கடலூர் ரகுவிற்கு அஞ்சலி

This entry is part 5 of 8 in the series 28 மார்ச் 2021

தோன்றிற் புகழொடு தோன்றுக.Inline image

 

 

கடலூர் தொலைபேசி தொழிற்சங்கத்தலைவர் T.ரகுநாதன் 21/03/2021 அன்று சென்னை கே கே நகரில் காலமானார்.   அவரின் வயது எண்பதைத்தொட்டுக்கொண்டிருந்தது. இன்னும் சில ஆண்டுகள் அவர்  ஆரோக்கியத்தோடு வாழ்வார் எனத்தோழர்கள்  நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் அன்புத்தோழர்களிடமிருந்து அவர்  இறுதிவிடைபெற்றுக்கொண்டார்.

கடலூர்  மற்றும் விழுப்புரம் மாவட்டத்து த்தொலைபேசி ஊழியர்களில்  குறைந்தது  ஓர் ஆயிரம் குடும்பங்களின்  மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் பங்குபெற்ற பண்பாளர்.  தோழர்  ரகு  நேர்மைச்செல்வத்திற்குக்கு ஓர்  ஒளி வீசும் இலக்கணம்  முந்திரிக்காட்டில் முப்பது பேர் என்று குறைவாக மதிப்பிடப்பட்ட தொழிற்சங்கத்தை ஆயிரம் உறுப்பினர்களுக்கு ச்சொந்தமாக்கிய அமைப்பு க்கலைதெரிந்த தோழர் வித்தகர்.

மகளிருக்குப்பாத்காப்பு தர மறுத்திட்ட தொலை பேசி நிர்வாத்தை எதிர்த்து 1980 பிப்ரவரியில் நடை பெற்ற கடலூர் தொலைபேசி மாவட்ட போராட்டம் ஐந்து நாட்கள் நடைபெற்றது .300 தோழர்கள் நிர்வாகத்தால் தண்டனை பெற்றார்கள் .எல்லோரையும் பெற்ற  தண்டனையிலிருந்து மீட்டெடுத்தச் சாதனையாளர் ரகு.

தொழிற்சங்கத்தை சமூக நோக்கத்தோடு அணுகியவர். உறுப்பினர்களின்  நாட்டுப்பற்றுக்கு உரம் ஊட்டி வளர்த்தவர். மார்க்சியத்தை மனித நேய மாற்று க்குறையாமல் காத்த போராளிகளில் ரகு முதன்மையானவர். ஒழுக்க சீலர். மானுடப்பண்பின் உரைகல்.

 நாற்பது  ஆண்டுகள் தொலைபேசித்துறையில் பணிக்கலாசாரத்தோடு  பணியாற்றி ஓய்வுபெற்றவர். தொலைபேசி ஊழியர்  பொதுவுடமை (NFTE) த்தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புக்களில்  ஈடுபாட்டோடு பங்காற்றியவர். ஒவ்வொரு தோழனுக்கும் அவரின் உதவியும் ஆலோசனையும்  எவ்வகையிலேனும் நிச்சயமாகக்கிடைத்தேயிருக்கும். அவ்வுதவியை அந்தத்தோழர் தன் வாழ்நா:ள் முழுவதும் நினைவில் வைத்துக்கொள்ளவே வாய்க்கும் .இது கடலூர்ப்பகுதியின் எதார்த்தம்.

திருவரங்கத்து ப்புனித பூமியில் மிக உயர்ந்த ஆசார சீலர்களின் குடும்பத்தில் பிறந்த ரகுநாதன் சாதி மத மாச்சர்யங்களைக்கடந்து தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். தன் இறுதி மூச்சு வரை தன் குல ஆசாரப்படி அணியவேண்டிய முப்பிரி நூல் அணியாது புரட்சிகரமாய்த் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.

 கடலூர் ப்பகுதியில்  பணியாற்றிய  தோழர் சிரில் என்னும் அன்புத்தோழரின் வழிகாட்டுதலால் மார்க்சிய நெறிக்கு கொண்டுவரப்பட்டவர் தோழர் ரகு.. தமிழக தொலைபேசி ஊழியர்களின்  நெஞ்சங்களை கொள்ளைகொண்ட உத்தமர் தோழர் ஜகன் அவர்களுக்கு மிக அணுக்கமானவர்.

தோழர் ரகுவின் பணி ஓய்வு ப்பெருவிழா கடலூர் நகர் மன்ற அரங்கில் 01 06 2002 ல் வெகு சிறப்பாக தொலைபேசித்தோழர்களால் கொண்டாடப்பட்டது. பொதுவுடமைச்செல்வர் மூத்த தோழர் நல்லக்கண்ணு விழாவில் கலந்துகொண்டு  ரகுவை வாழ்த்திப்பெருமை சேர்த்தார்  நிகழ்ச்சியை கடலூர் மாவட்டத்து தொலைபேசி ஊழியர் சங்கத்து   நெறியாளர் ஸ்ரீதர்  சிறப்பாக வடிவமைத்துச் சரித்திரம் படைத்தார்..

 விருட்சம் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை மலர் வெளியிடப்பட்டு தோழர் ரகுவின் அருமை பெருமைகளை எல்லோரும் அறிய அது வாய்ப்பானது. கவிஞர் கோவி. ஜெயராமன் தொலைபேசி ஊழியர் சங்கத்து த்தலைவர்  பணி ஓய்வு விழா மலர் சிறக்கவும்  அவ்விழா நிகழ்வு ஓர் வரலாறுத்தடமாக அமைந்திடவும் ஓய்வின்றி பங்களிப்பு நல்கினார்.

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை என்னும் அமைப்பினை கடலூர் தொலைபேசி ஊழியர்கள் அமைத்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு  மேலாகத் தமிழ் ப்பணி ஆற்றிவருவது இவண் குறிப்பிடத்தக்கது. தமிழ்ப்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற தொலை பேசி ஊழியர்களின்  மாணவச்செல்வங்களுக்குச்  சங்க வேறுபாடின்றி  ஆண்டுதோரும் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது.

 தமிழ்ச்சான்றோர் பெருமக்கள்  தொடர்ந்து கவுரவிக்கப்படுகின்றனர்..  முனைவர் பாசுகரன் அகரமுதல்வன் பிரபஞ்சன் ராஜம் கிருஷ்ணன் காசி ஆனந்தன் அறிவுமதி பத்மாவதி விவேகானந்தன் சிருங்கை சேதுபதி ரகுவீர் பட்டாச்சாரியார்  தா பாண்டியன்  ராஜ்ஜா  ஸ்டாலின் குணாசேகரன் திருப்பூர் சுப்புராயன்  சமஸ் என அந்தவரிசை த்தொடர்கிறது இத்தைய அரிய நிகழ்வுகளுக்கு எல்லாம் தனது மனக்குகையில் அடித்தளம் அமைத்திட்டவர் தோழர் ரகுவே

கடலூரில் பல்வேறு இலக்கிய அமைப்புக்கள் இயங்குகின்றன தமிழ் ச்சான்றோர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  நாமார்க்கும் குடியல்லோம் பாடிய அப்பர்  உலாவிய மண்.  வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடிய பெருமகனார்  ராமலிங்கர் திருவடி பட்ட  திருமண் அல்லவா. ஈடில்லா தேசப்பற்றுக்கு ச்சொந்தமான  வீரத்தாய்  கடலூர் அஞ்சலை அம்மாள்  இந்திய நாட்டு விடுதலைக்குப்போராடிய புனித பூமிதானே கடலூர்..

தோழர் ரகு, கடலூர் அருகே சாத்தான்குப்பத்திலுள்ள கிறித்துவ மிஷினரியின்  ஆளுகையின் கீழுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் பயிலும் மாணவச்செல்வங்களுக்கு உதவி க்கரம் நீட்டுவதில் முன் கை எடுத்தவர்.

2004 டிசம்பரில்  கடலூர் சந்தித்த சுனாமி ப்பேரழிவு நிகழ்வின் போது பாதிக்கப்பட்ட மீனவக்குடும்பங்களுக்கு உதவுவதில் முன் நின்றனர் கடலூர் மாவட்டத்துத் தொலைபேசித்தோழர்கள். தோழர் ரகுவின் பங்கு அதனில் மகத்தானது.

கடலூர் மாவட்ட கலை இலக்கியப்பெருமன்றக்கிளையின் செயல்பாட்டில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டவர் தோழர் ரகு. இலக்கிய ப்பெருமன்ற நிகழ்வுகளான கவிஞர் ஞானக்கூத்தன் கவி அரங்கிலும் நூற்கடல் கோபாலைய்யர் கம்பனில் தோழமை உரை நிகழ்விலும் தனுஷ்கோடி ராமசாமியின் ஜெயகாந்தன்  ஞான பீடவிருதுபெற்றமை குறித்து பாராட்டு நிகழ்விலும் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டவர்..

கடலூரில் எண்ணற்ற  தொழிற்சங்க .மாநாடுகள் தோழர் ரகுவின் தலமையின் கீழ் வெற்றிகரமாக நடைபெற்றதனை இங்கேபெருமையோடு குறிப்பிடலாம்.

தோழர் ரகுவின் எல்லையற்ற தோழமைப்பண்பு காணக்கிடைக்காத செல்வம். துப்புரவு ப்பணியாற்றும் தொழிலாளியிலிருந்து எத்தனை உயர் மட்டஅதிகாரிகள் இருந்தாலும் எல்லோருடனும் சம நிலையோடு பழகும் பண்பாளர் தொலைபேசி ஊழியர்களின் ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகளைத்  தனது கூர்மதியால் தீர்த்துவைத்தவர்.

தொலை பேசித்தொழிற்சங்கம் இந்திய தொழிற்சங்க வரலாற்றில் சாதித்தவைகள் ஏராளம்.தினக்கூலித்தொழிலாளர்கள்  எண்ணிக்கையில் லட்சம் பேருக்கும் கூடுதலாக  நிரந்தர  ஊழியர் ஆக்கிய சாதுர்யத்திற்கும்  சாகசத்திற்கும் பாத்தியதையுடைய உயிரோட்டமுள்ள அமைப்பு அது. அந்தப்பெருமை மிகு அமைப்பின் செயல்பாட்டிற்கும் சிறப்புக்கும் தோழர் ரகு போன்ற தலைவர்களே ஆனிவேராக இருந்து பணியாற்றியவர்கள்.

கடலூரில் மகளிர் தினவிழா ஆண்டுதோரும் மார்ச் மாதம் எட்டாம் நாள் நடைபெறும் அவ்வீழாவில்  சாதனைப் பெண்மணிகள் கலந்து கொள்வர். பெண்கள்  விழாமட்டுமே மேடையை அலங்கரிப்பார்கள்.விழா நிகழ்வு  முழுமையும் பெண் ஊழியர்களால் மட்டுமே நடத்தப்படும்.தோழியர் கே. விஜயலட்சுமி எனும் இந்தத்தோழியர் மகளிர் தினவிழா நிகழ்வுகளுக்குப்பொறுப்பாகச்செயல்பட்டார். அந்தத்தோழியரும் அண்மையில் காலமானார். இப்படியாக மகளிர் நிகழ்வுகளுக்கு  பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்துள்ளார்கள். ராஜம் கிருஷ்ணன், தமிழ்ச்செல்வி,அ. வெண்ணிலா பர்வீன்சுல்தானா என அந்த வரிசையைப்பட்டியலிடலாம்.

கருத்து மாறுபாடு கொண்ட தோழர்களை அரவணைத்துச்செல்வதில் தோழர் ரகுவிற்கு நிகர் ரகுவே. எதிரணித்தோழர்களோடு விவாதிப்பதில் பிரச்சனைகளை எடுத்துவைப்பதில் ரகுவிற்கு நிகர்  அவர் மட்டுமே.. அத்தனை கூர்மையான அறிவுத்திறனுடன்  ததும்பும்நகைச்சுவை உணர்வுடன் விவாதம் செய்பவர்களைத் தொழிற்சங்க அரங்கில் காண்பது மிக அரிது.

எப்பொழுதும் படித்த்க்கொண்டே இருக்கும் தோழர் ரகு. ஆங்கிலப்புலமை மிக்கவர். மேடைகளில் பேசும் போது அவரின் பேச்சு நம்மைத் தட்டி எழுப்பும் சொக்கவைக்கும். இந்தி மொழியிலும் ஆகத்தேர்ச்சிபெற்றவர் ரகு. வட இந்தியத்தலைவர்களின் இந்தி உரையை நம்தமிழில் ஆக்கி விருந்து படைப்பார்.

 ஆங்கில மொழிச்செறிவால் நல்ல மொழி பெயர்ப்பாளர்.

அதிகாரிகள் எத்தனை உயர் அதிகாரிகளாக இருந்தாலும் தோழரின் பேச்சாற்றலுக்கு முன்னால் தோற்றுத்தான் போவார்கள்.  தோழர் எடுக்கும் பிரச்சனைகளில் நேர்மை நிச்சயம் கொலுவிருக்கும். சட்டப்படியே செய்யவேண்டும் என்பதில் மாற்றுகுறையாத  உறுதியிருக்கும்./ எடுக்கப்படும் எல்லாமுடிவுகளுக்கும்  அடி நாதமாக மனிதாபிமானம் மிளிர்வதை நாம் கண்டுணர முடியும்.

தன் குடும்ப முன்னேற்றத்தைவிடத் தன் தோழர்களின் நல் வாழ்க்கையைப்பற்றி மட்டுமே சிந்தித்த ஒரு தோழர் உண்டென்றால் அந்த அதிசயமே எங்கள் ரகு.

நல்ல நண்பனாய் உடன் பிறவா சகோதரனாய்  பெற்றதாயினும் சாலப்பரிந்து உதவும் அன்பருக்கு அன்பனை தோழர் ரகுவை நாம் தோற்றுவிட்டுத்தான் நிற்கிறோம்.

அவரை மீண்டும் படிப்போம்.  தோழர் ரகுவின் சிந்தனைகள் நமக்கு வழிகாட்டக்காத்திருக்கின்றன.

 

’உன்னோடு விவாதித்து

வென்றவர் இல்லை

ஆனால்

தோற்பதிலும்  வெற்றியுண்டு

எப்படி நீ அறியாது போனாய் ?’

 

கவிஞர். கடலூர். நீலகண்டன்.

 

——————————————————–

Series Navigationஒரு கதை ஒரு கருத்து – தி.ஜானகிராமனின் பாயசம்மலை சாய்ந்து போனால்…
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

  1. Avatar
    valavaduraian says:

    தோழர் ரகு தொழிற்சங்கவாதி. அத்துடன் சிறந்த இலக்கியாவதி என்ற முறையில் எனக்கு நெருங்கிய பழக்கம் உடையவர். அவ்ரின் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிப்புலமைகளையும் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது. தொழிற்சங்கவாதிகளில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களைக் காண்பதரிது. தோழர் ரகு ஒரு விதிவிலக்கு. மாற்றுக்கருத்துடையவரையும் மதிக்கும் பண்பு கொண்டவர் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *