எஸ்.சங்கரநாராயணன்
ஊரின் தெக்கத்திக் கரையில் வயல்கள் துவங்கின. வடக்கே ஏற ஏற மேடாகி ஊர்க் கட்டடங்கள் எழும்பி நின்றன. துவக்கப் பள்ளி. உரக் கிடங்கு. பஞ்சாயத்து அலுவலகம். அடுத்து எட்டாவது வரை நடுநிலைப் பள்ளி. உயர்நிலைப் பள்ளி ஊரில் இல்லை. அதற்கு பக்கத்து ஊர் போய் பிள்ளைகள் வாசித்தார்கள். குளுகுளுவென்ற காற்றுடன் டப்பா பேருந்து ஊருக்குள் காலை மாலை வந்தது. கிளம்புமுன் அதை தம் பிடித்து தள்ளிவிட வேண்டும்… பிரி பிரியாய்த் தொங்கும் ஆலம் விழுதுகள் கடந்து ஊரெல்லை ஐயனார் கோவில். ஐயனாரைப் பார்க்க தவமிருந்து சடா முடி வளர்த்துக் கிடந்தன ஆல மரங்கள். ஒருகாலத்தில் ஐயனார் கோவில் எதிரே நெல்லடி களமாய் இயங்கி யிருக்கலாம். கால மாற்றம். கோவில் தாண்டி பழைய பெரிய புளிய மரம்.
கதை புளிய மரம் பற்றியது. அந்தப் புளிய மரத்தில் பேய் இருந்தது. பெண் பேய். ஆண் பேயில் அநேகமாய் சுவாரஸ்யம் இருப்பது இல்லை. பத்து நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஓர் இளம் பெண் அங்கே தற்கொலை செய்து கொண்டாள், என்கிறார்கள். ஆண்கள் அநேகமாக தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள். தற்கொலைக்கு ஒருவேளை அவர்கள் தூண்டலாம். அவள் 20 22 வயதில் தற்கொலை செய்து கொண்டிருந்தால் இப்போது அந்தப் பேய்க்கு வயது ஐம்பது இருக்கும். புளிய மரத்தில் அவள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை யாரோ விவசாயி பார்த்துவிட்டு பயந்தலறி ஊருக்குள் ஓடோடி வந்து தகவல் சொன்னான். “ஏல பதறாதடா…” என்று பதறியபடியே அவனை நிறுத்தி விவரம் கேட்டார்கள். இன்றும் ஊர் சனங்களுக்கு அந்தக் கதையைக்கேட்கவும் சொல்லவும் பயந்து கிடந்தது.
“அம்மா, பேய் எல்லாம் உண்மையா?” என்று கேட்டான் நடராஜன். இதைக் கேட்கையில் அவன் வலது தொடையின் சதைப் பகுதி சிறிது பொம்மென எழும்பி தவளையாட்டம் துடித்தது. “என்ன திடீர்னு?” என்று கேட்டாள் அம்மா. பேய் உண்மையோ பொய்யோ, பேய் என்றாலே சிறு நடுக்கம் மனுசாளுக்கு வரத்தான் செய்கிறது. அவளுக்கும் வந்தது. “உண்மைதாண்டா…” என்றாள் அம்மா.
“நீ பேயைப் பாத்திருக்கியாம்மா?”
“இல்ல. ஆனாலும்…”
“ஆனாலும் இல்ல… ஆவலன்னாலும் இல்ல. அதெல்லாம் டூப்!” என்றான் நடராஜன். ராத்திரி அம்மா பக்கத்தில் படுத்திருந்தபடி அவன் கதை பேசிக் கொண்டிருந்தான். ஒண்ணுக்கு வந்தது. அம்மா கூட வந்தால் நல்லது. நேரம் தாழ்த்தினால் ஒண்ணுக்கு விளிம்பில் வந்து முட்டும்.
தற்கொலை செய்து கொள்ளவே தைரியம் வேண்டும். இந்த தைரியம் வாழ்வதில் ஏனோ அவர்களுக்கு இருப்பது இல்லை. தற்கொலை செய்துகொள்ளப் போனவனை ஒருத்தன் காப்பாற்றி விட்டானாம். நன்றி சொன்ன அந்த ஆள் தன்னைக் காப்பாற்றியவனிடம் “நான் தற்கொலை முயற்சி பண்ணியதை என் மனைவிகிட்ட சொல்லிடாதீங்க. தெரிஞ்சா அவ என்னைக் கொன்னே போட்ருவா” என்றானாம்.
நடராஜன் சின்னப்பையன் எல்லாம் இல்லை. லேசாய் மீசை எட்டிப் பார்க்கிற வயசு. பெண்கள் முன்னால் டவுசருடன் வெறுந்தொடை தெரிய நிற்க அவனுக்குச் சங்கடமாய் இருந்தது. பக்கத்து ஊரில் போய் பத்தாங் கிளாஸ் படிக்கிறான். அறிவாளி தான். ஆனால் எல்லாத்லயும் அவனுக்கு சந்தேகம் வந்தது. பேய் இருக்கா இல்லியா என்பது அவற்றில் ஒன்று.
யாரோ ஒரு சின்னப் பெண். காதலித்தாள். அந்த வயதில் தானே காதல் வரும். அதைப் பெற்றோர் எதிர்த்தார்கள். சற்று விரல் தாண்டிய வீக்கம் உள்ள ஆண் வீடு. அந்த ஊரில் அவர்கள் வீடுதான் முதலில் காரை வீடாகக் கட்டப்பட்டது. வாசலில் தொழுவத்தில் கறவை மாடுகள் இருந்தன. நாலைந்து பஞ்சாரத்தில் இராத்திரி கோழிகளை அடைத்தார்கள். மாடிக் களத்தில் பரசி விட்ட நெல்லுக்கும் தானியத்துக்கும் புறாக்கள் படபடவென்று றெக்கை அடித்தபடி வந்திறங்கின. அவற்றின் கொக் கொக் சத்தம் கேட்ட மணியமாய் இருந்தது. வீடே பண்ணை போலக் கண்டது. அந்த வீட்டுப் பையனை அவள் காதலித்தாள். எழுத இப்படிச் சொன்னாலும், அந்தப் பணக்காரப் பையன், அவன்தான் சில்மிஷங்களைத் துவக்கி யிருப்பான் என்று தோன்றியது. பையில் துட்டு புரள்வதே தெம்புதான். ஆனால் அந்தப் பெண் பாவம் அவனை நம்பி…
தற்கொலை. பள்ளிக்கூடம் விட்டு நண்பர்களுடன் வரும்போது நடராஜன் அந்த மரத்தை நோட்டம் விட்டான். மரம் பெருத்த இடுப்புடன் உட்கார வேண்டி அலுத்துக் கிடந்தது. ஐந்தாறடி உயரத்தில் இடுப்பில் ஒரு முடிச்சு போல மூட்டு. மூணரை நாலு அடி விட்டம். ரெண்டு சின்னப் பிள்ளைகள் சேர்ந்து அணைக்கலாம். பத்து பதினைந்தடி உயரத்துக்கு மேல்தான் கிளை பரப்பியது. ஆனால் அந்தக் கிளைகளும் மேல்நோக்கி இருபதடி உயரம் போய் அங்கிருந்து படுக்கை வசத்துக்குப் பரவியது. அதன் பாதி கிளைகளில் இலைகள் அற்ற வெறும் சுள்ளிகள். மரம் அதுவே செத்துக் கொண்டிருந்தது. அதில் தூக்கு மாட்டிக் கொள்வது சிரமம். கயிற்றைத் தூக்கிவீசிப் போட்டு கிளையில் மாட்டி இழுத்து கயிற்றில் சுருக்கிட்டுக் கொள்ளவேண்டும். நாலைந்து முறை கயிறு வீசினாலும் கிளையில் படியாது. தூக்கு மாட்ட வந்தாளுக்கு வெறுத்துப்போகும்.
ஹ்ம். அதற்குள் யாராவது அவளைப் பார்த்திருந்தால் காப்பாற்றி யிருக்கலாம். அவன் மேலும் யோசிக்குமுன் மற்ற பையன்கள் திரும்ப சைக்கிள் பெடலை அழுத்தி சற்று முன்னே போய்விட்டார்கள். பயமாகி விட்டது. “டேய் நில்லுங்கடா…” என்று சைக்கிளை உருட்டியபடியே தாவியேறினான் நடராஜன். ஒரு காலத்தில், அதாவது நாற்பது ஐம்பது வருடம் முன்னால் அந்த மரம் இன்னும் இளமையாய் அழகாய் இருந்திருக்கலாம். சுருக்கங்கள் விழுந்த கிழவி முகமாய் இப்போது கண்டது. கிளைகளில் இலைகள் உதிர்ந்து மேலும் பரிதாபத் தோற்றம் காட்டின. உரித்த கோழி.
ஊரில் அந்தி சாய இருட்டு கவிய ஆரம்பித்தபின் நடமாட்டங்கள் அடங்கி விடும். தெரு விளக்குகள் இருட்டைத்தான் அதிமாக்கிக் காட்டின. தூர தூர வீடுகளின் சன்னல் வழியே உள்ளே விளக்கு எரிவது தெரியும். அழுது வழியும் மஞ்சள் குண்டு பல்புகள். ஆல் இண்டியா ரேடியோவின் விநோத இசையும், அறம் விலகாத ஒலிபரப்புகளும். இசை என்றால் கர்நாடக சங்கீதம் அல்லது நாட்டுப்புற இசை. அசாமிய இசை இங்கே ரொம்ப அவசியம் என்று வைப்பார்கள். நம்ம ஊர் இசை? அசாமில் வைக்கலாம்.
பேய் எல்லாம் கப்சா என நினைத்திருந்த நடராஜனுக்கு ஓர் அதிர்ச்சி. அந்த ஊரில் சினிமா அரங்கம் இல்லை. அவங்க ஊர் சாமியப்பன் மனைவிதொல்லை தாளாமல் அவளை சைக்கிளில் வைத்துக்கொண்டு பக்கத்து ட்டூரிங் டாக்கிஸ் போயிருக்கிறான். மத்த சினிமா அரங்கம் போல ட்டூரிங் தியேட்டரில் பகல் காட்சி போட வாய்ப்பு இல்லை. முதல் காட்சி, இரண்டாம் ஆட்டம். அவ்வளவு தான். எம்ஜியார் படம். அந்த இரவின் அமைதிக்கு வெளியே எம்பது நூறடி வரை தியேட்டருக்கு வெளியே விசில்கள் பீரிடும். எல்லாரும் விசில் அடித்தபடியே ஓட்டையும்அவருக்கே குத்தி விட்டார்கள்.
கிராமத்தில் பேசிக் கொண்டார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கடசீல சிவாஜியத் தூக்குல போட்டுர்றாங்க. சிவாஜிக்கு பதிலா எம்ஜியாரை நடிச்சிருக்கணும்டா. வெள்ளைக்காரன்லாம் அவர்ட்டத் தோத்து நாட்டை விட்டே ஓடிருப்பான்!
முதல் காட்சி முடிந்து சாமியப்பன் மனைவியைப் பின்னால் அமர்த்திக்கொண்டு ஊர் திரும்பினான். சாக்கடையளவுக்கு கெட்டியான இருட்டு. மேலே உடம்பு பூராவும் கருப்பு பிசினாய் அப்பினாற் போல இருந்தது இருட்டு. அமாவாசை வருது போல. சற்றே குளிராய் இருந்தது. தெருவே தெரியவில்லை. ஐயனாரப்பா, என மனசில் வேண்டியபடியே சைக்கிளை மிதித்தான். கோவில் தாண்டியபோதே, சற்று தள்ளி… யாரோ மரத்தடியில்… ஆமாம். புளிய மரத்தடியில்… யார்?
பெண். இள வயசு. பேய்களுக்கு வயது ஆகாது போல. வெள்ளை உடை. அவள் எந்த உடையோடு செத்தாளோ செத்தபின் எப்படியோ வெள்ளைக்கு மாறி விடுகிறாள். தலையை விரித்துப் போட்டு… இறக்கும்போது எவ்வளவு தலைமுடி இருந்ததோ தெரியாது. சாமியப்பனுக்கு உதறல் எடுத்து விட்டது. சைக்கிளை மிதிக்கிறான் மிதிக்கிறான் மிதிக்கிற உணர்வே இல்லை. பின்னால் மனைவி பாறாங்கல் போல கனக்கிறாள். “ஏட்டி?” என்று கூப்பிட்ட அவன் குரல் நடுக்கம் கொடுத்தது. “ரொம்பக் குளுரா இருக்கில்ல?” என்றவள் “சீக்கிரமா அந்தப் புளிய மரத்தைத் தாண்டிப் போங்க…” என ஞாபகப் படுத்தி விட்டாள்.
சட்டென வண்டி நின்று விட்டது. “என்னங்க?” என்றாள் ராஜி. “இறங்குடி..” என்றான். அவள் இறங்கி மரத்துப் பக்கம் பார்த்தாள். அவளும் அந்த உருவத்தைப் பார்த்திருக்கிறாள். வெள்ளை உடை. தலைவிரி கோலம். முன்னே கவிழ்ந்து அழுதபடி… “யாருங்க?” என்ற அவள் குரல் குழறியது. “பாத்தீங்களா?” என்றாள் அவன் தோளைத் தொட்டு. “ம்…” என்றான். “ப்பே…” என்னுமுன் அவள் வாயைப் பொத்தினான்.
“ஒண்ணு செய்யலாம்…” என்றாள் மெதுவான குரலில். “சொல்லுடி…” அது முன் குனிந்து அழுத கோலத்தில் இருந்தது. தனியா இந்நேரம் இங்க என்ன செய்யுது அது? அதுக்கு பயமா இல்லையா? “அது நம்மள கவனிக்கல…” என்றாள். திரும்ப சைக்கிளில் உட்கார்ந்து கொண்டவள், “ரெடி. ஜுட்” என்றாள்.
சட்டென வேகம் எடுக்க முயன்றவன் தடுமாறி தரையில் சைக்கிளைப் போட்டுக்கொண்டு விழுந்தான். பிறகு அதைத் தள்ளிக்கொண்டு மனைவியை சட்டைசெய்யாமல் எடுத்தான் ஓட்டம். கூடவே தலைதெறிக்க ஓடிவந்தாள் அவள். அந்த மரத்தைத் தாண்டுமுன் வெலவெலத்து விட்டது. சட்டென அந்தப் பேய்… சத்தம் கேட்டு… தலையைத்… தூக்…கிப் பார்த்தது போல இருந்தது. பிரமையோ. ஐயோ செத்தேன். என அவள் செருப்பை உதறிவிட்டு சைக்கிளுக்கு முந்தி ஓடினாள். ஐம்பது அடி வரை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. உடம்பில் குப்பெனப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது வியர்வை. முதல் தெருவுக்குள் அவர்கள் திரும்பினார்கள். அதற்குள் சத்தம் கேட்டதோ என்னவோ ஒரு வீட்டில் இருந்து வெளியே வந்தார்கள். “யாரது?” என அவர்கள் அதட்டல் இவர்களுக்குத் தெம்பாய் இருந்தது. “தனியாவா வந்தீங்க… கூட நாலைஞ்சி ஆளாத்தான் வெளிய போணும் பாத்துக்கிடுங்க…” ஏற்கனவே அவர்கள் வேறு ஆட்களுக்கு இப்படி தண்ணீர் உபசரித்திருக்கலாம். சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டு கிளம்பினார்கள்.
“பேயைப் பாத்தீங்களா?”
“ரெண்டு பேரும் பாத்தோம்…”
“நல்லவேளை. உங்களை விட்டுட்டது. போனவாரம்…”
“என்னாச்சி?” என்று கேட்டாள் ராஜி பயத்துடன்.
“இந்தத் தெரு வரை பின்னாடியே வந்தது அந்தப் பேய்னு சொன்னாங்க…”
“ஐயோ…” என்றபடி ராஜி புருஷனைப் பார்த்தாள்.
திரும்ப அவன் சைக்கிளில் அவளை ஏற்றிக்கொண்டு வீடு நோக்கி மிதிக்கத் தெம்பு போய்விட்டது. நடந்தே போனார்கள். வீடுவந்தும் கூட அந்தப் படபடப்பு அடங்கவில்லை. அன்றைக்கு ராத்திரியே அவளுக்கு நல்ல ஜுரம் கண்டது. தலையைக் குனிந்தபடி உட்கார்ந்திருந்த பேய். திடீரென்று அது தலையைத் தூக்கி… அந்தக் காட்சி திரும்பத் திரும்ப மனசில் வந்தது. அந்த முகம் எப்படி இருந்தது? அவள் சரியாக கவனிக்கவில்லை. நல்லவேளை. உடனே ஓடி வந்துவிட்டார்கள். அங்கேயே நின்றிருந்தால்… என நினைக்கவே திரும்பவும் தூக்கிப் போட்டது. ராஜி நாலுநாள் வயல் வேலைக்கு எங்கேயும் போகவில்லை. சாமியப்பன் தான் தன் வீர தீர பிரதாபத்தை எல்லாருக்கும் சொன்னான்.
நடராஜனுக்கு புளிய மரத்தில் பேய் இருப்பது உறுதியாகி விட்டது. அடுத்தநாள் அவன் பள்ளிவிட்டு வரும்போது அந்த மரத்தைப் பார்க்க சிறு உதறல் கண்டது. பையன்களைக் கூட நிறுத்திக் கொண்டு அந்த சம்பவம் நடந்த இடத்தை ஒரு போலிஸ் தோரணையில் துப்பறிந்தான். சற்று தூரத்தில் இருந்தே… எங்க, இங்க இருந்து வெச்சிக்கலாமா? சாமியப்பன் பேயைப் பார்க்கிறான். இதோ இந்த இடத்தில் சைக்கிள் நின்று விடுகிறது. பொத்தென இங்கே விழுகிறான்…சிரிப்பு வந்தது. அட அதை நேரில் பார்க்காமல் போனோமே? வேட்டி உருவியது தெரியாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓட்டம். சட்டென தலையைத் தூக்கி அந்தப் பேய்…
அதோ அந்த இடத்தில்தான் அது உட்ர்கார்ந்து அழுது கொண்டிருந்திருக்க வேண்டும். கூட பையன்கள் இருக்கிற தைரியத்தில் அதே இடத்தில் போய் நின்றான். சிரிப்பு தாளவில்லை. நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி சிரித்தான். வீட்டுக்கு வந்து கை கால் கழுவிவிட்டு காபி வாங்கிக் குடித்தான். பாடம் படிக்க மனசே இல்லை.
அவங்கம்மா அதற்குப் பிறகு தான் சின்ன வயசில் கேள்விப்பட்ட நிறையப் பேய்க் கதைகள் சொன்னாள். எங்க பாட்டி சொன்ன கதைடா இது… என்பாள் திடீரென்று. கால காலமாக பேய் இருந்து வந்திருக்கிறது. பெண் பேய்கள். வெள்ளை உடைப் பேய்கள். காலைல தண்ணி பாய்ச்சன்னு சொல்லி தாத்தா போக வேண்டி யிருந்தது. தெருவில் வைத்து தாத்தா தன் கூட்டுக்காரனிடம் “ராத்திரி தான் மோட்டாருக்கு கரன்டு உச்சமா வருது. போயி வயல்ல தண்ணி பாய்ச்சணும். ஒரு மூணு மணிக்கு காலைல வந்து என்னை எழுப்பறியாஈ”ன்னு பேசியிருக்கார். அதைப் பேய் ஒண்ணு கேட்டுட்டதுடா… என நிறுத்தினாள்.
“பகல்ல பக்கம் பாத்துப் பேசு. ராத்திரிஅதுவும் பேசாதன்னு வசனம்” என்றான் நடராஜன். அம்மா கதையைத் தொடர்ந்தாள். என்னாச்சி தெரியுமா? அதிகாலை மணி மூணு. அந்தப் பேய் வந்து கதவைத் தட்டியிருக்கு. இவரும் சிநேகிதன் தான் வந்திருக்கான்னு வெளிய வந்திட்டாரா. பேய் தலைல முட்டாக்கு போட்டிருக்கு. நல்ல இருட்டு . இவரும் தூக்கக் கலக்கத்துல இருந்தாரா… அது முன்னாடி போகுது. இவர் பின்னாடியே போறாரு. எதுனா பேசிட்டே போறாரு இவரு. ஊங் கொட்டிக்கிட்டே வருது பேயி. மெல்ல தூக்கம் கலைஞ்சி அவரு முன்னாடி போற பேயைப் பாத்தாரா… அது பாட்டுக்கு காத்துல மிதந்துகிட்டே போகுது. அதைப் பாக்காரு. அதுக்குக் காலே இல்லை. தரைக்கு மேல ஒரு துணி மாதிரி, காத்து அதைத் தள்ளிக்கிட்டே போறது மாதிரி இருந்தது. சொட்டேர்னு மண்டைல உறைச்சது அப்பதான். அந்தாக்ல திரும்ப ஒற்ற ஓட்டம். மம்பெட்டி தெறிச்சி இருட்டுல வுளுந்த இடம் தெரியல்ல. அதைக் குனிஞ்சி எடுக்க நேரம் இல்ல. அங்க பிடிச்ச ஓட்டம். திரும்ப வீட்ல வந்துதான் நின்னாரு. கதவைத் திறந்துகிட்டு “சிவகாமி?”ன்னு உள்ளாற ஓடிவந்து கதவைத் தாள் போட்டாரு. அப்பவும் அந்தப் பேயி விடல்ல. திரும்ப வீட்டுக்கு வந்து அவரைக் கதவைத் தட்டிக் கூப்பிட்டுக் கிட்டே இருந்திச்சாம்டா…
கேட்க பயமாய்த்தான் இருந்தது. என்றாலும் அவன் பெரிய பையன். “தாத்தாவுக்கு ஜுரம் வந்திச்சாம்மா?” என்று கேட்டான் சிரிப்புடன். கசப்பாகவும் ருசியாகவும் இருக்கும் காபி போல பயமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தன பேய்க் கதைகள்.
அந்த ஊருக்கு புதிதாய் ஒரு பிச்சைக்காரன் வந்திருந்தான். எந்த ஊர்க்காரன் தெரியாது. பிச்சைக்காரர்கள் இப்படி நடந்தே ஊர் ஊராய்ப் போகிறார்கள். திடீரென்று அவர்களுக்கு ஏதாவது ஓர் ஊர், ஏதாவது ஓர் இடம் பிடித்து அங்கேயே தங்கி விடுகிறார்கள். சாப்பாடு மழை வெயில் எதைப் பற்றியும் கவலைப்படாத பிச்சைக்காரர்கள். அவனிடம் ஒரு துணிப் பொட்டலம் இருந்தது. அழுக்காய் இருந்தான். யாரையும் பற்றி அவன் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அந்த ஊர் எப்படியோ அவனுக்குப் பிடித்துவிட்டிருக்க வேண்டும்.
உள்ளூர்க்காரனுக்கு தண்ணி கண்டு பயமில்லை. பேயைக் கண்டு பயம், வெளியூர்க்காரர்களுக்கு பேயைக் கண்டு பயமில்லை, தண்ணி கண்டு பயம் என்பார்கள். உள்ளூர் மக்கள் தண்ணியில் புழங்கிப் பழகி குளம், எங்கே ஆழம், எங்கே மேடு என்று தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் தண்ணியில் அவர்கள் பயப்பட மாட்டார்கள். அதேசமயம் பேய் பற்றி அவர்களுக்குத் தெரியும் என்பதால் பேய் கண்டு பயப்படுவார்கள். வெளியூர் ஆட்கள் என்றால் குளத்தின் தண்ணீர் ஆழம் தெரியாததால் தண்ணிக்கு பயப்படுவார்கள். அதேசமயம் பேய் பற்றி அறியாததால் அவர்களுக்கு பேயிடம் பயம் கிடையாது..
அந்தப் பிச்சைக்காரன் கையில் ஓர் அலுமினியத் தட்டுடன் பகலில் ஊருக்குள் வருவான். ஒவ்வொரு வீட்டு வாசலாக வந்து நிற்பான். எப்படியும் நாலு வீட்டுக்கு ஒரு வீட்டில் அவனுக்கு எதாவது சோறோ குழம்போ கிடைத்து விடும். தட்டில் ஓரளவு நிரம்பியதும் அவன் மேலும் வீடுகளுக்குப் போகாமல் திரும்பி விடுவான். ஒரு போத்தலில் நீர் பிடித்து வைத்திருப்பான். எங்கள் தெருக்களிலேயே தெருவோரங்களில் தண்ணீர்க் குழாய்கள் இருந்தன. அநேக குழாய்களில் குச்சிவைத்து அடைத்து நீர் பீரிட்டுச் சிரித்து வழியும்.
பிச்சைக்காரன் சாப்பிட்டுவிட்டு திரும்பப் போனான். நேரே போய் அந்தப் புளிய மரத்தடியில் படுத்துக் கொண்டான். அங்கேயா?… என்று நடராஜனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. காலை மதியம் மாலை என்கிற அளவில் அங்கே நிழல் மாறி மாறி தரையில் விழுந்தபோது அவன் நகர்ந்து இடம் மாறிக் கொண்டான். ஆல மரத்துப் பக்கமும், ஐயனார் கோவில் பின் வளாகத்திலும் குரங்குகள் சுற்றித் திரிந்தன. பையன்கள் அடிக்கடி அவைகளைச் சீண்டி விளையாடுவார்கள். புளிய மரத்தடி சற்று தள்ளி இருந்ததால் அந்த இடத்தை அவன் தேர்வு செய்தானா தெரியவில்லை.
அட பைத்தாரா… அங்கே மரத்தில்… பேய் இருக்கிறது உனக்குத் தெரியுமா? அந்தப் பேய் ஒரு சாமிநாதனை சைக்கிளில் இருந்து உருட்டி விட்டிருக்கிறது. இன்னொரு பார்ட்டியை பின்னாடியே துரத்தி வந்திருக்கிறது. அவனிடம் நடராஜன் எச்சரிக்கை செய்ய விரும்பினான். பிச்சைக்காரன் யாரிடமும் அதிகம் பேசுவது இல்லை. அவன் முகமும் தாடி மழிக்காமல் விகாரமாய் இருந்தது. பல் விளக்குவானோ இல்லை, தண்ணீரில் கொப்பளிப்பதோடு சரியோ, தெரியாது. வந்து நேரா அந்தப் புளிய மரத்தடியைத் தேர்வு செய்து அடில உட்கார்ந்தான் பாரு.
ஒருவாரம் பத்துநாள் கடந்த நிலையில் அந்தப் பிச்சைக்காரன் அங்கேயே தங்கி யிருந்தான். அந்தப் பிரதேசத்தில் தெருவிளக்கு கூட இல்லை. அந்த மையிருட்டில் பயமே இல்லாமல் இரவு அங்கே படுத்திருக்கிறானே என்று நடராஜனுக்கு ஆச்சர்யம். எப்பவாவது நாலைந்து நாளைக்கு ஒருதரம் தெக்கத்தி வயல்களில் எங்காவது வாய்க்காலில் முட்டாழத்தில் அமர்ந்து குளிப்பான். சோப்பு சவுக்காரம் எதுவும் கிடையாது. உடம்பை நனைத்துக் கொள்வது மாத்திரமே. காக்காய்க் குளியல்!
நிச்சயம் அவனுக்கு ஏதாவது ஆகப் போகிறது. வம்படியா வாய்ல வந்து விழுந்த இரையை எந்த விலங்காவது சும்மா விட்டு வைக்குமா? நடராஜன் காலை பள்ளிக்கூடம் போகையிலும், மாலை திரும்பி வருகையிலும் அந்த மரத்தடியைப் பார்த்தான். அந்தப் பிச்சைக்காரன் மரத்தடியிலேயே இருந்தான். சில சமயம் சற்று தள்ளி எங்காவது தட்டுப்படுவான். அவனது துணிப் பொட்டலம் புளிய மரத்தடியில் கிடக்கும். “என்னடா பாக்கற?” என்று பையன்கள் அவனைக் கேட்பார்கள். “இல்ல அந்தப் பிச்சைக்காரனைப் பாரேன்… பயமே இல்லை அவனுக்கு” என்றான் நடராஜன். “ஒருநா இல்லாட்டி ஒருநா அவன் இதே மரத்தடில ரத்தம் கக்கி செத்துக் கெடப்பான் பாருங்கடா.”
அடுத்த ஒரு வாரத்தில் நடராஜனுக்கு பள்ளித் தேர்வுகள் இருந்தன. அரைநாள், அரைநாள் பள்ளிக் கூடம். தேர்வு எழுதிவிட்டு வீடு வந்துவிடலாம். அந்நாட்களில் அவன் சாப்பாடு எடுத்துப் போவது இல்லை. ஓரளவு நன்றாகவே எழுதினான் நடராஜன். தேர்வு முடிவுகளை விட, பிச்சைக்காரனின் தைரியம் பற்றியே அவனுக்கு யோசனை இருந்தது. எதாவது நடக்கப் போகிறது… என மனம் பதட்டத்துடன் காத்திருந்தது.
அவனுடன் பேச என்று விருப்பமாய் இருந்தது. எப்படியும் பேய் அடித்து சாகப் போகிறான். அதுவரை நாம அவனிடம் நல்ல வார்த்தை பேசலாமாய் இருந்தது. ஒருநாள் பள்ளிக்கூடம் விட்டு வந்த மதியத்தில் அவனுக்கு ஒரு வாழைப்பழம் தந்தான். படுத்திருந்த பிச்சைக்காரன் எழுந்து கை நீட்டி வாங்கிக் கொண்டான். அவனிடம் இருந்து ஒரு கெட்ட வாடை வந்தது.
தேர்வுகளுக்குப் பின் ஒரு பத்து நாள் பள்ளிக்கூடம் விடுமுறை. அந்நாட்களில் அவன் ஆகா, திடீரென்று ஒருநாள் கவனித்தான். அநதப் பிச்சைக்காரன் பிச்சைகேட்டு தெருப்பக்கம் தட்டுப்படவில்லை. மறுநாளும் கவனித்தான். வரவேயில்லை. என்ன ஆயிற்று அவனுக்கு? ஒருவேளை… அவனுக்குப் பரபரப்பாய் இருந்தது. அம்மாவிடம் அதுபற்றிக் கேட்டான். “தெரியலையே..” என்றாள் அம்மா. அப்புறம் இன்னொரு பேய்க்கதை சொன்னாள். அம்மாவிடம் ஆயுசுபூராவும் பயப்படும் அளவுக்குப் பேய்க் கதைகள் கைவசம் இருந்தன.
அவளும் மறுநாள் கவனித்துவிட்டு “ஆமாம் போலடா…” என்றாள். எல்லாருமே, அவன் சொன்னபின், ஆமால்ல… என்கிறாற் போல ஆச்சர்யமாகி தலையாட்டினார்கள். பேய் தன் வேலையைக் காட்டி விட்டதா? இந்நேரம் பார்த்து பள்ளிக்கூடம் விடுமுறை. அந்தப் பக்கம் போகவே வாய்ப்பு இல்லாமல் ஆகி யிருந்தது. சேகரைக் கூட்டிக் கொண்டு அந்தப் பக்கம் போய் வரலாமா என்று தோன்றியது. சேகரை விட நான் தைரியசாலி, அதாவது அப்படி சேகர் நம்புவது இவனுக்குப் பிடித்திருந்தது. தனியே போகவும் இவனுக்கு பயம்.
உச்சி நேரம், அல்லது இருட்டிய பின் என்று போக வேண்டாம், என முடிவு செய்தார்கள். நன்றாக வெயிலேற சேகருடன் சைக்கிள் எடுத்துக் கொண்டு புளிய மரத்துப் பக்கம் அந்தப் பிச்சைக்காரனைத் தேடி அவன் போனான். அவன் இருக்க மாட்டான்… என்று தெரிந்தே தான் போனான். அவர்கள் எதிர்பார்த்தபடி பிச்சைக்காரன் அங்கே இல்லை. “பாத்தியா, நான் சொல்லலே?” என்றான் நடராஜன்.
“என்ன சொன்னே நீ?”
“அந்தப் பிச்சைக்காரன்… அவனை அந்தப் பேய் என்னவோ பண்ணிட்டதுடா.”
“அப்பிடியா?” என்றான் சேகர். “உனக்கு எப்படித் தெரியும்?”
“அவனை ஆளைக் காணமே…” என்றான் நடராஜன். “அதுக்கு?” என்று புருவத்தைச் சுருக்கினான் சேகர். ஒரு துப்பறியும் கதை கேட்கிற சுவாரஸ்யம் அவனுக்கு. “வரியா.. பக்கத்தில் எங்கயாவது அவனோட பொணம் கிடக்குதான்னு தேடுவோம்…” என்று கூப்பிட்டான் நடராஜன்
“எனக்கு பயமா இருக்குடா.” கடகடவென்று சிரித்தான் நடராஜன். “அச்சம் என்பது மடமையடா…” என்று பாடினான். சேகர் பதிலுக்கு “அஞ்சாமை என்பது மடமையடா” என்று பாடினான். நடராஜன் அவனை விடவில்லை. வா, என அவனை அழைத்துக் கொண்டு ஐயனார் கோவில் பின்புறம் போனான். நிறைய புதர் மண்டிக் கிடந்தது அந்தப் பக்கம். “எதும் பொணம்… ரத்த வாந்தி யெடுத்துச் செத்து கிடந்தால்….”
“ஐயோ” என்றான் சேகர்.. “பயந்துற கூடாது…” என்றான் நடராஜன். முடிந்த அளவு செடி கொடிகளை விலக்கித் தேடிப் பார்த்தான் நடராஜன். சேகர், கூடத் தேடவில்லை. சற்று தள்ளியே நின்றிருந்தான். “வீட்டுக்குப் போகலாம்டா… எனக்கு பயமா இருக்கு…” என்றான் சேகர். நடராஜன் அவன் கிட்டே வந்து கையை நரசிம்மர் போல வைத்து ‘புர்ர்’ என உறுமிக் காட்டினான். “டேய் வேணாண்டா… வா வீட்டுக்குப் போகலாம்” என்று சேகர் கிளம்பி விட்டான்.
அதற்குமேல் அவனை நிறுத்தி வைக்க முடியவில்லை. விட்டால் தனியே சேகர் கிளம்பிப் போய்விடுவான் போல இருந்தது. நடராஜனால் அந்தப் பிச்சைக்காரனின் பிணத்தைத் தனியே தேட முடியாது. இருவருமாய் வீடு திரும்பினார்கள். “எனக்கொண்ணும் பயமில்லை. நீதான் பயந்து சாகற…” என்றபடி கூட வந்தான் நடராஜன். அன்றைக்கு ராத்திரி அவனுக்கு மோசமான கனவுகள் வந்தன. ஒரு வெள்ளை உடைப் பேய் நகங்களை வெளியே நீட்டி ‘உர்ர்’ என அவன் மேல் பாய விழித்துக் கொண்டான். படுக்கை நனைந்திருந்தது. கழுத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். ஜுரம் அடிக்கிறதா?… இல்லை.
திரும்ப பள்ளிக்கூடம் திறந்தாகி விட்டது. நடராஜன் அந்தப் பிச்சைக்காரனைத் தேடியபடி இருந்தான். அவன் ஆளே இல்லை. அவனுக்கு என்னவோ ஆகிவிட்டது. அதைப்பற்றி அம்மாவிடம் அவன் கவலைப் பட்டான். அம்மா அதைக் கண்டுகொள்ளவே இல்லை. நண்பர்ளும் அவனை மறந்து விட்டார்கள். அவனுக்கு என்ன ஆகி யிருக்கும்… அந்தப் பெண், தற்கொலை செய்து கொண்டவள்… அவளைப் போல இவனையும் யாராவது ஒருநாள் திடீரென்று எதாவது புதரில், தனி யிடத்தில் கண்டு பிடிக்கப் போகிறார்கள், என்று தோன்றியது.
ஒருநாள் தனியே அவன் பள்ளி விட்டு வீடு திரும்ப நேர்ந்து விட்டது. கூட யாருமே இல்லை… என்ற நினைப்பே அவனை பயமுறுத்திவிட்டது. அந்த ஐயனார் கோவில், ஆலமர வளாகம் என்று நெருங்க நெருங்க மனது தந்தியடித்தது. நல்ல வெயில் நேரம்தான்.சிறு வகிட்டுப் பாதை, குறுக்கு வழி என்று அதில் சைக்கிள் ஓட்டி வந்தவன் திரும்பி கோவில் பக்கம் புதர் தாண்டித் திரும்பியவன் திகைத்தே விட்டான். தூரத்தில்… புளிய மரத்தடியில்… யார்?
வெள்ளைத் துண்டா அது…தலையில் போட்டு கவிழ்ந்து கொண்டு… அது ஒருவேளை அந்தப் பிச்சைக்காரனோ? அடையாளம் தெரிந்து கொள்ள முடியவில்லை கால்கள் உதறல் எடுத்தன. சைக்கிள் ஹேன்ட்பார் உதறியது. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு… என்பார்கள். எனக்கு 16ல் சாவா? ஐயோ. சாமிநாதன் ஞாபகம் வந்தது. பெண் பேயைப் பார்த்த சாமிநாதன். இது ஆண் பேயா? தலையைக் குனிந்து உட்கார்ந்திருந்தது பேய். சாமிநாதன் பெண்டாட்டி சொன்னதுபோல… அது தலையைத் தூக்… குமுன் சைக்கிளில் பறந்து தாண்டி விடலாம். அதுதான் ஒரே உபாயம்… என்றால் சைக்கிளை மிதிக்கவே முடியவில்லை. தம் பிடித்து, ஐயனாரே… என்று பிரார்த்தனை பண்ணி… புளிய மரத்தைத் தாண்… சத்தம் கேட்டு அந்த உருவம் தலையைத் தூக்… பயத்தில் பொத்தென்று விழுந்தான் நடராஜன். முட்டியில் சிராய்ப்பு. ரத்தம் வந்தது. என்ன விட்ரூஊஊ. வாய் குழறியது. அந்தப் பிச்சைக்காரன் உருவம் எழுந்து கொண்டபோது சட்டென சைக்கிளில் ஏறி… சைக்கிள் செய்ன் கழண்டிருந்தது. நிற்க நேரமில்லை. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு சிட்டாய்ப் பறந்தான் நடராஜன். வீடு வரும்வரை திரும்பிப் பார்க்கவில்லை.
அவன் பார்த்தது பிச்சைக்காரனின் பேயையா? தெரியாது. நல்ல ஜுரம் அவனுக்கு. காலை விழித்துக்கொள்ள நேரமாகி விட்டது. அம்மா அவனை எழுப்பி வாசலுக்குக் கூப்பிட்டாள். வாசலில் அந்தப் பிச்சைக்காரன் நின்றிருந்தான், கையில் அலுமினியத் தட்டுடன்.
- ••
- உள்ளம் படர்ந்த நெறி- யில் கோவை எழிலன்
- ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி இந்தியாவில் 44,444 ஆம் காற்றாடி சுழற்தட்டைத் [Wind Turbine] தயாரித்துள்ளது
- பிழிவு
- துணை
- நடந்தாய் வாழி, காவேரி – 3
- எவர்சில்வர்
- 6.ஔவையாரும் பேயும்
- வாங்க கதைக்கலாம்…
- இன்னொரு புளிய மரத்தின் கதை
- கண்ணாமூச்சி
- உள்ளங்கையில் உலகம் – கவிதை
- புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்
- மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்
- வெண்பூப் பகரும் -சங்கநடைச்செய்யுட் கவிதை
- தழுவுதல்
- கருப்பன்
- கேட்பாரற்றக் கடவுள்!
- ட்ராபிகல் மாலடி