எந்தையும் தாயுமென்று
தந்தையை முன் வைத்தான்
சங்கப் புலவன்
கருவுக்குத் தந்தை
காரணமானதால்
கடைசி மூச்சிலும்
காவலன் ஆனான்
மனைவி மக்கள்
இளம் சூட்டில்
இதமாய்க் குளிக்க
இவன் வியர்வையில்
குளிப்பான்
உயர்வுகள் பகிர்வான்
குடும்பம் உழல்வது சகியான்
எண்ணெய்க்கும்
நெருப்புக்கு மிடையே
திரியாய் எரிவான்
விழிக்கும்
ஒளிக்கு மிடையே
இமையாய்க் கிடப்பான்
வில்லுக்கும்
அம்புக்கு மிடையே
விசையாய் இருப்பான்
மூழ்கியே செத்தாலும்
குடும்பம் மூழ்காமல்
காப்பான்
சேமிப்பு எல்லாம் குடும்பம்
சேரும் வகைசெய்து
செத்துப் போவான்
சொந்தங்களே அறியாமல்
சுமைகோடி இழுப்பான்
முற்களாய்க் கிடந்து
சுளைகள் காப்பான்
சூத்திரம் வாழ்க்கைக்கு
துயரங்கள் என்பான்
சாதனை வாழ்க்கையை
பிள்ளைக்குத் தந்து
சத்திர வாழ்க்கையைத்
தனதாக்கிக் கொள்வான்
எந்தையும் தாயுமென்று
தந்தையை முன்வைத்த
சங்கப் புலவனின்
தத்துவம் அறிவோம்
தந்தையைத் தொழுவோம்
அமீதாம்மாள்