குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)

This entry is part 10 of 18 in the series 29 ஆகஸ்ட் 2021

 

 

அர்ச்சுனன் ஆகச்சிறந்த வில்லாளி, வில்வித்தையில் தனக்கு நிகராக யாருமில்லை என்ற கர்வம் அவனிடமிருந்தது. மானுட மனம் தன்னை தன்னிகரற்றவன் என்றே கருதிக் கொள்கிறது. தன்னைவிட வல்லமை வாய்ந்த ஒருவனைக் காணும்போது வாழ்வு பற்றிய நடுக்கமும், மரணம் பற்றிய பயமும் அவனுள் ஏற்படுகிறது. அர்ச்சுனனை தனது திறமையின் மீது அவநம்பிக்கை கொள்ள வைத்தவர்கள் இருவர் ஒருவன் ஏகலைவன் மற்றொருவன் கர்ணன்.

 

கானகத்தில் தனது வளர்ப்பு நாயின் வாய் அம்பினால் தைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியக்கிறான் அர்ச்சுனன். விசாரித்ததில் அது காட்டுவாசி ஏகலைவனின் வேலை என்று தெரியவருகிறது. தன்னைவிடத் துல்லியமாக அம்புகளைக் கையாள்பவன் இருக்கிறான் என்பதை அறிந்த பின்பு பல இரவுகள் தூக்கத்தை தொலைக்கிறான் அர்ச்சுனன். விசித்திரமான மனம் யாரை எதிரியாகக் கருதுகிறோமோ அவனையே அனுதினமும் நினைத்துக் கொண்டிருக்கும். ஏகலைவனின் குரு துரோணர் என்பதை அறிந்து அவரிடம் செல்கிறான் அர்ச்சுனன்.

 

துரோணரிடம் உங்கள் சிஷ்யர்களில் ஆகச்சிறந்தவன் நான் தானே என்று கேட்கிறான் அர்ச்சுனன். அது அஸ்தினாபுரமே அறிந்த விஷயமாயிற்றே அதில் என்ன உனக்குச் சந்தேகம் என்று கேட்கிறார் துரோணர். எனக்கு கற்றுக் கொடுக்காத ஒரு வித்தையை காட்டுவாசி ஒருவனுக்கு கற்றுக் கொடுத்து எனக்குத் துரோகம் இழைத்துவிட்டீர்கள் என்று ஆவேசப்படுகிறான் அர்ச்சுனன். நான் சத்திரிய குலத்துக்கு மட்டும் தானே குருவாக இருக்கிறேன் நீ என்ன சொல்ல வருகிறாய் என்கிறார் துரோணர் தனது வெண்ணிறத்தாடியை வருடியபடி.

 

துரோணரும், அர்ச்சுனனும் வனத்திற்குள் நுழைகிறார்கள். தனது சிலையை வைத்து ஏகலைவன் பூஜித்து கொண்டிருப்பதை துரோணர் காணுகிறார். சத்திரியன் அல்லாததால் தனுர்வேதத்தை உனக்கு கற்றுத்தரமாட்டேன் என்று ஏகலைவனை நிராகரித்தது இப்போது துரோணருக்கு ஞாபகம் வருகிறது. துரோணரைக் கண்டவுடன் ஏகலைவன் அவர் காலில் விழுந்து உங்களை குருவாக வரித்துக் கொண்டுதான் ஆயுதக் கலையை பயின்றேன் என்கிறான்.

 

துரோணரோ பெருமிதம் கொள்ளவில்லை, குரு தனது சிஷ்யனை உச்சிமுகர்ந்து வாழ்த்தவில்லை. அர்ச்சுனனுக்கு கர்ணன் ஒருவனே எதிரி என்று நினைத்திருந்தேன் இப்போது இன்னொருவன் முளைத்திருக்கின்றானா என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது. ஏகலைவனிடம் உனது குரு நான்தானே எனது சிஷ்யனிடம் குருதட்சணையாக வலக்கை கட்டைவிரலைக் கேட்கிறேன் தருவாய்தானே என்று நெஞ்சில் ஈரமின்றி கேட்கின்றார் துரோணர். அடுத்த விநாடி அர்ச்சுனன் துரோணரின் காலடியில் உதிரம் வழிய துடித்துக்கொண்டிருக்கும் ஏகலைவனின் வலக்கட்டை விரலைக் கண்டு தலை கவிழ்ந்து கொள்கிறான். இது முதல் சம்பவம்.

 

இரண்டாவது சம்பவம். துரோணர் தனது சிஷ்யர்களின் வீரத்திறமையை உலகிற்கு பறைசாற்ற விழா எடுக்கிறார். அர்ச்சுனன் வில் எடுத்து அம்புபூட்டி அனைவரையும் மலைக்கச் செய்கிறான். மற்ற சிஷ்யர்கள் எறும்பென சிறுத்துப் போக அர்ச்சுனன் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்பது போல பீஷ்மரே நீ வீரத்திருமகன் என்றவனை வாழ்த்துகிறார். எல்லோரும் ஆச்சரியத்தில் வாய்ப்பிளந்திருக்கும் போது கர்ணன் அரங்கினுள் நுழைகிறான். அவன் வில்லிலிருந்து அம்புகள் மழையாகப் பொழிகிறது. பஞ்சபூதங்களையும் அம்புகளால் அடிமை செய்து மாயாஜாலம் காட்டுகிறான் கர்ணன். பீஷ்மரோ சிலையாகிவிடுகிறார். துரோணர் என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொள்கிறார்.

 

இந்த துரோணர் தான் கர்ணனை சூதன் என்று கூறி ஆயுதக் கலையை கற்றுக் கொடுக்க மறுத்தது. பரசுராமர் கற்றுக் கொடுத்த வில்வித்தையை துல்லியமாகச் செய்துகாட்டிய கர்ணனை அவனது தந்தையான சூரியன் வானுலகிலிருந்து ஆசிர்வதிக்கிறான். கர்ணனுக்கு வில்லால் பதில் சொல்லத் தெரியாத அர்ச்சுனன் தலைகவிழ்ந்து கொள்கிறான். எதிரே கூடியுள்ளவர்களெல்லாம் அர்ச்சுனனின் கண்களுக்கு கர்ணணாகவே தெரிகிறார்கள். அவமானப்பட்ட அர்ச்சுனனுக்கு முதல் முறையாக வாழ்வின் ஸ்த்திரத்தன்மையின் மீது சந்தேகம் வந்தது. கர்ணன் மரணத்தூதுவனாகவே அர்ச்சுனனின் கண்களுக்குத் தெரிந்தான்.

 

Series Navigationமரங்கள்குருட்ஷேத்திரம் 8 (பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த அம்பா)
author

ப மதியழகன்

Similar Posts

Comments

  1. Avatar
    PARAMASIVAM Raju says:

    அருமை அருமையான கதைகளை அனைவருக்கும் எடுத்துச் செல்லும் திண்ணையின் நோக்கம் வெல்லட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *