முனைவர் ம . இராமச்சந்திரன்
கடந்த சில மாதங்களாகக் கரோனா தாக்குதலின் இரண்டாவது அலை பரவத் தொடங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் கூறியிருப்பது மேலும் நமது நடைமுறை செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தை முன்வைக்கிறது.
அரசும் ஊடகங்களும் முகக் கவசம் அணிதல், சானிடேசன் செய்து கொள்ளுதல், தனிநபர் இடைவெளி கடைபிடித்தல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் என்று கருத்துப் பரப்புரை செய்து வருகின்றன. மக்கள் இவற்றை வசதிக்கேற்ப செய்துவந்த நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதற்கு மேலாக கரோனா தொற்றுத் தீவிரமாகப் பாதித்தவர்கள் அதிகம் இருக்கின்றனர். இதனால் அவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு மேலும் மருத்துவ விழிப்புணர்வு தேவைப்படுகிறது. காய்ச்சல், தீவிர காய்ச்சல், சலி, இருமல், மூச்சுத்திணறல் என்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் மக்கள் பின்பற்ற வேண்டிய உடனடி மருத்துவ செயல்முறைகள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது அல்லது இல்லை என்றே கூறலாம்.
இவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அது சார்ந்த விழிப்புணர்வு இல்லாமல் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனை வருவதே அதிகமாக உள்ளது. மேலும் காய்ச்சல் என்றால் தனியார் மருத்துவர்கள் ஆலோசனை மற்றும் மருத்துவம் பார்ப்பதைத் தவிர்த்து விடுகின்றனர். இதனால் நோயாளியின் தொற்று காலதாமதத்தால் தீவிர தன்மை அடைந்து உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது.
அரசு மக்களுக்குச் செய்ய வேண்டிய சில அடிப்படை செயல்பாடுகள் உள்ளன. அவை,
1. காய்ச்சல், சலி ஏற்பட்டவுடன் பயம் கொள்ளாமல் உடனடியாக உட்கொள்ள வேண்டிய மருந்துகள் பற்றிய தகவல்களும் உட்கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் பரவலாகத் தெரியபடுத்த வேண்டும்.
2. கபசூரண குடிநீர் தெரிந்த அளவிற்கு அசித்திரோமைசின், ஜிங், மாத்திரை மக்களிடம் கொண்டு செல்லப் படவில்லை. இது மிகப் பெரிய தவறாகும். ஒவ்வொருவரும் தொற்றால் பாதிக்கப்படும்போது உடனடி மருத்துவ தேவை சார்ந்த விழிப்புணர்வு அவசியம்.
3. இன்றும் பெரும்பாலான மக்கள் தாங்கள் உட்கொள்ளும் மருந்தின் பெயர், அளவு குறித்த விழிப்புணர்வு அற்றவர்களாக இருந்து வருவது கரோனா தொற்றைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவாது. ஆகையால் மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள் உடனே நடத்தப்பட வேண்டும்.
4. மருத்துவ விழிப்புணர்வை கல்லூரி ஆசிரியர்கள் மூலமாக கல்லூரி மாணவ/மாணவிகளுக்கு ஏற்படுத்தும்போது அந்த மாணவர் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் பயடைவார்கள். இவற்றைச் சமூக ஊடகங்கள் மூலமும் ஆன்லைன் வகுப்பு எடுக்கும் போதும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
5. அதே போல அனைத்துப் பள்ளி மாணவ/மாணவிகளுக்கும் பள்ளி ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வைத் தரலாம். மருத்துவம் எளிமைபடுத்தப்பட்ட அறிவாக இதன் மூலம் மாற்றமடையும்போது இதுபோன்ற சிக்கல்களை எளிமையாகத் தீர்க்க முடியும்.
6. மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை எல்லா மருத்துவமனைகளிலும் காணப்படும் சிக்கல். இதனைக் கண்டிப்பாகச் சரிசெய்ய வேண்டும். இதுபோன்ற பேரிடர் காலங்களில் சில மாற்றுச் செயல்பாடுகளை முன்னெடுத்தல் வேண்டும். மருத்துவ மாணவர்கள் அனைவரும் படிப்பு நிலையில் இருந்து மருத்துவப் பயிற்சி என்ற செயல்தளத்திற்கு அவர்களைப் பங்காற்ற செய்ய வேண்டும். இவர்களுக்குத் தங்குவதற்கு இடம், உணவு, முடிந்தால் ஊக்கத்தொகை வழங்கலாம். இவர்களின் இத்தகைய அனுபவம் நாட்டிற்கும் வீட்டிற்கும் பெரும் பயனைத் தரும்.
7. செவிலியர் படிப்பில் இருக்கும் அனைவரையும் இன்றைய காலத்தைப் பயிற்சிக் காலமாக கணக்கில் எடுத்து மருத்துவ சேவையில் ஈடுபடுத்தலாம். இதன் மூலம் செவிலியர் பணிச்சுமை குறையும். இவர்களுக்குத் தங்கும் இடம், உணவு, ஊக்கத்தொகை வழங்கலாம்.
8. அரசு, தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் என்று அனைவரையும் தேவை இருக்கும் இடத்திற்கு அனுப்பி மக்கள் நலன் காக்கலாம்.
9. சமூக ஊடகங்கள் மூலமாகத் கரோனா தொற்றுக் காலத்தில் பின்பற்ற வேண்டிய மருத்துவ ஆலோசனைகள் பற்றிய விழிப்புணர்வு விளம்பரங்களைச் செய்யலாம். இசைக் கலைஞர்கள், கூத்துக் கலைஞர்கள் போன்றவர்கள் மூலம் பிரச்சாரம் செய்யலாம் . மருந்துகள் குறித்தும் அதன் பயன்பாடு பற்றியும் விரிவாக மக்களிடம் கொண்டு செல்லலாம்.
10. மருத்துவம் மக்கள் நல மருத்துவமாக, மக்கள் புரிந்து கொண்ட மருத்துவமாக, தேசிய நலனைப் பாதுகாக்கும் மருத்துவ மாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இவ்வாறு மருத்துவம் மக்களிடம் அந்நியத் தன்மையில் இருந்து விலகி புரிந்துகொண்டு நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அறிவுத்தளமாக மாறும்போது எத்தகைய கொடிய நோயாக இருந்தாலும் மக்களாலும் அரசாலும் புரிந்து செயல்படக்கூடிய ஒன்றாக எளிமைப்படுத்தப்படும். எளிமையாக்கல் ஒன்றே அனைத்து பேரிடர் தொற்றுக்கும் வழியாகும். மருத்துவத்தை எளிமையாக்குவோம், மருத்துவ அறிவைப் பரவலாக்குவோம், கரோனா பெரும் தொற்றை முறியடிப்போம்.
- தெற்காசிய நாடுகளில் விருத்தியாகும் பேரளவு-
- கனவில் வருகிறது !
- ஆயிரம் நிலவும் ஆயிரம் மலர்களும்
- கவிதையும் ரசனையும் – 16
- இரண்டாவது அலையும் கடந்து செல்ல சில துணிச்சலான செயல்பாடுகளும்
- அப்படி இருக்கக் கூடாது
- உயிர்
- தோற்றம்