‘‘ஔவை’’ யார்?( தொடர் கட்டுரை)

This entry is part 13 of 23 in the series 6 ஜூன் 2021

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,

மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை.

மின்னஞ்சல்: malar.sethu@gmail.com

  1. ஔவையார் குறித்த கதைகள்

       நல்லிசைப் புலமை மெல்லியலராகிய ஔவையாரைப் பற்றி பல்வேறுவிதமான கதைகள் வழக்கில் வழங்குகின்றன. சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் சங்க மருவிய காலத்திலும் அதனைத் தொடர்ந்து பக்தி இலக்கிய காலத்திலும், சிற்றிலக்கிய காலத்திலும் வாழ்ந்ததாகப் பல கதைகள் உலவுகின்றன. ஒருவரே எத்தனை நூற்றாண்டுகள் கடந்து வாழ இயலும்? இது சாத்தியமா? அவரைப் பற்றிய கதைகள் உண்மைதானா? என்ற பல்வேறு வினாக்கள் நம்மனதுள் எழுகின்றன.

       இதற்கு அதியமான் ஔவைக்குக் கொடுத்த நெல்லிக்கனியை உண்டதால் அவர் நீண்ட காலம் வாழ்ந்தார் என்ற ஒருகாரணத்தையும், அவர் தெய்வப் புலவர், இறைவனின் அருளைப் பெற்றவர் என்று கூறி இடைக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் சிலர் ஔவையாரின் வரலாறு குறித்தும் பல கதைகளைக் கற்பித்துள்ளனர். இக்கதைகள் சுவையானவையாக விளங்குகின்றன.

ஔவையாரின் பிறப்பு குறித்த கதைகள்

       ஔவையாரின் பிறப்புக் குறித்து, திருவள்ளுவர் கதை, கபிலரகவல், ஞானாமிர்தம், புலவர் புராணம், விநோதரச மஞ்சரி, பன்னிரு புலவர் சரித்திரம் ஆகிய நூல்கள் எடுத்துரைக்கின்றன. இக்கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக ஔவையார் பிறப்பு குறித்து குறிப்பிடுகின்றன.

திருவள்ளுவர் கதை

       பழங்காலத்தில் பாண்டிய நாட்டில் உள்ள மதுரையில் சங்கப் புலவர்கள் தாங்கள் தான் கல்வியில் சிறந்தவர்கள் என்று ஆணவம் கொண்டு சிவபெருமானை மதிக்காமல் அவரை இகழ்ந்தனர். அதனைக் கண்டு கோபம் கொண்ட சிவபெருமான் புலவர்களின் ஆணவத்தை அடக்குவதற்காக நான்முகனைத் திருவள்ளுவராகவும், திருமாலை இடைக்காடராகவும், கலைமகளை ஔவையாராகவும் உலகில் அவதரிக்கத் திருவுளம் கொண்டார்.

       நான்முகன் செய்த வேள்வியொன்றில் அகத்தியர் தோன்றினார். அவர் கடற்கன்னி ஒருத்தியை திருமணம் செய்து பெருஞ்சாகரன் என்ற மகனைப் பெற்றார்.் அப்பெருஞ்சாகரன் திருவாரூர்ப் புலைச்சி ஒருத்தியை மணந்து பகவன் என்பவனைப் பெற்றெடுத்து அனைத்துக் கலைகளையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்து வளர்த்து வந்தார்.

       இது இவ்வாறிருக்க பிரம்ம வம்சத்தின் வழி வந்த தவமுனி என்பவர் ஒருவர் அருண்மங்கை என்ற அம்மையாரொருவரை மணந்து கொண்டு, பெண்குழந்தை ஒன்றைப் பெற்று அந்தக் குழந்தையைப் பெற்ற இடத்திலேயே விட்டுவிட்டு அவர்களிருவரும் தவம் செய்வதற்காக விராலிமலை நோக்கிச் சென்றுவிட்டனர். அப்பெண்குழந்தையை உறையூர்ச் சேரியில் வாழும் பெரும்பறையன் என்பவன் கண்டெடுத்துப் பாதுகாத்து வளர்த்து வந்தான். அப்போது எதிர்பாராமல் அங்கு தோன்றிய மண் மழையால் அப்பெண்குழந்தையைத் தவிர அச்சேரியில் உள்ளோர் அனைவரும் அழிந்துபோயினர். சேரியும் அழிந்து விட்டது. மண்மழையால் உயிர்பிழைத்த அப்பெண் குழந்தை அவ்வூரையடுத்துள்ள மேலூர் அகரத்தில் வாழும் நீதியையன் என்பவனது வீட்டில் வளர்ந்து வந்தாள்.

       இத்தருவாயில் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த பகவன் கங்கைநீராடக் காசியை நோக்கிச் செல்லும்போது வழியில் அந்தப் பெண் இருக்கும் மேலூர் அகரம் வந்து அங்குள்ள ஒரு தருமச்சாலையில் தங்கி மறுநாள் போகலாம் என்று நினைத்து அதில் தங்கினான். அங்கு நாள்தோறும் செய்கின்ற கடமைகளை முடித்துவிட்டு தனக்கு வேண்டிய உணவினை தயார் செய்து கொண்டிருந்தான். அப்போது அந்த தருமச்சாலையின் காப்பாளானக விளங்கிய நீதியையனின் வளர்ப்புப் பெண்ணாகிய அப்பெண் அங்கு வந்தாள்.

       அவளைக் கண்ட பகவன், ‘‘ஏய் யார்நீ புலைச்சியோ? வலைச்சியோ? ஏன் இங்கு வந்தாய்?’’ என்று அதட்டி தன்கையில் பிடித்திருந்த சட்டுவத்தால் அவள் தலையில் இரத்தம் வர அடித்துத் துரத்திவிட்டான்.

       இது நடந்து சில ஆண்டுகள் கடந்தன். காசிக்குச் சென்ற பகவன் கங்கையில் நீராடிவிட்டுக் கங்கை நீரை கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் அதே ஊர் வழியாக வந்து அந்தத் தரும சாலையிலேயே விதிவசத்தால் தங்கினான்.  அப்போது அப்பெண் அங்குவர பகவன் அவளைக் கண்டு காதல் கொண்டு நின்றான். அவனது நிலையைக் கண்ட நீதியையன், அவனைப் பார்த்து, ‘‘ஐயனே! அவள் எண் பெண். நீங்கள் விரும்பினால் அவளை திருமணம் செய்துகொள்ளுங்கள்’’ என்று கூறினார்.

       அதனைக் கேட்ட பகவன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தான். திருமணம் இனிதாக நடைபெற்றது. திருமணத்தன்று ஐந்தாம் நாள் தநிகழ்ந்த கண்ணெய் நீராட்டுச் சடங்கின்போது அவள் தலையில் தான் சட்டுவத்தால் ஏற்படுத்திய தழும்பு இருப்பதைக் கண்டு, அவளது கதையினைக் கேட்டறிந்தான். பின்னர் தன்கையால் அடிபட்ட ஆதியாள் என்ற அந்தப் பெண்ணை அவள் என்பதை அறிந்து, அவளோடு வாழ மறுத்து அங்கிருந்து வெளியேறிச் சென்றான். அவன் ஆதி(பழைய பெண்) என்று அழைத்ததே அவளுக்குப் பெயராக அமைந்தது.

       பகவன் தன்னை வெறுத்துச் சென்றாலும் ஆதியாள் அவனை விடாதுப் பின்பற்றித் தொடர்ந்து சென்றாள். பகவன் அவளுக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாது தொடர்ந்து வரும் ஆதியாளைப் பார்த்து, ‘‘பெண்ணே நான் எவ்வளவு கூறியும் நீ என்னைப் பின்தொடர்ந்து வருகிறாய். உனக்கு உண்மையிலேயே என்மீது அன்பு இருக்குமாயின் நான் சொல்வதைக் கேட்பாயாக. நீ என்னுடன் இருக்க வேண்டும் எனில் உனக்குக் குழந்தைகள் பிறக்குமானால் அவற்றை அவை பிறந்த இடத்திலேயே விட்டுவிட்டு என்னைப் பின்தொடர்ந்து வருதல் வேண்டும். இதற்கு நீ சம்மதித்தால் உன்னை நான் என் மனைவியாக ஏற்றுக் கொள்வேன்’’ என்றான். அதனைக் கேட்ட ஆதியாள் பகவன் கூறியதை ஏற்றுக் கொண்டு அவனுடன் சென்றாள்.

       அவ்வாறு செல்லும்போது அவர்கள் இடைவழியில் இருந்த பாணர் சேரியில் ஒருநாள் இரவு தங்கினர். அங்கு அவளுக்கு சிவபெருமானின் கட்டளைப்படி  கலைமகள் ஔவையாராக வந்து பிறந்தாள். ஆதியாள் கணவனின் கட்டளைக்குப் பணிந்து குழந்தையை விட்டுப் பிரிய எண்ணினாள். இருப்பினும் அவளால் குழந்தையை விட்டுவிட்டு வரமுடியவில்லை. குழந்தையைக் கண்டு மனம் மறுகினாள்.

       குழந்தை தாயின் துயரத்தைக் கண்டு,

       ‘‘இட்டமுடன் என்தலையில் இன்னடிப என்றெழுதி

       விட்டசிவ னும் செத்து விட்டானோ? – முட்டமுட்டப்

       பஞ்சமே ஆனாலும் பாரம் அவனுக்கு அன்னாய்

       நெஞ்சமே அஞ்சாதே நீ’’

என்று பாடியது. அதனைக் கேட்ட ஆதியாள் கவலை மறைந்தது. அவளும் கணவனுடன் தனது குழந்தையை விட்டுவிட்டுச் சென்றாள். இவ்வாறே ஆதிக்குப் பகவன் மூலம் உப்பை, அதிகமான், உறுமைவ, கபிலர், வள்ளி, வள்ளுவர் ஆகியோர் இளையோர்களாகப் பிறந்தனர். அவர்களையும் ஔயைாரைப் பிரிந்ததைப் போல் அங்கங்கே விட்டுவிட்டு ஆதியாள் பிரிந்தாள். அக் குழந்தைகளும் ஔவையாரைப் போன்றே ஒவ்வொரு பாடல் பாடி ஆதியாளின் மனக்கவலையைப் போக்கி அவளை மகிழச் செய்தன. ஔவையாரின் உடன் பிறந்தோராக,

       ‘‘கபிலரதி கமான் கார்க்குறவர் பாவை

       முகிலனைய கூந்தன் முறுவை – நிகரிலா

       வள்ளுவ ரவ்வை வயலூற்றுக் காட்டி

       லுப்பை யெண்ணிலெழுவ  ரிவர்’’ (அபிதான சிந்தாமணி, ப., 367)

என்ற வெண்பா எடுத்துரைக்கின்றது.

       பாணர் வீட்டில் வளர்ந்த ஔவைக்கு வயது வந்த காரணத்தால் பாணன் தன்குலத்தில் உள்ள ஒருவனைப் பார்த்து மணமுடிக்கக் கருதினான். அவ்வாறு எண்ணி தக்க மணமகனைப் பார்த்து நிச்சயித்து அவனிடமிருந்து தன்னுடைய குலவழக்கப்படி சேலை முதலியனவற்றைப் பெற்றுக் கொண்டு ஔவையாரை அச் சேலையை உடுத்திக்கொண்டு வருமாறு கூறினான்.

       சேலையைக் கட்டிக் கொண்டு வந்த ஔவைக்கு திருமணத்தில் விருப்பவில்லை. அதனால் கிழவி உருவம் கொண்டு வந்தார். கிழவியாக வந்த ஔவையைப் பார்த்த மணமகன் இந்தக் கிழவி எனக்கு வேண்டாம் எனக் கூறிவிட்டுச் சென்றான். அப்பெண்ணும் அன்றுமுதல் திருமணம் செய்து கொள்ளாது ஔவையார் என்ற பெயருடன் கிழ வடிவத்திலேயே வாழ்ந்து வந்தாள்.

       இதுபற்றி மேலும் ஒரு கதை கர்ணபரம்பரைக் கதையாக மக்களிடையே வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆதியாளுக்கும் பகவனுக்கும் பிறந்த குழந்தையை அவர்கள் பாணர் வீட்டிலேயே விட்டுவிட்டுப் போய்விட அக்குழந்தையைப் பாணன் எடுத்து ஔவை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அவ்வாறு அந்தப் பெண் அழகுற வளர்ந்து திருமண வயதை அடைந்தாள்.

       அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கருதிய பாணன் தக்க மணமகனைத் தேடத் தொடங்கினார். ஆனால் ஔவையோ அவ்வூரில் உள்ள விநாயகப் பெருமானையே எப்பொழுதும் வணங்கி வழிபட்டு வந்தாள். வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று அறிந்தவுடன் அவள் தன்னை வளர்த்த பாணனிடம் தனக்குத் திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ கூறிப்பார்த்தாள்.

       ஆனால் அதை மறுத்த பாணன் தகுந்த மணமகனையும் பெண்பார்க்கத் தனது வீட்டிற்கு அழைத்துவந்தான். அவனும் வந்துவிட்டான். அம்மணமகன் சேலை எடுத்துவந்து பணனிடம் கொடுத்து ஔவையை உடுத்திக் கொண்டு வருமாறு கூறினான்.

       அச்சேலையை வாங்கிக் கொண்டு சென்ற ஔவை விநாயகப் பெருமானிடம் தனக்குத் திருமணம் வேண்டாம் என்றும் தன்னை வயதான பெண்மணியாக மாற்றிவிடுக என்று இறைஞ்சிக் கேட்கவே விநாயகப் பெருமான் அவளுக்கு வயதான தோற்றத்தைக் கொடுத்தார். வயதான தோற்றத்துடன் ஔவை மணமகனைப் பார்க்க வர அதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சியுற்றனர். பின்பு அவளுக்குத் தெய்வ சக்தி உள்ளது என்று அறிந்து அனைவரும் அவளது கால்களில் விழுந்து வணங்கினர்.

       ஔவையும் தன்னை வளர்த்த பெற்றோரிடம் விடைபெற்று ஒவ்வொரு ஊராகச் சென்று நாட்டில் அறம் வளரப் பாடுபட்டார். மற்றவர்களுக்கு நற்கருத்துக்களை எடுத்துக் கூறினார். பின்னர் விநாயகப் பெருமானின் திருவருளால் திருக்கைலை மலையை அடைந்து இறைவனுடன் இரண்டறக் கலந்து அருள்பெற்றார். இது வழக்கத்தில் வழங்கப்படும் செவிவழிக் கதையாகும்.

கபிலரகவல்

       மாமுனியாகிய  பகவனுக்குக் கருவூர் புலைச்சியாகிய ஆதிவயிற்றில் கபிலர் முதலாகிய எழுவர் மக்கள் பிறந்தனர். அவருள் ஆண்கள் மூவர். பெண்கள் நால்வர். அவருள் ஔவையார் பாணர் வீட்டில் வளர்ந்தார் என்று கபிலரகவல் ஔவையார் பற்றி கூறுகிறது.

ஞானாமிர்தம்

       யாளிதத்தன் என்ற முனிவன் தன்னால் வெட்டுப்பட்டு கிணற்றில் தள்ளப்பட்ட ஆதப் புலைச்சி என்னும் அறிவில்லாத சண்டாளப் பெண்ணை ஒரு பிராமணர் எடுத்துக் கொண்டு போய் வளர்த்தார். பின்னர் அந்தப் பெண்ணையே யாளிதத்தன் மணம் செய்து கொண்டு வாழ்ந்தார். அவர்களுக்குக் கபிலர் முதலாக ஏழு குழந்தைகள் பிறந்தனர்.

புலவர் புராணம்

       நான்முகன் அம்சமாக பகவன் என்ற அந்தணனும் கலைமகள் அம்சமாக ஆதி என்பவளும் சேர்ந்து ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு குழந்தையாக ஏழு குழந்தைகளைப் பெற்றனர். இக்குழந்தைகளுள் ஔவையாரே முதல் குழந்தையாகும். வள்ளுவர், கபிலர், சேரமான் என்னும் மூவரும் ஔவையாருடன் உடன் பிறந்தவர்கள். இவர்கள் புலமை மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். மற்றைய பெண்கள் மூவரும் தம் இயல்பினை வெளிக்காட்டாது இருந்து விட்டனர் என்று புலவர் புராணம் ஔவையாரின் பிறப்பு வரலாற்றைக் குறிப்பிடுகிறது.

விநோதரச மஞ்சரி

       ஔவையார் மதுரையில் கடைச்சங்கமிருந்த காலத்தில் உறையுர் என்னும் நகரில் ஒரு சாவடியில் ஆதி என்பவளுக்கும் பகவன் என்னும் அந்தணனுக்கும் முதல் மகளாகப் பிறந்தார் என்று விநோதரசமஞ்சரி எடுத்துரைக்கின்றனது.

பன்னிரு புலவர் சரித்திரம்

       வேதமொழி என்பவருக்குப் பேராளி என்ற பெயருடைய மகன் பிறந்தான். அம்மகளுக்குப் பன்னிரண்டாம் வயது நடக்கின்றபோது அவ்வூரில் வாழ்ந்த ஓர் இழிகுலத்தானுக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அப்பெண் பிறந்தமையால் ஊருக்கு அழிவு உண்டாகும் எனக் கருதிய அவ்வூரார் அப்பெண்குழந்தையைக் கொல்வதற்கு முடிவு செய்தனர். அக்குழந்தையைக் கொல்ல விரும்பாத வேதமொழியார் ஒரு பேழையுள் வைத்துக் காவிரி ஆற்றில் விட்டுவிட்டார். அப்போது காவிரியில் அடித்து வரப்பட்ட அப்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அந்தணன் ஒருவன் எடுத்து வளர்த்தான். சில ஆண்டுகள் கழித்து தீர்த்த யாத்திரை குறித்து அங்கு வந்த பேராளியார், அப்பெண்ணை மணம்செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின்னர் அவள் தன் தந்தையால் ஆற்றில் விடப்பட்ட இழிகுலப் பெண் என்பதை அறிந்து அவளை விட்டுப் பிரிந்து சென்றார். அப்பெண் தன்னைக் காத்துவந்த அந்தணன் விட்டுச் சென்ற பெரும்பொளோடு காசிக்குச் சென்று அங்கு அறச்சாலை ஒன்றை அமைத்து வருவோர் போவோருக்கெல்லாம் உணவளித்து வந்தாள்.

       மேலும் அவர்களிடம் தன்னுடைய கதையையும் கூறி அழுதாள். அப்போது ஒருநாள் பேராளியார் அங்குவர, அவள் அவர்க்கும் உணவிட்டு, வழக்கம்போல் தன்னுடைய கதையைக் கூறி அழுதாள். அந்நிலையில் அவர் அவளது நல்ல குணத்தைக் கண்டு அன்று முதல் அவளோடு சேர்ந்து வாழத் தொடங்கினார். பின்னர் அவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. அவர்களுள் ஒருவரே ஔவையார் ஆவார். இக்கதைகள் அனைத்தும் ஔவையார் பிறந்த முறை குறித்தும் அவர் பெற்றோர் குறித்தும் வழங்கும் கதைகள் ஆகும். (துணை நின்ற நூல்கள்1. அபிதானசிந்தாமணி, 2. புலவர் கா. கோவிந்தன், ஔவையார், 3. புலியூர் கேசிகன், ஔவையார் தனிப்பாடல்கள், 4. அ.க.நவநீதகிருஷ்ணன், ஔவையார் கதைப்பாடல் வில்லுப்பாட்டு) (தொடரும்)

 

Series Navigationவிலங்கு மனம்எத்தகைய முதிர்ந்த ஞானம்!
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *