தேனூரும் ஆமூரும்

This entry is part 11 of 19 in the series 30 மே 2021

வளவ. துரையன்

 

எட்டுத்தொகை நூலகளில் மூன்றாவதாகக் காணப்படுவது ஐங்குறுநூறாகும். இஃது அகத்துறை நூலாயினும் பண்டைக்காலத்தின் ஒரு சில ஊர்களின் பெயர்களின் பெயர்கள் இந்நூலில் விரவி வருவதைப் பார்க்க முடிகிறது.      

 

ஓரம்போகியார் பாடிய மருதத்திணையில் ஆறாம் பத்தாக தோழி கூற்றுப் பத்து விளங்குகிறது. இப்பத்தின் நான்காம் பாடலில் ‘தேனூர்’ எனும் ஊர் குறிப்பிடப்படுகிறது.

     

      ”திண்தேர்த் தென்னவன் நல்நாட்டு உள்ளதை

      வேனில் ஆயினும் தண்புனல் ஒழுகும்

      தேனூர் அன்னஇவள் தெரிவளை நெகிழ,

      ஊரின் ஊரனை நீதர, வந்த

      பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு

      அஞ்சுவல் அம்ம அம்முறை வரினே.”

 

பாண்டிய மன்னன் உறுதியான தேர்களை உடையவன்; அவன் நாட்டில் தேனூர் எனும் ஊர் உள்ளது. அங்குக் கோடைக்காலத்திலும் ஆற்று நீர் ஒழுகும். அப்படிப்பட்ட தேனூரைப் போன்றவள் தலைவி. அவள் அணிந்துள்ள வளையல் நெகிழும்படியாக நீ அவளுக்குப் பிரிவுத் துன்பம் தந்து சென்று விட்டாய். நீ இருக்கும் தெருவில் உன்னால் தரப்பட்ட பஞ்சாய்க் கோரை மாலை அணிந்த மகளிர் இருப்பர்; எனவே  நான் அங்கு வருவதற்கு அஞ்சுகிறேன்” என்று தலைவியின் தோழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

 

தலைவியைப் பிரிந்து பரத்தையர் இல்லம் சென்ற தலைவன் மீண்டு வரும்போது அவனுக்கு வாயில் மறுத்தத் தோழி கூறுவதாக இப்பத்தில் உள்ள எல்லாப் பாடல்களும் அமைந்துள்ளன. கோடைக்காலத்தும் வற்றாது நீர்ப் பெருக்குடைய பொய்கைகளை உடைய வளம் மிக்க தேனூர் போன்றவள் என் தலைவி எனத் தோழி கூறுகிறாள்.

 

பண்டைக்காலத்தில் தேனூர் எனும் பெயரில் ஒரு சில ஊர்கள் இருந்திருக்கின்றன. நடுநாட்டில் ஒன்றும், பாண்டிய நாட்டில் இரண்டும் இருந்ததாகக் கல்வெட்டுகள் வழி அறிய முடிகிறது. நடுநாட்டில் உள்ளது “பெண்ணைத் தென்கரை மகதை நாட்டுத் தென்கரைப் பழங்கூர்ப்பற்றுத் தேனூர்” என்று வழங்கப்பட்டு வந்துள்ளது. பாண்டிய நாட்டில் முதுகுளத்தூர்ப்பகுதியில்  திருமாலுகந்தான் கோட்டை என்பது பழங்காலத்தில் தேனூர் என்று சொல்லப்பட்டது. இவ்வூரைக் கல்வெட்டுகள் திருமரவுகந்தநல்லூர் என்றும், ஏழூர்ச் செம்பிநாட்டுத் தென்முனைப்பற்றுத் தேனூரான திருமாவுகந்த நல்லூர் என்றும், அளற்ற நாட்டுத் தேனூர் என்றும் குறிப்பிட்டுள்ளன. இதில் சொல்லப்படும் ஏழூர் திருநாவுக்கரசரால் பாடப்பெற்றதாகும்.

 

மதுரைக்கு அண்மையில் உள்ள திருவேடகத்துக்கு அருகில் ஒரு தேனூர் இருந்துள்ளது. இங்கு விளையும் வெற்றிலை மிகச் சிறப்பாக இருக்குமாம். திருஞான சம்பந்தர் இவ்வூரை “வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்தகத்தான் தேனூரான் செங்காட்டங்குடியான் சிற்றம்பலத்தான்”] [61-9] என்றும், பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார் வையையின் வடகரை மருவிய ஏடகம்” [290-6] என்றும் பாடுகிறார். இவ்வூரே சங்ககாலத்தேனூர் என்று பேராசிரியர் ஔவை சு, துரைசாமிப்பிள்ளை கூறுகிறார்.

 

இப்பாடலை அடுத்துள்ள ஐந்தாம் பாடலிலும்,

            ” கரும்பின் எந்திரம் களிற்றுஎ திர்பிளிற்றும்,

            தேர்வண் கோமான் தேனூர் அன்ன இவள்”

என்று தேனூரைச் சொல்லித் தலைவியின் அழகைத் தோழி கூறுகிறாள். தேனூரில் இருக்கும் கரும்பு பிழியும் ஆலைகளின் ஒலி ஆண்யானை பிளிறுவது போல ஒலிக்குமாம்.

 

ஏழாம் பாடலிலும்,

            ”பகலில் தோன்றும் பல்கதிர்த் தீயின்

            ஆம்பல்அம் செறுவின் தேனூர்”

என்று காட்டப்படுகிறது. சூரியனைப் போல விளங்கும் பல கதிர்களை உடைய ஒளியினையும் ஆம்பல் மலர்கள் நிறைந்த வயல்களையும் உடைய வளம் மிக்க தேனூர் என்பது இதன் பொருளாகும். இதேபோல் ஆறாம் பாடலில் ஆமூர் என்ற ஊர் குறிப்பிடப்படுகிறது.

 

            பகல்கொள் விளக்கொடு இராநாள் அறியா,

            வெல்போர்ச் சோழர், ஆமூர் அன்னஇவள்

            நலம்பெறு சுடர்நுதல் தேம்ப

            எவன்பயன் செய்யும்நீ தேற்றிய மொழியே”

 

பண்டைக்காலத்தில் இரவுக்காலத்தில் பெரிய அகல்களில் பெரிய திரி இட்டுத் தெருவில் விளக்குகள் ஏற்றி வைப்பார்கள். இவற்றைப் பாண்டில் விளக்குகள் என்று உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். மீண்டு வந்த தலைவனிடம், ”பாண்டில் விளக்குகளால் இருள் தெரியாத வெற்றி பொருந்திய சோழரின் ஆமூரைப் போன்றவள் என் தலைவி. நீ பிரிந்ததால் அவளின் நெற்றியின் ஒளி மழுங்கிற்று. இப்போது வந்து நீ தேற்றும் மொழிகளால் என்ன பயன்?” எனத் தோழி கேட்கும் பாடல் இது.           

 

”அந்தணர் அருகா வருங்கடி வியனகர், அந்தண் கிடங்கின் ஆமூர்” என்று சிறுபாணாற்றுப்படையும் [187-8], “இன்கடுங் கள்ளின் ஆமூர் என்று புறநானூறும் [80] காட்டும் ஆமூர்கள் ஒரு சில சோழநாட்டில் இருந்திருக்கின்றன.

 

தேனூர் மற்றும் ஆமூர் மட்டுமல்லாமல் இப்பத்தில் இருப்பை என்னும் ஊரும் காட்டப்படுகிறது. எட்டாம் பாடலில்.

            ”விண்டுஅன்ன வெண்ணெல் போர்வின்

            கைவண் விராஅன். இருப்பை அன்ன,

            இவள் அணங்கு உற்றனை போறி;

            பிர்ர்க்கும் அனையால்; வாழி நியே!”

 

இப்பாடலில் விராஅன் எனும் பெயர் கொண்ட வள்ளல் ஒருவன் காட்டப்படுகிறான். இவனைப் பரணர், “முனையெழத் தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன், மலிபுனல் வாயில் இருப்பை” [புறம்-391], என்றும், “தேர்வண் கோமான் இருப்பை”[நற்—260, 350] என்றும் குறிப்பிடுகிறார்.

 

”மலைபோல் உயர்ந்த வெண்ணெற் போர்களையும், வருவோர்க்கு வரையாது வழங்கும் விராஅன் என்ற வள்ளலுடைய இருப்பை என்னும் ஊரை ஒத்த என் தலைவியால் நீ துன்பம் உற்றனை போலும்; பிற மகளிரிடத்திலும் நீ இத்துன்பம் அடைவாய்; நீ வாழ்க” என்பது தோழி கூற்றாகும்.

 

இவ்வாறு தோழி கூற்றுப் பத்து அக்காலத்தின் ஒரு சில ஊர்களைக் காட்டிச் சிறந்து விளங்குகிறது எனலாம்.

 

Series Navigationமுதுமைநேரு எனும் மகா மேரு !
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *