முனைவர் ம இராமச்சந்திரன்
குட்டியை இறையாக்கிய விலங்கைக் கண்டு
உயிரின் பதற்றமும் அன்பின் ஏக்கமும்
மரத்தின் காலடியில் வந்து விழும்
பூக்களின் மெளனத்தில் பிரபஞ்ச ஏமாற்றம்
காற்றின் உள்ளிருப்பில் வேம்பின் வாசமும் வேரின் மணமும்
குழை தள்ளிய வாழை காத்திருக்கிறது
அரிவாளின் நுனிக்கு
வாழ்ந்து முடிக்காத முதுமைப் போல்
ஆடை தைக்கப்பட்டு உழைப்புச் சுரண்டப்பட்டுத்
தயங்கி தயங்கி பிச்சைக் கேட்கும்
கைவிடப்பட்ட அவள்
கொட்டும் மழையில் ஒதுங்க இடம் தேடி
புறக்கணிப்பின் உச்சத்தில்
சாலையின் நடுவில் காயங்களுடன் மாடுகள்
கைவிடப்பட்ட தண்டவாளம் உனது
கூடும் சில முட்டைகளும்
தூரத்திலிருந்து ஏக்கத்தோடு பார்ப்பதும்
சிட்டுக்குருவிகளின் சலசலப்பில் உடைக்கப்பட்ட உனது முட்டையும்
மைனாவைக் கொத்த வந்த உனது
தாய்மை எதைக் கண்டு பயந்திருக்கும்
விடைத் தேடி காத்துக் கொண்டிருக்கிறேன்
பார்க்கும் தூரத்தில் நீயும் உனது குரலும்!