தோற்றம்

author
1
0 minutes, 5 seconds Read
This entry is part 8 of 8 in the series 9 மே 2021

  (கௌசல்யா ரங்கநாதன்)            –

——–  -1-   

காலை 6 மணிக்கு படுக்கையை விட்டு எழும்போதே லேசான கிறுகிறுப்புடன், தலை சுற்றிய போதுதான் என் நினைவுக்கு வந்தது பி.பி.மாத்திரை  கைவசம் ஸ்டாக் இல்லையென்ற விஷயம்..இந்த அதிகாலை வேளையில், அதுவும் ஞாயிறன்று விடிகாலையில் எந்தக் கடை திறந்திருக்கப்  போகிறது..இப்போது எப்படி சமாளிப்பது..?மனைவியும் ஒரு உறவினர் வீட்டு திருமணத்துக்கென காஞ்சீபுரம் போயிருக்கிறாள்..வழக்கமாய்  மாத்திரை வாங்கும் மெடிகல் ஷாப்புக்கு போன் பண்ண, அது அடித்துக் கொண்டே இருந்தது..யார் இந்த அதிகாலை வேளையில் கடையை  திறந்து வைப்பார்கள்..அதுவும் ஞாயிறு விடுமுறையன்று..என் பைத்தியாகாரத்தனத்தை எண்ணி.. அப்படியும் சொல்ல முடியாது..நான்  எப்போதும் சுறுசுறுப்பானவன்தான் இந்த என் 80+ வயதிலும்..ஆனாலும் என்னவோ மறந்து போய் விட்டேன்,மனைவியும் வீட்டில் இல்லாததால்,  ஒரு காபியாவது போட்டு குடிக்கலாம் என்று கிச்சனுக்கு போனால் தலை சுற்றல் அதிகமாயிற்று

..எங்கேயாவது கீழே விழுந்து விட்டால்  என்ன செய்வது? யாரை அழைப்பது என்ற நினைப்புடன் சற்றே மறுபடி ஓய்வு எடுத்த பிறகு கொஞ்சம் சமனமானது போல் தோன்றவே, மெல்ல  எழுந்து வேறெங்காவது மெடிகல் ஷாப் திறந்திருக்கிறதா என்று பார்த்தால் ஓரு, டீக்கடை, பெட்டிக்கடை தவிர மற்ற எல்லாமே மூடியே கிடக்க,   மெல்ல எங்கள் தெரு கடந்து, ஒரு அசட்டு துணிச்சலில் அடுத்தடுத்த தெருக்களில் எங்காவது மெடிகல் ஷாப் திறந்திருக்கிறதா என்று  பார்த்தால், ஒரேயொரு கடையை, ஒரு 25 வயதிருக்கும் வாலிபன் ஒருவன்  திறந்து கொண்டிருப்பதை பார்த்து, அவனிடம் சென்று டாக்டர் சீட்டை  எடுத்து காட்ட, அவன் மௌனமாய் கடை வாயிலை பெருக்கி, தண்ணீர் தெளித்து, ஸ்வாமி படங்களுக்கு பூச்சரம் போட்டு,வத்தி  கொளுத்தி வைத்து, கண்கள் மூடி தியானத்திலாழ்ந்து விட்டான் சில நிமிடங்கள்வரை..எனக்கோ வலியை தாங்க முடியவில்லை..அட அட்லீஸ்ட் நான்  கேட்ட மாத்திரை இருக்கிறதா, இல்லையா என்று சொன்னாலாவது பொறுமை காத்திடலாம்..அவன் எதுவுமே பேசாமல் இருந்தது என்னை  அலட்சியப்ப்டுத்துவது போலிருந்தது..

அவன் தியானத்திலிருந்து மீண்டவுடன் “என்னப்பா..மாத்திரை இருக்கு, இல்லைனு சொன்னா நான்  வேற கடைகளுக்காவது போவேன்ல” என்ற போது “ஏ பெர்சு (பெர்சாம்!), பார்த்துக்கிட்டிருக்கேல்ல..கடையை சுத்தம் பண்ணி, சாமி கும்பிட்டு,  கணியில பார்த்தாதான் நீ, கேட்ட மருந்து ஸ்டாக் இருக்கா, இல்லையானே சொல்ல முடியும்..அவசரமாய் இருந்தா வேற கடைக்கு போ..  என்றான்..இதென்ன உப்பு,புளியா, காய்கறிகளா வேறு கடை நாடி செல்வதற்கு..இந்த பகுதியில் இவன் ஒருத்தன்தானே கடையை திறந்து  கொண்டிருக்கிறான்..சின்னப் பையன் வேறு..என் அவசரம் விளங்கவில்லை அவனுக்கு..அதனால், “கோவிச்சுக்காதேப்பா..நான் காத்திருக்கேன்..” என்ற  பிறகும், பக்கத்து டீ ஸ்டாலிலிருந்து வந்த டீயை குடித்து முடித்த பிறகே கணியை ஆன் பண்ண, “யோவ்..நீ அதிர்ஷ்டக்காரன்யா…மாத்திரை ஒரே ஒரு  பாட்தான் இருக்கு..” என்றவன் மாத்திரை கொடுக்க அங்கேயே இருந்த தண்ணீரை எடுத்து ஒரு மாத்திரையை போட்டுக்கொண்டு அங்கிருந்து  கிளம்பும் முன் அந்தப்பையன் என்னை பார்த்து…. 

-2-

 “யோவ் பெர்சு, உனக்கு எங்கேயா வீடு?” என்ற போது பற்றிக் கொண்டு வந்தது எனக்கு..அது என்ன ரெஸ்பெக்டே கொடுக்காமல் “நீ”,”வா”,”போ”  பெர்சு” என்றெல்லாம் விளிப்பது என்று தோன்றினாலும் இந்தக் கால இளைஞர்களுக்கு அவர்கள் பெற்றோர்கள் இதெல்லாம் சொல்லி  கொடுப்பதில்லை போல என்றே தோன்றியது..கேட்டால் “இது சென்னை மொழி ..இதிலென்ன தப்பு கண்டு பிடிச்சேபா” எனலாம்.  இப்போதென்ன இதுவா முக்கியம்?  என்று எண்ணியவாறு “நீ என்னப்பா கேட்டே?” என்றேன்..  “உன் வீடு எங்கேனு கேட்டேன்?” என்ற போது, “ஏன்? உனக்கு என்ன வேணும்?” என்று சொல்லி விட்டு என் வீட்டு விலாசம் சொன்னேன்..  “நல்லதா போச்சு..நீ எனக்கு ஒரு எல்ப் (HELP)பண்ணுவியா? ஒண்ணும் பெர்சில்லை..உங்க தெருவுக்கு அடுத்த தெரு (பெயரைச்சொல்லி)  அங்கே ஒருத்தர் வீட்டில் இந்த மருந்துகளை கொடுத்துட்டு போகணும்” என்ற போது பற்றிக் கொண்டு வந்தது எனக்கு.. இருந்தாலும் அது  என்ன மாத்திரை? எங்கே வீடுனு சொன்னேனு கேட்டு டாக்டர் சீட்டை வாங்கிப் பார்க்க அது ஒரு அதிவீர்யமான பி.பி. மாத்திரை.. 

அப்போது அவன் மறுபடி, “நான் கடையை இப்படியே திறந்து போட்டுட்டு போய் இதை கொடுக்க முடியாது.. இன்னொரு ஆள் டூட்டிக்கு  8 மணிக்கு மேலதான் வருவான்..இந்த மருந்தெல்லாம் அர்ஜென்டா வேணும்னு நேத்தே அந்த வீட்டுக்காரங்க சொன்னாங்க..அப்ப கைல  ஸ்டாக் இல்லாததால், இரவு கடையை மூடினப்புறம் எங்கெல்லாமோ அலைஞ்சு,  வாங்கி எடுத்துக்கிட்டு வீட்டுக்கு போயிட்டேன்..பாவம்  அவங்க.. இப்ப இன்னமும் டிலே பண்ணி, ஏதாச்சுமாயிட்டா என்ன பண்றதுனுதான் உங்கிட்ட சொல்றேன்” என்றபோதுதான் நான் சற்றுமுன் துடி  துடித்தது நினைவுக்கு வர, ஆபத்துக்கு பாவமில்லையென எண்ணியவாறு, அவனிடம் விலாசத்தையும்,மருந்துகளையும், வாங்கிகொண்டு சிரமம்  பார்க்காமல் போயும், அந்த தெருவையே கண்டு பிடிக்க முடியவில்லை..

 நானும் மாத்திரை சாப்பிட்ட பிறகு கொஞ்சம் கலகலப்பாய்  உணர்ந்ததால்,  மருந்து கடைக்காரப் பையனின், மனிதாபிமானத்தை எண்ணி பரவசப்பட்டாவாறே,அவன் கொடுத்த விலாசம் தேடி அலைந்தால், அது என் வீட்டிலிருந்து 2 கி.மீ தூரத்தில் இருந்தது. எப்படியோஅந்த தெருவையும்,அவன் சொன்ன வீட்டையும் கண்டு பிடித்தாயிற்று..  அது 50 வீடுகளையும், 3 ஃபிளோர்களையும்கொண்ட ஒரு  அடுக்ககம் அதுவும் நான் தேடி வந்த குடும்பம் மூன்றாவது மாடியில்  இருந்தது..வாயிலில் security ஆயிரம் கேள்விகள் கேட்டான்..என்னை மேலும்,கீழுமாய் பார்த்தான்..என் தோற்றம் அப்படி..நரைத்த, சீவப்படாத,  எண்ணை காணாத தலை, மற்றும் முகம்..படுக்கையிலிருந்து எழுந்து நேராக மருந்து கடைக்கு போனதால் அழுக்கு உடைகள் என தோற்றம்  படு கேவலமாய் இருந்தது..அந்த வீட்டுக்காரர்கள் பெர்மிஷன் பெற்று என்னை அங்கு போகச் சொன்னான்..அன்றைக்கென பார்த்து அங்கு லிஃப்டும்  வேலை செய்யவில்லை..விதியை நொந்தவாறு, அதுவும் பாவ, புண்ணியம், பச்சாத்தாபம் பார்த்து வந்ததற்கு இது தண்டனைபோலும் என்றே  தோன்றியது..மெல்ல, ஆங்காங்கே உட்கார்ந்து, ஆசுவாசப்படுத்திக் கொண்டு அந்த வீட்டை அடைந்து, மெல்ல காலிங் பெல்லை ஒலிக்கசெய்ய,   

-3- 

கடுகடுவென்ற முகத்துடன் வெளியே வந்த ஒரு பெண்மணி, என் தோற்றத்தை பார்த்து, எதோ பிச்சை கேட்க வந்திருப்பவன் போலும் என்று  நினைத்துக் கொண்டார் போலும், “யாரப்பா நீ? காலம்கார்த்தாலேயே யாசகமா? ஒரு நாள்ள எத்தனை பேர்கள் இப்படி அனாதை ஆஸ்ரமத்துக்கு  பழம் துணிகள் இருந்தால் கொடுங்க, கோவில் கும்பாபிஷேகம், அன்னதானம் பண்றோம் ஏழைகளுக்கு, உங்களால் முடிஞ்சதைக்கொடுங்க,   துடப்பம் விற்கிறேன்..மிக்ஸீ  விற்கிறேன்னுலாம்.

சே! பொழுது விடிஞ்சு பொழுது சாயறதுக்குள்ளாற இப்படி எத்தினி பேர்கள்தான் கால்   பெல்லை அடிச்சுக்கிட்டே வருவீங்க? பிழைக்க வழி விளங்கலைனா, அதுவும் உன்னைப் போல உள்ளவங்க, எதனாச்சும் முதியோர் இல்லமா  பார்த்துக்கிட்டு போக வேண்டியதுதானே” என்ற போது, “வெய்ட்,வெய்ட்..கொஞ்சம் பொறுமையாய் நான் சொல்றதை கேளுங்கம்மா.. நான்  ஒண்ணும் பிச்சை கேட்டு வரலை இங்கே..எனக்கும் சொந்த,பந்தங்கள் எல்லாம் இருக்கு” என்ற போது மறுபடி அந்தம்மா குறுக்கிட்டு “அப்ப  மருமக கிட்ட சண்டை போட்டுக்கிட்டு வந்துட்டியா? யாரைத்தான் நம்பறது..?இப்படி பகல்ல நோட்டம் பார்த்து வச்சுக்கிட்டு, அப்புறம் பாதி  ராத்தி¡¢யில் வீடு பூந்து கொள்ளை அடிக்கிறதுதான் இன்னைக்கு வழக்கமா போச்சே..வயசானவனா இருக்கியேனு பார்க்கிறேன்..இல்லைனா  போலீசை கூப்பிட வேண்டியிருக்கும்..என் கோபத்தை கிளறாம இந்த இடத்தை உடனே காலி பண்ணு. ஆமாம் எப்படி உன்னை வாசல்ல உள்ள  Security உள்ளே விட்டான்? யாரையும் சுலபமா உள்ளே விட மாட்டானே..என்ன பொய் சொல்லி உள்ளே வந்தே?” என்றபோது “ஆண்டவா  எனக்கு ஏன் இப்படியொரு சோதனை இன்னைக்கு, அதுவும், காலம்கார்த்தாலயே..என்னை போல, அதுவும் என்னைவிட அதிக பி.பி.உள்ள  ஒருவருக்கு மாத்திரையை மனிதாபிமான அடிப்படையில் கொடுத்துவர எண்ணிய எனக்கு இந்த அவமானமெல்லாம் தேவையா! இப்படி  வீதியை நொந்தவாறு நின்றுகொண்டே “த பாருங்கம்மா..நான் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்துத்தான் கேளுங்களேன்”என்ற போது,  ” நீ போக மாட்டியா என்ன சொன்னாலும்..ஏற்கனவே என் கணவர் பி.பி. தாறுமாறா ஏறி துடிச்சுக்கிட்டிருக்கார்..மருந்துகடை கடங்காரன்  மாத்திரையை வீட்டுக்கே கொண்டு வந்து தரேம்மா காலைலயேனு சொன்னவனை, இன்னம் காணோம்னு நாங்க துடிச்சுக்கிட்டு இருக்கச்சொல்ல,இப்ப  இங்கே நான் கத்திக்கிட்டிருக்கிறதை அவர் பார்த்தா, நிலைமை இன்னம் மோசமாயிடும்” என்று தான் சொன்னதையே சொல்லிக்கொண்டு,  நான் சொல்வதை சற்றும் சட்டை பண்ணாமல் இருந்த போது, “சுமதி,சுமதி..யார் அங்கே வாசல்ல..ரொம்ப நேரமாய் ஆர்கியூ பணிக்கிட்டிருக்கே!”  என்று சொல்லியவாறு வாயில் பக்கம் வந்தவர் என்னை சில நிமிடங்கள் உற்றுப் பார்த்துவிட்டு–  -4-  “அடடே..சாரா? எங்கே இவ்வளவு தூரம்? நீங்க இங்கேயா இருக்கீங்க?” என்றவர் தன் மனைவி பேந்த,பேந்த விழிப்பது பார்த்து “இவர்கிட்டதான்  இன்நேரம்வரை சண்டை போட்டுக்கிட்டு இருந்தியா? சார் யார்னு தொ¢யுமா? நான் வேலை செஞ்ச ஆபீசில் என் தலைமை ஆபீசர்..கிட்டத்தட்ட  400 பேர்கள் கொண்ட அந்த ஆபீசில், அத்தனை பேர்களிடமும் கனிவா, அன்பா, நடந்துக்குவார்..முடிஞ்ச உதவிகள் செய்வார்..இன்னைக்கு  after my  retirement, நாம் வசதியாய் இருக்கோம்னா இவருடைய வழிகாட்டுதல்தான் காரணம்.சாரை என் பணி ஓய்வுக்கு அப்புறம் போய் பார்த்துட்டு வரணும்னு  நினைச்சுக்கிட்டிருந்தேன்..

ஆனா இதுவரை என் விருப்பம் நிறைவேறவே இல்லை..” என்றவன், என் பக்கம் திரும்பி “உள்ள வாங்க சார்..  வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?பையன் ஸ்டேட்ஸ்ல தானேஇருக்கான்..உங்க வீட்டுக்கு ஒருநாள் வந்து மாடத்தையும், உங்களையும் ஒண்ணா  நிக்கவச்சு நமஸ்காரம் பண்ணனும்.எப்படி எங்க விலாசம் உங்களுக்கு கிடைச்சது? ஒரு போன் பண்ணியிருந்தா நானே உங்க வீட்டுக்கு  வந்திருப்பேனே” என்றவனிடம் பூரா விபரம் சொல்ல, அவன் கொதித்து போனான்..”மெடிகல் ஷாப்பில் நேத்து நைட் பி.பி. மாத்திரை கேட்டப்ப  ஒண்ணுதான் இருக்கு..எடுத்துட்டு போங்க சார்…கடையை மூடினப்புறம் நான் எங்காவது அலைஞ்சு,பார்த்து, பாக்கி மாத்திரைகளை வாங்கிக்  கிட்டு காலைலய உங்க வீட்டுக்கே வந்து கொடுத்துடறேன் சொன்னான்..அதெப்படி உங்ககிட்ட கொடுத்து அனுப்புவான்..?மனுஷ தராதரம் விளங்க வேணாம் ஒருத்தனுக்கு!..விட்டேனா பாருங்க அவனை..என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் அவன்?” என்றவனை,மெல்ல சமாதானப்படுத்தி,  சமாதானப்படுத்தி, “ஒருத்தருக்கு உடம்பு நல்லா இல்லாதப்ப,அதுவும் உதவினு கேட்கிறப்ப,நான் யார், என் ஸ்டேடஸ் என்னனுலாம் கேட்க முடியுமா?  ஆனா இன்னைய காலையில் எங்க வீட்டிலும் யாரும் இல்லாதப்ப, அந்த சமயம் பார்த்து எனக்கும் பிரஷர் எகிறிப்போய், அத்தோட கடை,கடையாய்,  அலைஞ்சு அந்த மாத்திரையை வாங்கி வாயில் போட்டுக்கிட்டப்புறம்தான் நானே நார்மலுக்கு வந்தேன்.

அவன் என்னாண்ட உதவி கேட்டதுல    என்ன தப்பு..?அந்த அதிகாலை வேளையில், தான் முதல் நாள் ஒருத்தருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாத்த அவன் மனிதாபிமானத்துடன்  இந்த உதவி கேட்டான்..என்ன ஒண்ணு ..அவன் என் தோற்றத்தை, அதாவது வயசாகி, உடல் மெலிஞ்சு, நரை விழுந்து, மழிக்கப்படாத தாடி,  மீசை,எண்ணை வழியும் முகத்தோட காலங்கார்த்தாலே யார் முகத்தில் விழிச்சாலும் அங்கே கிடைக்கிற treatment இப்படித்தான் இருக்கும்..  ஆனானப்பட்ட அமரர் திரு கக்கனையே அவர் மருத்துவ சிகிச்சைக்கு அரசு மருத்துவ மனைக்கு போனப்ப கொசு,ஈக்கள் மொய்க்கிற பலர்  நடமாடற வராண்டாலதானே படுக்க வச்சிருந்தாங்களாம்..அவரும் தன்னை யாருனு  காட்டிக்கலையாம்..அப்புறம் மக்கள் திலகம் வந்து  பார்த்தப்புறம்தானே அவர் யாருனே மத்தவங்களுக்கு விளங்கிச்சாம்..த பாரப்பா! எனக்கொரு உதவி பண்ணுவியா?இதை இத்தோட விட்டுடு..  பாவம் சின்னப் பையன்.. அவன் நினைச்சிருந்தா,  “இந்த மாத்திரை எங்க கடையில் இல்லையே. வேற கடைகளில் பாருங்கன்னு சொல்லியிருக்கலாம்..ஏன் அவன் அப்படி சொல்லலை?வியாதியோட வீர்யம், வயசான ஒருத்தரை கடை,கடையா அலைய விட வேணாமேன்ற நல்ல எண்ணமும் ஒரு காரணமாய் இருக்கலாம்.. காலைல கடை திறந்ததும், தனியாளா அவன் இருந்ததால் உடனே உனக்கு மாத்திரை கொண்டு வந்து கொடுக்க முடியலைனு சொன்னான்.. ஆனாலும் எப்படியாச்சும்  உனக்கு டைமுக்கு மாத்திரையை கொடுத்துடணும்னுதான் எங்கிட்ட உதவி கேட்டிருக்கான்..

நான் முடியாதுனும், என்ன நினைச்சுக்கிட்டிருக்கே  என்னைப் பத்தினும் அவங்கிட்ட சண்டை போட்டிருக்கலாம்..நல்ல வேளையாய் அது என்ன அவசர மாத்திரைனு அந்த மருந்து சீட்டை வாங்கி  பார்த்ததும்தான் விளங்கிச்சு எல்லாமே எனக்கு..அதான் ஓடி வந்தேன்..அம்மா,நீங்களும் என்னை இப்படி பேசிட்டமேனு  வருந்த வேணாம்..  உங்க இடத்தில் யாராய் இருந்தாலும் இப்படித்தான் நடந்துப்பாங்க..”என்றேன்..

 

Series Navigationஉயிர்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *