அறிவும் ஆற்றலும், துணிவும் மிகுந்த  மைதிலி சிவராமன் ஓர் அரிய பெண்மணி

This entry is part 9 of 11 in the series 25 ஜூலை 2021

 

ஜோதிர்லதா கிரிஜா

     தமிழ்நாட்டில் மாதர் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவராகவும் இருந்த மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு ஆளாகி மே மாதம் 30 ஆம் நாளில் தம் 81 ஆம் வயதில் காலமானார். அனைத்திந்தியப் பார்வை மட்டுமின்றி, அனைத்துலக நோக்கும் கொண்டிருந்த அவர் வியட்நாம் போருக்கு எதிரான இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அறுபதுகளில் ஐக்கிய நாடுகளின் அவையின் நிரு[பராய்ப் பணியாற்றினார். பின்னர், இந்தியாவுக்குத் திரும்பியதும், இடது சாரிக் கம்யூனிசக் கொள்கைகள் மீதான ஈடுபாட்டுடன் தொழிலாளி வர்க்க இயக்கங்களில் ஈடுபட்டார்.

 

     கீழ்வெண்மணி கிராமத்தில் தலித் குடியானவர்கள் கூலி உயர்வுக்காகப் போராடிய போது அவர்களில் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போதும், வாசாத்தி கிராமத்தில் பழங்குடிப் பெண்கள் கூட்டுப்பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போதும், மைதிலி தலையிட்டு ஆற்றிய பணி இணையற்றது.

 

     கொடுமைப்படுத்தப்பட்ட பெண்களுக்கு ஆதரவாய் முதல் குரலை எழுப்பிக்கொண்டிருந்தவர் மைதிலிதான். வரதட்சிணைக் கொடுமை, பாலியல் வன் கொடுமை, கணவன்மார்களின் கொடுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களில் பலரும் எடுத்த எடுப்பில் மைதிலியிடம் தான் உதவி கேட்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். அவரால் உதவி பெற்றவர்கள் எண்ணிலடங்கார்.

 

     1975 இல் பொது உடைமைவாதி வக்கீல் செந்தில்நாதன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அவர் நடத்திக்கொண்டிருந்த சிகரம் எனும் மாத இதழின் சார்பாக அவர் என்னைப் பேட்டி கண்டது இப்போது எனது ஞாபாகத்தில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.. அப்போது நான் ஒரு மைய அரசு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், என் வேண்டுகோளை ஏற்று என் வீட்டுக்கு வந்து பேட்டி எடுத்தார். பேட்டி இரண்டு ஞாயிற்றுக் கிழமைகள் போல் தொடர்ந்தது.

 

     பேட்டியின் போது அவர் கேட்ட கேள்விகள்  சுவையானவையாக இருந்தன. நான் வாய் மொழியாகச் சொல்லும் பதில்களை அவர் அவசரமாய் எழுதியோ சிலவற்றை மனத்தில் வாங்கியோ பின்னர் பேட்டிக் கட்டுரையைத் தயாரிப்பதற்குப் பதிலாய் ஒவ்வொரு கேள்விக்கும் அதன் கீழ் நானே என் பதிலை எழுதிவவிடுகிறேனே என்று நான் கேட்டுக்கொண்டதை அவர் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். அதனாலேயே பேட்டி முடிய இரண்டு நாள்களாயின.

 

     தமிழகத்தில் சட்ட ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கும், கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கும் ஓர் அரணாக இருந்த மைதிலியின் மறைவு பேரிழப்பாகும்.

 

(பின் குறிப்பு: இக்கட்டுரையின் முதல் பாராவில் உள்ள தகவல்கள் ஜூலை மாதத்து மகளிர் சிந்தனை இதழின் முன் அட்டைக் கட்டுரையிலிருந்து திரட்டியவை. அதன் ஆசிரியர்கள் மாலினி பட்டாச்சார்யா, மரியம் தவாலே ஆகியோர்க்கு நன்றி.) .

Series Navigationகுருட்ஷேத்திரம் 1  (பீஷ்மர் பெண்ணாசையை வெற்றி கண்ட பிதாமகர்)நனவிடை தோய்தல்: 1983  கறுப்பு ஜூலையும்  ஊடக வாழ்வு அனுபவமும்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *