ரு
கல் மண் கரடு
புல் பூண்டு
புழு பூச்சி
புலி சிங்கம் யானை
கரடி குதிரை குரங்கு
………….
அப்பாடா!
மனிதன்..மனிதன்..
மலர்ச்சியின் சிகரம் நோக்கி
இவனும் ஒரு மைல்கல்லே!
வானம் இடி மின்னல் பார்த்து
அதற்கு பின்னால் இருந்து
இயக்கும் விரல்கள் எவை?
சூரிய விண்மீன் கூட்டங்களின்
திரைச்சீலையை
நகர்த்துவது யார்?
மைல் கற்கள்
ஓடுகின்றன ஓடுகின்றன..
இன்னும்
அது யார்? அது எது?
இந்த உந்தல்கள்
ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.
காலவெளி எனும்
ஸ்பேஸ்டைம் கூட
பெருவெடிப்பின்
முன்
முறிந்து போயின.
சூன்யம் என்கிற முட்டை கூட
அங்கே இல்லை.
முட்டையா? கோழியா?
என்று கேள்வியும் கூட
மரணித்துக்கிடக்கும்
ஒரு வியப்பு நிறைந்த
பிறப்பின் கன்னிக்குடம்
அங்கே
உடையாமல் உடைந்து கொண்டிருக்கிறது.
நீ
எதையெல்லாம்
இப்படி சொல்லிக்கொண்டு போகிறாயோ
அதற்கும் முந்தியது
பிரம்மம்.
சரி முடிந்து போயிற்று எல்லாம்.
கடவுள் என்ற அந்த
பிணத்தைத்தூக்கி
எங்கேயாவது எறியுங்கள்.
இப்படி
பிரம்மமே
அதிரடியாய்
ஸ்லோகம் சொன்னது.
அந்த பிரம்மத்தையும் முந்திக்கொண்டு
மூக்கு நீட்டிய கேள்வி
கேள்வி கேட்டது.
ஓ பிரம்மமே!
கேள்வியின் ஒலிகள் தானே
எல்லாவற்றுக்கும் முந்திய
சுருதி என்கிறாய்.
உன்னை ஒலித்த
அதிர்வு எண்ணை வைத்து வந்த
இழையம் எனும் ஸ்ட்ரிங்க் கோட்பாடு
உனக்கும் முன்னே முன்னே
துடித்து துடித்து விரைகிறதே
அந்த கணிதம் என்பது என்ன?
சுருதின்னா சுருதிதான்.
அதை மீறி எதையும் சொல்லி
எச்சில் படுத்தாதே
என்று சொல்லிவிட்டு
ஸ்லோகங்கள் மடங்கிக்கொண்டன.
அறிவு
மனிதனின் மூளை நியூரான்களாக
முந்திச்செல்வதையெல்லாமே
முந்திக்கொண்டு
வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்தது.
பின்னே..
மிக மிகப்பின்னே
கீறல் விழுந்த ரிக்கார்டுகளாய்
இருட்டின் வரிகள்
“சப்தம்” கிளப்பிக்கொண்டே
இருந்தன.