லாங்ஸ்டன் ஹியூக்ஸ் கவிதைகள்

This entry is part 5 of 19 in the series 30 மே 2021

தமிழில் :ஸிந்துஜா

 

 

முன்னோட்டம்:

ருபதாம் நூற்றாண்டில் லாங்ஸ்டன் ஹியூக்ஸுக்கு இணையான மாபெரும் கவிஞனைக் காண்பது அரிது. அவர் மேற்கு ஆசியாவிற்குக் 

கப்பலோட்டினார். தென்னமெரிக்கா முழுவதையும் சுற்றி வந்தார். உள்நாட்டுப் போரைப் பற்றி எழுத ஸ்பெயினுக்குச் சென்றார். 1930களில் கம்யூனிஸ்ட்  கட்சிக்கு உழைத்தார்.. 1960களில் நாடறிந்த மனிதராக எழுச்சி பெற்று நடமாடினார்.  அவர் காலத்துக்கு முன்னால் கண்டிராததும், 

மேதைமை மிகுந்ததுமான படைப்புகளை உருவாக்கினார். எழுத்தை நம்பி வாழ்க்கையை நடத்திய மிகச் சில கறுப்பினக் கவிஞர்களில் அவரும் ஒருவர்.  நாவல்கள். நாடகங்கள்.சிறுகதைகள்.திரைப்படங்கள், இசை, மழலையர் பாடல்கள், மொழிபெயர்ப்புகள், வாழ்க்கை வரலாறுகள் ஆகியவற்றை எழுதியவராக விளங்கினார்.  ஆனால் இவை எல்லாவற்றைக் காட்டிலும் அவர் ஒரு சிறந்த கவிஞராக வலம் வந்தார். அவருடைய கவிதைகளில் சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் வரிகள் ஆட்சி செய்தன. வர்க்கப் பிரிவுகளின் சோதனை மிகுந்த போராட்டங்களை அவர் செழிப்பும் இசையும் பொருந்திய கவிதைகளாக வெளியிட்டார்.  படிப்பவரை ஏமாற்றி விடும் ஒரு சாதாரணத் தொனியில் கறுப்பினத்தவர் சந்தித்த கொடுமைகள், சமூக அவலங்கள், மனதைப் பிளக்கும் நிறவெறித் தாக்குதல்கள் ஆகியவற்றைத் தம் கவிதைகளில் ஏற்றி அமெரிக்க மனசாட்சியைத்  தொட்டுக்  கேள்விகளை எழுப்பினார். அமெரிக்கக் கவிதைகளின் பொருள் மற்றும் வடிவங்களின் மாற்றங்களை அவர் கவிதைகள் முன் கொண்டு வந்து நிறுத்தின. 

  

அவரின் சில கவிதைகள் இங்கே:  

 

ஆறுகளைப் பற்றி ஒரு கறுப்பின மனிதன் பேசுகிறேன் 

 

எனக்கு ஆறுகளைப் பற்றித் தெரியும்.

உலகின் புராதனம், மனித ரத்தத்தின் பழமை 

இவற்றைப் போலவே ஆறுகளும்.

என் ஆத்மா ஆறுகளைப் போல ஆழமானது.

 

வைகறையில் ஈஃப்ரெட்ஸ் ஆற்றில் குளித்தேன்.

காங்கோவில் என் குடிசையைக் காட்டினேன்,

அது என்னைத் தாலாட்டித் தூங்க வைத்தது.

நைல் நதி தனக்கு மேல் கொண்டு சென்ற 

பிரமீடுகளைக் காட்டியது.

மிஸ்ஸிஸிப்பியின் பாடல்களை 

நியூ ஆர்லியன்சுக்கு ஆப்ரகாம் லிங்கன் சென்ற போது கேட்டேன்.

அஸ்தமனச் சூரிய ஒளியில் 

அப்பூமியின் மார்பு தங்கமெனத் தகதகத்தது.

 

எனக்கு ஆறுகளைப் பற்றித் தெரியும்.

புராதனமான புழுதி படிந்த ஆறுகள். 

என் ஆத்மா ஆறுகளைப் போல ஆழமானது.  

 

 

நானும் 

 

அமெரிக்கன் என்று நானும் பாடுகிறேன்.

 

நான் கறுப்புச் சகோதரன். 

மற்றவர்கள் உள்ளே வரும் போது  

சாப்பிட என்னைச் சமையலறைக்கு அனுப்புகிறார்கள்  

எனக்குச் சிரிப்பாய் இருக்கிறது.

நன்றாகச் சாப்பிடுகிறேன்.

வலிமையுடன் வளர்கிறேன்.

 

நாளை 

மற்றவர்கள் வரும் போது 

மேஜை முன் நான்.உட்கார்ந்திருப்பேன்.

யாருக்கும் தைரியமிராது ,

சமையலறைக்குப் போய்ச் சாப்பிடு 

என்று கூற.

 

தவிர என் அழகைக் கண்டு அவர்கள்  

வெட்கமுறுவார்கள்.

 

நானும் அமெரிக்கன் தான்.

 

 

காதலனின் வருகை 

 

என் பழைய காதலன் நேற்றிரவு வந்தான்.

ஒட்டி உலர்ந்த முகம்.

ஒளியிழந்த கண்கள்.

என்னிடம் சொல்கிறான்:

திரும்ப வந்து விட்டேன்.

தனிமை என்னைக் கொல்கிறது.

என்ன செய்வதென்று 

எனக்குத் தெரியவில்லை.

 

! ஆண்கள் பெண்களை 

ஒரு ஜோடிச் செருப்பென 

நடத்துகிறார்கள்.

உன்னைப் போன்றவர்களுக்குப் 

பெண்கள் ஒரு ஜோடி செருப்புதான்.

எட்டி உதைக்கிறீர்கள்.

தேவை என்றால் தேடுகிறீர்கள்.

 

நான் அவனைப் பார்த்தேன்.

கதற வேண்டும் போல  இருந்ததெனக்கு..

ஒல்லியாக இருக்கிறான்.

எனக்குக் கதற வேண்டும் போல இருந்தது.

 

ஆனால் எனக்குள்ளிருந்த சாத்தான் சொன்னான்:

ஒழியட்டும் இவன்.

இங்கு வந்ததற்கு இறந்து போகட்டும்.

 

Series Navigationபொருத்தம்அந்தரங்கம்-   சிறுகதைத் தொகுப்பு
author

ஸிந்துஜா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *