கோ. மன்றவாணன்
“ஆயிரம் நிலவே வா” என்று புலவர் புலமைப்பித்தன் அழைக்கிறார். “ஆயிரம் மலர்களே… மலருங்கள்” என்று கண்ணதாசன் வேண்டுகிறார். இந்த இரண்டு பாடல்களை இன்று கேட்டாலும் இதயம் மகிழாதவர் யார்?
இரண்டு பாடல்களின் வரிகளை ஒப்பிடும் போது உங்களுக்குள் கேள்வி எழலாம். ஆயிரம் நிலவு என்கிறார் புலவர். ஆயிரம் மலர்கள் என்கிறார் கவிஞர்.
ஆயிரம் என்பது பன்மை அன்றோ… ஆயிரம் நிலவுகள் என்றுதானே இருக்க வேண்டும். ஆயிரம் நிலவு என்றது தவறுதானே என்று ஐய வினாவை எழுப்பலாம்.
ஒரு நிலவு என்று சொல்லலாம். இங்கு ஒரு என்பது ஒருமையைக் குறிக்கிறது. அதனால் தவறு இல்லை. ஒன்றுக்கு மேற்பட்டால் பன்மையாகிவிடும். அப்போது பன்மையைக் குறிக்கும் கள் விகுதியைப் பயன்படுத்த வேண்டும். இரு நிலவு என்று எழுதாமல் இரு நிலவுகள் என்று எழுத வேண்டும். அதன்படி ஆயிரம் நிலவுகள் என்று எழுதுவதே சரி என்று வாதிடலாம்.
திரைப்படப் பாடல் ஆசிரியர்களில் புலவர் புலமைப்பித்தனும் கவிஞர் முத்துலிங்கமும் பிழையற இலக்கணம் கற்றவர்கள். புலமைப்பித்தன் இப்படிப் பிழையாக எழுதுவாரா என்று ஆராய்ந்து பார்த்தேன்.
ஆயிரம் நிலவே வா என்ற பாடலில் வா என்ற வினைச்சொல்லின்படியும் திரைப்படக் காட்சியின்படியும் ஒரு பெண்ணைத்தான் குறிக்கிறார். ஆயிரம் நிலவுகள் ஒன்று சேர்ந்து ஒரு நிலவாய் வந்ததால் ஆயிரம் நிலவே வா என்று எழுதியதாகப் புலவர் புலமைப்பித்தன் சொல்லலாம். ஆயிரம் நிலவு(கள்) போன்றவளே என்று உவமையாகவும் கொள்ளலாம்.
முற்காலத்தில் தமிழில் கள் விகுதி பயன்பாடு பெரும்பாலும் இல்லை. பறவை பறந்தது என்று எழுதினால் ஒரு பறவை என்று கருதுவார்கள். பறவை பறந்தன என்று எழுதினால் பல பறவைகள் பறந்தன என்று எண்ணுவார்கள். வினைச்சொல்லின் விகுதியைக் கொண்டு ஒருமையா பன்மையா என அறிவது அன்றைய வழக்கம்.
எண்ணிக்கையைச் சொல்லால் குறித்தால் அதன் பக்கத்தில் ஒருமை பெயர்ச்சொற்களை எழுதுவதும் வழக்கத்தில் உண்டு. எண்ணிக்கையை வைத்து ஒருமையா பன்மையா என்பதை அறிந்தார்கள்.
ஒரு சொற்றொடர் ஒருமையா பன்மையா என்பதை எப்படியாவது அந்தச் சொற்றொடர் குறிப்புணர்த்த வேண்டும். அதுதான் மொழிக்கூர்மை.
ஒரு மலர் என்றால் ஒற்றை மலர் என்று கருத முடியும். ஒரு மலர்கள் என்று குழந்தைகூடச் சொல்லாது. ஆனால் “ரெண்டு பூ கொடு” என்று குழந்தை கேட்கும். மொழியின் இயல்போட்டம் இது. இத்தகைய இயல்போட்டத்தில் எங்கேனும் குழப்பம் வரும் என்றால் அதற்குத் தீர்வு காண்பது மொழியியல் வல்லுநர்களின் வழக்கம்.
இரு மலர் என்பதில் இரு என்ற சொல்லே பன்மையைக் குறித்துவிடுகிறது. எதற்காகக் கூடுதலாகக் கள் விகுதி சேர்த்து மலர்கள் என்று எழுத வேண்டும்? இந்தக் கேள்வியை நம் முன்னோர்கள் எழுப்பி இருப்பார்கள்.
ஆயிரம் நிலவா ஆயிரம் நிலவுகளா என்பதைத் தீர்மானிக்க நம் இலக்கியங்களைப் புரட்டுவோம்.
ஆயிரம் தாமரை பூத்த போல் – சீவக சிந்தாமணி
தாமரை ஆயிரம் மலர்ந்து – கம்ப இராமாயணம்,
ஐந்நூறு யானையும் ஆயிரம் புரவியும் – பெருங்கதை
ஆயிரம் ஞாயிறு போலும் – அப்பர் தேவாரம்
இவற்றில் எதிலும் கள் விகுதி சேர்க்கப்படவில்லை.
இப்படிப் பன்மையைக் குறிக்கும் எண்ணிக்கையைச் சொல்லிவிட்டதால் அதை ஒட்டிவரும் பெயர்ச்சொல்லோடு கள் விகுதியைச் சேர்க்க வேண்டியதில்லை. ஆயிரம் தாமரை, ஆயிரம் புரவி, ஆயிரம் தோள், ஆயிரம் கண் என்று சொல்லுதல் மரபுதான். தவறு ஏதும் இல்லை. ஆக நம் முன்னோர் சொன்னபடி, ஆயிரம் நிலவே என்று புலமைப்பித்தன் அழைத்தது சரிதான். இதில் இலக்கணப் பிழை இல்லை.
பன்மை எண்ணிக்கை குறித்த சொற்களில் ஆயிரம் என்ற சொல்தான் நம் பழைய இலக்கியங்களில் அதிகம் ஆளப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன்.
முற்காலத்தில் கள் விகுதி பெரும்பாலும் இல்லை என்று சொன்னேனே தவிர, முற்றிலும் இல்லை என்று சொல்லவில்லை. கம்பர் தன் படைப்பில் பன்மையைச் சுட்ட கள் விகுதியைப் பயன்படுத்தியும் உள்ளார். பயன்படுத்தாமலும் உள்ளார். யுத்த காண்டத்தில் ஆயிரம் கைகள் என்றும் ஆயிரம் கை என்றும் ஆண்டுள்ளார்.
வில்லி பாரதத்திலும் தேவாரத்திலும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் ஆயிரம் என்ற சொல்லுக்கு அடுத்துவரும் பெயர்ச்சொல்லில் கள் விகுதி சேர்த்தும் சேர்க்காமலும் எழுதி இருக்கிறார்கள். பெரும்பாலான நம் இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கள் விகுதியைச் சேர்த்து இருக்கிறார்கள்.
நெஞ்சிருக்கும் வரை படத்தில் “பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி” என்றொரு பாடல் உண்டு. திருமண அழைப்பிதழையே பாடலாக மாற்றிப் புதுமை செய்திருப்பார்கள். அந்தப் பாட்டில் “குவிந்தது கோடிமலர்” என வரும். ஆயிரம் மலர்களே என்று பிற்காலத்தில் பாடிய கண்ணதாசன், கோடி மலர்கள் என்று சொல்லாமல், கோடிமலர் என்று இங்கே சொல்லி இருக்கிறார். நம் முன்னோர் வகுத்த மரபின்படி இது சரிதான். ஆனால் “குவிந்தது கோடிமலர்” என்று எழுதியதுதான் தவறு, கோடி மலர் என்பது பன்மை. குவிந்தது என்பதில் ஒருமை விகுதி வந்துள்ளது. “குவிந்தன கோடிமலர்” என்று இருந்திருந்தால் அந்தப் பாடல் தவறின்றி இருந்திருக்கும். இந்த இலக்கணம் கண்ணதாசனுக்குத் தெரியாது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்.
கட்டித் தங்கம் வெட்டி எடுத்துக்
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டித் தட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா…. – அவள்
தளதள என்றே ததும்பி நிற்கும் பருவமடா… என்ற பாடலை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். இந்தப் பாடலை எழுதியவரும் கண்ணதாசன்தான்.
அந்தப் பாட்டில் இப்படி ஒரு சரணம் உண்டு.
தொட்டுத் தொட்டு நின்றன கைகள்
சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் – நான்
கிட்ட கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டிச் சென்றது வண்டு
நின்றன கைகள், கொன்றன கண்கள் எனப் பன்மை விகுதியைப் பயன்படுத்திய கவிஞர், சென்றது வண்டு என்று ஒருமை விகுதியைச் சரியாகக் கையாண்டு இருப்பார். பூ முடிப்பாள் பாடல் வருவதற்கு மிகவும் முந்தைய பாடல் இது.
கவிஞர் கண்ணதாசன் தன் கைப்பட எழுதும் வழக்கம் கொண்டவர் அல்லர். அவர் சொல்வார். உதவியாளர் எழுதிக்கொள்வார். கண்ணதாசன் பாடல் வரிகளை வேகமாகச் சொல்லும் ஆற்றல் கொண்டவர். உதவியாளர் அந்த வேகத்துக்கு ஓடிவர வேண்டும். குவிந்தன கோடிமலர் என்று கவியரசர் சொல்ல, குவிந்தது கோடிமலர் என்று உதவியாளர் எழுதி இருக்கலாம் என்று நினைக்கிறேன். குவிந்தது கோடிமலர் என்று இசை ஓட்டத்துக்காக வைத்திருக்கலாம் எனவும் சிலர் சொல்லக் கூடும். பூ முடிப்பாள் பூங்குழலி என்ற பாடலே பாட்டும் வசனமும் ஆக இருக்கும். குவிந்தது, குவிந்தன என்ற இரண்டு சொற்களும் சந்தத்துக்குள் கச்சிதமாக அடங்குபவை ஆகும். குவிந்தது கோடிமலர் என்பது கவனக் குறைவால் ஏற்பட்டிருக்கும் என்றே கருதுகிறேன்.
நாம் போற்றும் முற்காலப் புலவர்களும் ஒருமை பன்மை மயக்கத்துக்கு ஆளாகி உள்ளனர். அதன் காரணமாகவே கள் விகுதியின் தேவை பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கும். கூடுதல் கவனத்துக்காகக் கள் விகுதியைச் சேர்த்திருப்பார்கள். பன்மையைச் சுட்டுவதற்குக் கள் விகுதி எளிமையானது என்பதாலும் இருக்கலாம்.
இந்நிலையில்…
ஆயிரம் நிலவும் சரிதான். ஆயிரம் மலர்களும் சரிதான். எப்படியும் எழுதலாம். இரண்டில் ஒன்று என்று சொல்ல முடியாதா என்று நீங்கள் கேட்கலாம்.
சொல்ல முடியும்.
இரண்டு, ஐந்து, பத்து, நூறு, ஆயிரம், கோடி என எண்ணிக்கை சார்ந்த சொற்கள் வரும்போது, அவற்றை ஒட்டிவரும் பெயர்ச்சொற்களில் கள் விகுதியைச் சேர்த்து எழுதினால் கூடுதல் தெளிவு கிடைக்கும். கள் விகுதியால் பன்மையை எளிதில் அடையாளம் காணலாம்..
ஆம்!
தற்காலத் தமிழ்வானில் ஆயிரம் நிலவுகள் உலவட்டுமே….