர்த்தியின் பெயரையும் சேர்த்து உள்ளார்.

அடுத்து என்ன அடுத்து என்ன எனப் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த வரலாற்று நாவலைப் பின்னி உள்ளார். நூலாசிரியரின் நடை, தடையற்ற வெள்ளம்போல் பாய்ந்து ஓடுகிறது. மேலும் அஞ்சலை அம்மாளுடைய வாரிசுகளின் விவரங்களையும் முழுமையாகத் தந்துள்ளார்.

முழுப்புனைவுகளுடன் நாவல் எழுதுவது என்பது எளிதாகும். ஆனால் மெய் வரலாற்றோடு புனைவுகள் கலந்து எழுதும்போதும் காலம், இடம், அன்றைய நிகழ்வுகள், இந்திய மற்றும் உலக அரசியல் சூழல்களை எல்லாம் சரிபார்க்க வேண்டி இருக்கும். திரட்டும் தரவுகளில் திரிபுகள் இருக்கும். அவற்றில்  எது சரியென ஆய்ந்து அறிய வேண்டும். செவிவழிச் செய்திகளில் ஓர் ஆபத்து இருக்கிறது. அது தொடங்கிய இடத்தில் இருந்து சேரும் இடத்தில் அச்செய்தி முற்றிலும் மாறுதல் அடைந்திருக்கும். அதை முழுமையாக நம்ப முடியாது. எனினும் அதையொட்டிய பிற நிகழ்வுகள், பத்திரிகைக் குறிப்புகள், பிற நூல்களில் சொல்லப்பட்டவை ஆகியவற்றுடன் தொடர்பு படுத்தி ஓரளவு உண்மையை ஊகித்து அறிய தனித்திறன் வேண்டும்.

நூலாசிரியர் அச்சு ஊடகத்திலும் காட்சி ஊடகத்திலும் 35 ஆண்டுக் காலம் அனுபவம் உள்ளவர். அதனால் அவரால் தரவுகளை எளிதில் திரட்ட முடிந்துள்ளது. தரவுகளைத் திரட்ட உதவியவர்களையும் நூலில் நன்றியோடு குறிப்பிட்டு உள்ளார். எங்கிருந்து எல்லாம் தரவுகளைத் திரட்டினார் என்ற விவரங்களையும் குறிப்பிட்டு உள்ளார்.

ஸ்டாலின் குணசேகரனின் விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற நூலில் அஞ்சலை அம்மாள் அவர்களின் சிறப்புகள் குறித்து எழுதப்பட்டுள்ளன என்று தெரிவிக்கிறார்கள். சில தமிழ் இதழ்களில் கடல் நாகராசன் எழுதியதோடு சிறுநூல்களும் வெளியிட்டு உள்ளார். இன்னும் சிலரும் எழுதி உள்ளனர். அவை யாவும் வரலாற்றுத் தடத்தில் இருந்து மாறாதவை. ஆனால், தற்போது ராஜா வாசுதேவன் அவர்கள், அஞ்சலை அம்மாள் பற்றிய வரலாற்றில் புனைவுகள் கலந்து புதினமாக எழுதி உள்ளார். வசீகரிக்கும் வகையில் வரலாற்றுப் புதினமாக எழுதி இருப்பதால் பல தரப்பட்ட வாசகர்களையும் இந்நூல் சென்று அடையும் என்பதில் ஐயம் இல்லை.

சில இணையக் கட்டுரைகள், விக்கிப்பீடியா தகவல்களைக் கொண்டே பலரும் அஞ்சலை அம்மாளைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். அவ்வாறு எழுதுவதில் தன்உழைப்பு மிளிர்வதில்லை. ஆனால் ராஜா வாசுதேவன் மிகவும் மெனக்கீடு செய்து சிதறிக் கிடந்த தகவல்களை எல்லாம் ஒன்று சேர்த்ததோடு, இதுவரை யாரும் அறியாத தகவல்களை எல்லாம்  அள்ளிவந்து தந்திருக்கிறார்.

அஞ்சலை அம்மாள் வசித்த சுண்ணாம்புக்காரத் தெருவுக்கு அவரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. எந்த ஆட்சியாளரும் நிறைவேற்ற முன்வரவில்லை. தெருவைத் தாண்டி உலகம் முழுமைக்கும் அஞ்சலை அம்மாளைக் கொண்டு சென்றிருக்கிறார் இந்த நூலாசிரியர் ராஜா வாசுதேவன்.

நான் விசாரித்த போது கடலூர் மாவட்டத்தில் கருப்பேரி என்ற கிராமம் எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் உள்ள நண்பர்களைத் தொடர்புகொண்டு கேட்ட போது அவர்களுக்கும் தெரியவில்லை. பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் நண்பர் ஒருவர்தான் கருப்பேரி இருக்கும் இடத்தைச் சொன்னார். வெளிச்சம் படாத அத்தகைய கிராமத்தைச் சேர்ந்த நூலாசிரியர், அஞ்சலை அம்மாளுக்கு இப்படி ஓர் ஒளிமிக்க நூலை எழுதிப் பெருமை சேர்த்து இருப்பது பாராட்டுக்கு உரியது.

இந்த நூலைப் படிக்கையில்….

ஒரு நாவலைப் படிப்பதுபோல் சுவாரஸ்யம் கொண்டதாக இருக்கும்.

ஒரு சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் படிப்பது போலவும் இருக்கும்.

ஒரு வீரப் பெண்மணியின் வாழ்க்கையை மெய்சிலிர்க்க வாசிப்பதாகவும் இருக்கும்.

மொத்தத்தில் இந்த நூலைப் படித்து முடிக்கும்போது உங்களுக்குள் ஒரு தீ சுடர்விட்டு எழும்.

இருப்பினும் ஒன்றைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அஞ்சலை அம்மாள் வாழ்வில் மெய்யாக நடந்த நிகழ்வுகள்தாம் அவருக்குப் பெருமை தரும். கற்பனை நிகழ்வுகளால் கட்டமைக்கப்படும் பிரமாண்டம் எதுவும் அஞ்சலை அம்மாளுக்குப் பெருமை சேர்க்காது.

நூல் : அஞ்சலை அம்மாள்

நூலாசிரியர் : ராஜா வாசுதேவன்

வெளியீடு : தழல், 35, அண்ணாநகர் பிளாசா, சி-47, இரண்டாவது நிழற்சாலை, அண்ணாநகர், சென்னை-40 தொலைபேசி : 9360860699. மின்னஞ்சல் : tazhaltrust@gmail.com விலை : ரூபாய் 360 பக்கங்கள் : 320

நூல் ஆசிரியர் அலைபேசி : 9840035050 மின்னஞ்சல் : rajavasdev@gmail.com

குறிப்பு : நான் படிக்க விரும்பிய போது இந்த நூலை இரவலாகக் கொடுத்து உதவிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரி திருமிகு                        இரா. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 243[சென்ற வாரத் தொடர்ச்சி]
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *