ஜோதிர்லதா கிரிஜா
(21.1.2002 “பெண்ணே நீ” இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேதுஅலமி பிரசுரத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதை.)
ராஜாத்தி சாமி படங்களுக்கு முன்னால் இருந்த குத்துவிளக்கை ஏற்றிய பின், வழக்கம் போல் கண்களை மூடிய நிலையில், அவற்றின் முன்னால் நின்றுகொண்டு பிரார்த்தனை செய்தாள். பிரார்த்தனை என்பதை எப்படிச் செய்யவேண்டும் என்பதை அவளுடைய அப்பா அவளுக்குச் சொல்லிக்கொடுத்திருந்தார்.
‘அம்மா, ராஜாத்தி! கடவுள் கிட்ட, எனக்குக் காசைக் கொடு, பதவியைக் கொடு, வீட்டைக்கொடு, வாசலைக்கொடு, நகைநட்டைக்கொடுன்னெல்லாம் வேண்டிக்கவே கூடாதும்மா. ‘கடவுளே! இந்த உலகத்துல இருக்கிற மக்களெல்லாம் நல்லாருக்கணும். எல்லா ஜீவராசிகளும் நல்லாருக்கணும். அதுக்கு அருள் செய்’ அப்படின்னு வேண்டிக்கணும். இதைத் தவிர வேற எதையும் கேக்கக் கூடாது. மிஞ்சி மிஞ்சிப் போனா, நமக்கு வேண்டிய நல்லவங்க யாராவது கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தாங்கன்னா, அந்தக் கஷ்டத்துலேர்ந்து அவங்களுக்குக் கூடிய சீக்கிரம் விடுதலை வேணும் அப்படின்னு வேண்டிக்கலாம். அம்புட்டுத்தான். நமக்கு எப்ப எதைக் கொடுக்கணும், நமக்கு என்ன செய்யணும்கிறதெல்லாம் கடவுளுக்கு நம்மைவிட நல்லாவே தெரியும். ‘கடவுளே! எனக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடு’ ன்னு கேக்கலாம். அது கூட எதுக்குத் தெரியுமா, ராஜாத்தி? மத்தவங்களுக்கு ஒரு சொமையா ஆகாம இருக்கிறதுக்காகவும், மத்தவங்களுக்குச் சேவை செய்யிறதுக்காகவும்தான். அதுதாம்மா உண்மையான பிரார்த்தனை!’
கண்களை மூடிக்கொண்டு நின்றிருந்த அவள் செவிகளில் ஆறு மாதங்களுக்கு முன்னால் இறைவனடி சேர்ந்துவிட்டிருந்த அவள் அருமை அப்பாவின் கம்பீரக் குரல் ஒலித்தது. அவளுடைய உணர்ச்சிகள் பொங்கின. மூடிய இமைகளைக் கடந்து, கண்ணீர் வழிந்து அவள் கன்னங்களில் இறங்கி ஓடலாயிற்று. ‘அப்பா! அப்பா!’ என்று அவள் உள்ளம் புலம்பியது. கண்களைத் திறந்த அவள் கண்ணீரைச் சேலை முன்றானையால் ஒற்றித் துடைத்துக்கொண்டாள்.
அப்போது வாசல் கதவு தட்டப்பட்டது. கோர விதியின் தட்டுதல் என்பது தெரியாமல், “யாரு?” என்று குரல் கொடுத்தபடி அவள் வாசல் பக்கம் போனாள்.
“ராஜாத்தி! நாந்தான் ஜெயந்தி! கதவைத் தொறடி,” என்று பதில் வந்தது.
பதில் சொன்ன குரல் அவளுடைய தோழி ஜெயந்தியின் குரல் போல் முழுக்க முழுக்க இல்லை. கொஞ்சம் வித்தியாசமாக ஒலித்தது. ‘ஒருகால், சளி பிடித்துள்ளதோ என்னவோ. அதனால்தான் குரல் ஒரு மாதிரியாக ஙொணஙொண வென்றிருக்கிறது போலும்’ என்றெண்ணிய ராஜாத்தி, தெருப்பக்கத்து சன்னலைத் திறந்து பார்த்த பிறகே கதவைத் திறக்கும் தனது வழக்கத்தை மறந்து போய் வாசல் கதவைத் திறந்துவிட்டாள்.
அவள் யோசிக்காமல் கதவைத் திறந்த அடுத்த கணம் நான்கு வெறி பிடித்த நாய்கள் அவள் வீட்டுக்குள் பாய்ந்து வாசற்கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டுவிட்டன. தாழ்ப்பாளைப் போடும் பணியில் இருவர் ஈடுபட, மற்ற இருவரும் அவள் வாயைப் பொத்தி அவள் தன் குரலை எழுப்ப இயலாதபடிச் செய்தனர்.
ராஜாத்தி பலவீனமான பெண் அல்லள். ஆனால், சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட அந்தத் தாக்குதலால் நிலை குலைந்து போய்விட்ட அவள் அச்சத்தில் அப்படியே உறைந்தும் போய்விட்டாள். அவள் குரலை எழுப்ப முயன்றிருந்தாலும் அதைச் செய்ய அவளால் முடிந்திருக்காது என்பதும் உண்மைதான். ஒரு வெறி நாய் அவள் வாயைப் பொத்திப் பின் திறந்து அதனுள் ஒரு துணியைச் சுருட்டித் திணித்தது. மற்றொன்று அவளுடைய கைகளைப் பின்னுக்குக் கொண்டு போய்த் தான் தயாராய் வைத்துக் கொண்டிருந்த கயிற்றால் இறுக்கமாய்ப் பிணைத்துக் கட்டியது.
கூடத்து விளக்கை ஒரு வெறி நாய் அணைத்தது. சமையற்கட்டிலிருந்து புறப்பட்டு வந்த மங்கிய வெளிச்சத்தில் நால்வரும் ராஜாத்தியை நாசம் செய்தனர். அவர்களுள் ஒருவன் முன்யோசனையுடன் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கிப் பெரிதாக அலறவிட்டான். அவள் அலறியிருந்தாலும், அந்தச் சத்தத்தைத் தொலைக்காட்சிப் பெட்டியின் அலறல் அமுக்கியிருக்கும் …
அவள் கால்களையும் கயிற்றால் பிணைத்த பின்னர் அந்த நால்வரும் கொல்லைப்புறக் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினார்கள்.
ராஜாத்தி அரை மயக்கமாகிவிட்டிருந்தாள். உடம்பு முழுவதும் ரணமாக நொந்து வலித்தது. உடம்பின் வலியைக் காட்டிலும் மனத்தின் வலி மிக, மிக அதிகமாக இருந்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. கட்டப்பட்டிருந்த கைகள் முதுகுக்கு அடியில் இருந்தமையால் அவளால் அந்தக் கட்டிலிருந்து தன் கைகளை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. வாயில் திணிக்கப்பட்டிருந்த துணிச் சுருளையும் எடுக்க முடியவில்லை. ஒருக்களித்துப் படுத்து முகத்தைத் தரையில் தேய்த்தும் உருட்டியும், இன்னும் என்னென்னவோ அசைவுகளுக்கு உட்படுத்தியும் பார்த்தும், வாய்த்துணி வெளியே வரவில்லை. அரைகுறை ஆடைகளுடன் எவ்வளவு நேரம் தான் அப்படியே கிடக்கவேண்டியது வருமோ என்று அவள் பயந்தாள். வாயில் அடைக்கப்பட்டிருந்த துணிப்பந்தால் மூச்சு முட்டியது. காரணம் அவளுக்கு இலேசாய்ச் சளி பிடித்திருந்தது. வாசற்கதவை வெறி பிடித்த அந்த நாய்கள் உட்புறமாய்த் தாழிட்டிருந்ததால், வாசல் வழியாக வேறு யாரும் வீட்டுக்குள் வந்து தனது அலங்கோலத்தைப் பார்க்கப் போவதில்லை என்பது அந்த வருத்தத்தினூடேயும் அவளுக்கு ஓர் ஆறுதலைத் தந்தது. ஆனால், பின்புற வழியாக அவர்கள் வெளியேறி யிருந்ததால், யாராவது கொல்லைக் கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் வந்துவிட்டால் அவளுக்கு நடந்த சேதம் வெட்ட வெளிச்சமாகிவிடும். தனக்கு நேர்ந்தது வெளியே தெரிந்துவிடும் என்பதைவிடவும், அந்தக் நிலையில் யார் பார்வையிலும் தான் பட்டுவிடக் கூடாது என்பது பற்றிய அவளது கவலை மிகுதியாக இருந்தது.
கடைசியில், தன்னை விடுவித்துக் கொள்ளுவதற்கு அவளுக்கு ஒரு வழி தோன்றியது. அது பயனளிக்குமா என்பது தெரியாத போதிலும், முயன்று பார்த்துவிடும் எண்ணத்தில் அப்படியே உருண்டு உருண்டு சமையற்கட்டை யடைந்தாள். அங்கே சமையல் மேடைக்கு அடியில் படுக்க வைக்கப்பெற்றிருந்த அரிவாள்மணையைக் கட்டப்பட்டிருந்த கால்களால் எற்றி, எற்றிச் சுவோரத்துக்கு அதை நகர்த்தி நிற்கவைத்தாள். பிறகு அதன் மீது தன் கட்டுண்ட கைகளைப் பதித்து, அதன் கூரான விளிம்பில் தேய்க்கத் தொடங்கினாள். அரிவாள் மணை சுவர் ஓரமாக மட்டுமல்லாமல், “ட” வடிவ மூலையில் நின்றதால் அது அவ்வளவாக அசையாமல் அவளது திட்டத்துக்கு உதவியது. பதினைந்து நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு, கைகளைப் பிணைத்திருந்த கயிறு ஒரு வழியாக அறுந்தது. எனினும் இரு கைகளிலும் ஆங்காங்கு சிராய்த்து இரத்தம் கசியலாயிற்று. பிறகு கால்கட்டையும் நீக்கினாள்.
கைகள் இரண்டும் விடுபட்ட பிறகு, வாயை அடைத்துக் கொண்டிருந்த துணிப்பந்தை வெளியே இழுத்துப் போடுவது சிரமமாக இல்லை. வாய்த்துணி வெளியே வந்து விழுந்ததும், ராஜாத்தி வாய்விட்டு அழத் தொடங்கினாள். அவர்கள் பெரிதாக அலறவிட்டுச் சென்றிருந்த தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து கிளம்பிய இரைச்சல் அவளது சத்தமான அழுகுரல் வெளியே தெரியாதிருக்க உதவியது. குமுறிக் குமுறி அழுது ஓய்ந்ததும் அவள் எழுந்து குளியலறைக்குச் சென்றாள். அரை மணி நேரம் போல் குளித்தும், அவளது அருவருப்பு நீங்கவில்லை. அவள் தன் தலையில் ஊற்றிக்கொண்டிருந்த தண்ணீருடன் அவள் விட்ட கண்ணீரும் சேர்ந்து வழிந்தது.
‘அய்யோ! என்ன மடத்தனம் செய்தேன்! சன்னல் வழியாக எட்டிப்பார்த்திருந்தால், ஏமாந்து போயிருப்பேனா?’ – சட்டென்று கொல்லைப் புறக் கதவு திறந்திருந்தது நினைப்பில் எழ, அவள் நொண்டி நொண்டி நடந்து பின்கட்டுக்குப் போய்க் கதவைத் தாழிட்டுவிட்டு உள்ளே வந்து தனது புலம்பலையும் அழுகையையும் தொடர்ந்தாள். ‘நல்ல வேளை! பினகட்டுக் கதவைச் சாத்தத் தோன்றியது. இல்லாவிட்டால் அந்த நாய்கள் மறுபடியும் கொல்லைப் புற வழியாக வந்திருக்கும் … நான் தனியாக இருப்பதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட அந்த நாய்களுக்கு மறுபடியும் வரத் தோன்றாது என்று சொல்ல முடியாது ….’
தன்னை அழித்துவிட்டுப் போன அந்த நால்வரில் மூவரை அவளுக்குத் தெரியாது. அந்த மூவரும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று அவளுக்குத் தோன்றியது. நான்காமவன் அவளுக்கு அறிமுகமானவன். அவளுடைய தம்பியின் நண்பன். நெருங்கிய நண்பன் என்கிற அளவுக்குப் பழகாதவனானாலும், ஓரளவுக்குப் பழக்கமானவனே. அவள் தம்பியை விடவும் ஐந்தாறு ஆண்டுகளேனும் மூத்தவனாக இருக்கக்கூடும். அவன்தான் மற்ற மூன்று பொறுக்கிகளையும் இழுத்து வந்திருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.
தன் அம்மாவும் தம்பி மணியும் ஊரில் இல்லை என்பதும், தான் அன்றிரவு மட்டும் தனியாக இருக்கப் போவதும் அவனுக்கு எப்படித் தெரிய வந்திருக்கும் என்பதை அவளால் ஊகிக்க முடியவில்லை. யாரோ அது பற்றிப் பேசியது அவன் காதில் விழுந்திருக்க வேண்டுமென்றும், உடனே மூன்று பொறுக்கிகளை ஜாமா சேர்த்துக்கொண்டு வந்து விட்டான் என்றும் அவள் நினைத்தாள்.
ஒரு வேளை வேலைக்காரி பேபி யாரிடமாவது தன் தம்பியுடன் அம்மா பக்கத்து ஊருக்கு ஒரு சாவுக்குத் துக்கம் விசாரிக்கப் போக இருந்தது பற்றிப் பேச்சுவாக்கில் உளறியிருந்திருப்பாளோ? அப்போது பக்கத்தில் ரகோத்தமன் இருந்திருப்பானோ? பெயரைப்பார். ரகோத்தமனாம், ரகோத்தமன்! ரகு என்றால் ராமன் இல்லையோ? ராமன் – அதிலும் ‘உத்தமமான ராமன்’ – என்று பெயரை வைத்துக்கொண்டு இப்படி ஒரு காரியத்தைப் பண்ணி யிருக்கிறானே? கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு தீங்கு நேர்ந்தது? அப்பா சொல்லிக் கொடுத்தபடியே தானே நான் பிரார்த்தித்து வருகிறேன்? என்றாவது எனக்கு அதைக்கொடு, இதைக்கொடு என்று நான் கேட்டதுண்டா? நான் கேட்டதெல்லாம் ஆரோக்கியம் மட்டுந்தானே? காலமெல்லாம் என்னை வருத்தப்போகும் ஒரு பேரிழப்புக்கு நான் ஆளாகும்படியான ஒரு விதியை எனக்கு அமைத்துக் கொடுத்துவிட்டாயே? இது நியாயமா? … அம்மா வரட்டும். அம்மாவிடமிருந்து எதையும் மறைக்கக் கூடாது. நான் மறைத்தாலும் அம்மா என்னமோ நடந்திருக்கிறது என்பதைச் சரியாக ஊகித்து விடுவாள். துருவித் துருவிக் கேள்விகள் கேட்பாள். இப்படி எனக்கு நடந்து விட்டதன் பின்விளைவுகள் ஏற்படாதிருக்கச் செய்வதற்காக வேண்டியாவது அம்மாவிடம் நடந்ததைச் சொல்லித்தான் தீர வேண்டும் …’
இரவு முழுவதும் அவள் கண்களைக் கொட்டவில்லை. ஒரு சிறு ஓசை கேட்டாலும் மனசு திடுக்கிட்டவாறாக இருந்தது. வீட்டின் வெளிவிளக்கைப் போட்டுவைத்தாள். ‘பத்திரமாய் இருடி’ என்று அம்மா கூறிய போது சிரித்த அவளுக்கு இப்போது அவளது கவலை புரிந்தது. பக்கத்து வீட்டில் சொல்லிச் செல்ல எண்ணிய மணியை அவள்தான் தடுத்தாள். ‘வேணாண்டா, மணி. பக்கத்து வீட்டுல் இருக்குற பாக்கியத்தம்மாளோட மகன் ஒரு காவாலி. ராஜாத்தி இன்னைக்குத் தனியா இருக்கப்போற விசயம் அவங்க வீட்டுக்குத் தெரிய வேணாம்’ என்றாளே அம்மா? அம்மாவின் கவலை வேறு பொறுக்கிகளால் மெய்யாகிவிட்டதே? …. இந்தக் கறையை வாழ்நாள் முழுவதும் எப்படிச் சுமக்கப் போகிறேன்? …’
மனத்தின் வலி, உடம்பின் வலி இரண்டும் சேர்ந்து அவளைப் படாத பாடு படுத்திக்கொண்டிருந்ததில், காலை ஐந்து மணிக்கு மேல் அவள் சற்றே கண்ணயர்ந்தாள். வேலைக்காரி பேபி வந்து கதவைத் தட்டிய பிறகுதான் எழுந்தாள். வாசற்கதவைத் திறப்பதற்கு முன்னால் தன் முகத்தைத் திருத்திக்கொண்டாள். தலையை வாரிக்கொண்டாள். முகத்தின் பொலிவின்மையை ஓரளவுக்கேனும் மறைக்கும் முயற்சியில் பொட்டு வைத்துக்கொண்டாள்.
இத்தனை முன்னேற்பாடுகளையும் தாண்டி, “ஏம்மா தாயி, ஒரு மாதிரி இருக்குறே? மேலுக்குச் சொகமில்லியா?” என்று பேபி கேட்டாள்.
“ஆமா, பேபி. நேத்தெல்லாம் காய்ச்சல், தலைவலி, சளி. எல்லாம்
சேந்துக்கிட்டு என்னை ராத்திரி முச்சூடும் ஒறங்க விடாம் பண்ணிடுச்சு …” என்று கூறி அவள் சமாளித்தாள்.
… பத்து மணி அளவில் அம்மாவும் மணியும் திரும்பினார்கள். மணி பின்கட்டுக்குப் போனதும், ராஜாத்தி, “அம்மா!” என்று கதறியவாறு அவள் தோள் மீது தன் முகத்தைப் பதித்தக்கொண்டு விம்மி அழலானாள்.
“என்னடி, ராஜாத்தி! என்ன நடந்திச்சு? உன் மொகமே சரியா இல்லே. நானே கேக்கணும்னு நெனச்சேன்…”
ராஜாத்தி எல்லாவற்றையும் திக்கியும் திணறியும் அழுதவாறே சொல்லி முடித்துவிட்டுக் குப்புறப் படுத்துக்கொண்டு மறுபடியும் அழத் தொடங்கினாள். அம்மா தேவகி திகிலும் அச்சமுமாகிப் போனாள். அவளும் அழுதாள். பின்கட்டிலிருந்து திரும்பிய மணி பயந்து போய் விசாரித்ததும், அவள் நடந்தவற்றை அவனுக்குச் சொன்னாள்.
இருபத்து நான்கு வயது மணி பொத்தென்று தரையில் அமர்ந்து ஒரு பெண்பிள்ளையைப் போல் அழுதான். அழுத சத்தம் கேட்காவிட்டாலும், அவன் தோள்கள் குலுங்கின.
“அம்மா! நாம இதைச் சும்மா விடக்கூடாது. … உடனே போலீசுக்குப் போகணும்…”
- ராஜாத்தியின் வருங்காலம் அதனால் பாழாகும் என்று தேவகி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் கேட்டானில்லை. ராஜாத்தியும் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். இப்படி ஒரு கோரம் தனக்கு நிகழ்ந்துவிட்ட நிலையில் தனக்கு நேர்ந்ததை வெளிப்படுத்தாமல் எவனையும் திருமணம் செய்யக்கூடாது என்று அவள் நினைத்ததால், அப்படி ஒரு பெருந்தன்மையான ஆள் கிடைக்கக்கூடிய சாத்தியம் அரிது என்றும் அவளுக்குத் தோன்றியதால், மணியின் யோசனையை அவள் ஏற்றாள். அதிலும் மணியின் நண்பனை எப்படியாவது தண்டித்தே ஆகவேண்டுமென்னும் வெறி அவளுள் கனன்றுகொண்டிருந்தது.
- … கடைசியில் விஷயம் நீதி மன்றத்துக்குப் போயிற்று. பெண்ணுரிமைக் கழகத்தின் தலைவி ராஜாத்தியின் வழக்கில் மிகுந்த அக்கறை காட்டி எல்லா உதவிகளையும் அவளுக்குச் செய்தாள். மருத்துவச் சோதனை, எதிர்த்தரப்பு வக்கீலின் குறுக்குக் கேள்விகளால் விளைந்த அவமானம் எல்லாவற்றையும் ராஜாத்தி சகித்துக்கொண்டாள்.
- கடைசியில் தீர்ப்பு வழங்கும் நாள் வந்தது. ராஜாத்தி தீர்ப்பைக் கேட்டு அதிர்ந்து போனாள். அவளுடைய எதிரிகளின் சார்பில் அவளை மடக்கி மடக்கிக் கேள்விகள் கேட்ட வக்கீலின் கிண்டலும் கேலியும் அவளுடைய எதிரிகள் தப்பி விடுவார்களோ என்கிற அச்சத்தை வழக்கின் தொடக்கத்திலிருந்தே அவளிடம் ஏற்படுத்தி யிருந்த தென்னமோ உண்மைதான். ஆனால் அவள் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்த நீதிபதி எசமானே அவளுக்கு பாதகமாய்த் தீர்ர்பு அளித்ததைத்தான் அவளால் தாங்கவே முடியவில்லை.
- அவள் பண வசதியற்றவள் என்பதால் அவள் சார்பில் அமர்த்தப்பட்டிருந்த வக்கீல் ஒரு சப்பை என்பது அவர் வாதாடிய தினுசிலிருந்தே அவளுக்குத் தெரிந்திருந்தது உண்மைதான். ஆனாலும் அவள் நீதிபதி அய்யா மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தாள். ஆனால் அந்த நம்பிக்கை பொய்யாகிவிட்டது.
- தன்னை நாசப்படுத்தியவர்களை ராஜாத்தி எதிர்த்துப் போராடவில்லை என்றும் இருபத்தெட்டு வயது ஆகியும் திருமணம் ஆகாதவளாக இருந்ததால் அந்தக் கற்பழிப்பை அவள் மனமுவந்து அனுபவித்தாள் என்றும் அந்த எதிர்த்தரப்பு வக்கீல் கூறியபோது ராஜாத்திதான் எப்படிக் கொதித்துப் போனாள்!
- நீதிபதி ராஜாத்தி எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்பதை மிக முக்கியமான விஷயமாக எடுத்துக்கொண்டார். அதன் அடிப்படையில்தான் அவரது தீர்ப்பு அமைந்துவிட்டது. அவள் எதிர்ப்புக் காட்டியிருந்தால் அவள் வாயில் துணியை அடைத்திருந்திருக்கவே முடியாதாம். பற்கள் இறுகிய நிலையில் யாரையும் வலுக்கட்டாயமாக வாயைத் திறக்க வைக்கவே முடியாதாம்! அப்படித் திறக்க முயற்சி செய்கிற எந்த மனிதனின் விரலையும் எதிர்க்கிற பெண் கடித்துவிடுவாளாம். ஆனால் ராஜாத்தி அப்படி யெல்லாம் செய்ததாகத் தெரியவில்லையாம். மூக்கைப் பொத்தினால் வாய் திறந்து கொள்ளாதா அய்யா? கற்பழித்த நால்வரும் உடனுக்குடனாய்ப் பிடிபட்டதால், அவர்கள் உடம்புகளில் ஒரு நகக்கீறல் கூட இல்லாதது அவளது ‘சம்மத’த்தையே உணர்த்தியதாம். நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணின் கைகளைக் கயிற்றால் கட்ட முடியுமென்றாலும், அதைத் தடுக்க அவள் முயலவே இல்லையாம். முயன்றிருப்பின், அவர்களுக்கு அவளால் நகக்கீறலோ பற்கடியோ ஏற்பட்டிருக்குமாம். … ஆகவே அந்த நால்வரும் விடுதலையாம்!
- முதலில் கண் கலங்கிப் போனாலும், “அய்யா! நீதிபதி அவர்களே! நான் கொஞ்சம் பேசணும். அனுமதிப்பீங்களா?” என்று ராஜாத்தி பணிவுடன் வேண்டினாள்.
- நீதிபதி அனுமதித்தபின் அவள் கூண்டுக்குள் நின்று பேசினாள்: “நான் அவ்வளவாகப் படிக்காத பொண்ணு. ஏழைன்னு சொல்ல முடியாட்டியும் நடுத்தரத்துக்கும் கீழே இருக்கிற குடும்பம் எங்களுது. நான் பேசுறதுல குத்தம் குறை இருந்தா மன்னிச்சுக்குங்கய்யா. பொம்பளைக் குரல்ல அவங்க கூப்பிட்டதும், சன்னல் வழியாப் பாக்காம – யோசிக்காம – கதவைத் தொறந்துட்டேன். இதை ஏற்கெனவே சொல்லியிருக்குறேன். அவங்க நாலு பேரும் பட்னு நொழைஞ்சி கதவைச் சாத்தினதும் அவங்க எண்ணம் புரிஞ்சிடிச்சு. கத்தணும்னு தோணிச்சே ஒழிய எம்புட்டு முயற்சி பண்ணியும் நாக்கைப் பொரட்டவே முடியல்லீங்கய்யா. நான் அந்த அளவுக்குப் பயந்து போயிட்டேன். தொண்டை கப்னு அடைச்சுக்கிறுச்சு.
- “நமுட்டைக் கூட அசைக்க முடியல்லீங்கய்யா. கைகாலெல்லாம் சில்லுனு ஆயிடிச்சு. வெரலைக் கூட அசைக்க முடியாதபடிக்கு ஒடம்பே மரத்துப் போயிடிச்சு. … அய்யா! எனக்கும் கல்யாணம் கட்டிக்கிட்டு கொழந்தைகுட்டி பெத்துக்க ஆசைதான். நான் இல்லேங்கல்லே. அதுக்காக … அதுக்காக … (முகம் பொத்தி அழுதபடி) அதுல எனக்கு சம்மதம்னும் அதனாலதான் நான் எதிர்ப்புக் காட்டல்லேன்னும் அந்த வக்கீலய்யா சொன்னது அடுக்காதுங்கய்யா. … நான் ஒண்ணு சொல்லட்டுமா?”
- “சொல்லும்மா…”
“இப்பல்லாம் அடிக்கடி திருடங்க வீட்டுக் கதவை உடைச்சு நடு ராத்திரியில வீட்டுக்குள்ள பூந்துடறாங்க. ஏன்? சில சமயம் பகல்ல கூட வந்துடறாங்க. கத்தி, கம்பு, துப்பாக்கி இதையெல்லாம் வச்சுக்கிட்டு, வீட்டில உள்ள பலசாலி ஆம்பளைங்களையே மெரட்டி, ‘சத்தம் போட்டா கொலை விழும்’னு பயமுறுத்தி, ஒரு ஓரமா அவங்களை நிப்பாட்டிட்டு, அவங்க பயத்தோட எடுத்துக் குடுக்குற சாவியாலேயே அலமாரியைத் தொறந்து, எல்லாத்தையும் கொள்ளை யடிச்சுக்கிட்டுப் போயிர்றாங்க. அவங்கல்லாம் போன பெறகுதான் அந்த வீட்டு ஆம்பளைங்களே கூச்சல் போடுறாங்க. அவங்களே சாவிக்கொத்தைத் திருடங்க கையில குடுத்துட்டதாலயும், சத்தமே போடாததாலயும், அவங்களை எதிர்த்துச் சண்டை போடாததாலயும், அவங்க சம்மதப்பட்டுத்தான் அந்தத் திருடங்க கொள்ளையடிச்சாங்கன்னு சொல்லித் திருடங்க பிடிபட்டாலும் அவங்களை யெல்லாம் விடுதலை செய்யணும்னு தீர்ப்புச் சொல்லுவீங்களாய்யா?”
நீதி மன்றத்தில் குழுமியிருந்த பார்வையாளர்கள் கைதட்டினார்கள். நீதிபதியின் தொண்டைக் குமிழ் மேலும் கீழும் ஏறி இறங்கியது.
…….
- சொல்வனம் இணையப் பத்திரிகை 244 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- திருவளர் என்றாலும்… திருநிறை என்றாலும்…
- தில்லிகை | ஏப்ரல் 10 மாலை 4 மணிக்கு | பௌத்தத்தை நினைப்பதும் நிகழ்த்துவதும் – அயோத்திதாசர் & அம்பேத்கர்
- பூராம் கவிதைகள்
- முதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா ?
- உலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு ஒருவாரம் தடைப் பட்டது.
- எஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்
- கவிதையும் ரசனையும் – 14 ஆத்மாநாம்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- நீதிபதி அய்யாவுக்கு ஒரு சேதி!
- ஏசு மகான் உயிர்த்தெழ வில்லை !
- மனிதர்களுக்கு மரணமில்லை