மறுபடியும் எனக்கு
பெயர் சூட்டுவிழா
‘அப்பா’ என்று
நீ வைத்த பெயரை
தைத்துக் கொண்டேன்
என் கன்ன மரு
உன் கன்னத்தில்
மயில்குஞ்சாய்
என் தோள் முழுதும் நீ
சிநேகித்தன
சிட்டுக் குருவிகள்
உன் பிஞ்சு நடை
புற்களுக்கு ஒத்தடமிட்டன
பனித்துளிகள்
பாதம் கழுவின
நீ எழுதிய ‘அஆ’
பூக்கள் தூவின தமிழுக்கு
இரவுகளில் நீ
படுக்கை நனைப்பது
எனக்கு பன்னீர் ஆனது
என் பெயர் மறைந்து
‘உன் அப்பா’ என்பதே
என் பெயர் ஆனது
பூச்சிதறலாய் உன் வகுப்பு
நீ சூரியகாந்தி
உன் பள்ளியில்
சுதந்திர தினக் கொண்டாட்டம்
உன் குடையான எனக்கு
கொடியேற்றும் தகுதி
கொடி ஏற்றினேன்
பூ தூவியது கொடி
எனக்கல்ல
உன் அப்பாவுக்கு
கூடுவிட்டு உன்னை
பறக்கச் சொன்னது கல்வி
கூடும் உன்னோடு பறந்தது
சென்னை……….
ஊர் வேறு
உறவுகள் வேறு
காற்று வேறு
கனவுகள் வேறு
நட்பு வேறு
நாடகங்கள் வேறு
ஆனாலும்
அந்த நந்தவனத்தில்
உயர்ந்த மரம் நீ
எல்லாருக்கும்
நிலாச்சோறு உன் நிழல்
‘நேர்முனை எதிர்முனை
இணைந்தால்தான் மின்சாரம்’
இயற்பியல் சொன்னது
‘மகரந்தம் விரிக்க
வண்டு தேடும் மலர்’
தாவரவியல் இயம்பியது
‘இனப்பெருக்கமே
விலங்குகளின் இயல்பாதாரம்’
விலங்கியல் விளக்கியது
ஒரு கேள்வி தலைமேல்
கூடாரம் போட்டது
ஆதாரமாய் ஒருபதில்
எதுவாகும்?
முதன்முதலாக
உன் உலகம்
உனக்காக விரிந்தது
மீண்டும் ஓர் இடப்பெயர்ச்சி
கதவுகள் தட்டினோம்
சில திறக்கவில்லை
சில திறந்து மூடின
உன் தகுதி கேட்டபின்
கதவு திறந்தது சிங்கப்பூர்
தாலாட்டுப் பாடியது சிங்கப்பூர்
தாள் பணிந்தோம் சிங்கைக்கு
உன் உலகம் விரிந்தது
உனக்கான பதிலைத் தேடியது
‘குலம் போற்றுபவனே
என் கூந்தல் நீவமுடியும்’
பதிலுக்கு நீ பதில் சொன்னாய்
ஆயிரம் பேருக்கு
ஆணையிடும் ஒருவன்
ஆளுமை அறிந்தவன்
குறுத்துமடல் உன்னைக்
கூட வந்தான்
முடி சூட்டினாய்
நீ முடியரசியானாய்
நீ விரல் நீட்டிய திசையில்
வெள்ளி முளைத்தது
எனக்கு
என் இருப்பிடம் தேடி
எல்லாமும் வந்தது
ராஜமரியாதைக்கு
அர்த்தம் புரிந்தது
சுக்கிரதிசையில்
பேரன் பிறந்து இன்று
இருபது தாண்டினான்
பேரனுக்கு ‘பெர்த்’தில் வேலை
ஆயிரத்தில் ஒருவனாய்
அணைத்துக் கொண்டது
ஆஸ்திரேலியா
அலாவுதீன் அவன்தானாம்
அற்புத விளக்கும் அவனிடமே
இதோ எல்லாரும்
பறந்து கொண்டிருக்கிறோம்
‘பெர்த்’துக்கு
அமீதாம்மாள்