முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை.
மின்னஞ்சல்: malar.sethu@gmail.com
பழத்திற்காகப் பிரிந்து வந்து பழனிமலையில் இருந்த முருகனை அம்மையப்பனுடன் கண்டு வணங்கிய ஔவையார் மிகவும் மகிழ்ந்தார். ஒவ்வொரு தலமாகச் சென்று முருகனை வணங்கி வழிபட்டு வந்த ஔவையார் ஒருநாள் ஒரு ஊருக்குச் செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது அவர் பெரிய காட்டின்வழியே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஔவையார் அது குறித்துக் கவலையுறாது முருகனை மனதில் எண்ணியபடி நடந்து சென்றார்.
அப்போது முருகக் கடவுள் ஔயாரின் அறிவுத்திறனறிந்து மகிழ எண்ணங் கொண்டார். அதனால் ஔவையார் வரும் வழியில் எருமை மாடுகளையும், ஆடுகளையும் மேய்க்கும் சிறுவனாக தோற்றம் கொண்டு ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். மாடுகள் மேயவிட்டுவிட்டு அவர் அருகில் இருந்த நாவல் மரத்தில் ஏறி நாவல் பழங்களைப் பறித்துத் தின்று கொண்டிருந்தார்.
காட்டின் வழியே வந்த ஔவைக்குப் பசி எடுத்தது. வெயிலில் நடந்து வந்ததால் மிகவும் களைப்புற்றார். அப்போது நாவல் மரத்தில் கொத்துக் கொத்தாகப் பழங்கள் காய்த்திருந்ததையும் அதில் ஒரு சிறுவன் ஏறி பழம்பறித்துத் தின்று கொண்டிருப்பதையும் கண்டு அங்கு சென்றார்.
மரத்தில் இருந்த சிறுவனைக் கண்டு, ‘‘அப்பா எனக்கு மிகவும் நாவறட்சியாகவும் பசியால் களைப்பாகவும் இருக்கிறது. அதனால் நாவல் பழங்களைப் பறித்துக் கொடு. அதனை உண்டு எனது களைப்பைப் போக்கிக் கொள்கிறேன்’’ என்று கேட்டார்.
உடனே அச்சிறுவன், ‘‘பாட்டி! இங்கு இரண்டு வகையான பழங்கள் உள்ளன. ஒன்று சுட்ட பழம். இன்னொன்று சுடாத பழம். இவற்றில் உங்களுக்கு எது வேண்டும்?’’ என்று கேட்டான்.
அதனைக் கேட்ட ஔவையார் வியப்புற்று, ‘‘நாவல் பழத்தில் சுட்டதும், சுடாததுமான பழங்களா உள்ளன? நாம் இதுவரை கேள்விப்படாததாக இருக்கிறதே? இச்சிறுவன் தனக்குத் தெரியாததைத் தெரிந்து வைத்திருக்கின்றானே?’’ என்று பலவாறு மனதில் எண்ணிக் கொண்டே, சுட்ட பழம் இந்த வெயிலில் எதற்கு? சுடாத பழமே கேட்போம் என்று நினைத்து, ‘‘அப்பா எனக்குச் சுடாத பழமே போடு’’ என்று கூறினார்.
சிறுவனாக வந்த முருகப்பெருமான், ‘‘இதோ எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறி நாவல்பழங்களைப் பறித்துக் கீழே போட்டான். அப்பழங்களை எடுத்த ஔவையார் பழங்களில் ஒட்டியிருந்த மண்ணை வாயினால் ஊதி ஊதி தள்ளிவிட்டு உண்டார்.
அதனைப் பார்த்த முருகப் பெருமான், ‘‘ஆகா பாட்டி நீங்கள் சுடாத பழம்தானே கேட்டீர்கள். நான் சுட்ட பழத்தைப் போட்டுவிட்டேனோ? பழம் மிகவும் சுடுகிறதா? ஊதி ஊதித் தின்கிறீர்களே!’’ என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
அப்போதுதான் ஔவையாருக்குச் சுட்ட பழம் என்றால் என்ன? சுடாத பழம் என்றால் என்ன? என்பது புரிந்தது. அறிவுலகில் அனைவராலும் பாராட்டப்படும் தன்னை ஆடுமாடு மேய்க்கும் அறியாச் சிறுவன் வென்றுவிட்டானே என்று வெட்கமுற்று வேதனைப்பட்டு,
‘‘கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி,
இருங்கதலித் தண்டுக்கு நாணும் – பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்கு நான்தோற்றது,
ஈரிரவும் துஞ்சாதுஎன் கண்’’
என்ற பாடலையும் பாடினார். அதனைக் கண்ட சிறுவனாக வந்த முருகன், ஔவையார் மனம் வேதனையுறும்படி செய்துவிட்டோமே என்று எண்ணி, தன் சுய உருவத்தைக் காட்டினார். அதனைக் கண்ட ஔவையார், முருகா! நீயா என்முன் ஆடுமாடு மேய்க்கும் சிறுவனாக வந்தாய்? என் அப்பனே நான் என்ன பேறு பேற்றேனப்பா’’ என்று வியந்து கூறி வணங்கினார்.
ஔவையின் மூலமாக உலகோருக்கு அறங்களை எடுத்துச் சொல்ல விழைந்த முருகன், ‘‘ஔவைப் பிராட்டியே உமது தமிழை அறிந்து மகிழவே நான் சிறுவனாக வந்தேன். கொடியது எது? என்று விளக்குங்கள்’’ என்று கூற,
‘‘கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே’’
என்று பாடினார். அதனைக் கேட்டு மகிழ்ந்த முருகப் பெருமான், இனியது எது? என்று கேட்க,
‘‘இனியது கேட்கின் தனிநெடுவேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே’’
என்று பாடினார். அதனைத் தொடர்ந்து, பெரியது எது? என்று முருகன் கேட்டார். அதற்கு,
‘‘பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரிய மாலோ அலைகடற் றுயின்றோன்
அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக் கொருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவரோ தொண்டருள்ளத்தொடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே’’
என்று பாடினார். அதற்கு மகிழ்ந்த முருகப் பெருமான், ‘‘ஔவையே கொடியது, இனியது, பெரியது, என எல்லாவற்றையும் கூறிய நீர் அரியது எது என்று எமக்கு எடுத்துரைப்பீராக’’ என்று கேட்க,
‘‘அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே’’
என்று பாடினார். அவற்றைக் கேட்ட முருகப்பெருமான் ஔவையாரை என்றும் தமிழோடு நீடு வாழ்க என்று வாழ்த்தியருளினார். ஔவைப் பாட்டியுடன் செந்தமிழ்க் கடவுள் நிகழ்த்திய இந்தக் கதையானது, கற்பனையாக இருப்பினும் என்றும் எண்ணி எண்ணி மகிழத் தக்கதாக இருக்கிறது. ஔவையாரின் செந்தமிழ் நம் செவிகளில் காலங்காலமாக ரீங்காரமிட்டபடியே வலம் வருகின்றது. இது தமிழர்தம் தவப்பயனே யாகும் என்பதில் ஐயமில்லை. (தொடரும்)
- மலர் தூவிய பாதையில் …
- 4.ஔவையாரும் முருகக் கடவுளும்
- அப்பச்சிக்குத் திண்ணை போதுமே!
- யோகம் தரும் யோகா
- விரக்தியின் விசும்பல்கள்
- நானின்றி வேறில்லை
- சிகப்பு புளியங்கா
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கவிதையும் ரசனையும் – 18 நாரணோ ஜெயராமன்
- பயணங்கள்….
- படித்தோம் சொல்கின்றோம்: பேதங்கள் கடந்த மாற்றுச் சிந்தனையாளர் – கலாநிதி ஏ. சி. எல் . அமீர்அலி – சிந்தனைச்சுவடுகள்