ஜனநேசன்
கொரோனா முடக்க காலம். சமீபத்தில் தான் வங்கிகள் இயங்க அனுமதிக்கப் பட்டன . வங்கியில் கூட்டம் இல்லை ஒன்றிரண்டுபேர் வருவதும் போவதுமாக இருந்தனர். மேலாளர் வெங்கடேசன் தன் முன்னால் உள்ள காமிரா கண்காணிப்புத் திரையில் ஒரு கண்ணும் , கணினி திரையில் விரிந்த கடன்கணக்குப் பட்டியலில் ஒரு கண்ணுமாய் இருந்தார். எந்தத் தொழிலும் நடக்காமல் முடங்கி கிடக்கும் நிலையில் , கடன் நிலுவை வட்டிகளை குட்டிப்போட்டுக் கொண்டே இருந்தன. பந்து அடிப்பவனையும் ,பிடிக்க முயல்பவனையும் தாண்டி பந்து போகும் இடத்தையும் பார்த்து பார்த்து கழுத்துவலி ஏற்பட்ட நடுவர் நிலைதான் அவருக்கு . பிடறியைத் தடவிக் கொண்டார். என்ன செய்வது ஏற்றுக்கொண்ட பொறுப்பு செய்துதான் தீரவேண்டும்.
முதன்மை கணக்காளர் வந்து தலை சொறிந்து நின்றார். “ வாங்க சார் , என்ன பிரச்சினை , தயங்காம சொல்லுங்க. “ “ ஒண்ணுமில்லை சார். அந்த அலையன்ஸ் விசயமா நான் சொன்னதில் ஒரு சிறு பிரச்சினை. நான் சொன்னது மாதிரி அந்த குடும்பம் நல்ல வசதியான குடும்பம் தான் . அப்பா அம்மாவும் நல்ல தரமானவங்க தான். அந்த மாப்பிள்ளை பையனும் நல்ல லட்சணமான பையன்தான். இப்போ ஒரு வார காலமா ஒரு மாதிரியான வீட்டுப் பக்கம் திரிகிறான் என்று நேற்று ராத்திரி ஒரு தகவல் வந்தது. அந்தப் பொண்ணும் இந்த ஊரிலே பிரபலமா பேசப்படும் விலைமாது குடும்பமுன்னு தகவல். அதனால கொஞ்சம் விரிவா விசாரிச்சுட்டு அடுத்த கட்டம் பேசலாமுன்னு உங்க நண்பருக்கு சொல்லி வையுங்க. நானும் இன்னும் கூடுதலா விசாரிச்சு சொல்றேன். “
மேலாளர் வெங்கடேசனுக்கு பிடறிவலி போய் தலைவலி வந்தது போலானது.“பரவாயில்லை சார். முன்னதாகத் தெரிந்தது நல்லதாகப் போச்சு. ரொம்ப நன்றி. நீங்களும் வேறுவேறு ஆளுக மூலம் விசாரிங்க. பெண்ணு , மாப்பிள்ளை ரெண்டு குடும்பங்களும் ஆர்வமாக இருக்காங்க. நம்மால முடிந்த உதவியைச் செய்வோம்.” என்று சொல்லி அனுப்பினார் . இருவீட்டாரும் ஏன் இப்படி அவசரப் படுகிறார்கள் தெரியவில்லை. கொஞ்சம் நிதானமாகச் செய்யலாம். பதறாத காரியம் சிதறாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே.
பெண்ணின் அப்பா பிரபாகர் இவரது நெடுநாள் நண்பர். சிவகங்கை யில் இதே கனராவங்கிக் கிளையின் மேலாளராக இருக்கிறார். கடந்த வாரம் இவர் ஊருக்குப் போயிருக்கும் போது பிரபாகரன் இவரது வீட்டுக்கு வந்திருந்தார். கும்பகோணத்திலிருந்து தன் பெண்ணுக்கு ஒரு வரன் வந்திருக்கிறது. மாப்பிளையின் அப்பா அந்தப்பகுதியில் பெரிய அளவு விவசாயம் பண்றாராம் . மூன்று பஸ்கள் ஓடுது. சீவல்பாக்டரி வைத்து முன்னூறு ஆளுகளுக்கு வேலை கொடுக்கிறார். மாப்பிளை பையன் பிரகதீஷ் டிகிரி படிச்சிட்டு அப்பா பிஸ்னசுக்கு உதவியா இருக்காராம். பையன் பார்க்க நல்லா இருக்காரு. பெண்ணுக்கும் பிள்ளைக்கும் ஜாதகப் பொருத்தமும் நல்லா இருக்கு. இந்தக் குடும்ப விவர உண்மைத் தன்மையை நம்ம கிளை ஆளுகள் மூலம் விசாரிச்சு சொல்லணும் என்றார்.
வெங்கடேசனும் தனது வங்கி முதன்மைக் கணக்காளர் மூலம் விசாரித்த வரையில் பிரபாகரன் சொன்ன தகவல்கள் உண்மை தான் என்று தெரிய வந்ததைச் சொல்லிவிட்டார். ஜாதகத்தில் தொடங்கி, போட்டோ ஆல்பங்கள் பரிமாறி பெண்ணு, மாப்பிள்ளை வீடுகள் பார்க்கும் கட்டத்துக்கு நகர்ந்து விட்டது. இப்போது மாப்பிளையைப் பற்றி மாறுபட்ட தகவல் வருகிறதே , இதை நாசுக்காய் சொல்ல வேண்டுமே …என்ற யோசனை பிழிந்தது.
“ சார் வணக்கம் . உள்ளே வரலாமா “ என்ற இனியகுரல் கண்ணாடி அறைக்குள் நுழைந்து அவரை நிமிர்த்தியது. ஒரு முறை பார்த்தவுடன் மீண்டும் பார்க்கத் தூண்டும் தோற்றம்.! அனிச்சையாகத் தலையிசைத்து முகக்கவசத்தை சரி செய்து கொண்டார். அந்தப்பெண்ணின் வாயை முகக்கவசம் மறைத்தாலும் அரும்பிய புன்னகை அகன்று விரிந்த கண்களில் ஒளிர்ந்தது. எனினும் முகத்தில் சோகச்சாயல் கவ்வி இருந்தது. அவள் இருக்கையில் உட்காருமுன்னே அவரது மனசுக்குள் உட்கார்ந்து விட்டாள்.!
“ சொல்லுங்கம்மா. உங்களுக்கு என்ன வேணும்.? “
“ சார் எனக்கு இந்த பேங்கில் சேமிப்புக்கணக்கும் , டெபாசிட் கணக்கும் இருக்கு…..”
“ சொல்லுங்கம்மா. உங்களுக்கு என்ன செய்யணும். ?“
“ சார் ,கொஞ்சம் பெர்சனல் ……நீங்கதான் உதவணும் “
“ சொல்லுங்கம்மா, பேங் மூலமா என்ன செய்யணும்.? “
“ சார், பிரகதீஸ் என்கிற பையனுக்கு நீங்க பொண்ணு பார்த்திருக்கிறதா அந்தப் பையன் சொல்லுச்சு. அவன் இப்போ கல்யாணம் பண்ணும் நிலையில் இல்லை. அதை விளக்கமா இங்கே பேசமுடியாது. விரிவா தெரிஞ்சுக்க விரும்பினா சொல்லுங்க. நாம வெளியே எங்காவது போய் பேசுவோம். இந்தாங்க இது என் போன்நம்பர். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பேசுங்க. தேங்க்ஸ். நான் வர்றேன் சார்.” என்று ஒரு சிறிய தாளைக் கொடுத்து எழுந்து போனாள். வந்து போனது தென்றலா புயலா தெரியவில்லை. அவள் போகும்போது பார்த்தார். அவளது நீண்டபின்னல் அவளது வனப்புக்கு அழகூட்டியது. அவளது உருவம் மனது முழுவதும் வியாபித்து நின்றது. எதிரே காபி கொண்டுவந்த பையன் ஒதுங்கி நின்றான். அவன் கொடுத்த கசந்த காபி மனதுக்குள் உற்சாகத்தை சுரந்தது. மனக்குதிரையை அடக்கி மாதாந்திர பற்றுவரவு நிலுவை அறிக்கையை தயாரிக்கும் வேலைக்குள் பிரவேசித்தார் மாலை பணிமுடியும் நேரம் முதன்மைக் கணக்காளர் சொன்னார் , ” இன்னைக்கு காலையில் உங்களை வந்து பார்த்த பெண்கிட்டதான் அந்த மாப்பிளை பையன் பிரகதீஸ் சிக்கியிருக்கிறானாம் . கவனமா நடந்துக்குங்க .நாமளும் வாலிபத்தின் கடைசி படிக்கட்டில் இருக்கிறோம். வழுக்கி விழுந்தால் எழுந்திருக்கிறது கஷ்டம் “ என்று சிரித்தார்.
வெங்கடேஷனுக்கும் சிரிப்பு வந்தது ; “ நமக்குதான் அவுங்க வாடிக்கையாளர். நாமில்லங்கிற நினைப்பு இருக்கு. கவலைப் படாதீங்க. “ என்று பேசிக்கொண்டே கிளம்பினார்.
இரவு எட்டுமணி வாக்கில் பிரபாகரே போன் பண்ணினார். “ வெங்கடேஷ் ரொம்ப நன்றி. நீ விசாரிச்சு சொன்னது பரமதிருப்தி. பெண்ணு மாப்பிள்ளை சாதகத்தை வேறொரு ஜோசியரிடமும் காட்டினோம். பத்து பொருத்தமும் பொருந்தி வருது. இந்த இரு ஜாதகருக்கும் கல்யாணம் செய்யலாம் என்றார். நம்மப் பொண்ணு போட்டோவை பார்த்ததும் அவுங்களுக்கு பிடிச்சுக்குச்சுன்னாங்க . அவுங்க மெயிலில் அனுப்பின பையன் போட்டோ ஆல்பம் நமக்கும் பிடுச்சுகிச்சு. இதில வேடிக்கை என்னன்னா அந்த பையனும் காலேஜ் நாடகத்தில ராணி வேஷத்தில் நடிச்சிருக்கு. வேஷம் அவ்வளவு பாந்தமா பொருந்தி இருக்கு. நம்ம பொண்ணு பிரியாவும் காலேஜ் நாடகத்தில் ராஜாவா நடிச்சிருக்கு. வேஷம் கச்சிதமா பொருந்தி இருக்கு. வாழ்க்கையும் பொருந்திப் போகும். ! ஒரு முறைக்காக நாங்க ஞாயிறுக்கிழமை மாப்பிளை வீடு பார்க்க வர்றோம். நீ தயவுசெய்து இங்க ஊருக்கு வந்திராம கும்பகோணத்திலே இரு. காலையிலே பதினோருமணிக்கு வந்துருவோம். பார்த்து பேசிட்டு பன்னிரண்டுமணி வாக்கில நாம ஊரு திரும்பிருவோம். உன்மருமக பிரியாவுக்காக இந்தச் சிரமத்தை பொறுத்துக்கணும். “ என்றவர் இவரை பேசவிடாமல் போனை அவரது மனைவியிடம் கொடுத்துவிட்டார்.
“ அண்ணே, வணக்கம். உங்க உதவியை மறக்க முடியாது. கொஞ்சம் சிரமம் பார்க்காகாம , நீங்க கும்பகோணத்திலேயே இருங்க. நாமெல்லாம் சேர்ந்து மாப்பிளை வீட்டுக்கு போய் பார்த்து பேசிட்டு பனிரெண்டு மணிக்கே திரும்பிருவோம். சிரமத்துக்கு கொஞ்சம் பொறுத்துக்குங்க அண்ணே . இந்தாங்க அவருகிட்ட பேசுங்க ”என்று போனை பிரபாகரிடம் கொடுத்தாள்.
“ பிரபாகர் என்ன மின்னல் வேகமா இருக்கு. மருமக பிரியாவுக்கு சம்மதமான்னு கேட்டீங்களா “
“ அது சின்னப்பொண்ணு என்ன சொல்லும். பெத்தவங்க சொல்லறதை கேட்கிறவதானே “
“ அப்படி இல்லை பிரபா, நம்ம தலைமுறைப் பொண்ணில்லை, பிரியா . இந்தத் தலைமுறை பொண்ணு. அதுவும் ஒருபேங் ப்ரோபசனருக்கு மாப்பிள்ளை எப்படி இருக்கணுமுன்னு ஆசை இருக்குமுல்ல. கல்யாணத்துக்கு முன்னால இதெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கிறது நல்லது. பொண்ணு விருப்பதோட செய்யிறதுதான் நல்லது. நீ பிரியாவைக் கலந்துகிட்டு சொல்லு. நானும் அந்தப் பிரகதீசைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவா விசாரிச்சுக்கிறேன். ‘ என்று கைப்பேசியைத் துண்டித்தார்.
நண்பருக்கு உதவறேன்னு உபத்துரவத்தில் மாட்டிக் கொண்டோமோ. சரி , தலையிட்டு விட்டோம் . சிக்கலை அவிழ்க்கப் பார்ப்போம்.
வானதிக்கு போன் செய்து, நாளை மாலை பிரகதீஷ் விசயமா பேசலாம் என்று நினைக்கிறன். எங்கே சந்திப்பது என்ற விவரத்தை சொல்லவும் என்று கூறினார். ”இந்தக் கொரோனா தளர்வு காலத்தில் யாரும் வராத இடம் தாராசுரம் கோயில் தான் . அங்கே போய் ஆறஅமர பேசலாம். நான் சரியாக ஆறுமணிக்கு தெற்கு தாலுகா போலிஸ் ஸ்டேசன் தாண்டி தஞ்சாவூர் ரோடு திரும்பும் இடத்தில் நிற்கிறேன். வயலட் கலர் சேலை கட்டியிருப்பேன் . சரியாக ஆறுமணிக்கு வந்திருங்க , அந்த இடத்தில் ஐந்து நிமிசத்துக்கு மேல் நிற்பது பொருத்தமா இருக்காது.” என்று வானதி சொன்னதை வெங்கடேசன் ஒப்புக்கொண்டார்.
கும்பகோணத்தில் பணியில் சேர்ந்தது முதலே தாராசுரம் போக நினைத்தார். வாய்க்கவில்லை. அது நாளைக்கு தான் குதிருது. அதுவும் அற்புத சிலைகள் நிறைந்த இடத்தில் ஓர் உயிர்ச் சிலையோடு அமர்ந்து பேசப்போறோம் என்ற நினைப்பு எழும்போது நாக்கைக் கடித்தார். நமக்கே இப்படி தடுமாற்றம் என்றால் அந்த இளைஞன் பிரகதீஷ் பாடு எப்படியோ. அவனிருக்கட்டும் , நம் வயசென்ன, சமூக அந்தஸ்து என்ன , ஒரு விலைமகள் என்று சொல்லப்படுபவளோடு பேசுவதில் அப்படி என்ன துடிப்பு. நம் நிலையில் இருந்து இறங்கியிறாமல் தாமரை மொட்டுபோல் விலகி நிற்க வேண்டும். என்ற ஓடிய சிந்தனையை கைப்பேசி சிணுங்கல் அறுத்தது. கைபேசியைப் பார்த்தார் . பெயரில்லா அழைப்பு. புதிய எண்ணாக இருக்கிறதே என்று கைபேசியை இயக்கினார். “ ஹலோ அங்கிள் நான் பிரியா பேசறேன். சாரி அங்கிள் உங்களுக்கு தொல்லை கொடுக்கிறேன். தப்பா நினைக்காதீங்க. அந்த கும்பகோணம் மாப்பிளை எனக்கு பிடிக்கலை,. என்னளவுக்கு படிக்கவுமில்லை; வேலையும் பார்க்கவுமில்லை. எனக்குத் தெரிஞ்ச வரையில் பிஸ்னஸ்மேன்கள் பிஸ்னஸ்ன்னு திரிவாங்களே தவிர மனைவி, பிள்ளைகள் பாசத்துக்கு நேரம் ஒதுக்கமாட்டாங்க. அதுவுமில்லாம அந்தப் பையன் முகத்தில் ஆண்மைக்கான கம்பீரமில்லை. எனக்கு இஷ்டமில்லாதவனை கட்டிவைக்க வேண்டாம். உங்க பிரண்டுகிட்ட நீங்கதான் பேசமுடியும். அவரு ஜாதகக் கட்டங்களையும் , அவுங்ககிட்ட இருக்கிற பணவசதிகளை மட்டுமே பார்க்கிறார். எனக்கு பிடிச்சிருக்கான்னு நினைக்க கூட மாட்டேங்கிறார். எப்படியாவது உங்க பிரண்டுகிட்ட சொல்லி வேற மாப்பிளையைப் பார்க்கச் சொல்லுங்க. சாரி அங்கிள் உங்க ஓய்வுநேரத்தில் தொந்தரவு கொடுத்திட்டேன் “ என்று இவர் பதிலைக்கூட கேட்காமல் பேச்சை துண்டித்து விட்டாள் . திடீரென்று தாக்கிய கோடைமழை போலிருந்தது. ஆனாலும் பிரியாவின் பேச்சிலிருந்த ஆதங்கம் , அழுத்தம் அவரது தூக்கத்தை துரத்தியது. வானதியும் , பிரியாவும் மனதில் தோன்றி அவரை இருமுனைகளில் பிடித்து பிழிந்தார்கள். உலர்ந்து போனவர், மரம் சும்மா நின்றாலும் காற்று விடுவதில்லை என்று நினைத்தபடியே புரண்டார். எப்போது உறங்கினார் என்றறியார்.
அன்றைய வங்கிப்பணிக்கு இறக்கை முளைத்துக் கொண்டது . இணைய இடறலோ , தலைமை அலுவலகத் தொல்லையோ இல்லை. ஐந்து மணிக்கு வெங்கடேசன் வெளியே வந்துவிட்டார் . அறைக்குச் சென்றதும் குளித்து, பிடித்த உடை பூண்டு , வசந்தபவனில் சிறுபலகாரம் ,காபி சாப்பிட்டு, வாடகைக்கார் பிடித்தார்..ஆறுமணிக்கு குறிப்பிட்ட இடத்துக்குப் போனார். இடப்புறமாக அவள் நின்றிருந்தாள். அவளைப் பின்சீட்டில் ஏற்றிக்கொண்டார். வண்டிக்குள் சுகந்தம் வீசியது. அடுத்த நொடியில் தாராசுரம் கோயில் முன் நின்றது. இன்று காலத்திற்கு ஏன் இறக்கை முளைத்தது என்று தெரியவில்லை. காரை அனுப்பி விட்டார். கோயிலுக்குள் ஒரு தேவதையோடு நுழைவதுபோல் உணர்வு.
அவருக்கு தாராசுரம் கோயிலில் சிற்பங்களின் நுட்பத்தை ரசிக்க ரொம்பநாள் ஆசை . ஆனால் விரையும் காலத்தை உறைய வைத்திருக்கும் கற்சிற்பங்களுக்கு மத்தியில் உயிர் சிற்பத்தோடு இருந்து பேசவேண்டிய நிலை.! கற்சிற்பத்தைக் காண நேரமில்லை. அவர் சிந்தனை எல்லாம் அவள் சொல்வதை அறியவே அலைந்தது. கோயிலுக்குள் இடவலமாக வந்து அவர்கள் எதிரெதிரே அமர்ந்து பேச இடம் தேர்ந்தனர். அந்தியின் இருள்திரைக்கு ஒத்திசைப்பது போல் மங்கலான விளக்கொளிர்ந்தது . அக்கோயிலுக்குள் காண்பதெல்லாம் ஓர் ஒத்திசைவில் இருப்பதாக உணர்ந்தார். அவள் பின்னலை முன்னால் மடியில் போட்டுக்கொண்டாள் .மலைமுகடுகளுக்கு எழில் கூடியது. ஊடுருவிப் பார்ப்போரை எச்சரிக்கும் சாட்டையைப் போலவும் தோன்றியது.
முகக்கவசத்தை வாய்க்கு கீழே இறக்கிவிட்டு வானதியே பேச்சைத் தொடங்கினாள்; “ பிரகதீசைப் பத்தி சொல்றதுக்கு முன்னால் என்னைப் பத்தியும் நீங்க தெரிஞ்சிக்கணும் . ஊருக்குள்ளே என்னைப்பத்தி பல கதைகள் நித்தம் நித்தம் உலவுது. என்னைச் சுற்றி ஓயாமல் பல கண்கள் மேய்ந்துகிட்டே இருக்கு. பல வாய்கள் மென்னுகிட்டே இருக்கு. காரணம் நடனம் , சங்கீதமுன்னு ஒரு மரபான குடும்பத்திலிருந்து வந்த நான் யார் வலையிலும் சிக்காமல் இருக்கிறேன். என் தாத்தா தட்சிணாமூர்த்தி இருபதுவயசிலேயே வேதாரண்யத்தில் உப்புசத்தியாகிரகப் போராட்டத்தில் ராஜாஜி தலைமையில் ஈடுபட்டவர்களில் முன்னோடியானவர். நல்ல சாரீரத்தோடு பாரதியின் தேச எழுச்சிப் பாடல்களயும் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் பாடல்களையும் பாடுவார். தானே மெட்டுக்கட்டியும் பாட்டுகளை பாடும் திறமையும் உண்டு. நிமிர்ந்த சரீரமும் உண்டு. அதனால் அவரை அந்த போராட்டத்தில் முன்னணியிலே வைத்திருந்தனர் . வேதாரண்யத்தில் உப்பு எடுக்க முயற்சிக்கும் போது போலிஸ் அடித்ததில் இடக்கை முறிந்துபோன நிலையிலும் சோராத குரலும் , தளராத உடல்வாகும் இருந்ததால் சுதந்திரம் அடையும் வரையில் முதல் வரிசையில் இருந்தார். பிறகு எங்கள் மீது திணிக்கப்பட்ட சாதியடுக்கில் பின்னுக்கு தள்ளப்பட்டார். அரசை எதிர்த்து போராடும் அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. நாற்பது வயதில் சொந்த சாதியில் சாதிய நடைமுறைக்கு உதவாதவர் என்று ஒதுக்கப்பட்ட காலூனமுற்ற பெண்ணை மணந்தார்.
பெற்ற சுதந்திரம் நீடிக்க சுயமரியாதை முக்கியம் தானே , தாத்தா, பெரியார் வழியில் சமூகமாற்றத்திற்கு போராடுவோரோடு இணைந்தார். தாசிமுறை ஒழிப்பு, பால்யமணம் தடுப்பு, விதவை மறுமணம் ஊக்குவிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். எனது பாட்டி , தெய்வகுத்தம் வந்துரும் என்று ,பயமுறுத்தியும் சாதி வழக்கத்துக்கு உட்பட அம்மா மறுத்து விட்டார். அம்மாவும் தனது மரபார்ந்த ஆடல்,பாடல் திறனை சுயமரியாதை இயக்கப் பிரச்சாரங்களில் பயன்படுத்தினார் . அம்மா இருபத்தைந்து வயசில் தாத்தாவின் சீடரை முத்துலட்சுமி ரெட்டி, பெரியார் போன்றோர் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார்.
ஆனாலும் என் பெற்றோர் மறுத்த சடங்குகளுக்குள்ளே என்னை இந்த சமூகம் தள்ளப் பார்க்கிறது. இந்த சடங்குமறுப்பு போராட்டத்தின் கடைசிக்கண்ணி நான். பள்ளிப்பருவ காலத்திலேயே பக்கத்து தெருவில் வசித்த எம்.வி.வெங்கட்ராம் அய்யா கையெழுத்து போட்டுக்குடுத்த நித்தியகன்னி , வேள்வித்தீ நாவல்களை வாங்கி படித்தேன் . கரிச்சான்குஞ்சுவின் பசித்தமானுடம் நாவலை அவர் கையெழுத்து போட்டுக் கொடுத்ததையும் படித்தேன் .ஜானகிராமனின் அம்மா வந்தாள், மோகமுள், மரப்பசு நாவல்களையும் படித்து இருக்கிறேன். அவுங்க மூணுபேரது நாவல்களும் எனக்கு காதலுக்கும் , காமத்துக்கும் உள்ள வித்தியாசத்தை, குடல்பசிக்கும், உடல்பசிக்கும் உள்ள வித்தியாசத்தையும் உணர்த்தின.
என் உடலை விரும்பி வருகிறவர்கள் தரும் பணத்தை அவர்களைக் கொண்டே குடற்பசி தீர்க்கும் வடலூர் சத்திய ஞான சபைக்கு வங்கிச்சலானில் செலுத்த எழுதுவிப்பேன். பிறகு எதிரமர்ந்து அவர்களின் அறிவுப் பசியைப் போக்க முயல்வேன் . நினைத்தது நிறைவேறாது எரிச்சலுற்ற அவர்கள் மிரண்டோடுகிறார்கள். என்னைப் பற்றி வக்கிரத்துடன் வதந்தி பரப்புகின்றனர் . உடலை விரும்புபவர்களைத் தவிர்த்து என் மனதை விரும்புபவரையே ஏற்பேன் என்று முப்பத்தைந்து வயதிலும் காத்திருக்கிறேன் . என் பிடிவாதத்தை தகர்க்க என்னால புறக்கணிக்கப்பட்டவர்களும், எப்படியாவது என்னை நுகரத் துடிப்பவர்களும் ஓயாது கதைகளைப் பின்னிக் கொண்டே இருக்கிறார்கள். உங்களையும் என்னையும் சேர்த்துப் பேசினாலும் ஆச்சர்யமில்லை . “ முகவாய்க்கு கீழே சரிந்த முகக்கவசத்தை சரிசெய்து கொண்டாள் . கோயிலின் சுற்றுச்சுவருக்கு அப்பாலிருந்து ஒளிரும் சோடியம் விளக்கின் செம்மஞ்சள் ஒளி சுற்றச்சுவரை ஒட்டிய மரக்கிளை அசையும் போதெல்லாம் ஊடுருவி அவள் மீது பட்டு பட்டு முகத்தில் வெளிப்படும் உணர்வுகளுக்கேற்ப வர்ணஜாலம் செய்தது. அவருக்கு வானதியுடன் மாயவுலகத்தில் உலவுவது போல் உணர்வு . “ இனி பிரகதீஷ் விஷயத்துக்கு வருவோம். அப்பா இறந்ததும் குடந்தை ஜோஸ்யர் தெருவிலிருந்த வீட்டை விற்றுவிட்டு பக்தபுரி தெருவில் ஒரு சிறுவீட்டை வாங்கி குடிவந்தோம். அங்கிருந்தே தென்னிந்தியாவின் கேம்ப்ரிட்ஜ் என்று சொல்லக்கூடிய அரசு ஆண்கள் கல்லூரியில் எம் எஸ் சி கம்ப்யுடர் சைன்ஸ் படித்து முதல்வகுப்பில் தேறினேன். ஆற்றில் தண்ணீர் நிறையப் போகும் போது அந்த மூன்றடி பாலத்தில் கல்லூரிக்கு நடந்து போவதே தனி அனுபவம். அந்தக் கல்லூரியிலேயே கௌரவ விரிவுரையாளர் பணி கிடைத்தது. மாணவர்கள் ,சக ஆசிரியர்கள் ஊடுருவல் பார்வைக்கு விருந்தாவது எனக்கு பிடிக்கவில்லை. பணிவோடு மறுத்துவிட்டேன். மென்பொறி துறையில் பெங்களூரில் , சென்னையில் வேலைகள் கிடைத்தன. மரணத்தின் விளிம்பில் இருந்த அம்மாவை அழைத்து போக இயலாத நிலையில் அந்த வேலைகளுக்கும் போகவில்லை.
எனக்கிருந்த கணினி நுட்ப அறிவைக் கொண்டு விளம்பர வடிவமைப்பு., செயல்திட்டம் தயாரித்து தருதல், புத்தகங்கள், கல்யாண அழைப்புகளுக்கான வடிவமைப்பு போன்றவற்றை செய்து கொடுத்து வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்வை நடத்தி வருகிறேன்.. கடந்த வருஷம் அம்மா இறந்ததும் தான் எனக்கு வெளியிலிருந்து தொல்லைகளும், துரத்தல்களும் அதிகம் . எனது சமயோசித அறிவுகொண்டு யாரையும் அண்டவிடாமல் பார்த்து வருகிறேன்.
பிரகதீஷ் தனது சீவல் கம்பனி, டிராவல்ஸ் கம்பனி விளம்பர வடிவமைப்பு செய்வதற்கு அடிக்கடி வருவான். கடந்த வாரம் ஒரு நாள் ராத்திரி ஒன்பதுமணி வாக்கில் கதவைத் தட்டினான். விளம்பர வடிவமைப்புக்கு கொடுத்துவிட்டுப் போக வந்திருக்கிறான் என்று கதவைத் திறந்தேன். போதையில் தள்ளாடியபடியே எனது சேலையை பிடித்து இழுத்து இன்னைக்கு நீ வேணுமுன்னு மேல விழ வந்தான். அவனை உதறி கன்னத்தில் ஓங்கி அறை விட்டதும் மயங்கி கீழே விழுந்தான். தண்ணீர் தெளித்து கண் விழித்ததும் இருகன்னங்களிலும் அறைந்தேன். நிதானத்திற்கு வந்தான். அழுதான். குடிகாரர்களின் அழுகைக்கு இரங்கக்கூடாது என்று , நீ வெளியே போறீயா, போலிசை வர வைக்கவா ? என்று மிரட்டினேன். என்காலில் விழுந்து , “ அக்கா மன்னிச்சிருங்கக்கா. இந்த ஒருவாரமா எங்க வீட்டில என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு வருத்துறாவோ .எனக்கு கல்யாண ஆசையே இல்லை. என் சேக்காளிக நீ ஆம்பிளையான்னு கேட்கிறானுவோ . உங்களை மாதிரி அழகானவங்களைப் பார்க்கிறப்போ , உங்களை மாதிரி டிரஸ் பண்ணி அலங்காரம் பண்ணிக்கவும் ஆசைவருது. ஆனா திருநங்கையா மாறவும் இஷ்டமில்லை. எங்க வீட்டுக்கு தெரிஞ்சா அம்மாவும், அப்பாவும் நாண்டுக்குவாக. என் சேக்காளி ஒருத்தன் சொன்னான்; பிள்ளே , நல்லா தண்ணியைப் போட்டுட்டு உனக்குப் பிடிச்ச பொம்பளையோட படுத்து புரளு . நீ ஆம்பிளையா நடந்துக்க அவுங்களே சொல்லிக் குடுத்துருவாக. என்று உங்க பேரைச் சொல்லி உங்ககிட்டப் போகச் சொன்னான். அதான் வந்தேன்.. என்னை மன்னிச்சிருங்கக்கா. நான் என்ன செய்யணும் சொல்லுங்கக்கா “ என்று விம்மினான்.
எந்த ஆம்பிளையும் சொல்லத் துணியாததை சொல்றானே !. எனக்கு வந்த ஆத்திரமும் , சிரிப்பும் அடங்கிப்போனது . ‘ உன் ஆண்தன்மையை நீயே தெரிஞ்சிக்கலாம். அந்த உணர்வு உனக்கு பத்தாம்வகுப்பு படிக்கும்போதே வந்திருக்கும். இப்போ நீ பொம்பளைக மாதிரி துணிமணி உடுத்தி அலங்காரம் பண்ண விரும்பறேன்னு சொல்றதிலிருந்து உனக்கு ஆண்தன்மை குறைஞ்சிருக்குன்னு தெரியுது. இதுக்கான டாக்டர்கள் தஞ்சாவூர் , திருச்சியில் இருக்காங்க. அங்கே நீ மட்டும் போய் தெரிஞ்சிக்கலாம். .குறைபாடுகள் இருந்தா தீர்க்க வழிவகை இருக்கானு பார்க்கலாம் .என்றேன்.
‘ ஐயோ அக்கா அதெல்லாம் வேணாம்க்கா . எனக்கு காரைக்குடியில் பேங்கில வேலை பார்க்கிற ஒரு பொண்ணை பார்த்திருக்காங்க. அது உங்களை மாதிரி லட்சணமான பொண்ணா போட்டோவில தெரியுது. அந்தப் பொண்ணைக் கட்டிக்கிட்டு எங்க இரண்டுபேரோட வாழ்க்கையையும் நரகமாக்க விரும்பலை. அந்தப் பொண்ணு வீட்டுக்காரங்களை என்னை மாப்பிளை பார்க்க வராமத் தடுக்கணும். நம்மூரு கனராபேங் மேனஜர் தான் இந்த ஏற்பாடு பண்ணி இருக்கிறார். அவுங்க வர்றதைத் தடுத்து , என்னை இந்த அவமானத்திலிருந்து காப்பாத்துங்கக்கா. இதை என்னைப் பற்றி புரிஞ்ச உங்களைத் தவிர வேற யாருகிட்டேயும் நான் சொல்லமுடியாது. கொரோனா முடிஞ்சு ரயிலுக ஓட ஆரம்பிச்சுருச்சுன்னா வடக்கே கண்காணாத ஊரில் எதாவது ஆஸ்ரமத்தில் சேர்ந்து மனுசனா எளியவங்களுக்கு தொண்டு செஞ்சு வாழ்நாளைக் கழிச்சுருவேன்.’ என்று கெஞ்சறான். “
ஒரு செருமல் சத்தம் கேட்டது. “ காவலாளி கோயிலைப் பூட்டுவதற்கு நேரமானதை உணர்த்துறாரு. “ என்று எழுந்தாள் .அவள் தேவதையை விட உயர்ந்தவளாகத் தோன்றினாள்.
- பெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும்
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பூகோளச் சூடேற்ற உஷ்ண எச்சரிக்கை வரம்பு அடுத்து வரும் ஐந்தாண்டில் நேரலாம்.
- பொருத்தம்
- லாங்ஸ்டன் ஹியூக்ஸ் கவிதைகள்
- அந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு
- இலக்கியம் படைக்கும் கவிஞர்கள் இலக்கியம் படிக்க வேண்டுமா?
- ‘‘ஔவை’’ யார்?
- கவிதையும் ரசனையும் – 17
- முதுமை
- தேனூரும் ஆமூரும்
- நேரு எனும் மகா மேரு !
- நீ ஒரு சரியான முட்டாள் !
- சொல்வனம் 246 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- யாதுமாகியவள்……
- ஊமையின்மனம்
- குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள்
- மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர் சண்முகம் சபேசன் ( 1954 – 2020 ) மே 29 நினைவு தினம் சபேசனின் மறைவுக்குப்பின்னர் வெளியாகும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் !
- சிற்றிதழ் சிறப்பிதழ்