குருட்ஷேத்திரம் 8 (பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த அம்பா)

This entry is part 11 of 18 in the series 29 ஆகஸ்ட் 2021

 

 

 

 

விதி வெல்லப்பட முடியாத ஒன்றாக இருக்கிறது. சகலரையும் தனது கைப்பாவையாக்கிக் கொள்கிறது. மனிதனின் ஆசையே அவன் விதிவலையில் சிக்கிக் கொள்வதற்குக் காரணமாக அமைகிறது. மண்ணிலிருந்து தோன்றியவனுக்கு மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையை விடமுடியவில்லை. மற்ற இரண்டு ஆசைகளும் பெண்ணாசையை மையப்படுத்தியே சுழலுகின்றன. உலக வரலாற்றில் பார்த்தோமானால் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் பெண்ணாசையால் மண்ணோடு மண்ணாக சரிந்திருக்கின்றன. இராமாயணத்தில் சீதை மீது வைத்த ஆசையே இராவணனின் முடிவுக்கு காரணமாக அமைந்தது. பீஷ்மர் இது வெறும் பெயரல்ல. சத்தியத்தின் வழி நடப்பவர்கள் நமக்கு எப்போதும் அசாதாரணமானவர்களாகவே தெரிவார்கள்.

 

உலகத்தில் பெண் இனமே இல்லையென்றால் மனிதன் சுலபமாக பெண்ணாசையை வென்றுவிடலாம். உலகில் சரிபாதி பெண்களாகவே இருக்கும்போது தினசரி வாழ்க்கையில் எத்தனையோ பெண்கள் நம்மைக் கடந்து செல்லும்போது நம்மால் சஞ்சலப்படாமல் இருக்க முடியுமா? உலகை வென்றவர்கள் கூட பெண் விஷயத்தில் பலகீனமாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஐம்புலன்களும் இன்பத்திற்காக வேங்கையெனப் பாயும் போது நம்மால் என்ன செய்ய முடியும். கங்கை புத்திரரான பீஷ்மருக்கு வாழ்க்கை கடவுள் அளிக்கும் தண்டனையாகத் தெரிந்தது. சென்ற பல பிறவிகளில் பலகீனங்களை வென்றுவிட்ட போதும் தன்னால் பெண்ணாசையை வெற்றி கொள்ள முடியவில்லையே என தன்னைத் தானே நொந்து கொண்டார். இந்தப் பிறவியிலாவது பிறவி சுழற்சியிலிருந்து விடுபட்டு விடவேண்டும் என வைராக்கியம் கொண்டார் பீஷ்மர்.

 

விதியின் கைகள் தன்னை எவ்வாறெல்லாம் பந்தாடப்போகின்றது என்பதை அப்போது பீஷ்மர் அறிந்திருக்க மாட்டார். லெளகீகத்தைத் துறந்தவருக்கு ராஜ்யமும், அரியணையும் அது தரும் சகலஅதிகாரமும் பெரிதாகப்படவில்லை. ஆதி முதற்கொண்டே காலச்சக்கரம் மனிதனின் நம்பிக்கைகளை பொய்யாக்கி வந்துள்ளது. ஆணின் அகந்தைதான் பெண்ணை நாடுகிறது. அகந்தை கொல்லப்பட ஆணின் உள்ளே சரிபாதியாக இருக்கும் பெண் விலகிக் கொள்கிறாள், இறைவனின் அகதரிசனம் அப்போதுதான் மனிதனுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. பீஷ்மர் தனது தந்தையான சாந்தனு மகராஜா ஆசைப்பட்டவளை கரம்பிடிக்க வேண்டும் என்பதற்காக தனது இளவரசர் பட்டத்தை துறக்கிறார். சத்தியத்தின் பக்கம் நிற்பவனை விதி சோதனை செய்யாமல் விடாது. சாந்தனு தனது ஆசைநாயகி மூலம் பெற்றெடுத்த புதல்வர்கள் முடிசூடும்போது பீஷ்மர் அவர்களுக்கு நிழலாக இருக்க நேரிடுகிறது.

 

பாண்டுவுக்காக அம்பையை சுயம்வர மண்டபத்திலிருந்து கவர்ந்து வருகிறார். அம்பை சாளுவ மன்னனை விரும்புவதை அறிந்து அவனிடம் அனுப்பி வைக்கிறார். அவனோ வாள் முனையில் வெல்லப்பட்டவளை தன்னால் ஏற்க முடியாது என்கிறான். அம்பை பரசுராமரை துணைக்கழைத்துவந்து தனக்கு வேறு கதியில்லை எனவே தன்னை ஏற்றுக் கொள்ளும்படி பீஷ்மரைக் கெஞ்சுகிறாள். அம்பையை நிராகரித்ததன் மூலம் பீஷ்மர் அவளின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடுகிறார். நிராகரிக்கப்பட்ட ஆத்மா பழிவாங்காமல் விடாது என அம்பை நிரூபிக்கிறாள். ரெளத்திரமாக அலையும் அம்பையின் ஆத்மா சிகண்டியாகப் பிறப்பெடுக்கிறது. அலட்சியப்படுத்திய பீஷ்மரை பழிதீர்த்துக்கொள்ள சமயம் பார்த்துக் காத்திருக்கிறது.

 

திரெளபதியை கெளரவசபையில் துகிலுரித்தபோது தர்மவான் பீஷ்மரின் கல்மனம் இளகாததற்கு காரணம் பெண்களின் மீது கொள்ளும் இரக்கம்தான் அவர்களின் மீது அன்பு கொள்வதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்பதால் தான். பீஷ்மர் சத்தியபுருஷர் பிரம்மச்சரிய விரதமிருப்பவர் அவர் திரெளபதியின் அலங்கோலத்தைப் பார்த்து அதனால் அவருடைய சத்தியவாழ்வுக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் கிருஷ்ண பரமாத்மா சபையில் உள்ள அனைவரின் மனங்களையும் தனது சக்தியினால் வசியப்படுத்தி இழுக்க இழுக்க சேலை நீளுவதைப்போல மாயாஜாலம் காட்ட நேர்ந்தது. குருட்ஷேத்திர யுத்தக்களத்தில் சிகண்டிக்கு முன்னால் வில்லேந்த முடியாமல் காண்டீபத்தை நழுவவிடுகிறார் பீஷ்மர். சிகண்டியில் அம்புகள் பீஷ்மரை நிலைகுலையச் செய்கிறது. சத்தியம் எப்போது யாரைச் சாகடிக்கும் என்று யாருக்கும் தெரியாது. அம்புப்படுக்கையில் இருக்கும் பீஷ்மருக்கு அம்பையின் குரல் அசரீரியாக கேட்கிறது. பெண்ணாசையை வென்ற பிதாமகருக்கு அம்பாதான் முடிவுகட்டினால் என்று சரித்திரம் பேசும் கங்கை புத்திரனே என்று அசரிரீ சொன்னது. பீஷ்மரின் மரணத்தாகத்தை அவரது தாய் கங்கையால் கூட தணிக்க முடியவில்லை.

Series Navigationகுருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)நவீன பார்வையில் “குந்தி”
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *