மா ரைனிஸ் ப்ளாக் பாட்டம் 

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 10 in the series 27 ஜூன் 2021

 

திரைப்பட விமர்சனம் – அழகர்சாமி சக்திவேல் 

பொதுவாய், மூன்றாம் பாலினம் குறித்த சமூக உணரவை ஏற்படுத்த விரும்பும், மூன்றாம் பாலினப் படங்கள், தங்கள் சமூக அக்கறையை, வெறும் மூன்றாம் பாலின உரிமை என்பதோடு நின்று விடாமல், அதைத் தாண்டி, சமூகம் சார்ந்த, பல்வேறு பிரச்சினைகளையும் அலசும் தன்மையை, நாம் பல மூன்றாம் பாலினப் படங்களில் பார்க்கிறோம். இந்தப் படமும், அப்படிப்பட்ட, கறுப்பர் உரிமை குறித்துப் பேசும், ஒரு மூன்றாம் பாலினப் படம்தான். 

 

இந்த அமெரிக்கப் படத்தின் திரைக்கதை, காலையில் தொடங்கி, மாலையில் முடியும் கதையாக இருக்கலாம். கதையின் காட்சிகள், பெரும்பாலும், ஒரே ஒரு கட்டிடத்தின், நான்கு அறைகளைச் சுற்றி சுற்றி வருவதாகக் காட்சிப் படுத்தப்பட்டு இருக்கலாம். கதாபாத்திரங்களாக, ஒரு ஏழெட்டுப் பேரை மட்டுமே காட்டி இருக்கலாம். இது போன்ற திரை நுணுக்கங்கள், இப்போது எத்தனையோ படங்களில் வந்து விட்டன. ஆனால், அதுவல்ல இந்தப் படத்தின் சிறப்பு. 

 

காலையில் தொடங்கி, மாலையில் முடியும், அந்தத் திரைக்கதைக்குள்ளே, ஒரு நீண்ட, அமெரிக்கக் கறுப்பின மக்களின் சரித்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு கட்டிடத்தின் அந்த நான்கு அறைக்குள்ளே, அடிமைகள் ஆக வாழ்ந்த, கறுப்பின மக்கள் அனுபவித்த, பல்வேறு கொடுமைகளும் சொல்லப்படுகிறது. கூடவே, அந்த லெஸ்பியன் கறுப்பினப் பெண்ணின் உரிமைக் குரலும், வெள்ளையரின் திமிருக்கு எதிராக, எதிர்த் திமிர்ப் பேச்சுப் பேசும், அந்த லெஸ்பியன் பெண்ணின், ஆண்மைத்தனமான பேச்சும்தான், இந்தப்படத்தின், தனிப்பட்ட சிறப்பு.  

 

 

படம் முழுதும், எக்கச்சக்கமான வசனங்கள். ஆனால், அந்தக் கூர்மையான வசனங்களைக் கொண்டு, சுமார் ஒரு மணிநேரம், நம்மை, அங்கும் இங்கும் நகரவிடாமல், இருக்கையிலேயே கட்டிப்போடும் படம்தான், நெட்ப்ளிக்ஸ் ஆதரவில் வெளிவந்து இருக்கும், மா ரைனிஸ் ப்ளாக் பாட்டம். 

 

மா ரைனிஸ் ப்ளாக் பாட்டம் என்ற இந்தத் திரைப்படத்தின் தலைப்பு, நீண்ட நெடிய கறுப்பர் வரலாற்றை உள்ளடக்கியதால், அந்த வரலாறுகளை, இங்கே சொல்ல வேண்டியது அவசியமாகிறது. மா ரைனிஸ் என்ற கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பெண்மணி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி, இருபதாம் நூற்றாண்டில், அமெரிக்காவில், மிகப் பிரபலமான ஒரு ப்ளுஸ் பாடகியாக வாழ்ந்த, ஒரு லெஸ்பியன் பெண்மணி. ப்ளுஸ் சங்கீதம் என்பது, நமது கிராமத்தில், தமிழர்கள் பாடுகிற, நாட்டுப்புறப்பாடல்களுக்கு ஒப்பானது. வெள்ளையர்களால், அடிமையாக்கப்பட்டு, அமெரிக்காவிற்குள் கொண்டு வரப்பட்ட கறுப்பின மக்கள், தங்கள் வேலைசெய்யும் நேரத்தில், தத்தம் கடின உழைப்பின், பாரத்தை மறக்க, பாடப்பட்ட சங்கீதம்தான், ப்ளுஸ் சங்கீதம். 

 

நம் தமிழக கிராமங்களில் இருக்கும், ஏற்றப் பாட்டு, நாற்று நடும் பாட்டு, துணி துவைக்கும் பாட்டு, போன்ற வயல்வெளிகளிலும், ஆற்றின் ஒரங்களிலும் பாடும் பாடல்கள் போல, பல வகைப் பாடல்கள், அமெரிக்கக் கறுப்பின மக்களின், ப்ளுஸ் வகை சங்கீதத்திலும் இருக்கிறது. பெரும்பான்மையான ப்ளுஸ் சங்கீதப் பாடல்கள், கறுப்பின மக்களின் அடிமை நிலையையும், களத்தில், அம்மக்கள் படுகிற கஷ்டங்களைச் சொல்லும் சோகப்பாடல்கள் ஆக இருந்தாலும், ப்ளுஸ் சங்கீதத்தின், ஒரு பகுதிப் பாடல்கள், சந்தோசம் நிறைந்த பாடல்களாயும் இருக்கின்றன. அப்படி, சந்தோசத்துடன் பாடப்படுகிற ப்ளுஸ் சங்கீதத்தோடு, ஆடப்படுகிற, நடனம்தான் ப்ளாக் பாட்டம் என்று சொல்லப்படுகிறது. சற்றே குண்டியைக் குண்டியை ஆட்டி, இடுப்பையும், ஆட்டி ஆடப்படுவதால், ஆடும் இந்த நடனத்திற்கு, ப்ளாக் பாட்டம் என்று காரணப்பெயர் வந்தது என்று சிலர் சொல்கிறார்கள்.  

 

1920-களில், பிரபல ப்ளுஸ் சங்கீதப்பாடகியான மா ரைனி பாடிய, ப்ளாக் பாட்டம் பாட்டு, அமெரிக்கா முழுதும் பிரபலம் ஆன ஒன்று என்பதால், மா ரைனியின், வரலாறு குறித்துப் பேசும், இந்தப்படம், மா ரைனிஸ் ப்ளாக் பாட்டம், என்ற பெயரைப் பெற்று இருக்கிறது என்பது, உள்ளங்கை நெல்லிக்கனி.  

 

அமெரிக்காவின் தென்பகுதியில் வாழ்ந்த, பாடகி மா ரைனிக்கு, கறுப்பர் பிரச்சினைகள், என்ற ஒன்று, அவ்வளவு இல்லாத போதும், அவரது ப்ளூஸ் சங்கீதத்தை, அமெரிக்காவின் வடபகுதிக்குக் கொண்டு சென்ற போதுதான், பிரச்சினைகள் ஆரம்பித்தது என, ஒரு செய்தி சொல்கிறது. லெஸ்பியன் பெண்மணி ஆன மா ரைனி, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, வெளிப்படையாக, ஓரினச்சேர்க்கை வாழ்க்கை வாழந்த, ஒரு தைரியமான பெண்மணி, என்பதையும், இந்தப்படம், ஆணித்தரமாகச் சொல்லி இருக்கிறது. 

 

பொதுவாய், ஒரு ஆணின் ஆண்மை, எப்படி இருக்கும் என்பது, நமக்கு நன்கு தெரிந்த ஒரு விசயம்தான். ஆனால், ஒரு பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மை எப்படி இருக்கும் என்பதை, இந்தப்படம் அழகாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறது. ஆரம்பக் காட்சியிலேயே, தனது காதலியோடு, ஸ்டுடியோவுக்குள் நுழையும் மா ரைனி என்ற அந்த லெஸ்பியன் பெண்மணி, தனது பெண் காதலியோடு, சிருங்காரம் செய்யும் அந்த லெஸ்பியன் காட்சியை, நம்மால், அவ்வளவு எளிதில், மறந்து விடமுடியாது.  என்னே ஒரு நடிப்பு, மா ரைனியாக நடித்து இருக்கும், திருமதி வயாலோ டேவிசின் நடிப்பு. பிரமாதம் போங்கள். 

 

ஒலிப்பதிவுக்குக் கூடத்துக்குள் நுழையும் முன்னரே, வாசலில் நடக்கும், அந்த கார் விபத்தின் போது, போலீசுடன் தைரியமாக நடத்தும் வாக்குவாதம், ஒலிப்பதிவுக்குக் கூடத்துக்குள் நுழைந்த பின்னர், “கோகோ கோலோ வேண்டும்” என அவர், வெள்ளை அதிகாரிகளோடு பிடிக்கும் பிடிவாதம், தனது காதலியை, மற்றவர் முன், ஆசையோடும், காமத்தோடும் முகர்ந்து பார்க்கும், அந்த லெஸ்பியன் தைரியம், இப்படி, காட்சிக்குக் காட்சி, “இங்கே முன்னே நிற்கும், அத்தனை ஆண்களின், அத்தனை ஆண்மையிலும், தலைசிறந்த ஆண்மை எனது பெண்மைக்குள் இருக்கும் ஆண்மையே” என்று சொல்லாமல் சொல்லும், திருமதி வயாலா டேவிசின், அனாயாச நடிப்பு, நம்மை மறந்து கைதட்ட வைத்துவிடுகிறது.  

 

பாராட்டப்பட வேண்டிய, இன்னும் சிலரில், படத்திற்காக உழைத்து இருக்கும், உடை அலங்கார நிபுணர் ஆன் ரோத்தும், சிகை அலங்கார மற்றும் முக அலங்காரம் செய்து இருக்கும் நிபுணர்களும் வந்து விடுகிறார்கள். வயாலா டேவிஸ் என்ற அந்த அழகான பெண்ணை, லெஸ்பியன் பாத்திரத்துக்கு ஏற்ப, பெரிய தொப்பை, எண்ணெய் வழியும் முகம், கறை படிந்த பற்கள் என, ஒப்பனை செய்து மாற்றி இருக்கும் விதம், படத்தில் வரும், எல்லாக் கதாபாத்திரங்களையும், தத்தம் ஒப்பனைத் திறமையால் மாற்றி, இருபதாம் நூற்றாண்டை, நம் கண் முன்னே நிறுத்த, பாடுபட்டு இருக்கும், அவர்தம் உழைப்பு, இந்த இரண்டு விசயங்களுக்காய், நம் ஏகோபித்த பாராட்டுக்களை அள்ளிக்கொண்டு போகிறார்கள், படத்தின் அலங்கார நிபுணர்கள். அவர்களது அற்புத திறமைகளுக்கு சாட்சி, இந்தப்படத்திற்காய், மேற்சொன்னவர்கள் பெற்று இருக்கும், உலகின் உயரிய திரைப்பட விருதுகளான, அகாடமி விருதுகள் ஆகும். 

 

கதாநாயகன் ஆக வரும் சாட்விக் போஸ்மேனும் சோடை போகவில்லை. இசையில், தனக்கென்று தனித்துவம் உண்டு என்று நிலைநிறுத்த, அவர் போராடும், அந்தக் காட்சிகள் ஆகட்டும், தனது தாய், வெள்ளையர்களால் கற்பழிக்கப்பட்ட கொடுமையைச் சொல்லிக் கதறும், அந்தக் கதறல் காட்சி ஆகட்டும், லெஸ்பியன் மா ரெயினின் காதலியோடு, கள்ள உறவு கொள்ளும், அந்த உடல் உறவுக் காட்சி ஆகட்டும், நடிப்பில் அசத்துகிறார் சாட்விக் போஸ்மேன். 

 

வசனங்கள் எல்லாமே, மிகமிகக் கூர்மையானவை. கறுப்பர் இனம் பட்ட கொடுமைகளை, தனது கூரிய வசனங்களாலேயே சொல்லி, கைதட்டு வாங்கும், வசனகர்த்தா ரூபன் சாண்டியாகோ, இவர்கள் அத்தனை பேரையும் கடுமையாய் வேலை வாங்கி, ஒரு நல்ல படத்தை, நமக்குக் கொடுத்து இருக்கும், இயக்குனர் ஜார்ஜ் உல்ப், இவர்கள் இருவரையும் பாராட்டாமல், இந்த விமர்சனத்தை முடித்துவிட முடியாது. 

 

இந்தத் திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த வசனகர்த்தா, சிறந்த ஆடை அலங்காரம், சிறந்த சிகை மற்றும் ஒப்பனை என, அனைத்துப் பிரிவுகளிலும், அகாடமி விருது, உள்ளிட்ட பல உலக விருதுகளை, அள்ளிக்குவித்த படம் என்று சொன்னால், அது மிகையாகாது. ஒரு படத்தின் வெற்றிக்கு, தேவைப்படும் கதை, அளவில் சிறிதாக இருந்தாலும், அதே சின்னக்கதையை, ஒரு மாபெரும் திரைக்கதை ஆக மாற்றி, வெற்றி பெற வைக்க முடியும் என்ற விசயத்தை, ஆணித்தரமாக நம் மனதில், பதிய வைக்கும் படம் இது. 

 

படத்தில் காட்டப்படும், மா ரைனியின் அந்த ப்ளாக் பாட்டம் பாடல், அதற்கு அமைக்கப்பட்டு இருக்கும் பாண்ட் இசை, குண்டியைக் குண்டியை ஆட்டி ஆடும், அந்த அற்புத நடனம், பார்த்துக் கொண்டு இருக்கும் நம்மையும், நம் இருக்கையில் அமர்ந்து கொண்டே, குண்டி ஆட்ட வைத்து விடுகிறது. 

 

மூன்றாம் பாலின லெஸ்பியன் உரிமை, கறுப்பின மக்கள் உரிமை என்று பல விசயங்களைப் பேசும் இந்தப் படம், உலகத் திரைப்படச் சரித்திரத்தில், இடம்பெரும் இன்னும் ஒரு படம் என்பது, தெள்ளத்தெளிவு. 

 

அழகர்சாமி சக்திவேல் 

Series Navigationஎன் மகள்கைவிடப்பட்ட முட்டைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *